Thursday, December 21, 2006

சாக்கடைச் சமுதாயம்!


கைக்குட்டையை போர்த்திக்கொண்டு கம்மென்று நடக்கிறது கால்கள்.
''ஒரே நாத்தம்!'' உள்ளிருந்து வருகிறது வார்த்தைகள்.

''இவனுங்க வாயை விட இந்த காவா நாத்தம் மேல்றா!''
சொல்லிச் சிரித்தபடி தொடர்கிறது வேலை.

ஏரி குளங்களில் புல்டோசர் - பொக்லைன் இயந்திரங்கள்
உழவர்கள் கூலியை உறிஞ்சிக் குடிக்கிறது.

கையை நீட்டினால் தண்ணீர் கொட்டுகிறது
துடைக்க வேண்டாம் துண்டுக்கு பதில் சூடான காற்று.

எதெதற்கோ இயந்திரம் இருக்கு இதற்கொரு கருவி இல்லை
இது சாக்கடைச் சமுதாயம். உண்மைதானே?

சாலை அதிர்வுகள்!


யாரென்று கேள் என்னை
நான் தமிழனா இந்தியனா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில்
எனது பெயர் இடம் பெறுமா?

குப்பையில் கண்டெடுத்தேன் அதனை
ஐயோ! அத்தனையும் இதயங்கள்

யாருக்கு வேண்டும் இது?
என்றெண்ணி வீசியிருப்பீர்கள்

தின்ன முடியாத சோற்றைக்கூட
கெட்ட பின் கொட்டுகிறீர்கள்

கண்களைச் சுழற்றுகிறது தூக்கம்
உறக்கத்தில் உங்கள் மூளை

கொஞ்சம் மெதுவாய்ப் போங்களேன்
உங்களால் சாலை அதிர்கிறது.

நாறுது இந்தியா!


''வாசனையாய் சாப்பிட்ட உன்
வாயை முகர்ந்து பார்
பீ நாற்றம் அடிக்கும்.

நீ கழித்த மலத்தில்
நாள் முழுதும் குளிக்கிறேன்
வெட்கமாய் இல்லையா?

மனிதர் மலத்தை மனிதன் அள்ளும் நாட்டில்
மனித உரிமை ஆனையங்கள்
மாநிலத்திற்கு ஒன்று.

இந்தியா ஒளிர்கிறது
இனிமேல் சொன்னால்
செருப்பால் அடிப்பேன்.''

நண்டுகள், நத்தைகள்


ஒரு விடுமுறை நாளில் சில நத்தைகளை பிடித்துக் கொண்டு இச்சிறுவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

ஒரு காலத்தில் அதாவது என் பள்ளிப் பருவத்தில், மழைக் காலம் தொடங்கிய பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் கால் வைக்கவே இடம் இருக்காது. துள்ளிக் குதிக்கும் தவளைகளும், ஓடி விளையாடும் நண்டுகளும், ஊர்ந்து செல்லும் கணக்கிலடங்கா நத்தைகளும் என்று விளை நிலங்கள் செழிப்பாய் இருந்தது.


பூச்சிக்கு மருந்தடிக்கிறேன் பாரு'ன்னு சொல்லி சில பொறம்போக்குகள் எப்போது ஊருக்குள் வந்தானுங்களோ! அப்பவே போச்சி எல்லாம். யூரியா போட்றேன், அம்மோனியா போட்றேன்'னு சொல்லி ஏகப்பட்ட மருந்து கொடுத்தானுங்க. அத கெடுத்தானுங்கன்னு சொல்லலாம்.

அப்படியான கால கட்டங்களில் ''இன்றி மருந்து'' குடித்துவிட்டு செத்துப்போன இளவட்டங்கள் தான் ஏராளம். [வய‌லுக்கு தெளிக்கும் ஒரு திரவ பொருள்‍: இன்றி மருந்து]


வயலில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் அங்கிருந்த நண்டு நத்தைகள், புழு பூச்சிகள், எலி பாம்புகள் என்று எல்லாவற்றையும் கொன்று குவித்தது.

பசிக்கு எதுவுமில்லா காலகட்டங்களில் கூடை கூடையாய், குடம் குடமாய் நத்தைகள், நண்டுகள் கொண்டுவந்து வேகவைத்து தின்பார்கள் மக்கள். வயலில் கிடைக்கும் இவை பல வியாதிகளுக்கு மருந்து.

இன்று எவ்வளவுதான் தேடினாலும் நண்டு நத்தைகள் அகப்படுவது மிகக் கடினம். இருக்கும் சில உயிரினங்களும் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு உய்ர் வாழ்வதால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அளவிலேயே இருக்க நேரிடும்.

Saturday, November 18, 2006

புடுச்சேரி என்கிற டுபுக்குச்சேரி!


சரக்குக்கு பேர் போன பாண்டிச்சேரி'யோட பேரை புதுச்சேரி என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உட்பட பல்வேரு தரப்பினர் நீண்ட நெடுங்காலமாகவே போராடி வந்தனர்.


புதுச்சேரி பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு உள்ளான போது பிரஞ்சியர்களின் எழுத்துப் பிழையால் புதுச்சேரியில் உள்ள ''U'' என்பது ''N'' ஆக மாறி பாண்டிச்சேரி ஆகிவிட்டது.


இந்த குறையை மாற்ற வேண்டி சட்ட மன்றத்தில் தீர்மானமும் போட்டு, அதுவும் மத்திய அரசு ஒப்புதலோடு புதுச்சேரி ஆனது. ஆனா பாருங்க மெத்தப் படிச்ச அதிகாரிங்களோட இங்கிலிசு நாலெட்ஜை.


