Friday, December 31, 2010

தேவாலயத்தில் ஆடுறான்யா சூது! இது சென்னைலதான் கீது!

‘‘தி.நகர்ல மட்டும் 72 சூதாட்ட விடுதிகள் இருக்குன்னா, எவ்ளோ மாமூல் போகும்னு பாத்துக்கங்க.’’ எடுத்த எடுப்பில் அதிர வைத்தார் அந்த இன்ஃபார்மர். ‘‘என்னைய்யா சொல்ற?’’ அதிர்ச்சி விலகாமல் வாய்பிளந்த நம்மை, அத்தனை கிளப்புகளையும் சுற்றிக் கிருகிருக்க வைத்துவிட்டுத்தான் அமர்ந்தார்.

‘மனமகிழ் மன்றம்’ என்கிற பெயரில் விதிமுறைகளை மதிக்காமல் சீட்டாட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த விடுதிகள், தி.நகர் மட்டுமல்லாது சென்னை முழுவதும் பரந்து கிடக்கின்றன. பண்ணை வீடுகள், பங்களாக்கள், உயர்தர கிளப்புகள் போன்றவற்றிலும் சூதாட்டம் நடைபெறுகிறது என்றாலும், அவற்றில் நுழைந்து வேவு பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க்கான(இன்ஃபார்மருக்கு) விஷயம் என்பதால், அவை தவிர்த்து மீதமுள்ள கிளப்புகளை ஒரு ரவுண்டு வந்தோம்.

முதல் கட்ட ரவுண்ட்-அப், கீழ்ப்பாக்கம், ஐ.சி.எப் மற்றும் அயனாவரத்தில் ஆரம்பித்தது.

இந்தப் பகுதியில் சுமார் 10 சூதாட்ட விடுதிகள் இருக்கின்றன. எல்லாமே சொகுசு மற்றும் சுகாதாரம் அற்ற சுமார் ரகங்கள். எந்தக் கட்டடம் வாடகைக்கு கிடைக்கிறதோ, அதிலேயே தொழிலை ஆரம்பித்துவிடுகிறார்கள். கோவில், கழிவறை என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அயனாவரத்தில் ஒரு கிறிஸ்தவ ஜப வழிபாட்டுக் கூடமே, சூதாட்ட விடுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

அயனாவரம் செகரட்ரியேட் காலனியில் ஜெயின் கோயிலுக்கு எதிரே குன்னூர் ரோட்டில் இருக்கிறது பாப் கிறிஸ்து ஐக்கிய சபை. இதன் அருகிலேயே ஒரு கவர்மென்ட் டாஸ்க்மாக் கடை(குட் காம்பினேஷன்). அந்தி சாய்ந்தால் அங்கே ஜாலிலோ ஜிம்கானாதான். ஆட்டோ டிரைவர்கள் முதற்கொண்டு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவர்கள்வரை கையில் கிளாசும், வாயில் சிகரெட்டுமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள்.

தரையில் பாய் விரிக்கப்பட்டு, சீட்டுக் கட்டுகள் சரசரவென சுழல ஆரம்பிக்கிறது. தலை ஒன்றுக்கு 50 ரூபாயில் ஆரம்பித்து, 10 ஆயிரம் ரூபாய்வரை பந்தயம் கட்டுகிறார்கள். ஆட்டம் ஒன்றுக்கு ஒன்பது பேர் உட்காருகிறார்கள். இதுபோல், இடத்தைப் பொறுத்து பத்து பதினைந்து கும்பல் ஆடுகிறது. சராசரியாக ஆட்டம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டால்கூட பத்து ஆட்டம் முடிந்தாலே ஒரு லட்ச ரூபாய் கலெக்ஷன் ஆகிறது. அப்படியென்றால், 24 மணி நேரத்தில் எத்தனை லட்சங்கள் புரளும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிளப்பும், மாதம் ஒன்றுக்கு 1 முதல் 1.50 லட்சம்வரை போலீஸ் மாமூல் கட்டுவதாக கூறும் அப்பகுதி இளைஞர் ஒருவர்,

‘‘நேர்மையானவர்னு பேரெடுத்த தி.நகர் லேடி போலீஸ் ஆஃபீஸர்தான் இப்போ இந்தப் பகுதிக்கு இன்சார்ஜ். இந்தம்மா எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கன்ற ஆச்சர்யமா இருக்கு. அவங்க தி.நகர்ல இருந்தவரை இரவு 9.30-க்கெல்லாம் ரெய்டுக்கு வந்துடுவாங்க. இதனால சூதாட்ட விடுதிகளின் கொட்டம் கொஞ்சம் அடங்கிக் கிடந்தது. இப்போ நிலைமை தலைகீழா மாறிப்போச்சு. அவங்க இல்லைன்னு தெரிஞ்சதும் முக்கால்வாசிக் கிளப்புகள் 24 மணிநேர சர்வீஸா மாறிடுச்சு’’ என்றார்.

நாங்கள் தி.நகர் நோக்கி நடையைக் கட்டினோம். தி.நகர் கிரி ரோட்டில் கடவுளாகிவிட்டவர்(சாய்பாபா) பெயரில் இருக்கிறது அந்த நடுத்தர கிளப். இங்கு நடக்கும் சூதாட்டம் பற்றி வெளிப்படையாகவே நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருக்கிறார்கள். முதல் பரிசு ரூ.2 லட்சம். டிக்கெட் விலை ஆள் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய். ஆட்டம் ஒன்றுக்கு 9 பேர் வீதம் ஒரு ஷோவுக்கு மட்டும் 10 ஆட்டங்கள் நடக்கிறது. ஒவ்வொரு ஷோவுக்கும் ரூ.1 லட்சம் கிளப்புக்கே கமிஷனாகப் போய்விடும். குறைந்தது ஓரு நாளுக்கு ஐந்து ஆட்டங்கள் போட்டாலே, எந்தச் செலவும் இன்றி கிளப்புக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் கமிஷனாகக் கிடைத்துவிடும். அப்படியானால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, இந்த நடுத்தர கிளப்புகளுக்குக் கிடைக்கும் லாபத்தொகை மட்டும் 1 கோடியே ஐம்பது லட்சங்கள்.

இந்தக் கிளப்புகளின் வாடிக்கையாளர்கள் சிலரைக் கண்டால், உங்கள் வாய் காதுவரை பிளக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ஆந்திர மாநில அரசியல் பிரமுகர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலதிபர்கள். தி.நகரைச் சுற்றியுள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு தங்கும் இவர்கள், நாள் முழுவதும் சீட்டாடியே களிக்கிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் ஸ்டார் ஒட்டல்களில் ரூம் பொட்டு ஆடியிருக்கிறார்கள். அப்போது, ஒரே ரூமில் பத்துப் பதினைந்துபேர் கும்மியடித்ததால், கலவரமடைந்த ஓட்டல் நிர்வாகங்கள், இனிமேல் சீட்டாங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தனவாம். எனவேதான், சென்ற இடமெல்லாம் சீட்டாட்டம் என தி.நகரில் மட்டும் கண்ணுக்குத் தெரிந்து 72 கிளப்புகள் இருக்கின்றன.

‘‘எல்லா கிளப்புகளில் இருந்தும் முறையான மாமூல், மாதா மாதம் போய்க்கொண்டிருந்தாலும் ஒருசில கிளப்புகளில் மட்டும் ரெய்டு, மாமூல் என்கிற பெயரில் ஈ, காக்காகூட நுழைய முடியாது.

காரணம், நம்மூர் அரசியல் பிரபலங்கள்தான். பினாமிகளை வைத்து அவர்கள்தான் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகிறார்கள்’’ என்கிறார் ஒரு போலீஸ் இன்ஃபார்மர்.

‘‘யாராவது ரிப்போர்ட்டர்னு போய் ஐ.டி. கார்டோடு நின்னா போதும். மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மாமூல் தருவானுங்க. இப்படித்தான்... ‘பெட்டிஷன் பாண்டி’ன்னு ஒருத்தன் இருக்கான். கிளப் டீடெய்ல்ஸ் எல்லாம் விரல் நுனியில வச்சிருப்பான். மாமூல் கொடுக்காட்டி கிளப்புக்கு எதிரா பெட்டிஷன் போடுறதுதான் இவனோட வேலை.

‘அண்ணாச்சி வந்திருக்கேன். அதிகமா ஒண்ணும் கேக்கலை. மாசம் ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்.’னு கேட்பான். பல தடவை இவனோட கை, காலை உடைச்சும் அடங்கலை. ‘போனா போவுது. செத்த பாம்பு, கொத்தப் போறதில்லை’ன்ற கதையா இவனுக்கு மட்டும் ஒவ்வொரு கிளப்பும் மாசம் ஆயிரம் ரூபாய் மாமூல் அனுப்புது. இதனால, அய்யாவுக்கு உக்காந்த இடத்திலேயே மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்’’ என்று அதிர வைத்தார் அந்த போலீஸ் இன்ஃபார்மர்.

அயனாவரத்தில் 10, தி.நகரில் 72 போக அண்ணாசாலையில் 8, கிண்டியில் 8, வடபழனி மற்றும் கோடம்பாக்கத்தில் 15 கிளப்புகளும் சென்னையில் இயங்கி வருகிறது. தாம்பரம், ஆவடி போன்ற புறநகர் பகுதிகள் பற்றி இப்போதைக்கு நம்மிடம் கணக்கு இல்லை.

‘‘24 மணி நேர கிளப் என்கிறீர்களே. இதில் ஆடுபவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?’’ என்றதற்கு, ‘‘பாதிப்பேருக்கு இதுதான் தொழில்’’ என்கிற நமது இன்ஃபார்மர், ‘‘பிரஃபெஷனல் சூதாட்டக்காரர்கள் வெறுமனே சென்னையில் மட்டும் ஆடுவதில்லை. பிளைட் பிடித்துப் போய், மலேசியா சிங்கப்பூரில் எல்லாம் ஆடிவிட்டு வருகிறார்கள். சீட்டுக்கட்டைத் தவிர, வேறெதுவும் தெரியாத இவர்கள், சூடாட்டத்தின் மூலமே பல கோடிகள் சம்பாதித்துவிட்டார்கள்.’’ என்றார்.

‘‘ஆனா, சரித்திர காலம்தொட்டு சூதாட்டம் என்பது குடும்பத்தையே சீரழைத்துவிடும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்’’ என்றேன்.

‘‘உண்மைதான் கோடிகளை சம்பாதித்தது நாலைந்து பேர்தான். அதிலும் சில போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். எப்படா ரிட்டையர்டு ஆவோம். ஃபுல் டைமா இதுல உக்காருவோம் என்று ஏங்கித் தவித்தவர்கள் இவர்கள். இதுபோன்றவர்களைத் தவிர 100-க்கு 99% பேர் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கிறார்கள்.

சம்பளம், சொத்து பத்து, பொண்டாட்டி நகை எல்லாத்தையும் வித்து சூதாடிய இவர்களில் சிலர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?’’ என்று நிறுத்தியவர், ‘‘இதே சூதாட்டக் கிளப்புகளில் எடுபிடியா(சர்வர்) வேலை பார்க்கிறார்கள் என்று அவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘அய்யா, சாமி! நான் வெளிநாட்டில் இருப்பதாக என் பொண்டாட்டி பிள்ளைகள் நம்பிக்கிட்டு இருப்பாங்க. எங்களைப் போட்டுக் கொடுத்துறாதீங்க. என்னிக்காவது ஒருநாள் இழந்த செல்வத்தை நாங்க மீட்டுறுவோம்’’ என்றார்கள்.

அடப் பாவமே! இப்படித்தானே அய்யா ஒவ்வொருவரும் ‘அடுத்த ஆட்டத்துல பிடிச்சிருவோம்னு ஆண்டுக் கணக்கில் ஆடி வருகிறீர்கள். உங்களை எந்தச் சட்டம் போட்டு திருத்துவது?

ஹெராயின் கடத்தினாரா ராகுல்காந்தி! சு.சாமி பரபர...!


கடந்த திங்கட்கிழமை 27.12.2010 காலை பதினோரு மணிக்கு, சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.


“ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இயற்பியல் பேராசிரியரான ஜோஷி, இதற்கு மிகவும் பொருத்தமானவர். இதை நான் வரவேற்கிறேன்.


சி.பி.ஐ கைப்பற்றிய ராசாவின் டைரியில் நான்கு முன்னணி அரசியல்வாதிகள், மத்திய இணை அமைச்சராக இருந்து சமீபத்தில் முதல்வரான ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இவர்களைப் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்” என்றார்.


“பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் சொல்கிறார்களே!” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,


“யார் சொன்னா? இண்டியன் கவர்மெண்ட் சொன்னாளா? ஸ்றீலங்கா கவர்மெண்ட் சொன்னாளா? அமெரிக்கன் கவர்மெண்ட் சொன்னாளா? சிலபேர் அப்படி சொல்லிண்டு திரியறா! அவாளெல்லாம் அரசியல் வித்வைகள். அதை எதுக்கு நாம நம்பணும்” என்றார்.


“பிரதமர், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறதே!” என்றபோது,


“புலிகளே இல்லை. அப்புறம் எங்கிருந்து ஆபத்து வரும். இறுதிப்போர் நடந்தபோது, பிரபாகரனுக்கு சிதம்பரம் ஒரு கடிதம் எழுதினார். ‘ஆயுதத்தை ஒப்படைச்சிட்டு சரனடைஞ்சா, நாங்க உங்களைக் காப்பாத்துறோம்’னு சொல்லியிருந்தார். அதைப் படிச்சிட்டு, வைகோ, நெடுமாறன்கிட்ட பிரபாகரன் அட்வைஸ் கேட்டார்.


‘இந்த எலக்‌ஷன்ல பி.ஜே.பி.தான் ஜெயிக்கப்போவுது. அப்படி ஜெயிச்சா, தனி ஈழமே வாங்கிடலாம். நீங்க தொடர்ந்து போரை நடந்துங்கோ’ன்னு இவா சொல்லியிருக்கா. பிரபாகரன், ராஜீவ் கொலைக் குற்றவாளி. அவருக்கு, சிதம்பரம் எப்படிக் கடிதம் எழுதலாம். எனவே, சிதம்பரம் பதவி விலகவேண்டும்” என்றார்.


“தமிழகம் வந்த ராகுல், தாஜ் கன்னிமரா ஓட்டலில் வைத்து தமிழக அறிவுஜீவிகளை சந்தித்துவிட்டு சென்றிருக்கிறாரே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டதற்கு,


“யார் அந்த ராகுல்? ராகுல்னா யாரு? அவருக்கு அரசியல் தெரியுமா? கொள்கை ஏதாவது இருக்கா? சரியான மக்கு. காலேஜ் படிக்கும்போது ஹிந்தி சப்ஜெக்ட்லயே ஃபியில் ஆனவர்தான் ராகுல்.


2001-ல் பாஸ்டன் ஏர்போர்ட் போனபோது போலீஸ் அவரை பிடிச்சு விசாரிச்சாங்க. அப்போ அவர்கிட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்கன் டாலர் இருந்தது. ஏது அந்தப் பணம்? அது மட்டுமில்லை. ஒரு பிளாஸ்டிக் கவர்ல பவுடர் இருந்தது. அது ஹெராயினா, பிரவுன் சுகரா எனக்குத் தெரியாது.


உடனே, வாஜ்பாய்க்கு போன் பண்ணி, சோனியாகாந்திதான் அவாளைக் காப்பாத்தினார். எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு, எப்போ என்கொயரிக்கு கூப்பிட்டாலும் வரணும்’னு எச்சரிக்கை பண்ணித்தான் பாஸ்டன் போலீஸ் அவரை வெளியே விட்டா” என்றார்.


