Friday, October 28, 2011

ஏன் எதிர்க்கவேண்டும் ‘ஏழாம் அறிவை’?

 ‘‘இந்த நாடு நாசமாகப் போயிருப்பதற்கு மூன்று காரணங்களை படத்தில் சொல்கிறார் கதாநாயகி ஸ்ருதிஹாசன். அவை "Reservation, Recommendation and Corruption". அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை, நாடு நாசமாகப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது முருகதாஸ் அவர்களுக்கு!’’ -எழில் அரசன்.

-இதை மனதில் வைத்துக்கொண்டு வாசிப்புக்கு வாருங்கள்.
 "ஏ.ஆர்.முருகதாஸின் ‘எச்சில் அறிவு’" -இக்கட்டுரைக்கு முதலில் நான் வைத்த தலைப்பு இதுதான்.

“என்னடா இது, எட்டாவது அறிவுகூட கேள்விப்பட்டிருக்கோம். இவன், ‘எச்சில் அறிவு’ன்னு புதுசா ஒண்ணை சொல்றானே?”ன்னு யோசிக்காதீங்க.

‘‘இந்தப் படத்தைப் பார்த்தா, உங்க மயிரெல்லாம் நட்டுக்கும்’’னு சொல்கிறாரே முருகதாஸ்!

மயிர் நட்டுக்கொள்கிற அளவுக்கு அவரிடம், ‘கெத்து’(வீரம்) இருக்கவேண்டாமா?

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம், உன்போல் இரந்துண்டு வாழமாட்டோம்’’ என்று சிவனுக்கே சவால்விட்டுப் பேசுகிறாரே நக்கீரர். அப்படிப்படிப்பட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர் அல்லவா நீவீர். அந்த வீரம், தில்லு, உங்களுக்கு இருக்கணுமா வேண்டாமா?

(பட், ‘சங்கறுக்கிறது’ன்னா வேண்டாதவன் கழுத்தை அறுக்கிறது இல்லைங்க. அதைச் சிலபேர், ‘வலம்புரிச் சங்கு’ன்றான், சிலபேர் ‘ஆவுரிச் சங்கு’ன்றான். அது வேற கதை.)

நாம விஷயத்துக்கு வருவோம். ‘ஏன் நான் எச்சில் அறிவு’ங்கிறேன்?

தமிழன்னா, வீரம் வேணும்ல? கண்ட இடத்துல கையேந்தி பிச்சை எடுக்கக் கூடாதுல்ல?

ஓ.கே. உன்னால முடியல. மீறி, பிச்சை எடுத்துட்டீங்க. கம்முனு, ஃபிரன்ட்டையும் பேக்கையும் பொத்திட்டு ஓரமா போய் குந்திக்கணும்.

வாய் கிழிய உதார் விடக்கூடாது.

உனக்கு மட்டுமா இங்கே ஏழாம் அறிவு இருக்கு? எங்களுக்கும்தான் இருக்கு. நாங்களும்தானே நக்கீரர் பரம்பரை.

ஏற்கெனவே, ‘தமிழ் உணர்வைக் காசாக்குகிறதா ‘ஏழாம் அறிவு’ன்னு ஒரு பதிவு போட்டேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கலாம்.

‘‘இவங்க எப்பவுமே இப்படித்தாம்பா. ‘வினவு’ மாதிரி எல்லாத்துக்கும் குத்தம் சொல்வாங்க’’ன்னு நினைக்கலாம். அப்படி நெனச்சா அது தப்புங்க.

‘இல்லாத அறிவை’ எடுக்க, எங்கெங்கே கைநீட்டி, எச்சிலையை வாங்கினார் அய்யா முருகதாஸ்’னு ஒரு பட்டியல் போடுறேன். பாத்துக்கங்க:

1. பாம்பே சர்கஸ்
2. KFC
3. Indian oil extra premium
4. Barath petroleum
5. Durable Chrome Factory
6. Vodafone
7. Aircel
8. State bank of India
9. NAC Jewellers
10.Landmark
11.Fast track
12.Nilgiris
13.Lions Club
14.7g systems
15.Sea land cargo
16.Natural spa

-இவ்ளோதான், என் கண்ணுல பட்டது.

“இது என்னடா, புதுக் கதையா இருக்கு. இதுக்கும் எச்சிலைக்கும் என்ன சம்பந்தம்?”னு மீண்டும், மீண்டும் யோசிக்கிறீங்களா? நல்லா யோசியுங்க.

லிஸ்ட்ல போட்ட கம்பெனி மட்டுமில்லைங்க, ஒரு திரைப்படம் என்கிற வகையில், இயக்குநரின் அனுமதி இல்லாமல், சின்னதொரு ‘சுண்டெலி மயிரைக்கூட’ நீங்கள் திரையில் காட்ட முடியாது.

தயாரிப்பாளரோ, நடிகரோ அதில் தலையிட முடியாது. படத்துக்கான ஒப்பந்தம் போடும்போதே, இது குறித்து தெளிவாக விளக்கிவிட்டேதான் கையெழுத்திடுகிறார்கள். ‘இப்படி கையெழுத்திடக்கூடிய, நக்கீரரின் உண்மையான வாரிசுகளும் இங்கே இயக்குநர்களாக இருக்கிறார்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா உலக நண்பர்களுக்கு தெரியும்.

