Friday, December 31, 2010

தேவாலயத்தில் ஆடுறான்யா சூது! இது சென்னைலதான் கீது!

‘‘தி.நகர்ல மட்டும் 72 சூதாட்ட விடுதிகள் இருக்குன்னா, எவ்ளோ மாமூல் போகும்னு பாத்துக்கங்க.’’ எடுத்த எடுப்பில் அதிர வைத்தார் அந்த இன்ஃபார்மர். ‘‘என்னைய்யா சொல்ற?’’ அதிர்ச்சி விலகாமல் வாய்பிளந்த நம்மை, அத்தனை கிளப்புகளையும் சுற்றிக் கிருகிருக்க வைத்துவிட்டுத்தான் அமர்ந்தார்.

‘மனமகிழ் மன்றம்’ என்கிற பெயரில் விதிமுறைகளை மதிக்காமல் சீட்டாட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த விடுதிகள், தி.நகர் மட்டுமல்லாது சென்னை முழுவதும் பரந்து கிடக்கின்றன. பண்ணை வீடுகள், பங்களாக்கள், உயர்தர கிளப்புகள் போன்றவற்றிலும் சூதாட்டம் நடைபெறுகிறது என்றாலும், அவற்றில் நுழைந்து வேவு பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க்கான(இன்ஃபார்மருக்கு) விஷயம் என்பதால், அவை தவிர்த்து மீதமுள்ள கிளப்புகளை ஒரு ரவுண்டு வந்தோம்.

முதல் கட்ட ரவுண்ட்-அப், கீழ்ப்பாக்கம், ஐ.சி.எப் மற்றும் அயனாவரத்தில் ஆரம்பித்தது.

இந்தப் பகுதியில் சுமார் 10 சூதாட்ட விடுதிகள் இருக்கின்றன. எல்லாமே சொகுசு மற்றும் சுகாதாரம் அற்ற சுமார் ரகங்கள். எந்தக் கட்டடம் வாடகைக்கு கிடைக்கிறதோ, அதிலேயே தொழிலை ஆரம்பித்துவிடுகிறார்கள். கோவில், கழிவறை என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அயனாவரத்தில் ஒரு கிறிஸ்தவ ஜப வழிபாட்டுக் கூடமே, சூதாட்ட விடுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

அயனாவரம் செகரட்ரியேட் காலனியில் ஜெயின் கோயிலுக்கு எதிரே குன்னூர் ரோட்டில் இருக்கிறது பாப் கிறிஸ்து ஐக்கிய சபை. இதன் அருகிலேயே ஒரு கவர்மென்ட் டாஸ்க்மாக் கடை(குட் காம்பினேஷன்). அந்தி சாய்ந்தால் அங்கே ஜாலிலோ ஜிம்கானாதான். ஆட்டோ டிரைவர்கள் முதற்கொண்டு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவர்கள்வரை கையில் கிளாசும், வாயில் சிகரெட்டுமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள்.

தரையில் பாய் விரிக்கப்பட்டு, சீட்டுக் கட்டுகள் சரசரவென சுழல ஆரம்பிக்கிறது. தலை ஒன்றுக்கு 50 ரூபாயில் ஆரம்பித்து, 10 ஆயிரம் ரூபாய்வரை பந்தயம் கட்டுகிறார்கள். ஆட்டம் ஒன்றுக்கு ஒன்பது பேர் உட்காருகிறார்கள். இதுபோல், இடத்தைப் பொறுத்து பத்து பதினைந்து கும்பல் ஆடுகிறது. சராசரியாக ஆட்டம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டால்கூட பத்து ஆட்டம் முடிந்தாலே ஒரு லட்ச ரூபாய் கலெக்ஷன் ஆகிறது. அப்படியென்றால், 24 மணி நேரத்தில் எத்தனை லட்சங்கள் புரளும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிளப்பும், மாதம் ஒன்றுக்கு 1 முதல் 1.50 லட்சம்வரை போலீஸ் மாமூல் கட்டுவதாக கூறும் அப்பகுதி இளைஞர் ஒருவர்,

