Wednesday, November 15, 2006

நரிக்குறவர்கள் சிவாஜியின் படை வீரர்கள்:

அழகுன்னா அழகு! அப்படி ஒரு அழகு ஜோதிகாவுக்கு. 'அராபியக் கண்கள், சிவந்த உதடுகள், கோதுமை நிற‌ம்' என்று பார்ப்பவர்களை சொக்கிப் போக வைக்கிற‌ வசீகரம் அவளுக்கு. அவள் மட்டுமல்ல இங்கு சினேகா, ரம்பா, மீனா என்று நிறைய அழகிகள் இருக்கிறார்கள். ஆனாலும் என்ன செய்ய? அவர்கள் அனைவரும் நரிக்குறத்திகள். நான் பார்த்த ஜோதிகாவுக்கும், சினேகாவுக்கும் வயது இரண்டரை.
இன்று உடைகளில் அழுக்குப் படிந்து ஒதுக்குப் புறமாய் வாழும் நரிக்குறவர்கள் ஒரு காலத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் படை வீரர்கள். உலகம் முழுக்க அதிகார வேட்டை தொடங்கிவிட்டிருந்த நேரம், முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள். சிவாஜி படை தோல்வி காண ஏரளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்படித்தான் முகலாயர்களிடம் அடிமைகளாய் சிக்கினர் நரிக்குறவர்கள்.
மராட்டிய மண்ணுக்கே உரிய நிரம், குணத்தோடு இப்பெண்கள் மிகுந்த அழகுடையவர்களாய் இருந்தனர். மானத்தை உயிரெனப் போற்றும் இவர்களால் தொடர்ந்து எதிரிகளிடம் மல்லுக்கட்ட முடியவில்லை. தப்பித்தால் போதுமென்று வட இந்தியாவை விட்டு, தெற்கே தமிழகத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைந்து வாழத் தொடங்கினர். காடு மற்றும் மலை சார்ந்த வாழ்க்கையில் வேட்டைத் தொழில், மூலிகை வைத்தியம் கற்றுத் தேர்ந்தனர்.
அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயப் படையெடுப்பு நிகழ்ந்தபோது, வனப் பகுதிகளில் இவர்களின் உதவி வெள்ளையர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. பலனாய் வெள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிகள் இவர்களுக்கு பரிசளிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய துப்பாகிகளைத்தான் இப்போதும் இவர்களிடம் நாம் பார்ப்பது.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஓரளவு தைரியம் பெற்ற இவர்கள், மெல்ல ஊர்ப்புரங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். என்றாலும் பல்லாண்டு கால அடிமை வாழ்க்கை இவர்களை மிகவும் முடக்கிப் போட்டுவிட்டிருந்தது. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும் இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.
பெண்கள் அழகுடையவர்களாகவும், ஆண்கள் நல்ல உடல் பலத்துடனும் காணப்பட்டாலும், சமுதாயத்தை எதிர்த்துப் போராடும் திறன் அற்றிருந்ததால் பெண்கள் பாலியல் ரீதியாகவும், ஆண்கள் பொருளாதார ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டனர். இவ்வாறான தொடர் வன்கொடுமைகளால் சோர்வுற்ற நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.
அழகு ஒரு முக்கியக் குறியீடாக இருந்ததால், முதலில் அதையே அழித்தனர். அழுக்கு உடைகளுடன் வாரக் கணக்கில் குளிக்காமல், சிகை அலங்காரம் செய்யாமல், பற்களில் மீசி என்ற மை பூசி கருப்பாக்கிக் கொண்டனர். இச்செயல்களின் தொடர்ச்சியானது, இன்று அவர்களின் கலாச்சாரமாகவே மாறிவிட்டதைக் கான முடிகிறது.
நரிக்குறவர்கள் எந்த சூழ்நிலையிலும் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது. மானத்தை உயிரெனக் கருதுகின்றனர். [ஆனால் திருட்டு வழக்குகளில் ஆள் கிடைக்காத சில மானங்கெட்ட போலிஸ்காரர்கள் இவர்களை சந்தேகக் கேசில் பிடித்து அடைப்பதுண்டு] தங்களுடைய பன்பாடுகளை மிகக் கராராக பின்பற்றுகின்றனர். இவர்களது மொழி "வாக்ரிபோலி" என்றழைக்கப்படுகிறது. 24 மொழிகளின் கலவை இது. சிலர் மராட்டி பேசுகின்றனர். நீங்கள் எப்படிப்பட்ட சீமானாக இருந்தாலும், நரிக்குறவப் பெண்களை உங்களுக்கு மணமுடித்து தர மாட்டார்கள். கருகமணிதான் தாலி. கல்யாணத்தை இரவு நேரத்தில்தான் செய்கின்றனர். வரதட்சனை என்பது அறவே கிடையாது. ஆணுக்கும் பெண்னுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை உண்டு.
வயதுக்கு வந்தவுடன் பெண்களை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பிரசவம் 'தீட்டு' என்று கருதப்படுவதால், குடிசைக்கு வெளியில் வைத்துத்தான் குழந்தைப் பிறப்பு நடைபெறுகிறது. குழந்தை பிறந்த பின், 12 நாட்களுக்கு பிறகு தீட்டு கழித்து தாயும், சேயும் அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு பிறகே தந்தையோ, கணவனோ அவர்களைத் தொட அனுமதி.
மணமானவர்கள் யாருடனாவது கள்ள உறவு வைத்துக் கொண்டால், உடனே டைவர்ஸ்தான். "ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வைக்கோலை மூன்று முறை கிள்ளிப் போட்டால் போதும், டைவர்ஸ் முடிந்தது." மறுமணங்கள் தாராளமாக அனுமதிக்கப்படுவதால் இங்கே விதவைகள் கிடையாது. தாத்தா பாட்டிகள்கூட தனியாக இருக்க நேர்ந்தால், பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்கள் மாட்டு எலும்புகளால் அடிபடுவதோ, பாவாடையால் அடிபடுவதோ மிகப் பெரிய இழிவாக கருதப்படுகிறது. ஆண்களின் குடுமியைப் பிடித்து இழுப்பதும், பெண் தனது அந்தரங்க முடியைப் பிடுங்கி அவர்களின் மீது வீசுவதும் குற்றமாக, அவமானமாக கருதப்படுகிறது.
மரக்காணத்தில் இவர்களுக்கென்று உள்ள தண்ணிர் குழாயில், 'ஒரு பெண்ணின் பாவாடை பட்டுவிட்டது' பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. ஆத்திரப்பட்ட ஆண் ஒருவன், குடிநீர் குழாயை செருப்பால் அடித்துவிட்டு வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டான். இன்று வரை ஆண்கள் குழாயில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பதிலாக குளத்து நீரை அருந்துகின்றனர்.
பிற சமுதாயத்தினர் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டாலும், உபத்திரவம் செய்வது மட்டும் தொடர்கிறது. இவர்களது குடியிருப்புகளை தாண்டிச் செல்லும் ஆண்கள் பலர், "ஏ... பெருங்காயம் கெடைக்குமா?" என்று கேலி பேசிச் செல்கின்றனர் [பெருங்காயம் என்பது அவர்களை உடலுறவுக்கு அழைப்பதற்கான குறியீடு].
பல சமயங்களில் இச்சமூகப் பெண்கள், நாகரீக சமுதாய ஆண்வர்க்கத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். யாரும் கேட்பதற்கு நாதி இல்லாததால் இக்கொடுமை இன்றும் நீடிக்கிறது.
பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவப் பெண்கள் பலர், அப்பகுதி பெரிய இடத்து பையன்களால் அம்மக்கள் கண்ணெதிரிலேயே பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளனர். மீட்க முனைந்த அவர்களது உறவினர்களை ஒரு பெரிய கும்பலே வந்து அடித்து நாசப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான அச்சத்துக்கு இடயிலேதான் எல்லா நரிக்குறவர்களின் வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாம் உடைகளில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
விரிவான தகவல்களுக்கு கரசூர் பத்மபாரதி எழுதிய ''நரிக்குறவர் இனவரைவியல்'' படிக்கவும்.

