Saturday, January 13, 2007

அம்மு என்கிற விபச்சாரியும், இமேஜ் பார்க்கிற நடிகைகளும் -இயக்குநர் ப‌த்மாம‌க‌ன்.








அம்முவாகிய நான்'' படத்திற்காக நடிகை பாரதிக்கும், பார்த்திபனுக்கும் மரக்காணம் அருகே ஆலம்பரைக் கோட்டையில் ரொமான்ஸ் நடந்து கொண்டிருந்தது. ''இது 'அம்மு' என்கிற விலை மாதுவின் சுயசரிதையா?'' என்றேன் படத்தின் இயக்குனர் பத்மாமகனிடம்.

''இது அம்மு என்பவளின் சுயசரிதையும் இல்லை, தனிப்பட்ட ஒருத்தியின் சுயசரிதையும் இல்லை. சிவப்பு விளக்கைப் பற்றி இதுவரை சினிமாவில் என்னென்ன பார்த்திருக்கிறீர்கள்? அதையெல்லாம் தாண்டி ரொம்ப ஆழமாக எவ்வளவு முடியுமோ அந்தளவு ஊடுருவிப் பார்க்கிற சினிமா. ஆனால் உருவிப் பார்க்கிற சினிமா இல்லை'' என்று வித்தியாசமாய் பதில் தந்தார்.

''ரொம்ப வித்தியாசமான திரைப்படம்'னு சொல்ல வர்றீங்க?''

''எல்லாரும் வித்தியாசம் வேணும்னு தான் விரும்புறாங்க, ஆனா அப்படி எடுக்கும் போது யாரும் ஒத்துழைப்பதில்லை. நீங்க கதையைப்பத்தி கேக்கறீங்க இல்லையா? அதைவிட இந்த கதைக்காக நடிகைகளிடம் நான் பட்ட கஷ்டத்தை கேளுங்க. அதையே ஒரு திரைப்படமா எடுக்கலாம்'' என்று ஆரம்பித்தார்.

''சிம்ரன்'ல இருந்து 'சந்தியா' வரைக்கும் எல்லா முன்னனி நடிகைங்க கிட்டயும் இந்த கதைய சொல்லிட்டேன். ஊட்டியில வச்சி சிம்ரன்கிட்ட சொன்னபோது ரொம்ப சீரியஸா கதை கேட்டவங்க, பயங்கரமா இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. ''சார்! இந்த கேரக்டரை நான் சரியா செஞ்சிட்டேன்னா நிச்சயமா எனக்கு நேஷனல் அவார்டு தான்''னு சொன்னாங்க.

அடுத்து முக்கியமானவங்க நந்திதா தாஸ். அவங்க கிட்ட கதையை 'இ' மெயிலில் சொன்னப்போ ''சார் நான் இப்போ ஹனிமூன்'ல இருக்கேன்''னு பதில் வந்தது. சிம்ரனுக்கு நடிக்க ஆசை இருந்தாலும் அவங்களுக்கும் கல்யாணப் பிரச்சினை.

காதல் சந்தியாவுக்கு நானே வீடு தேடிப்போய் இந்த கதையைச் சொன்னேன். நான் கதையைச் சொல்லச் சொல்ல, கூட இருந்த அவங்க அம்மாவுக்கு முகமெல்லாம் மாறிப் போச்சு. ''அம்மா! சொல்லும் போதுதான் செக்ஸ் டாமினேஷன் இருக்கும். அனா படத்துல வராதுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்... சந்தியா மட்டும் ''சார் நான் இந்தக் கதைய தாங்குவேனா? அந்தளவுக்கு எனக்கு கெப்பாசிடி இருக்கா?ன்னு கேட்டு வியந்தாங்க. அதைவிட பயந்தாங்கன்னு சொல்லலாம்.

பெயர் வேண்டாம், அந்த நடிகைகிட்ட சொன்னபோது ''சாரி சார்! எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. நான் அதை கெடுத்துக்க விரும்பலை'' என்றார். இதே நடிகை பிறகு இன்னொரு இயக்குனரின் படத்துல விபச்சாரியா நடிச்சாங்க! அப்ப எங்க போச்சு அந்த இமேஜ்'னு தெரியலை!