எனவே, ‘‘சுண்டெலி மயிரைக்கூட காட்ட முடியாது என்கிற நிலைமை இருக்க, இத்தனை கம்பெனிகள் திரைக்குள் நுழைந்தது எப்படி?’’

அத்தனையும் காசு ஸார், காசு.

டி.வி.ல விளம்பரம் காட்டினா, எப்படி செகன்டுக்கு செகன்டு ரேட்டு வசூலிக்கிறாங்களோ, அப்படித்தான் சினிமாவிலேயும். காட்சிக்கு நடுவே தனியார் நிறுவன விளம்பரங்கள் வந்தால், ஒவ்வொரு செகன்டும் லட்ச லட்சமாய் கொட்டும். அதைத்தான், அய்யா ஏயாரு முருகதாஸும் செஞ்சிருக்கார்.

இன்னும், சுடர்மணி ஜட்டி விளம்பரம் தவிர, மற்ற எல்லா விளம்பரங்களிலும் அவுத்துப்போட்டு ஆடி, அதற்கெனவே உள்ள ஆர்டிஸ்ட்டுகளின் வயிற்றில் அடித்த(இது மறைமுக அடிங்க) ‘ஆறு பட்டெக்ஸ்’(but, இங்குள்ள பட்டெக்ஸை, 'வேட்டை நாய் தொகுதி' என்கிறது லிஃப்கோ) தம்பிக்கு இது நன்றாகவே தெரியும்.

but, ஒன் திங். six pack is not a decision authority. இட்ஸ் ஒன்லி a நாடி நரம்பெல்லாம் முருக்கினதாஸ் கம்பெனி முடிவு.

ஆனால், இதைக்கூட தப்பிலைன்னு நீங்க வாதிடலாம்.

‘‘ஒண்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரம் இல்லை, துரோகம்.(இந்த துரோகத்துல ஒண்ணு, உங்க ‘மம்மி கன்ட்ரி’யும்தானே மிஸ்டர் முருகதாஸ்? அதை எதிர்த்து ஏன் பேசவில்லை? செலக்ட்டிவ் அம்னீசியாவா?)

தமிழனா இருந்தா, திருப்பியடிக்கணும்’’ என்கிற வசனம் இருந்ததால், இல்லாத அறிவை திரையிட முடியாது என்று திருப்பி அனுப்பியதே இலங்கை அரசு.

வீரனா இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்கணும்?

‘ஒன்ஸ் மோர் ஓல்டு டயலாக்கு.’

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம். உன்போல் இரந்துண்டு(இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம்) வாழமாட்டோம்’’ என்று சொல்லிட்டு வீரனாக அல்லவா திரும்பியிருக்கணும். இங்குள்ள தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களும் சுருதி மூலமாக தமிழ்ச் சுருதியேற்றும் நீங்கள், ராஜபட்சே முன் வாலைச் சுருட்டி back-ல் வைத்துக்கொண்டது ஏன்?

‘‘நக்கிவிட்டீர்களே அய்யா ராஜபட்சே காலை. நீக்கிவிட்டீர்களே அய்யா வீரஞ்செறிந்த ரோலை’’

நீங்களே நீக்கிட்டதால, ‘‘அடச்சீ, இது வெறும் குத்தாட்டப் படம்தானே’’ என்று ராஜபட்சேவும் விட்டுவிட்டானே அய்யா தியேட்டருக்குள்ளே... கடைசியில் என்ன ஆச்சு?

“வெட்டி வேலாயுதம், இல்லாத அறிவு’ ரெண்டு படத்துக்கும், பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.” -newyarl.com

இப்போது ராஜபட்சேவுக்கு மிகுந்த சந்தோஷம். “எங்க இந்த நாய்ங்களெல்லாம், ‘சுதந்திரம், போர்க்குற்றம், ஐ.நா.சபை., சேனல் -4’னு நமக்கெதிரா செயல்படப்போகுதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நண்பர் முருகதாஸ் புண்ணியத்துல, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க, விசய்க்கும், சூர்யா’வுக்கும் சொம்பு தூக்கிட்டு சந்தோசமா இருக்கோம்’னு சொல்லாம சொல்லிட்டானுங்க. இனி, ஐ.நா சபையே ஆய்வுக்கு வந்தாலும் கவலையில்லை”ன்னு பாக்கிற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு திரியிறாராமே...

எனவே, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேராபத்தையும் மறந்து, சுருதி மூலமாக தமிழுணர்வை சுருதியேற்றிக்கொண்ட தமிழர்களே! இப்போது புரிகிறதா, “ஏன் எதிர்க்கவேண்டும் ‘இல்லாத அறிவை’?” என்பது!

ஜெயிக்கப்போவது யார்? தமிழ்நாட்டு பொருக்கிகளா, யாழ்ப்பாண பொருக்கிகளா?


தீபாவளித் திருநாள், தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் எப்படி, தீபாவளித் திருநாளையொட்டி பிரபலமானவர்களின் படங்கள் திரையிடப்பட்டனவோ, அப்படியே இலங்கையிலும் திரையிடப்பட்டன.
ஈல டம்ளர்களா: வெறும் பேண்டு வாத்தியம் பத்தாது. இந்த மாதிரி பால்காவடி தூக்கணும், அலகு குத்தணும், மொட்டை அடிக்கணும். சரியா?

அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘ஏழாம் அறிவும்’, விஜயின் நடிப்பில் உருவான ‘வேலாயுதமும்’ திரையிடப்பட்டன.
பொதுவாக, இப்படியான நடிகர்களுக்கு இந்தியாவில்தான் பாலாபிஷேகமும் பூசை வழிபாடுகளும் செய்வார்கள். இவ்வளவு ஏன், குஷ்புவுக்கே கோவில் கட்டி வணங்கும் கலாச்சாரமும் அங்கு உள்ளது. அப்படியிருக்க, ‘‘சென்ற தீபாவளித் தினத்தன்று, இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் நடைபெற்ற கூத்துக்களும், கும்மாளங்களும், இந்தியாவில்கூட இதுவரை நடைபெற்றதில்லை’’ எனலாம்.

பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் வயிற்றுக்கும் மதுவால் அபிஷேகம் செய்துகொள்ளப்பட்ட பின்பே, இவ்வாறான வீரசாகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதே அவமானகரமான உண்மை. கொடுமை என்னவென்றால், அரசாங்கம், மதுவின் வரியை அதிகரிக்க, அதிகரிக்க, அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது.

யாழ்ப்பாணச் சந்திகளில் நின்று பேண்டு வாத்தியம் வாசிக்கும் இளைஞர்கள் படும் பாடு, அவர்களின் குத்தாட்டங்கள்... அடடா! நாங்கள், ‘‘தமிழகத் தமிழர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல’’ என்றவாறு நடந்தேறுகின்றன. சிலர், திருகோணமலையில் சினிமா பார்க்கவென பாரிய போராட்டம் நடத்தி, காயமடைந்து, வைத்தியசாலையிலும் அனுமதி பெற்றுள்ளனர். இவங்கள், வடிவா மட்டக்களப்புப் பொடியல்போல, பால் ஊற்றவில்லைபோல. அதுதான் இவங்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியல கிடக்கிறாங்கள்.

மானங்கெட்ட ஆட்டம் பார்க்க, மானங்கெட்ட ஆட்டத்தில் க்ளிக் செய்யுங்கள்.


ஆதிகாலத்தில், இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மனித இனம், பின்பு கடவுளுக்கு வடிவம் கொடுத்து வணங்கி வந்தது. இவ்வாறு வணங்கும் போதும், பூசை வழிபாடுகளைச் செய்து பாலாபிஷேகம் செய்யும்போதும் ‘கடவுள் நேரில் வந்து அருள்புரிய மாட்டாரா’ என்ற நம்பிக்கையோடு வணங்கினார்கள்.

ஆனால், இன்று? அதற்கெல்லாம் கவலை இல்லை. ‘‘சூரியாவுக்கும், விஜய்க்கும் பூஜை செய்து, பாலாபிஷேகம் செய்தால் அவங்கள் நேரில வந்திட்டுப் போவாங்கள். ஒரு கஷ்டமும் இருக்காது.’’ என்று நினைக்கிறார்கள். மீறி, இதையெல்லாம் செய்யாமல் படம் பார்க்கப் போனால், ‘விஜய் குற்றம், சூரியா குற்றம்’ எல்லாம் உங்களைச் சூழ்ந்து போடும். எனவே, வடிவா பாலை ஊத்திட்டு, படம் பார்க்கப் போங்கடா...!

*அனுப்புங்கோ! அனுப்புங்கோ! வெளிநாட்டில இருந்து நல்...லா அனுப்புங்கோ! அப்பத்தான் நாங்கள், இன்னும் அதிகமா பேண்டு இசைக் கருவிகளை வாங்க முடியும்.

நன்றி: http://newyarl.com/

Tuesday, October 25, 2011

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு?

‘‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்’’ சொல்கிறது ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.

image/ta.wikipedia.org/Yoshitoshi

‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன். 

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,
 
‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.


‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார்.ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.

Tuesday, September 27, 2011

Alone in the Amazon: யார் மிருகம்? நெஞ்சைப் பதற வைக்கும் நிஜம்!

'I Shouldn't Be Alive:Alone in the Amazon'


அமேசான் காட்டுக்குள் El_Dorado-வை தேடிக் கிளம்புவதற்கு ஆயத்தமாகிறான் 22 வயது Benedict Allen.‘எல் டொரடோ’ என்பது தங்கப் புதையல் என அறியப்படுகிறது. Benedict Allen-ன் தந்தை ஒரு சாகச வீரர். அவரைப்போலவே சாகசம் புரியும் ஆவலில் தன்னந்தனியாக தன்னுடைய ஆசை நாய், ‘கேஷூ’வுடன் சிறிய படகு ஒன்றில் கிளம்புகிறான் பெனடிக்ட்.


போகும் வழியில் இரண்டு வழிகாட்டிகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான். இந்தக் காட்டில் நிறைய கொள்ளையர்களும், கொலைகாரர்களும் பதுங்கியிருக்கிறார்கள் என அவனுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. படகை கரை தட்டச் செய்து காட்டுக்குள் பிரவேசிக்கிறார்கள் பெனடிக்ட் குழுவினர்.


அங்கே ஒரு குடியிருப்பு தென்படுகிறது. அங்கிருக்கும் இரண்டு கொள்ளைக்காரர்களில் ஒருவன், “எல் டொரடோவை தேடுவதற்கு நான் உனக்கு உதவுகிறேன்” என பெனடிக்டுக்கு வாக்கு தருகிறான். வழிகாட்டிகள் விடைபெறுகிறார்கள்.


