Monday, November 1, 2010

”துவைப்பதும் சமைப்பதுமே பெண்களின் சொத்து”உலகமகா ரோல் மாடல் கிரன்பெடி ஐ.பி.எஸ்.


‘‘மற்றவர்களின் தீர்ப்புக்கு நான் கட்டுப்பட்டு இருந்ததில்லை. சமையல் பண்ணுவதோ, பரிமாறுவதோ அல்லது வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு குடும்பத் தலைவியாகவோ இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இருந்தும், இப்படிப்பட்ட வேலைகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.’ -கிரன் பெடி .பி.எஸ்.

கிரன் பெடி! இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்கிற பெருமைக்கு உரியவர். ”வீரமும் ஈரமும் நிறைந்த ஒருங்கே அமைந்தவர். நேர்மையானவர், துனிச்சலானவர்” என்று பேர் எடுத்தவர். தில்லியில் போக்குவரத்து அதிகாரியாக பணி புரிந்த காலத்தில், ‘நோ பார்க்கிங் ஏரியா’வில் நிறுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் காரையே அப்புறப்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். திகார் சிறையில் பணியாற்றியபோது, கைதிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்தவர் என்றெல்லாம் அறியப்படுகிறார்.

‘மனித உரிமையை பாதுக்காக்கத்தான் காவல்துறையே தவிர, மீறுவதற்கு அல்ல’ என்கிற கொள்கையைக் கொண்டிருந்த கிரன் பெடி, சிறைத் துறையில் செய்த சேவைகளுக்காக ‘ஆசியாவின் நோபல் பரிசு’ எனப்படும் ‘ராமன் மகசேசே விருதினை’ 1994&ம் ஆண்டு பெற்றார். 1972-ம் ஆண்டு, இந்திய காவல் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட கிரன் பெடி, சுமார் 35 ஆண்டுகள் சேவை புரிந்து 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இடையில், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான காவல்துறை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். ‘நவஜோதி, இன்டியா விஷன் ஃபவுன்டேஷன்’ என்கிற இரண்டு தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து, ஏழை மக்களின் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஆங்கிலப் பத்திரிகையானது ‘இந்தியாவின் நம்பிக்கை மனிதர்கள்’ என்கிற தலைப்பில், உலகம் முழுக்க ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், முதலாவதாக அப்துல்கலாமும் இரண்டாவதாக ரத்தன் டாடாவும் மூன்றாவதாக கிரன் பெடியும் வந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கிரன் பெடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உச்சம். இதேபோன்று, 200200-ம் ஆண்டில் ‘த வீக்’ ஆங்கில பத்திரிகை நடத்திய ‘இந்தியாவின் போற்றத்தக்க பெண்மணிகள்’ என்கிற வாக்கெடுப்பில் ஐந்தாவது இடம் பிடித்தார் கிரன். இதற்கடுத்து இதே பத்திரிகை, 2006-ம் ஆண்டு நடத்திய ‘இந்தியாவின் 15 பிம்பங்கள்’ என்கிற கருத்துக் கணிப்பிலும் இடம் பெற்றார். ‘அசெர்டிவ் ரோல் மாடல்’ என்று பஞ்சாப் மாநில போலீஸ் ஜெனரல், எம்.எஸ்.கில் அவர்களால் பாராட்டப்படும் கிரன் பெடி, உண்மையில் இந்தியாவின் அத்தனை பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும்கூட ரோல் மாடலாக இருக்கிறார். பெண் என்கிற பொதுச் சொல்லில் கிரன் பெடியை ஒதுக்கிவிட முடியாது. சிறந்த பேச்சாளர், கட்டுரையாளர், ஆன்மீகவாதி, விளையாட்டு வீராங்கனை என்று கிரன் பெடிக்கு இன்னும் எத்தனையோ முகங்கள் உண்டு. ஆனால், இன்று?

‘‘ஏரியல் வாஷிங் பவுடரை யூஸ் பண்ணா, துணிகள் பளிச்சிடும். நானும் அதைத்தான் யூஸ் பண்ணுகிறேன். நீங்களும் ட்ரை பண்ணுங்க’’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அதாவது, ‘ப்ராக்டர் அன்ட் கேம்பிள்’ என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு அதன் ‘ஏரியல் வாஷிங் பவுடர்’ விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்தியா முழுக்க இந்த விளம்பரம் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. ஒரு அமிதாபச்சனோ, ஷாருக்கானோ இப்படி விளம்பரத்தில் தோன்றியபோது அதிர்ச்சியடையாத இந்திய மக்கள், பெப்சி குடிக்கச் சொல்லி சச்சின் டென்டுல்கர் சொன்னபோது கோபப்படாத இந்திய மக்கள், கிரன் பெடியின் இந்த விளம்பரத்தால் ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள். ஃபேஸ் புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற இணைய தளங்களில் கிரன் பெடியின் இச்செயல் குறித்த விவாதங்கள்,

‘‘யூ டூ கிரன் பெடி?’’‘‘ஏன், அவங்க துணி துவைக்கக் கூடாதா? அவங்க ஏரியலும் யூஸ் பண்ணுவாங்க, ரின்னும் யூஸ் பண்ணுவாங்க. அது பத்தி உங்களுக்கென்ன?’’‘‘இன்னிக்கு சோப் போடுவாங்க. நாளைக்கு பெப்சி, கோக் குடிக்கச் சொல்வாங்க. இன்னும் கொஞ்சம் காசு கொடுத்தா கிங்ஃபிஷர் குடிக்கச் சொல்வாங்களா? என்ன நியாயம் இது’’‘‘காசேதான் கடவுள்னு நிரூபிச்சிட்டாங்கப்பா!’’‘‘பேசாம இவங்களும் அரசியல்வாதி ஆகிடலாம்’’‘‘அருமையா நடிச்சிருக்காங்க! இத்தனை நாளும்.’’ என்று மிகவும் சூடாக நடந்தேறிக்கொண்டு இருக்கிறது.

இதேபோன்ற விவாதங்கள் மாணவர்கள் மத்தியிலும் நடந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக, என்.சி.சி மாணவிகள் ரொம்பவே நொந்துபோனதாகச் சொல்கிறார்கள். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த திவ்யா, இப்போதுதான் பிளஸ்-டூ முடித்திருக்கிறார். ‘‘சின்ன வயசிலர்ந்தே எனக்கு காக்கி யூனிஃபார்ம் மேல அப்படி ஒரு ஈடுபாடு. ஐ.பி.எஸ் முடிச்சிட்டு ரவுடிங்களை எல்லாம் ஓட ஓட விரட்டணும்னு அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். வீட்ல நான் சூப்பரா காஃபி போடுவேன். ஆனா, யாராவது என்னை காஃபி போடச்சொல்லி கம்ப்பல் பண்ணா, பயங்கர கோபம் வரும். பொண்ணுக்கு ஒரு சட்டம், பையனுக்கு ஒரு சட்டம்னு சொல்றது சுத்தமா எனக்குப் பிடிக்கலை. ஸ்போர்ட்ஸ்னு வந்தா நான் பையன்களைவிட வேகமா ஓடுவேன். சன்டைன்னு வந்தா யாரா இருந்தாலும் மூக்கை உடைப்பேன். ஏன்னா, எனக்கு கராத்தே தெரியும்.

பூ வச்சிக்கிறது, பொட்டு வச்சிக்கிறது, நீளமா முடி வளர்க்கிறதுல எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. என் ஹேர் ஸ்டைலை பாத்தீங்களா? என்னுடைய ரோல் மாடல்ல கிரன் பெடிதான் ரொம்ப முக்கியமானவங்க. அவங்களைப் போலவே துனிச்சலா, நேர்மையா இருக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம். ஆனா, இந்த ஏரியல் விளம்பரத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியாகிட்டேன். எனக்கு அவங்களைப் பிடிக்கலை. காசுக்காக எல்லாத்தையும் செய்யலாமா என்ன?’’ என்கிறார்.