‘‘நேர்மையானவர்னு பேரெடுத்த தி.நகர் லேடி போலீஸ் ஆஃபீஸர்தான் இப்போ இந்தப் பகுதிக்கு இன்சார்ஜ். இந்தம்மா எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கன்ற ஆச்சர்யமா இருக்கு. அவங்க தி.நகர்ல இருந்தவரை இரவு 9.30-க்கெல்லாம் ரெய்டுக்கு வந்துடுவாங்க. இதனால சூதாட்ட விடுதிகளின் கொட்டம் கொஞ்சம் அடங்கிக் கிடந்தது. இப்போ நிலைமை தலைகீழா மாறிப்போச்சு. அவங்க இல்லைன்னு தெரிஞ்சதும் முக்கால்வாசிக் கிளப்புகள் 24 மணிநேர சர்வீஸா மாறிடுச்சு’’ என்றார்.

நாங்கள் தி.நகர் நோக்கி நடையைக் கட்டினோம். தி.நகர் கிரி ரோட்டில் கடவுளாகிவிட்டவர்(சாய்பாபா) பெயரில் இருக்கிறது அந்த நடுத்தர கிளப். இங்கு நடக்கும் சூதாட்டம் பற்றி வெளிப்படையாகவே நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருக்கிறார்கள். முதல் பரிசு ரூ.2 லட்சம். டிக்கெட் விலை ஆள் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய். ஆட்டம் ஒன்றுக்கு 9 பேர் வீதம் ஒரு ஷோவுக்கு மட்டும் 10 ஆட்டங்கள் நடக்கிறது. ஒவ்வொரு ஷோவுக்கும் ரூ.1 லட்சம் கிளப்புக்கே கமிஷனாகப் போய்விடும். குறைந்தது ஓரு நாளுக்கு ஐந்து ஆட்டங்கள் போட்டாலே, எந்தச் செலவும் இன்றி கிளப்புக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் கமிஷனாகக் கிடைத்துவிடும். அப்படியானால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, இந்த நடுத்தர கிளப்புகளுக்குக் கிடைக்கும் லாபத்தொகை மட்டும் 1 கோடியே ஐம்பது லட்சங்கள்.

இந்தக் கிளப்புகளின் வாடிக்கையாளர்கள் சிலரைக் கண்டால், உங்கள் வாய் காதுவரை பிளக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ஆந்திர மாநில அரசியல் பிரமுகர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலதிபர்கள். தி.நகரைச் சுற்றியுள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு தங்கும் இவர்கள், நாள் முழுவதும் சீட்டாடியே களிக்கிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் ஸ்டார் ஒட்டல்களில் ரூம் பொட்டு ஆடியிருக்கிறார்கள். அப்போது, ஒரே ரூமில் பத்துப் பதினைந்துபேர் கும்மியடித்ததால், கலவரமடைந்த ஓட்டல் நிர்வாகங்கள், இனிமேல் சீட்டாங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தனவாம். எனவேதான், சென்ற இடமெல்லாம் சீட்டாட்டம் என தி.நகரில் மட்டும் கண்ணுக்குத் தெரிந்து 72 கிளப்புகள் இருக்கின்றன.

‘‘எல்லா கிளப்புகளில் இருந்தும் முறையான மாமூல், மாதா மாதம் போய்க்கொண்டிருந்தாலும் ஒருசில கிளப்புகளில் மட்டும் ரெய்டு, மாமூல் என்கிற பெயரில் ஈ, காக்காகூட நுழைய முடியாது.

காரணம், நம்மூர் அரசியல் பிரபலங்கள்தான். பினாமிகளை வைத்து அவர்கள்தான் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகிறார்கள்’’ என்கிறார் ஒரு போலீஸ் இன்ஃபார்மர்.

‘‘யாராவது ரிப்போர்ட்டர்னு போய் ஐ.டி. கார்டோடு நின்னா போதும். மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மாமூல் தருவானுங்க. இப்படித்தான்... ‘பெட்டிஷன் பாண்டி’ன்னு ஒருத்தன் இருக்கான். கிளப் டீடெய்ல்ஸ் எல்லாம் விரல் நுனியில வச்சிருப்பான். மாமூல் கொடுக்காட்டி கிளப்புக்கு எதிரா பெட்டிஷன் போடுறதுதான் இவனோட வேலை.