அன்று இரவு பெனடிக்ட் தூங்கிக்கொண்டிருக்கும்போது, கொள்ளைக்காரர்கள் பேசிக்கொள்வது காதில் விழுகிறது. “தூங்கிக் கொண்டிருக்கும்போதே இவன் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவோம்” என்கிறார்கள்.


பயந்துபோகும் பெனடிக்ட், கும்மிருட்டில் சத்தம்போடாமல் நாயை அழைத்துக்கொண்டு படகில் ஏறி தப்பிக்கிறான். மறுநாள் அந்த சிறிய படகு பாறை ஒன்றில் மோதி உடைகிறது. உயிர் காக்கும் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது, கூடவே நாயும்.ஒரு லைட்டர், திசைகாட்டி மற்றும் வெட்டுக் கத்தி ஒன்றுடன் கரையேறுகிறான் பெனடிக்ட். தான் எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்கு புலப்படவில்லை. அடர்ந்து வளர்ந்திருக்கும் அந்த மழைக் காட்டுக்குள்ளிருந்து உடனடியாக அவன் வெளியேறியாகவேண்டும்.


குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவு இல்லை, கூட வந்த நாயும் ஆறுதலுக்கு இல்லை. திசைகாட்டியை வைத்துக்கொண்டு திக்கு தெரியாமல் அலைகிறான் பெனடிக்ட். பகலில் விலங்குகள் என்றால், இரவில் பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லை.பூச்சுக் கடியால் உடம்பெல்லாம் காயம்பட, கொசுக்கடியால் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிறான். உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இல்லாததால், மலேரியா நோய் மிக மூர்க்கமாகப் பரவுகிறது.


அதிர்ஷ்டவசமாக, இரண்டு வாரங்கள் கழித்து ஈச்சமரம் ஒன்றைப் பார்க்கிறான். அதனுடைய பழங்களைப் பறித்து கூழாக்கி அதன் சாற்றை போதும் மட்டும் குடிக்கிறான். ஆனால், மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவன் வயிறு எந்த உணவையும் ஏற்கவோ, ஜீரணிக்கவோ மறுக்கிறது. அப்படியே வாந்தி எடுக்கிறான்.


சில நிமிடங்களுக்குப் பிறகு சிங்கம் ஒன்றின் கர்ஜ்னை கேட்கிறது. தீயைக் காட்டி அதை விரட்டுகிறான். அந்த நேரத்தில் இன்னும் ஒரு விலங்கு அவனை நோக்கி வருகிறது. என்ன ஒரு அதிர்ஷ்டம்! அது, அவனுடைய ஆசை நாய் கேஷூ. எப்படியோ, அது எஜமானைத் தேடி வந்துவிட்டது. விலங்குகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் பெனடிக்டுக்கு பாதுகாப்பாக கூடவே வருகிறது கேஷூ.


நாட்கள் செல்லச் செல்ல, பசியின் கொடுமை உக்கிரமடைகிறது. 20 நாட்கள் கடந்தும் வெளியேற வழி தெரியவில்லை. எது கிடைத்தாலும் தின்றுவிடத் துடிக்கும் பசியின் தீவிரத்தில், பெனடிக்டின் பார்வை அவனது அன்புக்குரிய ‘கேஷூ’ மீது பாய்கிறது.


கேஷுவை சாப்பிடலாமா...? கேஷூவை உற்று நோக்குகிறான் பெனடிக்ட்! அவனது கண்களில் உக்கிரம்.


ஆனால், கேஷூவின் கண்களில் விசுவாசமும் அன்பும் பொங்கி வழிவது அழகாகத் தெரிகிறது. என்னையே நம்பி, என்னுடைய பாதுகாப்புக்காக என்னுடனே அலையும் கேஷுவைக் கொல்வதா? குற்ற உணர்ச்சியில் கூணிக் குறுகுகிறான் பெனடிக்ட்.


நான்கு நாட்கள் கடந்து இன்றோடு 24-வது நாள். நாயை உணவாக்குவது குறித்த எண்ணம் பெனடிக்டிடம் தீவிரமடைகிறது. இதற்கு மேல் உணவு உட்கொள்ளவில்லை என்றால், மரணம் நிச்சயம் என்கிற நிலை.


ஒன்று, நாயைக் கொன்று பெனடிக்ட் உயிர் வாழவேண்டும். அல்லது பட்டினியால் உயிர்விடவேண்டும்.


வேறு வழியில்லை.கையில் இருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு நாயை நோக்குகிறான். நடக்கப்போவது எதுவுமே தெரியாமல், மாறாத விசுவாசத்தோடு அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது அப்பாவி கேஷூ.


வீரனைப்போல் நேருக்கு நேர் மோத விருப்பமும் துணிவும் இல்லாத பெனடிக்ட், கோழையைப்போல பின்னால் நின்று, ஒரே வெட்டாய் கேஷுவின் கழுத்தில் கத்தியை பாய்ச்சுகிறான்


......................................................


கேஷூவை சுட்டு, அதன் இறைச்சியை சாப்பிடுகிறான். ஆனால், உடலுக்குள் இருக்கும் மலேரியா கிருமிகளின் செயல்பாடுகளால், உணவை ஏற்க மறுக்கிறது வயிறு. மொத்தத்தையும் வாந்தி எடுக்கிறான்.