PUDHUCHERRY என்பதற்கு பதில் PUDUCHERRY [புடுச்சேரி] என்று எழுதியிருக்கிறார்கள். இதுக்காடா இவ்ளோ கஷ்ட்டப்பட்டீங்க?


வெளியூர்காரன் இன்னைக்கி புடுச்சேரி'ன்னு படிப்பான். நாளைக்கு புடுச்சேரி, புடுக்குச்சேரி'ன்னு ஆவும், இல்ல டுபுக்குச்சேரி'ன்னும் ஆவும். ஆனா கண்டிப்பா புதுச்சேரி ஆகாது

பனம்பழம் பொறுக்கிய நாட்கள்:


''பனம்பழம் சுட்டு பசியாறப் படிப்போம்'' -கவிஞர் ஆலா.


சினிமாக்களில் பார்த்திருக்கிறேன், பனக்கார வீடுகளில் சாப்பாட்டு மேசையின் மீது கணக்கிலடங்காத பழவகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

''யப்பாடா சாப்பாடுலாம் சாப்டுட்டு எப்பிட்றா இந்த பழத்தையும் துன்னுவானுங்க'' என்று நினைத்துக் கொள்வேன். எனது இளமைக் காலங்களில் ஆப்பிள் முதலான பழவகைகளை பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. பழம்னா அது பனம்பழம் தான்.


ராத்திர்லதான் பனம்பழம் பொறுக்கப் போவனும். சும்மா படுத்து தூங்குனா ஊட்ல கேழி கேப்பாங்க. அதனால படுக்கப் போறதுக்கு முன்னாலயே பிளான் பன்னிட்டுதான் படுப்போம்.


பனம்பழம் பொருக்கறது ஒன்னும் சாதாரண வேல இல்ல. ராவு நேரத்துல கொள்ளிக்கட்டி பிசாசுங்க, மோகினிங்க எல்லாம் சுத்தும். அப்பலாம் ஊட்டாண்ட கரண்ட்டு ஏது. ஒரே பயங்கிற இருட்டா இருக்கும்.


பேய்ங்களுக்கு டோ க்கா[அல்வா] குடுக்குறதுக்கு இன்னா பன்னுவோம்னா! ஒரு தடி ஒன்னு சீவி, அதும் மொனைல இரும்பு புடி ஒன்ன போட்ருவோம். இரும்பு ன்னாத்தான் பேய் கிட்ட வராதே! மீறி பேய் கிட்ட வந்திர்சின்னா ''அடித்... தொடப்ப கட்டயால, செருப்பு பிஞ்சிடும், பீய கரச்சி மூஞ்சில ஊத்திடுவேன்''னு சொல்லனும். அப்டி கேட்டா பேய் ஒடிடும். அதுக்கும் மசியலன்னா ஓடாம நின்னுக்கினு நம்பள சுத்தி மூத்திரம் பேஞ்சிக்கனும். ஏன்னா மூத்திரத்த தாண்டி பேய் உள்ள வராது.


அதோட முடிஞ்சிடுச்சா பிரச்சினைன்னா இல்ல. பனம்பழம் ஒன்னும் ரோட்ல கடக்காது. மரத்த சுத்தி நெறைய பொதருங்க இருக்கும். பொதரு இருந்தா கண்டிப்பா அதுல பாம்பு இருக்கனுமே. பயந்தா ஆவுமா? பனம்பழம் அதுலதானே கடக்கும். கைல வச்சிங்கிற கொம்பால தட்டிப் பாத்து, பழம் இருந்ததுனா எடுத்துக்குவோம்.


இப்பிடித்தான் ஒரு நாளு, பாலாஜி கொட்டாவுல ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு, நடு ராத்திரிலேயே போய் பனந்தோப்ல படுத்துக்க்கினோம். திடீர்னு யாரோ பொரன்ற மாரி சத்தம் கேட்டுச்சி.


கண்ணத்தெறந்து பாத்தா, ''அன்னாத்த ஒர்த்தரு மரத்து மேல ஏறிக்கினு கீறேரு. அவுரு திட்டம் இன்னானா, அவுரா பனம்பழத்த புட்டு போட்டுட்டு யார்னா கீழ வந்து பொறுக்குனாங்கனா ஒரே அமுக்கா அமுக்கிற்ரது.''
நல்ல வேள! பாத்துட்டோம். கழிசல் புடுங்கிச்சு எங்களுக்கு. புடிச்சம்ப஑ரு... ஓட்டம். ஓட்டம்னா, அப்பிடி ஒரு ஓட்டம். நேரா ஊடு வந்து சேந்துட்டோம்.


எங்க மேல தொடந்து வர்ற பேயி ஊட்டு உள்ள பூராம இருக்கிறதுக்கு செருப்பும், தொடப்பக்கட்டயும் சேத்துக்கட்டி ஊட்டு வாசல்ல தொங்க உட்ருவோம். குடுகுடுப்புகாரங்கிட்ட தாயத்து கட்டி, விபூதி குங்குமம்லாம் பாக்கெட்ல வச்சிகினுதான் மறுநாள்ல இருந்து பனம்பழத்துக்கு போறது.

Friday, November 17, 2006

'தேவிடியாப் பையா'ன்னு கூப்புட்றானுங்க''


''ஈ'' படத்தில் ஒரு காட்சி.

