Tuesday, June 15, 2010

‘‘அதிகாரத்தை கைப்பற்றுங்கள்!’’ -சல்மா!


குறிப்பு: இது சல்மா பேட்டியின் இரண்டாம் பாகம். முதல் பாகம், முந்தைய இடுகையில் உள்ளது.

வீட்டுக்குள் சிறைப் பறவையாய் வாழ்ந்து வந்ததாகக் கூறும் சல்மா, தன் முதல் வெளியுலகப் பயணம் குறித்தும் அரசியல் ஆரம்பம் குறித்தும் தொடர்கிறார்.

‘‘வெளியூர் போகவேண்டும் என்றால், உடம்பு சரியில்லை என்றால் மட்டுமே சாத்தியம். நான், வேண்டுமென்றே கால் வலிக்கிறது என்று கதறினேன். ஒரு வழியாய், ஊரே தூங்கும் அதிகாலை நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் மதுரைக்குப் புறப்பட்டோம். அங்கிருந்த டாக்டர் எனக்கு எக்ஸ்ரேவெல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு,

‘‘என்ன பிரச்னைன்னே கண்டுபிடிக்க முடியலை. வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடப்பதுகூட காரணமாய் இருக்கலாம். எக்ஸர்சைஸ் பண்ணச் சொல்லுங்க’’ என்றபடி அவர் பங்குக்கு ஒரு ஊசி போட்டார். மருந்து, மாத்திரிகளும் எழுதிக் கொடுத்தார்.

இப்போது எப்படிக் கிளம்பினோமோ, அப்படியேதான் யாருக்கும் தெரியாமல் ஊர் திரும்பவேண்டும். எனவே, இரவு 12 வரை நேரமிருந்தது. முதலில், ‘அம்மன் கோயில் கிழக்காலே’ சினிமாவுக்குப் போனோம். அப்புறம் ஷாப்பிங், ஹோட்டல், நியூ சென்சுரி புக் ஸ்டால் என விரும்பிய இடத்துக்கெல்லாம் போனேன். வெளியுலகம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதன்பிறகு, ஐந்தாறு தடவைகள் கால் வலி என்று சொல்லி மதுரைக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் நல்லா இருந்த உடம்பில் நாலைந்து ஊசி போட்டுக்கொண்டேன்.

வெளியுலகத்தைப் பார்தத பிறகு, ‘பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று நிறைய கேள்விகள் எழுந்தன. ராஜாத்தி என்கிற புனைப்பெயரில், சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்தேன். ‘ஒரு பொண்ணு பேர் எப்படி வெளியில தெரியலாம்?’ என்று ஊருக்குள் கேவலமாக பேச ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், வீட்டில் எனக்குக் கல்யானத்தை முடிக்கவேண்டும் என்று குதித்தார்கள். இதற்காக, என் பதிமூன்று வயதிலேயே ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நான், திருமணம் என்பது வேறொரு உலகத்தை எனக்கு திறந்துவிடவேண்டும் என்று விரும்பினேன். மீண்டும் இதே உலகத்துக்குள் விழ விருப்பமில்லை. எனவே, சாமர்த்தியமாக இருபது வயதுவரை தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன்.

என்னுடைய கிராமத்தைப் பொறுத்தவரை வாக்கு கொடுத்துவிட்டால், உயிரைக் கொடுத்தாவது அதைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். என்னையும் அப்படிக் கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார்களே! மீற முடியுமா? மீறினால், இரண்டு குடும்பத்துக்கும் பெருத்த அவமானமகிவிடும்.

‘என்னத்த பொண்ணு வளத்து வச்சிருக்கீங்க?’ என்று எங்களையும், ‘பையனை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளாமே!’ என்று மாப்பிள்ளை வீட்டாரையும் கேவலமாகப் பேசுவார்கள். ஆனால், ‘கொடுத்த வாக்குறுதிக்காக ஒருவரின் வாழ்க்கையையே பணயம் வைப்பது’ என்பதை நான் வெறுத்தேன்.

துவரங்குறிச்சியில் ஒரு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? ‘கல்யாணம் பண்ணி வச்சா தற்கொலை பண்ணிக்குவேன்’ என்று நானும், ‘இல்லைன்னா நான் பண்ணிக்குவேன்’ என்று என் அம்மாவும் மாறி மாறி மிரட்டிக்கொண்டோம். கடைசியில் குடும்பம்தான் ஜெயித்தது.

‘‘அப்படியானால், அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்?’’