28-ம் நாள், காட்டைவிட்டு வெளியேறுகிறான். உள்ளூர்வாசிகளால், காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறான்.எஜமானனுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு அவனைப்போலவே பசி, பட்டினியுடன் பின் தொடரும் கேஷூ. சுயநலமாய் நடந்துகொண்ட பெனடிக்ட்.


உண்மையில் யார் மிருகம்?


இரண்டு நாட்களாக என்னைத் தூங்கவிடாமல், அடிக்கடி மனக்கண்ணில் பட்டு மறைகிறது கேஷூ. என்னாலும் ஜீரணிக்க முடியவில்லை.


http://www.youtube.com/watch?v=NgT7Vw5VdRM&feature=mfu_in_order&list=UL

Thursday, September 22, 2011

“விடியாத இரவு” -சிறையிலிருந்து நளினி எழுதும் தொடர்!


ன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.

‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் செய்தி வெளியான நாள் முதல், தமிழகம் மற்றும் உலகமெங்கும் எழுந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்கிறது. இன்று நீதிமன்றத் தடை உத்தரவால், மரணம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், உத்தரவு என்னவோ மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது.

மரண தண்டனை ஒழிப்பு என்கிற சமீபத்திய விவாதத்தின்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகு, உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கலாமா? வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே! இவர்களை உடனே தூக்கில் போடவேண்டும்’’ என்பதுபோன்ற பரவலான கருத்தாக்கங்கள் எழுந்தன.  

இந்த விவாதங்களுக்குள் போகும் முன்பாக, ‘நாங்கள் எப்படி கைது செய்யப் பட்டோம், எவ்வாறு நடத்தப்பட்டோம், எந்த சூழலில் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன’ என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். 

இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இளைய தலைமுறையினருக்கு எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியாதல்லவா?   அதற்காகத்தான் உங்களை பத்திரிக்கை வாயிலாக சந்திக்க விழைகிறேன். 

எம் மீதான சித்ரவதைகளை எழுதுவதே இன்னுமொரு சித்ரவதைதான்.

அன்புடன்
நளினி ஸ்ரீகரன்.

***********************************


14, ஜூன் -1991. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அன்று ரொம்பவும் இருட்டாக இருப்பதுபோல உணர்ந்தேன்.  

நானும் என் கணவர் ஸ்ரீகரனும்(முருகன்) இரவு 11 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டோம். அப்போது நான், இரண்டு மாத கர்ப்பம். மூன்று போலீசார் எங்கள் அருகில் வந்து என்னையும், முருகனையும் கைது செய்கிறோம் என்றும், ஆட்டோவில் ஏறுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.

நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றப்பட்டோம். ஆட்டோவின் இடது ஓரத்தில் ஒரு காவலர் அமர்ந்து கொண்டார். காவலர் அருகில் என் கணவர் முருகனும், முருகன் அருகில் நானும், எனக்கு அருகில் ஒரு உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அமர்ந்துகொண்டனர்.

மூன்று பேர் உட்காரும் இடத்தில், நான்கு பேர் உட்காந்து இருந்ததால், அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த உதவியாளர், என் உடலில் படக்கூடாத இடங்களில் தன் கையை வைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்தார். ஒரு தாயாக இருக்கும் என்னை, என் கணவர் அருகில் இருக்கும்போதே, இப்படி அசிங்கமாக நடந்துகொண்ட அந்த காவலர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? இப்போது  நினைத்தாலும் உடல் கூசுகிறது.  

‘கைது செய்யப்பட்டோம்’ என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள, ஒரு சில வினாடிகள்கூட கொடுக்கப்படாமல், எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையின் வேதனையை அனுபவித்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுக் குழுவின் ‘மல்லிகை’ அலுவலகம். அந்த மல்லிகை அலுவலகம் எனக்கும், என்னோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு நரகத்தை காண்பிக்கப்போகிறது என்பது, அந்த ஆட்டோ காம்பவுண்டுக்குள் நுழையும்போது எனக்கு தெரியாது.

ஆனால், மல்லிகைக்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே நரகம் தெரிந்துவிட்டது. பெயர்தான் மல்லிகையே தவிர, மல்லிகை மலருக்கு உண்டான மென்மையோ, மணமோ அந்த கட்டிடத்தில் துளியும் கிடையாது. மாறாக மலருக்கு நேர் மாறான மிருககுணம் உடைய மனிதர்களும், மலத்திலும், சிறுநீரிலும், வாந்தியிலும் என்னைப் போன்றவர்களைப் புரள வைக்கப்பட்ட அவலமும்தான் அந்தக் கட்டிடத்தின் அடையாளங்கள்.

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த விதத்திலும் மனித உரிமைகளை மீறாமல், ராஜீவ் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது என்று புத்தகம் எழுதும் அளவுக்கு மேடைதோறும் இப்போதும் பேசிவரும் அந்த முன்னாள் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  

எங்களைப் பார்த்ததும், “கொலைகாரி சிக்கிட்டாளா? ரெண்டு நாய்களும் சிக்கிட்டாங்களா? அடிச்சு இவங்க முதுகுத் தோலை உரிங்க. அப்போதான் வழிக்கு வருவாங்க” என்று கடும் குரலில் உத்தரவிட்டார். நானும், என் கணவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். மிகவும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி, இடக்குமடக்கான கேள்விகளை கேட்டனர்.

அரை மணிக்கும் மேலாக எனக்கு ஆபாச அர்ச்சனைகள் நீண்டுகொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்து நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அது, என் கணவர் வைக்கப்பட்டிருந்த அறை. வேகவேகமாக அந்த அறைக்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே நான் கண்ட காட்சி! இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. எழுதும் என் விரல்கள் ஆடுகின்றன. என் கணவரை நிர்வாணப்படுத்தி பல பேர் சுற்றி நின்று லத்தியால் அடித்துக் கொண்டிருந்தனர். என் கணவர் வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். நான், கண்களை மூடிக்கொண்டு “அவரை விட்டுவிடுங்கள், அடிக்காதீர்கள்” என்று அலறினேன், அழுதேன், கெஞ்சினேன்.

ஆனால், லத்தி அடிகள் விழுந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த ஒரு அதிகாரி, “என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? சொல்லுகிறபடி கேட்காவிட்டால் உனக்கும் இதே கதிதான். உன் கணவரை அடித்தே கொன்று விடுவோம்” என்று கூறிவிட்டு, என்னை பழைய அறைக்கே இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் என்னை தூங்கவிடவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அந்த இரவிலும் அந்த அறையில் பளிச்சென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என் கண்ணை உறுத்தின. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கைகள் என் கழுத்தை நோக்கி நீண்டது!

-இரவுகள் நீளும்

நன்றி, ‘மீடியா வாய்ஸ்’ 24.09.2011 இதழ்




Tuesday, August 23, 2011

காங்கிரஸ் கொடிதான் தேசியக் கொடியா? -வரலாற்றை உலுக்கப்போகும் வழக்கு!






‘‘தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் காங்கிரஸ் கொடியை எரிக்கும் போதெல்லாம், இந்தியாவில் தேசியக் கொடி எரிக்கப்படுவதாக வெளிநாட்டினர் தவறாகக் கருதுகின்றனர். எனவே, காங்கிரஸ் கொடியை மாற்றவேண்டும்’’ என்று பொதுநல வழக்குபோட ஆயத்தமாகி வருகிறது இந்து மக்கள் கட்சி.


‘‘கொடியை மாற்றுவதா?’’ நாம், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.கண்ணனை சந்தித்தோம். அவரும், அவருடைய வழக்கறிஞர் .ராஜா செந்தூர் பாண்டியனும் நம்மிடம் பேசினர்.

‘‘‘இந்தியர்களாகிய நமக்கு, அதாவது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிஸ் மற்றும் இந்தியாவை தாயகமாகக் கொண்ட அனைவருக்கும் பொதுவான ஒரு கொடி வாழ்வதற்கும், சாவதற்கும் அவசியமானதுஎன்கிறார் மகாத்மா காந்தி.

இந்தியா மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகளை கொண்ட தியோசபிகல் சொசைட்டியின்..ஹ்யூம், தாதாபாய் நவ்ரோஜி, தின்ஷா வாச்சா, டபிள்யூ.சி.பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மோனோமமுன் கவிஸ், எம்.ஜி.ராண்டே மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன்ஆகியோர்தான், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தோற்றுவிக்கப்பட்டபோது, அது பிரிட்டிஷ் ஆட்சியை குறைகூறி ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் இந்திய அரசில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுத் தருவதே நோக்கமாக இருந்தது.

07.08.1906 அன்று, கொல்கத்தாவில் உள்ள பார்சீன் பகான் ஸ்குயர்(கிரீன் பார்க்) எனும் இடத்தில் நமது தேசத்தின் முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலே பச்சையும், நடுவில் மஞ்சள் நிறமும், கீழே சிவப்பு என மூவர்ணத்தில் அக்கொடி இருந்தது.

மேலே அமைந்த பச்சை நிறப் பகுதியில், எட்டு வெள்ளைத் தாமரைகள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் அமைந்த மஞ்சள் நிறப் பகுதியில்வந்தே மாதரம்என கருநீல நிறத்தில், தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்பட்டு இருந்தது. கீழே அமைந்த சிவப்பு நிறப் பகுதியில், இடது புறத்தில் வெள்ளை நிற வளர்பிறை சந்திரனும், வலது புறத்தில் வெள்ளை நிற சூரியனும் அமைக்கப்பட்டிருந்தன.

1907-ம் ஆண்டு வாக்கில் திருமதி.மதாம் கமா மற்றும் அவரது இயக்கத்தினரால்(நாடு கடந்த போராட்டக்காரர்கள்) பாரிஸில் இரண்டாவதாக ஒரு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த இரண்டாவது கொடியும், கிட்டதட்ட முதல் கொடியைப் போலவே இருந்தது.

1917-ல் சுதந்திர போராட்டம் முக்கிய கட்டத்தை எட்டியபோது, ஹோம் ரூல் மூவ்மெண்ட்டை சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையாராலும், திரு.லோக்மான்ய திலகராலும், மூன்றாவதாக ஒரு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இக்கொடியின் மேற்புறத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடியும் இடம்பெற்றதால், இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கண்ணன்

அதன்பின்னர், 1921-ல் திரு.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் காங்கிரஸுக்கு தலைமை ஏற்ற பிறகுதான், மூவர்ணக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் பேஷ்வாடா(தற்போதைய விஜயவாடா)வில் நடந்தபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தபிங்காலி வெங்கையாஎன்பவர், சிவப்பு மற்றும்
பச்சை நிறங்களைக் கொண்ட ஒரு கொடியினை காந்திஜியிடம் கொடுத்தார்.

சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் அப்போதைய இந்திய திருநாட்டின் இரு பெரும் மதங்களையும் குறிப்பிடும்படி அமைத்திருந்தார். மேலும், அக்கொடியில் காந்திஜியின் விருப்பப்படி வளர்ச்சியை விளக்கும் வகையில், ராட்டை சக்கரம் இருக்குமாறும் வடிவமைத்திருந்தார். காந்திஜி அவர்கள், அந்தக் கொடியில் பிற மதத்தினரையும், அமைதியையும் குறிப்பிடும் வகையில், வெள்ளை நிறத்தை சேர்க்கும்படி அறிவுறுத்தினார்.

இதுதான் மூவர்ணக் கொடி வந்த கதையாகும்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தக் கொடியை ஏற்கவில்லை. அதே நேரத்தில், காந்திஜி அவர்களின் அனுமதியுடன் காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கூட்டங்களிலும் அக்கொடி பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, நாடு தழுவிய அளவில் இக்கொடி பிரபலமாகியது. 1931-ல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கராச்சியில் நடந்தபோது, கொடியின் தேவை மற்றும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1931-ம் ஆண்டுதான், நமது தேசிய கொடி வரலாற்றில் மிகச் சிறப்பான காலகட்டமாகும். மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அப்போதுதான் நிறைவேற்றப்பட்டது. அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கொடிதான் தற்போதுள்ள நமது தேசியக்(காவி, வெள்ளை மற்றும் பச்சை) கொடியாகும்.

அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்து என்னவென்றால், மேற்படி மூன்று நிறங்கள் மதங்களை குறிப்பது அல்ல என்பதாகும். அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காவி நிறம் நாட்டின் பலத்தையும், துணிவையும், வெள்ளை நிறம் உண்மையையும், அமைதியையும், பச்சை நிறம் வளமையையும், செழுமையையும் பிரதிபலிக்கும் என்பதாகும்.
 
மேலும், அக்கொடியில் வெள்ளை நிறப் பகுதியில் கையால் சுற்றும் நீல நிற ராட்டை சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. மூன்றுக்கு இரண்டு எனும் பரப்பளவில் இக்கொடி அங்கீகரிக்கப்பட்டது. இக்கொடியை முறையாக காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொண்டு, தீர்மானம் நிறைவேற்றியது.  

நமது நாட்டில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற, சுதந்திர வேட்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த, இந்த மூவர்ணக் கொடி பயன்பட்டது.

22.07.1947-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால், மூவர்ணத்தில் இருந்த காங்கிரஸின் கொடி, சுதந்திர இந்திய தேசிய கொடியாக சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூவர்ணக் கொடியில், முன்பு இருந்த ராட்டை சக்கரத்தினை மாற்றி வெள்ளை நிறப் பகுதியில் மவுரிய பேரரசர் அசோகரின் தர்மசக்கரம் இடம் பெற்றது.

இதுவே காங்கிரஸ் கட்சியின் கொடி, நமது தேசிய கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் வரலாறு.

சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் தேசிய கொடி பற்றிய அதன் முடிவை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான், நமது தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசமில்லாமல் ஒரே தோற்றத்தில் தெரியும்படி ஆகிவிட்டது. நமது நாட்டின் இராணுவ கொடியிலும், இக்கொடி அலங்காரமாக இடம் பெற்று, கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பிற நாடுகளில், அந்நாட்டு தேசியக் கொடி பெரிதும் மதிக்கப்படுகிறது. இங்கே, காங்கிரஸ் கொடியின் நிறங்களுக்கும், நமது தேசியக் கொடியின் நிறங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், நமது தேசியக் கொடி பிற நாடுகள் அளவிற்கு போற்றி புகழப்படுவதில்லை.

படித்தவர்களுக்கே இரு கொடிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காங்கிரஸ் கொடி எனும் நோக்கத்தில் இந்த மூவர்ணம், இஷ்டத்திற்கு அக்கட்சிக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கொடிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின்போது, காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தும் நோக்கில், தேசிய கொடியும் அவமானப்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கொடியை எரிக்கும்போது, டி.வி. மற்றும் மீடியாவின் தற்போதைய வளர்ச்சி காரணமாக உடனுக்குடன் அதை வெளிநாட்டில் பார்க்கும் மக்கள், இந்தியர்களின் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நமது தேசிய கொடி, உலகளவில் பிரபலமாகி இருப்பதால், தற்போது தேசிய கொடியை மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். மாற்ற சாத்தியமுள்ளது காங்கிரஸ் கொடி மட்டுமே. எனவேதான், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர இருக்கிறோம். சட்ட பூர்வமாக இதற்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும், நாடு முழுவதிலிருந்தும் சேகரித்து வருகிறோம்.

நமது தேசியக் கொடி, உலகளவில் தனித்துவம் பெற்று விளங்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கொடியை மாற்றுவதால், எவ்வித பெரும் குழப்பமும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஏற்படப் போவதில்லைஏனெனில், தேர்தல் சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க அதன்கைசின்னம்தான் முக்கியம்.

நமது தேசிய கொடிக்காகவும், அதன் தனித் தன்மைக்காகவும் காங்கிரஸ் கட்சியின் தலைமை, தானாக முன் வந்து காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கொடியினை மாற்றி அமைக்கவேண்டும். அப்படிச் செய்தால், நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு பெருகும்’’ என்று விரிவாகவே விளக்கம் தந்தனர்.

நாம் இக்கருத்துக்களை, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழநெடுமாறன் முன் வைத்தோம்.

நம்மிடம் பேசியவர், ‘‘1946-ம் ஆண்டு, இந்திய தேசியக்கொடி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்தேறியது. அவ்விவாதத்தின்போது, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கலாம் என்று நேரு கூறினார்.
ஆனால், ‘காங்கிரஸ் கட்சியின் கொடி மாதிரியே தேசியக் கொடி இருக்கக்கூடாதுஎன்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன. காங்கிரஸ், இதற்கு உடன்படவில்லை.

இக்கொடியை மகாத்மா காந்தியடிகளும் விரும்பவில்லை. ‘காங்கிரஸ் கட்சியின் வேலை முடிந்துவிட்டது. எனவே, கட்சியை கலைத்துவிடுங்கள்என்றுதான் அவர் சொன்னார். அவர் சொன்னதுபோல் செய்திருந்தால், இன்றைக்கு காங்கிரஸ் கொடி இல்லாமல் போய், தேசியக்கொடி மட்டுமே இருந்திருக்கும். இதற்கு மரியாதையும் கிடைத்திருக்கும்.

ஆனால், காந்தியடிகள் சொன்னதை ஏற்பதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை.சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்கிற முத்திரையுடன் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். இதனால், அவரது கருத்தை ஏற்கவில்லை.
இது மட்டுமல்ல. தேசியக் கொடியை பற்றிய விளக்கங்களைக்கூட காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாகச் சொல்ல ஆரம்பித்தனர்.

மத்தியில் இருக்கும் சக்கரம் அசோகருடைய ஸ்தூபியில் உள்ளது. இது மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தும் சின்னம்என்றார் நேரு.
ஆனால், அரசியல் சட்டம் வகுத்த ஆறு பேர் குழுவில் ஒருவரும், அப்போது மத்திய மந்திரியாக இருந்தவருமான கே.எம்.முன்ஷி, ‘இது மகாவிஷ்ணுவின் சக்கரம்என்று சொன்னார்.

இது, பிற மதத்தவர் மத்தியில், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி, ஆளுக்கு ஆள் விளக்கம் கொடுத்தார்களே தவிர, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சரியான விளக்கத்தை அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கவில்லை.

அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தின் காரணமாக, கட்சிக்கொடியையே தேசியக்கொடியாக ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள். இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கோ, அதைப் பற்றி விளக்கம் தருவதற்கோ, அவர்கள் முன்வரவில்லை. எனவே, இன்றுவரை, இவ்விவாதம் தொடர்கிறது.

பிற நாடுகளைப் பொறுத்த அளவில், முக்கிய கட்சிகள் இருக்கின்றன, தேசியக்கொடியும் இருக்கின்றது. ஆனால், தேசியக் கொடிக்குதான் முதல் மரியாதை தருகிறார்கள். கட்சி அலுவலகமாக இருந்தாலும்கூட நாட்டின் கொடியை ஏற்றிவிட்டு, பிறகுதான் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் இப்படி இல்லாமல் போனதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சிக் கொடியையே தேசியகொடியாக அறிவித்ததும், காங்கிரஸ் கொடிக்கும், தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இல்லாமல் போனதும்தான்.

இதில், வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் அலுவலகத்தில்கூட தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. மாறாக, காங்கிரஸ் கொடியைத்தான் ஏற்றுகிறார்கள். எனவே, தேசியக் கொடியின் முக்கியத்துவம் காங்கிரஸ்காரர்களுக்கே புரியாமல் போய்விட்டது.

1969-ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. ஸ்தாபன காங்கிரஸ், ராட்டை கொடியை உபயோகப்படுத்தியது. பிரிந்து வந்த இந்திராகாந்தி, தங்களுடைய தேர்தல் சின்னமாக கை சின்னத்தை கேட்டு வாங்கினார். அதையே கொடியில் பொறித்தார்.
எந்த ராட்டையை, ஏழை மக்களின் சின்னமாகக் கருதி மகாத்மா காந்தி பொறித்தாரோ, அதையே தூக்கி எறிந்துவிட்டு காந்தியையும் தூக்கி எறிந்தவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். இதையெல்லாம் தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகிற அவமதிப்பாகத்தான் கருதவேண்டி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும் இன்றுவரை இதுகுறித்து உறுத்தல் இல்லை.

கொடியை மாற்ற வேண்டும் என்கிற விவாதம் இன்றைக்கு தேவையா? என்றால், தேவைதான்

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒவொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. ஆக, எல்லா தேசிய இனங்களின் அடையாளங்களையும் அல்லது எல்லா தேசிய இனங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தேசியக் கொடி உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியாக இருக்க முடியும். மாறாக, காங்கிரஸ் கட்சியின் கொடியையே, தேசியக் கொடியாக கடைபிடித்து வருவது பெரும் தவறு.’’ என்றார்.

ஆக, மொத்ததில் 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட தேசிய கொடி குறித்த வரையறை, முற்றுப் பெறவில்லை. தற்போது இந்த விவாதம்மீடியா வாய்ஸ்மூலமாக மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மிச்சத்தை நீதிமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

-நன்றி, ‘மீடியா வாய்ஸ்” 20.08.2011