காட்சியை சொல்வதற்கு முன் ''ஈ'' என்கிற அந்த கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.


மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அழகான வட இந்தியப் பெண்மணி சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறாள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பலர் அப்பெண்மணியை அவ்வப்போது பாலியல் வல்லுறவு கொண்டு சீரழிக்கின்றனர். அதன் பலனாய் அவள் கற்பமடைய, அதன் மூலம் பிறப்பவன் தான் 'ஈ' என்கிற ஈஸ்வரன். பேட்டை ரவுடியாக காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவன்.


ஒரு கட்டத்தில் இந்த 'ஈ'யும், நெல்லைமணியும் ''[நெல்லைமணி லாப நோக்கத்திற்காக ஏழைகளின் மீது டாக்டர்கள் நோய்க்கிருமி பரிசோதனை செய்வதைக் கண்டு, கொதித்து மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு போராளியாக மாறியவன்]'' சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது.


அப்போது 'ஈ' நெல்லைமணி'யிடம் சொல்கிறான்,


''ஊர்ல, எல்லாம் என்ன எப்டி கூப்புட்றாங்க தெரியுமா?... 'தேவிடியாப் பையா'ன்னு கூப்புட்றானுங்க''.


அதற்கு நெல்லைமணி சொல்கிறான்,


''ஆமான்டா உனக்கு அப்பம்பேர் தெரிஞ்சா நீ இன்னா ஜாதி'ன்னு தெரிஞ்சிடும். ஜாதி தெரிஞ்சா மதம் இன்னான்னு தெரிஞ்சிடும். அப்புறம் நீ ஜாதித் தலைவனாயிடுவ, மதத் தலைவனாயிடுவ.'' [எப்படிப்பட்டவர் தலைவர் ஆகிறார் என்பதை கவனிங்க]''. உன்னால தான் அடுத்தவங்களுக்காக போராட முடியும்'' என்கிறான்.


தேவிடியா மகன்'னா நாமெல்லாம் எப்படி சிந்திப்போம். ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எப்படி சிந்தித்துள்ளார் பாருங்கள்.


இந்த சிந்தனை மிகுந்த பாராட்டுக்குரியது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களைப் பற்றி அக்கரை கொள்கிற ஒருவனால் தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்பது உண்மை. சினிமா உலகம் ஜனநாதனால் மறுமலர்ச்சி பெறட்டும்.

உயிர்வலி!

புதுச்சேரி, நேரு வீதியில்தான் அந்த மனிதரைப் பார்த்தேன். மழை, விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. எப்போதுமே போகுவரத்துக்கு இடைஞ்சலாக சாலையில் நடந்து செல்லும் மக்கள், மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தார்கள்.

சில்லென்றெ குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க, நான் வேடிக்கை பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தேன். நான் ஒரு காமிராக்காரன்.

காந்தி வீதி குறுக்கிட்டபோது, சன்னமான குரல். ஒலித்த குரல், என் உயிரைப் பிடுங்கி உடலைக் கிழித்த மாதிரி வலித்தது. குரல் வந்த திசைக்குத் திரும்பினேன். சாக்குப் பையை போர்த்தியபடி கிழவர் ஒருவர் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.

"அய்யா பெரியவங்களே! எதுனா தர்மம் போடுங்கையா!''

எலும்பும் தோலுமான தேகம், தலையோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. மீண்டும், மீண்டும் ''அய்யா பெரியவங்களே, அய்யா பெரியவங்களே!'' என்று அவர் இரந்து கொண்டிருந்தது, என்னை மிகவும் பாதித்தது. பாக்கெட்டில் தடவிப் பார்த்தேன். பைசா எதுவுமில்லை.

''ச்சே, இந்நேரம் பார்த்து...'' என வருத்தப்பட்டுக்கொண்டு, அடுத்த நடையை எடுத்து வைத்தேன்.

மனம் என்னை விடுவித்துக்கொண்டு, பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கிழவரைத் திரும்பிப் பார்ப்பதற்குள் சில அடிகள் கடந்துவிட்டேன். ''அட்லீஸ்ட் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட்டு போகலாமா?'' என்று நினைத்து, பின் அந்த நினைப்பையும் கைவிட்டேன். வீடுபோய்ச் சேர்ந்தேன்.

மறுநாள் காலை தோழியுடன் அக்கிழவரைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தபோது, நேரு வீதியில் அந்த இடம் வந்துவிட்டது. வழக்கமாய் நாங்கள் அலுவலகம் நோக்கி பிரிகிற இடம்.

''மதியம், அவ‌ருக்கு எதுனா வாங்கிக்கொடு'' என்றாள் தோழி.

நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். பெரிய மார்க்கெட் மீன் நாற்றம் காந்தி வீதியில் மணத்துக்கொண்டிருந்தது. 'நேரு வீதியில் தோழியை ஒரு எட்டு பாத்துட்டு போய்டலாம்' என்று பார்க்கிறேன்! எதிரில்அந்த கிழவர்.

நடு ரோட்டில், போலிஸ் பேரிகார்ட் மீது சாய்ந்தபடி,
''அய்யா பெரியவங்களே! அய்யா பெரியவங்களே!"
என்று பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விருவிருவென்று பழைய காட்சிகள் மனதில் ஓட ஆரம்பித்தது.

