Tuesday, August 23, 2011

காங்கிரஸ் கொடிதான் தேசியக் கொடியா? -வரலாற்றை உலுக்கப்போகும் வழக்கு!






‘‘தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் காங்கிரஸ் கொடியை எரிக்கும் போதெல்லாம், இந்தியாவில் தேசியக் கொடி எரிக்கப்படுவதாக வெளிநாட்டினர் தவறாகக் கருதுகின்றனர். எனவே, காங்கிரஸ் கொடியை மாற்றவேண்டும்’’ என்று பொதுநல வழக்குபோட ஆயத்தமாகி வருகிறது இந்து மக்கள் கட்சி.


‘‘கொடியை மாற்றுவதா?’’ நாம், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.கண்ணனை சந்தித்தோம். அவரும், அவருடைய வழக்கறிஞர் .ராஜா செந்தூர் பாண்டியனும் நம்மிடம் பேசினர்.

‘‘‘இந்தியர்களாகிய நமக்கு, அதாவது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிஸ் மற்றும் இந்தியாவை தாயகமாகக் கொண்ட அனைவருக்கும் பொதுவான ஒரு கொடி வாழ்வதற்கும், சாவதற்கும் அவசியமானதுஎன்கிறார் மகாத்மா காந்தி.

இந்தியா மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகளை கொண்ட தியோசபிகல் சொசைட்டியின்..ஹ்யூம், தாதாபாய் நவ்ரோஜி, தின்ஷா வாச்சா, டபிள்யூ.சி.பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மோனோமமுன் கவிஸ், எம்.ஜி.ராண்டே மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன்ஆகியோர்தான், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ல் தோற்றுவிக்கப்பட்டபோது, அது பிரிட்டிஷ் ஆட்சியை குறைகூறி ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் இந்திய அரசில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுத் தருவதே நோக்கமாக இருந்தது.

07.08.1906 அன்று, கொல்கத்தாவில் உள்ள பார்சீன் பகான் ஸ்குயர்(கிரீன் பார்க்) எனும் இடத்தில் நமது தேசத்தின் முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலே பச்சையும், நடுவில் மஞ்சள் நிறமும், கீழே சிவப்பு என மூவர்ணத்தில் அக்கொடி இருந்தது.

மேலே அமைந்த பச்சை நிறப் பகுதியில், எட்டு வெள்ளைத் தாமரைகள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் அமைந்த மஞ்சள் நிறப் பகுதியில்வந்தே மாதரம்என கருநீல நிறத்தில், தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்பட்டு இருந்தது. கீழே அமைந்த சிவப்பு நிறப் பகுதியில், இடது புறத்தில் வெள்ளை நிற வளர்பிறை சந்திரனும், வலது புறத்தில் வெள்ளை நிற சூரியனும் அமைக்கப்பட்டிருந்தன.

1907-ம் ஆண்டு வாக்கில் திருமதி.மதாம் கமா மற்றும் அவரது இயக்கத்தினரால்(நாடு கடந்த போராட்டக்காரர்கள்) பாரிஸில் இரண்டாவதாக ஒரு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த இரண்டாவது கொடியும், கிட்டதட்ட முதல் கொடியைப் போலவே இருந்தது.

1917-ல் சுதந்திர போராட்டம் முக்கிய கட்டத்தை எட்டியபோது, ஹோம் ரூல் மூவ்மெண்ட்டை சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையாராலும், திரு.லோக்மான்ய திலகராலும், மூன்றாவதாக ஒரு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இக்கொடியின் மேற்புறத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடியும் இடம்பெற்றதால், இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கண்ணன்

அதன்பின்னர், 1921-ல் திரு.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் காங்கிரஸுக்கு தலைமை ஏற்ற பிறகுதான், மூவர்ணக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் பேஷ்வாடா(தற்போதைய விஜயவாடா)வில் நடந்தபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தபிங்காலி வெங்கையாஎன்பவர், சிவப்பு மற்றும்
பச்சை நிறங்களைக் கொண்ட ஒரு கொடியினை காந்திஜியிடம் கொடுத்தார்.

சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் அப்போதைய இந்திய திருநாட்டின் இரு பெரும் மதங்களையும் குறிப்பிடும்படி அமைத்திருந்தார். மேலும், அக்கொடியில் காந்திஜியின் விருப்பப்படி வளர்ச்சியை விளக்கும் வகையில், ராட்டை சக்கரம் இருக்குமாறும் வடிவமைத்திருந்தார். காந்திஜி அவர்கள், அந்தக் கொடியில் பிற மதத்தினரையும், அமைதியையும் குறிப்பிடும் வகையில், வெள்ளை நிறத்தை சேர்க்கும்படி அறிவுறுத்தினார்.

இதுதான் மூவர்ணக் கொடி வந்த கதையாகும்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அந்தக் கொடியை ஏற்கவில்லை. அதே நேரத்தில், காந்திஜி அவர்களின் அனுமதியுடன் காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கூட்டங்களிலும் அக்கொடி பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, நாடு தழுவிய அளவில் இக்கொடி பிரபலமாகியது. 1931-ல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கராச்சியில் நடந்தபோது, கொடியின் தேவை மற்றும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1931-ம் ஆண்டுதான், நமது தேசிய கொடி வரலாற்றில் மிகச் சிறப்பான காலகட்டமாகும். மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அப்போதுதான் நிறைவேற்றப்பட்டது. அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கொடிதான் தற்போதுள்ள நமது தேசியக்(காவி, வெள்ளை மற்றும் பச்சை) கொடியாகும்.

அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்து என்னவென்றால், மேற்படி மூன்று நிறங்கள் மதங்களை குறிப்பது அல்ல என்பதாகும். அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காவி நிறம் நாட்டின் பலத்தையும், துணிவையும், வெள்ளை நிறம் உண்மையையும், அமைதியையும், பச்சை நிறம் வளமையையும், செழுமையையும் பிரதிபலிக்கும் என்பதாகும்.
 
மேலும், அக்கொடியில் வெள்ளை நிறப் பகுதியில் கையால் சுற்றும் நீல நிற ராட்டை சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. மூன்றுக்கு இரண்டு எனும் பரப்பளவில் இக்கொடி அங்கீகரிக்கப்பட்டது. இக்கொடியை முறையாக காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொண்டு, தீர்மானம் நிறைவேற்றியது.  

நமது நாட்டில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற, சுதந்திர வேட்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த, இந்த மூவர்ணக் கொடி பயன்பட்டது.

22.07.1947-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியால், மூவர்ணத்தில் இருந்த காங்கிரஸின் கொடி, சுதந்திர இந்திய தேசிய கொடியாக சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூவர்ணக் கொடியில், முன்பு இருந்த ராட்டை சக்கரத்தினை மாற்றி வெள்ளை நிறப் பகுதியில் மவுரிய பேரரசர் அசோகரின் தர்மசக்கரம் இடம் பெற்றது.

இதுவே காங்கிரஸ் கட்சியின் கொடி, நமது தேசிய கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் வரலாறு.

சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் தேசிய கொடி பற்றிய அதன் முடிவை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால்தான், நமது தேசிய கொடிக்கும், காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசமில்லாமல் ஒரே தோற்றத்தில் தெரியும்படி ஆகிவிட்டது. நமது நாட்டின் இராணுவ கொடியிலும், இக்கொடி அலங்காரமாக இடம் பெற்று, கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பிற நாடுகளில், அந்நாட்டு தேசியக் கொடி பெரிதும் மதிக்கப்படுகிறது. இங்கே, காங்கிரஸ் கொடியின் நிறங்களுக்கும், நமது தேசியக் கொடியின் நிறங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், நமது தேசியக் கொடி பிற நாடுகள் அளவிற்கு போற்றி புகழப்படுவதில்லை.

படித்தவர்களுக்கே இரு கொடிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காங்கிரஸ் கொடி எனும் நோக்கத்தில் இந்த மூவர்ணம், இஷ்டத்திற்கு அக்கட்சிக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கொடிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின்போது, காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தும் நோக்கில், தேசிய கொடியும் அவமானப்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கொடியை எரிக்கும்போது, டி.வி. மற்றும் மீடியாவின் தற்போதைய வளர்ச்சி காரணமாக உடனுக்குடன் அதை வெளிநாட்டில் பார்க்கும் மக்கள், இந்தியர்களின் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நமது தேசிய கொடி, உலகளவில் பிரபலமாகி இருப்பதால், தற்போது தேசிய கொடியை மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். மாற்ற சாத்தியமுள்ளது காங்கிரஸ் கொடி மட்டுமே. எனவேதான், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர இருக்கிறோம். சட்ட பூர்வமாக இதற்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும், நாடு முழுவதிலிருந்தும் சேகரித்து வருகிறோம்.

நமது தேசியக் கொடி, உலகளவில் தனித்துவம் பெற்று விளங்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கொடியை மாற்றுவதால், எவ்வித பெரும் குழப்பமும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஏற்படப் போவதில்லைஏனெனில், தேர்தல் சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க அதன்கைசின்னம்தான் முக்கியம்.

நமது தேசிய கொடிக்காகவும், அதன் தனித் தன்மைக்காகவும் காங்கிரஸ் கட்சியின் தலைமை, தானாக முன் வந்து காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கொடியினை மாற்றி அமைக்கவேண்டும். அப்படிச் செய்தால், நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு பெருகும்’’ என்று விரிவாகவே விளக்கம் தந்தனர்.

நாம் இக்கருத்துக்களை, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழநெடுமாறன் முன் வைத்தோம்.