‘அண்ணாச்சி வந்திருக்கேன். அதிகமா ஒண்ணும் கேக்கலை. மாசம் ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்.’னு கேட்பான். பல தடவை இவனோட கை, காலை உடைச்சும் அடங்கலை. ‘போனா போவுது. செத்த பாம்பு, கொத்தப் போறதில்லை’ன்ற கதையா இவனுக்கு மட்டும் ஒவ்வொரு கிளப்பும் மாசம் ஆயிரம் ரூபாய் மாமூல் அனுப்புது. இதனால, அய்யாவுக்கு உக்காந்த இடத்திலேயே மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்’’ என்று அதிர வைத்தார் அந்த போலீஸ் இன்ஃபார்மர்.

அயனாவரத்தில் 10, தி.நகரில் 72 போக அண்ணாசாலையில் 8, கிண்டியில் 8, வடபழனி மற்றும் கோடம்பாக்கத்தில் 15 கிளப்புகளும் சென்னையில் இயங்கி வருகிறது. தாம்பரம், ஆவடி போன்ற புறநகர் பகுதிகள் பற்றி இப்போதைக்கு நம்மிடம் கணக்கு இல்லை.

‘‘24 மணி நேர கிளப் என்கிறீர்களே. இதில் ஆடுபவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?’’ என்றதற்கு, ‘‘பாதிப்பேருக்கு இதுதான் தொழில்’’ என்கிற நமது இன்ஃபார்மர், ‘‘பிரஃபெஷனல் சூதாட்டக்காரர்கள் வெறுமனே சென்னையில் மட்டும் ஆடுவதில்லை. பிளைட் பிடித்துப் போய், மலேசியா சிங்கப்பூரில் எல்லாம் ஆடிவிட்டு வருகிறார்கள். சீட்டுக்கட்டைத் தவிர, வேறெதுவும் தெரியாத இவர்கள், சூடாட்டத்தின் மூலமே பல கோடிகள் சம்பாதித்துவிட்டார்கள்.’’ என்றார்.

‘‘ஆனா, சரித்திர காலம்தொட்டு சூதாட்டம் என்பது குடும்பத்தையே சீரழைத்துவிடும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்’’ என்றேன்.

‘‘உண்மைதான் கோடிகளை சம்பாதித்தது நாலைந்து பேர்தான். அதிலும் சில போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். எப்படா ரிட்டையர்டு ஆவோம். ஃபுல் டைமா இதுல உக்காருவோம் என்று ஏங்கித் தவித்தவர்கள் இவர்கள். இதுபோன்றவர்களைத் தவிர 100-க்கு 99% பேர் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கிறார்கள்.

சம்பளம், சொத்து பத்து, பொண்டாட்டி நகை எல்லாத்தையும் வித்து சூதாடிய இவர்களில் சிலர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?’’ என்று நிறுத்தியவர், ‘‘இதே சூதாட்டக் கிளப்புகளில் எடுபிடியா(சர்வர்) வேலை பார்க்கிறார்கள் என்று அவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘அய்யா, சாமி! நான் வெளிநாட்டில் இருப்பதாக என் பொண்டாட்டி பிள்ளைகள் நம்பிக்கிட்டு இருப்பாங்க. எங்களைப் போட்டுக் கொடுத்துறாதீங்க. என்னிக்காவது ஒருநாள் இழந்த செல்வத்தை நாங்க மீட்டுறுவோம்’’ என்றார்கள்.

அடப் பாவமே! இப்படித்தானே அய்யா ஒவ்வொருவரும் ‘அடுத்த ஆட்டத்துல பிடிச்சிருவோம்னு ஆண்டுக் கணக்கில் ஆடி வருகிறீர்கள். உங்களை எந்தச் சட்டம் போட்டு திருத்துவது?

ஹெராயின் கடத்தினாரா ராகுல்காந்தி! சு.சாமி பரபர...!


கடந்த திங்கட்கிழமை 27.12.2010 காலை பதினோரு மணிக்கு, சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.


“ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இயற்பியல் பேராசிரியரான ஜோஷி, இதற்கு மிகவும் பொருத்தமானவர். இதை நான் வரவேற்கிறேன்.


