
புதுச்சேரி, நேரு வீதியில்தான் அந்த மனிதரைப் பார்த்தேன். மழை, விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. எப்போதுமே போகுவரத்துக்கு இடைஞ்சலாக சாலையில் நடந்து செல்லும் மக்கள், மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தார்கள்.
சில்லென்றெ குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க, நான் வேடிக்கை பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தேன். நான் ஒரு காமிராக்காரன்.
காந்தி வீதி குறுக்கிட்டபோது, சன்னமான குரல். ஒலித்த குரல், என் உயிரைப் பிடுங்கி உடலைக் கிழித்த மாதிரி வலித்தது. குரல் வந்த திசைக்குத் திரும்பினேன். சாக்குப் பையை போர்த்தியபடி கிழவர் ஒருவர் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.
"அய்யா பெரியவங்களே! எதுனா தர்மம் போடுங்கையா!''
எலும்பும் தோலுமான தேகம், தலையோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. மீண்டும், மீண்டும் ''அய்யா பெரியவங்களே, அய்யா பெரியவங்களே!'' என்று அவர் இரந்து கொண்டிருந்தது, என்னை மிகவும் பாதித்தது. பாக்கெட்டில் தடவிப் பார்த்தேன். பைசா எதுவுமில்லை.
''ச்சே, இந்நேரம் பார்த்து...'' என வருத்தப்பட்டுக்கொண்டு, அடுத்த நடையை எடுத்து வைத்தேன்.
மனம் என்னை விடுவித்துக்கொண்டு, பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கிழவரைத் திரும்பிப் பார்ப்பதற்குள் சில அடிகள் கடந்துவிட்டேன். ''அட்லீஸ்ட் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட்டு போகலாமா?'' என்று நினைத்து, பின் அந்த நினைப்பையும் கைவிட்டேன். வீடுபோய்ச் சேர்ந்தேன்.
மறுநாள் காலை தோழியுடன் அக்கிழவரைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தபோது, நேரு வீதியில் அந்த இடம் வந்துவிட்டது. வழக்கமாய் நாங்கள் அலுவலகம் நோக்கி பிரிகிற இடம்.
''மதியம், அவருக்கு எதுனா வாங்கிக்கொடு'' என்றாள் தோழி.
நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். பெரிய மார்க்கெட் மீன் நாற்றம் காந்தி வீதியில் மணத்துக்கொண்டிருந்தது. 'நேரு வீதியில் தோழியை ஒரு எட்டு பாத்துட்டு போய்டலாம்' என்று பார்க்கிறேன்! எதிரில்அந்த கிழவர்.
நடு ரோட்டில், போலிஸ் பேரிகார்ட் மீது சாய்ந்தபடி,
''அய்யா பெரியவங்களே! அய்யா பெரியவங்களே!"
என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.
விருவிருவென்று பழைய காட்சிகள் மனதில் ஓட ஆரம்பித்தது.
''யாரு, யாரப் பார்த்துடா 'பெரியவங்களே’ன்னு சொல்றது? என்னடா உலகம் இது? கேடுகெட்ட சமுதாயம். இந்த மனுஷனுக்கு சோறுபோட, படுக்க வைக்க வக்கில்லாத நாடு, என்னடா நாடு?'' என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
மாலை வெளிச்சம் புகைப்படத்திற்கு போதுமானதாக இருந்ததால், கைகள் தன்னிச்சையாக காமிராவை வெளியே எடுத்தன. முகத்தை சூம் செய்து, போகஸ் செய்கிறேன். அந்தக் கண்களைப் பார்க்கிறேன்.
கண்களா அது!? ஆயிரம் கதைகள் சொல்லும் அதன் தீட்சண்யம். வயதாகிப்போனதால், அதில் நீலம் படர்ந்திருந்தது. ஆனால், ஒளி மிகுந்து காணப்பட்டது. அதிலிருந்து வீசிய மின்னலை ஒன்று, நேராக என் இதயத்தை தாக்கியதை நன்றாகவே உணர்ந்தேன். யாசகம் வேண்டி நின்ற ஒரு மனிதனின் வலி, காமிரா வழியாக கண்களுக்குள் பரவியதால், மனம் வலிக்க ஆரம்பித்துவிட்டது.