பிளஸ்-டூவில் அடியெடுத்து வைத்திருக்கும் திருவொற்றியூர் காவேரியின் கருத்தும் இதேதான். ‘‘திய்வாபோல நான் ஹேர் கட் பண்ணிக்கலைன்னா என்ன? என்கிட்ட பாய்ஸ் யாராச்சும் வாலாட்டினாங்கன்னா, அவங்களை நான் ஒட்ட நறுக்கிடுவேன். ஸ்கூல்ல ஒரு முறை, கிரன் பெடி மேடம் பத்தி பெருமையா சொன்னாங்க. அன்னிலேர்ந்து அவங்கதான் எனக்கு ரோல் மாடல். பொண்ணுங்க நெனச்சா எல்லாத்தையும் சாதிக்கலாம். ரவுடிங்களைக்கூட நல்வழிபடுத்த முடியும்னு நிரூபிச்சவங்க அவங்க. ஆனா, அவங்களும் எல்லா லேடீஸ் மாதிரியும் வீட்ல துணி துவைக்கிறாங்கன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை. காசுக்காக இப்படிச் செஞ்சிருந்தா அது ரொம்பத் தப்பு’’ என்கிறார்.

கிரன் பெடியின் இந்த செயல், ‘‘பெண்கள், சமைக்கவும் துவைக்கவும்தான் லாயக்கு’’ என்கிற அதரப் பழசான வாதத்துக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பிற்போக்காக இருக்கிறது என்பதே இன்றைக்கு எல்லோருடைய கருத்தும். இது குறித்து சில பிரபலங்களிடம் பேசினோம்.

சமூக நல வாரியத் தலைவரும் கவிஞருமான சல்மா, ‘‘‘அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா காய்கறி நறுக்குகிறார்’ என்பதில் ஆரம்பித்து, சமூகத்தில் பொதுவாவே சில பிற்போக்கு பிம்பங்கள் பெண்களுக்கு இருக்கின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் மட்டுமே இந்த பிம்பத்தை உடைத்து எல்லோரும் ஒன்றுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கிரன் பெடியும் இதில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், ஏராளமான பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார். பெண்கள் சம்பந்தமான பல கூட்டங்களில் கிரன் பெடியின் பெயரை உச்சரிக்காவிட்டால் அது முழுமை பெறுவதில்லை என்கிற நிலமை இருக்கிறது.

குறிப்பாக மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பினருக்கு கிரன் பெடி என்கிற பெயர் ஒரு தாரக மந்திரமாகவே இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர், ‘நானும் வீட்டில் துனிதான் துவைக்கிறேன் ’ என்று சொல்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இது அவருடைய தனிப்பட்ட உழைப்பு மற்றும் திறமையினால் கிடைத்தது என்றாலும், அவரை ரோல் மாடலாகக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இது பேரதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ‘என்னதான் ஐ.பி.எஸ். ஆஃபீஸரா இருந்தாலும், வீட்டுக்கு வந்தா துணிதான் துவைக்கணும்போல’ என்று அவர்கள் குறுகிவிட வாய்ப்பு உண்டு.

சொந்தக் காலில் நிற்கும் தகுதி உடைய, தன்னுடைய சம்பாதியத்தினால் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண்களைக்கூட, ‘பாத்த இல்ல, கிரன் பெடியே துணி துவைக்கும்போது நீ எல்லாம் எம்மாத்திரம்?’ என்று ஆண்கள் ஏளனம் செய்வார்கள். சமூகத்தில் நன் மதிப்பை பெற்ற ஒருவர், தன்னுடைய பிம்பத்தை பயன்படுத்தி மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, இப்படி தாழ்வு மனப்பாண்மையை உண்டாக்குகிற ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கக் கூடாது. மக்கள், கிரன் பெடிக்கு கொடுத்திருந்த மரியாதையை அவர் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.’’ என்கிறார்.