சி.பி.ஐ கைப்பற்றிய ராசாவின் டைரியில் நான்கு முன்னணி அரசியல்வாதிகள், மத்திய இணை அமைச்சராக இருந்து சமீபத்தில் முதல்வரான ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இவர்களைப் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்” என்றார்.


“பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் சொல்கிறார்களே!” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,


“யார் சொன்னா? இண்டியன் கவர்மெண்ட் சொன்னாளா? ஸ்றீலங்கா கவர்மெண்ட் சொன்னாளா? அமெரிக்கன் கவர்மெண்ட் சொன்னாளா? சிலபேர் அப்படி சொல்லிண்டு திரியறா! அவாளெல்லாம் அரசியல் வித்வைகள். அதை எதுக்கு நாம நம்பணும்” என்றார்.


“பிரதமர், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறதே!” என்றபோது,


“புலிகளே இல்லை. அப்புறம் எங்கிருந்து ஆபத்து வரும். இறுதிப்போர் நடந்தபோது, பிரபாகரனுக்கு சிதம்பரம் ஒரு கடிதம் எழுதினார். ‘ஆயுதத்தை ஒப்படைச்சிட்டு சரனடைஞ்சா, நாங்க உங்களைக் காப்பாத்துறோம்’னு சொல்லியிருந்தார். அதைப் படிச்சிட்டு, வைகோ, நெடுமாறன்கிட்ட பிரபாகரன் அட்வைஸ் கேட்டார்.


‘இந்த எலக்‌ஷன்ல பி.ஜே.பி.தான் ஜெயிக்கப்போவுது. அப்படி ஜெயிச்சா, தனி ஈழமே வாங்கிடலாம். நீங்க தொடர்ந்து போரை நடந்துங்கோ’ன்னு இவா சொல்லியிருக்கா. பிரபாகரன், ராஜீவ் கொலைக் குற்றவாளி. அவருக்கு, சிதம்பரம் எப்படிக் கடிதம் எழுதலாம். எனவே, சிதம்பரம் பதவி விலகவேண்டும்” என்றார்.


“தமிழகம் வந்த ராகுல், தாஜ் கன்னிமரா ஓட்டலில் வைத்து தமிழக அறிவுஜீவிகளை சந்தித்துவிட்டு சென்றிருக்கிறாரே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டதற்கு,


“யார் அந்த ராகுல்? ராகுல்னா யாரு? அவருக்கு அரசியல் தெரியுமா? கொள்கை ஏதாவது இருக்கா? சரியான மக்கு. காலேஜ் படிக்கும்போது ஹிந்தி சப்ஜெக்ட்லயே ஃபியில் ஆனவர்தான் ராகுல்.


2001-ல் பாஸ்டன் ஏர்போர்ட் போனபோது போலீஸ் அவரை பிடிச்சு விசாரிச்சாங்க. அப்போ அவர்கிட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்கன் டாலர் இருந்தது. ஏது அந்தப் பணம்? அது மட்டுமில்லை. ஒரு பிளாஸ்டிக் கவர்ல பவுடர் இருந்தது. அது ஹெராயினா, பிரவுன் சுகரா எனக்குத் தெரியாது.


உடனே, வாஜ்பாய்க்கு போன் பண்ணி, சோனியாகாந்திதான் அவாளைக் காப்பாத்தினார். எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு, எப்போ என்கொயரிக்கு கூப்பிட்டாலும் வரணும்’னு எச்சரிக்கை பண்ணித்தான் பாஸ்டன் போலீஸ் அவரை வெளியே விட்டா” என்றார்.


இறுதியாக... “எல்லா ஊழலும் சோனியாகாந்திக்கு தெரிஞ்சுதான் நடக்குது. இந்த ஆட்சியை கவிழ்க்க நான் ரெடி” என்று முடித்தார்.


குறிப்பு: இந்தத் தகவலை பத்திரிகைகளில் தேடாதீர்கள்.