இறுதியாக... “எல்லா ஊழலும் சோனியாகாந்திக்கு தெரிஞ்சுதான் நடக்குது. இந்த ஆட்சியை கவிழ்க்க நான் ரெடி” என்று முடித்தார்.


குறிப்பு: இந்தத் தகவலை பத்திரிகைகளில் தேடாதீர்கள்.

Thursday, December 2, 2010

‘‘தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கவேண்டும்’’


காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் ஒரு வெட்கக்கேடான, வேதனையனான சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்திருக்கிறது. இதுபோன்ற வெட்கக்கேடுகள் தொடர்கதைதான் என்றாலும், இந்த இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் வெளியிட்டு உள்ளதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒரு கிராமம். ஒதுக்குப் புறமான வீடு. நேரம், நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கணவன், மனைவி, 17 வயதில் ஒரு மகள், இரண்டு குழந்தைகள் என ஐவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அப்போது, எட்டு பேர்கொண்ட கும்பல் ஒன்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது. எதிர்க்க வந்த கணவனை சரமாரியாக அடித்துத் துவைக்கிறது. மனைவியும் குழந்தைகளும் கதறுகிறார்கள். ‘‘புருஷன் மேல அவ்ளோ பாசமா?’’ &கேட்டபடி மனைவியின் சேலையை அவிழ்த்து எறிகிறது அக்கும்பல்.

‘‘என்ன எதுவேணா பண்ணிக்கங்க. என் மனைவியை விட்றுங்க’ எனக் கெஞ்சுகிறார் கணவர். எல்லோர் எதிரிலும் அவரை நிர்வானமாக்கும் அக்கும்பல், மனைவியின் புடவையைக்கொண்டு அவள் கணவரை வீட்டின் அந்தரத்தில் உயிரோடு தொங்கவிடுகிறது. காமம் தலைக்கேற, அந்த எட்டுபேர் கும்பலும் கணவனின் கண்ணெதிரே தாயையும் மகளையும் கண்டபடி கடித்துக் குதறுகிறார்கள். எல்லாம் முடிந்ததும் வீட்டிலிருந்த நகை, பணத்தையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். இந்தச் சம்பவம் நடந்தது 1995 ம் ஆண்டு.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்குப் போனார்கள். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, உள்ளூர் போலீஸார் ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று, தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டிக்கு இவ்வழக்கு மாற்றப்படுகிறது. அங்கு ஒருவழியாய், கைரேகையின் அடிப்படையில் முனிராஜ், ரவி, மது என்கிற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். இரண்டாண்டுகள் கழித்து மொத்தம் எட்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. இவ்வழக்கை விசாரித்து வந்த ஓசூர் உதவி செசன்சு நீதிமன்றம், சம்பவம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, ஆறு பேருக்கு பத்து வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

பாவிகளுக்கு இன்னும் அதிக தண்டனை வேண்டும் என்கிறீர்களா? மேற்கொண்டு கேளுங்கள்.

தண்டனை பெற்ற ஆறு பேரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்கிறார்கள். இதை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை சில வாரங்களுக்கு வாரங்களுக்கு முன் அவர் வாசித்திருக்கிறார்.

‘‘சம்பவத்தில் தொடர்புடைய, இறந்துபோன இருவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருப்பது செசன்சு கோர்ட்டு நீதிபதி செய்த மிகப்பெரிய சட்ட விரோதம். குற்றம் சாட்டப்பட்டவர்களை, பாதிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் அடையாளம் காணவேண்டும் என்கிற சட்டத்தின் அரிச்சுவடியைக்கூட போலீஸார், அரசு வழக்கறிஞர், நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில், நீதிபதி மவுனியாக இருந்து வேட்டிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். நடந்துள்ள குளறுபடிகளுக்கு மேற்கண்ட மூவரும்தான் பொறுப்பு.

விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கைப்போல், இந்த வழக்கிலும் மீண்டும் விசாரணை நடத்தலாம் என்றால், குற்றம் நடந்து நீண்ட நாட்களாகிவிட்டது. பாதிக்கப்பட்ட இளம்பெண் யாரோ ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்படுகிறேன். எனவே, மறுவிசாரணை என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்’’ என்று சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி அனைவரையும் விடுதலை செய்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘‘நாம், இந்த நாட்டின் குடிமக்கள். நம்மைப் பாதுகாக்கவென்று அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை எல்லாம் இருக்கிறது. நமது வரிப் பணத்திலிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இந்த நீதிமான்கள், விசாரணை அதிகாரிகள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியானால், கொடுத்த வேலையை சரியாகச் செய்யாத இவர்களுக்கு சம்பளம் எதற்கு, வேலைதான் எதற்கு? கடமையை செய்யத் தவறியதோடு மட்டுமில்லாமல், குற்றவாளிகளை தவறவிட்ட இம்மூவருக்கும் ஏன் தண்டனை வழங்கக்கூடாது.’’ என்பதுதான் மக்களின் கேள்வி.

இதே கேள்வியை நாம், உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தூர்பாண்டியனிடம் எடுத்து வைத்தோம்.

‘‘குற்றம் நடந்தவுடன் வழக்குப் பதிவு செய்து, அதற்குறிய ஆதாரங்களைத் திரட்டி உடனுக்குடன் கோர்ட்டுக்கு அனுப்பவேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் ஒரு வருடம் கழித்துத்தான் இறுதி அறிக்கையே தாக்கல் செய்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நடைமுறை. கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை அரசுத்தரப்பு உருவாக்கும் சின்னச் சின்ன ஓட்டைகள் அல்லது பெரிய ஓட்டைகளின் பலன் முழுக்க(சந்தேகத்தின் பலன்) எதிரிகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

போலீஸார், எப்போதுமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரிதான் சாட்சிகளைக் கொண்டு வந்து கூண்டில் நிறுத்துகிறார்கள். காவல்துறைக்கு ஏதுவாக தாயார் செய்யப்பட்டிருக்கும் அவர்களது வாக்குமூலங்களை, என்னதான் சொல்லிக் கொடுத்திருந்தாலும், சாட்சிகளின் ஒருசில வார்த்தைகளில் உண்மை வெளிவந்துவிடும். ‘ஸ்டேட்மென்ட்டில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் சாட்சி சொல்கிறாரே. ஒருவேளை இது பொய்யாக இருக்குமோ! நாம் தவறான தீர்ப்பை கொடுத்துவிடுவோமோ?’ என்று அஞ்சுகிற கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள், சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிக்கு இது அழகல்ல. அவரை மீறி அணுவும் அசைய முடியாது. சாட்சி தும்மினால்கூட அதற்கான காரணத்தை அவர் அறிந்திருக்கவேண்டும். சம்மன் அனுப்புவதில் இருந்து ஸ்டேட்மென்ட் ரெக்கார்ட் பண்ணுவது, தீர்ப்பு சொல்வதுவரை அனைத்தையும் கரைத்துக் குடித்தவர்தான் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்க முடியும். ஆனால், பெரும்பாலான கீழ்க் கோர்ட்டுகளில் சாட்சி விசாரனையை அவர்கள் காது கொடுத்தே கேட்பதில்லை. இதை நீங்கள் நேரிலேயே பார்க்க முடியும்.

குறிப்பிட்ட இந்த வழக்கைப் பொறுத்தவரை, விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கீழ்க்கோர்ட்டு நீதிபதி தண்டனை கொடுத்திருக்கிறார். ‘கொடூர குற்றவாளிகளை விடுதலை செய்தால் மக்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ’ என்று இத்தகைய நீதிபதிகள் அஞ்சுவதுதான் இதற்கெல்லாம் காரணம். எனவே, கண்னை மூடிக்கொண்டு தண்டனை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அப்பீலுக்காக மேல் கோர்ட்டுக்கு செல்லும்போது இந்தத் தீர்ப்பு வலுவிழந்துவிடும் என்பதும் தண்டனை பெற்றவர்கள் விடுதலை ஆவார்கள் என்பதும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்படி எல்லாவற்றையும் தெரிந்து வைத்துகொண்டே இவர்கள் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் போலீஸார், அரசு வக்கீல், நீதிபதி ஆகிய மூன்று பேரும் சமமாக தவறிழைத்திருக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பு. இந்தியாவைப் பொறுத்த அளவில், சட்டத்துக்கு உட்பட்டுத்தான் எல்லாமே. இத்தனை சட்டங்கள், பாதுகாப்புகள், பரிவாரங்கள் இருந்தும் சாட்சி விசாரணை சரியாக இல்லாத காரணத்தால் அப்பாவி குடும்பத்துக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் எந்த விதத்திலும் ஈடாகாது. குற்றவாளிகளுக்கு மீண்டும் தண்டனை அளிப்பதென்பது இனி இயலாத காரியம். எனவே, வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு உயர்நீதிமன்றம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய குற்றம் நடந்திருந்தாலும் ஒரே வருடத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். மேல் முறையீடு என்றால், அடுத்த ஒரு வருடத்துக்குள் அதுவும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படவேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கக்கூடிய அதிகாரம் இரண்டு பேருக்கு மட்டும்தான் இருக்கிறது. ஒன்று காவல்துறை, இன்னொன்று நீதித்துறை. சாதாரண ஒரு போலீஸ்காரர், தன் கடமையைச் செய்யவில்லை என்றால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அதே கடமையைச் செய்யத் தவறும் ஒரு நீதிபதி மீது யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, கடமையைச் செய்யத் தவறும் அல்லது தவறான தீர்ப்புகளை வழங்கும் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகள் மீது கடுமையான நடவடிக்கையை உயர்நீதிமன்றம் எடுக்கவேண்டும்.

‘நாம் சொல்லக்கூடிய தீர்ப்பு சரியாக இல்லையென்றால், தண்டனைக்கு உள்ளாவோம்’ என்கிற பயம் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கவேண்டும். அந்த பயம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கே கீழமை நீதிமன்றங்கள் ஒழுங்காக செயல்பட ஆரம்பிக்கும். அதன் பிறகு பத்து வருடம், இருபது வருடம் என்று தாமதமான தீர்ப்புகள் வெளியாகாது.’’ என்கிறார்.

கிருஷ்ணகிரியில் நடந்ததைப் போன்ற வெட்கக்கேடான ஒரு விஷயம், புதுச்சேரியிலும் நடந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய மனைத உரிமை ஆர்வலரான புதுவை.கோ. சுகுமாரன்,

‘‘இதுபோன்ற தவறுகளை காவல்துறையும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளும் காலம் காலமாகவே செய்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்புகூட தூக்கு தண்டனை கைதிகள் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த பொம்மி குமரன், சென்பக ஸ்ரீகுமரன் ஆகிய இருவரும் பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளுக்காக தூக்கு தண்டனை பெற்றவர்கள். பல வருடங்களுக்கு முன், தங்கள் நண்பரான சங்கர் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாயை இவர்கள் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சங்கரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஒரு மசாஜ் சென்ட்டரில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அப்போதும் சங்கரால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. எனவே, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். அதன் பிறகு சங்கர் செத்துபோனதை காரணம் காட்டி அவர் வேலை செய்த மசாஜ் சென்டர் முதலாளியிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறித்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு எஸ்.டி.டி. பூத்துக்குப் போனவர்கள், அங்கிருந்த பெண்மணியை கற்பழித்துவிட்டு, அவரையும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

எஸ்.டி.டி பூத் கொலை வழக்கை துப்பு துலக்கும்போதுதான் சங்கர் கொலை செய்யப்பட்டதையும் புதுச்சேரி காவல்துறை கண்டு பிடித்தது. பிறகு, இரண்டு கொலை வழக்கையும் இவர்களே விசாரித்து வந்தார்கள். விசாரணை முடிவில், 2001&ம் ஆண்டு புதுச்சேரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சித்தார்த்தர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை, குற்றப்பத்திரிகை முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்தான் சங்கர் என்று சங்கருடைய அம்மாவே சரியாக அடையாளம் காட்டவில்லை. எனவே, இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து விடுதல்லை செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்துவிட்டது. காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட இப்படிப் பல உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

விசாரணை அதிகாரிகள் ஒழுங்காக கடமை ஆற்றினாலே இதுபோன்ற ஓட்டைகளை முழுமையாக அடைக்க முடியும். போலீஸார், சட்டத்தை தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தி, நிறைய ஷார்ட் கட் வழிமுறைகளை பின்பற்றுவதால்தான் இப்படிப்பட்ட தவறுகள் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, ஒரு வழக்கை எப்படி ஓட்டை இல்லாமல் நடத்த வேண்டும் என்பது குறித்து காவல்துறையில் உள்ளவர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கவேண்டும். கண்னை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதிவரும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை கண்காணிக்க உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’’ என்கிறார்.

‘‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’’ என்று எத்தனை தடவைதான் சொல்லிக்கொண்டிருப்பது. எனவே, தயவு தாட்சண்யம் பார்க்கமல் தவறிழைக்கும் காவல் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பு: சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, லேஅவுட்வரை ஃபைனலாகி, ‘சூரிய கதிர்’ இதழின் டுபாகூர் ஆசிரியரும் முதலாளியுமான கை.கதிர்வேள் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை.

Sunday, November 28, 2010

"புதிய மனுதர்மம் எது தெரியுமா? கலைஞர் குடும்பம்தான். உங்களை மறுபிறவி எடுக்க விடமாட்டேன்."


‘விருதகிரி’ பட ஆடியோ ரிலீஸான நவம்பர் 22&ம் தேதிக்கு முதல்நாள். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டு என்கிற அரசியல் பரபரப்பு கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தது. காரணம், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத் தேர்தலில், தி.மு.க தொழிற்சங்கத்தை ஒழித்துக் கட்டும் விதமாக அ.தி.மு.க.வுக்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தது தே.மு.தி.க. அப்படியென்றால், ஆடியோ ரிலீஸின்போது விஜயகாந்தின் பேச்சில் அரசியல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர்.

சென்னை டிரேட் சென்டரில் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆர அமர ஜூகல் பந்தி என்கிற பெயரில் நேரத்தை வீனடித்துவிட்டு இரவு 10.46 மணிக்குதான் தொடங்கினார்கள். காரணம், கவிஞர் சினேகன். அவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவருக்கு உதவியாக கேப்டன் டி.வி. காம்பியர் சுகுனா. வெள்ளை நிற கோட், மஞ்ச கலர் பனியன் என காமெடி காம்பினேஷனில் காட்சியளித்த சிநேகன், நம்மை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு பேசிப் பேசியே அறுத்துக்கொண்டிருந்தார். இதனால், நிகழ்ச்சி முடிய நள்ளிரவு 12.30வரை ஆனது. ஆனால், மொத்தக் கூட்டமும் அதுவரை நின்றிருந்து ஆரவாரம் செய்ததுதான் ஆச்சர்யமான விஷயம்.

முதல் ஆளாக மைக்கைப் பிடித்தவர் வினுச் சக்கரவர்த்தி.
‘‘இவருடைய இலையில் என்ன விழுகிறதோ, அதுதான் எல்லாருடைய இலையிலும் விழும். அது வஞ்சிரமா இருந்தாலும் சரி, வவ்வாவா இருந்தாலும் சரி. அப்படி ஒரு கொடை வள்ளல் நம்ம கேப்டன். அப்படிப்பட்டவர், இந்த நாட்டுக்கே தலைவராக வந்தால் நல்லது’’ என்றார். இலையோடு கூட்டணி வைக்கப் போறதைத்தான் இப்படிச் சொல்றாரோ என எண்ணத் தோன்றியது.

அடுத்து வந்தார் எஸ்.வி.சேகர். ‘‘தமிழ்நாட்டின் அரசியலை மாற்றியமைக்ககூடிய மிகப்பெரும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்திருக்கிறார். ‘படத்தை எப்படி ரிலீஸ் பண்றார்னு பார்த்துடுவோம்?’ என்று சில பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆளில்லை அவர். கேப்டனுக்கு ‘கை’ கொடுக்க எத்தனையோ கைகள் காத்துக்கிடக்கு.’’ என காங்கிரசின் சப்போர்ட்டை மறைமுகமாய் உணர்த்தியவர், ‘‘நடிகன் நாடாள முடியுமா? என்று சிலர் கேட்டார்கள். புரட்சித்தலைவைர் எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸானபோது, யாருமே தியேட்டர் தரவில்லை. போஸ்டர் ஒட்டக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் படம் படம் மாபெறும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரானார். அதேபோல கேப்டனும் வெற்றி பெறுவார்’’ என்று கொளுத்திவிட்டுப் போனார்.

இயக்குநர் சேரன் வந்தார். ‘‘இவர் வர்றேன்னு சொல்ல மாட்டார். ஆனா வருவார். ஜெயிப்பேன்னு சொல்ல மாட்டார். ஆனா ஜெயிப்பார். (ஏய், ரஜினியைச் சொல்றாருப்பா என்று பேச்சு எழுந்தது). இவர் ஜெயிப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நல்லது’’ என்றார்.

விஜயகாந்துக்கு முன்பாக மைக்கைப் பிடித்தவர் சத்யராஜ். ‘‘நாடோடி மன்னன் படதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வசனம் பேசுவார். அதுவும் எப்போ? அடுத்தநாள் பதவி ஏற்கும் முன்பாக மன்னனுக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து அவரைக் கவுத்துடுவாங்க. வேற வழியில்லாமல், நாடோடியான எம்.ஜி.ஆரை மன்னனாக்குவாங்க. அப்போ மந்திரிகள்லாம், ‘உன்னை நம்பி எப்படி இந்த நாட்டை ஒப்படைக்கிறது’ என்று கேட்பாங்க. அப்போ எம்.ஜி.ஆர் சொல்வார், ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமே இல்லை.’ இந்த வசனம் புரட்சிக்கலைஞருக்கும் பொருந்தும். கேட்காமலேயே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் கேப்டன்.

‘பொன்மனச் செல்வன்’ என்றொரு படத்தில் இவர் நடித்திருக்கிறார். உண்மையிலேயே இவர் பொன்மனச்செம்மல்தான். பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்லியிருக்கார். ‘தம்பி! எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார்’ என்றார். அதை என்னுடைய அன்பு நண்பன் விஜயகாந்த் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.’’ என்று வார்த்தைக்கு வார்த்தை எம்.ஜி.ஆருக்கு நிகராக விஜயகாந்த்தை புகழ்ந்துவிட்டுப் போனார்.

கவிஞர் சினேகனும், கேப்டன் டி.பி காம்ப்பியர் சுகுனாவும், விருந்தினர்களை கேப்டன்ஜி, சத்யராஜ்ஜி, எஸ்.வி.சேகர்ஜி என்று ‘ஜி’ போட்டு அழைத்துக்கொண்டிருந்தனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்டுக்கொண்டே தன் பேச்சை ஆரம்பித்தார் விஜயகாந்த்.

‘‘சினேகனும் சுகுனாவும் கேப்டன்ஜி, விக்ரமன்ஜி என்று எல்லோரையும் ஜி போட்டு அழைக்கிறார்கள். இந்த நாட்ல பிரச்னையே ‘2&ஜி’ என்கிற ஸ்பெக்ரம்ஜி&னாலதான். விழா அழைப்பிதழில் நான் யார் பேரையும் போடலை. காரணம், இந்த ஆட்சி அப்படி. எல்லோருக்கும் பயம். என்னய்யா பயம்? ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. வாலி அவர்கள்தான் விருதகிரி படத்தில் எல்லா பாடல்களும் எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஆனா, தொந்தரவு பண்ணலை. ஏன்னா, இப்ப இருக்கிற ஆளுக்கு அது பிடிக்காது. இவருக்கு மேடை போட்டு துதிபாடிக்கிட்டு இருந்தா, ச்சவுக்கியமா உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்பார். வாராதுன்னு தெரிஞ்சா, ட்ரெய்ன் ஓடாத இடத்துலயும் தலை வச்சிப் படுப்பார்.

‘தி.மு.க.வை வரவிடமாட்டோம்’னு நாங்க சொன்னதுக்கு, ‘எந்த படத்துல?’ன்னு இவர் கேட்கிறார். ‘சினிமாவுக்கு எங்க குடும்பம் வர்றது தப்பா?ன்னு கேட்டார். அதனாலதானே சினிமா உலகம் செத்துப்போய் கிடக்கு. ‘கிரிமினல்’னு சொல்ற அந்த மாஃபியா கும்பலுவுக்கு! நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க. எல்லாரும் வேடிக்கைப் பார்க்கணுமா? மனுதர்மம் மறு பிறவி எடுத்தால் வரவிடமாட்டேன்னு இப்போ சொல்றார். அப்படின்னா, 1967&ல் ராஜாஜியோட ஏன்யா கூட்டு சேர்ந்தீங்க? மந்திரி பதவிக்ககத்தானே.

2ஜி&யைப் பற்றிப் பேசினா, அவர் தாழ்த்தப்பட்டவர்னு சொல்றார். ஜாதி வேண்டாம், வேண்டம்னு சொல்லிக்கிட்டே ஜாதியைப் பத்திப் பேசுறார். ஐயருக்கு ஒரு நீதி உங்களுக்கு ஒரு நிதியா? இப்படிப் பேசினா, ‘விஜயகாந்த் என்ன பிராமினுக்கு சப்போர்ட்டா, ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டா?’ன்னு கேப்பாங்க.

மனுதர்மம் தேவையில்லைன்னுதானே தி.மு.க ஆட்சியும் எம்.ஜி.ஆர் ஆட்சியும் இத்தனை நாள் ஓடிட்டு இருக்கு. அண்ணாவின் பேரைச் சொல்லி கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்ததைப்போல இன்னிக்குவரை உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்களே. இன்றைக்கு புதிய மனுதர்மம் எது தெரியுமா? கலைஞர் குடும்பம்தான். உங்களை மறுபிறவி(பல்லைக் கடிக்கிறார்) எடுக்க விடமாட்டேன்.

அண்ணா பிறந்தநாள் அன்னிக்கு இவருக்கு வேண்டிய கிரிமினல்களை எல்லாம் வெளியே விட்டுட்டார். கத்தி எடுத்தவன் கத்தியாலயே சாவான்னு ஒரு பழமொழி இருக்கு. நீங்களும் எப்படி மாட்டப் போறீங்கன்னு பொறுத்திருந்து பாருங்க.

67&ல் ஆட்சிக்கு வந்தீங்க. ஆனா, இன்னும் ஏன் ஏழை மக்கள் இருக்காங்க? மஞ்சப் பையை தூக்கிட்டு வந்த நீங்க! இன்னிக்கு ஒண்ணாம் நம்பர் பணக்காரனா இருக்கீங்க. ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுகிறேன் என்கிறார். பட்டவன், பட்டவன்னு சொல்லியே எல்லோரையும் படுக்க வச்சிட்டார். விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணியது கலைஞர்தான்னு சர்காரியா கமிஷன்லயே சொல்லியிருக்காங்க. இன்னிக்கு விஞ்ஞானம் வளர்ந்துபோச்சு. உங்களுக்கா ஊழலை மறைக்கத் தெரியாது? விஜயகாந்த் ஏன் காங்கிரஸைப் பத்திப் பேச மாட்டேங்கிறார். ‘காங்கிரஸுக்கு சப்போர்ட்டா?’னு கேட்கிறார். நான் யாருக்கும் சப்போர்ட்டு இல்லை. எனக்கும் என் மக்களுக்கும்தான் சப்போர்ட்.

‘என்ன தெரியும் விஜகாந்த்துக்கு?’ன்னு கேட்கிறார். எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னா, நீங்க மட்டும் எல்லாத்தையும் கரைச்சிக் குடிச்சவரா? உங்களுக்குத் திருட்டுத்தனத்தைவிட்டா வேற என்ன தெரியும்? 1969, ஃபிப்ரவரி 3&ம் தேதி பேரறிஞர் அண்ணா இறந்தார். ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கனும்னா, 11&ம் தேதிதானே பதவி ஏற்கனும்? ஆனா, 9&ம் தேதி பதவி ஏத்துக்கிட்டீங்களே. இதுக்கு பதில் சொல்ல முடியுமா?பதவியில் ஆசையில்லைன்னு சொல்றீங்களே. துனை முதல்வர் பதவியை பேராசிரியருக்கு கொடுங்க. கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமிக்குக் கொடுங்க. இவ்வளவு ஏன்? அண்ணன் அழகிரிக்கு கொடுங்களேன்.

‘எதோ ஒண்ணு அலையுதாம்ல’ என்று என்னைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். அலையுது, திரியுதுன்னா நானும் பேசுவேன். வாடான்னா வாடாம்பேன். போடான்னா போடாம்பேன். ஊர் பூரா மணல் கொள்ளை. உண்மையை எழுதவிடாம பத்திரிகைகாரங்களை மிரட்டுறாங்க. அழகிரி பையன் கல்யாணத்துக்கு முதல்நாள், தேனியில் கிட்டத்தட்ட 400 ஏக்கர் நிலத்தை கொளையடிச்சிட்டதா ஹெட்லைன்ஸ் டுடேல செய்தி வெளியிடாங்க. அடுத்த ஒன்றரை மணி நேரத்துல அதை ஆஃப் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு என்ன மிரட்டலோ.

காமராஜர்னா கல்விக்கு கண் கொடுத்தவர். எம்.ஜி.ஆர்.னா சத்துணவு போட்டவர்னு ஒருத்தர் சொன்னார். நான் சொன்னேன், கலைஞர்னா ஊழல் பண்றவர். அதுதான் உண்மை. ஊழல் பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கனும். ராஜினாமாவெல்லாம் பத்தாது. கல்மாடி பன்ணுவார், போயிடுவார். சவுகான் பண்ணுவார் போய்டுவார். மதுகோடான்னு ஒருத்தர் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பார் போயிடுவார். என்னய்யா இதெல்லாம்? மன்னிப்பா? அட்றாங்...(நாக்கைக் கடிக்கிறார்) உள்ள வைக்கவேணாம்? அப்பதானே பயம் வரும். அதுக்கு நீங்க சரியான முடிவெடுக்கணும். முடிவெடுக்கத் தெரியலின்னா ஆட்சியில இருக்காதீங்க.

இவரு வீட்டை தானமா கொடுத்துட்டார்னு பெருசா பீத்திக்கிறாங்க. எனக்குப் பிறகு என் பொண்டாட்டி இருப்பா. பொண்டாட்டிக்குப் பிறகு புள்ளை இருப்பான்னு சொல்லி டிரஸ்டுக்கு கொடுக்கிறது பேர் தானம் இல்லை. அதனால சொல்றேன். கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் ஒரு ஏமாற்று வேலை. உங்களுக்கு தைரியம் இருந்தா, முரசொலியில் விஜயகாந்த் பேரைப் போட்டு என் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.

‘அதெல்லாம் கிடக்கட்டும். முதல்ல விருதகிரியை ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க’ன்றார். அய்யா, நான் வட்டிக்கு வாங்கினேன். ரிலீஸ் பண்றது கஷ்டம். நீங்க கொள்ளையடிச்சீங்க. பெண் சிங்கத்தை ரிலீஸ் பண்றீங்க. ஆனா, பொறுத்திருந்து பாருங்க ரிலீஸ் பண்ணிக் காட்டுறேன். என் தொண்டர்கள் அன்னிக்கு என்ன பண்றாங்கன்னு தெரியும். அப்பதான் இந்த விஜயகாந்த் யாரென்று உங்களுக்குத் தெரியும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அழிவு யாரால் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்களால்தான் அந்த அழிவு.’’

இவ்வாறு அவர் பேசினார்.

பிட்ஸ்:

1. கலைஞரை வறுத்தெடுத்த இந்த கேசட் வெளியீட்டு விழாவில் சன் டி.வி. சாக்ஸ் வந்திருந்து விஜகாந்தை வாழ்த்த்தியது அனைவரது புருவங்களையும் உயர்த்தியது. தன்னுடைய பேச்சில், ‘‘20 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஒரு கேசட் வெளியீட்டு விழாவுக்கு எந்திரனுக்கு நிகராக, அதிகமகவே கூட்டம் கூடியிருக்கிறது. விருதகிரிக்கு வாழ்த்துகள்’’ என்றார்.

2. ஸ்டேட்ஸில் இருந்து டாக்டர் பட்டம். விஜயகாந்த்தின் சேவைகளைப் பாராட்டி, இந்திய அப்போஸ்தல பேராயத்தின் சார்பாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஃபுளோரிடா மாகானத்தின் இன்டர்நேஷனல் சர் மேனேஜ்மென்ட் ஆஃப் புளோரிடா அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இதற்கான விழா வரும் டிசம்பர் 3&ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்ப்ட்டிருக்கிறது.

3. ‘‘புரட்சி என்கிற வார்த்தை லெனின், சேகுவாரா என்று சிலருக்கு மட்டும்தான் பொருந்தும். அந்த புரட்சி என்கிற வார்த்தை நம் கேப்டனுக்கும் பொருந்தும்’’ கொடுக்கப்பட்ட காசுக்கு அதிகமாகவே கூவிக்கொண்டிருந்தார் சினேகன்.

4. பெண்களைப் பற்றி ஒரு பாடல் வேண்டுமென கேப்டன் கேட்டார். சில வரிகளை எழுதிக்கொடுத்தேன். அதில் குறிப்பாக இந்த வரிகளை தேர்தெடுக்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனா, அதைத்தான் கேப்டன் டிக் செய்தார். அந்த வரிகள் இதுதான்.

‘‘தாயுடன் இணைப்பதே தொப்புளின் கொடியடா!
அதைக் கவர்ச்சியாய்ப் பார்ப்பவன் கைகளை ஒடியடா!’’

(ரெண்டு பேருக்கும் பம்பரம் மறந்து போச்சோ...)

5. இது என் தனிப்பட்ட கருத்து:

விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். ‘‘கேப்டன் ஒரு கொடை வள்ளல். வருவோர் போவோருக்கெல்லாம் சோறு போட்டுக்கொண்டே இருப்பார். அவர் வீட்டு அடுப்பு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும். வஞ்சிரம்தான், வவ்வாதான்’’ என்றார்கள்.