3 comments:

மாசிலா said...

மிக அருமையான பதிவு ஐயா.
நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
நல்ல உழைப்பு. நல்ல பணி. படங்களும் அருமை.
பாண்டிச்சேரி லாஸ்பேட் பெரிய இடத்து பொறுக்கிகளுக்கு ஒரு ஆப்பு வைத்திருப்பது நன்று.
பாதுகாப்பற்ற மக்களை மதித்து அன்புகாட்டி அரவணைத்து ஒற்றுமையுடன் வாழக் கற்றுகொள்வோம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//நாம் உடைகளில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.//

:( உண்மை.

நம் பார்வையில் நாகரிகமற்றவர்களாகக் கருதும் பழங்குடிகள் பலரின் பழக்க வழக்கங்கள், ethics, ஆண்-பெண் சம உரிமை உயர் தரமாக இருப்பதை இன்னும் பல இடங்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் சுட்டிக்காட்டிய குடுகுடுப்பை சமூகமும் ஒரு எடுத்துகாட்டு.

லேகா said...

அருமையான பதிவு...நரிக்குறவர் குறித்த சமூக பார்வை திருநங்கையர் நடத்த படுவது போலவே அருவருக்கத்தக்கது....உங்கது கட்டுரை விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உள்ளது..நன்றிகள் பல..