Friday, May 23, 2008

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்த‌வர்,
"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.

"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.

"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.

கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.

இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.
எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?
''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.

ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.

பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.
சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.

நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.

கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.

Tuesday, May 20, 2008

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூலம்.


மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்.

ஆரம்ப காலங்களில் நரிக்குறவர்கள்தான் அதிகம் பச்சை குத்தி வந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்கள், எழுத்துக்களை சித்திர வடிவில் மனப்பாடம் செய்து பச்சை குத்தினர். மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு எற்ப நோய்களின் பெருக்கம் அதிகரித்தபோது, மருத்துவமனை ஊசிகளே பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிந்தது. நோயிலிருந்து பாதுக்காக இப்போது டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நரிக்குறவர்கள் ஆண்டுக் கணக்கில் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்துவார்கள் என்பதால், அவர்களிடம் யாரும் பச்சை குத்திக் கொள்வதில்லை. ஆனால், பச்சை குத்தும் மோகம் இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது. நாகரீகம், டெக்னாலஜியை உள்வாங்கிக் கொண்டு எங்கோ போய்விட்டது. இந்தியாவில் பிறந்த பச்சை குத்து, வெளிநாட்டுக்குப் போய் நவீன தொழில் நுட்பங்களுடன் மீண்டும் இங்கே கலர் கலராய் கால் பதித்துள்ளது. இன்று அதன் பெயர் 'டாட்டூ'.

மீரா லிடியா. தமிழகத்தின் சூப்பர் பச்சை குத்துக்காரி.

சென்னையின் இளசுகள் மட்டுமல்லாது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சல்லிசாக இவரிடம் வந்து குத்திக் கொள்கிறார்கள். ஆளைப் பார்த்தால் "கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு" என்று பாடத்தோன்றும். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிளாக் மேஜிக் என்கிற தன் டாட்டூ ஸ்டுடியோவில் வேலையே ஜாலியாக இருக்கிறார் லிடியா.

இவரது இன்னொரு பெயர் பாய்சன் ஐ.வி. "பேட்ஸ் மென் ஆங்கிலப் படத்தில் வரும் பாய்சன் ஐ.வி.ங்கிற வில்லி கேரக்டர் எனக்கு ரொம்...பப் பிடிக்கும்" என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டுகிறார். பார்த்தால், முதுகெலும்பைக் கைப்பிடியாகக் கொண்ட கத்தியைப் பிடித்தபடி அதில் எமன் முறைத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ லேடி எஸ்.ஐ பிஸ்டலை பிடிப்பது போல் 'டாட்டூ கன்'னை(பச்சை குத்தும் கருவி) எடுத்துக் காட்டி, தன் குருநாதர் ராஜுக்கு நமஸ்காரம் செய்பவர் "கேள்வியை நீங்கள் கேட்குதா? அல்லது நான் கேட்குதா?" என்கிறார்.

ஒரு தொழிலாக செய்யக்கூடிய அளவுக்கு டாட்டூ வரைந்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா. எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது?



இன்னா அப்டி கேட்டுட்டீங்க! ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதே தவிர குறையல‌. அப்பாயிண்ட்மென்ட் வாங்கின‌ பிறகுதான் ஸ்டுடியோவுக்கே வர முடியும். ஏன்னா... பச்சை குத்துறது ஒன்னும் லேசுபட்ட‌ விச‌யமில்ல‌. சொல்லப் போனா, வரைர‌திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை மன்ஷன் உடம்புல டாட்டூ போட்ற‌துதான்" என்கிறார்.

அப்படி இன்னாங்க பொல்லாத கஷ்டம்?

"ஒவ்வொருத்தரோட உடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். சிலருக்கு ரொம்ப மிருதுவான சருமம், சிலருக்கு நார்மல், சிலருக்கு கடினம்னு தசைகள் வேறுபட்டு இருக்கும். சாதாரணமாக ஒரு கான்வாஸிலோ, பலகையிலோ வரையும் போது கிடைக்கக் கூடிய க்ரிப் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போகும். இதனால் படமோ, எழுத்தோ எதுவாக இருந்தாலும் தவறாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ரொம்ப சாஃப்ட் பேர்வழிகளின் தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டுதான் வரைய ஆரம்பிப்போம். ஆண்கள் பெரும்பாலும் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களிளும் பெண்கள் பின் இடுப்பின் மேற்புறம் மற்றும் முழங்கால்களில் வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பேர் குத்துற‌து, கோலம் போடுற‌‌து ரெண்டைத் தவிர வேற என்ன ஸ்பெஷல் இதுல?


பேர் குத்திக்கிற‌து என்னமோ வாஸ்தவம்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி யாரும் புள்ளிக் கோலம்லாம் போட்டுக்க மாடாங்க. எல்லாமே மார்டன் ஆர்ட்தான். ஒவ்வொரு ஓவியத்துக்குப் பின்னாடியும் ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியே இருக்கும். அர்த்தத்தோடதான் டாட்டூ போடுறோம். ஒவ்வொரு நாளும் மண்டையை குடைஞ்சி நானாவே புதுப்புது கான்செப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். அதில்லாம... வர்றவங்க என்ன மாதிரி டிசைன் கொண்டு வந்தாலும் அதையும் போட்டு தருவேன். இப்ப உங்க லவ்வரோட போட்டோவை எங்ககிட்ட குடுத்துட்டா போதும். அச்சு அசலா அப்படியே உங்க உடம்புல ரியலிஸ்டிக்கா வரைஞ்சு வச்சிடுவேன். ஆனா, அதுக்கப்புறம் வர்ற பிரச்சினைக்கு நான் பொறுப்பு இல்லை.

அப்படின்னா, மாசத்துக்கு ஒரு டிசைன்னு உடம்புல வரைஞ்சிக்கிட்டு அசத்தலாம். என்ன, 500 ரூபா வாங்குவீங்களா! ஆமா... எவ்ளோ நேரம் பிடிக்கும் இதை வரைய. அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவீங்கள்ல?

ஹலோ... ஹலோ... என்ன, ஜஸ்ட் லைக் தட் பேசிட்டே போறீங்க? அஞ்சு நிமிஷமா? அஞ்சு நிமிஷத்துல நீங்க ஆப்பங்கூட சுட முடியாது. குறைஞ்சது மூணு மணி நேரத்திலருந்து பத்து மணி நேரம் வரைக்கும் ஆகும்.

இதோ நான் கால்ல வரைஞ்சுக்கிட்டிருக்கேனே! இதுக்கு மட்டும் பத்து மணி நேரம் ஆச்சு. இந்தா... கைல இருக்கே! இதுக்கு அஞ்சு மணி நேரம். அப்புறம் என்ன கேட்டீங்க. ஐநூறு ரூபாயா? குறைஞ்சது ஒரு 'ஸ்கொயர் இன்ச்'க்கு ஆயிரம் ரூபாய்.

நான் கால்ல போட்டிருக்கிற சைஸ்னா பத்தாயிரம் ரூபாய் ஆகும். நாங்க என்ன காட்டுல இருந்து முள்ளு பறிச்சிக்கிட்டா வந்து குத்தி விடுறோம். எல்லாமே அமெரிக்காவிலருந்து இறக்குமதி பண்ணியது. இங்க் எல்லாம் கூட ப்யூர் வெஜிடேரியன். அதாவது தாவரங்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்ட, சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அமெரிக்க அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

நமக்கு தலை சுற்றுகிறது...

"ஓவியங்களுக்குத் தகுந்த மாதிரி பச்சை குத்தும் கருவியில் பல்வேறு ஊசிகள் இனைக்கப்பட்டிருக்கும். இங்க்'கை தொட்டுத் தொட்டுதான் படம் வரைய முடியும். பெயிண்ட் ஸ்பிரேயர் மாதிரி பயன்படுத்த முடியாது. கோடுகளுக்குத் தகுந்த மாதிரியும், ஷேடுகளுக்குத் தகுந்த மாதிரியும் ஊசிகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கின்றன‌. மற்ற ஓவியங்களைப் போலவே இதிலும் எல்லாவிதமான வண்ணங்களையும் பயன்படுத்த முடியும்" என்று டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கிய லிடியா,

"மாசத்துக்கு ஒரு டிஸைன்னு பச்சை குத்திக்கிட்டீங்கன்னா, அப்புறம் உங்க உடம்புல எந்த இடமும் பாக்கி இருக்காது. ஏன்னா இது பர்மனென்ட் பச்சை.இதை அழிச்சிட்டு வேறு புதிதாக போட்டுக் கொள்வதற்கான ஆராய்ச்சியில் எங்க கோஷ்டி ஈடுபட்டிருக்கு. கூடிய விரைவில் சக்ஸஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்" என்கிறார் ஜாலியாகவும் சீரியஸாகவும்.

ம்ம்...நாமளும் பச்சை குத்திக்கலாம். ஆனா பர்ஸ்ல அவ்ளோ அமவுண்ட் இல்லீங்க.

Saturday, May 3, 2008

ஏ/சி பஸ்ஸும் நானும் -‍சின்னதாய் ஒரு பயணக் குறிப்பு.

பெரிய கட்டிடங்களையும் தாண்டி புழுதி பறக்க வீசிக்கொண்டிருந்த‌து கடற்காற்று. முகத்தை கைக்குட்டையால் மூடியபடி அலைந்து கொண்டிருந்தார்கள் மக்கள். சென்னை பூக்கடை பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம். 'குயின் எலிசபத்' சொகுசுக் கப்பல் மாதிரி சத்தமில்லாமல் வந்து நிற்கிறது 21-ஜி மாநகரப் பேருந்து. அதன் முகப்பில் இருக்கும் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் வழித்தடங்கள் ஒவ்வொன்றாக வந்து மறைகின்றன. கைக்குட்டையை எடுத்துவிட்டு 'ஆ' என்று வாய் பிளக்கிறார்கள் மக்கள். "என்னய்யா இது? கண்ணாடிக் கப்பல் மாதிரி வந்து நிக்குது! நம்ம ரூட்லயும் ஒண்ணு விட்டா காசு போனா போவுதுன்னு ஜாலியா ஏறிக்க‌லாம்" என்று ஆளாளுக்கு பேசிக்கொள்கிறார்கள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது வேடிக்கைப் பார்க்க. "பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சிப் பார்த்த மாதிரி"ன்னு வச்சிக்குங்களேன். மெல்ல ஒவ்வொருத்தராக பஸ்சுக்குள் நுழைகிறார்கள். ஏதோ மியூசியத்தைப் பார்ப்பது போல் அணுவணுவாய் ரசிக்கிறார்கள். தொட்டுப் பார்த்து சந்தோஷமடைகிறார்கள். பூக்கடை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்தே பிழைப்பு நடத்தும் தவழ்ந்து செல்லும் ஊணமுற்ற ஒருவர் கஷ்டப்பட்டு பஸ்சுக்குள் ஏறுகிறார்.

"ஒன்னும் டிஸ்டப் பண்றேன்னு நெனக்காதீங்க, துட்டு கேக்க வரல. சும்மா எப்டி கீதுன்ட்டு பாக்க வந்தேன்" ‍பயணிகளைப் பார்த்து கூறுகிறவர் "சோக்கா பண்ணிக்கிறான்யா...! பஸ்ச ஓட்டவே தேவல. இத்த மட்டும் ஏங்கிட்ட குடுத்தாங்கன்னு வச்சிக்கியேன்! சும்மா நின்ன எட்த்திலியே துட்டு பாத்துருவேன். ஒரு நிம்சம் சுத்திப் பாக்க ரெண்ருவா. பாட்டு கேட்டா அஞ்சி ருவா. ஒக்காந்து தூங்குனா... ஒன் அவர் முப்பது ருவா. செம்ம கலெக்சன் பாக்கலாம். இந்த ஐடியாலாம் அவுங்குளுக்கு எங்க வரப்போவுது!" என்று நொந்து கொள்கிறார்.

இவரின் களேபரங்களுக்கு நடுவில் "தள்ளுபா... தள்ளுபா..." என்று மக்களை விலக்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் வந்தமர்கிறார் ஒரு காக்கிச்சட்டை. "ம்... நல்லா சொகுசாத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கணும்..." என்று தனக்குள்ளாக முனுமுனுத்துக் கொள்கிறார். அந்தப் பேருந்தின் மத்தியில் உள்ளே காலியிடம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள், "இது என்னத்துக்குப்பா! குடும்பத்தோட உக்காந்து சோறு தின்றதுக்கா? கெகெக்கே..." என்று ஜோக்கடித்துச் சிரிக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் இருக்கைகள் நிரம்பி வழிய, பளிச்சென உடையணிந்து பக்கா ஷேவுடன் உள்ளே நுழைகிறார் கேப்டன் இளங்கோவன். அச்சு அசல் கப்பல் கேப்டன் போலவே தோற்றமளிக்கும் அவர்தான் 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த ஏ.சி. பஸ்சின் டிரைவர். அதுவரை அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாதா பஸ்சின் டிரைவர்.

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடற்கரைச் சாலையில் கால் பதிக்கிறது 21ஜி. சிம்ரன் ரேஞ்சிற்கு அது சீறிக்கொண்டு போகும் அழகைப் பார்த்து ஜொள்ளு விடாத‌வர்களோ, சைட் அடிக்காதவர்களோ யாரும் இல்லை எனலாம். செம்ம கிளாமராக அது சிக்னலில் நிற்கும் போது "விளைக்கைப் பார்ரா வெண்ணை" என்று வழிபவர்களை நோக்கிச் சொல்லாமல் சொல்லியபடி மீண்டும் விரைகிறது.

வழக்கமாக எங்கிருந்தாலும் பழங்கதைகளையே பேசிச் செல்லும் மக்கள், பயணிக்கும் பேருந்தப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். "இப்பதான் நான் பர்ஸ்ட் டைம் ட்ராவல் பண்றேன். ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கு. சென்னையைப் பொருத்த அளவில் பொல்யூஷன்தான் பெரிய பிராப்ளமே. இதனால் நூறு பேரில் பத்து பேருக்கு கேன்சர் வரும் வாய்ப்பிருப்பதா பத்திரிகையில் படிச்சேன். அது இல்லைன்னாலும் அட்லீஸ்ட் ஆஸ்துமாவாவது கண்டிப்பாக வந்துரும். எவ்வளவு சுத்தமாக வந்தாலும் திரும்பிப் போகும்போது ரொம்ப அழுக்காத்தான் போய்ச்சேர வேண்டியிருக்கு. அந்த வகையில் இது உடல்நலத்திற்கான பஸ்ன்னு கூட சொல்வேன்" என்கிற பத்மா சுந்தர் "குழந்தைகளை கூட்டிக்கிட்டு குடும்பத்தோட ட்ராவல் பண்றோம்னு வச்சிக்கங்களேன், தப்பித் தவறி பசங்களோ, பர்ஸோ மிஸ் ஆக சான்ஸே இல்லை. எல்லா விதத்திலயும் இது ரொம்ப சேஃப்டியான பஸ்" என்கிறார்.

"ஆபீஸ்ல, போறவர்ர இடங்கள்ல எல்லாம் ஏ.சி.யிலயே இருந்து பழகியாச்சா... இப்படி எங்கயாவது வெளியே போகும்போது புழுக்கம் தாங்க முடியலை. என்னதான் மீட்டரைப் போட‌ச்சொல்லி கவர்மெண்ட் பிரஷர் கொடுத்தாலும் ஆட்டோக்காரங்க கேக்கறதே இல்லை. சார்ஜை கேட்டா மயக்கமே வந்துடும். காசு ஒரு பெரிய விஷயமில்லைன்னாலும் நாம ஏமாத்த‌ப்படுகிறோம்ங்கிற உணர்வே டென்ஷனை உண்டாக்குது. இப்ப பிரச்சினையே இல்லை. நான், ஒரு காரை வாடைகைக்கு எடுப்பதைவிட காஸ்ட்லியாக ட்ராவல் பண்றேன். என்னதான் ஏ.சி. காரா இருந்தாலும் இந்தளவு சொகுசு வராதுங்கறது நிச்சயம். இதே ரேஞ்சிக்குப் போனா சென்னை ஒரு இண்டர்நேஷனல் சிட்டி ஆகறது வெகு தூரத்தில் இல்லை" என்கிறார் பாண்டியன் என்பவர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷங்கர் "பாஸ்! ஒரு விஷயம் கவணிச்சீங்களா? என்ன தான் பஸ்சு மதிப்பு 78 லட்சம்னாலும், புத்தம் புதுசுன்னாலும் கண்டக்டர் பேக் மட்டும் மாறவே இல்லை பாருங்க. அதே பழைய லெதர் பேக் தான்" என்று சொல்ல, கண்டக்டர் உட்பட எல்லோரும் கொல்லென்று சிரிக்கிறார்கள். மற்ற பஸ் கண்டக்டர்கள் மாதிரி பயணிகளிடம் எரிச்சல் காட்டாமல் ரொம்ப ஃபிரண்ட்லியாக பழகும் நடத்துநர் ராஜேந்திரன், "பின்ன என்ன சார்! இவ்ளோ வசதி பண்ணி குடுத்திருக்காங்கன்னா பயணிகள்கிட்ட அன்பா நடந்துக்க வேணாமா" என்கிறார்.

"சாதாரணமாவே நம்ம ஏரியால அனல் ஜாஸ்தி. இதுல வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு பஸ் ஏறினா நிக்க முடியாத அளவுக்கு கூட்டம். அப்போ பாத்து இடி மன்னர்கள், பிக் பாக்கெட் ரவுடிகள்னு மேலும் தொந்தரவு தாங்காது. ஆனா இந்த பஸ்ல அதெல்லாம் நோ சான்ஸ். ஏன்னா, எல்லாமே காமிராவுல பதிவாகிறதால‌ குற்றவாளிகளை அடையாளம் கண்டு நையப் புடைக்கலாம். அதிகமா காசு கொடுத்து ஆட்டோவிலோ, டாக்சியிலோ போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னைக் கேட்டீங்கன்னா இதுதான் ரியல் ஹீரோன்னு சொல்வேன்" என்கிறார் ராதா என்பவர்.

கெத்தாக பஸ் ஓட்டிச் செல்லும் ஹைடெக் டிரைவரான இளங்கோவன், ஒரு விமானி மாதிரி செயல்படுகிறார். அவர் எதிரில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள வயர்லஸ் அடங்கிய மைக் இருக்கிறது. பஸ்சைச் சுற்றி உள்ளேயும், வெளியேயும் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளிருந்தபடியே எல்.சி.டி மானிட்டரில் பஸ் எந்த நிலையில் பயணம் செய்கிறது என்பதையெல்லாம் இளங்கோவனால் கவனித்துச் செயல்பட முடிகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. "எப்டி சார் இருக்கு எங்க பஸ்சு? நல்லா இருக்கா? ஏ.சி.யைக் கொஞ்சம் கூட்டினேன்னு வச்சுக்கங்க, சும்மா ஊட்டிக்கே போய்டுவீங்க'' என்கிற இளங்கோவன், "இது மெட்ராஸ் இல்லை சார், மானிட்டரைப் பாருங்களேன்! சும்மா லண்டன் மாதிரி தெரியல?" -பெருமையுடன் கேட்டபடியே ஆக்ஸிலேட்டரை முடுக்குகிறார்.

Thursday, May 1, 2008

* தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற*


"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா ‍என்
பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா
கண்ஜாடை காட்டுற காலில் கோலம் போடுற
தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற''

கண்கள் முழுக்க காதலோடு கலாவைப் பார்த்து வேல்முருகன் பாடினால் மெட்டி ஒலி நெஞ்சைத் தழுவும்படி ஆடுகிறது கால்கள். வீட்டுக்குள் மூடுக்கேத்த மாதிரி தெம்மாங்குப் பாட்டு, திரையிசை பாட்டு, கர்னாடக இசை என மாறி மாறி ஒலிக்கிறது. தாளத்திற்குத் தகுந்தபடி ஆட்டம் மாறினாலும், மாறாத அன்போடு ஜொலிக்கிறது காதல்.

சென்னை குட்டி கிராமணித் தெருவில், அந்த ஒண்டுக் குடித்தனத்தில் உலை கொதிக்கும் ஓசைகூட ராகத்தை அடிப்படையாகக் கொண்டே ஒலிக்கிறது. மூடியிருக்கும் தட்டு கலாவைக் காப்பியடித்து 'தையத் தக்கா, தையத் தக்கா'வென ஆடிக்கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இந்த "இசைபட வாழ்தல்".


விஜயகாந்த் ஜெயித்த விருத்தாசலம் அருகே முதனை கிராமம் தான் வேல்முருகன் பிறந்தது. "காலைல பனம்பழம் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனா, மத்தியானம் மாங்கா அடிக்கிறது, வேப்பங்கொட்டைய வெரல்ல நசுக்கி ரத்தம் வரவக்கிறது, திரும்பி வரும்போது சோறு வாங்குற‌த் தட்டுல மோளம் அடிச்சிக்கிட்டே பாட்டுப் பாடுறதுனு கள்ளங் கபடமில்லாத கிராமத்து வாழ்க்கை அது.

வருஷா வருஷம் எங்கப்பா ஐய்யப்பன் கோயிலுக்கு மாலை போடுவாரு. எனக்கு அம்மா இல்ல. அவருகூடவே எந்த நேரமும் 'சாமியே! அய்யப்பா...'ன்னு பாடிக்கிட்டே திரிவேன். அப்ப நான் எட்டாவது படிச்சினு இருந்தேன். புஷ்பவனம் குப்புசாமி பாட்டு ஊரெல்லாம் பேமஸா இருந்தது. வகுப்புல வாத்தியாரு இல்லாத நேரமாப் பாத்து 'ராசாத்தி உன்ன என்னி ராப்பகலா கண் விழிச்சேன், ராப்பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கைப்புடிச்சேன்'னு ராகத்தோட பாடினேன்.

திடீர்னு வாத்யார் வந்துட்டாரு. 'யார்ரா அவம் பாட்டுப் பாடுனது? மரியாதையா எழுந்து நில்லு. இல்லனா தொலச்சிருவேன்'ன்னு மெரட்டி, 'வாடா எச்.எம்.கிட்ட'ன்னு இழுத்தும் போய்ட்டாரு. என்னை வெளியில நிக்க வச்சிட்டு எச்.எம்.மும் அவரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க. நான் நடுங்கிக்கிட்டே நிக்கிறேன். எச்.எம். என்ன‌க் கூப்ட்டு 'என்னாடா! ஆளில்லாத நேரம் பாத்து க்ளாஸ்ல பாட்டுப் பாடறியாமே... எங்க, பாடு பாப்போம்'னு கேட்டாரு. நான், 'ராசாத்தி உன்ன என்னி' பாடினேன். அடிக்கப் போறார்னு பாத்தா! எம் முதுகுல தட்டிக் குடுத்துட்டு, 'நம்ம ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கலெக்டர் வர்ராரு. அப்ப இதப் பாடி அசத்துற. உனக்குத் தான் பர்ஸ்ட் பிரைஸ்'னு சொல்லிட்டாரு. அதே மாதிரி கலெக்டர் முன்னாடி மேடைல பாடி பரிசு வாங்கினேன். அது தான் என்னோட முதல் அங்கீகாரம்'' என்று தன் ஆசிரியர் ராஜேந்திரனைப் பற்றி நெகிழ்ந்து கூறுகிறார் வேல்முருகன்.

"அதுக்கப்புறம் எங்கப் போனாலும் பாட்டுத்தான். விருத்தாசலத்துல சில நன்பர்கள் டீ வாங்கித் தருவாங்க, நாம் பாடுவேன். 'வேல் முருகா! உன் தெறமைக்கு எங்களால டீ தான்டா வாங்கித் தர முடியும். அதனால எப்பாடு பட்டாவது நீ மெட்ராஸ் போய் முறைப்படி சங்கீதம் கத்துக்கடா. நிச்சயம் பெரியாளா வருவே'ன்னு ஊக்கப்படுத்துவாங்க. அதன் பிறகு அடையாறு அரசு இசைக் கல்லூரில சேர்ந்து வாய்ப்பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆஸ்டல்தான் நான் தங்கிப் படிச்சது. காலேஜ்ல இருந்து ஹாஸ்டலுக்கு நடந்தே போவேன். ஏன்னா, பஸ் காசு மிச்சம். அதோட ஹாஸ்டல்ல சாதகம், பிராக்டீஸ்னு பண்ண முடியாது. சினிமாப் பாட்டுன்னா பசங்க கேப்பாங்க. அங்க போய் ச..ரி..க..ம..னு சொன்னா அவ்ளோ தான். அதனால இப்டி வழியில நடக்கும் போதே பிராக்டீஸ் பண்ணிக்குவேன். இப்படி நடக்குறதுல இன்னொரு அட்வான்டேஜும் இருக்கு. வழி நெடுக ஒரு போஸ்டர் விடாம படிச்சிக்கிட்டே வருவேன். எங்கயாவது இசை நிகழ்ச்சி நடந்தா, போய் ஆஜராகிடுவேன்.

அப்படித்தான் ஒரு நாள் காமராஜர் அரங்குல ஜானகி அம்மாவோட கச்சேரி. கொறஞ்சது 50 ரூபா டிக்கெட். எங்கிட்ட நையா பைசா இல்ல. எப்படியாவது உள்ள போய்டனும்னு தவிக்கிறேன். அப்பத்தான் கடவுள் மாதிரி அந்த போட்டோகிராபர் உதவி பண்ணாரு. அவர் பேர் சந்ரு. 'அய்யா! அய்யா! இந்த மாதிரி நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிறேன். ஜானகி அம்மாவ நேர்ல பாக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. நீங்க தான் உதவனும்'னு அவர்கிட்ட கெஞ்சினேன். என்ன உத்துப் பாத்துட்டு, அவரோட கேமிரா பேகை தூக்கி என் தோள்ல மாட்டி, உள்ள கூட்டிட்டுப் போய்டாரு. நிகழ்ச்சி முடிஞ்சு ஜானகியம்மா வர்றப்போ தொபீர்னு போய் கால்ல விழுந்துட்டேன். இதே போல எஸ்.பி.பி, இளையராஜா, எம்.எஸ்.வி'னு எல்லாரையும் நேர்ல பாத்துட்டேன்.