நிகழ்ச்சி ஆறு மணிக்கு என்று போட்டிருந்ததால், நான் ஐந்தரை மணிக்கே போய்விட்டேன். அரங்கம் முழுக்க நிற்கக்கூட இடமில்லாமல் அத்தனை பெரிய கூட்டம். இந்த சூழ்நிலையில் நான் சீட்டைவிட்டு எழுந்திருந்தால், அதை கேப்டனின் கட்சிக்காரன் அபகரித்துவிடுவான். எனவே நான் அங்கேயே உட்கார்ந்தாக வேண்டும். ‘எப்போ முடியும், எப்போ முடியும்’ என்று நான் எதிர் பார்த்துக் காத்துக்கிடக்க, இப்பித்தலை சினேகன் இழுத்துக்கொண்டே போனான். நேரம் பத்து மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவில்லை. எனக்கோ, பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. இதுவாவது பரவாயில்லை. பாத்ரூம் போகக்கூட வசதியில்லை. ஏனென்றால், பாத்ரூம் போக நினைத்தால் மீண்டும் உள்ளே நுழைய முடியாது. கட்சிக்காரன் தடுத்துவிடுவான். எனவே, கடும் அவஸ்தையுடன் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கே இப்படி என்றால், அங்கிருந்த பெண்களின் நிலைமை? அய்யோ பாவம்! பத்தே முக்காலுக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து மேடையில் இருந்தவர்கள் பேச ஆரம்பித்தார்கள். 11.30&க்கு மைக் பிடித்த விஜயகாந்த், என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல், ஸிக் ஸாக்காக உளறிக்கொண்டே போனார். அவர் பேசிய பேச்சுக்களை தொகுத்து வழங்காவிட்டால், நீங்கள் வாந்தியெடுத்துவிடுவீர்கள். சினிமா டயலாக்போலவே வெறும் பேச்சு.

ஐந்தரை மணியில் இருந்து நள்ளிரவு பன்னிரெண்டரைவரை சிங்கிள் ‘டீ’கூட கொடுக்காமல் கொலை பட்டினியுடன் பாத்ரூம் போகவும் வழியில்லாமல் உட்கார வைத்த விஜகாந்த்தை எல்லோரும் கொடை வள்ளல் என்றபோது, எனக்கு ‘பேக்’கால் சிரிப்பு வந்தது.
பன்னிரெண்டரைக்கு வெளியே வந்து, ‘சாப்பாடு கிடைக்குமா?’ என ஓட்டல் தேடி நான் நாயாய் அலைந்தேன். எங்குமே கடை இல்லை. கொலை பட்டினியுடன் அன்றிரவு தூக்கமும் வராமல் படுத்தேன்.

ஒரு நிகழ்ச்சியை எப்படி ஆரம்பிக்கவேண்டும், எப்படி முடிக்கவேண்டும். பெருங்கூட்டம் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன. விருந்தினர்களை உபசரிப்பது எப்படி? என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சரக்கடித்துவிட்டு(பேச்சின் போது கண்கள் சொருகியது. அடிக்கடி நாக்கைக் கடித்தார், பல்லைக் கடித்தார்) மேடையில் வந்து, வெறுமனே கருணாநிதியை திட்டித் தீர்க்கும் விஜயகாந்த் ஒரு தலைவனாம்.

Monday, November 1, 2010

”துவைப்பதும் சமைப்பதுமே பெண்களின் சொத்து”உலகமகா ரோல் மாடல் கிரன்பெடி ஐ.பி.எஸ்.


‘‘மற்றவர்களின் தீர்ப்புக்கு நான் கட்டுப்பட்டு இருந்ததில்லை. சமையல் பண்ணுவதோ, பரிமாறுவதோ அல்லது வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு குடும்பத் தலைவியாகவோ இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இருந்தும், இப்படிப்பட்ட வேலைகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.’ -கிரன் பெடி .பி.எஸ்.

கிரன் பெடி! இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்கிற பெருமைக்கு உரியவர். ”வீரமும் ஈரமும் நிறைந்த ஒருங்கே அமைந்தவர். நேர்மையானவர், துனிச்சலானவர்” என்று பேர் எடுத்தவர். தில்லியில் போக்குவரத்து அதிகாரியாக பணி புரிந்த காலத்தில், ‘நோ பார்க்கிங் ஏரியா’வில் நிறுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் காரையே அப்புறப்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். திகார் சிறையில் பணியாற்றியபோது, கைதிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்தவர் என்றெல்லாம் அறியப்படுகிறார்.

‘மனித உரிமையை பாதுக்காக்கத்தான் காவல்துறையே தவிர, மீறுவதற்கு அல்ல’ என்கிற கொள்கையைக் கொண்டிருந்த கிரன் பெடி, சிறைத் துறையில் செய்த சேவைகளுக்காக ‘ஆசியாவின் நோபல் பரிசு’ எனப்படும் ‘ராமன் மகசேசே விருதினை’ 1994&ம் ஆண்டு பெற்றார். 1972-ம் ஆண்டு, இந்திய காவல் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட கிரன் பெடி, சுமார் 35 ஆண்டுகள் சேவை புரிந்து 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இடையில், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான காவல்துறை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். ‘நவஜோதி, இன்டியா விஷன் ஃபவுன்டேஷன்’ என்கிற இரண்டு தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து, ஏழை மக்களின் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஆங்கிலப் பத்திரிகையானது ‘இந்தியாவின் நம்பிக்கை மனிதர்கள்’ என்கிற தலைப்பில், உலகம் முழுக்க ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், முதலாவதாக அப்துல்கலாமும் இரண்டாவதாக ரத்தன் டாடாவும் மூன்றாவதாக கிரன் பெடியும் வந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கிரன் பெடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உச்சம். இதேபோன்று, 200200-ம் ஆண்டில் ‘த வீக்’ ஆங்கில பத்திரிகை நடத்திய ‘இந்தியாவின் போற்றத்தக்க பெண்மணிகள்’ என்கிற வாக்கெடுப்பில் ஐந்தாவது இடம் பிடித்தார் கிரன். இதற்கடுத்து இதே பத்திரிகை, 2006-ம் ஆண்டு நடத்திய ‘இந்தியாவின் 15 பிம்பங்கள்’ என்கிற கருத்துக் கணிப்பிலும் இடம் பெற்றார். ‘அசெர்டிவ் ரோல் மாடல்’ என்று பஞ்சாப் மாநில போலீஸ் ஜெனரல், எம்.எஸ்.கில் அவர்களால் பாராட்டப்படும் கிரன் பெடி, உண்மையில் இந்தியாவின் அத்தனை பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும்கூட ரோல் மாடலாக இருக்கிறார். பெண் என்கிற பொதுச் சொல்லில் கிரன் பெடியை ஒதுக்கிவிட முடியாது. சிறந்த பேச்சாளர், கட்டுரையாளர், ஆன்மீகவாதி, விளையாட்டு வீராங்கனை என்று கிரன் பெடிக்கு இன்னும் எத்தனையோ முகங்கள் உண்டு. ஆனால், இன்று?

‘‘ஏரியல் வாஷிங் பவுடரை யூஸ் பண்ணா, துணிகள் பளிச்சிடும். நானும் அதைத்தான் யூஸ் பண்ணுகிறேன். நீங்களும் ட்ரை பண்ணுங்க’’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அதாவது, ‘ப்ராக்டர் அன்ட் கேம்பிள்’ என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு அதன் ‘ஏரியல் வாஷிங் பவுடர்’ விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்தியா முழுக்க இந்த விளம்பரம் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. ஒரு அமிதாபச்சனோ, ஷாருக்கானோ இப்படி விளம்பரத்தில் தோன்றியபோது அதிர்ச்சியடையாத இந்திய மக்கள், பெப்சி குடிக்கச் சொல்லி சச்சின் டென்டுல்கர் சொன்னபோது கோபப்படாத இந்திய மக்கள், கிரன் பெடியின் இந்த விளம்பரத்தால் ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள். ஃபேஸ் புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற இணைய தளங்களில் கிரன் பெடியின் இச்செயல் குறித்த விவாதங்கள்,

‘‘யூ டூ கிரன் பெடி?’’‘‘ஏன், அவங்க துணி துவைக்கக் கூடாதா? அவங்க ஏரியலும் யூஸ் பண்ணுவாங்க, ரின்னும் யூஸ் பண்ணுவாங்க. அது பத்தி உங்களுக்கென்ன?’’‘‘இன்னிக்கு சோப் போடுவாங்க. நாளைக்கு பெப்சி, கோக் குடிக்கச் சொல்வாங்க. இன்னும் கொஞ்சம் காசு கொடுத்தா கிங்ஃபிஷர் குடிக்கச் சொல்வாங்களா? என்ன நியாயம் இது’’‘‘காசேதான் கடவுள்னு நிரூபிச்சிட்டாங்கப்பா!’’‘‘பேசாம இவங்களும் அரசியல்வாதி ஆகிடலாம்’’‘‘அருமையா நடிச்சிருக்காங்க! இத்தனை நாளும்.’’ என்று மிகவும் சூடாக நடந்தேறிக்கொண்டு இருக்கிறது.

இதேபோன்ற விவாதங்கள் மாணவர்கள் மத்தியிலும் நடந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக, என்.சி.சி மாணவிகள் ரொம்பவே நொந்துபோனதாகச் சொல்கிறார்கள். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த திவ்யா, இப்போதுதான் பிளஸ்-டூ முடித்திருக்கிறார். ‘‘சின்ன வயசிலர்ந்தே எனக்கு காக்கி யூனிஃபார்ம் மேல அப்படி ஒரு ஈடுபாடு. ஐ.பி.எஸ் முடிச்சிட்டு ரவுடிங்களை எல்லாம் ஓட ஓட விரட்டணும்னு அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். வீட்ல நான் சூப்பரா காஃபி போடுவேன். ஆனா, யாராவது என்னை காஃபி போடச்சொல்லி கம்ப்பல் பண்ணா, பயங்கர கோபம் வரும். பொண்ணுக்கு ஒரு சட்டம், பையனுக்கு ஒரு சட்டம்னு சொல்றது சுத்தமா எனக்குப் பிடிக்கலை. ஸ்போர்ட்ஸ்னு வந்தா நான் பையன்களைவிட வேகமா ஓடுவேன். சன்டைன்னு வந்தா யாரா இருந்தாலும் மூக்கை உடைப்பேன். ஏன்னா, எனக்கு கராத்தே தெரியும்.

பூ வச்சிக்கிறது, பொட்டு வச்சிக்கிறது, நீளமா முடி வளர்க்கிறதுல எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. என் ஹேர் ஸ்டைலை பாத்தீங்களா? என்னுடைய ரோல் மாடல்ல கிரன் பெடிதான் ரொம்ப முக்கியமானவங்க. அவங்களைப் போலவே துனிச்சலா, நேர்மையா இருக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம். ஆனா, இந்த ஏரியல் விளம்பரத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியாகிட்டேன். எனக்கு அவங்களைப் பிடிக்கலை. காசுக்காக எல்லாத்தையும் செய்யலாமா என்ன?’’ என்கிறார்.

பிளஸ்-டூவில் அடியெடுத்து வைத்திருக்கும் திருவொற்றியூர் காவேரியின் கருத்தும் இதேதான். ‘‘திய்வாபோல நான் ஹேர் கட் பண்ணிக்கலைன்னா என்ன? என்கிட்ட பாய்ஸ் யாராச்சும் வாலாட்டினாங்கன்னா, அவங்களை நான் ஒட்ட நறுக்கிடுவேன். ஸ்கூல்ல ஒரு முறை, கிரன் பெடி மேடம் பத்தி பெருமையா சொன்னாங்க. அன்னிலேர்ந்து அவங்கதான் எனக்கு ரோல் மாடல். பொண்ணுங்க நெனச்சா எல்லாத்தையும் சாதிக்கலாம். ரவுடிங்களைக்கூட நல்வழிபடுத்த முடியும்னு நிரூபிச்சவங்க அவங்க. ஆனா, அவங்களும் எல்லா லேடீஸ் மாதிரியும் வீட்ல துணி துவைக்கிறாங்கன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை. காசுக்காக இப்படிச் செஞ்சிருந்தா அது ரொம்பத் தப்பு’’ என்கிறார்.

கிரன் பெடியின் இந்த செயல், ‘‘பெண்கள், சமைக்கவும் துவைக்கவும்தான் லாயக்கு’’ என்கிற அதரப் பழசான வாதத்துக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பிற்போக்காக இருக்கிறது என்பதே இன்றைக்கு எல்லோருடைய கருத்தும். இது குறித்து சில பிரபலங்களிடம் பேசினோம்.

சமூக நல வாரியத் தலைவரும் கவிஞருமான சல்மா, ‘‘‘அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா காய்கறி நறுக்குகிறார்’ என்பதில் ஆரம்பித்து, சமூகத்தில் பொதுவாவே சில பிற்போக்கு பிம்பங்கள் பெண்களுக்கு இருக்கின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் மட்டுமே இந்த பிம்பத்தை உடைத்து எல்லோரும் ஒன்றுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கிரன் பெடியும் இதில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், ஏராளமான பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார். பெண்கள் சம்பந்தமான பல கூட்டங்களில் கிரன் பெடியின் பெயரை உச்சரிக்காவிட்டால் அது முழுமை பெறுவதில்லை என்கிற நிலமை இருக்கிறது.

குறிப்பாக மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பினருக்கு கிரன் பெடி என்கிற பெயர் ஒரு தாரக மந்திரமாகவே இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர், ‘நானும் வீட்டில் துனிதான் துவைக்கிறேன் ’ என்று சொல்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இது அவருடைய தனிப்பட்ட உழைப்பு மற்றும் திறமையினால் கிடைத்தது என்றாலும், அவரை ரோல் மாடலாகக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இது பேரதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ‘என்னதான் ஐ.பி.எஸ். ஆஃபீஸரா இருந்தாலும், வீட்டுக்கு வந்தா துணிதான் துவைக்கணும்போல’ என்று அவர்கள் குறுகிவிட வாய்ப்பு உண்டு.

சொந்தக் காலில் நிற்கும் தகுதி உடைய, தன்னுடைய சம்பாதியத்தினால் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண்களைக்கூட, ‘பாத்த இல்ல, கிரன் பெடியே துணி துவைக்கும்போது நீ எல்லாம் எம்மாத்திரம்?’ என்று ஆண்கள் ஏளனம் செய்வார்கள். சமூகத்தில் நன் மதிப்பை பெற்ற ஒருவர், தன்னுடைய பிம்பத்தை பயன்படுத்தி மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, இப்படி தாழ்வு மனப்பாண்மையை உண்டாக்குகிற ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கக் கூடாது. மக்கள், கிரன் பெடிக்கு கொடுத்திருந்த மரியாதையை அவர் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.’’ என்கிறார்.

‘‘பெண்களை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்கிறவர் இயக்குநர் ஜனநாதன். பேராண்மை திரைப்படத்தில் ஆணுக்கு நிகராக ஐந்து பெண்களை ஆயுதம் ஏந்த வைத்தவர். அவர் , ‘‘கவர்ச்சிப் பொருள் மட்டுமில்லை, பெண்களை வணிகப் பொருளாக பயன்படுத்துவதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. நான் உதவி இயக்குநராக இருந்தபோதே திடமான ஒரு கொள்கை முடிவை எடுத்துவிட்டேன். ‘மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சாமிப் படங்கள், வணிக நோக்கிலான விளம்பரப் படங்கள் ஆகியவற்றில் பணியாற்றக்கூடாது’ என்பதே அது. எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப் படங்களுக்கு நான் வேலை பார்க்க மாட்டேன். இன்றைக்கு மனிதனின் அடிப்படை உரிமையான மருத்துவம், கல்வி இரண்டுமே வியாபாரமாகிவிட்டது. உலகம் முழுக்க லாப வெறி தலை விரித்து ஆடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் வனிக நோக்கோடு ஒரு பொருளை மக்கள் மீது தினிப்பதை நான் வெறுக்கிறேன். இதனால், பிரபலங்கள் விளம்பரத்தில் நடிக்கும்போதெல்லாம் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். நடிப்பு, விளையாட்டு, நேர்மை என்று வேறு ஒரு திறமைக்காக மக்கள் அவர்களை போற்றுகிறார்கள். அந்த மக்களிடம் போய், பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவருடைய பொருளை வாங்கச் சொல்வது என்ன நியாயம்? ‘கோகோ கோலா, பெப்சி குடிப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல’ என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்த பிறகும் கிரிக்கெட் வீரர்களும் சில சினிமா நடிகர்களும் அதை ஊக்குவித்து விளம்பரம் செய்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இதெல்லாம், அன்பு வைத்த மக்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம் ’’ என்கிறார்.