திருமணத்துக்குப் பிறகு, என்னால் எழுத முடியவில்லை. எனவே, யாருக்கும் தெரியாமல் ராஜாத்தி என்கிற பெயரை மாற்றி ‘சல்மா’ என்று எழுத ஆரம்பித்தேன். காலச்சுவடுதான் என் முதல் (பெயர்) கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. அப்போது என் புகைப்படத்தைக் கேட்டார்கள். கொடுத்தால் பிரச்னையாகிவிடும் என்று நான் மறுத்துவிட்டேன்.

ஆனால், நிலமை தலைகீழாக மாறியது. என் கணவர் குடும்பம் பரம்பரை தி.மு.க.வைச் சேர்ந்தது. எனக்கோ, அரசியல் பிடிக்காது. வாசிப்பின் மூலமாக நானும் அதை ஒரு சாக்கடை என்றே கருதி வந்தேன். அப்போது பஞ்சாயத்துத் தேர்தலுக்கான நேரம். என் கணவருக்கு எலக்'ஷனில் நிற்க ஆசை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பகல் பன்னிரெண்டு மணிக்கு என்னிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

அந்தக் கையெழுத்துதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுதான் இலக்கியவாதியகவும் என்னை வெளிக்கொண்டுவர உதவியது. அது ஒவ்வொரு பெண்ணுக்குமான முன்னுதாரணம். அதிகரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முதல் படி.

அந்தக் கையெழுத்தை மட்டும் நான் போடாதிருந்தால், இன்று முகம் தெரியாத ஒரு சல்மவாக வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயிருப்பேன்.’’ சந்தோஷத்துடன் தொடர்கிறார் சல்மா.

‘‘ஒரு பெருங்கூட்டம் புடைசூழ, ஊர் ஊராக என்னைப் பிரச்சாரத்துக்கு கூட்டிப் போனார்கள். மேடையில் ஏற்றினார்கள். எந்த போட்டோ எனக்கு மறுக்கப்பட்டதோ, அதைப் பெரிது பெரிதாய் அச்சிட்டு ஊர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டினார்கள்.

அப்போதும், அவர்களின் தேவைக்காக என்னைப் பயன்படுத்துகிறார்களே என்று வருந்தினேன். ஆனால், அங்கே மக்கள் என்னிடம் வைத்த ஆயிரக்கனக்கான கோரிக்கைகள் எனக்குள் ஆழ்ந்த நம்பிக்கையை விளைவித்தது. முக்கியமாக ஒன்றைச் சொல்லியாகவேண்டும்.

அப்போது எனக்கு தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவிகூட இல்லை. எனவே, சுயேட்சையாகத்தான் போட்டியிட்டேன். அதிலே, என்னோடு போட்டியிட்ட ஐந்து பேரும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு, மிகப்பெரிய வெற்றி பெற்றேன். அடுத்த ஐந்து வருடத்தில், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றினேன்.

முதன் முதலாக விகடன் பத்திரிகை என்னை பேட்டி கண்டது. அப்போது, புகைப்படத்துக்காக வீட்டில் அனுமதி வாங்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு உடைந்திருந்தது. பிறகு, இலக்கிய கூட்டங்களுக்காக சென்னை வர ஆரம்பித்தேன். கனிமொழியோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. முதல்வர் மகள் என்றாலும் ஒரு கவிஞராக தன்னை அடையாளப்பட்டுத்திக்கொண்ட கனிமொழிதான் எனக்கு ‘மாரல் சப்போர்ட்’டாக இருந்தவர்.

‘தலைவர் மகளும் ஒரு எழுத்தாளர்தான்’ என்கிற இந்த ஒப்புமைதான் என்னை என் கணவருக்கும் புரிய வைத்தது. கனிமொழியோடு நான் பேசுவதை வியப்போடு அவர் பார்த்தார். எழுத்து, எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொண்டார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டுதான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக என்னைப் பதிவு செய்ய வைத்தார்.

‘‘உங்களின் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘வாய்ப்பு கேட்டு, எல்லோரும் பணம் கட்டுவதுபோலத்தான் நானும் கட்டினேன். அதுவும் ராகுகாலத்தில்! ஆனால், அதிர்ஷ்டவசமாக சீட் கிடைத்துவிட்டது. சீட் கிடைத்த பிறகு எனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவானதுதான் நன் எதிர்பார்த்திராத ஒன்று. நான் போட்டியிட்ட மருங்காபுரி தொகுதி அ.தி.மு.க.வுக்கு ராசியானது என்றாலும், ‘சல்மா ஜெயிக்கிறார்’ என்பதுதான் துக்ளக் முதற்கொண்டு ஆனந்தவிகடன் வரையிலான கருத்துக் கணிப்பு.

