Tuesday, December 17, 2024

புளுவு கௌதமன் கதைகள்!

வெளிக்கி போறதைப் பற்றிய கதைகள், நிகழ்வுகள் சிறிய வயதில் ஏராளம், தாராளம்!




கும்பல்ல யார்னா குசு உட்டாப் போச்சு! கூட்டத்துல அவனை சேத்துக்கவே மாட்டாங்க. நாங்கள்லாம் 'டக்கு'னு சிட்டாங்கோல் போட்டுக்குவோம். 'சிட்டாங்கோல்' போட்றதுனா கை கட்டை விரலை ஆட்காட்டி மற்றும் நடு விரலுக்கு மத்தியில் வைத்து மடக்கிக் கொள்வது. சிட்டாங்கோல் போடலைன்னா, குசு உட்டவன் நம்பள தொட்ருவான். அப்ப‌டி தொட்டுட்டா நாமளும் குசு உட்டவங்களா மாறிடுவோம்' என்பதுதான் சிட்டாங்கோலின் விதி!

அதேபோல் சிலர் ட்ரவுசரோடு சேர்த்து கழிந்து கொள்வதுண்டு. அவர்களுக்குப் பேர், 'தர்க்கழிஞ்சான்'. அதாவது, 'தர்ர்...'ருனு கழியிற‌தால தர்க்கழிஞ்சான். குசு உட்றவம் பேரு குசு உட்டாம்பூச்சி. குசுவுல 'புர்ர்... குசு, பொய்ங் குசு, காத்து குசு'ன்னு பல வகை உண்டு. அதே மாரி வெளிக்கி போறதிலயும், 'கோபுரம், முருக்கு, இட்லி' என்று பலவகை உண்டு.


சின்ன வயசில் நாங்களெல்லாம் கும்பலாதான் வெளிக்கி போவோம். அப்படிப் போகும்போது, சாதாரணமா வெளிக்கி போறது போரடிச்சிடும். அதனால, ஜனங்க போற-வர்ற வழியிலேயே கக்கா போய், மண்ணைப் போட்டு மூடிருவோம். 'தெரியாத்தனமா வந்து யாராவது கால உட்டுக்கட்டும்'னு மறஞ்சி நின்னு வேடிக்கைப் பாப்போம். 



சில சமயம், கக்கா போய் மண்ணால் மூடிட்டு, ''டே... இங்கதாண்டா நால்னா தொலைச்சிட்டேன்! வாடா தேடுவோம்!''னு சொல்லி, யாரையாவது கூப்பிட்டு வருவோம்.

வந்து தேடுவாரு பாருங்க...

தேடினவர், ' பீல' கைய உட்டுக்குவாரு. ''ஆ...ங்...''னு அவரு அழ ஆரம்பிச்ச உடனே... பூந்தட்சி ஓடு!

பீல கைய உட்டான், (அன்னில இருந்து அதான் அவம் பேரு). அவன், அவங்க அம்மாவ கூப்டுனு ஊட்டாண்ட வருவான். “ஏன்டா இப்டி செஞ்சீங்க?”ன்னு எல்லாரும் எங்களை அசிங்கசிங்கமா கேப்பாங்க. புடிச்சி ஒதப்பாங்க. ஆனா, அன்னாடம் அதே வேலையைத்தான் நாங்க திரும்பத் திரும்ப செஞ்சிட்டு இருப்போம்

''டேய்...! எப்பப் பாரு தரைலயே பேனுக்கினு, வாங்கடா! போய் மரத்துமேல பேலுவோம்''னு சொல்லி, மரத்து உச்சில ஏறி, அங்கிருந்தே வெளிக்கிப் போவோம்.

'கி.ரா.'வோட கதைகளை படிக்கிறப்போ இந்த மாதிரி ஒரு கதையை படிச்சேன்.

அதாவது, எதிலேயும் லாயக்கு இல்லாத ஒருத்தன். அவனை யாருமே மதிக்க மாட்டாங்க. அதனால அவனுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாயிடும். எப்படியோ கஷ்டப்பட்டு அவங்க அம்மா, அவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருவாங்க. எதிர்பார்த்த மாதிரியே பொண்டாடியும் இவனை மதிக்கமாட்டா. ஆத்தா ஊட்டுக்கு ஓடிருவா. இவனை எல்லாரும் கேவலப்படுத்தவே, ரோஷம் பொத்துக்கிட்டு வந்துரும்.