நம்மிடம் பேசியவர், ‘‘1946-ம் ஆண்டு, இந்திய தேசியக்கொடி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்தேறியது. அவ்விவாதத்தின்போது, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கலாம் என்று நேரு கூறினார்.
ஆனால், ‘காங்கிரஸ் கட்சியின் கொடி மாதிரியே தேசியக் கொடி இருக்கக்கூடாதுஎன்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன. காங்கிரஸ், இதற்கு உடன்படவில்லை.

இக்கொடியை மகாத்மா காந்தியடிகளும் விரும்பவில்லை. ‘காங்கிரஸ் கட்சியின் வேலை முடிந்துவிட்டது. எனவே, கட்சியை கலைத்துவிடுங்கள்என்றுதான் அவர் சொன்னார். அவர் சொன்னதுபோல் செய்திருந்தால், இன்றைக்கு காங்கிரஸ் கொடி இல்லாமல் போய், தேசியக்கொடி மட்டுமே இருந்திருக்கும். இதற்கு மரியாதையும் கிடைத்திருக்கும்.

ஆனால், காந்தியடிகள் சொன்னதை ஏற்பதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை.சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்கிற முத்திரையுடன் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். இதனால், அவரது கருத்தை ஏற்கவில்லை.
இது மட்டுமல்ல. தேசியக் கொடியை பற்றிய விளக்கங்களைக்கூட காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாகச் சொல்ல ஆரம்பித்தனர்.

மத்தியில் இருக்கும் சக்கரம் அசோகருடைய ஸ்தூபியில் உள்ளது. இது மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தும் சின்னம்என்றார் நேரு.
ஆனால், அரசியல் சட்டம் வகுத்த ஆறு பேர் குழுவில் ஒருவரும், அப்போது மத்திய மந்திரியாக இருந்தவருமான கே.எம்.முன்ஷி, ‘இது மகாவிஷ்ணுவின் சக்கரம்என்று சொன்னார்.

இது, பிற மதத்தவர் மத்தியில், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி, ஆளுக்கு ஆள் விளக்கம் கொடுத்தார்களே தவிர, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சரியான விளக்கத்தை அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கவில்லை.

அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தின் காரணமாக, கட்சிக்கொடியையே தேசியக்கொடியாக ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள். இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கோ, அதைப் பற்றி விளக்கம் தருவதற்கோ, அவர்கள் முன்வரவில்லை. எனவே, இன்றுவரை, இவ்விவாதம் தொடர்கிறது.

பிற நாடுகளைப் பொறுத்த அளவில், முக்கிய கட்சிகள் இருக்கின்றன, தேசியக்கொடியும் இருக்கின்றது. ஆனால், தேசியக் கொடிக்குதான் முதல் மரியாதை தருகிறார்கள். கட்சி அலுவலகமாக இருந்தாலும்கூட நாட்டின் கொடியை ஏற்றிவிட்டு, பிறகுதான் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் இப்படி இல்லாமல் போனதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சிக் கொடியையே தேசியகொடியாக அறிவித்ததும், காங்கிரஸ் கொடிக்கும், தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இல்லாமல் போனதும்தான்.

இதில், வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் அலுவலகத்தில்கூட தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. மாறாக, காங்கிரஸ் கொடியைத்தான் ஏற்றுகிறார்கள். எனவே, தேசியக் கொடியின் முக்கியத்துவம் காங்கிரஸ்காரர்களுக்கே புரியாமல் போய்விட்டது.

1969-ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. ஸ்தாபன காங்கிரஸ், ராட்டை கொடியை உபயோகப்படுத்தியது. பிரிந்து வந்த இந்திராகாந்தி, தங்களுடைய தேர்தல் சின்னமாக கை சின்னத்தை கேட்டு வாங்கினார். அதையே கொடியில் பொறித்தார்.
எந்த ராட்டையை, ஏழை மக்களின் சின்னமாகக் கருதி மகாத்மா காந்தி பொறித்தாரோ, அதையே தூக்கி எறிந்துவிட்டு காந்தியையும் தூக்கி எறிந்தவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். இதையெல்லாம் தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகிற அவமதிப்பாகத்தான் கருதவேண்டி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும் இன்றுவரை இதுகுறித்து உறுத்தல் இல்லை.

கொடியை மாற்ற வேண்டும் என்கிற விவாதம் இன்றைக்கு தேவையா? என்றால், தேவைதான்

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒவொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. ஆக, எல்லா தேசிய இனங்களின் அடையாளங்களையும் அல்லது எல்லா தேசிய இனங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தேசியக் கொடி உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியாக இருக்க முடியும். மாறாக, காங்கிரஸ் கட்சியின் கொடியையே, தேசியக் கொடியாக கடைபிடித்து வருவது பெரும் தவறு.’’ என்றார்.

ஆக, மொத்ததில் 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட தேசிய கொடி குறித்த வரையறை, முற்றுப் பெறவில்லை. தற்போது இந்த விவாதம்மீடியா வாய்ஸ்மூலமாக மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மிச்சத்தை நீதிமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

-நன்றி, ‘மீடியா வாய்ஸ்” 20.08.2011