
தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றச் செயல்!
ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் இதைச் சொல்லித்தான் கல்வியை ஆரம்பிக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் 1950ல் சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஏதோ ஒரு சட்டப்படி அதே கொடுமை இன்று வரை ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டு தொடர்கிறது என்பதே கசப்பான [நாறிப்போன] உண்மை.
மனிதக் கழிவுகளை மனிதர்களை விட்டே அள்ளுகிற கொடுமை துப்புறவு பணியாளர்கள் என்கிற போர்வையில் சட்டப்படி தொடர்கிறது.
''இந்த குப்ப வண்டிக்காரனுங்களுக்கு ரொம்பக் கொழுப்பு. ஆபீஸ் போற நேரம் பாத்துத் தான் ரோட்ல திரியுவானுங்க. கவருமென்ட்டு உத்தியோகம் பாரு! அந்த தெனாவெட்டு. உவ்வே... நாத்தம் கொடலப் பொரட்டுது. வச்சி நாலு சாத்து சாத்துனாதான் புத்தி வரும். வேணும்னே தான் இப்படியெல்லாம் பண்றானுவோ!'' கோல்கேட் யூஸ் பண்ண வாயால் இதைவிட நாராசமாய் திட்டுகிற மனிதர்களும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் குப்பை அள்ளப் போன ஊழியர்களுக்கும், மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சண்டை வந்து அடிதடியாகிவிட்டது. அடித்தவர்களை கைது செய்யக் கோரி துப்புறவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரியே நாறிப் போய்விட்டது.
மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடை கழிவுகளால் புதுச்சேரியின் ''WALL STREET'' ஆன நேரு வீதியிலும், காந்தி வீதியிலும் யாராலும் நடக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பின் ஒருவாறு பேச்சு வார்த்தை முடிந்து அன்று ஊழியர்கள் குப்பை அள்ளப் போகிறார்கள். அப்போது நான் ஒரு நாளிதழில் புகைப்படக்காரனாக பணி ஆற்றிக்கொண்டிருந்தேன் [அதைவிட பேசாம டீ ஆத்தப் போயிருந்திருக்கலாம்]. அதன் பொருட்டு அந்நிகழ்வை புகைப்படம் எடுக்கப் போகும் போதுதான் அந்த சித்திரவதையை நேரில் உணர முடிந்தது.
பந்தயம் கட்டிப் பீயைத் தின்று காசு வாங்கிய மனிதரை சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று நாட்பட்டுப்போன மாமிசக் கழிவுகளை வாரிச் சுத்தம் செய்தார்களே அந்த மனிதர்கள். கொடுமையடா சாமி. கர்சிப்பால் முகத்தை கட்டிக் கொண்டு, மூச்சை அடக்கிக் கொண்டு எவ்வளவோ முயன்றும் வாந்தி வந்துவிட்டது எனக்கு.
நாற்றம் என்றால் குடலைப் புரட்டி வாந்தி வருகிறது நமக்கு. அந்த நாற்றத்தோடு புறக்கணிக்கப்படுகிறது அம்மக்களின் வாழ்க்கை. கவர்மென்ட்டு வேலை என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களில் எத்தனையோ பேர் கான்ட்ராக்ட் அடிப்படையிலான தினக்கூலி ஊழியர்கள், இவர்களுக்கு எந்த பணிப் பாதுகாப்பும் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
''ழான் குளோத்'' . புதுவை அரசின் கார்ப்பரேஷன் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளி குடும்பத்தை நடத்துகிறார். இத்தனைக்கும் இவரது குடும்பம் பிரெஞ்சு நேஷனாலிடி[தாத்தாவுக்கு] பெற்றுள்ளது. நாலெழுத்து படிக்கத்தெரியாத பேரனுக்கு நாற்றமடிக்கும் கழிவறைகளில் வேலை.
''அப்பா காப்ரேசன்ல கக்கூஸ் அள்ளினுதான் இருந்தேரு. அவுரு செத்தப்புறம் அந்த வேலைய ஏங்கிட்ட குடுத்தாங்க. ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமா இருந்திச்சி. நாத்தம் பொறுக்க முடியாம அன்னாடம் வாந்தியெடுத்துக்கினு தான் கெடந்தேன். அப்பறம் போவப் போவப் பழகிடுச்சி.