இன்னொரு நடிகைகிட்ட சொன்னப்போ, ''அந்தம்மா சொன்னாங்க [அவங்க இப்போ அம்மா என்கிறார்] இதே கதையை பாலுமகேந்திரா எடுத்தா நான் நடிப்பேன். ஆனா நீங்க எப்படி'ன்னு எனக்கு தெரியாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இவ்வளவு ஏங்க? 'அம்மு'வுக்கு அம்மா கேரக்டர், அவங்களோட சப்போர்டிங் கேரக்டர் என்று எல்லாருமே ''சாரி! எனக்குன்னு இருக்கிற இமேஜை விட்டுட்டு வரமுடியாது'''ன்னு கூறி நான் யார் யாரை மனசில வச்சிருந்தேனோ அவங்க அத்தனை பேருமே மறுத்துட்டாங்க. இமேஜை காரணம் காட்டிய அந்த அம்மா நடிகை அறிமுகமானதே விபச்சாரி கேரக்டர்லதான்.

நான் என்ன அவ்வளவு கேவலமான படத்தை எடுக்கிறவனா? பார்த்திபன் சார், மகாநதி, ரமணா, தவமாய் தவமிருந்து படங்களின் காமிராமேன் பிரபு இனங்கள்லாம் என்னை விட்ருவாங்களா? இவங்கள்லாம் ஒத்துக்கிட்டதே இந்த கதைனாலதானே! நடிப்பை நடிப்பாய் பார்க்கக் கூடிய நட்சத்திரங்கள் இங்கே இல்லை என்று ரொம்ப‌வே ஆவேச‌ப்ப‌ட்டார் ப‌த்மாம‌க‌ன். நியாமான‌ ஆவேச‌ம் தான்.

''ஆபாசமாய் இருந்திடும்னு பயப்படுறாங்களாம்! நீங்க வேணா பாருங்க. தொட்ட விஷயம் விபச்சாரம்'னாலும் படத்துக்கு சர்டிபிகேட் வாங்கியே தீருவேன்'' என்று சவால் விட்டு தொடர்ந்தவர்.

''நம்பள எப்படா இந்த விளையாட்டுல சேத்துக்கப் போறாங்க!''ன்னு ஏங்கி, [இப்படி ஒரு டயலாக்கே இருக்கு] விபச்சாரத்தை சந்தோஷமாய் ஏத்துக்கிட்டு தாசியாய் மாறிப்போகிற ஒருத்தியின் வாழ்க்கை தான் அம்முவாகிய நான். இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் இந்தளவு அதன் அறைகளுக்குள் நுழைந்திருக்காது. இதுக்கு மேல நீங்க இந்த கதைக்கு ஒத்துக்கிட்ட பாரதி, நடிகர் பார்த்திபன், காமிராமேன் பிரபு கிட்ட கேளுங்க, அவங்க சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டார்.

கடலுக்குள் இருந்து கவர்ச்சியான உடையில் கண்ணைக் கூசுகிற மாதிரி [கான்ல்டாக்ட் லென்ஸ்] வந்தார் அம்முவாகிய பாரதி. எப்படி இந்த கேரக்டரை ஒத்துக்கிட்டீங்க?ன்னு கண்ணைப் பார்க்காமலே கேட்டோ ம்.

மூன்று நாள் தூக்கமே இல்லை, இந்த கதையைக் கேட்டு. கேட்க்கும் போதே மனதுக்குள் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இமேஜ்'லாம் தூக்கிக் குப்பைல போடுங்க. நல்ல கதையை செலக்ட் பண்ணா எல்லா ஹீரோயினும் நிப்பாங்க.
தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம்'னு பதினோரு படங்களை இதுக்காகவே கமிட் ஆகலை. என்னா இதுல எனக்கு அவ்ளோ பெரிய ஸ்கோப் இருக்கு. பார்த்திபன் சாரை விட எனக்குத்தான் ரோல் அதிகம். சீனியர் ஆர்ட்டிஸ்டோ ட சேர்ந்து நடிச்சா அவ்ளோதான் என்பதெல்லாம் இந்த படத்துக்குப் பிறகு உல்டா ஆயிடும்'' என்று அனுபவம் பேசினார் பாரதி.

நீங்க‌ பாக்கிற‌துக்கு மீனா மாதிரியே இருக்கீங்க‌. யாராவ‌து சொல்லியிருக்காங்க‌ளா? மீனாவுக்கான இடம் இன்னும் காலியாகத்தானே இருக்கு என்றேன்.

