
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தவர்,
"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?
இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.
"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.
"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.
கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.
இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.

எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?
''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.
ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.
பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.
சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!
எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.
நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.
கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.
2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.
8 comments:
உழைத்து பிழைக்கும் ஆதிமுலம் போன்றவர்களால்தான், இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தள்ளாத வயதிலும், தன் மகள்களை கரைசேர்க்க துடிக்கும் அந்த பெரியவரின் கடமை உணர்வும், ஆசையும், இன்றய பெருபான்மையான இளைஞர்களுக்கு இல்லையே என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்
மனிதனே மனித கழிவுகளை அகற்றுவது சகித்து கொள்ள முடியாத வேதனை..அதுவும் தள்ளாத வயதில் ஆதிமூலம் படும் பாடு சோகத்திர்குரியது..இலவச டிவி வழங்கும் அரசு முதியோர் நலத்திற்கு ஆவன செய்யவேண்டும்..மேலும் கழிவுகளை அகற்றும் பணிக்கு மாற்று முறை அறிமுகம் செய்ய வேண்டும்..எழுத்தாளர் பாமரனின் வலைத்தளத்தில் இதேபோன்ற கட்டுரை ஒன்று படித்தேன்..அத்தகைய தொழிலாளர்களுக்கு உதவி செய்யாவிடினும் சாக்கடை வழி செல்லும் பொழுது மூக்கை பொத்தி அவர்களை அவமதிக்க வேண்டாம் என கூறி இருந்தார்..வாழ்நாள் முழுதும் உழைத்து கலைத்து ஓய்வு எடுக்க வேண்டிய முதுமை காலத்தில் வாழ்வோடு போராட இப்பணி மேற்கொள்ளும் ஆதிமூலம் உழைப்பின் அடையாளமே..
ம்ம் மனது கனக்கிறது. சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?
//முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.//
தினம் ஒரு ஏவுகணை, ராக்கெட் விடும் விஞ்ஞானிகளால் என்ன பயன்?
இந்தக் கேள்வி எல்லாரிடமும்தான் எழுகிறது. இன்டலக்சுவல் மன்மோகனுக்குத்தான் தெரியவில்லை. "ஆட்சி போனாலும் பரவாயில்லை. புஷ் கக்கூஸ் போனால் கழுவிவிடுவதுதான் என் வேலை" (வேண்டுமானால் அனு ஆயுதக் கழிவு என்று கொள்ளலாம்)என்று பிடிவாதம் பிடிக்கிற நம் பிரதமர், "கைகளால் மலம் அள்ளக்கூடிய நாட்டில் நான் பிரதமராக இருக்கமாட்டேன்" என்று சொல்லியிருந்தால் அவன்தான் மானஸ்தன்.
சோற்றுக்கு வழியில்லாமல் செத்துமடிகிற நாட்டில், பிளாட்பாரத்தில் முதலிரவு நடத்தி பிள்ளை பெற்றுக்கொள்கிற நாட்டில், வெட்கமே இல்லாமல் அமெரிக்க கைக்கூலியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் பிரதமர்கள் இருக்கும்வரை ஆதிமூலங்களுக்கு விடிவே இல்லை.
இந்தியாவில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தியாக அமெரிக்காதான் இருக்கிறது. அரசியல் கட்சிகளிடையே சின்டு முடிகிற வேலையையும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் அமெரிக்க உளவுத்துறை டாலரை வாரி இறைத்து சிறப்பாகச் செய்து வருகிறது.
இல்லாத ஆயுதங்களுக்காக ஈராக்கை கொள்ளையடித்து சதாமை தூக்கிலிட்ட மிகப்பெரும் பயங்கரவாதியான அமெரிக்காவுக்கு ஒத்து ஊதுவதைவிட தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம். ஆனால், அவர்களுக்கு மானமில்லை. நம்முடைய ஆதிமூலத்துக்கு ஆயுதபேர ஊழலும் தெரியாது, திரை மறைவு குதிரை பேரமும் தெரியாது. ஆகவே மலம் அள்ளிச் சாப்பிடுகிறார். மன்மோகம் வாயோ வாசனையாய் இருக்கிறது.
This Article is republished in Puthiya Kalacharam - July 2008 issue.
Nallavan
தகவலுக்கு நன்றி நல்லவன். முன்பே முறையான அனுமதி பெற்றே வெளியிட்டுள்ளார்கள்.
மனது கனக்கிறது மனச்சாட்சி உள்ள எவனும் இதை ஏற்கவே மாட்டான் நினைக்கவே மனித சமூகத்தின் மீது வெறுப்பேற்படுகிறது. உபரித்தகவல் பெருமாள் முருகன் "பீக்கதைகள்" தொகுப்பில் இதைபோன்றவர்களை கதையாக்கி இருக்கிறார்.
எஸ்.சத்யன்
There is no need for a new invention dear Bala Anna.
There are machines that can be made with known technology or imported from the so called "vallarasu naadugal"
But they themselves do not let this happen, I mean the workers, because they want to cling to a government job and the assurances. The political biggos do not want to interfere in this matter and take a strong arm decision, because of fear of loosing votes.
One day some mothafukka should take the strong arm decision to regulate this kinda work.
Post a Comment