Thursday, December 2, 2010

‘‘தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கவேண்டும்’’


காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் ஒரு வெட்கக்கேடான, வேதனையனான சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்திருக்கிறது. இதுபோன்ற வெட்கக்கேடுகள் தொடர்கதைதான் என்றாலும், இந்த இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் வெளியிட்டு உள்ளதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒரு கிராமம். ஒதுக்குப் புறமான வீடு. நேரம், நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கணவன், மனைவி, 17 வயதில் ஒரு மகள், இரண்டு குழந்தைகள் என ஐவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அப்போது, எட்டு பேர்கொண்ட கும்பல் ஒன்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது. எதிர்க்க வந்த கணவனை சரமாரியாக அடித்துத் துவைக்கிறது. மனைவியும் குழந்தைகளும் கதறுகிறார்கள். ‘‘புருஷன் மேல அவ்ளோ பாசமா?’’ &கேட்டபடி மனைவியின் சேலையை அவிழ்த்து எறிகிறது அக்கும்பல்.

‘‘என்ன எதுவேணா பண்ணிக்கங்க. என் மனைவியை விட்றுங்க’ எனக் கெஞ்சுகிறார் கணவர். எல்லோர் எதிரிலும் அவரை நிர்வானமாக்கும் அக்கும்பல், மனைவியின் புடவையைக்கொண்டு அவள் கணவரை வீட்டின் அந்தரத்தில் உயிரோடு தொங்கவிடுகிறது. காமம் தலைக்கேற, அந்த எட்டுபேர் கும்பலும் கணவனின் கண்ணெதிரே தாயையும் மகளையும் கண்டபடி கடித்துக் குதறுகிறார்கள். எல்லாம் முடிந்ததும் வீட்டிலிருந்த நகை, பணத்தையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். இந்தச் சம்பவம் நடந்தது 1995 ம் ஆண்டு.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்குப் போனார்கள். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, உள்ளூர் போலீஸார் ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று, தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டிக்கு இவ்வழக்கு மாற்றப்படுகிறது. அங்கு ஒருவழியாய், கைரேகையின் அடிப்படையில் முனிராஜ், ரவி, மது என்கிற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். இரண்டாண்டுகள் கழித்து மொத்தம் எட்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. இவ்வழக்கை விசாரித்து வந்த ஓசூர் உதவி செசன்சு நீதிமன்றம், சம்பவம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, ஆறு பேருக்கு பத்து வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

பாவிகளுக்கு இன்னும் அதிக தண்டனை வேண்டும் என்கிறீர்களா? மேற்கொண்டு கேளுங்கள்.

தண்டனை பெற்ற ஆறு பேரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்கிறார்கள். இதை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை சில வாரங்களுக்கு வாரங்களுக்கு முன் அவர் வாசித்திருக்கிறார்.

‘‘சம்பவத்தில் தொடர்புடைய, இறந்துபோன இருவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருப்பது செசன்சு கோர்ட்டு நீதிபதி செய்த மிகப்பெரிய சட்ட விரோதம். குற்றம் சாட்டப்பட்டவர்களை, பாதிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் அடையாளம் காணவேண்டும் என்கிற சட்டத்தின் அரிச்சுவடியைக்கூட போலீஸார், அரசு வழக்கறிஞர், நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில், நீதிபதி மவுனியாக இருந்து வேட்டிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். நடந்துள்ள குளறுபடிகளுக்கு மேற்கண்ட மூவரும்தான் பொறுப்பு.

விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கைப்போல், இந்த வழக்கிலும் மீண்டும் விசாரணை நடத்தலாம் என்றால், குற்றம் நடந்து நீண்ட நாட்களாகிவிட்டது. பாதிக்கப்பட்ட இளம்பெண் யாரோ ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்படுகிறேன். எனவே, மறுவிசாரணை என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்’’ என்று சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி அனைவரையும் விடுதலை செய்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘‘நாம், இந்த நாட்டின் குடிமக்கள். நம்மைப் பாதுகாக்கவென்று அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை எல்லாம் இருக்கிறது. நமது வரிப் பணத்திலிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இந்த நீதிமான்கள், விசாரணை அதிகாரிகள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியானால், கொடுத்த வேலையை சரியாகச் செய்யாத இவர்களுக்கு சம்பளம் எதற்கு, வேலைதான் எதற்கு? கடமையை செய்யத் தவறியதோடு மட்டுமில்லாமல், குற்றவாளிகளை தவறவிட்ட இம்மூவருக்கும் ஏன் தண்டனை வழங்கக்கூடாது.’’ என்பதுதான் மக்களின் கேள்வி.