எல்லாரும் அப்ப‌டித்தான் சொல்றாங்க‌. சில‌ பேர் ரூபினி மாதிரி இருக்க‌, ரேகா மாதிரி இருக்க‌'ன்னும் சொல்றாங்க‌. அதெல்லாம் அவ‌ங்க‌வ‌ங்க‌ க‌ண்ணைப் பொருத்த‌து. என‌க்குக் கூட‌த்தான் சில‌ பேரை ஷாருக்கான் மாதிரி தெரியுது. ஆனா உண்மை அது இல்லையே! நான் நானாக‌த்தான் இருக்கிறேன். இருக்க‌வும் விரும்புகிறேன். ஒரு வேளை நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி இத்த‌னை ந‌டிகைக‌ளின் கேர‌க்ட‌ர் என‌க்குள் இருந்தால் அதுவும் ஒரு பிள‌ஸ் பாயின்ட் தானே!

ச‌ரி, எல்லா ந‌டிகைங்க‌ கிட்டேயும் கேட்கிற‌ கேள்விதான். நீங்க‌ள் கிளாம‌ராக‌ ந‌டிப்பீர்க‌ளா? கிளாம‌ர் எல்லோருக்கும் பிடித்திருக்கிற‌து என்று தான் நினைக்கிறேன்.

''ஆரம்பத்தில் கிளாமர் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் இதில் கிளாமர், ஹோம்லி, குறும்பு என்று விதவிதமான ரியாக்ஷன்கள். இதை வேண்டாமென்று மறுத்தவர்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். அது தான் என்னோட குட்லக். சிம்ரன் எதிர்பார்த்த நேஷ்னல் அவார்ட் எனக்கு கெடச்சதுனா அதை டைரக்டர்கிட்டயே திருப்பி தந்துடுவேன். ஏன்னா, இது அவரோட 16 வருட பிரசவம்.

ஓகே! நீங்க‌ எப்ப‌டி ந‌டிச்சிருக்கீங்க‌? உங்க‌ அனுப‌வ‌த்தைப் ப‌ற்றிச் சொல்லுங்க‌.

டிரஸ், மேக்கப், லொகேஷன் என்று எல்லாமே 'லைவ்' இதுல. ஓவ்வொரு சீன்லயும் அனுபவிச்சு நடிச்சிருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க! இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு டைரக்டர் கிட்டயிருந்து எனக்கு கிடைச்சிருக்கு.அதாவது ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் வந்து மானிட்டரை பார்க்க எனக்கு அனுமதி கொடுத்தார். என்னை எப்படி காட்டியிருக்காங்க என்பதை தெரிந்து நடிப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை.படம் எடுக்கிறேன்'ன்னு என் உடம்பை எடுத்து விடுவார்களோ என்கிற பயம் இருக்குமில்ல? ஏன்னா, நானே வீட்ல சண்டை போட்டுக்கிட்டு வந்து நடிக்கிற படம் இது.நாளப் பின்ன என் ஃபிரண்ட்ஸ், ரிலேஷன்ஸ் எல்லோர் முகத்திலயும் முழிக்கனும் இல்ல?

அதோட, படத்துல நானும், பார்த்திபன் சாரும் வாய்திறந்து பாடவே மாட்டோம். ஆனாலும் நாலு பாட்டு இருக்கு. பாட்டுக்கு நீங்க தம் அடிக்க எழுந்திரிச்சா படம் புரியாது. ஏன்னா பாடல்லயே கதை இருக்கு. அதைவிட காதல்'னா என்னன்னு நெஜமாவே இந்த படத்திலர்ந்து தெரிஞ்சிக்கிட்டேன். இந்த ஸ்கிரிப்ட் என் பர்ஸனல் லைஃபுக்கே யூஸ்புல்லா இருக்கும். எந்த பருவத்தில், எதன் பிறகு காதல் வந்தால் அது உண்மை என்பது படம் வந்த பிறகு பாருங்கள். டீட்டெய்லா தகவல் வேனும்னா பார்த்திபன் சார்கிட்ட கேளுங்க. அவர்தான் காதல் ஸ்பெஷலிஸ்ட். அம்பது வயசு பொம்பளைக்கு வர்ரது தான் உண்மையான காதல்'னு ஏதோ ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார். வேணும்னா அவர்கிட்டயே கேளுங்க''ன்னு பார்த்திபனைக் கையைக் காட்டினார் பாரதி.

