Saturday, July 21, 2007

ரிக்க்ஷா மாமாவுக்கு இது '1071'வது பிறந்த நாள்






பாண்டிச்சேரியில் இறங்கி 'ரிக்க்ஷா மாமா' யாரென்று கேட்டால், சின்னக் குழந்தைக்கூட சொல்லிவிடும். அந்தளவுக்கு ஊர் முழுக்கப் பிரபலம் ரிக்க்ஷா மாமா. சத்யராஜ் மாதிரி இவர் குழந்தைகளை ரிக்க்ஷாவில ஏற்றிக்கொண்டு 'ஒத்திப்போ, ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ'ன்னு பாட்டுப் பாடுகிறவரும் இல்லை. ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்ட சத்யராஜ், ''அய்யா! நீங்கதான் நிஜமான ஹீரோ, நீங்கதான் உண்மையான ரிக்க்ஷா மாமா''னு நெகிழ்ந்து போய், ஒரு ரிக்க்ஷாவையே இவருக்குப் பரிசா கொடுத்திருக்கார்.

சேவை செய்யணும்னா உலக அழகி ஆகணுமா என்ன? மனசு தாங்க முக்கியம். அந்த மனசு, இந்த ஏழை ரிக்க்ஷா மாமாகிட்ட நிறையவே இருக்கு. அஞ்சு ரூபாய்க்கு காதி போர்டு பட்ட சாதம் வாங்கி அடிச்சாலும் பசங்களுக்கு பொறந்த நாள்னா, 150 ரூபாய்க்கு கேக் வாங்கிக் கொண்டாடுகிற செல்வந்தர் இவர். இவருக்கு மொத்தம் 1071 பிள்ளைகள். எப்படி சமாளிக்கிறார்ணு பாக்கறீங்களா? கேளுங்க.

சவரிநாதனுக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் லட்சுமாங்குடி. மனம் நிறைய கனவுகளோடு 76ல் ஜெசிந்தா மேரியைக் கைப்பிடித்தார். கண்கொள்ளாத அழகு ஜெசிந்தா. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் மூட்டைத் தூக்கி சம்பாதித்து, அந்தப் பணத்தில் தன் அழகு மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். இப்படி சந்தோஷமாக நாலு வருடங்கள் ஓடிய குடும்ப வாழ்க்கையில், திடீரென்று புயலடிக்கத் துவங்கியது. அன்று நடுக்கடலில் கப்பலுக்குள் வேலை. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. களைத்துப் போய் பசியோடு வீடு வந்து சேர்ந்தவரை எதிர்பாராமல் இடி தாக்கியிருக்கிறது. ஆனால் அன்று மழை ஏதுமில்லை. வானத்திலிருந்து பாய்வதற்குப் பதில், இடி வீட்டுக்குளிருந்து பாய்ந்திருக்கிறது. ஆம், ஆறு மாதக் குழந்தை சார்லஸ் கீழே உறங்கிக் கொண்டிருக்க, மேலே வேறொரு ஆடவனுடன் கட்டிலில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் ஜெசிந்தா மேரி.

''எனக்கு ஆத்திரத்தைவிட அழுகைதான் அதிகமா வந்தது. தன் பொண்டாட்டியோட வேற ஒரு ஆம்பளையை கட்டில்ல பாக்குற மாதிரி கொடுமை உலகத்துல வேற எதுவும் இல்லீங்க. சாகிறவரை அது உங்களை சித்திரவதை பண்ணிக்கிட்டே இருக்கும். ரொம்ப மனசு ஒடஞ்சிப் போச்சு. எங்கெங்க‌யோ சுத்தினேன். கடைசியா வந்து சேர்ந்த‌ இடம், சூசைட் பாயிண்ட்னு சொல்றாங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. மலை உச்சிக்குப் போயிட்டேன். ஆனா, தற்கொலை என்னமெல்லாம் கிடையாது.

நான் மலை உச்சியில நிக்கிறதைப் பார்த்து, கர்னல் அந்தோனிங்கிற மிலிட்ரி ஆபீசர், 'அடப்பாவி ஏண்டா சாகப் போற? உனக்கு என்ன கஷ்டம்? எங்கிட்ட சொல்லு'ன்னு கேட்டவர், அங்குள்ள டெபன்ஸ் காலேஜில் என்னை தோட்ட வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் தனியா இருக்கிறதைப் பார்த்து 'ரோசி'ன்ற பொண்ணை கல்யாணமும் செஞ்சு வச்சார். ரோசிகூட குடும்பம் நடத்தினப்ப ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. யார் செஞ்ச பாவமோ! ரெண்டுமே செத்துப் போச்சு.