எனவே, கௌம்பிடுவான், பொண்டாட்டிய இட்டார...!

போற வழியில் பாதிலேயே இருட்டிறும். மேற்கொண்டு நடக்க முடியாத்துனால, அங்க இருந்த ஒரு பாழடஞ்ச மண்டபத்துல தங்கிடுவான். எடுத்தும்போன கட்டு சோத்தை நல்லா ஒரு கட்டு கட்டிறவே, காலைல இவனுக்கு வயித்தக் கலக்கும்.

வெளிய வந்து பாத்தா! ராத்திரி பெஞ்ச மழையால ஒரே சேரும் சகதியுமா இருக்கும். காலை கீழே வச்சா, மொழங்கால்வரை 'பொதுக்'குனு உள்ளே வாங்கிக்கிற அளவுக்குச் சேறு.

''இதுல‌ எப்பிடி குந்திக்கினு வெளிக்கி போறது? சேறு அப்பிக்குமே!'' ‍

பாத்தாம். அங்க நெறைய ஆவாரஞ் செடிங்களாம் வளந்து கெடந்தது. நல்லா, வாகா ரெண்டு செடியை மடக்கி, அதுமேல குந்திக்கினு வெளிக்கி போனாம்.

''உஸ்ஸ்....அப்பாடா...! இப்பத்தாம் நிம்மதியே வந்துது''ன்னு சொல்லிக்கினே எழுந்திரிச்சாம் பாருங்க...! மடக்கி வச்சிருந்த செடி நிமிந்து, 'பளார்'னு ஒரே அடி!

அவ்ளோதான்! முதுகு பூரா பீ.

''ஊர்ஜனம்தாம் நம்பளை மதிக்கலைன்னா, இந்த ஆவாரஞ்செடிக்குகூட எளக்காரமா பூட்டோமே. பொண்டாட்டி எங்க திரும்பி வரப்போரா?''ன்னு சொல்லிக்கிட்டே ஊடு வந்து சேர்ந்தானாம்.

அதுக்குத்தான் சொல்வாங்க, ''ஆவாதவங்களக் கண்டா... ஆவாரையும் பீ வாரி அடிக்கும்''னு.

சரி, நாம புளுவு கௌதமன் கதைக்கு வருவோம். புளுவு கௌதமன் எங்க அத்தைப் பையன். ஆளு வந்தான்னா ஏதாவது புளுவித் தள்ளிக்கிட்டே இருப்பான். அப்படித்தான் ஒரு நாள், இந்தக் கதயைச் சொன்னான்.

ஒரு ஊர்ல... ஒர்த்தங்களுக்கு கொழந்தயே... இல்லையாம். அதனால அவுங்க ஒரு சாமியார்கிட்ட போய், “கொழந்த குடு”ன்னு வேண்டிகிட்டாங்களாம்.

அவுரு, “நான் ஒரு பேப்பர் தருவேன். அத நீங்க கிழிக்கனும். கிழிக்கும்போது நேரா வந்தா, நல்ல கொழந்த பொறக்கும். கோனையா கிழிஞ்சா, பானை கொழந்த பொறக்கும்”னு சொன்னாராம்.

சரின்னு, இவுங்களும் சாமிய வேண்டிக்கினு பேப்பரைக் கிழிச்சாங்களாம். பேப்பரு கோனையா வந்துட்டுதாம். இன்னா பன்றது? வேற வழி இல்லாம பான கொழந்தய தூக்கிட்டு ஊடு வந்து சேந்தாங்களாம்.

ஒரு நாள், இந்த பான இன்னா பண்ணாராம்! “பீச்சுக்கு போறேன்”னு சொல்லிட்டு, ஜாலியா கௌம்பிட்டாராம். அந்த நேரம் பாத்து வேகமா ஒரு வெள்ளக்காரங்க பஸ் வந்துதாம். பான பக்கதுல‌ பிரேக் அடிச்சி நின்னுதாம். அதுலர்ந்து நெறைய வெள்ளக்காரங்க எறங்கி, அவங்களோட‌ 'பணம், நகை' எல்லாத்தயும் எடுத்து, இந்த பானைல வச்சிட்டு குளிக்கப் போய்ட்டாங்களாம்.

பான கொழந்தைக்கு வெய்ட்டு தா...ங்க முடியில. “நமக்கு இன்னமோ ஆயிடிச்சி!”ன்னு நெனச்சி, ஊட்டுக்கு வந்துட்டாராம்.