''யாரு, யாரப் பார்த்துடா 'பெரியவங்களே’ன்னு சொல்றது? என்னடா உலகம் இது? கேடுகெட்ட சமுதாயம். இந்த மனுஷனுக்கு சோறுபோட, படுக்க வைக்க வக்கில்லாத நாடு, என்னடா நாடு?'' என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

மாலை வெளிச்சம் புகைப்படத்திற்கு போதுமானதாக இருந்ததால், கைகள் தன்னிச்சையாக காமிராவை வெளியே எடுத்தன‌. முகத்தை சூம் செய்து, போகஸ் செய்கிறேன். அந்தக் கண்களைப் பார்க்கிறேன்.

கண்களா அது!? ஆயிரம் கதைகள் சொல்லும் அதன் தீட்சண்யம். வயதாகிப்போனதால், அதில் நீலம் படர்ந்திருந்தது. ஆனால், ஒளி மிகுந்து காணப்பட்டது. அதிலிருந்து வீசிய மின்னலை ஒன்று, நேராக என் இதயத்தை தாக்கியதை நன்றாகவே உணர்ந்தேன். யாசகம் வேண்டி நின்ற ஒரு மனிதனின் வலி, காமிரா வழியாக கண்களுக்குள் பரவியதால், மனம் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

சூமைக் குறைத்து முகத்தை ஃபிரேம் செய்தேன். சுருங்கிய தோலும், லேசான எண்ணெய்ப் பசையும் முகத்தில் பளபளப்பை கூட்டியிருந்ததால், விலை மதிக்கமுடியாத ஒரு பிம்பம் கைகூடி இருந்தது. காமிரா அடுத்தடுத்து கிளிக்கிக்கொண்டிருந்தது.

அந்த கிழவருக்கு குழப்பம் வந்திருக்க வேண்டும். ''எப்படியா இருந்தாலும் இவன் பணம் கொடுப்பான். ஆனால், இவனைப் பார்த்துக்கொண்டு வழியில் போகிறவர்களை எப்படி விடுவது?'' என்கிற குழப்பம் அது.

எனவே, நொடிக்கு நொடி அவரது முகபாவம் மாறிக்கொண்டிருந்தது. என்னைப் பார்க்கிறார், திரும்பி சாலையில் போவோரைப் பார்க்கிறார். ரொம்பப் பாவமாய் போஸ் கொடுக்கிறார்.

நான், என் நிலை இழந்துகொண்டிருந்தேன். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஆறாத ரணங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. கிழவரைப்போலவே நானும் நடுக்கத்தை உணர்ந்தேன்.

ரொம்பப் பாவமாக என்னைப் பார்த்து கையை நீட்டினார் கிழவர். பாக்கெட்டைத் தடவினேன். அன்று சில்லரையாக கிடந்த பன்னிரண்டு ரூபாயை போட்டுவிட்டு, வலிகளைச் சுமந்தபடி நகர்ந்தேன்.

'நாளைக்கு எப்படியாவது ஒரு நூறு ரூபாயை சில்லரை மாத்திப் போட்றனும். வேற என்னா பண்ண‌லாம்...?'' என்று யோசித்தேன்.

நேராக தோழியிடம் போய்,
"அந்தத் தாத்தா சொன்னேன்ல! இதோ பார் அவர் போட்டோ" என்று காமிராவை நீட்டினேன். பார்த்த நொடியில் அவள் முகம் சுருங்கிவிட்டது.

''காசு குடுத்தியா...?''
''ம்...பன்னென்ரூபா''
''ச்சீ... அவ்ளோதானா?''
''இல்ல... நாளக்கி நூர்ரூபா சில்ர மாத்தி குடுத்துடலாம்னு இருக்கேன்.''

அன்றிரவு தூங்கப் பிடிக்கவில்லை. மாற்றி மாற்றிக் கிழவரும் வேறு சில நிகழ்வுகளும் போட்டுத் தாக்கியதில், கெட்டக் கெட்ட‌ வார்த்தைகள் மனதுக்குள் சத்தம் போட்டு ஒலித்தன.

மறுநாள் பத்தரை மணி இருக்கும். வேக வேகமாய் நேரு வீதிக்கு வந்தேன். கிழவரைக் காண‌வில்லை. அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தார். அவர் கையிலிருந்த கோனிப்பையை வாங்கிக்கொண்டு, ''நீ வருவேன்னுதான் காத்திருக்கேன்'' என்றேன்.

ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு. ஏதோ சொல்ல வருவதைப் புரிந்தவராய்,
''காது செரியா கேக்கல, கண் பார்வையும் தெரியாது'' என்றார்.

"வா! ஒக்காருவோம்" என்று கைத்தாங்கலாக அவரை அழைத்து கடை வாசல் ஒன்றில் அமரவைத்தேன்.

''தாத்தா, உம் பேரு இன்னா?"
''ம்... பேரா கேக்குற? பரணி கவுண்ரு. தொண்டர் படைத் தலைவன், அந்தகாலத்துல''

என்றவரின் முகத்தில், லேசாக பிரகாசம்.
எனக்கு ஆர்வம் கூடிவிட்டது.

"தொண்டர் படைத் தலைவன்னா போராட்டம், ஆர்ப்பாட்டம்லாம் கலந்துகிட்டியா?"
''ஆமா, காந்தி கடலூர் வந்தப்போ, ஒரு பெரிய படையே தெரட்டிகினு போய் கூட்டத்துல கலந்துக்கிட்டேன். கடலூர்னு இல்ல, காந்தி எங்க கூட்டம் போடறார்னு தெரிஞ்சா போதும், எப்பாடுபட்டாவது போய்க் கலந்துக்குவேன்."

''பெரியார்லாம் பாத்திருக்கியா?''