ஆனால், பெண்கள் அரசியலுக்கு வருவதை முக்கியமான சில ஆண்கள் இன்றைக்கும் விரும்பவில்லை. ஓட்டுப் பதிவுக்கு முதல் நாள், கட்சிப் பாகுபாடின்றி அவர்கள் செய்த சதியின் காரணமாக வெறும் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் தோல்வியைத் தழுவினேன்.

ஆனாலும் ,பிறகு தி.மு.க ஆட்சியைப் பிடித்ததால் தோல்வியைப் பர்க்காமல் மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொண்டுவந்தனர். நான் அவற்றை எடுத்துக்கொண்டு சென்னையில் தலைவரைப் போய்ப் பார்த்தேன். அவர், யாருமே எதிர்பாராத வகையில் எனக்கு சமூகநல வரியத் தலைவர் பதவியைக் கொடுத்தார். என்னால் முடிந்த அளவுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

‘‘அரசியல், இலக்கியம் இரண்டையும் எப்படி ஒரே நேரத்தில் கையாள முடிகிறது?’’

‘‘இத்தனை வயதிலும் எங்கள் தலைவர் கையாளவில்லையா? தி.மு.கழகத்தைப் பொறுத்த அளவில் இதற்கு ஊக்குவிப்புகள் அதிகம். சொல்லப்போனால், அரசியலில் இருப்பது ஒரு பெண்ணுக்கென்று சமூகத்தில் உள்ள பொதுவான தடைகளை உடைக்க உதவுகிறது. என் அனுபவத்தில், ‘பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், அதிகாரத்தை கைப்பற்றவேண்டும்’ என்பதை முக்கியமான ஒரு கருத்தாக சொல்ல விரும்புகிறேன்.

சமீபத்தில் அமெரிக்க தூதரகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை அழைத்திருந்தார்கள். ‘அமெரிக்காவில், பத்தில் ஆறு பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாக’ அப்போது என்னிடம் சொன்னார்கள். அமெரிக்காவிலேயே இந்த நிலமை என்றால், இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக் கழக விழாக்களுக்கு போகும்போது, மாணவிகள் என்னிடம் சொல்கிறார்கள். ‘மேடம்! உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது’ என்று. அரசியலுக்கு அதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ''

Friday, February 12, 2010

‘‘அந்த நினைவுகளை நான் வெறுக்கிறேன்’’ -சல்மா.


சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’ எனப்படும் ‘மேன் ஏசியன் லிட்டெரரி விருது’க்காக, லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், விருது பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் போய்விட்டது. தற்போது மலையாளம், இந்தி, ஜெர்மன், உருது ஆகிய மொழிகளிலும் இரண்டாம் சாமம் வரவிருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகளைகள் அனைத்தும் சல்மாவை பேட்டி கண்டபோதிலும், தமிழ் ஊடகங்கள் ஏனோ பாராமுகம் காட்டி வருகின்றன. ‘‘இவ்வளவு நீண்ட பேட்டியளிப்பது இதுவே முதல் முறை’’ என்கிற சல்மா, தன் அம்மாவிடம் கூறாத உண்மைகளைக்கூட அன்று வெளிப்படையாகப் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து பூமியை ரசித்தபடி தொடங்கியது உரையாடல்...

‘‘மிகவும் பின்தங்கிய, படிப்பறிவில்லாத சிறிய கிராமம் துவரங்குறிச்சி. அங்கே, சாதரான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன். அதிகபட்சம் பத்தாவது படிப்பதே ஊரில் அபூர்வம். ‘சமைப்பது, துவைப்பது, குழந்தை பெறுவது’ என்று பெண்களுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது. நான் மட்டும் நிறைய கனவுகளுடன் வளர்ந்தேன். காரணம்? புத்தகங்கள். எனக்கு மிகவும் பிடித்தது மாயாஜாலக் கதைகள்தான். அவற்றில் இருந்த அதீத கனவுத்தன்மை என்னை வசீகரித்துக்கொண்டே இருந்தது. ‘இரும்புக்கை மாயாவி’தான் என் ஹீரோ. விக்கிரமாதித்தன், துப்பறியும் சாம்பு போன்றவர்களும் என்னைக் கவர்ந்தார்கள். காமிக்ஸ் வழியாக துப்பாக்கி ஏந்தியபடி குதிரைகளில் பயனிப்பது, கொள்ளையர்களை விரட்டியடிப்பது என்று கதைக்குள்ளாக வாழ்ந்துகொண்டிருந்தேன். மதனகாமராஜன் கதைகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளை வாசிக்க பாதை அமைத்துக் கொடுத்தது. நான் ஆறாவது படிக்கும்போது ‘ஆனந்தவிகடன், குமுதம், ராணி’யெல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டன.