''காமம் முடிந்த பிறகு வருவது தான் உண்மையான காதல்'' என்று கிறுக்கலாய் ஆரம்பித்த பார்த்திபன், 'காதலை உடைத்துப் பார்த்தால் காமம் என்கிற விதை இருக்கும். அனால் காமத்தை விதைத்துப் பாருங்கள் அதில் காதல் இருக்காது. இது காமத்தை விதைத்து முளைத்த காதல்'' என்று கவிதை படித்தார்.

''அமாம்! சின்ன வயதிலேயே காமத்தையும் அதன் எல்லைகளையும் கடந்தவள் அம்மு. அவள் பார்க்காத ஆண்கள் இல்லை, அவளுக்கு உடல் சுகமும் தேவை இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருத்தனை விரும்பினால் அது தான் உண்மையான காதல். காதலின் நேர்மையான கோணம் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது. பொதுவா ஃபிலிம் ஃபெஸ்டிவ‌ல்ல‌ தான்
இந்த‌ மாதிரி ப‌ட‌த்தை எல்லாம் பார்க்க‌ முடியும்.
ஆனா எல்லோரும் பார்க்க‌னும் என்ப‌த‌ற்காக‌ இந்தப் ப‌ட‌த்தில் உழைத்திருக்கிறோம்.

மொத்தக் கதையில் பதினைந்து சதவிகிதம் தான் எனக்கு நடிக்க‌ வாய்ப்பு என்றாலும், கதைக்காக ஒத்துக் கொண்டிருக்கிறேன். செல்லிங் த நேம் என்பார்கள் [விஜய் -த்ரிஷா, ரஜினி -கமல் மாதிரி] பெயரை விற்பது. அம்முவாகிய நான் கதைக்காகவே ஆயிரம் நாள் ஓடும். மனைவியை கேவலமாக நடத்துகிற ஆண்களுக்கு மத்தியில் ஒரு விபச்சாரியை கண்ணியமாக நடத்துகிற கேரக்டர் என்னுடையது. இந்தப் படத்தில் நான் தலையைக் காட்டினாலே சந்தோஷம் தான் என்கறார் பார்த்திபன்.

சூரிய‌ன் ம‌ற‌யும் வேளையில் அந்த‌ப் பாட‌ல் காட்ச்சியை முடித்து விட்டு வ‌ந்து கொண்டிருந்தார் ஒளிப்ப‌திவாள‌ர் பிர‌பு. த‌வ‌மாய் த‌வ‌மிருந்து'வை த‌ங்க‌மாய் இழைத்த‌ கைக‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்.

''ஒரு ஹாலிவுட் படத்துல வேலை செஞ்ச திருப்தி இருக்கு சார்''னு பதினெட்டாவது நாள் ஷூட்டிங்ல பார்த்திபன் என்னிடம் சொன்னார். நான் இந்த படத்தில வெறும் ஒளிப்பதிவாளர் இல்லை. இனை இயக்குனர்'னு சொல்லலாம். அந்தளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கார் பத்மாமகன். எனது முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு, ''கதையின் கூடவே நீங்கள் பயனிக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாய் நீங்கள் தான் வேண்டுமென்று கேட்டார். அந்த விஷயம் தான் பத்மாமகனிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே கௌரவமாய்க் கருதி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறேன். பொதுவாக ஒளிப்பதிவாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் அழகியல் சார்ந்து பதிவு செய்வார்கள். நான் அப்படி செய்வதில்லை. கதையின் ஊடாகப் பயணிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறேன்.

உணர்வுப்பூர்வமாய் என்பார்கள், அதை படம் பார்க்கும் போது உண‌ர்வீர்கள்'' என்று இயல்பாக கூறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபு. அம்முவாகிய நான் விருதுக்கான படமாக மட்டுமல்லாமல் விரும்புகிற படமாகவும் இருந்தால் நல்லதே.

பேட்டி: மரக்காணம் பாலா.
படங்கள்: அம்முவாகிய நான் படத்திலிருந்து.