''யம்மா எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் முடியில! இன்னான்னு பாரு''ன்னு சொன்னாராம்.

அவங்கம்மாவும், 'என்னமோ, எதோ!'ன்னு பதறி வந்து பானையப் பாத்தா..., அது நெறைய்ய்ய பணமும், நகையுமா கீதாம். அத வச்சி அவங்க பெரிய பணக்காரா ஆயிட்டாங்களாம்.

இந்த விஷயத்த எல்லாம், பக்கத்து ஊட்ல இருந்தவங்க பாத்துக்கினே இருந்தாங்களாம். அவங்களுக்கும், 'இதேமாதிரி பணக்காரங்களா ஆவனும்'னு ஆச வந்திருச்சாம். இன்னா பண்ணாங்களாம்!

அவங்க ஊட்ல இருந்த பொம்பள கொழந்தய வெட்டி சாவடிச்சிட்டு,
“எங்களுக்கு கொழந்தயே இல்ல!”ன்னு சாமியார்கிட்ட வேண்டுனாங்களாம்.

சாமியாரும், மொதல்ல வந்தவங்களுக்கு சொன்ன மாரியே பேப்பர குடுத்து, “நேரா கிழிச்சா, நல்ல கொழந்த பொறக்கும். கோனையா கிழிச்சா, பான கொழந்த பொறக்கும்”னு பேப்பர குடுத்தாராம்.

இவங்களும் வேணும்னே பேப்பரைக் கோனையா கிழிச்சி, பான கொழந்த பெத்துக்கிட்டாங்களாம்.

ஊட்டுக்கு வந்த ஒடனே, பானைக்கு பிஸ்கேட்லாம் குடுத்து, 'வாணாம் வாணாம்'னு சொல்லியும், அதை பீச்சுக்கு அனுப்பினாங்களாம். இந்தப் பானையும் பீச்சிக்குப் போய் ஜாலியா காத்து வாங்கிட்டு இருந்திச்சாம். அப்ப அதேமாரி ஒரு பஸ் வந்திருக்கு.

ஆனா, அதுலேர்ந்து வெள்ளக்காரங்க யாரும் எறங்கலயாம். அதுக்கு பதிலா, நல்லா செம குண்டா, ஒரு கெழிவி எறங்கிச்சாம்.

அவுங்களுக்கு அவசரமா 'அது' முட்டிக்கிச்சாம். நகை, பணத்தலாம் கழட்டி பஸ்ல வச்சிட்டு , நேரா பானைல போய், 'கழிஞ்சி வச்சிட்டாங்களாம்'.

பானைக்கு வெய்ட்டு தா...ங்கல. ஆடி, ஆடி ஊட்டுக்குப் போய் சேந்தாராம். 

 “யெம்மா வெய்ட்டு தாங்கல! வந்து இன்னான்னு பாருமா!”ன்னாராம்.

அவுங்களும் ஓடியாந்து, ''அதுக்குத்தாண்டா மகராசா காத்திருந்தேன்''னு சொல்லி, கைய உட்டாங்களாம் பாரு!

கையி பூரா பீ.

'சேய்க்...'குன்னு ஒதுற்னாங்களாம். அப்பிடியே அவுங்க ஊட்டுக்காரு மேலயும் பட்ருச்சாம்.

அதனாலத்தாம் பேராச புடிக்கக் கூடாது”ன்னு, சொல்லி முடிச்சான் கௌதமன்.

வெறும் கதையாக மட்டுமில்லாம, அது 'ஒரு பாடத்தையும் சொல்கிற பாங்கு' எனக்கு ஆச்சர்யமூட்டியது. “கற்பனைதான் எல்லா கண்டுபிடிப்புகளுக்குமான அடிப்படை” என்கிறார், குழந்தை நாடகக் கலைஞர் வேலுசரவணன். 

எனக்கும்கூட சின்ன வயதில் நல்ல கற்பனை வளம் இருந்தது. பீலா மன்னன் என்று பெயரும் வாங்கினேன். இன்று உண்மைகளைத் தவிர, என் வாயில் இருந்து வேறு எதுவும் வருவதில்லை.

Thursday, January 26, 2012

பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்" -இயக்குநர் மு.களஞ்சியம்!