காவா அள்ளப் போனா! கக்கூஸ் மட்டுமில்லாம செத்துப்போன எலி, வீங்கி சதை பிஞ்சிபோற அளவுள நாயிங்க அல்லாம் கடக்கும். இது இன்னா பெருசு? இத்தவுட... ஆஸ்பிட்டல்ல இருந்து அபார்ஷன் ஆன கொழந்திங்க[கரு], அங்க நோயாளிங்களோட அல்லா கழிவுங்களையும் கையாலதான் வாரிப்போடுறோம். இதுக்கெல்லாம் மொகம் சுளிச்சிக்கிட்டிருந்தா யாரு நம்பள பாக்கப்போறா?
சாப்பாட்ட அள்ளி வாயில வச்சா போறும். அந்த கையால இன்னான்னாத்த அள்னமோ அதெல்லாம் நாபகத்துக்கு வரும். இப்பிடி ஒரு பொழப்பு வேணுமாடான்னு தோனும். இன்னா பண்றது சார்? பொண்டாட்டி புள்ளிங்களுக்கும் வாயி வயிறு இருக்குதில்ல'' கப்பென்ற சாராய வாடையுடன் கிட்ட வந்து பேசுகிறார் ழான் குளோத்.
''கோச்சிக்காத சார்! எங்கனா ஒரு எடத்துல அடச்சிக்கும். ஆனா ஊரு பூரா நாறிடும். மாசக்கணக்குல மனுஷன் சேத்துவெக்கிற அழுக்கு சார். கண்ணு, காது, வாயி, மூக்குலாம் கக்கூஸ் தண்ணி ஏறிடும். உள்ள முழுவி கையாலதான் அடச்சிங்கிறத எடுப்போம். உங்களாண்டஎப்பிடி சொல்றதுன்னு தெரில, செல சமயம் மம்ட்டி வச்சிகூட வெட்டுற அளவுல இருக்கும். எல்லாம் மணக்க மணக்க வாயல சாப்ட்டதுதான். வவுத்தால போவும் போது இப்பிடி ஆயிடுது.
அதான், ஒரு எம்.சி கோட்ற [மெக்டொவல் பிராந்தி] ஒடச்சமா உள்ள ஊத்தனுமான்னு எறங்கி வேல செஞ்சிடுவோம். யார் ஊட்டு காக்கூஸ்னா அடச்சிக்கிச்சின்னு வச்சிக்குங்க, வந்து கூப்புடுவாங்க. அப்பிடியே ரெண்டு கையாலயும் அள்ளி பக்கெட்ல போட்டு அத்த தலமேல தான் தூக்கியாருவோம். வரும்போது மேல பூறா ஒழுவும். இன்னா பன்றது நம்ப தலவிதி இதுன்னு ஆயிப்போச்சி. இன்னா ஆயிப்போச்சி ஆயிப்போச்சின்னு சொல்றேன்னு பாக்கிறியா? எல்லாம் ''ஆயி''ப்போற வேலதான... சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
''6,500 ரூபா சார் சம்பளம். வங்குன கடனுக்கு புடிப்பு போவ 450 ரூபாதான் கைல வரும். அத்த வச்சித்தான் குடும்பத்த ஓட்டுறேன். ஆனா எனக்கு மட்டும் தண்ணி செலவுக்கே ஒரு நாளைக்கி நூறு ரூபா ஆயிடும். திருப்பி கடன வாங்கு. இப்பிடித்தான் சார் வண்டி ஓடுது.
சரக்கடிச்சா சோறு எறங்க மாட்டுதா? ஒடம்பே வீணாப்போச்சி. பதிமூணு வருஷமா வேல செய்யிறேன் சார். மாசம் ஒரே ஒரு லைபாய் சோப்பு குடுப்பாங்க. அதான், அதோட ஒரு மழக்கோட்டு குடுத்துகிறாங்க. மருந்து மாத்திர, செக்கப்பு அது இதுன்னு எதுவுங் கெடெயேது. அவ்ளோ ஏன்? கைக்கு, மூஞ்சிக்கு கிளவ்சு எதுனா குடுப்பாங்களான்னு கேளாம்? ம்ஹூம்... ஒருஎழவும் இல்ல.
எனுக்கு இன்னின்ன வியாதி கீதுன்னு எனுக்கே தெரியாது. எங்காளுங்களாம் நல்லாத்தான் இருக்குற மாதிரி இருப்பானுங்க. ஆனா திடீர்னு செத்துறுவானுங்க. பின்ன! இந்த வேல பாக்குறவன் நூறு வயசா வாழுவான்? எனுக்கு எப்ப சாவு வருமோ தெரியாது. எம் புள்ளங்கிளயாவது நல்லா படிக்க வச்சி பெரியாளா ஆக்கனும்னு பாக்குறேன் முடியல. ஆசப்பட்டா முடியுமா? அததுக்கு இன்னா எழுதி வச்சிக்குதோ அதான நடக்கும். இன்னா நான் சொல்றது?'' என்று என்னைப் பார்த்து கேட்க்கிறார்.
''நீ எங்க ஊட்ல சாப்பிடமாட்ட. வா உனுக்கு டீ கடைல வாங்கித்தறேன். அங்க வந்து ஒரு டீ குடிச்சிட்டு போ. வானான்னு மட்டும் சொல்லிறாத'' என்று டீக்கடை நொக்கி நடையை கட்டுகிறார் 35 வயதில் 45 போல் மாறிவிட்ட 'ழான் குளோத்'. இந்தியாவில் இவர் ஒரே ஒரு எடுத்துக்காட்டு. நாடு முழுக்க 5.77 லட்சம் பேர்களும், தமிழகத்தில் மட்டும் 35,000 பேர்களும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.
கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் ''ரோசய்யா''. மருத்துவமனை கழிவுகளை கையால் அல்ளுகிற போது சிரிஞ்ச் குத்திவிட்டது. சில நாட்களில் கை அழுகிப்போய் குஷ்டம் வந்துவிட வேலை கிடையாது என்று நிர்வாகம் விரட்டி விட்டது.
நீதிமன்றத்தில் முறையிடுகிறார் ரோசய்யா. ''இது தொழில் முறை வியாதிப் பிரிவில் வராது எனவே நஷ்ட ஈடு தர முடியாது என்று மதாபிமானமிக்க திர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்''. பின்னர் இறந்து போன ரோசய்யாவின் நிலை தான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ல ழான் குளோத் போன்றோர்களுக்கு.
''துப்புறவுத் தொழிளாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள் என்று எதுவுமே கிடைப்பதில்லை'' என்று குற்றம் சாட்டுகிறார் ஆதித் தமிழர் பேரவைத் தலைவரான இரா. அதியாமான்.
தமிழ்நாட்டில் துப்புரவுத் தொழிளாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடிவரும் இவர் ''கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருட்டு வி.சி.டி.க்கு குண்டர் த்டுப்பு சட்டம், மதமாற்றத் தடுப்புச் சட்டம், ஆடு கோழி பலியிட தடைச் சட்டம் என்று அநேக சட்டங்கள் துரித கதியில் போட்டார்கள். ஆனால் காலங்காலமா இழிவுபடுத்தப்பட்டு வரும் எங்களது கோரிக்கைகளை கொஞ்சமும் செவி கொடுத்து கேட்க்கவில்லை.
சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் தி.முக அரசு அதைச் செயல் படுத்தும் விதத்தில் [குறைந்த பட்சம் தமிழகத்தில்] மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் அவல நிலையை சட்டப்படி ஒழிக்க வேண்டும். மேலை நாடுகளைப் போல் துப்புறவுத் தொழிலை நவீனமயமாக்கி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கிற தமிழ்நாட்டுத் தமிழன் இங்கே உள்ள மக்களை தீண்டத் தகாதவனாக வைத்திருக்கிறான். ஒரே ரத்தமாம், ஒரே மண்ணாம், ஒரே இனமாம். மொத்தத்தில் ஒரு மயிருமில்லை.
வெள்ளைக்காரர்களிடமிருந்தும், நமது அரசாங்கத்திடமிருந்தும் சேவை என்ற பெயரில் பணத்தைச் சுரண்டி கொழுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இத்தகைய அவல நிலைகளை மக்களின் பார்வைக்கோ, அரசாங்கத்தின் பார்வைக்கோ கொண்டு வருவதில்லை.
அவ்வளவு தூரம் எதற்கு தமிழ் தமிழ் என்று வீர முழக்கமிடும் திருமாவளவன் கூட இப் பிரச்சினைக்காக ஓங்கிக் குரல் கொடுக்கவில்லைஎன்பதே உண்மை.
மரக்காணம் பாலா.
16 comments:
நண்பருக்கு வணக்கம் .
மிக உணர்வுப்பூர்வமான பதிவு இது. உண்மைதான் சுத்தத்தை பார்க்கும் நமக்கு அதை சுத்தப்படுத்தும் சக மனிதன் படும் வேதனை புரிவதில்லை . மற்றபடி தங்களைப் போலவே இந்த அரசாங்கமாவது இவர்கள் இருண்ட வாழ்க்கையின் முதல் ஒளிக்கீற்றை ஏற்றிவைக்குமென வேண்டுகிறேன்.
நிதர்சனக் கொடுமையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கின்றீர்கள்!
தமிழ்நாட்டு அரசை நடத்தும் அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் வாழும் தலைநகரமான சென்னையிலேயே முழுகித்தான் சாக்கடை அடைப்பு எடுக்கின்றார்கள்!
அமெரிக்காவிலே விர்ஜினியா பல்கலைக்கழகத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுடப்பட்டு இறந்த வசதிமிக்க லோகநாதன் குடும்பத்தினர் 9 பேருக்கு தமிழக அரசே விமான டிக்கெட் செலவு ஏற்கிறது.
துப்புறவு,சாக்கடை அடைப்பு நீக்கும் இவர்களுக்கு மனிதத் தன்மையோடு அடிப்படைத் தேவைகளை செய்துதர இன்று வரை அரசுகள் செய்யவில்லை!
இவர்களுக்கு இயந்திரம் கொண்டு கழிவு, அடைப்பு நீக்கும் சீரமைப்பு அரசு போர்க்கால முன்னுரிமையோடு செய்யவேண்டும்!
மெய்யாக கல்வி இட ஒதுக்கீடு என்பது இம்மாதிரியானவர்களுக்கு முழுமையாகப் பயன்படும்படியாக, மேலேற்றிவிட மட்டுமே பயன்படுத்தப்படும் படியாக அமையவேண்டும்.
வெட்கி வேதனை அடைகிறேன்!
இம்மாதிரி வேலை செய்பவர்கள் குடும்பத்தில் படிக்கும் குழந்தைகள் பணம் காரணமாக கல்லூரிக் கல்வி தொடர இயலாமல் இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்து இருந்தால்
harimakesh@gmail.com எனும் விலாசத்துக்குத் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.
ஓரிரண்டு தகுதியான நலிந்த ஏழை மாணவர்களுக்கு பல்கலைக்கழக பட்டப் படிப்புக்கு உதவ ஆவன செய்ய அடியேன் முயற்சிப்பேன்!
நல்ல பதிவு!
ஏதோ ஒரு இனம்புரியாத குற்ற உணர்வு நெஞ்சை அழுத்துகிறது....
நாம் முன்னேறி விட்டதாக வேஷம் தான் போடுகிறோம் என்று தெளிவாக காட்டி விட்டீர்கள்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை யாரோ கண்ணத்தில் அறைந்தது போல் உள்ளது.
இந்த பதிவை பார்க்க வைத்த BadNewsIndia வுக்கு நன்றி,
தனது வீட்டு கக்கூசைத்தான் கழுவ கூச்சப்பட்டு (சொகுசான வாழ்க்கையில் நேரமிமில்லையாம் ) அடுத்தவனைவிட்டு கழுவச் சொல்வது வேலை வாய்ப்பை அதிகரிக்கிறதாம். எங்கே போய் இந்த கொடுமையைச் சொல்ல? உனது வீட்டு வேலையை உன்னால் முடியாவிட்டால் outsource செய்வதில் தவறு இல்லை. ஆனால், உன்னால் வேலைக்கு அமர்த்தப்பட்டவன் நீ குடுக்கும் பிச்சாத்துக் கூலியால் வாழ்ந்துவிட முடியுமா? உனக்கு சம்பளம் ஏறும் போதெல்லாம் அவனுக்கும் அதிகமாகக் கொடுக்கிறாயா? பயணப்படி, பஞ்சப்படி, ஆபீசில் ஆட இடம் என்று சகலமும் கேட்டு வாங்கும் நீ , உன் கக்கூசை கழுவுபனுக்கு கையுறையாவது வாங்கித் தந்தது உண்டா? நாசமாய்ப் போகட்டும் அந்த கையுறை.குறைந்த பட்சம் அவனை மனிதனாக மதித்தது உண்டா?
இப்படி எல்லால் இருந்துவிட்டு குப்பை லாரி ரோட்டில் போனால் திட்டும் வர்க்கமே சராசரி மனிதன்.இவன் செய்யும் கொடுமைகள் சகிக்க முடியாதது. நான் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு குடும்பம் நாய் வளர்க்கிறது. அந்த நாயை தினமும் காலையில் தெரிவில்தான் பீ போக வைப்பார்கள். ஒரு சொரனையுமே இல்லாமல் நட்ட நடு ரோட்டில் இதைத் தினமும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.கேட்டால் ரோட்டில் தானே வுடுறோம் ஓ வீட்டுலயா? என்று கேட்கிறார்கள் 5 இலக்கச் சம்பளம் வாங்கும் IT கனவான்கள்.
அந்தப் பீயை தினமும் அள்ளுவது ரோடைக் கூட்டும் ஒரு அப்பாவி தொழிலாளி.
இவர்களுக்கும்....
எந்த நாத்தமடித்த தொழில் செய்தால் என்ன? அதுதான் கலர் டீவி கொடுத்துள்ளேனே சந்தோசமாய் இரு .. என்று சொல்லும் அரசியல்வாதிகளுக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது தீர்ப்பதற்கு.
****
யாரவது வீட்டில் வேலையாட்கள் வைத்து இருந்தால் , உங்கள் வீட்டில் வேலை செய்வதால் வரும் பணத்தை வைத்து அவர்கள் ஒரு குறைந்த பட்ச சுயமரியாதையான வாழ்க்கை வாழ்கிறார்களா? என்று சிந்திக்கவும். இல்லை என்றால் ஒன்று சம்பளத்தை அதிகரியுங்கள் அல்லது நீங்களே உங்கள் வேலையைச் செய்யுங்கள்.அடுத்தவனின் உழைப்பச் சுரண்டி சுகமாக வாழ்வது கேவலம்.நாம் அப்படித்தான் வாழ பழக்கப்பட்டு உள்ளோம்.
***
இவர்களின் உழைப்பை நெஞ்சில் ஈரமே இல்லாமல் சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழும் சமுதாயத்தை (நானும் அந்த சமுதாயத்தில் ஒருவன்) நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
They don't use ANYTHING during menses ..felt criminal
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html
மனதை வலிக்கவைத்த பதிவு. இந்த நிமிடம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினாலும் அடுத்தநிமிட சுயகவலைகளில் மறந்துவிடுகிறோம். அறுபது ஆண்டுகள் மக்களாட்சியில் உண்மையான அக்கறையும் வளர்ச்சியும் இவர்களுக்கு கிடைக்காதது குறித்து வெட்கப்படுகிறேன்.
மனதை பிசைந்த, மிகுந்த குற்ற உணர்வை ஏற்படுத்திய ஒரு பதிவு. ஹரிஹரன் கூறியது போல், இம்மாதிரி வேலை செய்பவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டியது நம் அனைவரின் கடமை. தெரிந்தவர் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.
--- எ.அ.பாலா
படித்தலிருந்து மனதை என்னவோ செய்கிறது.
இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2007/06/27/badnews/
கிணறுகளில் தூர்வாருவதும் இவர்கள் தான் என்று நினைக்கிறேன். பலமுறை தூர்வாரும்போது விஷவாயுத் தாக்கி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேர் இறக்கும் செய்திகள் வருடத்தில் குறைந்தபட்சம் ஒன்றாவது வெளிவருகிறது.
உங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொரு "மனிதர்"களுக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.
மனிதக் கழிவை மனிதனே எடுக்கும் முறை அரசாங்கத்தால ஒழிக்கப்பட்டுடுச்சுங்க. நான் எதை சொல்றேன்னா, எங்க ஊர்ல வீடுகள்ல கக்கூஸ் இருக்காது. ஒரு தடுப்பு மட்டும்தான் இருக்கும். அந்த வீட்டு மக்களோட கழிவுகளை தினமும் பணியாளர்கள் வந்து சுத்தம் செஞ்சு அள்ளிட்டு போவாங்க. ரோட்டு ஓரங்கள்லயும் மனிதர்கள் செஞ்ச கழிவ அவங்கதான் சுத்தம் செய்வாங்க. அந்த முறையை அரசாங்கம் ஒழிச்சிடுச்சு. வீடுகள்ல கட்டாயமா பாம்மே கக்கூஸ் கட்டினாங்க. அரசாங்கத்துல இருந்து கொறைஞ்ச வெலைல கட்டிகொடுத்தாங்க.