Friday, January 5, 2007

சப்ப மாடு செத்து ஏழை பணக்காரன் ஆன கதை


ஒரு ஊர்ல ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் ஒரே ஒரு பசு மாடு இருந்தது. அதுவும் சரியான சப்பை மாடு. ஒரு நாள் திடீர்னு, அந்தச் சப்பை மாடும் செத்துப் போச்சு. ‘என்னா பண்றது?'ன்னு இவன் தவிக்கிறான். கூழுக்கே வழியில்லாத குடும்பம். இருந்த ஒரே மாடும் செத்துப் போச்சு. அழுதுகொண்டே போய், மாட்டுக் கறியை மண்ணில் புதைத்துவிட்டு, தோலை உறித்து எடுத்துக் கொண்டான்.

“அடியே! புள்ளைங்கல பாத்துக்க. நாம் போயி தோல வித்துட்டு, சாப்பாட்டுக்கு எதுனா அரிசி வாங்கியாறேன். கஞ்சியாவது காச்சிக் குடிப்போம்''னு பொண்டாட்டியிடம் சொல்லிட்டு, வெளிய கௌம்பிவிட்டான்.

இவன் தேடிப்போன தோல் வியாபாரி ஊரில் இல்லை. “எத்தினி மணி ஆனாலும் செரி. தோல விக்காம ஊட்டுக்குப் போவக்கூடாது” எனக் கூறிக்கொண்டு வியாபாரி வீட்டின் வாசலிலேயே காத்திருந்தான்.

அந்த நாளில்தான் கரண்ட்டு கிடயாதே. இருட்டிப் போய், கண்ணு மண்ணு தெரியல. அந்த நேரம் பார்த்து, இண்டு திருடர்கள் கையில் இரண்டு பைகளுடன் வந்தார்கள்.

“டேய்! இந்த வீட்டு வாசல்ல இருக்கிற மர பீரோவில் ஒளிஞ்சுக்குவோம். யாரும் இல்லாத நேரம் பார்த்து தப்பிச்சிறலாம்'' எனச் சொல்லிக்கொண்டு, தோல் வியாபாரி வீட்டின் பீரோவுக்குள் பூகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரம் கழித்துத் தோல் வியாபாரி வந்தான். அவன், காவிளக்கை ஏற்றியவுடன், இவன் போய் அவனெதிரே நின்றான். யாரு...? தோல் விற்க வந்தவன்.

“யாருப்பா நீ? இன்னா வேணும்'' தோல் வியாபாரி கேட்டான்.

“அய்யா! இன்ன மேரி எம் பசுமாடு செத்திரிச்சி. அதான் இந்தத் தோல வித்துட்டு, எதுனா வாங்கினு போலாம்னு வந்தேன்'' என்றான்.

“செரி, செரி. யவ்ளோ வேணும்? அத்த சொல்லு” என்றான் தோல் வியாபாரி.

“காசு பணமெல்லாம் வேணாம்ங்க. தோ, மழையிலயும் வெயில்லயும் மக்கிக் கிடக்குதே... மர பீரோ. அதைக் குடுத்தா, எங்கூட்டு சாமான்களை பத்தரமா வச்சிக்குவேன்'' என்றான் இவன்.

‘வெளிய கிடந்து வீணாதானே மக்குது' என்று தோல் வியாபாரியும் அதை அவனிடம் கொடுத்துவிட்டான்.

இவன், பக்கத்தில் நடந்து போய் ஒரு வண்டிக்காரனை கூப்பிட்டபோது, “ராத்திரில என்னால வரமுடியாது” என்று சொல்லி, “வேணும்னா வண்டியை நீயே ஓட்டினு போய், காலைல கொண்ணாந்து உட்ரு” எனச் சொல்லிவிட்டான்.

“இத்த சொல்லுவன்னுதான நானும் எதிர் பாத்தேன்” என நினைத்தபடி, நம்மாளும் பீரோவை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

போகிற வழியில் மாடுகளிடம் சொன்னான், “மாடுங்களா...! மன்னர் எனக்கிட்ட கட்டளையை இன்னிக்கித்தான் நிறைவேத்தி இருக்கேன். ரொம்ப நாள் அகப்படாம இருந்த திருடனுங்களை இன்னிக்கிப் புடிச்சிட்டேன். நாளைக்குப் பாரு அமக்களத்தை!” என்று.

திருடர்கள் பயந்து போய், “எங்கடா நமக்கு மரண தண்டன குடுத்துடப் போறாங்க” என அஞ்சி, “அய்யா, சாமி! உங்க கால்ல உழுந்து கேக்கறோம். இந்தப் பொண்ணும் பொருளும் உங்கிட்டயே குடுத்துடறோம். எங்களை தொறந்து உட்ருங்க. நாங்க எங்கனா கண்காணா தேசத்துக்குப் போய் பொழச்சிக்கிடறோம்'' என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். 

