Wednesday, March 25, 2009

இவர்களைத் தெரியுமா? நடைபாதை மகான்கள்.


கடவுள் தரிசனம் காண லட்சக்கணக்கானோர் கூடும் இடம் அது. ஆனால், வெகுசிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள். ஆறடிக்கு ஆறடி அகலமுள்ள ஒரு குட்டி அறையில் அழகானதொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் அவர். வரம் கேட்டு வருபவர்கள் யாரையும் அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மீறிப் பார்த்துவிட்டால், பாதிச்சுமை இறங்கிவிடும். நாலு வார்த்தை பேசிவிட்டால்? -‘‘பிரச்னைகள் அனைத்துமே தீர்ந்துவிடும்’’ என்கிறார்கள். யார் அவர்?
‘‘நான் கடவுள்’’ என்று எப்பொழுதாவது அவர் சொல்வதுண்டு.

‘‘ராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீரடி சாய்பாபா, வள்ளலார், ஸ்ரீரமனர் பொன்ற பெரிய மகான்கள் இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே இருப்பேன். இவர்களைச் சுற்றி சுவர்களோ, தடைகளோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்த மகான்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கப் போனார்களோ... தெரியாது. நான் எந்த வேண்டுதல்களோடும் போகவில்லை. ‘துறவரம் பூண்ட சாமிகளிடத்திலும் போலித் துறவிகள் இருக்கிறார்கள்’ என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். அவர்களின் பந்தாவே தனி. பூஜை, புனஸ்காரம், ஆசிரமம், யோக, ஞான பாடங்களுக்கென்று பதினான்கு நாட்கள் கோர்ஸ், ஆன்மீகச் சுற்றுப் பயணம்.
அடேயப்பா...!

குரு என்ற இடத்துக்குத் தகுதியில்லாது, வெளி வேஷம் போடும் சாமிகளை வணங்கினால், வணங்குபவர்கள் செய்யும் புண்ணியம் வணக்கத்தை வாங்குபவர்களுக்குப் போகும். பதிலாக, வணக்கத்தை வாங்கும் ஆசாமி சேர்த்து வைத்த பாவங்கள் வணங்கியவரை வந்து சேரும். ஆகவே வணக்கம் ஜாக்கிரதை.

உங்களுக்குத் தெரியுமா?
சென்னையிலேயே நெரிசல் மிக்க சாலைகளில் எத்தனை ஞானிகள் உலவுகிறார்கள் என்று?
எனக்குத் தெரியும். அவர்களைச் சென்று வணங்க நம் அகந்தை இடம் கொடுக்காது. அவர் யாரென்றும், எங்கிருக்கிறார் என்றும் சொல்லமாட்டேன்.’’ -பல வருடங்களுக்கு முன்பு விகடனில் வெளியான தன்னுடைய ‘ராஜாவின் பார்வையில்’ தொடரில் இப்படி இவரைக் குறிப்பிடுகிறார் இசைஞானி இளையராஜா.
இசையமைப்பாளர் சிற்பி, ஸ்ரீகாந்த் தேவா, டிரம்மர் சிவமணி, நடிகர்கள் விவேக், மோகன், நடிகை நீலிமா ராணி, இயக்குநர் வின்சென்ட் செல்வா ஆகியோர் இம்மகானின் தீவிர பக்தர்கள். தி.மு.க. முக்கியப்புள்ளி ஒருவரின் குடும்பத்தினர், தொழிலதிபர்கள், ஏழைகள் என எல்லோரும் இங்கே வந்துபோகிறார்கள்.
‘பரஞ்சோதி பாபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் இவரை, ‘அய்யா, அப்பா, தாத்தா’ என்றும் அழைக்கிறார்கள்.

‘‘பதினெட்டு வருஷமா நான் தாத்தாகிட்ட வந்து போய்ட்டு இருக்கேன்’’ என்கிற டிரம்மர் சிவமணி, ‘‘அப்போதெல்லாம் அவர் முருகன் கோவிலை ஒட்டி வீதிகளில் திரிந்துகொண்டிருப்பார். ஆரம்பத்தில் என்னை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தினந்தோறும் வந்து கால்கடுக்க நிற்பேன். திரும்பிக்கூட பார்க்கமாட்டார். ஒருநாள் என்னை நேருக்கு நேர் பார்த்துவிட்டு ‘போய் வா!’ என்றார். விடை பெற்றுக்கொண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குப் போனேன். அப்போது பிரான்ஸில் இருந்து இரண்டு பேர் என்னைக் காண வந்திருந்தார்கள். தங்கள் நாட்டின் பிரபலமான இசைக்குழுவில் என்னை வாசிக்க அழைத்தார்கள். பணி முடிந்து தாத்தாவைப் போய்ப் பார்த்தேன். ‘ரெண்டு பேர் வந்தாங்களா?’ என்றார். எனக்கு மெய் சிலிர்த்துக்கொண்டது.இது மட்டுமா? ஒருநாள் நல்ல மழை. நாங்கள் தெப்பலாக நனைந்துகொண்டிருந்தோம். ஆனால், தாத்தா மீது துளி மழையும் விழவில்லை. அவர் நின்ற இடம் காய்ந்துபோய் இருந்தது. மிகவும் அரிதாக இப்படிப்பட்ட சித்து வேலைகளை எனக்கு காட்டுவார். சில சமயம் தாத்தா எனக்கு விடைகொடுக்க மாட்டார். ‘இங்கேயே படு. நாளைக்குப் போகலாம்’ என்பார். வேறு வழியின்றி இப்படிப் பல நாட்கள் அவரோடு பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கியிருக்கிறேன். காரை பார்க் செய்துவிட்டு அவரோடு ரோட்டில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். இன்றைக்கு ‘டிரம்மர் சிவமணி’யாக என்னை உலக நாடுகள் அங்கீகரித்திருக்கிறது என்றால், அதற்கு தாத்தாதான் காரணம்.ஒருநாள் நான் ஜெர்மனியில் இருந்தேன். டி.வி.யில் இந்தியா பற்றிய டாக்குமென்ட்ரி ஓடிக்கொண்டிருந்தது. உடனே எனக்குத் தாத்தா நியாபகம் வந்துவிட்டது. என்ன ஆச்சர்யம்! திடீரென தாத்தா, சில நொடிகள் டி.வி.யில் தோன்றி மறைந்தார். உலகம் முழுக்க எங்கு சுற்றினாமும், ஏர்போட்டில் இறங்கியதும் நான் முதலில் வந்து பார்ப்பது தாத்தாவைத்தான். தாத்தாவிடம் நான் எதையுமே வாய் திறந்து கேட்டதில்லை. மனதில் நினைத்துக்கொள்வேன். அது நிறைவேறிவிடும். தாதாவைப் புரிந்துகொள்வது கடவுளைவிடக் கடினமானது’’ என்கிறார்.

நாம் பாபாஜியை நேரில் தரிசித்தோம்.
‘‘அய்யா... உங்களைப் பார்க்க பத்திரிகைல இருந்து வந்திருக்காங்க’’ என்றவாறு ஜூ.வி.யை அவர் மடியில் வைத்தார் அவரது சீடர் கிருஷ்ணமூர்த்தி. ‘‘தெரியுமே! ஜூனியர் விகடன்’’ என்றபோது நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் நம் வருகை குறித்து பாபாவிடம் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிப்பது சாத்தியமும் இல்லை. சிபாரிசுகளுக்கு அங்கே வேலை இல்லை. ‘‘நீ நூறு ரூபா கொடு’’ என்றார், பாபா நம்மிடம்.

நாம் பணத்தைக் கொடுத்ததும், ‘‘உங்களுடைய கடன் தீர்ந்துவிட்டது. இனி உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாது’’ என்றார் அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி. ஒரு நிமிடம் நம்மைப் பார்த்த பாபா, படீரென முகத்தைத் திருப்பிக்கொண்டார். நாம் அவர் அருகே உட்கார்ந்தோம். பாபாவின் வேட்டியை முழங்காலுக்கு மேல் உயர்த்திவிட்ட கிருஷ்ணமூர்த்தி, அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார். நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.
பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. நாமாக விடைபெற்று வெளியே வந்தோம்.

செங்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் நம்மிடம், ‘‘என் அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தேன். ‘48 மணிநேரம்தான் இருக்கு. ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’ என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நாம் பாபாவிடம் வந்து அழுதேன். என் கரங்கைப் பற்றியவர், இரண்டு நாட்களும் தன்னுடனே என்னை தங்க வைத்துக்கொண்டார். மூன்றாம் நாள் ‘அம்மாவை ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண பெட்டுக்கு மாற்றிவிட்டதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை’ எனவும் எனக்குத் தகவல் வந்தது. அதன் பிறகுதான் என்னை வெளியேற அனுமதித்தார்’’ என்கிறார்.

அங்கு வந்திருந்த நடிகை நீலிமாராணி, ‘‘நம்பிக்கையோடு பாபாஜியை தரிசிக்கவேண்டும். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல், வாரத்தில் பல நாட்கள் ஆஸ்பிட்டலிலேயே கிடந்தோம். கடுமையான பணப் பிரச்னை வேறு. நான், நாள் முழுக்க பாபாஜியின் காலடியில் கிடந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் கலைஞர் டி.வி, கன்னடத்தில் விசா டி.வி இரண்டிலும் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எனக்கு கைகூடியது. இன்றோடு என் அப்பா இறந்து பத்து நாட்கள் ஆகிறது. இதுவும் பாபாவின் கட்டளைதான்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

நம்மிடம் பேசிய சில சினிமா தொழிலாளர்கள், ‘‘பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர் சங்கமான ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் சம்பளப் பிரச்னை உருவாயிற்று. பாபாவிடம் வந்த நாங்கள், ‘சாப்பாட்டுக்கே வழியில்ல சாமி. பட்டினி கிடந்து சாகிறோம்’ என்று கதறியழுதோம். அன்றிரவு நடு வீதிக்கு வந்த பாபாஜி, ‘வேலை செய்றவனெல்லாம் சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்படுறான். நீங்க ஏ.சி. ரூம்ல பொம்பளைங்களோட கூத்து நடத்துறீங்களா?’’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘உடனே அவங்களைக் கூப்பிட்டுப் பேசுங்கடா’ என்று வெற்றிடத்தைப் பார்த்து கட்டளையிட்டார். அடுத்த நாளே எங்கள் இரு தரப்புக்கும் சமாதானமாகிவிட்டது’’ என்றனர்.

‘‘பாபா, யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்.

-நன்றி. ஜூனியர் விகடன்.