‘‘பெண்களை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்கிறவர் இயக்குநர் ஜனநாதன். பேராண்மை திரைப்படத்தில் ஆணுக்கு நிகராக ஐந்து பெண்களை ஆயுதம் ஏந்த வைத்தவர். அவர் , ‘‘கவர்ச்சிப் பொருள் மட்டுமில்லை, பெண்களை வணிகப் பொருளாக பயன்படுத்துவதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. நான் உதவி இயக்குநராக இருந்தபோதே திடமான ஒரு கொள்கை முடிவை எடுத்துவிட்டேன். ‘மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சாமிப் படங்கள், வணிக நோக்கிலான விளம்பரப் படங்கள் ஆகியவற்றில் பணியாற்றக்கூடாது’ என்பதே அது. எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப் படங்களுக்கு நான் வேலை பார்க்க மாட்டேன். இன்றைக்கு மனிதனின் அடிப்படை உரிமையான மருத்துவம், கல்வி இரண்டுமே வியாபாரமாகிவிட்டது. உலகம் முழுக்க லாப வெறி தலை விரித்து ஆடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் வனிக நோக்கோடு ஒரு பொருளை மக்கள் மீது தினிப்பதை நான் வெறுக்கிறேன். இதனால், பிரபலங்கள் விளம்பரத்தில் நடிக்கும்போதெல்லாம் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். நடிப்பு, விளையாட்டு, நேர்மை என்று வேறு ஒரு திறமைக்காக மக்கள் அவர்களை போற்றுகிறார்கள். அந்த மக்களிடம் போய், பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவருடைய பொருளை வாங்கச் சொல்வது என்ன நியாயம்? ‘கோகோ கோலா, பெப்சி குடிப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல’ என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்த பிறகும் கிரிக்கெட் வீரர்களும் சில சினிமா நடிகர்களும் அதை ஊக்குவித்து விளம்பரம் செய்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இதெல்லாம், அன்பு வைத்த மக்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம் ’’ என்கிறார்.

‘‘இதெல்லாம் அதிர்ச்சி தரத்தக்க விஷயமே இல்லை. ஏனென்றால், கிரன் பெடி ஒன்றும் பெண்ணியவாதி அல்ல’’ என்கிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். தொடர்ந்து பேசியவர், ‘‘இந்தியாவின் முக்கியமான ஆளுமைகளில் கிரன் பெடி முக்கியமானவர் என்பதில் சந்தேகமில்லை. நிறைய பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருக்கிறார். அதே சமயம், பெண்ணிய தளத்தில் அவர் எந்த வேலையும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால், காலங்காலமாய் இந்த சமூகம் பெண்களுக்குச் சொல்லிவரும் ‘துவைப்பது, சமைப்பது’ போன்ற வேலைகளுக்கு ஆதரவான ஒரு விளம்பரத்தில் நடித்திருக்க மாட்டார். அதேபோல், அரசியல் ரீதியாக பெண்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபட்டதில்லை. அவருக்கென ஒரு அரசியல் பார்வை இருப்பதாகவும் தெரியவில்லை. பெண்ணிய அரசியலை முன் வைத்து ஒருபோதும் அவர் பேசியதில்லை. அந்த வகையில், இந்தியாவுக்கான பெண்ணியக் குறியீடாக என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. இப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடையக் காரணம், நம்முடைய பார்வையில் உள்ள கோளாறுதான். கிரன் பெடியாகட்டும் கல்பனா சாவ்லாவாகட்டும், அவர்களுடைய முன்னேற்றம்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்ததே தவிர, மற்ற பெண்களுடைய பிரச்னைகள் குறித்து அவர்கள் கவலைபடவில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார்.

‘‘அவர் லஞ்சம் பெற்றாரா? சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டாரா? ‘நானும் வீட்டில் துவைக்கிறேன்’ என்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லையே’’ என்று இணையத்தில் சிலர் வாதங்களை முன் வைக்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குறிப்பு:

“ச்சே.. ச்சே! இதுக்காகவெல்லாம் கிரன்பெடியை குத்தம் சொல்லி நீங்க கட்டுரை எழுதக்கூடாது.” என்று ‘சூரிய கதிர்’ இதழின் இப்போதைய ஆசிரியர் டாக்டர்.கை.கதிர்வேள் அவர்களால் நிராகரிக்கபட்ட கட்டுரை.

No comments: