Tuesday, August 28, 2007

''சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை'' -பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றி சில கேள்விகள்.

டீன்-ஏஜ் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணும் பொருட்டு பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர அரசு முன்
வந்துள்ளது. இப்படி குழந்தைகளிடம் பாலியல் விஷயங்களை விளக்கிக் கூறுவதன் மூலம் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதென்றும் எனவே இதை அனுமதிக்கக் கூடாதென்றும் சில தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.


குறிப்பாக பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெற்றோர்களைப் பொருத்த அளவில் இது நல்லதா, கெட்டதா என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இந்நிலையில் 'பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், வளர் இளம்
பருவத்தினருக்கான சிறப்புக் கல்வியாளருமான டாக்டர் யமுனா'விடம்
இப்பிரச்சினை குறித்துப் பேசியதிலிருந்து...

பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கற்றுத் தரப்படும் என அரசு
அறிவித்துள்ளதே. சின்னக் குழந்தைகளிடம் பெரிய மனுஷ சமாச்சாரங்களை
விளக்குவதால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதா?


பாலியல் கல்வி என்று யார் சொன்னது? நீங்களாக பெயர் வைத்துக் கொண்டது உங்கள் அறியாமையையும், பெரிய மனிதர்களாகிய உங்கள் மனம் பாலியல் விஷயங்களால் நிரம்பிக் கிடப்பதையுமே கட்டுகிறது. இதை வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கைக் கல்வி என்று சொல்வது தான் சரி. ஆங்கிலத்தில் ''adoloscent education'' என்று சொல்வார்கள்.


இதை ஒரு பூமிப் பந்து என்று கொள்வோமானால், அதில் செக்ஸ் கல்வி என்பது ஒரு ஒரு குட்டித் தீவு மாதிரி. யாரெல்லாம் இந்தக் கல்வி முறையை எதிர்க்கிறார்களோ அவர்களின் மனம் ஆபாசங்களால் நிரம்பிக் கிடக்கிறது என்று அர்த்தம். அவர்கள் வெறும் ஆண், பெண் உறுப்புக்களை மட்டுமே பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன மாதிரியான விஷயங்கள் சொல்லித்தரப்படும்?

ஒரு ஆண், பெண்ணுக்கு இடையிலான அத்தனை விஷயங்களும் சொல்லித்தரப்படும்.


நீங்கள் யார்? உங்கள் உறவினர்கள், நன்பர்கள் யார்?


யாரிடம் எப்படிப் பேச வேண்டும்.


இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


சமுதாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


உங்களை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கிறது?


எனப் பல விஷயங்கள் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு
அளிக்கப்படும்.

ஒரு பையனோ, பெண்ணோ தன் உடலில் நிகழும் திடீர்
மாற்றங்களால் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ இதைச் சொல்ல பயம். எனவே தன் கூடப் படிக்கிற நன்பர்களிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், ஆலோசனைக் கேட்கிறார்கள். அதாவது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவறென்றும், பாவமென்றும் கூறி வருகிற ஒரு சமுதாயத்தில் "ஒரு அறைகுறையானது இன்னொரு அறைகுறையிடம் போய் ஆலோசனைக் கேட்கிறது''.


இது எங்கே போய் முடியும் என்று நீங்களே சொல்லுங்கள். எனவே உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிய வைப்பதோடல்லாமல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக, புத்தகப் புழுவாக நிற்காமல் தெளிவான அறிவாற்றல் கொண்ட ஒரு மனிதனை உருவாக்குவதே இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம். முதலில் தன்னை அறிதல் பற்றி சொல்லித் தரப்படும்.

பாடப் புத்தகங்களைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் முதல் மார்க், முதல் ரேங்க் என்று செயல்படுகிற மாணவர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

வாழ்க்கையை விடவா மார்க் முக்கியம்? சமுதாயத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் வளர்பவர்கள் பெற்றோர்களைப் பிரிந்து சுயமாக வாழ
ஆரம்பிக்கும் போது அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இதில் பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி. அதிகாலை நான்கு மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு வரை 'மார்க், மார்க்' என்று ஒரு மதிப்பெண் அச்சிடும் இயந்திரமாகத் தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்களே ஒழிய, நல்ல மனிதனாக இல்லை என்பதை உணர வேண்டும்.

மாணவப் பருவத்தில் இருந்த போது தன் பெற்றோரால் சரியாக அன்பு செலுத்தப்படாத ஒருவர், இப்போது தன் பெற்றோர்களை சரிவர கவணிப்பதில்லை. அவரிடம் பேசிய போது ''they do not not love me. they love only my marks and they wantmoney'' என்று பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.


பெற்றோர்களின் தேவைக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார். ஆனால் அவரால் அன்பைக் கொடுக்க முடியாது. ஏனென்றால், அன்பாய் இருப்பது பற்றி அவருக்கு சொல்லித் தரப்படவில்லை.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்துடன்
செட்டிலாகிவிட்ட 24 வயது இளைஞர் அவர். ''ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. ஒரே டென்ஷன், படபடப்புன்னு நிம்மதியே இல்லாம இருக்குது. எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க "டைம் வேஸ்ட் பண்ணாத, டைம் வேஸ்ட் பண்ணாத''ன்னு. அவங்களோட இருந்தப்ப படிப்பு, டியூஷன்'ன்னு எல்லாமே கரெக்டா இருக்கும். ஆனா இங்க வேலை முடிஞ்சு ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. டோட்டலா டைம் வேஸ்ட் பண்றேன்'' என்று வருத்தப்படுகிறார். வாங்கிய சம்பளத்தை வைத்துக் கொண்டு கிடைக்கிற ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட இவரால் முடியவில்லை.


ஏனென்றால் இவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பது என்றால் என்னவென்றே தெரியவில்லை. படிப்பு, ஹோம் ஒர்க், மார்க் என்று மெஷின் போல்
இயங்கியவருக்கு ஓய்வு என்பது சுமையாய் இருக்கிறது. எந்தத் தவறும்
செய்யாமலேயே டென்ஷன், படபடப்பு. அப்படியானால் இந்த ஏட்டுக் கல்வி
எதற்குத்தான் உதவியிருக்கிறது. புரிகிறதா?

அதிக மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்களையும், தேர்வுகளில் முதலிடம் பிடிக்கிற மாணவர்களையும் கல்வி நிறுவணங்களும், பத்திரிகை ஊடகங்களும், அரசும், சமுதாயமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறதே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓவராக தூக்கி வைத்துக் கொஞ்சுவது கொஞ்சமும் சரியல்ல. பாராட்டலாம். ஆனால் இன்று உள்ளது போல் மீடியாக்களும், சமுதாயமும் தலைப்புச் செய்தி போடுகிற அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. டென்த்தோ, +2வோ ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்திருக்கிற குறிப்பிட்ட பள்ளியில் எல்லா மாணவர்களுமே பாஸாகியிருப்பார்கள். முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மீதியுள்ள மாணவர்களுக்குமான மார்க் வித்தியாசம் ஒன்றோ, இரண்டோ தான் இருக்கும். மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை தரம் பிரிப்பது அவர்களிடையே தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும். இதற்கு பதில் அவர்களை தர வரிசைப்படுத்தலாம்.

+2 தேர்வு முடிவுக்கு முன்பே குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோமோ என்கிற பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆண்டு தோறும் தோல்வி மற்றும் தோல்வி பயம் காரணமாக விலை மதிப்பற்ற மாணவ மாணவியரின் உயிர்கள் பலி வாங்கப்படுகிறது. குறைந்த மார்க் வாங்குவது என்பது அவ்வளவு கொடிய குற்றமா? உயிர் தான் அதற்கு விலையா?


தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், கொடூரக் கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கூட இங்கே உயிர் வாழ வாய்ப்பளிக்கப்படுகிறது. அனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய் என்று அவமானப்படுத்தி அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறோமே! அந்தக் குற்றத்திற்காக நமக்கு யார் தண்டனை தருவது? இறந்து போகிற ஒவ்வொரு மாணவரோடும் சேர்த்து வெறும் கல்வி அல்லாத பிற துறை வல்லுணர்களையும் குழி தோண்டிப் புதைத்த குற்றமும் நம்மைச் சேரும்.

வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் அந்த நபருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று அளவான குடும்பம். பையன் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான். மகளோ நாலாவது ஐந்தாவது இடம் வாங்கிக் கொண்டிருந்தாள். எதிர் பாராமல் நோய் காரணமாக அந்தப் பையன் இறந்து போய்விட்டான்.


வீட்டு வாசலில் பிணம்கிடத்தப்பட்டு எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். துக்கம் தொண்டையை அடைக்கிற அந்த நேரத்திலும் அப்பாவானவர் தன் மகளின் கையைப் பிடித்து நேராக சாமி படத்தின் முன் இழுத்துச் சென்றிருக்கிறார். "கடவுளே! கூப்பிட்டது தான் கூப்பிட்ட, எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவானே! அவன் தானா உனக்கு
வேணும்? நல்லா படிக்கிற அவன விட்டுட்டு, சுமாரா படிக்கிற இவள
கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா''
என்று அழுதிருக்கிறார்.

அந்தப் பிஞ்சு மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் பாருங்கள். அதே போல் அவள் யாருமில்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்று அதிர்ஷ்ட்ட வசமாக காப்பாற்றப்பட்டிருக்கிறாள். இப்படி யார்-எவர், என்ன-எதற்கு என்ற
வித்தியாசம் எதுவுமில்லாமல் குடும்பங்களில் இருந்தே தான் குழந்தைகளின்
மீதான வன்முறை தொடங்குகிறது.

குழந்தைகளின் மீதான இப்படிப்பட்ட வன்முறையை தடுப்பது எப்படி?

பெற்றோர்கள் குழந்தைகளாக இருந்த போது இந்த வாழ்க்கைக் கல்வி
மறுக்கப்பட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். 'மாரல்
சைன்ஸ்' என்று ஒரு வகுப்பு இருந்தது. அதைக்கூட மற்ற ஆசிரியர்கள்
பறித்துக் கொண்டார்கள். மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப்
பழக வேண்டும். ஒரு ஆள் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று எப்படித்
தீர்மானிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டும்.


பேசும் போது கண்களை நேருக்கு நேர் பார்த்துத் தான் பேச வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முகத்தைப் பார்த்து அல்ல கண்களைப் பார்த்தால் தான் தெரியும். பேசிக் கொண்டிருக்கும்
போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் கண்கள் காட்டிக்
கொடுத்துவிடும். கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசாமல் பார்வை வேறு
எங்கெங்கோ தாவுகிறது என்றால் குறிப்பிட்ட அந்நபரின் எண்ணங்கள்
வேறெங்கெல்லாமோ போகிறது என்று அர்த்தம்.

அதே போல் "குட்-டச், பேட்-டச்'' என்பதை குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கல்யாணம், காதுகுத்தல் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் பண்டிகைகள், விழாக்களின் போதும் ஒன்று கூடும் உறவினர்கள் நன்பர்கள் ஆகியோர் தான் இந்த பேட்-டச் என்கிற ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது மாமா, சித்தப்பா, அண்ணன், பெரியப்பா என்று யாராக வேண்டுமாலும் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் செல்லமாய் அடிப்பது, தட்டுவது, கிள்ளுவது என்று முதலில் ஒத்திகைப் பார்ப்பார்கள். தங்களால் எந்த ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் ஏற்படுத்திய பின் தங்கள் சுய ரூபத்தைக் காண்பிப்பார்கள். இது சரியா, தவறா என்கிற குழப்பத்திற்கு உள்ளாகிற குழந்தைகள் எதிர்ப்பு காட்ட
திராணியற்றவர்களாகின்றனர்.
மீறி பெற்றோர்களிடம் கூறினால் 'அடச்சீ! சும்மா கிட' என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

குழந்தைகள் எதைச் சொல்ல வந்தாலும் அதைப் பொறுமையுடன் காது கொடுத்து கேட்பதே நல்லது.எல்லாம் எனக்குத் தெரியும். நீ வாயை மூடு என்று சொல்வது மிகவும் ஆபத்தானது. இதனால் எதையும் வெளியில் சொல்ல முடியாமல் மவுனமாய் கொடுமைக்குள்ளாகிறவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.

பாலியல் சம்பந்தமான விஷயங்களை வகுப்பெடுக்கும் போது மாணவர்கள் எதிர்மறை தூண்டலுக்கு உள்ளாக மாட்டர்களா?

அது ஆசிரியர்களின் பயிற்று முறையைப் பொறுத்தது.எப்படி பாடம் நடத்த
வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே அசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தாகி
விட்டது. ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு வரை உலகத் தாய்ப்பால் வாரம்
கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக எல்லா பள்ளிகளிலும் தாய்ப்பாலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறுகிறோம். இதைக் கேட்கிற மாணவிகள் ''ஆஹா... தாய்ப்பால் ரொம்ப இன்றியமையாதது. நானும் தாய்ப்பால் தரணும். அதனால் குழந்தைப் பெத்துக்கப் போறேன்'' என்று சொல்வார்களா என்ன?


எல்.கே.ஜி படிக்கும் போதே கண், காது, மூக்கு போன்று பிறப்புறுப்புக்களையும் குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை மூடி மறைத்து அது என்னவோ மர்மமான, ரகசியமான, அறுவெறுக்கத்தக்க ஒன்றாக கற்பனை செய்யவிட்டிருக்கிறோம். ஏன் பத்திரிகையில் கூட அவற்றை மர்ம ஸ்தானம், அந்தரங்க உறுப்பு என்று தானே எழுதுகிறீர்கள்!

இதன் மூலமாக தன் உடலைக் குறித்தே ஒரு குழந்தை மர்மம், அந்தரங்கம் என்று பயந்தால் நிலமை என்னாவது? இந்தியாவில் மொத்தம் 57 லட்சம் எச். ஐ.வி. பாசிடிவ் இருக்கிறார்கள். இதில் 15லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் 34% பேர். 15லிருந்து 24என்பது முழுமையான கல்விப் பருவம். இவர்களெல்லாம் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் விபச்சார விடுதிகளுக்குச் சென்றவர்கள். 20 வயது மாணவன் ஒருவன் எனக்கு இ-மெயில் அனுப்பியிருந்தான்.என்னால் எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் விபச்சாரியிடம் செல்லப் போகிறேன் என்று கூறியிருந்தான்.


நல்ல வேளை! போவதற்கு முன் எனக்கு தெரிவித்திருந்தான். இதனால் முதலில் அவனுக்கு வரப் போகிற எய்ட்ஸ். அதனால் வாழ் நாள் முழுவதும் சமுதாயத்தால் அவன் ஒதுக்கப்படுகிற அவலம். அவன் மட்டும் அல்லாமல் அவனது குடும்பம், உறவினர்கள் என்று யாரெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். குறிப்பாக அவனுக்கொரு அக்காவோ, தங்கையோ இருந்தால் அவர்களின் திருமணம்,எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மற்றவர்களின் கேலிப்பேசுக்கு எப்படியெல்லாம் ஆளாவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எடுத்து கூறியிருந்தேன்.

பின்பு மன்னிப்புக் கேட்டு திருந்தி விட்டதாக பதில் அனுப்பியிருந்தான். இரண்டு வருடத்தில் இ-மெயிலிலேயே சுமார் 4,000 சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன். ஆரம்பத்தில் செக்ஸ், சுய இன்பம் என்று கேள்வி கேட்டவர்கள் படிப்படியாக எக்ஸாம், இண்டர்வியூ என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மாறியதை நேரடியாக உணர்ந்தேன்.

தொடர்ந்து சுய இன்பம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் டீன்-ஏஜ்
பருவத்தினரிடமிருந்து கேட்க்கப்பட்டவண்ணமே இருக்கின்றனவே?


சுய இன்பம் என்பது இன்று டீன்-ஏஜ் பருவத்தினரிடையே பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு இன்னும் வலு சேர்ப்பதற்காக காலை எட்டு மணிக்கே டி.வி. சேனல்களில் சில ஆசாமிகள் ஆஜராகி சுய இன்பப் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். 'சொப்பனாஸ்கலிதம், ஆண்மைக் குறைவு, உடல் மெலிந்து... இன்னும் கன்றாவியாய் என்னவெல்லாமோ சொல்லி சகட்டு மேனிக்கு இளைஞர்களை பயமுறுத்தி காசு பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது.


''சுய இன்பம் என்பது ஒரு சாதாரண விஷயம். விபச்சார விடுதிகளைத் தேடிப்போவதை விட, அல்லது அவசரப்பட்டு யாரிடமாவது செக்ஸ்
வைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதை விட இது எவ்வளவோ மேல்.

சொல்லப்போனால் இது முற்றிலும் ஆபத்தற்ற ஒரு இயற்கையான வடிகால்'' என்று.

சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. சுய இன்பம் பற்றி உலகம் முழுக்க எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன. இதனால் ஆண்மை பாதிக்கப்படும் என்றோ, வேறு உடல் நலத் தீங்குகள் ஏற்படும் என்றோ அறிவியல் பூர்வமாக கண்டறியப்படவில்லை. அது தான் உண்மை.

போலி மருத்துவர்களால் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவிழ்த்துவிடப்பட்ட தகவல்களால் ஏற்பட்ட பயமும், குற்ற உணர்ச்சியுமே மீண்டும் மீண்டும் கேள்விகள் வழியாக உயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது. சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அதனால் நாம் மட்டும் தான் இந்தத் தவறை செய்து விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சிகளுக்கு இளைஞர்கள் ஆளாக வேண்டாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். கணவன் மனைவி உறவு என்றால் என்ன? என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். அது இரண்டு பேருக்கு இடையிலான உடலுறவு என்பது மாதிரியே பதில் சொல்வார்கள். அதுவா உண்மை?


ஒரு கணவன் மனைவிக்கு இடையில் எத்தனையோ
விஷயங்கள் அடங்கியிருக்கும் போது வெறும் உடல் இச்சை சார்ந்த விஷயமாக அதை புரிந்து வைத்திருப்பது குறுகிய மனப்பாண்மையைத் தானே காட்டுகிறது. திருமணங்கள் உடைவதற்கும், நிம்மதியில்லாமல் தொடர்வதற்கும் என்ன காரணம்? பரஸ்பரம் அன்பு, விட்டுக் கொடுத்தல் மற்றும் சரியான புரிதல் இல்லாதது தான்.

வீட்டுப் பாடம் செய்யலைன்னா ஸ்கூல்ல டீச்சர்ஸ் அடிக்கிறாங்க. வீட்ல
இருக்கும் போது சொன்ன பேச்சைக் கேட்கலைன்னா மனைவியைப் புருஷன் அடிக்கிறான்.


ஆக மனைவி மீதான இந்த வண்முறை என்பது படிக்கிற காலத்தில்
பள்ளிக் கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டது. முடிவு?
கல்விக்கூடங்களின் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் கல்யாணத்தை உடைப்பதில் வந்து நிற்கிறது. 'களவும் கற்று மற' என்கிறார்கள். எப்படி திருடினான் என்று தெரிந்தால் தானே திருடனைக் கண்டு பிடிக்க முடியும். தன் உடல், மனம் பற்றி தெரிந்திருந்தால் தான் அது குறித்த பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும். செக்ஸ் என்பதும் அப்படித்தான். அது பற்றிய உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதைச் சார்ந்த ஆபத்துகளிலிருந்தும் விடுபட முடியும். அது தான் நீங்கள் பாலியல் கல்வி என்று கூறுகிற இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம்.

மரக்காணம் பாலா.

Friday, August 17, 2007

எந்த ஆணும் முழு ஆண் அல்ல! எந்தப் பெண்ணும் முழு பெண் அல்ல!


"சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நடந்து போவதை

தெரிந்தும் உணர்ந்தும் கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி

யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்"

-லிவிங் ஸ்மைல் வித்யா.


லிவிங் ஸ்மைல் வித்யா 'அரவாணிகள்' என்றழைக்கப்படும் 'திருநங்கைகளின்' உரிமைகளுக்காக போராடி வருபவர். சமூக சார்ந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர், மு.ராமசாமியின் நாடகப் பட்டறையில் கற்றுத் தேர்ந்தவர். இனைய தளத்தில் எழுதுபவர்களுக்கான "வலைப் பதிவர் பட்டறை"யில் பங்கேற்க சென்னை வந்திருந்த வித்யா "அரவாணிகள் என்றழைக்கபடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்'' என்கிறார்.

''ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்களில் ஒன்று கூடுகிற மக்கள் "அரவான் பலி'' என்கிற சடங்கின் மூலம் அரவாணைப் பலியிட்டு அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அரவாணிகள் என்ன அரவாணின் மனைவியா? இப்படி புராணக் கற்பனைகளில் தொடங்கி, நிஜ வாழ்க்கை வரையிலும் அரவாணிகள் இந்த சமூகத்தால் பலிகடாக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருமாகக் கூடி கொலை செய்வதையே ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கிற அதே மனப்பண்மை பொது இடங்களில் அரவாணிகளை இழிவு படுத்திப் பார்ப்பதிலும் தொடர்கிறது.

எப்பொழுது ஒரு அரவாணியைப் பார்க்க நேர்ந்தாலும் திடீரென உங்களுக்குள் சந்தோஷம் பெருக்கெடுத்து அது சாக்கடையாய் நிரம்பி வழிகிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல் சிரிக்கிறீர்கள், கூப்பிடுகிறீர்கள். அஜக் என்கிறீர்கள், அக்கா என்கிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் கோமாளி வேடமிட்டுத் திரியவில்லை. அதுதான் நிஜம், அது தான் இயல்பு.

"திருநங்கைகள்" என்று அவர்களை மரியாதையாக அழைக்கலாமே'' என்று கேட்கிறவருடன் மெரினா கடற்கரையில் கால் பதித்தபடியே நிகழ்ந்த இந்த உரையாடல் முழுக்க வலி நிரம்பியதாகவே இருந்தது.

வித்யாவை அழகாக புகைப்படமெடுக்க வேண்டும் என்கிற எனது எதிர் பார்ப்பில் அவருக்கு பெரிதாக உடன்பாடு இல்லாததை உணர்ந்தேன். ''போட்டோவாங்க இப்ப முக்கியம்? என்ன எழுதப் போறீங்க'ங்கறது தான் முக்கியமே. இப்படித் தான் ஏற்கனவே 'அவர் கூந்தல் காற்றில் படபடத்தது, அப்படி இப்படி'ன்னு என்னை வர்ணிச்சு எழுதினாங்க. நீங்க அப்படி எழுதாதீங்க'' என்கிறார்.

பதிவர் பட்டறைத் தலைவர் பாலபாரதி மற்றும் நன்பரும், ஆங்கில மேதையுமான நடைவண்டி மூலமாகத்தான் நான் வித்யாவைத் தொடர்பு கொண்டது. என் மீது எப்படியான நம்பிக்கையுடன் வித்யா தன் வலிகளைப் பகிர்ந்து கொண்டாரோ! உரையாடல் தொடர்கிறது.

"ஒரு திருநங்கையாய் வாழ்வதில் உள்ள வலி அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆணோ, பெண்ணோ! எந்த ஒரு நபரும் மரியாதைக்குறியவர் அல்ல என்பதையே எங்களின் அனுபவம் உணர்த்துகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் பிணாமிகளாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆணும் முழு ஆண் அல்ல, எந்த ஒரு பெண்ணும் முழு பெண் அல்ல என்பதே அறிவியல் பூர்வமான உண்மையாய் இருக்கிற போது அதையே காரணம் காட்டி திருநங்கைகள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமனமோ, மனித உரிமைகளோ மருந்திற்குக் கூட இல்லாத ஒரு தேசமாகவே இருக்கிறது இந்தியா. ஆணோ, பெண்ணோ நாலு பேர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்படுவது என்பது எவ்வளவு அவமானமான ஒரு விஷயம்? ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நிர்வாணப்பட வேண்டியிருந்தது.

நாண்கு மருத்துவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி என் உடலைக் கிளரி சோதனை செய்தார்கள். நானும் ஒரு மனிதப் பிறவி தானே! உங்கள் எல்லோருக்கும் உள்ள உணர்வுகள் தானே எனக்கும் இருக்கும்? அப்போது நான் எவ்வளவு அவமானப்பட்டிருப்பேன், என் உடல் எந்தளவுக்கு கூச்சத்தால் நெளிந்திருக்கும்? சோதனை நடக்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என் பெயரை 'வித்யா' என்று மாற்றுவதற்காக யார் முன்னாடியெல்லாமோ நான் நிர்வாணப்பட வேண்டியிருக்கிறது. கேவலம் நியூமராலஜிக்காக ஒருவர் பதினைந்தே நாட்களில் பெயரை மாற்றிக் கொள்ள இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் நான் இரண்டு வருடங்களாக தாசில்தார், கலெக்டர், மருத்துவமனை, நீதிமன்றம் என்று அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பெண்ணாய் வாழ்வதென்பது எங்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை. பிறந்த குடும்பத்திலிருந்தே சமுதாய கவுரவத்திற்காக நாங்கள் நாயினும் கேவலமக விரட்டியடிக்கப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள்! ஒரு முதுகலைப் பட்டதாரியாய் ரயில்களில் பிச்சையெடுப்பதென்பது எவ்வளவு அவமானகரமான ஒரு விஷயம்? ஆனால் நான் அப்படி இருக்க நேர்ந்தது. எனது முந்தைய அடையாளங்களை அழிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தே அக வேண்டும் என்கிற கட்டாயம்.

சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் சுயமரியாதையும் தன்மானமும் என்னைச் சுட்டுக் கொண்டே இருக்க, தாளாத மனவேதனையுடன் (PUNE ரயில்களில்) பிச்சையெடுக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படுகிற எந்தவிதப் பரிசோதனைகளும் இல்லாமல் சட்டப்படி அரசாங்கத்தால் வாய்ப்பளிக்கப்படாத இப்படியான "அறுத்தெறிதல்'' உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடுப்புக்குக் கீழே அரை மணிநேரம் மறத்துப் போகச் செய்யக் கூடிய லோக்கல் அனஸ்தீசியா மூலம் படித்த மருத்துவரால் இது செய்து வைக்கப்படுகிறது. இதற்கும் வழியில்லாத திருநங்கைகளின் மறுவாழ்வு எங்கோ ஒரு ஓலைக் குடிசையில் ஆக்ஸா பிளேடினால் தீர்மானிக்கப்படுகிறது. பூஜை, புனஸ்காரங்களில் நம்பிக்கையுடைய மூத்த திருநங்கை இந்த அறுவை சிகிச்சையைச் செய்கிறார்.

பால் மாற்று அறுவைக்கு முன்வரும் நபரின் கை, கால்கள் இறுகக் கட்டப்பட்டு புத்தம் புதிதான ஆக்ஸா பிளேடினால் ''அந்த உறுப்பு'' அறுத்தெறியப்படும். உயிர் போகிற வலியில் மயக்கம் போட்டுவிடாமல் இருக்க வாயில் சுக்கு, மிளகைத் திணித்து கண்ணத்தில் பளார், பளார் என அறைவார்கள். சிறிது நேரம் கழித்து தனியறையில் விடப்படும் அந்நபர் மறுநாள் வெளியே வந்தால் திருநங்கை. இல்லையென்றால் பிணம்.

இப்படிப் போக்கிடம் எதுவும் இல்லாத நிலையில் ஆணாக வாழ்வதென்பதை விட செத்துப் போவதே மேல் என்று மனம் அடித்துக் கூறுகிற போது, பலிபீடத்தில் உதிரத்துடன் தொடங்குகிறது எங்கள் வாழ்க்கை.

நீங்கள் எனபது கூட உங்கள் உடல் அல்ல, மனம் தான். உங்களை நான் அவமானப்படுத்திப் பேசினால் உங்கள் மனம் தான் அதற்காக வருத்தப்படுகிறது. மனம் எனபது திருநங்கைகள் உட்பட எல்லோருக்கும் பொதுவானது தானே?

முதுகலைப் பட்டம் முடித்து ஒரு நிறுவணத்தில் பணிபுரியும் 25 வயதாகிய என்னை சில ஆறாம் வகுப்பு மாணவர்கள் "ஊரோரம் புளியமரம்'' என்று பாட்டுப்பாடி கேலி செய்கிறார்கள். தன் உடல் குறித்தோ, படிப்பு குறித்தோ அல்லது சமுதாயம் சார்ந்தோ எந்த அறிவும் இல்லாத சிறுவர்களுக்கு என் போன்றவர்களை இழிவுபடுத்திக் கேலி செய்ய வேண்டும் என்கிற புத்தி எங்கிருந்து வந்தது?

இங்கே தான் இப்படிக் கழிசடையான பொதுப் புத்தியை வளர்ப்பதில் சினிமா தன் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த பருத்திவீரன் அமீரிடம் திருநங்கைகளை இழிவுபடுத்தியது குறித்து பல கேள்விகளைக் கேட்டேன். "ஆமாம், அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த யதார்த்தைத் தான் காட்டியிருக்கிறேன்'' என்று பொருப்பில்லாமல் பதில் சொன்னார்.

எங்களைப் போன்ற திருநங்கைகளின் யதார்த்தம் பற்றி கற்பழிப்புக் காட்சிகளைப் (கற்பழிப்பு என்கிற வார்த்தை சினிமாத்தனம் என்பதற்காக கையாளப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்) படமெடுக்கிற அமீருக்கு என்ன தெரியும்?

ஒரு வேளை சோற்றுக்காக, வெறும் முப்பது ரூபாய்க்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிற அவலநிலை தான் திருநங்கைகளுடையது. ஆனால் நீங்கள் மூன்று கோடி, முப்பது லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கிலீஷ் பேசி, ஏ.சி. பங்களாவில் வாழ்ந்து கொண்டே விபச்சாரம் செய்கிறீர்கள். இன்று பத்திரிகையை எடுத்துப் பாருங்கள், "பத்து கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய நடிகை'' என்று முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.

"என்ன நாயணக்காரரே! சும்மா வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. வாயில வச்சி ஊத வேண்டியது தானே! நீங்க ஊதுறீங்களா? இல்ல நான் ஊதவா?'' எவ்வளவு வக்கிரமும் ஆபாசம் நிறைந்தது இந்த வசனம் என்பது சொல்லியா தெரிய வேண்டும். கேட்டால் இதை யதார்த்தம் என்கிறார் அமீர்.

இதில் பாலுமகேந்திரா, காக்க காக்க கவுதம், வேட்டையாடு விளையாடு (என்ன வேட்டை, என்ன விளையாட்டுப்பா அது?) கமலஹாசன் என்று எந்த ஒரு அறிவு ஜீவிகளும் விதிவிலக்கல்ல. இவர்களெல்லாம் போதாதென்று 'திருநங்கைகள் எனப்படுபவர்கள் அப்பாவிப் பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தாதாக்கள்' என்று தனது அரசி சீரியல் மூலம் வீடு தோறும் எடுத்துச் சொல்கிற அரும்பணியை சித்தி ராதிகா செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் அடுத்தவர்களை இழிவுபடுத்திக் காசு பார்க்கிற நீங்களெல்லாம் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

பள்ளிக்கூடம் படிக்கிறதிலிருந்து இன்றுவரை எதற்கெல்லாம் நாங்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. வரிசையில் நிற்கும் போது கூட ஒன்பதாவது இடம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண் எடுக்கிற மாணவராக இருந்தேன். திடீரென்று கரும்பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு "படிப்பலி, உழைப்பலி'' என்று சக மாணவர்களே எழுதி வைத்தார்கள். என்னை அலி என்று அவமானப்படுத்துவது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமனதாக இருந்தது.

சராசரியாக எல்லோருக்கும் அமையக்கூடிய பால்ய வயது அனுபவங்கள் கூட எங்களுக்கு வலி நிரம்பியதாகவே இருக்கிறது. நட்பு என்று சொல்லிக் கொள்ள ஒருவர் கூட அமைவதில்லை. வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு வந்து சேர்கிற வரை "ஏய்... ஒம்போது, பொட்டை, வா... யக்கா, அஜக்" என்று கூறி தொடர்சியாக கேலி செய்வதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? இப்படிப் பிறந்தது எங்களின் குற்றமா?

என்ன பிரச்சினை என்று எங்களுக்கே தெரியாத வயதில் சுற்றம், நட்பு என்றில்லாமல் பிறந்த குடும்பத்திலிருந்தே வெறுக்கப்பட்டு அனாதைகளாக்கப்படுகிறோம். அந்த வயதில் எங்களுக்குத் தேவை அன்பு தான். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களிடம் அன்பாகப் பேசி குடும்பத்தில் ஒருவராக பழக அனுமதித்தாலே போதும். எவ்வளவோ வலிகள் காணாமல் போகும்.

மாறாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்ட்டாயப்படுத்தினால் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் திடீரென்று உண்மை வெடித்துக் கிளம்புகையில் அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமில்லாமல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண்ணானவள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால் இன்று ஜெயலலிதாவோ, கிரன்பெடியோ வந்திருக்க முடியாது. ஆண்டுக் கணக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களும் தலித்துக்களும் கூட இன்று ஓரளவாவது முன்னுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் யார் பார்வைக்கும் படாமல் இன்றுவரை ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

பொதுவாக இந்தியாவில் குழந்தை வளர்ப்பு பற்றியே தெரிவதில்லை. மருத்துவர்களும் திருநங்கைகள் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் அதற்கான ஆர்வமும் முயற்சியுமின்றி இருக்கிறார்கள். திருநங்கைகளை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாயத்தில் இப்போது திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

"மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம், டீசல் சிக்கனம் - தேவை இக்கனம்" மாதிரி "திருநங்கைகளும் இயல்பான மனிதர்களே - அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே" போன்ற வாசகங்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

எங்களைக் குடும்பத்தில் ஒருவராக வாழ அனுமதிப்பது, அரசு உதவியுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது, சான்றிதழ்களில் விரும்பிய பெயரை, பாலினத்தை (மாறிய பாலினமாக) மாற்றி அறிவிப்பது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதுகிறோம்.

அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது எங்களுக்கு நேர்கிற அநியாயத்தைப் பாருங்கள். எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் விண்னப்பப் படிவத்தில் பாலினம் என்கிற இடத்தில் ஆண் என்று இருக்கும். ஆனால் புகைப்படத்தில் பெண் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக் குழப்பத்தினால் எடுத்த எடுப்பிலேயே எங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான முயற்சியே கூட மறுக்கப்படுவது தான் கொடுமையான விஷயம். எனவே திருநங்கைகளுக்கான அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற அரசு சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல் பெண்களின் மீதான பாலியல் வண்கொடுமைக்கும், திருநங்கைகள் மீதான பாலியல் வண்கொடுமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் பாருங்கள்.

பொது இடத்தில் யாராவது ஒரு பெண்ணை சீண்டினால் சுற்றி இருப்பவர்கள் தர்ம அடி கொடுக்கிறார்கள். வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம், தண்டனை கிடைக்கும் என்கிற பயமாவது பெண்கள் விஷயத்தில் இருக்கிறது. ஆனால் இதே வண்கொடுமைகளை திருநங்கைகள் மீது கட்டவிழ்த்து விடும் போது சமுதாயம் அதை ரசித்து வேடிக்கைப் பார்க்கிறது.

பட்டப்பகலில் மனிதாபிமானமின்றி நடந்தேறுகிற இந்த வண்கொடுமைகளின் மூலம் நாலு பேர் சந்தோஷப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மனித உரிமைகள் பற்றி பேசி மாநாடுகள் நடத்தி பிஸ்கட் சாப்பிடுகிறீர்கள்.

மரக்காணம் பாலா.

Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.