ரொம்ப நாளாகியும் குழந்தைங்க செத்துப்போன துக்கம் மனசை விட்டுப் போகலை. வெறுத்துப் போய், மனம் போன போக்கில் கிளம்பி பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன். குளம் வெட்டி இந்த ஊர் ஜனத்துக்கெல்லாம் தண்ணி அளந்தாளாமே ஆயி! அந்த ஆயி மண்டபத்துக்குப் பக்கத்துல பசியோட உக்காந்திருந்தேன். 'ராஜூ, பாபு'ன்னு ரெண்டு ரிச்சா தொழிலாளிங்க. அவங்க‌தான் எம்மேல இறக்கப்பட்டு கூடைசோறு வாங்கித் தந்தாங்க. என் கதைய கேட்டுட்டு 'இனிமே நீயே ஒழச்சி சம்பாரிச்சி சாப்பிடு'ன்னு சொல்லி ஒரே நாள்ல எனக்கு ரிச்சா ஓட்டக் கத்துக் குடுத்தாங்க.

ஹனிமூன் கொண்டாட பாண்டிச்சேரி வந்த ஜோடிதான் என் முதல் சவாரி. அன்னைக்கு என்ன அதிஷ்ட்டமோ! நிறைய வெள்ளக்காரங்க என் ரிச்சாவுக்கு சவாரி வந்தாங்க. சொன்னா நம்பறீங்களோ இல்லியோ! அன்னைக்கு மட்டும் ஒரே நாள்ல 300 ரூபா கலெக்க்ஷன் ஆச்சு. நேரா கொண்டுபோய் 'ராஜூ, பாபு'கிட்ட கொடுத்துட்டேன். அவங்க வெறும் முப்பது ரூபாயை எடுத்துக்கிட்டு, மீதிய எங்கிட்டயே கொடுத்துட்டாங்க.

இவ்ளோ பணத்தை எப்ப‌டி செலவு பண்றதுண்ணே தெரியல! குதிக்காத குறைதான். சந்தோஷமா தெருவுல நடந்து, போய்க்கிட்டே இருந்தேன். அப்பப் பாத்து பிளாட்பாரத்துல வசிக்கிற குழந்தைங்க, 'யம்மா பசிக்குது, யம்மா பசிக்குது'ன்னு சொல்லி அவங்க அப்பாம்மாகிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்குதுங்க! எனக்கு குழந்தைங்க இல்லையா? இதுங்க பசியில துடிக்கிறதப் பாத்து மனசு இறங்கிப் போச்சு. அப்பவெல்லாம் ஒரு சாப்பாடு ரெண்டு ரூபாதான். எல்லா குழந்தைங்களையும் கூப்பிட்டேன். மொத்தம் இருபது, இருப‌த்தஞ்சி பசங்க இருக்கும். எல்லாத்துக்கும் சோறு வாங்கிக் கொடுத்துட்டு, அதுங்க சாப்புடறதையே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்குப் பசியே எடுக்கலை.

அதுக்கப்புறம் எனக்கு நெறைய ஸ்கூல் சவாரிங்க வர ஆரம்பிச்சது. சக்திகுமரன்தான் என்னோட முதல் ஸ்டூடண்ட். அவனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள், எனக்கு நவம்பர் 8. சரி, இந்தக் குழந்தையோட பிறந்த நாளை கிராண்டா கொண்டாடணும்ணு முடிவு பண்னேன். நேரா காந்தி ஸ்ட்ரீட்ல இருக்குற சிவா ஆர்ட்டிஸ்ட்கிட்டப் போய், ஒரு வாழ்த்து அட்டை வரஞ்சிக்கிடேன். அப்புறமா கலர் பேப்பர், ஜோடிப்புலாம் வாங்கி ராத்திரி முழுக்க‌ உக்காந்து ரிக்க்ஷாவை அலங்காரம் பண்ணேன். காலைல சக்திகுமரன் வீட்டு வாசல்ல போய் நின்னதும், அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பிள்ளைய ரிச்சாவுல ஏத்திக்கிட்டுக் கிளம்பும்போது, பக்கத்து வீடுகள்ல இருந்து ஒரு பத்துப் பிள்ளைங்க வந்து நிக்குது. எல்லாரையும் ஏத்திக்கிட்டு நேரா மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போனேன். பிரார்த்தனையை முடிச்சிட்டு அங்கிருந்து லக்கி ஸ்டூடியோ ஓனரைப்போய், தூக்கத்துல எழுப்பினேன். அதுதான் எங்களோட முதல் பிறந்தநாள் போட்டோ.