2012, ஜனவரி 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா,

"நான் தீவிரமான காங்கிரஸ்காரன். சோனியாகாந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படமும் இருப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மொழி, இனம் அழிந்துபோக நாம் அனுமதிக்கக்கூடாது. அது, தாயைத் தொலைப்பதற்குச் சமம். எனவே, மக்களுக்கும் மொழிக்கும் ஏதாவது ஆபத்து எனில், காங்கிரஸ் தலைவராகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற முறையிலும், தமிழன் என்கிற முறையிலும் பாரதிராஜாவின் பேச்சு குறித்து, தன்னுடைய கருத்தை பதிவு செய்கிறார்யையக்குநர் மு.களஞ்சியம்.

இதேபோல், தமிழ் திரைப்பட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்ளையக்குநர் சேரன்.

இது குறுத்து பேசியுள்ள களஞ்சியம், "வெறும் 25 லட்சம் வாங்கிக்கொண்டிருந்த நடிகனுடைய சம்பளம், கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியாக உயர்ந்திருக்கிறது. 50 லட்சம் வாங்கிக்கொண்டிருந்தவனின் சம்பளம் 10 கோடியாக உயர்ந்திருக்கிறது. இயக்குநர்களின் சம்பளமும், இசையமைப்பாளர்களின் சம்பளமும் பல கோடிகளுக்கு உயர்ந்திருக்கிறது.
ஆனால், தொழிலாளிக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதிமுறையின் அடிப்படையில்தான் ஊதியம் என்றால், என்ன நியாயம்? மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்கிற சம்பள உயர்வை நீங்கள் நடைமுறைபடுத்தியிருந்தால், அவன் ஏன் போராட்டத்தில் இறங்கப்போகிறான்?" என்கிறார்.

Friday, January 6, 2012

உடல் உறுப்பு தானமும் மருத்துவர்களின் மனிதாபிமானமும்

தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. 


****************************************************************

“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2010, ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, 86 பேரிடமிருந்து 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்திருப்பதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம், உரிய நேரத்தில் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாமல் சட்ட நடவடிக்கைகள் தடுப்பதாக அரசுக்குப் புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கடுமையாக இருந்த பழைய விதிமுறைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது தமிழக அரசு.

வெளிப் பார்வைக்கு இது உயிர் காக்கும் விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஈவிரக்கமற்ற கொலை வியாபாரம் ஒளிந்திருப்பதாக சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இங்கு மூளைச் சாவு என்பது லாபகரமான ஒரு தொழில்’’ என்கிறார்கள் இம்மருத்துவர்கள்.

‘‘மூளை என்பது சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகையாக செயல்படுகிறது. இரண்டுமே செயலிழந்தால்தான் அது மூளைச் சாவு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சிறுமூளை அல்லது மூளைத் தண்டு செயலிழந்தாலே போதும். சட்டப்படி அதை மூளைச்சாவு என்று அறிவிக்கிறார்கள்.

சிக்கல் என்னவென்றால், சிறுமூளை இறந்த பிறகும் பெருமூளை வேலை செய்யும் என்பதுதான். அப்படிப் பெருமூளை வேலை செய்தால், சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்றே அர்த்தம்.

உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு பெருமூளை மட்டும் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம். அவரால் இயற்கையாக குழந்தை பெற முடியும், பால் கொடுக்கவும் முடியும். ஆண் என்றால், விந்தணுக்களை எடுத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்க முடியும். அடுத்த சந்ததியே இந்த நபரால்தான் என்கிற சூழ்நிலையில், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் இல்லையா?

எனவே, “சிறுமூளை செயலிழந்ததாகக் கூறி சாவு என அறிவிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல.  சட்ட விரோதமானதும்கூட’’ என்று எச்சரிக்கிறார் பிரபலமான ஒரு நரம்பியல் நிபுணர்.

‘‘நரம்பியல் சட்ட விதிமுறைகளின்படி, பெருமூளை செயலிழந்துவிட்டதை நியூக்ளியர் ஸ்கேன் செய்துதான் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இதில் ஹைதர் அலி காலத்து நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.  

‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!

இதற்குத் தீர்வே இல்லையா?

‘‘இரண்டு விஷயங்கள்.

ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.

இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன. உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம். இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’  இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.

****************************************************************************

கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது), இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார். அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர். சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில்(எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை. ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம். இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

ஆதாரம்: http://www.issuesinmedicalethics.org/133cv01.html