பர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள் சன் டி.வி. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சில கலந்துக்க வாய்ப்புக் கெடச்சிது. அந்தப் போட்டியில சிறந்த குரல் வளம் மற்றும் முதல் பரிசு, ஒரு பவுன் தங்கக் காசு ஜெயிச்சேன். 'எவ்ளோ பெரிய சாதனை பண்ணிட்டோம்'னு மனசு பூரா சந்தோஷம். இந்த வெற்றிதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போச்சு'' என்ற வேல்முருகனை இடை மறித்து உங்கள் காதல் எப்ப ஆரம்பிச்சது? என்றோம்.

"ஒரு சமயம் கார்கில் போர் வீரர்கள் பத்தி கவிதை எழுதி, அதை நம்ம அப்துல் கலாம் சாருக்கு அனுப்பி வச்சேன். 'ரொம்ப நல்லா இருந்தது'ன்னு அவர் பதில் கடிதம் போட்டார். அந்தக் கவிதைகளை காலேஜ் ப்ரேயர்ல பிரின்சிபல் வாசிச்சுக் காட்டினாங்க. எங்க காலேஜ்லயே பரதநாட்டியம் பதிச்சிட்டிருந்த கலா, அப்போ என்னை சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சாங்க. அது தான் நாங்க முதன் முதலா அறிமுகம் ஆனது. எதிர் பாராத விதமா ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியா வந்துட்டிருந்தோம். அப்போதான் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்கள?'ன்னு கலாவிடம் கேட்டேன்'' என்பவரை கையமர்த்திவிட்டு

"இப்படி திடீர்னு கேட்டது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலையா?" என கலாவிடம் கேட்டால், "இல்லை. ஏன்னா, அவர் எங்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்லாம 'பிடிச்சிருந்தா வீட்ல கேட்டுட்டு பதில் சொல்லு'ன்னார். அதோட இவரைப் பத்தி காலேஜ் முழுக்க நல்ல அபிப்ராயம் இருந்ததும் தெரியும். அதனால, 'யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்'' என்கிறார்.

"அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சி. ஊருக்குப் போறதுக்காக காலேஜ் பஸ் ஸ்டாப்ல கலா நின்னுட்டிருந்தாங்க. வேலூர் பக்கத்துல வாலாஜாப்பேட்டைதான் கலாவோட சொந்த ஊர். சரி வாஙக, நான் வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு, புரசைவாக்கத்துல இருக்கிற சிவன் கோவிலுக்குப் கூட்டிட்டுப் போனேன். அங்க வச்சி தான் என்னைப் பத்தின எல்லாத் தகவல்களையும் கலாவிடம் சொன்னேன். நான், என்னோட வீடு, எனக்கு இப்ப அப்பா, அம்மா யாருமே இல்லை என்பது, மாங்கா திருடி அடி வாங்கினதுன்னு ஆரம்பிச்சி கடைசியா நான் ஒரு 'தலித்' என்பதையும் சொன்னேன்" என்கிற வேல்முருகனிடம்,

"நீங்க ஒரு தலித். அதுவும் ஏழைன்னு வேற சொல்றீங்க. இவங்களோ பணக்கார குடும்பம். ஜாதியிலயும் சௌராஷ்டிரா. கண்டிப்பா ஜாதி பிரச்சினை வரும். அப்படி இருக்கிறப்போ எந்த தைரியத்துல நீங்க காதலைத் தெரிவிச்சீங்க?"

"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆரம்பத்துல எனக்கு பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப தாழ்வு மனப்பாண்மை இருந்தது. நாம கருப்பா, உயரம் இல்லாம, அழகில்லாம இருக்கோம்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கச்சேரிகள்னு பண்ண ஆரம்பிச்சேன். எம்மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துட்டது. கண்டிப்பா நாம பெரிய ஆளா வருவோம். இவளை ரொம்ப சந்தோஷமா வச்சுக்குவோம்ன்ற தெம்பு வந்தது. அதோட கலா என்ன ஜாதி, எவ்ளோ வசதிங்கறது பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்" என்கிறார் வேல்முருகன்.

விட்டதைத் தொடர்கிற கலா, "ஊர் போய் சேர்ந்ததும் இவர் சொன்ன மாதிரியே வேல்முருகனைப் பத்தி எடுத்துச் சொல்லி வீட்ல பர்மிஷன் கேட்டேன். 'உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா படிக்க அனுப்பிச்சா, லவ் பண்றதைப் பத்தி எங்ககிட்டயே சொல்லுவ. நீ படிக்கவே வேணாம்'னு சொல்லி ஹவுஸ் அரஸ்ட் வச்சிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு இவருக்கு தவல் அனுப்பிச்சேன். அதுக்குப் பிறகு..." கலாவை இடைமறித்துவிட்டு வேல்முருகன் சொல்கிறார்...

"கலா வீட்டுக்குப் போன் பண்ணி நானே அவங்க அப்பா, அம்மாகிட்ட பேசினேன். இதப் பாருங்க. நீங்க நெனைக்கிற மாதிரி நாங்க மோசமான ஆளா இருந்தா, இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எங்கயாவது ஓடிப் போயிருப்போம். இப்ப எக்ஸாம் ஆரம்பிக்கப் போறாங்க. நீங்க உங்க பொண்ண காலேஜ் அனுப்பலைன்னா பாதிக்கப்படப்போறது நீங்கதான். கலாவோட மூனு வருஷப் படிப்பு வீணாப் போயிரும். ஏன் எக்ஸாம் எழுதப் போகலைன்னு அக்கம் பக்கத்துல சந்தேகமா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால எங்க மேல நம்பிக்கை இருந்தா தயவு செஞ்சு காலேஜ் அனுப்புங்கன்னு கேட்டேன். அவங்களும் அனுப்பிச்சுட்டாங்க. கலா இங்க வந்த பிறகு, 'கண்டிப்பா எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க எனக்கு வேற மாப்பிள்ளை தேடுறாங்க. அதன்னால நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்'னு கேட்டாங்க. ரொம்ப யோசனைக்குப் பிறகு பரிட்சைக்கு பத்து நாள் முன்னாடி பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்".

"அது சரி. எந்தப் பெற்றோர்தான் எடுத்த உடனே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க. இத்தனை வருஷமா பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மறந்து இப்படி செய்தது நியாயமா?" கலாவிடம் கேட்டால்,

"அவங்க ஜாதியை மட்டும்தான் பெரிய குற்றமா பாத்தாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. வேல்முருகன் மீது வேறு எந்தக் குற்றமும் சொல்ல முடியல. மிஞ்சிப் போனா அவங்க என்ன பண்ணியிருப்பாங்க. அவசர அவசரமா ஒரு பையனைப் பாத்து கல்யாணம் முடிச்சிருப்பாங்க. அவன் நல்லவனா இருப்பாங்கறது என்ன நிச்சயம்? என்னோட பரதநாட்டியத்தை தொடர வாய்ப்பு கிடைச்சிருக்குமா? இல்ல... மேற்கொண்டு மாஸ்டர் டிகிரி தான் படிச்சிருக்க முடியுமா? இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எத்தனை கோடி செலவழிச்சிருந்தாலும் இது எனக்கு கிடைச்சிருக்காது. இப்பவும் எங்க குடும்பத்து மேல பாசம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக வேல்முருகனையா விட்டுக் கொடுக்க முடியும்?'' என்று நெத்தியடியாகக் கேட்கிறார்.

இன்றுவரை இவர்களை கலாவின் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவுத் திருமணத்திற்கு பிறகு தாலி கட்டாமல் ஒரு வருடம் குடும்பம் நடத்திய இந்த ஜோடி, கடந்த ஆண்டு மே 13ம் தேதி விருத்தாசலத்தில் வைத்து விமரிசையாக கல்யாணம் செய்து கோண்டது. வரவேற்பில் "மனமகன் பாடினார், மனமகள் ஆடினார்'. என்ற தலைப்பிட்டு நாளிதழ்கள் இந்த ஜோடியை அமர்க்களப்படுத்தின. பிறகு நிறைய பத்திரிகைகள் இவர்களை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளாமல் செய்தி வெளியிட்டிருக்கின்றன. குங்குமம் ரெண்டு பக்கம், ராணி ஒரு பக்கம் என்று அவர்களாகவே பேட்டி என்று எழுதிக்கொண்டார்களாம்.

தற்போது டி.வி. நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவற்றில் கிராமியப் பாடல்கள், கர்னாடக இசைப்பாடல்கள் என்று வேல்முருகன் பொளந்துகட்ட, பரதநாட்டியத்தால் அரங்கத்தைக் கட்டிப் போடுகிறார் கலா. தூர்தர்ஷன் வேல்முருகனது பாடலை பதிவு செய்தபின் அவரது கிராமத்திற்கே போய் அவரது யதார்த்தமான வாழ்வியல் பின்னனியோடு ஒளிபரப்பிய‌து குறிப்பிடத்தக்கது. தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம் என்று சகல ஆட்டங்களும் கலாவுக்கு அத்துப்படி. இன்று வேல்முருக்கனுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. கலாவுக்கு இருவரும் இருந்தும் யாருமில்லை. ஆனால் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்புக்கு 98408 31341.