குழந்தைங்க, அவங்க அப்பாம்மான்னு எல்லாரும் சந்தோஷப்பட்டதைப் பார்த்து எனக்கு ரொம்ப உற்சாகமாயிடுச்சி. ஆனா வசதியான பிள்ளைங்கள்லாம் சைக்கிள்ல, ரிச்சாவுல வரும்போது தெருவோரப் பிள்ளைங்க நடந்தே வர்றது என்னவோ மாதிரி இருந்துச்சி. 'நமக்குதான் பிள்ளைங்களே இல்லை. இதுங்களையாவது கூட்டிட்டுப் போவோம்'னு இலவசமாவே ரிச்சாவுல ஏத்திட்டுப்போக‌ ஆரம்பிச்சேன். போகும்போது, 'மாமா எனக்கு இன்னைக்கி பொறந்தநாள்'னு பிள்ளைங்க சொல்லும். மாத்திப் போடவே துணி இல்ல. இதுல பொறந்த நாள் எப்படிக் கொண்டாட முடியும்? புதுத் துணி எப்படி எடுக்க முடியும்? அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேன்.

இந்த மாதிரி ஏழைக் குழந்தைகளுக்கு நாமே பிறந்தநாள் கொண்டாடிடணும்.

புதுசா எந்தக் குழந்தை வந்தாலும் சரி! பிறந்த நாளைக் கேட்டு, குறிச்சு வச்சுக்குவேன். ஆனா கேக் வெட்டி, புதுத் துணி எடுத்து, பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு எனக்கு மட்டும் வசதி இருக்கா என்ன? அதனால... யாராவது பெரிய மனுஷங்க, அரசியல்வாதிங்க, துணிக்கடைக்கார‌ங்க, தனியார் கம்பெணிங்கன்னு போய், விஷயத்தைச் சொல்லி உதவி கேட்பேன். அவங்களும் 'இல்லை'ன்னு சொல்லாம இன்னிக்கு வரைக்கும் முடிஞ்சதை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. பாண்டிச்சேரியில் இருக்கிற எல்லா வி.ஐ.பி.களோடவும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிட்டோம். எங்களோட 125வது பிறந்தநாளை நடிகர் சத்யராஜ் முன்னிலையில் கொண்டாடினோம். அப்பதான் அவர் என்னைப் பாராட்டி ஒரு ரிச்சாவைப் பரிசாக் கொடுத்தார். 200வது பிறந்த நாளுக்கு சூப்பர்ஸ்டார், 225வது பிறந்தநாளுக்கு நடிகர் சரத்குமார், 250வது பிறந்தநாளுக்கு கமலஹாசன்னு எல்லா சினிமாஸ்டார் கூடவும் கொண்டாடி இருக்கோம். இதுவரைக்கும் 1071 பொறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இனிமேலும் என் மூச்சு இருக்குற வரைக்கும் கொண்டாடுவேன்'' என்கிறார்.

''உங்க ரெண்டாவது மனைவி ரோசி என்ன ஆனாங்க. அவங்களை ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க?" என்றேன்.

''அய்யய்யோ... விட்டுட்டு வரலை சார். போய் கூட்டிட்டு வ‌ந்துட்டேன். திரும்பவும் என் சொந்தக் கதைக்கே வந்துட்டீங்க. மறக்கணும்னு நெனச்சாலும் சொல்லித்தானே ஆகனும். சவாரி, சாப்பாடு அதைவிட்டா பிறந்தநாள்னு சந்தோஷமாத்தான் போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை. புள்ளைக்குட்டி யாரும் இல்லாததால வீட்ல ரோசி மட்டும் தனியா இருப்பா. அப்படி நான் இல்லாத நேரமாப் பார்த்து ரெண்டு பொருக்கிப் பசங்க அவளை பலாத்காரம் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே அவ கொழந்தைங்க செத்துப் போன துக்கத்துல மனசொடிஞ்சிக் கிடந்தா. இந்த சம்பவத்தால அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. குழந்தைங்களோட குழந்தையா அவளையும் 27 வருஷமா பாத்துக்கிட்டிருந்தேன். எனக்குன்னு இருந்த சொந்தம் அவ மட்டும்தான். அதையும் மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த சுனாமி, பரிச்சிக்கிட்டுப் போயிடிச்சி. சுனாமி வந்தப்போ நான் சவாரில இருந்தேன். குடிசை கடலோரத்துல இருந்ததா!அலையோட அலையா அவளையும் வாரிக்கிட்டுப் போயிருச்சி. ஆனா அவ சாகலை. விசாரிச்சிப் பாத்தப்ப அவங்க அம்மா வீட்டுப் பக்கம் பாத்ததா சிலபேர் சொன்னாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் திரும்பி வரவே இல்லை. எங்க இருக்கான்னும் தெரியல'' என்றவரிடம்,
''உங்களோட முதல் குழந்தை சார்லஸாவது இருக்கானா? அவனைப் பாத்திருக்கீங்களா?" என்றேன்.

''அவன் மெட்ராஸ்லதான் எங்கயோ இருக்கானாம். அவன் எனக்குப் பிறந்த குழந்தைங்க. என்னைக்காவது என்னைப் பார்க்க வருவானான்னு நான் ஏங்காத நாள் இல்லை. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டாவது அவனைப் பாக்க முடிஞ்சா அதைவிட சந்தோஷம் வேற எதுவும் கிடயாது'' என்கிறார்.

''பிறந்த நாள் மட்டும் தான் கொண்டாடுகிறீர்களா... இல்லை வேறு ஏதாவது சமூக சேவையும் செய்வதுண்டா?"

''ஜான்பீட்டர்னு ஒரு ஊணமுற்றப் பையன். யார் யாரிடமோ உதவி கேட்டு பத்து வருஷமா அவனைப் படிக்க வச்சிருக்கேன். நல்லா படிச்சி கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிட்டான். இப்ப அவனுக்கு கவர்மெண்ட் டூ வீலர் குடுத்திருக்கு. அவன் ஸ்கூட்டர்ல போற அழகைப் பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? தமிழ்ச்செல்வின்னு ஒரு பொண்ணு. பாவம்! ரொம்ப ஏழை. பேப்பர்ல என்னைப்பத்தி படிச்சிட்டு உதவி கேட்டு வந்துச்சி. 'ஊர் உலகத்துல எத்தனையோ பெரிய மனுஷங்க இருக்கும்போது இந்தப் பொண்ணு நம்ம‌கிட்ட வந்து நிக்குதே!'ன்னு ஒன்னுமே புரியலை. மருந்துக்கு மட்டும் மாசம் 600 ரூபா செலவாகும். அந்த மாதிரி ஒரு பிரச்சினை அந்தப் பொண்ணுக்கு. நிறைய தனியார் கம்பெனிகள்ல போய் நின்னு மொத்தம் ஒன்ரை வருஷம் மருந்து வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஒரு குறையும் இல்லாம நல்லபடியா இருக்கா.

93ல் என் தோள்ல தூக்கிட்டுப் போய்விட்ட சரண்யா! இப்ப ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர். அந்தப் பொண்ணால நடக்க முடியாது. அதேபோல சுகண்யாங்கற பொண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் நடந்திச்சி. அதுக்கு ஆயிரம் சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா, 'தங்களை அன்புடன் வரவேற்கும் ரிக்க்ஷா மாமா'ன்னு இன்விடேஷன்ல எம்பேரப் போட்டுருச்சி. அதப் பாத்த உடனே எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. எனக்குன்னு யாருங்க சொந்தம்? பள்ளிக்கூடம் கூட்டிட்டுப் போனப் பாவத்துக்காக, இந்தப் பொண்ணு பத்திரிகைல பேரைப்போட்டு கவுரவப்படுத்திருச்சே!ன்னு எனக்கு பலநாள் தூக்கமே வரலை'' என்கிறவர்,

''வெள்ளிக்கிழமையானால் போது!, பாண்டிச்சேரியில் இருக்கிற ஜோதி கண் மருத்துவமனைக்கு கிராமத்தில் இருக்கிற ஏழை முதியோர்களை கொண்டு போய்விடுகிறார் ரிக்ச்கா மாமா. டாக்டர் வனஜா வைத்தியநாதன் அவர்களுக்கு ரிக்க்ஷா மாமா சார்பாக இலவச மருத்துவம் பார்த்து அனுப்புகிறார். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஊணமுற்றவர்களை சென்னை சூளையில் உள்ள 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவது என்று இன்றைக்கும் தொடர்கிறது ரிக்க்ஷா மாமாவின் சேவை.

இந்த ஏழையைச் சார்ந்து நிற்கிற ஏழைகளுக்கு இவர் வெறும் ரிக்க்ஷா மாமா அல்ல. அதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவர். இவரது ரிக்க்ஷாவில் ஏறி இன்றைக்கு ஃபிரான்ஸில் குடியிருக்கும் விண்ணரசி என்ற மாணவி, இவருக்காகவே பாண்டிச்சேரி வந்து ஒரு முழு நீள டாக்குமெண்ட்ரி எடுத்துச் சென்றிருக்கிறார். அது அங்குள்ள பல்வேறு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அரசு நிறுவன‌ங்களாகட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவன‌ங்களாகட்டும்! காக்கா பிடித்து காரியம் சாதிப்பதற்காகவே விருதுகள் வழங்கி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விழா நடத்துகிறார்கள். இனிமேலாவது இவர்கள் சவரிநாதன் போன்ற மனிதர்களை இனம் கண்டு கவுரவிக்கட்டும்.

''உறவினர்கள் யாரும் உங்களைத் தேடி வருவதில்லையா?'' என்றால் சவரிநாதன் சொல்கிறார், ''உன் சகோதரனிடத்தில் மனத்தாங்கல் வைத்துக் கொண்டு என்னிடத்தில் வராதே' என்கிறார் ஏசு. அவர்கள் தினமும் கோவிலுக்குப் போகிறார்கள்''.

Wednesday, July 18, 2007

தெருவுல ஓடுற நாயி... இல்லனா பன்னி...எதுனா ஒண்னு போடுங்க!










ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நவீன காலத்தில், நாகரிக சமுதாயத்தில் யாருக்காவது கல்வி மறுக்கப்படுமா என்னசுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தியக் குடியரசில், அரசாங்கத்தாலேயே கல்வி மறுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு. அது வீடு வீடாய் வந்து நிற்கும் குடுகுடுப்பை சமூகம்.


''கூடிய சீக்கிரம் இந்தக் குடும்பத்துல ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது. தெற்கு தெசைல இருந்து நல்ல சேதி ஒண்னு வரும்''

குடுகுடுவென உறுமி ஒலிக்கும் ஒரு சிறிய பம்பை மேளம் (குடுகுடுப்பை). முழுநீளப் புடவையை முடிந்து கட்டிய முண்டாசு, தோளில் ஒரு மாந்திரீகப் பை, கக்கத்தில் ஒரு குடை என்று கெட்டப்பிலேயே ஒரு அட்ராக்ஷன் இருக்கும் குடுகுடுப்பைக்காரர்களிடம்.

'ஆமா...எப்ப வந்தாலும் இதையே தான் சொல்ற! நல்ல காரியம் எங்க நடக்குது? என்று அம்மணிகள் சலித்துக் கொள்வார்கள்.

'நான் சொன்னா வாக்கு சுத்தமா இருக்கும். சந்தேகமிருந்தா கைரேகை பார். இல்லனா ஒலச்சுவடி போட்டுப் பார்'' என்பார்கள்.

'சோஸ்...சியம் ஒன்னுதான் கொறச்சல். ஒனக்கு காசு வேணும்ல... அதான்!”

 மண்டை முழுக்க ஆர்வமிருந்தாலும், என்னமோ அவசியமில்லாததுபோல் வீட்டம்மாக்கள் சாமர்த்தியம் காட்டுவார்கள்.

''சொல்றன்னு தப்பா நென்சிக்காத! ஒரு சிறுக்கியோட பார்வ இந்த ஊட்டு மேல விழுந்துருச்சி. அவ உள்ள வந்த நேரம் தீட்டானதால, எல்லாமே உனுக்கு வெட்டி, வெட்டிப் போவுது''

மன நிலைக்குத் தக்கபடி டயலாக்கை மாற்றுவார்கள் குடுகுடுப்பைகள்.

நான் நெனச்சேன். அவ பார்வையே செரியில்லாமதான் இருந்துதுஎன்று எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் நம் பெண்கள், “சரி, இன்னாதான் அதுக்குப் பரிகாரம்'' என்று பணிவார்கள்.

ஒரு வகையில் கிராமப்புற மக்களுக்கு இது உளவியல் மருத்துவமாக அமைகிறது. 'ப்பூ...' என்று விபூதியை முகத்தில் ஊதி விட்டாலே, பாதி பிரச்சினை பறந்துவிடும். இப்போது கிராமம் முழுக்க கரண்ட் வசதி வந்த பிறகு பேய் பிசாசுகள் அனைத்தும், போன மாயம் தெரியவில்லை. அப்படியிருக்க இம்மாதிரியான நம்பிக்கைகளைச் சார்ந்து வாழ்ந்த குடுகுடுப்பை மக்களுக்கு இன்று வயிற்றுப்பாடே பெரும் பிரச்சினையாகிவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது ஆலத்தூர் கிராமம். இதை ஒரு குடுகுடுப்பை கிராமம் என்றே சொல்லலாம். சுமார் ஐம்பது குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன.

அங்கே போனதுதான் தாமதம், bike-கை சூழ்ந்து கொண்டு, 'கையா, முய்யா'வென ஒரே கூச்சல். "... போட்டோக்கார், போட்டோக்கார்" என்று காமிராவைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

"தொழில்லாம் எப்படிப் போவுது" என்றேன்.

"எங்க சார்! குடுகுடுப்ப அடிச்சி வாசல்ல போய் நின்னா, 'ஏன் கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு. ஒழச்சி சம்பாதிக்க வேண்டியது தானே.எதுக்கு இப்படி பிச்சை எடுக்கனும்'னு அசிங்கப்படுத்துறாங்க. எங்களுக்கும் உங்கள மாதிரி கவுரவமா வாழனும்னுதான் ஆசை. ஆனா படிப்பு இல்ல, வேற தொழிலும் தெரியாது. இனா பண்றது?" என்று வருத்தப்படுகிறார்கள்.

"தொழில் இன்னாங்க தெரியனும்? ஏதாவது ஆடு மாடு வச்சிப் பொழச்சுக்கலாமே?" என்றால்,

"ஏன் சார்! எங்க ஊட்டு பொம்பளிங்கோ, மானம் மரியாதையா இருக்குறது உனுக்குப் புடிக்கலியா? நீங்க சொல்றா மாதிரி நாங்களும் ஆடு, மாடுங்க வச்சிருந்தோம். தோ கீறானே அய்னாரு. இவம் ஊட்ல மட்டும் அம்பது ஆடுங்க இருந்திச்சி. மேச்சலுக்கு எல்லா ஜாதி ஆடு, மாடுங்க போவலாம் சார். ஆனா எங்க ஆடுங்க போவக்கூடாது. மீறிப் போய்ட்டா போதும்.

'குடுகுடுப்பக்காரனுக்கு குடுத்தனக்காரன் மேரி ஆடு மாடுங்க கேக்குதா. ஒழுங்கா ஆட்ற (குடுகுடுகுடுப்பையை ஆட்டுவது) வேலைய மட்டும் பாருங்க. இல்லனா உம் பொண்டாட்டி, பொண்ணுஙகள நாங்க ............ ஆட்டிருவோம்'னு எங்களை அசிங்கசிங்கமாப் பேசுவாங்க.

இந்த ஆடு மாடுங்களாலதானே நம்பூட்டுப் பொம்பளங்கிள, கண்டவன் கண்டபடி பேசுறான். அதனால பஞ்சாயத்தக் கூட்டி, மொத்தமா எல்லா ஆடு, மாடுங்களையும் வித்துட்டோம். நாங்க நாதியத்த ஜாதியாப் போய்ட்டோம் சார். எதுத்துக் கேட்டா ஊடேறி வந்து அடிப்பாங்க. எல்லாம் தலவிதின்னு போவவேண்டியதுதான்.”

உங்களுக்குத்தானேங்க படிப்பு இல்ல. உங்க புள்ளைங்கள படிக்க வைக்கலாமில்ல?”

எங்க சார் படிக்க உடுறாங்க? ஜாதி சர்டிபிகேட் இருந்தாத்தான் படிக்க முடியுமாம். 'அது இல்லனா படிக்க வராத'ன்னு சொல்றாங்க. நாங்களும் எவ்ளவோ போராடிப் பாத்துட்டம் சார். எங்களுக்கு சிபாரிசு பண்ணக்கூட யாரும் இல்ல. கவுன்சிலரப் போய் கேட்டா, 'நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ! அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றாரு.

ஆனா, நாங்க ஒரு ஆள் தவறாம ஓட்டுப் போட்டோம் சார். ஒதவிக்கின்னு யாரும் இல்ல. நீங்களாவது பேப்பர்ல போட்டீங்கன்னா எதுனா நல்லது நடக்கும்னு எதிர்பாக்குறோம்.”
ஏதோ, நம்பிக்கையில் கேட்கிறார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று வெள்ளை நிறம், கொள்ளை அழகுடைய இம்மக்களின் பூர்வீகம், மகாராஷ்டிரா. தாய் மொழியாக மராட்டி பேசுகிறார்கள். என்றாலும் பிற மொழி கலப்புகளும் நிறைந்துள்ளன. தக்காளி - தக்காளிதான். மராட்டி மறந்து போய்விட்டதாம்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனித்த அடையாளம் இருப்பதைப்போல, இவர்களுக்கும் ஏதாவது இருக்க வேண்டுமல்லவா!

"உங்களுக்குன்னு ஏதாவது ஸ்பெஷலா பாட்டு, டான்ஸ்னு தனியா இருக்குதா? திருவிழா, இல்லனா கல்யாணத்துல ஆடிப்பாடுற மாதிரி..?" என்றேன்.

இருக்குதே! 'என்னம்மா தேவி ஜக்கம்மா... ஒலகம் தலகீழா சுத்துது நியாயமா' தம்பி படத்துல மாதவன் பாடுவாரே! அதான் சார் எங்க பாட்டு'' என்கின்றனர் அப்பாவியாக.

இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

தாங்கள் எப்படி குடுகுடுப்பைகாரர்கள் ஆனோம் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார் ஊர்த் தலைவரான அர்ச்சுனன்.  

''எல்லாரோட பொழப்புக்கும் ஒவ்வொரு தொழிலா வரம் குடுத்துட்டு இருந்தாராம் ஈஸ்வரன். கடைசியிலதான் விஷயம் தெரிஞ்சி ஓடியிருக்காங்க எங்காளுங்க. ஏம்பா இவ்ளோ லேட்டா வர்ரீங்க. எல்லா வரத்தையும் குடுத்து முடிச்சிட்டேனே! இப்ப இன்னா பண்றது?ன்னு யோசிச்சாராம்.

இந்தா இது ஒன்னுதான் பாக்கி இருக்குதுன்னு சொல்லி, சூலத்துல கட்டியிருக்குமே பம்ப உடுக்க, அத எடுத்து கைல குடுத்துட்டாராம். 'இத வச்சி ஊர் ஊரா உடுக்க அடிச்சி, அங்க இருக்குற காத்துக் கருப்பு, பேய் பிசாசுங்கள எல்லாம் வெரட்டி அடிங்க. ஊர் ஜனங்களுக்கு நல்ல வாக்கு சொல்லி, அவங்க குடுக்குறத வாங்கி குடும்பம் நடத்துங்க'ன்னு சொன்னாராம். இதப் பாத்தீங்களா! அதே உடுக்கதான். சைஸ் மட்டும் சின்னதா இருக்கும்'' என்றபடி குடுகுடுப்பையை அடித்துக் காட்டுகிறார்.

இங்கு வசிக்கும் 16 வயது அமிர்தவள்ளிக்கு, ஏகப்பட்ட பள்ளிக்கூடக் கனவு.
நீலம், வெள்ளையில் பாவாடை தாவணி கட்டிக் கொண்டு மற்ற சாதிப் பெண்கள் பள்ளிக்கூடம் சென்று வரும் அழகை, வைத்த கண் வாங்காமல் பார்ப்பாராம். ஒரு வேளை, பள்ளிக்கூட படியேறி இருந்தால் அமிர்தவள்ளியின் அழகுக்கு எல்லா சாதி இளவரசர்களும் கியூவில் நின்றிருப்பார்கள். ஆனால், நிறைவேறாத பள்ளிக்கூடக் கனவுகளுடன் அமிர்தவள்ளிக்கு திருமணமாகிவிட்டது.

அமிர்தவள்ளிக்கு இருக்கிற பள்ளிக்கூடக் கணவு அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் இங்கே இருந்து தொலைக்கிறது. ஆனால், ஒருவர்கூட படித்ததாகத் தெரியவில்லை. 'ஆம்பளைங்க குடுகுடுப்பை அடிக்கக் கிளம்பிட்டாங்கன்னா, நாங்க சுறுக்குப் பை விக்கப் போயிடுவோம். டைலர் கடையில வெட்டிப் போடுற துணிய வச்சித்தான் பை தைக்கிறோம். நாள் முழுக்க வித்தாலும் பத்து ரூபா தேர்றதே கஷ்டம்'' என்கிறார்கள் அங்குள்ள பெண்கள்.

'எங்க தாத்தா காலத்துலர்ந்து ஆலத்தூர்லதான் சார் குடும்பம் நடத்துறோம். மெட்ராஸ், விழுப்புறம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை'ன்னு நாலு மாவட்டங்கள்ளயும் சேத்து இருவது கிராமங்களுக்கு மேல எங்க ஆளுங்க இருக்காங்க.

காஞ்சிபுரம் திருப்பத்தூர்ல (அநேகமாக இது வேலூர் மாவட்டம் திருப்பத்தூராக இருக்கலாம்) எங்காளுங்க சில பேருக்கு ''இந்து கணிக்கர்'னு சர்டிபிகேட் குடுத்திருக்காங்க. நாங்க இருக்குற நெலமைக்கு எஸ்.டி சர்டிபிகேட் குடுத்தா நல்லா இருக்கும்'னு சொல்றாங்க. அது முடியலைன்னாகூட பரவாயில்ல சார். 'இவுங்க, தெருவுல ஓடுற நாயி, பன்னி' அப்டின்னு, எதுனா ஒண்ணு போட்டுக்குடுங்க சார். எங்க புள்ளங்க படிக்கனணும்னா சர்டிபிகேட் வேணும்என்கிறார் அய்யனார் என்பவர்.

நாலு ஊட்டு அரிசிய, ஒரு பிடி போட்டுப் பொங்கிப் பாருங்க. நாலு கலர்ல சோறு இருக்கும். அதுவும் சின்னதும் பெருசுமா இருக்கும். எத்தினி நாளைக்குத்தான் பிச்சை எடுத்தே சோறு துன்றது? எங்களுக்கும் உங்களப் போல ஒழச்சி சம்பாதிக்கணும்னு ஆச இருக்காதா? ஆனா, வழி தெரியிலயேஎன்கிறார் முருகன் என்பவர்.

'எல்லா ஊர்லயும் மகளிர் சங்கம் வச்சி இன்னாலாமோ பண்றாங்க. ஆனா, எங்கள யாரும் வந்து எட்டிப் பாக்குறதில்ல. எதுனா ஒரு கைத்தொழில் கத்துத் தந்தா இந்த சுறுக்குப் பைய்ய உட்டுக் கடாசிட்டு வேற தொழில் பாப்போம்' என்று கேட்கின்றனர் பெண்கள்.

வாழ்க்கை முறைப பற்றி விசாரித்தபோது வாயைப் பிளக்கு அதிசயம் ஒன்று தெரிந்தது. அது, அவர்கள் வரதட்சனை வாங்குவதே இல்லை என்பது.

வஜ்ஜடா, வஷ்டோர், முத்திரிஜோர், தொர்கோர், ஜவான், பஹங்கோத், சசானா அப்டீன்னு எங்கள்ள மொத்தம் ஏழு ஜாதிங்க. நீங்க முதலியார், செட்டியார்னு சொல்லிக்கிலையா! அப்படித்தான். இன்னா ஒண்ணு, நீங்க ஜாதி உட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க. நாங்க ஒரே ஜாதில பண்ணிக்க மாட்டோம். அதான் வித்தியாசம்.

வஜ்ஜடா, வஷ்டேர்ல பொண்ணு கட்டுவான், தொர்கோர், முத்திரிஜோர்ல பொண்ணு கட்டுவான். இங்க வரதட்சனையும் வாங்கக்கூடாது, பொண்டாட்டியையும் கைநீட்டி அடிக்கக் கூடாது. எல்லாரும் கட்டு திட்டங்களை மதிச்சி நடக்கனும். அம்பது ஊடுங்களயும் தெறந்து போட்டுட்டு போனாலும் ஒரு சின்ன திருடு கூட போவாது.

அப்டி ஏதாவது பிரச்சினைன்னா தலைவர்கிட்ட சொல்லிறணும். அவர் பஞ்சாயத்தைக் கூட்டி , சாட்சிங்கள விசாரிச்சுட்டு தீர்ப்பு சொல்வாரு. இன்னிக்கு வரிக்கும் ஒரு தப்பான தீர்ப்பு வந்ததில்ல'' என்று பெருமையோடு கூறுகின்றனர்.

மார்வாடிகளும், நரிக்குறவர்களும் இவர்களின் சகோதரர்களாம், சொல்கின்றனர். முறையாக கவுன்சிலிங் கொடுத்து, பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இவர்களை சமுதாயத்தில் ஒருவராய் மாற்றுவது மிகச் சுலபம். ஏனென்றால், முண்டாசை வீசி எறிந்துவிட்டு படிக்கவும் உழைக்கவும் தயாராய் இருக்கிறார்கள் இம்மக்கள்.

 ''நீ என்ன சாதி என்றோ, உனக்கு சாதியே இல்லை என்றோ கூறி அவமானப்படுத்துதோடு மட்டுமல்லாமல் சட்டப்படியே கல்வியை மறுப்பது எவ்வளவு அக்கிரமம்''.

அய்யனார் கேட்பது போல ''இது தெருவுல ஓடுற நாயி, பன்னி'' என்றாவது போட்டுக்கொடுங்கள். அவர்களின் பிள்ளைகளாவது படிக்க, ஒரு சாதிச் சான்று தேவை.