இல்லாத உருட்ல், மெரட்டெலெல்லாம் காண்பித்துவிட்டு, “இத்தோட எந்த வம்புக்கும் போவக்கூடாது” என எச்சரித்து, நகைகளையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, திருடர்களை துரத்திவிட்டான் செத்துப்போன சப்ப மாட்டின் உரிமையாளன்.

நேராக வீட்டுக்கு வந்தவன், மனைவியிடம் இரண்டு பைகளையும் கொடுத்துவிட்டு, வண்டிக்காரனிடம் வண்டியையும் திருப்பி ஒப்படைத்துவிட்டான்.

அதன் பிறகு செல்வத்துக்கு கேக்கவா வேண்டும்?

‘கல்லு ஊடுதான், கறி கொழம்பு தான்’

‘காலைலயும், சாய்ந்திரமும் வெத்தலப் பாக்குத்தான்.'

ஊரு சும்மா இருக்குமா? எல்லாருக்கும் ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இவம் எப்பிட்றா இவ்ளோ பெரிய பணக்காரனா ஆணான்?' என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

பொம்பளைங்க வாய் சும்மா இருக்காது என்று சொல்வார்களே! 

‘நைசா இன்னான்னு விசாரிடி’ என்று, அவனவன் அவனவன் பொண்டாட்டிகளிடம் சொல்லி விரட்டிவிட்டார்கள்.

இவள்கள், குளக்கரையில் குடத்துக்குத் தண்ணீர் பிடிக்கும்போது சப்பை மாட்டுக்காரன் மனைவியிடம் கேட்டார்கள்.

“ஏண்டி... எங்கருந்துதான்டி வந்துது இவ்ளோ வசதியும்? அந்த மாயத்தை எங்களுக்கும் சொன்னா, நாங்களும் செஞ்சிப் பாப்பமுல்ல...” என்றார்கள்.

“அட, இதைக் கேக்கவா இவ்ளோ நாளும் மொன்னு முழுங்கியிருந்தீங்க? ஒரு சப்ப மாடு வச்சிருந்தமே. அதான் சம்பாரிச்சிக் குடுத்திச்சி. அது பாலுங் கரக்காம, சானியும் போடாம, ஒரு நாள் செத்துப் போச்சா. கறியைக் கொண்ணும் போய் மண்ணுல பொதச்சிட்டு, தோலை எடுத்தும்போய் விக்கப் போனவருதான். பய்யி நெறெய பணத்தொடத்தான் ஊட்டுக்கு வந்தாரு. தங்க வெல விக்கிதாமுல்ல தோலு...”

இவள் சொல்லி வாயை மூடவில்லை. குடத்தைப் பூரா போட்டது, போட்டபடியே எல்லாவளும் விட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டாளுகள்.

“அட வெவரங்கெட்டவங்களா! நாட்ல எந்தப் பொருளு என்னா வெலை விக்கிதுன்னுகூடத் தெரியாம, நீங்கள்லாம் சம்பாரிக்கக் கௌம்பிடுறீங்க. சப்ப மாட்டுத் தோலுதான்டா இவ்ளோ வசதிக்கும் காரணம்” என்று தாங்கள் கேட்ட அலாவுதீனும் அற்புத விளக்கும் கதைய அப்படியே ஒப்பித்தார்கள்.

அவ்வளவுதான்! எல்லா வீட்டு ஆம்படையான்களும் கூடி முடிவெடுத்தார்கள்.

“இருக்குற மாடு எல்லாத்தயும் வெட்டிக் கூறுபோட்டுப் பொதச்சிட்டு, தோலைத் தூக்கிட்டுப் போய் வித்துப் பணக்காரனா ஆவுரது” என்று.

முடிவெடுத்தபடி, இருந்த ஆடு, மாடுகள் எல்லாவற்றையும் வெட்டிச் சாகடித்துவிட்டு, தோலை உறித்து வியாபாரத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள்.

தோல் என்ன விலை விற்குமென்று சம்சாரிகளான உங்களுக்குத்தான் தெரியுமே. “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” என்கிற கதையாகிவிட்டது குடியானவர்களின் நிலைமை.

நம்ம ஆள் வாயும் வயிறுமாக வசதியாக வாழ்வதைப் பார்க்க எவனுக்கும் பிடிக்கவில்லை. ஒரு கூட்டம் போட்டு முடிவெடுத்தார்கள்.

“அவனை எப்பிடியாவது சாவடிச்சுடனும்டா”

இதற்காக என்ன செய்தார்கள் என்றால், மரத்தில் ஒரு பீப்பாய் செய்து, அதை இரவோடு இரவாகக் கொண்டு போய், நம்ம ஆளை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார்கள். விடிந்த உடனே கும்பலாக அந்தப் பீப்பாயை உருட்டிக்கிட்டுப் போய், கடலைப் பாத்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

“யாம் மொவன் இத்தோட ஒழிஞ்சாண்டா” எனக் கூறிக்கொண்டே ஜாலியாக உருட்டிக்கொண்டு போனார்கள்.

போகிற வழியில் இவுர்களுக்கு தண்ணீர்த் தாகம் எடுத்துக்கொண்டது.

“டே, தண்னித் தாகம் எடுக்குதுடா” என்று ஒருவன் சொல்லவும், “நெல்லிக்கா சாப்ட்டா சரியாப் பூடும்” என்று ஆளுக்கு ஒரு மூலையாக நெல்லிக்காய் பறிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

“பய எப்படித் தப்பிச்சிடப் போறான்?” என்கிற நினைப்பில் அசமந்தமாய்த் திரிந்தார்கள்.

அந்தக் காலத்தில்தான் மாடு திருடுறவர்கள் அதிகமாச்சே. அதுபோன்று மூன்று மாடு திருடர்கள், ஆளுக்கு நூறு ஆடு, நூறு மாடுகளைத் திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் பயங்கரக் களைப்பு. பீப்பா உருட்டு நடந்து கொண்டிருந்த வழியில் ஆடு, மாடுகளை மேய விட்டுட்டு, செம்ம வேட்டயாச்சே! ஆசை தீர சாராயத்தையும், கள்ளையும் நெக்கக் குடித்தார்கள்.

குடி வெறி சும்மா இருக்குமா? பங்கு போடுவதில் தகறாறு வந்துவிட்டது. விட்டான் ஒரு உதை. ஒருவன், ஓடிப் போய் நேராக பீப்பாய் மேல் விழுந்தான்.

“ஒதெக்கி ஒதெ குடுக்குறம் பார்றா” எனக் கூறிக்கொண்டு விழுந்தவன் பீப்பாவைத் தூக்கினான். அவனால் முடியவில்லை.

“என்னாடா இந்தக் கணம் கணக்குது” என நினைத்தபடியே, “டேய், பங்கு அப்புறம் பிரிச்சிகிரலாம். மொதல்ல இந்தப் பீப்பாவைத் தெறப்போம். சத்தியமா இதுல புதையல்தான் இருக்குது” என்றான்.

சண்டைய மறந்துட்டு மூன்று பேரும் பீப்பாயைத் திறந்தார்கள். திடீரென்று அதிலிருந்து சப்பை மாட்டுக்காரன் வெளிய வரவும், மூவரும் மிரண்டுவிட்டார்கள். பேயோ, பூதமோவென்று.

சப்பை மாட்டுக்காரன் சொன்னான், “யாரும் பயப்படாதீங்க! இது அதிசய பீப்பா. இதும் உள்ள போயி நீங்க இன்னா கேட்டாலும் கெடைக்கும். எங்க‌ போவனும்னாலும் போவும். எல்லா ஒலகத்துக்கும் போயி வரலாம்'' என்று புளுகினான்.

இதை நம்பி இந்த மூன்று திருடர்களும் அந்தப் பீப்பாய்க்குள் புகுந்து கொண்டார்கள்.

இவன் அந்தப் பீப்பாவை முன்னிருந்த மாதிரியே தைத்து மூடிவிட்டு, நூறு ஆடுகளையும் நூறு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். 

ஊர்க்காரப் பயலுகளும் அந்தப் பீப்பாவை உருட்டிக் கொண்டு போய் கடலில் தள்ளிவிட்டு, ''அப்பாடா! ஒழிஞ்சது சனியன்'' எனச் சொல்லிக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்கள்.


மறு நாள் விடிந்து எல்லாரும் வெளிய வந்தபோது...! ஆஹா! நம்ம ஆள், திண்ணை மேல் உட்க்கார்ந்து வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டிருந்தான்.

“இன்னாடா இது? எழவெடுத்த வேலையாப் போச்சு. மெனக்கட்டுப் போய் கடல்ல தள்ளிட்டு வந்தோம், இவன் கல்லு மாதிரி திண்ணைல உக்காந்துனு இருக்கானே?'' என்று ஆச்சர்யமாகப் போய்விட்டது அவர்களுக்கு. 

மீண்டும் தங்களது பொண்டாட்டிகளை விட்டனுப்பினார்கள்.

“போய் இன்னான்னு கேள்றி''

இவுளுகளும் போய்க் கேட்டாள்கள்.

“ஏதும இம்மா ஆடு மாடுங்க...? அதிசயமா கீது! எங்களுக்கும் சொன்னா நாங்களும் பொழைக்க மாட்டமா?'' என்று கன்னத்தில் கை வைத்தபடியே கேட்டார்கள்.

“இதுல என்னா அதிசயங் கீது? ராத்திரி யாரோ திருட்டுப் பயலுவ எங்கூட்டுக்காரு தூங்கியிருந்த நேரமாப் பாத்து, பீப்பாவுல அடச்சி எடுத்தும் போய் கடல்ல தள்ளிட்டு கீறானுங்க. விடிஞ்சி பாத்தா மனுசனக் காணாம். என்னமோ எதோன்னு நாம் பதறிக் கெடக்குறேன், சாயந்தரமா பாத்து அவரே வர்ராரு. சும்மாவா வந்தாரு? இந்தப் பக்கம் நூறு ஆடு, இந்தப் பக்கம் நூறு மாட்ட இல்ல ஓட்டிக்கினு வந்தாரு”

“ஏதுய்யா இம்மா ஆடு, மாடுங்களும்னு கேட்டா, ‘அட அத யாண்டி கேக்குற? திருட்டுப் பயலுவ பீப்பாவுல வச்சி உருட்டினு போய் என்னை கடல்ல தள்ளிட்டானுங்க. போறன்... போறன்... போறன்... நடு ஆழத்து வரைக்கும் போய்ட்டேன். பாத்தா... பாதாள தேவதை வந்து பீப்பாயைத் தொறக்குது.

‘யார்றா நீ? எதுக்கு இங்க வந்த?'ன்னு கேக்குது.

நான் இன்னாத்த சொல்றது? இந்த மேரி படுபாவிப் பயலுங்க என்னை சாவடிக்கப் பாத்தக் கதைய சொன்னேன். என் மேல எறக்கப்பட்டு, ‘இந்தா உனக்கு நூறு ஆடு, நூறு மாடு'ன்னு குடுத்து, ஓட்டினு போவச் சொல்லிருச்சி'ன்றாரு. இதாம்மா நடந்த கதை” என்று முழு சங்கதியையும் சொன்னாள் அவள். 



பொண்டாட்டிக்காரிகள் அத்தனை பேரும் போனார்கள்.

“அட அறிவு கெட்டவனுங்களா! இதாண்டா நடந்தது. நீங்களும் இருக்கீங்களே?” என்று காரித் துப்பினாள்கள்.

ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவன்களுக்கு.

“டேய்! ஆளுக்கு ஒரு பீப்பாயை ரெடி பண்ணுங்கடா'' என்று சொல்லி, அதே மாதிரி தயார் பண்ணிவிட்டார்கள்.

“பாருங்கடி... நங்கள்ளாம் இதுல உள்ள பூந்துக்குவோம். பக்குவமா எங்களை கொண்டுனு போய் கடல்ல தள்ளிறனும்'' என்று மனைவிமார்களிடம் சொல்ல, அவர்களும் அதே மாதிரி பண்ணிவிட்டார்கள். ஆனால், போன புருசன்கள் யாரும் திரும்பி வரவே இல்லை.

அப்புறம் என்ன ஆனது? பொம்மனாட்டிகளை ஆள ஊருக்குள் யாருமே இல்லை என்பதால், எல்லா பொண்டாட்டிகளையும் இவனே கல்யாணம் செய்துகொண்டு சந்தோசமாகக் குடும்பம் நடத்தினானாம்.

குறிப்பு: இந்தக் கதையை எனக்கு சொன்னது எங்க ஊர் மூலிகை வைத்தியர் விஜயன்.