அன்னாந்து பார்த்துவிட்டு சிரிக்கிறார்.

''பாத்திருக்கியாவா? அவரு பேச்சக் கேக்காதவன் எவன் இருந்தான், அந்த காலத்துல! அப்பிடியே நரம்பு முறுக்கிட்டு துள்ளும். ரத்தம் கொதிக்கும். 'அமா, ஆமா! அவரு சொல்றது சரிதான்'னு சொல்வானுங்க'' என்றவர்,

''எங்க ஊர் பறையன, பொனுசாமி கவுண்டன் அடிச்சிட்டான், வந்துச்சி பார் ஆத்திரம். பரபரன்னு இழுத்தும்போய் கோட்டகுப்பம் போலீஸ் ஸ்டேசன்ல புடிச்சி குடுத்துட்டேன். மூனு மாசம் ஜெயில். வந்து ஏங்கிட்ட கெஞ்சுறாங்க. 'மன்னிச்சுடு'ன்னாங்க. சரி போவுதுன்னு உட்டுட்டேன். இதெல்லாம் அவர் பேச்சக் கேட்டு வந்ததுதான்.

அப்ப ஒடம்பு நல்லா வாட்ட சாட்டமா, பாடியா இருப்பேன். 'மனுசனுக்கு மனுசன் இன்னாடா ஜாதி வேண்டி கெடக்குது?'ன்னு கேப்பேன். எனக்கு அதெல்லாம் புடிக்காது. அதனாலயே ஊர்ல ஆவாதவனா போய்ட்டேன்.''

''உங்க சொந்த ஊர் எது? ஏன் இங்க வந்துட்டீங்க?''

''காலாப்பட்டு பக்கத்துல மாத்தூரு. நெலம், சொத்து பத்துலாம் இருக்குது. மூனு சொந்த மனை இருக்குது. மூன்ற[3.5] கானி நெலத்த கோயிலுக்கு எழுதி வச்சிட்டேன். இப்பக்கூட ஊருக்கு போனேன்,

'ஏன்டா... கோயிலுக்கு நெலத்த எழுதி வச்சிருக்கேன். இன்னாடா ஊர ஒழுங்கு மரியாதையா வச்சிருக்கீங்க?'ன்னு கேட்டேன். பிரச்ன வந்திருச்சி. என்னை எல்லாரும் சண்டகாரனாத்தான் பாக்குறானுவோ!"

''ஏன், உங்க பொண்டாட்டி புள்ளைலாம் எங்க?''

''பொண்டாட்டி செத்து நாப்பது வருசமாவுது. இப்போ எனக்கு நூத்தி அஞ்சி வயசு'', என்றபோது தூக்கி வாரிப்போட்டது.

பொக்கிஷமாய் காக்கப்பட வேண்டிய புத்தகமல்லவா இவர்? ஜப்பான், அமெரிக்காவில் நூறு வயதைத் தாண்டியவர்களை கொண்டாடி மகிழும் நாளிதழ் செய்திகள் நியாபகத்துக்கு வந்தது.

தொடர்ந்து பேசினார் கிழவர்.

''ஒரு புள்ள இருக்கான்... பேரு உத்திரகுமாரன். அவம் பொண்டாட்டிதான் என்ன சரியா கவனிச்சிக்கிறதில்ல. ஏன் வயசான காலத்துல வீனா அவங்களுக்கு தொல்ல குடுப்பான?ன்ட்டு கௌம்பி வந்துட்டேன்.
தோ! இங்கியே படுத்துக்கிறேன், இங்கியே சாப்டுக்கிறேன். சொத்து பத்துக்கெல்லாம் ஆசயில்லை எனக்கு. நான் பாக்காத சொத்தா?

காலாபட்ல எட்டு தூலபத்திவீடு [மிகப்பெரிதான கூரை வீடு], மூன்ற கானி நெலம். இன்னக்கி கோடிக்கணக்குல போவும். வெறும் பதினேழு ரூபாய்க்கு ஏமாத்தி வாங்கிக்கினான் அந்த வக்கீலு. திருட்டுப் பையன். போன மாசம்கூட நேர்ல போய் நாக்கப் புடுங்கறமாறி நாலு கேழி கேட்டுட்டு வந்தேன். அவ்ளோதான் முடிஞ்சது. ஏமாத்திக்கினான். இன்னா பண்றது? புள்ளையும் செரியில்ல''
புலம்பியபடி மீண்டும் தொடர்ந்தார்.

''அந்த காலத்துல சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்வேன். ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பனா..., எவனும் எதுத்து பேசமாட்டான். ஆனா ஞாயமாத்தான் தீர்ப்பு சொல்வேன். எவன், எங்க தப்பு செஞ்சிருந்தாலும் இழுத்து வந்து நாலு சாத்து சாத்தி, 'பத்து ரூவா, இருவது ரூவா'ன்னு அபராதம் போட்ருவேன். அப்பலாம் அது பெரிய காசு.''

கிழவருக்கு காது கேட்காது என்பதால், சத்தம் போட்டு நான் கேட்ட கேள்விகளால், சாலையில் போவோர் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டு டீ சொல்லி ஆளுக்கு ஒன்றாய் சாப்பிட்டோம். கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தேன். அடுத்த கேள்வி மிகுந்த சங்கடமானது. அவரது சாவைப் பற்றியது. சூசகமாக ஆரம்பித்தேன்.

''வயசான காலத்துல ஊர்ல இருந்தாத்தானே நல்லது. நாலுபேர், கூட வருவாங்க, எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்?''

கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டு, கேட்டார்.

''என் சாவப் பத்தி கேக்கிறியா? அதுக்குத்தான் அப்பவே பாடிவச்சிட்டு போனானே!

''இப்பவோ இன்னுஞ்செத்த நேரமோ
இரவுதான் பகலோ அஃதிலோ

நீரிலோ தீயிலோ
செப்பறியா வீட்டிலோ காட்டிலோ

சாலையிலோ மரம் மீதிலோ
எப்பொழுது என்னுயிர் பிரியும்
ஈசனே!''

என ராகம் போட்டுப் பாடியவர்,

'' வெள்ளக்காரங் காலத்துல ஏழாவது படிச்சேன். விவேக சிந்தாமனி, ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் தண்ணி பட்ட பாடு.''

''ஒடம்பு எப்படி இருக்கு?''

"எனக்கு... எந்த நோயுமில்ல. இப்ப கொஞ்ச நாளா மூச்ச இழுக்குது. இன்னும் பத்து நாள் இருப்பனா? சாவு எப்பனா வரட்டும். யாருக்குத்தான் வரல. நீ வேலைக்கு போவல..?'' என்றார், என்னைப் பார்த்து.

''அது கிடக்கட்டும், ஊர்க்காரங்க யாரும் உன்னை விசாரிக்கிறது இல்லையா? எதுனா வாங்கித் தருவாங்களா?''

''ஏன் வாங்கித்தராம! ஊர்க்காரன், ஜாதிக்காரன் யாரும் வரமாட்டான். காலனிக்காரங்க வந்து விசாரிப்பாங்க, அஞ்சோ, பத்தோ குடுத்துட்டு போவாங்க. ஒன்னும் கஷ்டமில்ல உடு... ஒரு கை சோத்துக்கு மேல எறங்காது.''

என் செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புமணி வந்துகொண்டிருந்தது. ரொம்பவே நேரமாகிவிட்டிருந்தது.

"சரி தாத்தா, எதுனா வாங்கி வந்து தரவா? குளிர் நாளாயிடுச்சே! போர்வை வாங்கித்தரட்டுமா?'' என்றேன்.

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். போர்வை எங்கிட்டயே இருக்கு. போத்தாலே ஒடம்பு வலிக்குது. காசுகூட வேணாம். முந்தாநாளு எர்நூற்ரூபாவ எவனோ திருடினு போய்ட்டான். நீ எங்கயா இருந்தாலும் நல்லா இருக்கனும், கௌம்பு.'' என்றார்.

பாக்கெட்டில் கிடந்த முப்பத்தைந்து ரூபாயை, அவர் கையில் தினித்துவிட்டு நடந்தேன். கோபம் யார், யார் மீதெல்லாமோ படர்ந்துகொண்டிருந்தது.























''தமிழ், தமிழ் என்கிறோம். தமிழ்நாட்டில்தான் இந்த கேடுகெட்ட நிலை. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன். ச்சே!

நேற்று வரை நான் தமிழன். இன்று முதல் ஒரு மயிரும் இல்லை'' என்று நினைத்துக் கொண்டேன்.

*03.12.2006 தேதியிட்ட குங்குமம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Wednesday, November 15, 2006

மரணம் மகிழ்ச்சியானது


தமிழகத்தின் ஒரே குழந்தைகள் நாடகக் கலைஞரான வெலு சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது என் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடிந்தது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணங்கள் நிரம்பியது அந்த நாட்க்கள்.

கைக்காசுக்கு செலவு வேண்டி பட்டாம்பூச்சிகளைப் பிடித்து புதைத்தது, கண்ணில் ரத்த சோகையைக் கண்டு காக்கைகளைச் சுட்டுத் தின்றது, ''முருகருக்கு மூத்திரமா பேய்ஞ்சு குடுக்கிற?'' என்று ஓனான்களை கல்லெறிந்து கொன்றது, ''தூண்டி போட்டா எப்பப்பாரு தவுக்ள வந்து மாட்டிக்கிது'' என்று அடித்துக் கொன்றது என அது ஒரு கொலைகாரப் பருவமாகவே இருந்துள்ளது.

வேலு சரவணனிடம் கேட்டேன், ''குழந்தைப் பருவம் எப்படிப்பட்டது?''

''அழகழகான, அதிசயம் நிறைந்த, கனவுகளோடு கூடிய மகிழ்ச்சியான பருவமது. மரணத்தைக்கூட மகிழ்ச்சியாக்கி விளையாடுவதென்பது அவர்களால் மட்டுமெ முடியும். பக்கத்துல ஒரு சாவு விழுந்திருக்கும், ஆனா பசங்க அதையே வெளையாடிப் பாப்பாங்க'' என்கிறார்.

நிணைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்களில் சாவுகளையும் அதனோடு கூடிய ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா... த்தரரா! தினுக்கு, தினுக்குத் தித்தா'' என்கிற மேளச்சத்தம் எங்கள் நாடி நரம்புகளை முருக்கேற்றி ஆடவைக்கும். ''ஆடி மகிழலாம், அழுது மகிழ்வது எப்படி?'' அதுக்குத்தான் ஒணானும் தவுக்களையும் இருக்கே!

ஒரு நாலைந்து பேர் கூடிக்கொண்டு நிறைய கற்களை பொறுக்கிக் கொள்வோம். சில பையன்கள் தென்னை ஓலையை சுருக்குப் போட்டு மரத்தில் ஏறி ஓணான் பிடிப்பார்கள். நாங்கள் கற்களை எடுத்துக்கொண்டு மரம் மரமாக சுற்றி வருவோம்.

கற்களைக் கொண்டு எவ்வளவுதான் அடிச்சாலும் இந்த சனியம் புடிச்ச ஓணான்கள் ஓடவே ஓடாது. இதன் காரணமாகவே ஒவ்வொன்றாய் அடிபட்டு விழும். ''வாப்பா... முருகருக்கு மூத்திரமா பேஞ்சு குடுத்த? இந்தா சாவு''ன்னு சொல்லி மீண்டும் அடிப்போம்.

''டேய் அனில்லாம் அடிக்கக்கூடாதுடா! ஏன்னா அதுதான் முருகருக்கு தண்ணி தாகம் எடுத்தப்போ... எள்னீர் பெற்ச்சி குட்த்துதாம்'' என்று ஓனானை சாகடிப்பதற்கான காரணத்தைக் கூறிக்கொள்வோம். மரப் பொந்துகளிலும், ஓலைகள், தண்ணீர் வற்றிய குட்டைகளிலிருந்தும் தவளைகளைப் பிடித்து கொன்று வருவோம்.

இப்பொழுது சாவு, களை கட்டிவிடும். அலுமினியத் தட்டுக்கள், தகர டப்பாக்கள், மாட்டுத் தோலிலிருந்து நாங்களே செய்த மேளம் இவற்றைக் கொண்டு ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா, த்தரரா தினுக்கு, தினுக்கு தித்தா''தான்.

நாங்கள்லாம் கூத்தாடுவோம், பொம்பள புள்ளங்கலாம் ''கட்டியாலா புட்டியாலா'' சொல்லி ஒப்பாரி வெப்பாங்க.
தென்ன ஓலைல பாடகட்டி அப்டியே மோளம் அடிச்சிகினும், கூத்தாடிகினும் எங்கூட்டு பக்கத்லகிற செம்மன் பள்ளத்தாண்ட எடுத்துனுபூடுவோம்.

''ஏ... பொணத்த எறக்குற மோளத்த அட்றா''ன்னு சொன்ன ஒட்னே ''ஜென்,ஜென்,ஜென்,ஜென்''னு ஒத்தஅடி அடிப்பானுங்க. மெதுவா எறக்கி அவுங்கள அடக்கம் பன்னிட்டு, மறுநாள் மொறையா போய் அவுங்களுக்கு பாலும் ஊத்திட்டு வருவோம்.

குழந்தைகள் சூது, வாது அறியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.கற்பனைதான் படைப்பாற்றலின் அடிப்படை.

வேலு சரவணன் சொல்கிறார் ''குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்கள் விழுந்து எழுந்திருப்பார்கள். மரத்திலிருந்து விழுவதால் பூக்களுக்கு வலிப்பதில்லை.''

நரிக்குறவர்கள் சிவாஜியின் படை வீரர்கள்:

அழகுன்னா அழகு! அப்படி ஒரு அழகு ஜோதிகாவுக்கு. 'அராபியக் கண்கள், சிவந்த உதடுகள், கோதுமை நிற‌ம்' என்று பார்ப்பவர்களை சொக்கிப் போக வைக்கிற‌ வசீகரம் அவளுக்கு. அவள் மட்டுமல்ல இங்கு சினேகா, ரம்பா, மீனா என்று நிறைய அழகிகள் இருக்கிறார்கள். ஆனாலும் என்ன செய்ய? அவர்கள் அனைவரும் நரிக்குறத்திகள். நான் பார்த்த ஜோதிகாவுக்கும், சினேகாவுக்கும் வயது இரண்டரை.
இன்று உடைகளில் அழுக்குப் படிந்து ஒதுக்குப் புறமாய் வாழும் நரிக்குறவர்கள் ஒரு காலத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் படை வீரர்கள். உலகம் முழுக்க அதிகார வேட்டை தொடங்கிவிட்டிருந்த நேரம், முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள். சிவாஜி படை தோல்வி காண ஏரளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்படித்தான் முகலாயர்களிடம் அடிமைகளாய் சிக்கினர் நரிக்குறவர்கள்.
மராட்டிய மண்ணுக்கே உரிய நிரம், குணத்தோடு இப்பெண்கள் மிகுந்த அழகுடையவர்களாய் இருந்தனர். மானத்தை உயிரெனப் போற்றும் இவர்களால் தொடர்ந்து எதிரிகளிடம் மல்லுக்கட்ட முடியவில்லை. தப்பித்தால் போதுமென்று வட இந்தியாவை விட்டு, தெற்கே தமிழகத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைந்து வாழத் தொடங்கினர். காடு மற்றும் மலை சார்ந்த வாழ்க்கையில் வேட்டைத் தொழில், மூலிகை வைத்தியம் கற்றுத் தேர்ந்தனர்.
அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயப் படையெடுப்பு நிகழ்ந்தபோது, வனப் பகுதிகளில் இவர்களின் உதவி வெள்ளையர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. பலனாய் வெள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிகள் இவர்களுக்கு பரிசளிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய துப்பாகிகளைத்தான் இப்போதும் இவர்களிடம் நாம் பார்ப்பது.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஓரளவு தைரியம் பெற்ற இவர்கள், மெல்ல ஊர்ப்புரங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். என்றாலும் பல்லாண்டு கால அடிமை வாழ்க்கை இவர்களை மிகவும் முடக்கிப் போட்டுவிட்டிருந்தது. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும் இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.
பெண்கள் அழகுடையவர்களாகவும், ஆண்கள் நல்ல உடல் பலத்துடனும் காணப்பட்டாலும், சமுதாயத்தை எதிர்த்துப் போராடும் திறன் அற்றிருந்ததால் பெண்கள் பாலியல் ரீதியாகவும், ஆண்கள் பொருளாதார ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டனர். இவ்வாறான தொடர் வன்கொடுமைகளால் சோர்வுற்ற நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.
அழகு ஒரு முக்கியக் குறியீடாக இருந்ததால், முதலில் அதையே அழித்தனர். அழுக்கு உடைகளுடன் வாரக் கணக்கில் குளிக்காமல், சிகை அலங்காரம் செய்யாமல், பற்களில் மீசி என்ற மை பூசி கருப்பாக்கிக் கொண்டனர். இச்செயல்களின் தொடர்ச்சியானது, இன்று அவர்களின் கலாச்சாரமாகவே மாறிவிட்டதைக் கான முடிகிறது.
நரிக்குறவர்கள் எந்த சூழ்நிலையிலும் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது. மானத்தை உயிரெனக் கருதுகின்றனர். [ஆனால் திருட்டு வழக்குகளில் ஆள் கிடைக்காத சில மானங்கெட்ட போலிஸ்காரர்கள் இவர்களை சந்தேகக் கேசில் பிடித்து அடைப்பதுண்டு] தங்களுடைய பன்பாடுகளை மிகக் கராராக பின்பற்றுகின்றனர். இவர்களது மொழி "வாக்ரிபோலி" என்றழைக்கப்படுகிறது. 24 மொழிகளின் கலவை இது. சிலர் மராட்டி பேசுகின்றனர். நீங்கள் எப்படிப்பட்ட சீமானாக இருந்தாலும், நரிக்குறவப் பெண்களை உங்களுக்கு மணமுடித்து தர மாட்டார்கள். கருகமணிதான் தாலி. கல்யாணத்தை இரவு நேரத்தில்தான் செய்கின்றனர். வரதட்சனை என்பது அறவே கிடையாது. ஆணுக்கும் பெண்னுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை உண்டு.
வயதுக்கு வந்தவுடன் பெண்களை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பிரசவம் 'தீட்டு' என்று கருதப்படுவதால், குடிசைக்கு வெளியில் வைத்துத்தான் குழந்தைப் பிறப்பு நடைபெறுகிறது. குழந்தை பிறந்த பின், 12 நாட்களுக்கு பிறகு தீட்டு கழித்து தாயும், சேயும் அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு பிறகே தந்தையோ, கணவனோ அவர்களைத் தொட அனுமதி.
மணமானவர்கள் யாருடனாவது கள்ள உறவு வைத்துக் கொண்டால், உடனே டைவர்ஸ்தான். "ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வைக்கோலை மூன்று முறை கிள்ளிப் போட்டால் போதும், டைவர்ஸ் முடிந்தது." மறுமணங்கள் தாராளமாக அனுமதிக்கப்படுவதால் இங்கே விதவைகள் கிடையாது. தாத்தா பாட்டிகள்கூட தனியாக இருக்க நேர்ந்தால், பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்கள் மாட்டு எலும்புகளால் அடிபடுவதோ, பாவாடையால் அடிபடுவதோ மிகப் பெரிய இழிவாக கருதப்படுகிறது. ஆண்களின் குடுமியைப் பிடித்து இழுப்பதும், பெண் தனது அந்தரங்க முடியைப் பிடுங்கி அவர்களின் மீது வீசுவதும் குற்றமாக, அவமானமாக கருதப்படுகிறது.
மரக்காணத்தில் இவர்களுக்கென்று உள்ள தண்ணிர் குழாயில், 'ஒரு பெண்ணின் பாவாடை பட்டுவிட்டது' பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. ஆத்திரப்பட்ட ஆண் ஒருவன், குடிநீர் குழாயை செருப்பால் அடித்துவிட்டு வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டான். இன்று வரை ஆண்கள் குழாயில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பதிலாக குளத்து நீரை அருந்துகின்றனர்.
பிற சமுதாயத்தினர் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டாலும், உபத்திரவம் செய்வது மட்டும் தொடர்கிறது. இவர்களது குடியிருப்புகளை தாண்டிச் செல்லும் ஆண்கள் பலர், "ஏ... பெருங்காயம் கெடைக்குமா?" என்று கேலி பேசிச் செல்கின்றனர் [பெருங்காயம் என்பது அவர்களை உடலுறவுக்கு அழைப்பதற்கான குறியீடு].
பல சமயங்களில் இச்சமூகப் பெண்கள், நாகரீக சமுதாய ஆண்வர்க்கத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். யாரும் கேட்பதற்கு நாதி இல்லாததால் இக்கொடுமை இன்றும் நீடிக்கிறது.
பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவப் பெண்கள் பலர், அப்பகுதி பெரிய இடத்து பையன்களால் அம்மக்கள் கண்ணெதிரிலேயே பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளனர். மீட்க முனைந்த அவர்களது உறவினர்களை ஒரு பெரிய கும்பலே வந்து அடித்து நாசப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான அச்சத்துக்கு இடயிலேதான் எல்லா நரிக்குறவர்களின் வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாம் உடைகளில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
விரிவான தகவல்களுக்கு கரசூர் பத்மபாரதி எழுதிய ''நரிக்குறவர் இனவரைவியல்'' படிக்கவும்.