சூமைக் குறைத்து முகத்தை ஃபிரேம் செய்தேன். சுருங்கிய தோலும், லேசான எண்ணெய்ப் பசையும் முகத்தில் பளபளப்பைக் கூட்டியிருந்ததால், விலை மதிக்கமுடியாத ஒரு பிம்பம் கைகூடி இருந்தது. காமிரா அடுத்தடுத்து கிளிக்கிக்கொண்டிருந்தது.
அந்த கிழவருக்கு குழப்பம் வந்திருக்க வேண்டும். ''எப்படியா இருந்தாலும் இவன் பணம் கொடுப்பான். ஆனால், இவனைப் பார்த்துக்கொண்டு வழியில் போகிறவர்களை எப்படி விடுவது?'' என்கிற குழப்பம் அது.
எனவே, நொடிக்கு நொடி அவரது முகபாவம் மாறிக்கொண்டிருந்தது. என்னைப் பார்க்கிறார், திரும்பி சாலையில் போவோரைப் பார்க்கிறார். ரொம்பப் பாவமாய் போஸ் கொடுக்கிறார்.
நான், என் நிலை இழந்துகொண்டிருந்தேன். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஆறாத ரணங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. கிழவரைப்போலவே நானும் நடுக்கத்தை உணர்ந்தேன்.
ரொம்பப் பாவமாக என்னைப் பார்த்து கையை நீட்டினார் கிழவர்.
பாக்கெட்டைத் தடவினேன். அன்று சில்லரையாகக் கிடந்த பன்னிரண்டு ரூபாயைப் போட்டுவிட்டு, வலிகளைச் சுமந்தபடி நகர்ந்தேன்.
'நாளைக்கு எப்படியாவது ஒரு நூறு ரூபாயை சில்லரை மாத்திப் போட்றனும். வேற என்ன பண்ணலாம்...?'' என்று யோசித்தேன்.
நேராக தோழியிடம் போய், "அந்தத் தாத்தா சொன்னேன்ல! இதோ பார் அவர் போட்டோ" என்று காமிராவை நீட்டினேன். பார்த்த நொடியில் அவள் முகம் சுருங்கிவிட்டது.
''காசு குடுத்தியா...?''
''ம்...பன்னென்ரூபா''
''ச்சீ... அவ்ளோதானா?''
''இல்ல... நாளக்கி நூர்ரூபா சில்ர மாத்தி குடுத்துடலாம்னு இருக்கேன்.''
அன்றிரவு தூங்கப் பிடிக்கவில்லை. மாற்றி மாற்றிக் கிழவரும் வேறு சில நிகழ்வுகளும் போட்டுத் தாக்கியதில், கெட்டக் கெட்ட வார்த்தைகள் மனதுக்குள் சத்தம் போட்டு ஒலித்தன.
மறுநாள் பத்தரை மணி இருக்கும். வேக வேகமாய் நேரு வீதிக்கு வந்தேன். கிழவரைக் காணவில்லை. அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தார். அவர் கையிலிருந்த கோனிப்பையை வாங்கிக்கொண்டு, ''நீ வருவேன்னுதான் காத்திருக்கேன்'' என்றேன்.
ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு. ஏதோ சொல்ல வருவதைப் புரிந்தவராய்,
''காது செரியா கேக்கல, கண் பார்வையும் தெரியாது'' என்றார்.
"வா! ஒக்காருவோம்" என்று கைத்தாங்கலாக அவரை அழைத்து கடை வாசல் ஒன்றில் அமரவைத்தேன்.
''தாத்தா, உம் பேரு இன்னா?"
''ம்... பேரா கேக்குற? பரணி கவுண்ரு. தொண்டர் படைத் தலைவன், அந்தகாலத்துல'' என்றவரின் முகத்தில், லேசாகப் பிரகாசம்.
எனக்கு ஆர்வம் கூடிற்று.
"தொண்டர் படைத் தலைவன்னா போராட்டம், ஆர்ப்பாட்டம்லாம் கலந்துகிட்டியா?"
''ஆமா, காந்தி கடலூர் வந்தப்போ, ஒரு பெரிய படையே தெரட்டிகினு போய் கூட்டத்துல கலந்துக்கிட்டேன். கடலூர்னு இல்ல, காந்தி எங்கக் கூட்டம் போடறார்னு தெரிஞ்சா போதும், எப்பாடுபட்டாவது போய்க் கலந்துக்குவேன்."
''பெரியார்லாம் பாத்திருக்கியா?''