சாக்கடை சுத்தம் செய்யற வேலைகளுக்கும், அடைப்புகளை சுத்தம் பண்றதுக்கும் புதிய தொழில்நுட்பங்கள அறிமுகப்படுத்த அரசாங்கம் உதவணுங்க. இருக்குற கருவிகளும் அவங்களுக்கு உதவற மாதிரி, ஈசியா கெடைக்கற மாதிரி இருக்கணும். ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், ஆழமான ஒரு சாக்கடைக்குள்ள எறங்கறதுக்கு முன்னாடி ஒரு லாரில பம்ப் வெச்சு தண்ணிய வெளியேற்றிட்டு எறங்கலாம்-ல. அதுமாதிரி.
பொதுவா இன்னொரு விஷயம். இன்ஷீரண்ஸ். சம்பந்தமே இல்லாதது மாதிரி தெரியும். ஆனா இருக்கு. அரசுத் தொழிளாலர்களுக்கு, அதுலயும் முக்கியமா ரிஸ்க் அதிகமா இருக்குற இந்தமாதிரித் தொழிலளர்களுக்கு, இன்ஷியூரண்ஸ் எடுத்தாங்கன்னா, அரசாங்கம் ஒரு சிறுதொகைய மாசா மாசம் கட்டினா, இவங்களுக்கெல்லாம் பெரிய உதவியா இருக்கும். நீங்க சொன்ன மாதிரி ஊசி குத்தினதுக்கெல்லாம் கோர்ட்டுக்கு போகாம இன்ஷியூரண்ஸ்-ல இருந்து பணம் வாங்கிக்கொடுத்து உதவலாம்.
அவங்க குடிக்கறதுக்கெல்லாம் இதை காரணமா யூஸ் பண்றத நீங்க சப்போர்ட் பண்ண கூடாது.
எங்களுக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல கழிவுநீர்த்தொட்டிய சுத்தம் செய்ய ஒருத்தர் வந்தாரு. தொட்டிய திறந்த உடனே பயங்கறமா நாறப்போகுது-ன்னு எல்லோரும் பயந்துகிட்டு இருந்தோம். அவர் வந்து, மண்ணெண்ணை இருக்கா-ன்னு கேட்டாரு. கொடுத்தாங்க. அதுல கொஞ்சம் எடுத்து தொட்டிக்குள்ள ஊத்தினாரு. No Bad Smell.
அவரு குடிகாரர் இல்லங்கறதும் உண்மை.
புதிய தொழில்நுட்பங்கள்தான் இவங்கள விடுவிக்கும்-ன்னு நெனைக்கறேன். நல்ல பதிவைப் பதிஞ்சிருக்கீங்க.
நன்றி.
சரவ்.
உண்மையான ஒருப்பதிவு, இதைப்படித்து அய்யோ என்று வேதனைத் தான் படமுடிகி்றது என் போன்றவர்களால், இதை எல்லாம் மாற்றுவது யார்?
ஒரு படத்தில் கோயிலில் மணி அடிக்க கூட மெஷின் கண்டு புடிச்சிட்டாங்க இதுக்கு யாராவது ஒரு மெஷின் கண்டுபுடிக்க கூடாதா என்பார். இது போன்ற நிலை இருப்பது ஆளுவோருக்கு தெரியாதா , மாற்று வழி கண்டுபிடிக்க கூடாதா?
பாலா, யோசிக்க வைத்த பதிவு.
நீங்க எழுதர விதமும் நல்லா இருக்கு. படங்கள் அருமை ரகம்.
'மணக்கும்' பதிவு. வாழ்த்துகள்.
These were the thoughts worrying all of us for so many years, but you were the one to give shape with words. Thanks for the post. We have so many technological conveniences for cleaning drainages and hosptial waste, why is the society , caring citizen forums have not acted?
May be all of us who read this blog have to take a pledge to question the authorities, the locality leaders and the people living in the area. Constant reminders and questioning will lead to some solution soon.
Let us hope..
ஏங்க எது எதுக்கோ மிஷின் இருக்கும்போது, கழிவுகளை அப்புறப்படுத்த இயந்திரத்தை ஏன்
பயன்படுத்தலை? இதுக்கு அரசாங்கம் ஏன் ஏற்பாடு செய்யலை? முன்னுரிமை இந்த ஏற்பாடுகளுக்குத்தானே
இருக்கணும்?
இந்த மக்களைப் படிச்சதும் மனசு கலங்கிப்போச்சு(-:
என்ன கொடுமை இதெல்லாம். சே...........
இந்ந மகா மனிதர்களை எப்பொது நம் நாடு காப்பாற்றுமோ?
Post a Comment