என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்துவிட்டது.

‘‘எது? அந்த சினிமாவுக்குப் போன சம்பவம்தானே!’’

‘‘அய்யோ... ஏன் கேட்கறீங்க? அப்போதெல்லாம் நைட் ஷோதான். வயதுக்கு வந்த பெண்கள் சினிமாவுக்கு போக அனுமதி இல்லை. எங்க ஊர் பரணி தியேட்டரில் அப்போது முதல் முதலாக மேட்னி ஷோ ஆரம்பித்தார்கள். படம் ஆரம்பிக்கும் முன், ‘பழனி முருகனே...!’ என்கிற பக்தி பாடலைப் போடுவார்கள். படம் முடிந்து வெளியே வந்தால், ‘ரூப்புத் தெரா மஸ்தானா...’ என்கிற இந்திப்பாடல் ஒலிக்கும். இப்போதுகூட அந்தப் பாடலை கேட்டால், பழைய நினைவுகள் வந்துவிடும். ஒரு நாள், நானும் என் தோழிகள் மூவரும் லைப்ரரிக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு மேட்னி ஷோவுக்குப் போனோம். போனதும்தான் தெரிந்தது, அது ஒரு மலையாளப் படம்! பிரமிளா நடித்த ‘அவளோட ராவுகள்’ போட்டிருந்தார்கள். திடீரென குளியல் சீன் ஓட ஆரம்பித்ததும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘வெளியே போய்விடலாம்’ என்றால், கேட்டைப் பூட்டிவிட்டார்கள். வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு முழுப்படத்தையும் கேட்டுக்கொண்டிருந்தோம். பெண்கள் பகுதியில் நாங்கள் நான்கு பேர்தான். எல்லோரும் படம் பார்ப்பதை விட்டுவிட்டு எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

படம் முடிந்தது. ‘எல்லா ஆண்களும் வெளியேறட்டும்’ என்று அரைமணி நேரம் காத்திருந்தோம். தாவனியை இழுத்து, முக்காடு போர்த்திக்கொண்டு வெளியே வந்தால்...! ‘என்ன ஆயிற்று தெரியுமா? ஒருத்தன்கூட வீட்டுக்குப் போகவில்லை. அத்தனை பேரும் எங்களுக்காகவே வாசலில் காத்திருந்தார்கள். அவமானத்தில் ‘செத்தே போய்விடலாம்’ என்றிருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள், ‘ஏ& படம்’ பார்த்த செய்தி முந்திக்கொண்டுவிட்டது. அவ்வளவுதான்! அடுத்தநாள் முதல் நால்வரின் பள்ளி வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

முற்றுப்புள்ளிக்குப் பிறகான எனது வாழ்க்கை, குகைக்குள் புதைந்த மாதிரி ஆயிற்று. அதை நினைத்துப் பார்ப்பதையே நான் வெறுக்கிறேன். அவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை அது. பதிமூன்று வயதில் பெரியவளாகிவிட்டேன். வீட்டைவிட்டு ஒரு நொடிகூட வெளியே வரக்கூடாது. எந்த ஆம்பிளையும் வீட்டுக்குள் வரக்கூடாது. காலிங் பெல் சத்தம் கேட்டதும், பெண்கள் எழுந்து ரூமுக்குள் சென்றுவிடவேண்டும். தந்தை மகள் உறவே ஆண்&பெண் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் புத்தகங்கள் மட்டுமே எனக்குத் துனையாய் இருந்தன.’’ &ஆழ்ந்த பெருமூச்சுடன் லேசாகச் சிரிக்கிறார் சல்மா.