அன்னாந்து பார்த்துவிட்டு சிரிக்கிறார்.
''பாத்திருக்கியாவா? அவரு பேச்சக் கேக்காதவன் எவன் இருந்தான், அந்தக் காலத்துல! அப்பிடியே நரம்பு முறுக்கிட்டு துள்ளும். ரத்தம் கொதிக்கும். 'ஆமா, ஆமா! அவரு சொல்றது சரிதான்'னு சொல்வானுங்க'' என்றவர்,
''எங்க ஊர் பறையன, பொனுசாமி கவுண்டன் அடிச்சிட்டான். வந்துச்சி பார் ஆத்திரம். பரபரன்னு இழுத்தும்போய் கோட்டகுப்பம் போலீஸ் ஸ்டேசன்ல புடிச்சிக் குடுத்துட்டேன். மூனு மாசம் ஜெயில். வந்து ஏங்கிட்ட கெஞ்சுறாங்க. 'மன்னிச்சுடு'ன்னாங்க. சரி போவுதுன்னு உட்டுட்டேன். இதெல்லாம் அவர் பேச்சக் கேட்டு வந்ததுதான்.
அப்ப ஒடம்பு நல்லா வாட்ட சாட்டமா, பாடியா இருப்பேன். 'மனுசனுக்கு மனுசன் இன்னாடா ஜாதி வேண்டி கெடக்குது?'ன்னு கேப்பேன். எனக்கு அதெல்லாம் புடிக்காது. அதனாலயே ஊர்ல ஆவாதவனா போய்ட்டேன்.''
''உங்க சொந்த ஊர் எது? ஏன் இங்க வந்துட்டீங்க?''
''காலாப்பட்டு பக்கத்துல மாத்தூரு. நெலம், சொத்து பத்துலாம் இருக்குது. மூனு சொந்த மனை இருக்குது. மூன்ற கானி நெலத்த கோயிலுக்கு எழுதி வச்சிட்டேன். இப்பக்கூட ஊருக்கு போனேன். 'ஏன்டா... கோயிலுக்கு நெலத்த எழுதி வச்சிருக்கேன். இன்னாடா ஊர ஒழுங்கு மரியாதையா வச்சிருக்கீங்க?'ன்னு கேட்டேன். பிரச்ன வந்திருச்சி. என்னை எல்லாரும் சண்டக்காரனாத்தான் பாக்குறானுவோ!"
''ஏன், உங்க பொண்டாட்டி புள்ளைலாம் எங்க?''
''பொண்டாட்டி செத்து நாப்பது வருசமாவுது. இப்போ எனக்கு நூத்தி அஞ்சி வயசு'', என்றபோது தூக்கி வாரிப்போட்டது.
பொக்கிஷமாய் காக்கப்பட வேண்டிய புத்தகமல்லவா இவர்? ஜப்பான், அமெரிக்காவில் நூறு வயதைத் தாண்டியவர்களை கொண்டாடி மகிழும் நாளிதழ் செய்திகள் நியாபகத்துக்கு வந்தது.
தொடர்ந்து பேசினார் கிழவர்.
''ஒரு புள்ள இருக்கான்... பேரு உத்திரகுமாரன். அவம் பொண்டாட்டிதான் என்ன சரியா கவனிச்சிக்கிறதில்ல. ஏன் வயசான காலத்துல வீணா அவங்களுக்கு தொல்ல குடுப்பான?ன்ட்டு கௌம்பி வந்துட்டேன். தோ! இங்கியே படுத்துக்கிறேன், இங்கியே சாப்டுக்கிறேன். சொத்துப் பத்துக்கெல்லாம் ஆசயில்லை எனக்கு. நான் பாக்காத சொத்தா?
காலாபட்ல எட்டுத் தூலபத்தி வீடு, மூன்ற கானி நெலம். இன்னக்கி கோடிக்கணக்குல போவும். வெறும் பதினேழு ரூபாய்க்கு ஏமாத்தி வாங்கிக்கினான் அந்த வக்கீலு. திருட்டுப் பையன். போன மாசம்கூட நேர்ல போய் நாக்கப் புடுங்கறமாரி நாலு கேழி கேட்டுட்டு வந்தேன். அவ்ளோதான் முடிஞ்சது. ஏமாத்திக்கினான். இன்னா பண்றது? புள்ளையும் செரியில்ல''
புலம்பியபடி மீண்டும் தொடர்ந்தார்.
''அந்த காலத்துல சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்வேன். ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பனா, எவனும் எதுத்துப் பேசமாட்டான். ஆனா, ஞாயமாத்தான் தீர்ப்புச் சொல்வேன். எவன், எங்கத் தப்பு செஞ்சிருந்தாலும் இழுத்து வந்து நாலு சாத்து சாத்தி, 'பத்து ரூவா, இருவது ரூவா'ன்னு அபராதம் போட்ருவேன். அப்பலாம் அது பெரிய காசு.''
கிழவருக்கு காது கேட்காது என்பதால், சத்தம் போட்டு நான் கேட்ட கேள்விகளால், சாலையில் போவோர் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இரண்டு டீ சொல்லி ஆளுக்கு ஒன்றாய் சாப்பிட்டோம். கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தேன். அடுத்த கேள்வி மிகுந்த சங்கடமானது. அவரது சாவைப் பற்றியது. சூசகமாக ஆரம்பித்தேன்.
''வயசான காலத்துல ஊர்ல இருந்தாத்தானே நல்லது. நாலுபேர் கூட வருவாங்க, எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்?''
கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டு, கேட்டார்.
''என் சாவப் பத்தி கேக்கிறியா? அதுக்குத்தான் அப்பவே பாடிவச்சிட்டு போனானே!
''இப்பவோ இன்னுஞ்செத்த நேரமோ
இரவுதான் பகலோ அஃதிலோ
நீரிலோ தீயிலோ
செப்பறியா வீட்டிலோ காட்டிலோ
சாலையிலோ மரம் மீதிலோ
எப்பொழுது என்னுயிர் பிரியும்
ஈசனே!''
என ராகம் போட்டுப் பாடியவர்,
'' வெள்ளக்காரங் காலத்துல ஏழாவது படிச்சேன். விவேக சிந்தாமனி, ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் தண்ணி பட்ட பாடு.''
''ஒடம்பு எப்படி இருக்கு?''
"எனக்கு... எந்த நோயுமில்ல. இப்ப கொஞ்ச நாளா மூச்ச இழுக்குது. இன்னும் பத்து நாள் இருப்பனா? சாவு எப்பனா வரட்டும். யாருக்குத்தான் வரல. நீ வேலைக்கு போவல..?'' என்றார், என்னை பார்த்து.
''அது கிடக்கட்டும், ஊர்க்காரங்க யாரும் உன்னை விசாரிக்கிறது இல்லையா? எதுனா வாங்கித் தருவாங்களா?''
''ஏன் வாங்கித்தராம! ஊர்க்காரன், ஜாதிக்காரன் யாரும் வரமாட்டான். காலனிக்காரங்க வந்து விசாரிப்பாங்க. அஞ்சோ, பத்தோ குடுத்துட்டு போவாங்க. ஒன்னும் கஷ்டமில்ல உடு... ஒரு கை சோத்துக்கு மேல எறங்காது.''
என் செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புமணி வந்துகொண்டிருந்தது. ரொம்பவே நேரமாகிவிட்டிருந்தது.
"சரி தாத்தா, எதுனா வாங்கி வந்து தரவா? குளிர் நாளாயிடுச்சே! போர்வை வாங்கித்தரட்டுமா?'' என்றேன்.
''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். போர்வை எங்கிட்டயே இருக்கு. போத்தாலே ஒடம்பு வலிக்குது. காசுகூட வேணாம். முந்தாநாளு எர்நூற்ரூபாவ எவனோ திருடினு போய்ட்டான். நீ எங்கயா இருந்தாலும் நல்லா இருக்கனும், கௌம்பு.'' என்றார்.
பாக்கெட்டில் கிடந்த முப்பத்தைந்து ரூபாயை, அவர் கையில் தினித்துவிட்டு நடந்தேன். கோபம் யார், யார் மீதெல்லாமோ படர்ந்துகொண்டிருந்தது.
''தமிழ், தமிழ் என்கிறோம். தமிழ்நாட்டில்தான் இந்த கேடுகெட்ட நிலை. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன். ச்சே!
நேற்று வரை நான் தமிழன். இன்று முதல் ஒரு மயிரும் இல்லை'' என்று நினைத்துக் கொண்டேன்.
*03.12.2006 தேதியிட்ட குங்குமம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.