‘‘இதெல்லாம் அதிர்ச்சி தரத்தக்க விஷயமே இல்லை. ஏனென்றால், கிரன் பெடி ஒன்றும் பெண்ணியவாதி அல்ல’’ என்கிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். தொடர்ந்து பேசியவர், ‘‘இந்தியாவின் முக்கியமான ஆளுமைகளில் கிரன் பெடி முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை. நிறைய பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார். அதே சமயம், பெண்ணிய தளத்தில் அவர் எந்த வேலையும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால், காலங்காலமாய் இந்த சமூகம் பெண்களுக்குச் சொல்லிவரும் ‘துவைப்பது, சமைப்பது’ போன்ற வேலைகளுக்கு ஆதரவான ஒரு விளம்பரத்தில் நடித்திருக்க மாட்டார். அதேபோல், அரசியல் ரீதியாக பெண்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதில்லை. அவருக்கென ஒரு அரசியல் பார்வை இருப்பதாகவும் தெரியவில்லை. பெண்ணிய அரசியலை முன் வைத்து ஒருபோதும் அவர் பேசியதில்லை. அந்த வகையில், இந்தியாவுக்கான பெண்ணியக் குறியீடாக என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடையக் காரணம், நம்முடைய பார்வையில் உள்ள கோளாறுதான். கிரன் பெடியாகட்டும் கல்பனா சாவ்லாவாகட்டும், அவர்களுடைய முன்னேற்றம்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்ததே தவிர, மற்ற பெண்களுடைய பிரச்னைகள் குறித்து அவர்கள் கவலைபடவில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார்.

‘‘அவர் லஞ்சம் பெற்றாரா? சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டாரா? ‘நானும் வீட்டில் துவைக்கிறேன்’ என்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லையே’’ என்று இணையத்தில் சிலர் வாதங்களை முன் வைக்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குறிப்பு:

“ச்சே.. ச்சே! இதுக்காகவெல்லாம் கிரன்பெடியை குத்தம் சொல்லி நீங்க கட்டுரை எழுதக்கூடாது.” என்று ‘சூரிய கதிர்’ இதழின் இப்போதைய ஆசிரியர் டாக்டர்.கை.கதிர்வேள் அவர்களால் நிராகரிக்கபட்ட கட்டுரை.

Monday, October 18, 2010

”பழி தீர்த்த சுந்தரம் மாஸ்டர், பயிற்சி கொடுத்த பிரகாஷ்ராஜ்” பாவம் ரமலத்


திருமணம் என்பது சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப்படுவதில்லை. திருமணப் பத்திரம், ரேஷன் கார்டு, குழந்தைப் பிறப்பு, பாஸ்போர்ட் என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரபுதேவா மற்றும் நயன்தாராவிடம் இருந்து ரமலத்தைக் காப்பாற்றி வருவது மேற்கண்டப் பதிவுகள்தான்.

ரமலத்தின் வாழ்க்கை நிர்க்கதியாய்ப் போனதற்கு நயன்தாராதான் காரணம் என்று மீடியாக்கள் எழுதி வருகின்றன. ஆனால், உண்மை அதுவல்ல என்கிறது கோடம்பாக்கம். வீட்டில் ஒன்று வெளியில் ஒன்று என இரண்டு காரணிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

முதலாமவர், பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டர். ‘என்னிக்கா இந்தாலும் இந்தக் கல்யாணத்தைப் பிரிச்சுக் காட்றேன்’ என்று சுந்தரம் சவால் விட்டதாகவும், அதை நிறைவேற்றிக் காட்டியதாகவும் சொல்கிறார்கள். இரண்டாமவர், நடிகர் பிரகாஷ்ராஜாம். லலிதகுமாரியை உதறிவிட்டு போனிவர்மா என்கிற நடன இயக்குநரை கைப்பிடித்த இவர், தன்னுடைய யுத்திகள் முழுவைதையும் பிரபுதேவாவுக்குக் கற்றுக் கொடுத்தாராம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

‘‘பதினைந்து வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய 23&ம் வயதில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ரமலத்தைக் கைப்பிடித்தார் பிரபுதேவா. இருவரும் அப்போது நடனக் கலைஞர்களாக இருந்தார்கள். இன்றைக்கு உள்ளதுபோல் பனமும் புகழும் பிரபுதேவாவுக்கு அப்போது இல்லை. வளர வேண்டிய வயதில் கல்யாணம் ஆகிவிட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சப்பட்டார், அப்பா சுத்தரம். அவரது அச்சம் நியாயமானதுதான். ஆனால், அச்சத்தை உடைத்து அப்பாவின் கணிப்புக்கு எதிராக உச்சத்திற்கு வந்தார் பிரவுதேவா. ரமலத் இல்லையென்றால், இது சாத்தியமே இல்லை’’ என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

‘‘பொண்டாட்டி பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பான் பிரபு. அடிக்கடி வெளிநாடு அழைச்சிட்டுப் போவான். மூணு குழந்தைங்க பெத்திருக்கான்னா, ரமலத் மேல அவனுக்கு எவ்ளோ காதல் இருந்திருக்கும்ங்கிறதை சொல்லத் தேவையில்லை. ரமலத் இல்லாம தன்னால வாழ முடியாதுன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணான். அந்தப் பொண்ணும் புருஷன் வீட்ல தனக்கு ஆதரவு இல்லைன்னு தெரிஞ்சு, பொறுப்போட நடந்துக்கிட்டா. அதிர்ந்து பேசமாட்டா. வீட்டுக்கு யார் வந்தாலும் ரொம்ப கணிவா நடந்துப்பா. இன்னிக்கு பிரபு இந்தளவு வளர்ந்திருக்கானா, அதுல ரமலத்துக்கு முக்கியப் பங்குண்டு.’’ என்கிறார் பிரபுதேவா&ரமலத் திருமணத்தை முன்னின்று நடத்தியவரான ஜெயந்தி கண்ணப்பன். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களெல்லாம் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் இவர்.

‘‘பழைய பகையை மனசுல வச்சு சுந்தரம் மாஸ்டர் பழி வாங்கிவிட்டதாக சிலர் சொல்றாங்க. நான் அப்படி நினைக்கலை. பிரபுவும் அவனோட குழந்தைகளும் மாஸ்டர் வீட்டுக்கு போய் வந்துட்டுதான் இருக்காங்க. அவரும், பேரப் பிள்ளைங்க மேல ரொம்பப் பாசமா இருக்கார். என்னைப் பொறுத்தவரை நயன்தாராதான் இதுக்கு முக்கியக் காரணம். அவளுக்கு இப்போ 23 வயசுதான். ஆனா, காசு இருக்கிற தைரியத்துல ஆட்டம் போடுறா. மூணு கோடி ரூபாய்ல ஒரு வீடு. மாசம் மூணு லட்ச ரூபா பணம். 85 சவரன் நகையெல்லாம் ரமலத்துக்கு கொடுத்திருக்கிறதா இன்டஸ்ட்ரி முழுக்க புரளி கிளப்பியிருக்கா. இதுல துளிகூட உண்மையில்லை. காசு பனத்துக்கு ஆசைப்படுறவ இல்லை ரமலத். நயன்தாரா எப்படிப்பட்டவ, யாரோடவெல்லாம் சுத்திட்டு வந்திருக்காங்கிறதை பிரபு யோசிச்சுப் பாக்கணும். ஆனா, யோசிக்கிற மனநிலையில் அவன் இல்லை. அதுதான் வருத்தமான விஷயம்’’ என்கிறார் ஜெயந்தி.

ஆனால், ‘‘சுந்தரம் மாஸ்டரின் சூழ்ச்சிதான் பிரிவுக்கு முக்கியக் காரணம்’’ என்கிறது ரமலத்தின் உறவினர் வட்டாரம்.

‘‘பிரபுதேவாவையும் குழந்தைங்களையும் ஏத்துக்கிட்ட மாஸ்டர் குடும்பம், ரமலத்தை மட்டும் கடைசிவரை ஏத்துக்கலை. மாமனார் வீட்டில் ஒருநாள்கூட ரமலத் கால் வச்சதில்லை. கல்யாணத்துக்குப் பிறகு வெளியுலகமே தெரியாத அவங்களுக்கு பிரபுவைத் தவிர யாரையுமே தெரியாது. இதுதான் அவங்களோட இன்றைய நிலமைக்குக் காரணம். பிரபுவோட அந்தஸ்துக்கு, ரமலத் லாயக்கு இல்லைன்னு மாஸ்டர் குடும்பம் நினைக்குது. இப்போகூட சுந்தரம் மாஸ்டர் வீட்டில் வச்சு, பிரபுதேவா&நயந்தாராவுக்காக விஷேஷ பூஜை நடந்திருக்கு. ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க கவனிக்கணும். காதல் திருமணத்தை எதிர்க்கிறவர் இல்லை சுந்தரம் மாஸ்டர். ராஜூ சுந்தரமும் கமலஹாசனோட கடைசியா சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகையும் சின்சியரா லவ் பண்ணாங்க. மாஸ்டர் வீட்டுக்கு வருவாங்க. கூத்தடிப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மாஸ்டர் கண்டிக்கவே இல்லை.

அது மட்டுமில்லை. மூத்த பையன் கேன்சர்ல செத்த மறு நாளே, பிரபுவைக் கூட்டிட்டு நயன்தாரா வெளியே போய்ட்டாங்க. இரக்கமே இல்லாத இந்த விஷயத்தைக்கூட மாஸ்டர் கண்டிக்கலை. காரணம், எப்படியாவது ரமலத்தைவிட்டு பிரபு வெளியே வரட்டும்னு அவர் நினைச்சதுதான். அதுக்காகத்தான் நயன்தாராவுக்கு அவர் சப்போர்ட் பண்ணுகிறார்’’ என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.

‘‘அடக் கடவுளே!’’ என்று வியக்கும் வேளையில், ‘‘பொண்டாட்டியை கட் செய்வது எப்படி என்று பிரபுதேவாவுக்கு பயிற்சி கொடுப்பது பிரகாஷ்ராஜ்தான்’’ என்று இன்னொரு குண்டையும் போட்டார்கள்.

‘‘பிரகாஷ்ராஜ்&பிரபுதேவா. லலிதகுமாரி-ரமலத்(எ)லலிதா. ‘பேர் ஒத்துமையைப் பாருங்க. பிரகாஷ்ராஜோட மனைவிக்கு எந்த மாதிரி சிக்கலெல்லாம் வந்ததோ, அதே மாதிரி சிக்கல்தான் ரமலத்துக்கும் வருது. முன்னாடிலாம் 3 லட்சம் 4 லட்சம்னு வீட்டுச் செலவுக்கான பணத்தை ரமலத்தே மேனேஜ் பண்ணுவார். வீட்லயும் காசு இருக்கும். ஆனா, இப்போ காசு கொடுக்கிறதை பிரபுதேவா நிறுத்திட்டார். ‘மளிகை பில்லை கொடு. நான் செட்டில் பண்ணிக்கிறேன்’னு சொல்லியிருக்கார். உதவி கேட்டு யாரையும் பார்க்கக்கூடாதுன்னு வீட்ல இருந்த காரையும் எடுக்கப் பார்த்தார். நாங்கதான் அதைத் தடுத்து நிறுத்தினோம். இனி அன்றாடத் தேவைகளை ஒரேயடியாக நிறுத்தி ரமலத்தைப் பணிய வைக்க முயற்சி நடக்குது. பாவம் ரமலத். வேறு வழியில்லாம கோர்ட் படி ஏற வேண்டியதாப் போச்சு’’ என்கிறார்கள்.

ரமலத்திடம் இது குறித்துக் கேட்டபோது, ''எனக்கு எதிராக சதி நடப்பது உண்மைதான். தொடர்ந்து மிரட்டல்கள் வேறு வந்துகொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இப்போதைக்கு என்னால் பேச முடியவில்லை.’’ என்று முடித்துக்கொண்டார்.

பிரகாஷ்ராஜ் தரப்பில் இது குறித்து கேட்க முயற்சித்தபோது போனையே எடுக்கவில்லை. மாஸ்டர் வீட்டிலிருந்தும் முறையான பதில் இல்லை.

Wednesday, September 22, 2010

ஆல்ரெடி நேரமாச்சி ‘பப்’பும்தானே மூடிப்போச்சி

சென்னை நகரின் மையப் பகுதியில் இருக்கிறது அந்த 'pub'. அங்கிருந்து, தொடர்ச்சியான்அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இரவு 9.30 மணி இருக்கும். ‘எவன்டா இந்த dj?’ என்று எகிறி ஒரு குத்துவிடலாம்போல் இருந்தது. காதைப்பிளக்கும் கனத்த இரைச்சல் அங்கே. ‘பப்பின்மையப் பகுதியில் அளவான தேகத்துடன் இரண்டு இளம் ஜோடிகள் இடுப்பில் கை போட்டபடி ஆடிக்கொண்டிருந்தன. பாதிப் பேர் அவர்களது நடனத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். மீதிப்பேர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த இரைச்சலுக்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் அவர்களது செவித்திறனை நினைத்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. smoking hall-ல் இருந்த இளம்பெண் ஒருத்தி, கையில் சிகரெட்டை வைத்தபடி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். காதுகளை மூடியிருந்த என் விரல்களை எடுத்துவிட்டு விழிகளை வேறு பக்கம் திருப்பினேன். ha.. ha.. ஊத்திக்கொடுக்கும் இடத்தில் அந்த ஜோடி நின்றுகொண்டிருந்தது.

அவள் ஒரு சிங்கி மங்கி, சப்பை மூக்குக்காரி. கவர்ச்சியைக் கூட்டுவதற்காக மூக்கில் வளையம் போட்டிருந்தாள். தளதளவென்றும் வெள்ளை வெளேரென்றும் இருந்தாள். ஆனால், சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம். கூட வந்திருந்த இளைஞன், அவளைப் போல் ஒரு மடங்கு எக்ஸ்ட்ரா உயரத்தில் இருந்தான்.

இரண்டு பேரும் ஆளுக்கொரு கிளாஸை சாய்த்துக்கொண்டு, ஆடுவதற்காக ‘பப்’பின் மையத்துக்கு வந்தார்கள். அதுவரை என் காதுகளை டேமேஜ் செய்துகொண்டிருந்த அந்த நான்சென்ஸ் டி.ஜே., அப்போது போட்டானே ஒரு பாட்டு! அட... அட..

அதில், "so, i fuck you. fuck you" என்று சுத்தமான ஆங்கிலத்தில் கோபமாகப் ஒரு வெள்ளைக்காரி பாடிக்கொண்டிருந்தாள். ‘எப்படியெல்லாம் பாட்டு எழுதுறானுவ. நம்ம பேரரசுவ மிஞ்சிறுவானுங்கபோல’ என்று நினைத்துக் கொண்டேன். சிங்கி மங்கியின் டான்ஸ் உச்சகட்டத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. அந்த இளைஞன், அவளை இடுப்பு முதல் கழுத்துவரை தடவித் தடவி, இழுத்து அணைத்து ஆடிக்கொண்டிருந்தான்.