இதே கேள்வியை நாம், உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தூர்பாண்டியனிடம் எடுத்து வைத்தோம்.

‘‘குற்றம் நடந்தவுடன் வழக்குப் பதிவு செய்து, அதற்குறிய ஆதாரங்களைத் திரட்டி உடனுக்குடன் கோர்ட்டுக்கு அனுப்பவேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் ஒரு வருடம் கழித்துத்தான் இறுதி அறிக்கையே தாக்கல் செய்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நடைமுறை. கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை அரசுத்தரப்பு உருவாக்கும் சின்னச் சின்ன ஓட்டைகள் அல்லது பெரிய ஓட்டைகளின் பலன் முழுக்க(சந்தேகத்தின் பலன்) எதிரிகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

போலீஸார், எப்போதுமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரிதான் சாட்சிகளைக் கொண்டு வந்து கூண்டில் நிறுத்துகிறார்கள். காவல்துறைக்கு ஏதுவாக தாயார் செய்யப்பட்டிருக்கும் அவர்களது வாக்குமூலங்களை, என்னதான் சொல்லிக் கொடுத்திருந்தாலும், சாட்சிகளின் ஒருசில வார்த்தைகளில் உண்மை வெளிவந்துவிடும். ‘ஸ்டேட்மென்ட்டில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் சாட்சி சொல்கிறாரே. ஒருவேளை இது பொய்யாக இருக்குமோ! நாம் தவறான தீர்ப்பை கொடுத்துவிடுவோமோ?’ என்று அஞ்சுகிற கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள், சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிக்கு இது அழகல்ல. அவரை மீறி அணுவும் அசைய முடியாது. சாட்சி தும்மினால்கூட அதற்கான காரணத்தை அவர் அறிந்திருக்கவேண்டும். சம்மன் அனுப்புவதில் இருந்து ஸ்டேட்மென்ட் ரெக்கார்ட் பண்ணுவது, தீர்ப்பு சொல்வதுவரை அனைத்தையும் கரைத்துக் குடித்தவர்தான் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்க முடியும். ஆனால், பெரும்பாலான கீழ்க் கோர்ட்டுகளில் சாட்சி விசாரனையை அவர்கள் காது கொடுத்தே கேட்பதில்லை. இதை நீங்கள் நேரிலேயே பார்க்க முடியும்.

குறிப்பிட்ட இந்த வழக்கைப் பொறுத்தவரை, விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கீழ்க்கோர்ட்டு நீதிபதி தண்டனை கொடுத்திருக்கிறார். ‘கொடூர குற்றவாளிகளை விடுதலை செய்தால் மக்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ’ என்று இத்தகைய நீதிபதிகள் அஞ்சுவதுதான் இதற்கெல்லாம் காரணம். எனவே, கண்னை மூடிக்கொண்டு தண்டனை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அப்பீலுக்காக மேல் கோர்ட்டுக்கு செல்லும்போது இந்தத் தீர்ப்பு வலுவிழந்துவிடும் என்பதும் தண்டனை பெற்றவர்கள் விடுதலை ஆவார்கள் என்பதும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்படி எல்லாவற்றையும் தெரிந்து வைத்துகொண்டே இவர்கள் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் போலீஸார், அரசு வக்கீல், நீதிபதி ஆகிய மூன்று பேரும் சமமாக தவறிழைத்திருக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பு. இந்தியாவைப் பொறுத்த அளவில், சட்டத்துக்கு உட்பட்டுத்தான் எல்லாமே. இத்தனை சட்டங்கள், பாதுகாப்புகள், பரிவாரங்கள் இருந்தும் சாட்சி விசாரணை சரியாக இல்லாத காரணத்தால் அப்பாவி குடும்பத்துக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் எந்த விதத்திலும் ஈடாகாது. குற்றவாளிகளுக்கு மீண்டும் தண்டனை அளிப்பதென்பது இனி இயலாத காரியம். எனவே, வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு உயர்நீதிமன்றம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய குற்றம் நடந்திருந்தாலும் ஒரே வருடத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். மேல் முறையீடு என்றால், அடுத்த ஒரு வருடத்துக்குள் அதுவும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படவேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கக்கூடிய அதிகாரம் இரண்டு பேருக்கு மட்டும்தான் இருக்கிறது. ஒன்று காவல்துறை, இன்னொன்று நீதித்துறை. சாதாரண ஒரு போலீஸ்காரர், தன் கடமையைச் செய்யவில்லை என்றால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அதே கடமையைச் செய்யத் தவறும் ஒரு நீதிபதி மீது யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, கடமையைச் செய்யத் தவறும் அல்லது தவறான தீர்ப்புகளை வழங்கும் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகள் மீது கடுமையான நடவடிக்கையை உயர்நீதிமன்றம் எடுக்கவேண்டும்.