‘‘கொடுமையான இந்த வாழ்க்கையை நான் அறிந்தே இருந்தேன். ‘பள்ளிக்கூடம்தான் போக முடியவில்லை, கரஸ்பான்டென்சிலாவது படிக்கலாம்’ என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ‘தபால் மூலம் படிப்பதென்றால் முதலில் ஸ்கூலுக்குப் போய் டி.சி. வாங்கணும். ஸ்கூலுக்குப் போனால் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். ஒரு பொண்ணை எப்படி வெளியூருக்கு அனுப்பலாம்? என்று அசிங்கமாகப் பேசுவார்கள்’ என்றார் அம்மா. இப்படி நமக்காக என்றில்லாமல், ஊருக்காகவே எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் ஊருக்குள் கார் வந்து நின்றால், ‘உள்ளே யார் இருக்கிறார்கள்?’ என்று எட்டிப் பார்க்கும் அளவுக்கு தனிமனிதச் சுதந்திரம் அனுமதிக்கப்படாத பூமியாகவே இருக்கிறது துவறங்குறிச்சி.

இந்தச் சூழ்நிலையில்தான், வீட்டுக்குள் இருந்தபடியே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து, ‘இருளின் முதுகை ஒடித்துக்கொண்டு சூரியனாய் வெளியே வா!’ என்பது மாதிரி கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் வாசிப்புத் தளம் விரிவடைய ஆரம்பித்தது. லைப்ரரியன் மூலமாக தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதியார் போன்றவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். ரஷ்ய இலக்கியங்கள் கிடைத்தது.

புத்தகங்கள் வழியாக உலகைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தொலைக்காட்சியின் வருகை வியப்பை ஏற்படுத்தியது. வாழ்க்கையை அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்கும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் ஆகியோர் எனக்குள்ளிருந்த வேகத்தை கூட்டினார்கள். ‘இவ்வளவு பெரிய உலகமா?’ ஏக்கமும், தனிமையும் என்னை வாட்ட ஆரம்பித்தது. கம்யூனிஸ தத்துவங்களும், பெரியாருடைய எழுத்துக்களும் என்னை தீவிரமானவளாக மாற்றியது. சட்டென்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். மூன்று வேளையும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்துக்கொண்டிருந்தபோது, ஐந்து ரூபாய் கூலிக்காக, தலித் பெண்கள் என் வீட்டில் கடலை உடைத்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபம் தலைக்கேறியது. நான் கடவுள் நம்பிக்கையை கைவிட ஆரம்பித்தேன்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் மாமியார் குடும்பத்துக்காக சமைத்துப் பழக வேண்டும் எனபது ஊர் நடைமுறை. ஒட்டுமொத்தப் பெண்களுடைய சக்தியும், சமைப்பதற்கும் துவைப்பதற்குமே செலவிடப்பட்டது. இதுவும் எரிச்சலை உண்டாக்கியது. ‘பொழுதன்னிக்கும் அடுப்படியில் வேகக்கூடிய வேலையை செய்யமாட்டேன்’ என்று எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ‘பெண்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது? என்பதை எழுத்தாக மாற்ற முடிவெடுத்தேன். தொடர்ந்து கலில் கிப்ரான், விட்மன், டால்ஸ்டாய், தஸ்தோவ்ஸ்கி, கார்க்கி, செக்கோவ் ஆகியோரை வாசிக்கத் தொடங்கினேன். மொழி லாவகப்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு எப்படியாவது வெளியேறவேண்டும் என்ற ஆவல் பீரிட்டுக் கிளம்பியது.

இதற்காக ஒரு தந்திரம் செய்தேன். சும்மாவாச்சும், ‘அம்மா... கால் வலிக்கிறது!’ என்று கதற ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் இளைஞர்கள் என்பதால் வீட்டுக்குள் வர அனுமதி இல்லை. பெண்களுக்கென்று சரவணன் என்கிற வயசான ஹோமியோபதி ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்த சரவணன், கால் வலிக்கு ஊசி போட்டுவிட்டுக் கிளம்பினார். நான், ‘அய்யோ... வலி தாங்கலையே...!’ என்று மீண்டும் நாடகமாடினேன். துடித்துப்போன என் அம்மா, டாக்டரைப் பார்க்க மதுரை போகலாம் என்று முடிவு செய்தார். இதைத்தான் நான் எதிர் பார்த்தேன். எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல்! வயசுக்கு வந்த பெண்கள் டாக்டரிடம் போனால், ‘ஏதோ வியாதி போலிருக்கு!’ என்று ஊர்முழுக்க வதந்தி கிளம்பிவிடும். அசிங்கமாகப் பேசுவார்கள். அது கல்யாணத்தைப் பாதிக்கும். அப்படியானால், மதுரைக்கு எப்படிப் போவது...?

-அடுத்த இடுகையில்...