இன்னொரு பையனுக்கு 20+ இருக்கவேண்டும். சிங்கி டான்ஸ் பார்த்ததில், அவன் டெம்ப்ட் ஆகி இருக்கவேண்டும். கூட்டாளியுடன் மங்கலான வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்த தன் கேர்ள் ஃபிரண்டை இழுத்துக்கொண்டு வந்தான். அவளது இடுப்பை வளைத்துக்கொண்டு ஆடத் துவங்கினான். அதற்குள், ஐஸ் கியூப் மிதக்க மிதக்க எனக்கு ஒட்கா வந்தது. ச்சில்லென்று இருந்த சிப், மிகவும் ஸ்வீட்டாக இருந்தது.

‘நாமளும் கேர்ள் பிரண்டோட வந்திருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த 20+ இளைஞனுக்கு டவுசர் அவுந்துகொண்டது. அவன் போட்டிருந்தது சின்ன சட்டை என்பதால், ஜட்டி மொத்தமும் வெளியே தெரிந்தது. கேர்ள் ஃபிரண்டுக்கு அவமானமாகி இருக்கவேண்டும். வெடுக்கென்று விடுவித்துக்கொண்டு ஓடிவிட்டாள். இவன் டவுசரை சரி செய்துகொண்டு தனியாக ஆடிக்கொண்டிருந்தான். பக்கத்தில், சிங்கி மங்கி டான்ஸ் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஜோடி இல்லாத இன்னொரு இளைஞனும் அங்கே காமெடி பண்ணிக்கொண்டிருந்தான். பீர் பாட்டிலை தலையில் வைத்தபடி, அவன் அங்குமிங்கும் நடந்தவாறே கேனத்தனமாக ஆடிக்கொண்டிருந்தான். ஒரு வழியாக டி.ஜே-வின் fuck cd முடிவுக்கு வந்ததும், சிங்கியும் உயரமான அவள் பாய் ஃபிரண்டும் வழக்கம்போல ஊத்திக்கொடுக்குமிடம் வந்தனர்.

அடுத்த டான்ஸ் ரவுண்ட் ஆரம்பமானது. ‘ஏய், எப்பப் பாத்தாலும் இங்லீஸ் பாட்டுதான் போடுவியா. ங்கொய்யால தமிழ் பாட்டு போட்றா’ என்றொரு சவுண்டு. ‘ஏ.. வில்லு வில்லு வரான் வில்லே’ என்று குஷ்பு மாமியின் குத்துப் பாடல் ஒலிக்க, என்ன ஆச்சர்யம்? கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் மேடைக்கு வந்து ஆடத் துவங்கிவிட்டார்கள். ’என்ன இருந்தாலும் தமிழ்ப் பாட்டு, தமிழ் பாட்டுதான்’ என்று நினைக்கத்துக்கொண்டேன். பிறகு அடுத்தடுத்து இந்திப் பாட்டு, தெலுங்குப் பாட்டெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தன.

மணி பத்தரை இருக்கும். இரண்டு 20+ பையன்கள், இரண்டு 20+ பொண்ணுகளை தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருத்தியின் முதுகு முழுமையாய் திறந்திருந்தது. இன்னொருத்தி ஜட்டியைவிட கொஞ்சம் பெரிதான் டவுசர் போட்டு, டைட்டான ஒரு பனியனும் போட்டிருந்தாள். இரண்டு பொண்ணுகளும், அள்ளித் தின்னலாம்போல அப்படி ஒரு அழகு. இதுக நாலுகளும் இருட்டான ஒரு மூலையில் நின்று மாத்தி, மாத்தி ஆடிக்கொண்டிருந்தன. கமலஹாசனை மிஞ்சும் அளவுக்கு கட்டிப்பிடி வைத்தியங்கள் பக்காவாக நிறைவேறின.

பத்தரை மணி பையன்களைப் பார்த்தால், பத்தரை மாத்துத் தங்கம்போல பய்யமாய்த் தெரிந்தனர். ஆனால், அவன்கள் ஊத்துவதும் ஊதுவதும் அந்தளவு ஆச்சர்யமாக இருந்தது. ஸ்மோக்கிங் ரூமில் ஒருத்தி பயங்கர ரொமான்ஸ் மூடில் பளபள தொடைகளுடன் பாய் ஃபிரண்டோடு காணப்பட்டாள். சீக்கிரமே அந்த ஜோடி எஸ்கேப் ஆனது.

மீண்டும் ஆடு களத்துக்கு வருவோம். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிங்கி மங்கியும் அவள் பாய் ஃபிரண்டும் டான்ஸில் அமர்க்களபடுத்திக் கொண்டிருந்தனர். அவ்வப்போது அவளை அவன், அலேக்காகத் தூக்கி ஊஞ்சல்போல ஆட்டினான். கீழே படுக்க வைத்தான். ஏறி, மேலேயும் படுத்தான். பிறகு எழுந்து நின்று ஆட ஆரம்பித்தான். இவனது கொட்டத்தை அடக்க நினைத்த இன்னொரு இளைஞன், இந்த இருவருக்கும் நடுவில் புகுந்து சிங்கி மங்கியின் கவனத்தை ஈர்த்தான். சிங்கி மங்கியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளோடு சுழல் நடனம் போட்டான். சிங்கியின் பாய் ஃபிரண்டும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சரக்கு ஊத்திக்கொள்ள மேடையை விட்டு இறங்கினான்.

மணி 10.45. அதுவரை இருளில் நிரம்பியிருந்த ‘பப்’ திடீரென வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது எல்லோரும் ஃபுல் மப்பில் இருந்தோம். கேட்கணுமா என்ன? முன்பைவிட எல்லாரும் வேகமெடுத்து ஆட ஆரம்பித்தார்கள். கொடுத்த காசுக்கு என்னென்ன செய்யணுமோ, அவ்வளவையும் செய்துகொண்டிருந்தான் சிங்கி மங்கியின் பாய் ஃபிரண்ட். உருளுவது, புரளுவது, கட்டிப் பிடிப்பது, அமுக்குவது என்று அத்தனையும் வெளிச்சத்தில் செய்தான். 11 மணிக்கு டி.ஜே, சத்தத்தை நிறுத்தினான். ‘ஏய் கடைசியா ஒரு தடவை தமிழ்ப் பாட்டு போடு’ என்று குரல்கள் ஒலித்தன. மீண்டும் ஆடல் பாடல் கொண்டாட்டம்.

“பப்’பை விட்டுக் கிளம்பும்போது சிங்கி மங்கியின் பாய் ஃபிரண்ட் சொன்னான். ”இவளை யாராவது கூட்டிட்டுப் போறதா இருந்தா, கூட்டிட்டுப் போங்க. நோ பிராப்ளம்”

கொசுறு: நேற்று ஞாயிற்றுக் கிழமை, பொண்ணுங்களுக்கு சரக்கு ஃப்ரீ. பையன்க, ஒரு லார்ஜ் ஆர்டர் பண்ணா, இன்னொரு லார்ஜ் ஃப்ரீ. இனி சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?

Wednesday, June 23, 2010

நம்புங்கள்! ஒரு நாய் விலை, ஒரு கோடி ரூபாய்!



சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், சின்னி ஜெயந்துக்கு அன்புப் பரிசாக வழங்கிய நாய் திடீரென காணாமல் போய்விட்டது. இதையடுத்து நாயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டன. போலீசும் சின்னி ஜெயந்தும் வலை போட்டு நாயைத் தேடியதில், மந்தைவெளியில் ஒரு சிறுவன் அதை வைத்திருப்பது தெரிந்தது. நாயைக் கண்ட சந்தோஷத்தில் சின்னி ஜெயந்த்தும் அழுதிருக்கிறார், நாயைத் திருடிய சிறுவனும் அழுதிருக்கிறான். அவனும் அன்பால் திருடியவன்தான்.

இப்படியாக வரலாற்று காலந்தொட்டே நாயின் மீதான பாசம் நம்ப முடியாத அளவுக்கு மனிதர்களிடம் பரவியிருக்கிறது. சமீபத்தில் தன் அன்பு நாய்க்கு நாநூறு கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்திருக்கிறார் லன்டனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்.

‘மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும்கூடு’ என்று நம்மைப் பார்த்துச் சொன்னார் கண்ணதாசன். உங்களால் நம்ப முடியுமா? ஒரு நாயின் விலை ஒரு கோடி ரூபாய். அதுவும் சென்னையிலேயே சிலர் இந்த நாய்களை வைத்திருக்கிறார்கள். (இப்படிப்பட்ட நாய்கள் எந்தவொரு நடிகர் நடிகையிடமும் இல்லை.)

‘‘அம்மாடீ... நாய் விலை ஒரு கோடியா? பேசாம நாய் வியாபாரம் ஆரம்பிச்சிடலாமே’’ என்று இறங்கிவிடாதீர்கள். அது லேசுபட்ட காரியமல்ல. நாய் வளர்ப்பவர்கள் ‘பிசினஸ்’ என்கிற வார்த்தையையே வெறுக்கிறார்கள். ‘இது அன்பால் விளைந்தது’ என்பதே அவர்களின் கருத்து.

நாய் வளர்ப்பு இரண்டு வகைப்பட்டது. ஒன்று, ஷோவுக்கு அழைத்துச் என்று பேர் வாங்குவது. இன்னொன்று ஆசைக்கு வளர்ப்பது. நாயின் மீது அன்புகொண்ட சிலரிடம் நாம் பேசியதிலிருந்து...

பந்தாவான நாய்கள் விலை, எப்போதுமே லட்சக் கணக்கில்தான். இந்த ஆண்டு, நாய்களுக்காக நடத்தப்படும் ‘கிரஃப்ட்ஸ் ஷோ’ லன்டனில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 22 ஆயிரம் நாய்கள் இதில் கலந்துகொண்டன. முடிவில் ‘யோகி’ என்கிற ஹங்கேரியன் விஸ்லா நாய்க்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இதன் குட்டி விலை, குறைந்தது 50 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.

விஷேஷம் என்னவென்றால், குதிரைப் பந்தயம்போல இப்போட்டிகளில் சூது, பந்தயம் என்பதெல்லாம் சுத்தமாக கிடையாதாம். அத்தனை நாய் ஷோக்களும் கவுரவத்துக்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

நாய் கண்காட்சி என்பது, ஃபேஷன் ஷோ மாதிரி அழகுக் கண்காட்சி மட்டுமல்ல. ‘இவ்வளவு உயரம், இவ்வளவு அகலம், இவ்வளவு எடை’ என்று குறிப்பிட்ட சில தகுதிகள் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள நாய்க்கு அனுமதி கிடைக்கும். சரி, நீங்கள் ஆசைக்கு ஒரு நாய் வளர்க்கிறீர்கள். அதே சமயம் ஷோவுக்கு அழைத்துச் சென்று பந்தா காட்டவும் ஆசை.

அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

நாய்களின் ஜாதகத்தை பதிவு செய்வதற்கான சர்வதேச அமைப்பின் பெயர் ‘ஃபெடரேஷன் சைனலாஜிக் இன்டர்நேஷனலெ(எஃப்.சி.ஐ.). அதுபோல் இந்தியாவுக்கான அமைப்பின் பெயர் கென்னல் கிளப் ஆஃப் இன்டியா(கே.சி.ஐ). கென்னல் கிளப்பின் கிளை நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் இருக்கிறது. இந்த கிளப்தான் இந்தியாவில் நாய்களுக்கான சர்டிஃபிகெட் இஷ்யூயிங் அத்தாரிட்டி. அவர்களுடைய சர்டிபிகேட் இல்லையென்றால் எந்த நாய் ஷோவிலும் நீங்கள் கலந்துகொள்ள முடியாது.

மனிதர்களுக்கு குழந்தை பிறந்தால் எப்படி பதிவு செய்கிறோமோ அதேபோலத்தான் இந்த நாய்களுக்கும். பிறந்து 45 நாட்களுக்குள் பதிவு செய்துவிடவேண்டும். அந்தவகையில், ‘ஷோ’வுக்குத் தகுதியான நாய்களை யார் வைத்திருக்கிறாரோ, அவரே தான் வைத்திருக்கும் நாய்கள், குட்டிகள் ஆகியவற்றின் விபரங்களை கென்னல் கிளப்பில் பதிந்து வைத்திருப்பார். கிளப் ஊழியர்கள் அந்தக் குட்டிகளை சோதித்துவிட்டு சர்டிஃபிகேட் தருவார்கள்.

இந்த சர்டிஃபிகேட் எப்படிப்பட்டது என்றால், குறிப்பிட்ட நாயின் பத்து தலைமுறை வரலாற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதை ‘பெடிகிரி’ என்கிறார்கள். ஒரு நாய் எந்த நாட்டைச் சேர்ந்தது, அதனுடைய தாத்தாவுக்கு தாத்தா யார்? அவருடைய மனைவி யார்? இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு பயனமானார்கள். என்னென்ன போட்டிகளில் கலந்துகொண்டார்கள், ஜெயித்தார்கள் என்று அக்கு வேறு ஆணிவேறாக புள்ளிவிபரங்கள் பெடிகிரியில் இருக்கும். ஒரு நாயின் விலையை தீர்மானிப்பதே இந்தப் பெடிகிரிதான்.



ஓ.கே! குட்டி வாங்க முடிவு செய்தாகிவிட்டது. நல்ல குட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இதற்கு மிகுந்த கவனம் தேவை. ஒன்பது குட்டிகள் பிறந்தால் அதில் நாலைந்து குட்டிகள் மட்டுமே போட்டிக்கு தகுதியுடையதாக இருக்கும். பிறந்து அறுபது நாட்களில் அதை நாம் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். எக்ஸ்பர்ட்டுகளை அழைத்துச் சென்று இந்தக் குட்டிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேர்வு செய்ததும் நூறு ரூபாய் செலுத்தி அதை நம்முடைய பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு முன்னூறு ரூபாய் கொடுத்து அதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும்.

நாய்களுக்கென்று சில சிறப்புப் பத்திரிகைகள் இருக்கின்றன. அதற்கு நாம் சந்தாதாரர் ஆகிவிட்டால் மாதந்தோறும் வீட்டுக்கு புத்தகம் வந்துவிடும். அதில் நாய் வளர்ப்பு, உணவுப் பழக்கங்கள், நாட்டில் எங்கெல்லாம் ஷோ நடக்கவிருக்கிறது, யாரெல்லாம் முக்கியமான உறுப்பினர்கள், ஜட்ஜுகள் யார்? என்பன போன்ற முக்கிய விபரங்கள் இருக்கும். கடைசியாக நாய்க் கண்காட்சி எங்கே நடந்தது, அடுத்து எங்கே நடக்கவிருக்கிறது என்கிற விபரங்களும் இருக்கும். கூடவே, போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைப் படிவங்களும் இருக்கும். இதை வைத்து போட்டிகளுக்கு அப்ளை செய்யலாம்.

சரி, குட்டி வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அப்புறம்?

அடுத்த நான்கு மாதத்தில் அதற்கான பயிற்சியை ட்ரெயினர்களைக் கொண்டு ஆரம்பிக்கவேண்டும். ட்ரெயினிங்கின்போது, ஒரு ஆனழகன் போட்டிக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறோமோ அதேபோன்ற பயிற்சிகளை நாய்க்கும் அளிக்கவேண்டும். மார்புத் தசை, இடுப்பு, கால்கள் என்று ஒவ்வொன்றுக்கும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஸிவிம்மிங் பழக்கவேண்டும். சில வீடுகளில் நாய்களுக்கென்று தனி நீச்சல்குளமே வைத்திருக்கிறார்கள். இப்படியாக பத்து மாதம் பயிற்சி முடிந்த பிறகு போட்டிகளுக்கு அழைத்துவரவேண்டும்.

போட்டிகளில் ஐந்து பிரிவுகள் உண்டு. ஆறு மாதத்துக்குள் இருப்பது ‘மைனர் பப்பி’. ஆறு முதல் பன்னிரெண்டுக்குள் இருந்தால் ‘பப்பி’. பதினெட்டு மாதம்வரை உள்ளது ‘இன்டர்மீடியட்’. அதற்கடுத்து ‘சாம்பியன் கிளாஸ்’. ஐந்தாவது, ‘பிரீட் இன் இன்டியா’.

வெற்றி பெறும் நாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களாம்? ‘நாயின் சீரான உடலமைப்பு, நிற்க வைத்தால் அசையாமல் நிற்பது, கழுத்து, முகம், பல்வரிசை(பற்கள் ஒன்று சேரும்போது கத்தரிக்கோல்போல இருக்கவேண்டும்), கால்கள், ஓடும்போது மூக்கைத் தான்டி கால் வெளியே நீளாமல் ஓடுவது’ என்று பல அம்சங்களை வைத்து வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இத்தகைய நாய்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவையாகவே இருக்கும். இவற்றின் பராமரிப்பு செலவு மட்டுமே மாதம் முப்பதாயிரம் ரூபாயைத் தாண்டும். நாய் வளர்ப்பவர்கள், அதற்கென தனி ஏ.சி ரூம், நீச்சல்குளம் என்று பிரமாதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டுச் சாப்பாடு, சிக்கன் போன்றவைகளை இந்நாய்களுக்கு வழங்கக்கூடாது. அதற்கென உள்ள ஸ்பெஷல் உணவுகளை(இம்போர்டட்) மட்டுமே வழங்கவேண்டும்.

இங்கே கோடி கொடுத்து நாய் வாங்கி, லட்சத்தில் செலவழிப்பவர் அதன் குட்டிகளை விற்பதன் மூலம் ஓரளவு நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம் என்பது ஆறுதலான விஷயம்.

உலகில் சுமார் 600 வகையான நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, ஹிமாலயன் ஷீப் டாக், கன்னி, மியுடல் ஹவுன்டு, கேரவன் ஹவுன்டு, ராம்பூர் ஹவுன்டு ஆகிய எட்டு நாய்கள்தான் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவையாம். மீதமுள்ள நாய்கள் அனைத்தும் கலப்பினத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். இவற்றை ‘மாங்ரில்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

எத்தனை வகை நாய்கள் இருந்தாலும் எல்லாம் ஒரே குணம் உடையவைதான். காட்டு நாய்கள் வேட்டையாடும். வீட்டு நாய்கள் எஜமானர் விசுவாசம் காட்டும். இந்த விசுவாசம் எப்படிப்பட்டதென்றால், நீங்கள் கிணற்றில் குதித்தால் அதுவும் குதித்துவிடும். உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றும். இது எல்லா நாய்களுக்குமே பொருந்தும். நாய்கள் தங்களுக்குள் ஏழை, பணக்காரன், ஜாதி மத வித்தியாசம் பார்ப்பதில்லை. உயர் ஜாதி நாய்க்கு கொடுக்கும் பயிற்சியை ஒரு தெரு நாய்க்கு கொடுத்தால், அதுவும் சிறப்பான நாயாக மாறிவிடும்.

என்ன விதைக்கிறோமோ அதுதானே அறுவடைக்கு கிடைக்கும். அதுபோல் நாயின் மீது பாசம் வைத்தவர்களை, வேறெந்த நாயும் கடிப்பதில்லை என்பது மிகப்பெரிய உண்மை.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த காவேரி, தன் வகுப்புத் தோழிகளுடன் பக்கத்துத் தெருவில் போலீஸ் திருடன் விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தாள். ஒளிந்துகொண்ட இடத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு நாயிடம் மாட்டிக்கொண்டாள். குரைத்தபடி அவளை கடிக்க வந்த நாய், கிட்டே வந்ததும் அமைதியாகிவிட்டதாம். மெல்ல அவளை முகர்ந்துபார்த்துவிட்டு வாலை ஆட்ட தொடங்கிவிட்டதாம்.

இதற்கு என்ன காரணம்?

‘‘காவேரி வீட்டில் நாலைந்து நாய் வளர்க்கிறார்கள். வீட்டில் எப்போதுமே நாயுடன்தான் காவேரி விளையாடுவாள். நாயுடன் பழகுபவர்களின் உடையில் லேசான நாய் வாசனை இருக்கும். அது நமக்குப் புலப்படாவிட்டாலும் நாய்களுக்கு நன்றாகவே தெரியும். ‘இவங்க நம்ம ஆளு. நம்பளுக்கு சோறு போடுவாங்க. அடிக்கமாட்டாங்க’ என்கிற உணர்வை இந்த வாசனை மூலம் நாய் உணர்ந்துவிடும். எனவேதான் அப்படி வாலாட்டி இருக்கிறது.’’ என்கிறார் ‘டாக் எக்ஸ்பர்ட்’டான ராகுல் என்பவர்.

சில சமயம் பத்துப் பதினைந்து தெரு நாய்கள் சேர்ந்துகொண்டு சின்னக் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நாய்களைக் கொன்றுவிடவேண்டும் என்பது பலரது வாதமாக இருக்கிறது.

இங்கே குற்றவாளிக் கூண்டில் நாய் நிற்க யார் காரணம்?

‘‘மனிதர்கள்தான்’’ என்கிறார் ராகுல்.

தொடர்ந்து, ‘‘குட்டியில் இருந்தே நாய்களை நாம் அடித்து விரட்ட ஆரம்பித்துவிடுகிறோம். மழைக்கோ, வெயிலுக்கோ நம் வீட்டோரம் ஒதுங்கினால்கூட கல்லெடுத்து அடிக்கிறோம். அது பசியோடும் ஏக்கத்தோடும் நம்மைப் பார்க்கும்போது பதிலுக்கு நாம் எரிச்சலைத்தான் காட்டுகிறோம். இப்படியாக வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தெரு நாயும் மனிதர்களால் தொல்லைக்கு உள்ளாகின்றன.

இதன் காரணமாக மனிதன் மீது தெரு நாய்களுக்கு கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. மனிதர்களைக் கண்டாலே அதற்குப் பிடிப்பதில்லை. கல்லடி கொடுக்கும் விஷயத்தில் பெரியவர்களைக் காட்டிலும் சின்னக் குழந்தைகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதனால் ஏற்படும் கோபாம்தான் ஏதாவதொரு சந்தர்ப்பதில் இப்படிப்பட்ட ஆபத்தில் முடிகிறது’’ என்கிறார் அவர்.

எனவே, சின்னக் குழந்தைகளிம் சொல்லி வைப்போம். நாய்கள் மீது அன்பு காட்டுங்கள். கல்லால் அடிக்காதீர்கள்.

பாக்ஸ்: 1

நாய்ப் பாசம், ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கும்? ‘‘இந்த நாய்த்தொல்லை தாங்க முடியலை. உங்களுக்கு நான் முக்கியமா? நாய் முக்கியமா? ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணிக்கோங்க’’ என்கிறார் மனைவி. சென்னையில், நூற்றுக்கு முப்பது சதவிகித கணவர்கள், ‘‘எனக்கு நாய்தான் முக்கியம். நீ வெளியே போடி’’ என்று பதிலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சட்டப்படி விவாகரத்தும் வாங்கியிருக்கிறார்கள். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், இது நூறு சதவிகித உண்மை.

பாக்ஸ்: 2

மனிதர்களில் அண்ணன் தங்கை உறவுக்கு எப்படி அனுமதி கிடையாதோ, அப்படித்தான் ப்ரொஃபெஷனல் நாய்களுக்கும். ஒரே தாய்க்குப் பிறந்தவற்றை கிராஸ் பண்ண வைத்திருந்தால் அதற்கு சர்டிபிகேட் தரமாட்டார்கள். சொந்தத்தில் செக்ஸ் வைத்துக்குள்ளும் மிருகங்களுக்கு நம்மைப்போலவே ஜெனிடிக் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு சிலவகை ஊணங்களுடன் குட்டிகள் பிறக்கும். அதனால்தான் இந்தத் தடை.

பாக்ஸ்: 3

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் குட்டி பிறந்து 45&வது நாளில் அதற்கு தடுப்பூசி போடவேண்டும். அடுத்த 45&வது நாளில் இன்னொரு ஊசியும் அதற்கடுத்து ஆண்டுதோறும் ஒரு ஊசியும் போடவேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக குளிப்பாட்டவேண்டும். வீட்டுக்குள் நாய் வாசனை தாங்க முடியவில்லை என்றால், அதற்கென விற்கும் டியோடெரன்டுகளை வாங்கி அதன் மீது ஸ்ப்ரே செய்யலாம்.

Tuesday, June 15, 2010

‘‘அதிகாரத்தை கைப்பற்றுங்கள்!’’ -சல்மா!


குறிப்பு: இது சல்மா பேட்டியின் இரண்டாம் பாகம். முதல் பாகம், முந்தைய இடுகையில் உள்ளது.

வீட்டுக்குள் சிறைப் பறவையாய் வாழ்ந்து வந்ததாகக் கூறும் சல்மா, தன் முதல் வெளியுலகப் பயணம் குறித்தும் அரசியல் ஆரம்பம் குறித்தும் தொடர்கிறார்.

‘‘வெளியூர் போகவேண்டும் என்றால், உடம்பு சரியில்லை என்றால் மட்டுமே சாத்தியம். நான், வேண்டுமென்றே கால் வலிக்கிறது என்று கதறினேன். ஒரு வழியாய், ஊரே தூங்கும் அதிகாலை நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் மதுரைக்குப் புறப்பட்டோம். அங்கிருந்த டாக்டர் எனக்கு எக்ஸ்ரேவெல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு,

‘‘என்ன பிரச்னைன்னே கண்டுபிடிக்க முடியலை. வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடப்பதுகூட காரணமாய் இருக்கலாம். எக்ஸர்சைஸ் பண்ணச் சொல்லுங்க’’ என்றபடி அவர் பங்குக்கு ஒரு ஊசி போட்டார். மருந்து, மாத்திரிகளும் எழுதிக் கொடுத்தார்.

இப்போது எப்படிக் கிளம்பினோமோ, அப்படியேதான் யாருக்கும் தெரியாமல் ஊர் திரும்பவேண்டும். எனவே, இரவு 12 வரை நேரமிருந்தது. முதலில், ‘அம்மன் கோயில் கிழக்காலே’ சினிமாவுக்குப் போனோம். அப்புறம் ஷாப்பிங், ஹோட்டல், நியூ சென்சுரி புக் ஸ்டால் என விரும்பிய இடத்துக்கெல்லாம் போனேன். வெளியுலகம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதன்பிறகு, ஐந்தாறு தடவைகள் கால் வலி என்று சொல்லி மதுரைக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் நல்லா இருந்த உடம்பில் நாலைந்து ஊசி போட்டுக்கொண்டேன்.

வெளியுலகத்தைப் பார்தத பிறகு, ‘பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று நிறைய கேள்விகள் எழுந்தன. ராஜாத்தி என்கிற புனைப்பெயரில், சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்தேன். ‘ஒரு பொண்ணு பேர் எப்படி வெளியில தெரியலாம்?’ என்று ஊருக்குள் கேவலமாக பேச ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், வீட்டில் எனக்குக் கல்யானத்தை முடிக்கவேண்டும் என்று குதித்தார்கள். இதற்காக, என் பதிமூன்று வயதிலேயே ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நான், திருமணம் என்பது வேறொரு உலகத்தை எனக்கு திறந்துவிடவேண்டும் என்று விரும்பினேன். மீண்டும் இதே உலகத்துக்குள் விழ விருப்பமில்லை. எனவே, சாமர்த்தியமாக இருபது வயதுவரை தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன்.

என்னுடைய கிராமத்தைப் பொறுத்தவரை வாக்கு கொடுத்துவிட்டால், உயிரைக் கொடுத்தாவது அதைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். என்னையும் அப்படிக் கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார்களே! மீற முடியுமா? மீறினால், இரண்டு குடும்பத்துக்கும் பெருத்த அவமானமகிவிடும்.

‘என்னத்த பொண்ணு வளத்து வச்சிருக்கீங்க?’ என்று எங்களையும், ‘பையனை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளாமே!’ என்று மாப்பிள்ளை வீட்டாரையும் கேவலமாகப் பேசுவார்கள். ஆனால், ‘கொடுத்த வாக்குறுதிக்காக ஒருவரின் வாழ்க்கையையே பணயம் வைப்பது’ என்பதை நான் வெறுத்தேன்.

துவரங்குறிச்சியில் ஒரு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? ‘கல்யாணம் பண்ணி வச்சா தற்கொலை பண்ணிக்குவேன்’ என்று நானும், ‘இல்லைன்னா நான் பண்ணிக்குவேன்’ என்று என் அம்மாவும் மாறி மாறி மிரட்டிக்கொண்டோம். கடைசியில் குடும்பம்தான் ஜெயித்தது.

‘‘அப்படியானால், அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்?’’

திருமணத்துக்குப் பிறகு, என்னால் எழுத முடியவில்லை. எனவே, யாருக்கும் தெரியாமல் ராஜாத்தி என்கிற பெயரை மாற்றி ‘சல்மா’ என்று எழுத ஆரம்பித்தேன். காலச்சுவடுதான் என் முதல் (பெயர்) கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. அப்போது என் புகைப்படத்தைக் கேட்டார்கள். கொடுத்தால் பிரச்னையாகிவிடும் என்று நான் மறுத்துவிட்டேன்.

ஆனால், நிலமை தலைகீழாக மாறியது. என் கணவர் குடும்பம் பரம்பரை தி.மு.க.வைச் சேர்ந்தது. எனக்கோ, அரசியல் பிடிக்காது. வாசிப்பின் மூலமாக நானும் அதை ஒரு சாக்கடை என்றே கருதி வந்தேன். அப்போது பஞ்சாயத்துத் தேர்தலுக்கான நேரம். என் கணவருக்கு எலக்'ஷனில் நிற்க ஆசை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பகல் பன்னிரெண்டு மணிக்கு என்னிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

அந்தக் கையெழுத்துதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுதான் இலக்கியவாதியகவும் என்னை வெளிக்கொண்டுவர உதவியது. அது ஒவ்வொரு பெண்ணுக்குமான முன்னுதாரணம். அதிகரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முதல் படி.

அந்தக் கையெழுத்தை மட்டும் நான் போடாதிருந்தால், இன்று முகம் தெரியாத ஒரு சல்மவாக வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயிருப்பேன்.’’ சந்தோஷத்துடன் தொடர்கிறார் சல்மா.

‘‘ஒரு பெருங்கூட்டம் புடைசூழ, ஊர் ஊராக என்னைப் பிரச்சாரத்துக்கு கூட்டிப் போனார்கள். மேடையில் ஏற்றினார்கள். எந்த போட்டோ எனக்கு மறுக்கப்பட்டதோ, அதைப் பெரிது பெரிதாய் அச்சிட்டு ஊர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டினார்கள்.

அப்போதும், அவர்களின் தேவைக்காக என்னைப் பயன்படுத்துகிறார்களே என்று வருந்தினேன். ஆனால், அங்கே மக்கள் என்னிடம் வைத்த ஆயிரக்கனக்கான கோரிக்கைகள் எனக்குள் ஆழ்ந்த நம்பிக்கையை விளைவித்தது. முக்கியமாக ஒன்றைச் சொல்லியாகவேண்டும்.

அப்போது எனக்கு தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவிகூட இல்லை. எனவே, சுயேட்சையாகத்தான் போட்டியிட்டேன். அதிலே, என்னோடு போட்டியிட்ட ஐந்து பேரும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு, மிகப்பெரிய வெற்றி பெற்றேன். அடுத்த ஐந்து வருடத்தில், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றினேன்.

முதன் முதலாக விகடன் பத்திரிகை என்னை பேட்டி கண்டது. அப்போது, புகைப்படத்துக்காக வீட்டில் அனுமதி வாங்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு உடைந்திருந்தது. பிறகு, இலக்கிய கூட்டங்களுக்காக சென்னை வர ஆரம்பித்தேன். கனிமொழியோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. முதல்வர் மகள் என்றாலும் ஒரு கவிஞராக தன்னை அடையாளப்பட்டுத்திக்கொண்ட கனிமொழிதான் எனக்கு ‘மாரல் சப்போர்ட்’டாக இருந்தவர்.

‘தலைவர் மகளும் ஒரு எழுத்தாளர்தான்’ என்கிற இந்த ஒப்புமைதான் என்னை என் கணவருக்கும் புரிய வைத்தது. கனிமொழியோடு நான் பேசுவதை வியப்போடு அவர் பார்த்தார். எழுத்து, எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொண்டார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டுதான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக என்னைப் பதிவு செய்ய வைத்தார்.

‘‘உங்களின் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘வாய்ப்பு கேட்டு, எல்லோரும் பணம் கட்டுவதுபோலத்தான் நானும் கட்டினேன். அதுவும் ராகுகாலத்தில்! ஆனால், அதிர்ஷ்டவசமாக சீட் கிடைத்துவிட்டது. சீட் கிடைத்த பிறகு எனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவானதுதான் நன் எதிர்பார்த்திராத ஒன்று. நான் போட்டியிட்ட மருங்காபுரி தொகுதி அ.தி.மு.க.வுக்கு ராசியானது என்றாலும், ‘சல்மா ஜெயிக்கிறார்’ என்பதுதான் துக்ளக் முதற்கொண்டு ஆனந்தவிகடன் வரையிலான கருத்துக் கணிப்பு.

ஆனால், பெண்கள் அரசியலுக்கு வருவதை முக்கியமான சில ஆண்கள் இன்றைக்கும் விரும்பவில்லை. ஓட்டுப் பதிவுக்கு முதல் நாள், கட்சிப் பாகுபாடின்றி அவர்கள் செய்த சதியின் காரணமாக வெறும் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் தோல்வியைத் தழுவினேன்.

ஆனாலும் ,பிறகு தி.மு.க ஆட்சியைப் பிடித்ததால் தோல்வியைப் பர்க்காமல் மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொண்டுவந்தனர். நான் அவற்றை எடுத்துக்கொண்டு சென்னையில் தலைவரைப் போய்ப் பார்த்தேன். அவர், யாருமே எதிர்பாராத வகையில் எனக்கு சமூகநல வரியத் தலைவர் பதவியைக் கொடுத்தார். என்னால் முடிந்த அளவுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

‘‘அரசியல், இலக்கியம் இரண்டையும் எப்படி ஒரே நேரத்தில் கையாள முடிகிறது?’’

‘‘இத்தனை வயதிலும் எங்கள் தலைவர் கையாளவில்லையா? தி.மு.கழகத்தைப் பொறுத்த அளவில் இதற்கு ஊக்குவிப்புகள் அதிகம். சொல்லப்போனால், அரசியலில் இருப்பது ஒரு பெண்ணுக்கென்று சமூகத்தில் உள்ள பொதுவான தடைகளை உடைக்க உதவுகிறது. என் அனுபவத்தில், ‘பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், அதிகாரத்தை கைப்பற்றவேண்டும்’ என்பதை முக்கியமான ஒரு கருத்தாக சொல்ல விரும்புகிறேன்.

சமீபத்தில் அமெரிக்க தூதரகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை அழைத்திருந்தார்கள். ‘அமெரிக்காவில், பத்தில் ஆறு பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாக’ அப்போது என்னிடம் சொன்னார்கள். அமெரிக்காவிலேயே இந்த நிலமை என்றால், இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக் கழக விழாக்களுக்கு போகும்போது, மாணவிகள் என்னிடம் சொல்கிறார்கள். ‘மேடம்! உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது’ என்று. அரசியலுக்கு அதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ''

Friday, February 12, 2010

‘‘அந்த நினைவுகளை நான் வெறுக்கிறேன்’’ -சல்மா.


சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’ எனப்படும் ‘மேன் ஏசியன் லிட்டெரரி விருது’க்காக, லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், விருது பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் போய்விட்டது. தற்போது மலையாளம், இந்தி, ஜெர்மன், உருது ஆகிய மொழிகளிலும் இரண்டாம் சாமம் வரவிருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகளைகள் அனைத்தும் சல்மாவை பேட்டி கண்டபோதிலும், தமிழ் ஊடகங்கள் ஏனோ பாராமுகம் காட்டி வருகின்றன. ‘‘இவ்வளவு நீண்ட பேட்டியளிப்பது இதுவே முதல் முறை’’ என்கிற சல்மா, தன் அம்மாவிடம் கூறாத உண்மைகளைக்கூட அன்று வெளிப்படையாகப் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து பூமியை ரசித்தபடி தொடங்கியது உரையாடல்...

‘‘மிகவும் பின்தங்கிய, படிப்பறிவில்லாத சிறிய கிராமம் துவரங்குறிச்சி. அங்கே, சாதரான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன். அதிகபட்சம் பத்தாவது படிப்பதே ஊரில் அபூர்வம். ‘சமைப்பது, துவைப்பது, குழந்தை பெறுவது’ என்று பெண்களுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது. நான் மட்டும் நிறைய கனவுகளுடன் வளர்ந்தேன். காரணம்? புத்தகங்கள். எனக்கு மிகவும் பிடித்தது மாயாஜாலக் கதைகள்தான். அவற்றில் இருந்த அதீத கனவுத்தன்மை என்னை வசீகரித்துக்கொண்டே இருந்தது. ‘இரும்புக்கை மாயாவி’தான் என் ஹீரோ. விக்கிரமாதித்தன், துப்பறியும் சாம்பு போன்றவர்களும் என்னைக் கவர்ந்தார்கள். காமிக்ஸ் வழியாக துப்பாக்கி ஏந்தியபடி குதிரைகளில் பயனிப்பது, கொள்ளையர்களை விரட்டியடிப்பது என்று கதைக்குள்ளாக வாழ்ந்துகொண்டிருந்தேன். மதனகாமராஜன் கதைகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளை வாசிக்க பாதை அமைத்துக் கொடுத்தது. நான் ஆறாவது படிக்கும்போது ‘ஆனந்தவிகடன், குமுதம், ராணி’யெல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டன.

என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்துவிட்டது.

‘‘எது? அந்த சினிமாவுக்குப் போன சம்பவம்தானே!’’

‘‘அய்யோ... ஏன் கேட்கறீங்க? அப்போதெல்லாம் நைட் ஷோதான். வயதுக்கு வந்த பெண்கள் சினிமாவுக்கு போக அனுமதி இல்லை. எங்க ஊர் பரணி தியேட்டரில் அப்போது முதல் முதலாக மேட்னி ஷோ ஆரம்பித்தார்கள். படம் ஆரம்பிக்கும் முன், ‘பழனி முருகனே...!’ என்கிற பக்தி பாடலைப் போடுவார்கள். படம் முடிந்து வெளியே வந்தால், ‘ரூப்புத் தெரா மஸ்தானா...’ என்கிற இந்திப்பாடல் ஒலிக்கும். இப்போதுகூட அந்தப் பாடலை கேட்டால், பழைய நினைவுகள் வந்துவிடும். ஒரு நாள், நானும் என் தோழிகள் மூவரும் லைப்ரரிக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு மேட்னி ஷோவுக்குப் போனோம். போனதும்தான் தெரிந்தது, அது ஒரு மலையாளப் படம்! பிரமிளா நடித்த ‘அவளோட ராவுகள்’ போட்டிருந்தார்கள். திடீரென குளியல் சீன் ஓட ஆரம்பித்ததும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘வெளியே போய்விடலாம்’ என்றால், கேட்டைப் பூட்டிவிட்டார்கள். வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு முழுப்படத்தையும் கேட்டுக்கொண்டிருந்தோம். பெண்கள் பகுதியில் நாங்கள் நான்கு பேர்தான். எல்லோரும் படம் பார்ப்பதை விட்டுவிட்டு எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

படம் முடிந்தது. ‘எல்லா ஆண்களும் வெளியேறட்டும்’ என்று அரைமணி நேரம் காத்திருந்தோம். தாவனியை இழுத்து, முக்காடு போர்த்திக்கொண்டு வெளியே வந்தால்...! ‘என்ன ஆயிற்று தெரியுமா? ஒருத்தன்கூட வீட்டுக்குப் போகவில்லை. அத்தனை பேரும் எங்களுக்காகவே வாசலில் காத்திருந்தார்கள். அவமானத்தில் ‘செத்தே போய்விடலாம்’ என்றிருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள், ‘ஏ& படம்’ பார்த்த செய்தி முந்திக்கொண்டுவிட்டது. அவ்வளவுதான்! அடுத்தநாள் முதல் நால்வரின் பள்ளி வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

முற்றுப்புள்ளிக்குப் பிறகான எனது வாழ்க்கை, குகைக்குள் புதைந்த மாதிரி ஆயிற்று. அதை நினைத்துப் பார்ப்பதையே நான் வெறுக்கிறேன். அவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை அது. பதிமூன்று வயதில் பெரியவளாகிவிட்டேன். வீட்டைவிட்டு ஒரு நொடிகூட வெளியே வரக்கூடாது. எந்த ஆம்பிளையும் வீட்டுக்குள் வரக்கூடாது. காலிங் பெல் சத்தம் கேட்டதும், பெண்கள் எழுந்து ரூமுக்குள் சென்றுவிடவேண்டும். தந்தை மகள் உறவே ஆண்&பெண் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் புத்தகங்கள் மட்டுமே எனக்குத் துனையாய் இருந்தன.’’ &ஆழ்ந்த பெருமூச்சுடன் லேசாகச் சிரிக்கிறார் சல்மா.

‘‘கொடுமையான இந்த வாழ்க்கையை நான் அறிந்தே இருந்தேன். ‘பள்ளிக்கூடம்தான் போக முடியவில்லை, கரஸ்பான்டென்சிலாவது படிக்கலாம்’ என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ‘தபால் மூலம் படிப்பதென்றால் முதலில் ஸ்கூலுக்குப் போய் டி.சி. வாங்கணும். ஸ்கூலுக்குப் போனால் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். ஒரு பொண்ணை எப்படி வெளியூருக்கு அனுப்பலாம்? என்று அசிங்கமாகப் பேசுவார்கள்’ என்றார் அம்மா. இப்படி நமக்காக என்றில்லாமல், ஊருக்காகவே எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் ஊருக்குள் கார் வந்து நின்றால், ‘உள்ளே யார் இருக்கிறார்கள்?’ என்று எட்டிப் பார்க்கும் அளவுக்கு தனிமனிதச் சுதந்திரம் அனுமதிக்கப்படாத பூமியாகவே இருக்கிறது துவறங்குறிச்சி.

இந்தச் சூழ்நிலையில்தான், வீட்டுக்குள் இருந்தபடியே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து, ‘இருளின் முதுகை ஒடித்துக்கொண்டு சூரியனாய் வெளியே வா!’ என்பது மாதிரி கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் வாசிப்புத் தளம் விரிவடைய ஆரம்பித்தது. லைப்ரரியன் மூலமாக தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதியார் போன்றவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். ரஷ்ய இலக்கியங்கள் கிடைத்தது.

புத்தகங்கள் வழியாக உலகைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தொலைக்காட்சியின் வருகை வியப்பை ஏற்படுத்தியது. வாழ்க்கையை அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்கும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் ஆகியோர் எனக்குள்ளிருந்த வேகத்தை கூட்டினார்கள். ‘இவ்வளவு பெரிய உலகமா?’ ஏக்கமும், தனிமையும் என்னை வாட்ட ஆரம்பித்தது. கம்யூனிஸ தத்துவங்களும், பெரியாருடைய எழுத்துக்களும் என்னை தீவிரமானவளாக மாற்றியது. சட்டென்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். மூன்று வேளையும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்துக்கொண்டிருந்தபோது, ஐந்து ரூபாய் கூலிக்காக, தலித் பெண்கள் என் வீட்டில் கடலை உடைத்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபம் தலைக்கேறியது. நான் கடவுள் நம்பிக்கையை கைவிட ஆரம்பித்தேன்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் மாமியார் குடும்பத்துக்காக சமைத்துப் பழக வேண்டும் எனபது ஊர் நடைமுறை. ஒட்டுமொத்தப் பெண்களுடைய சக்தியும், சமைப்பதற்கும் துவைப்பதற்குமே செலவிடப்பட்டது. இதுவும் எரிச்சலை உண்டாக்கியது. ‘பொழுதன்னிக்கும் அடுப்படியில் வேகக்கூடிய வேலையை செய்யமாட்டேன்’ என்று எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ‘பெண்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது? என்பதை எழுத்தாக மாற்ற முடிவெடுத்தேன். தொடர்ந்து கலில் கிப்ரான், விட்மன், டால்ஸ்டாய், தஸ்தோவ்ஸ்கி, கார்க்கி, செக்கோவ் ஆகியோரை வாசிக்கத் தொடங்கினேன். மொழி லாவகப்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு எப்படியாவது வெளியேறவேண்டும் என்ற ஆவல் பீரிட்டுக் கிளம்பியது.

இதற்காக ஒரு தந்திரம் செய்தேன். சும்மாவாச்சும், ‘அம்மா... கால் வலிக்கிறது!’ என்று கதற ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் இளைஞர்கள் என்பதால் வீட்டுக்குள் வர அனுமதி இல்லை. பெண்களுக்கென்று சரவணன் என்கிற வயசான ஹோமியோபதி ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்த சரவணன், கால் வலிக்கு ஊசி போட்டுவிட்டுக் கிளம்பினார். நான், ‘அய்யோ... வலி தாங்கலையே...!’ என்று மீண்டும் நாடகமாடினேன். துடித்துப்போன என் அம்மா, டாக்டரைப் பார்க்க மதுரை போகலாம் என்று முடிவு செய்தார். இதைத்தான் நான் எதிர் பார்த்தேன். எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல்! வயசுக்கு வந்த பெண்கள் டாக்டரிடம் போனால், ‘ஏதோ வியாதி போலிருக்கு!’ என்று ஊர்முழுக்க வதந்தி கிளம்பிவிடும். அசிங்கமாகப் பேசுவார்கள். அது கல்யாணத்தைப் பாதிக்கும். அப்படியானால், மதுரைக்கு எப்படிப் போவது...?

-அடுத்த இடுகையில்...