‘நாம் சொல்லக்கூடிய தீர்ப்பு சரியாக இல்லையென்றால், தண்டனைக்கு உள்ளாவோம்’ என்கிற பயம் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கவேண்டும். அந்த பயம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கே கீழமை நீதிமன்றங்கள் ஒழுங்காக செயல்பட ஆரம்பிக்கும். அதன் பிறகு பத்து வருடம், இருபது வருடம் என்று தாமதமான தீர்ப்புகள் வெளியாகாது.’’ என்கிறார்.

கிருஷ்ணகிரியில் நடந்ததைப் போன்ற வெட்கக்கேடான ஒரு விஷயம், புதுச்சேரியிலும் நடந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய மனைத உரிமை ஆர்வலரான புதுவை.கோ. சுகுமாரன்,

‘‘இதுபோன்ற தவறுகளை காவல்துறையும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளும் காலம் காலமாகவே செய்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்புகூட தூக்கு தண்டனை கைதிகள் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த பொம்மி குமரன், சென்பக ஸ்ரீகுமரன் ஆகிய இருவரும் பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளுக்காக தூக்கு தண்டனை பெற்றவர்கள். பல வருடங்களுக்கு முன், தங்கள் நண்பரான சங்கர் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாயை இவர்கள் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சங்கரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஒரு மசாஜ் சென்ட்டரில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அப்போதும் சங்கரால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. எனவே, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். அதன் பிறகு சங்கர் செத்துபோனதை காரணம் காட்டி அவர் வேலை செய்த மசாஜ் சென்டர் முதலாளியிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறித்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு எஸ்.டி.டி. பூத்துக்குப் போனவர்கள், அங்கிருந்த பெண்மணியை கற்பழித்துவிட்டு, அவரையும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

எஸ்.டி.டி பூத் கொலை வழக்கை துப்பு துலக்கும்போதுதான் சங்கர் கொலை செய்யப்பட்டதையும் புதுச்சேரி காவல்துறை கண்டு பிடித்தது. பிறகு, இரண்டு கொலை வழக்கையும் இவர்களே விசாரித்து வந்தார்கள். விசாரணை முடிவில், 2001&ம் ஆண்டு புதுச்சேரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சித்தார்த்தர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை, குற்றப்பத்திரிகை முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்தான் சங்கர் என்று சங்கருடைய அம்மாவே சரியாக அடையாளம் காட்டவில்லை. எனவே, இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து விடுதல்லை செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்துவிட்டது. காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட இப்படிப் பல உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

விசாரணை அதிகாரிகள் ஒழுங்காக கடமை ஆற்றினாலே இதுபோன்ற ஓட்டைகளை முழுமையாக அடைக்க முடியும். போலீஸார், சட்டத்தை தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தி, நிறைய ஷார்ட் கட் வழிமுறைகளை பின்பற்றுவதால்தான் இப்படிப்பட்ட தவறுகள் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, ஒரு வழக்கை எப்படி ஓட்டை இல்லாமல் நடத்த வேண்டும் என்பது குறித்து காவல்துறையில் உள்ளவர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கவேண்டும். கண்னை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதிவரும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை கண்காணிக்க உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’’ என்கிறார்.

‘‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’’ என்று எத்தனை தடவைதான் சொல்லிக்கொண்டிருப்பது. எனவே, தயவு தாட்சண்யம் பார்க்கமல் தவறிழைக்கும் காவல் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பு: சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, லேஅவுட்வரை ஃபைனலாகி, ‘சூரிய கதிர்’ இதழின் டுபாகூர் ஆசிரியரும் முதலாளியுமான கை.கதிர்வேள் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை.