Saturday, November 18, 2006

பனம்பழம் பொறுக்கிய நாட்கள்:


''பனம்பழம் சுட்டு பசியாறப் படிப்போம்'' -கவிஞர் ஆலா.


சினிமாக்களில் பார்த்திருக்கிறேன், பனக்கார வீடுகளில் சாப்பாட்டு மேசையின் மீது கணக்கிலடங்காத பழவகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

''யப்பாடா சாப்பாடுலாம் சாப்டுட்டு எப்பிட்றா இந்த பழத்தையும் துன்னுவானுங்க'' என்று நினைத்துக் கொள்வேன். எனது இளமைக் காலங்களில் ஆப்பிள் முதலான பழவகைகளை பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. பழம்னா அது பனம்பழம் தான்.


ராத்திர்லதான் பனம்பழம் பொறுக்கப் போவனும். சும்மா படுத்து தூங்குனா ஊட்ல கேழி கேப்பாங்க. அதனால படுக்கப் போறதுக்கு முன்னாலயே பிளான் பன்னிட்டுதான் படுப்போம்.


பனம்பழம் பொருக்கறது ஒன்னும் சாதாரண வேல இல்ல. ராவு நேரத்துல கொள்ளிக்கட்டி பிசாசுங்க, மோகினிங்க எல்லாம் சுத்தும். அப்பலாம் ஊட்டாண்ட கரண்ட்டு ஏது. ஒரே பயங்கிற இருட்டா இருக்கும்.


பேய்ங்களுக்கு டோ க்கா[அல்வா] குடுக்குறதுக்கு இன்னா பன்னுவோம்னா! ஒரு தடி ஒன்னு சீவி, அதும் மொனைல இரும்பு புடி ஒன்ன போட்ருவோம். இரும்பு ன்னாத்தான் பேய் கிட்ட வராதே! மீறி பேய் கிட்ட வந்திர்சின்னா ''அடித்... தொடப்ப கட்டயால, செருப்பு பிஞ்சிடும், பீய கரச்சி மூஞ்சில ஊத்திடுவேன்''னு சொல்லனும். அப்டி கேட்டா பேய் ஒடிடும். அதுக்கும் மசியலன்னா ஓடாம நின்னுக்கினு நம்பள சுத்தி மூத்திரம் பேஞ்சிக்கனும். ஏன்னா மூத்திரத்த தாண்டி பேய் உள்ள வராது.


அதோட முடிஞ்சிடுச்சா பிரச்சினைன்னா இல்ல. பனம்பழம் ஒன்னும் ரோட்ல கடக்காது. மரத்த சுத்தி நெறைய பொதருங்க இருக்கும். பொதரு இருந்தா கண்டிப்பா அதுல பாம்பு இருக்கனுமே. பயந்தா ஆவுமா? பனம்பழம் அதுலதானே கடக்கும். கைல வச்சிங்கிற கொம்பால தட்டிப் பாத்து, பழம் இருந்ததுனா எடுத்துக்குவோம்.


இப்பிடித்தான் ஒரு நாளு, பாலாஜி கொட்டாவுல ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு, நடு ராத்திரிலேயே போய் பனந்தோப்ல படுத்துக்க்கினோம். திடீர்னு யாரோ பொரன்ற மாரி சத்தம் கேட்டுச்சி.


கண்ணத்தெறந்து பாத்தா, ''அன்னாத்த ஒர்த்தரு மரத்து மேல ஏறிக்கினு கீறேரு. அவுரு திட்டம் இன்னானா, அவுரா பனம்பழத்த புட்டு போட்டுட்டு யார்னா கீழ வந்து பொறுக்குனாங்கனா ஒரே அமுக்கா அமுக்கிற்ரது.''
நல்ல வேள! பாத்துட்டோம். கழிசல் புடுங்கிச்சு எங்களுக்கு. புடிச்சம்ப஑ரு... ஓட்டம். ஓட்டம்னா, அப்பிடி ஒரு ஓட்டம். நேரா ஊடு வந்து சேந்துட்டோம்.


எங்க மேல தொடந்து வர்ற பேயி ஊட்டு உள்ள பூராம இருக்கிறதுக்கு செருப்பும், தொடப்பக்கட்டயும் சேத்துக்கட்டி ஊட்டு வாசல்ல தொங்க உட்ருவோம். குடுகுடுப்புகாரங்கிட்ட தாயத்து கட்டி, விபூதி குங்குமம்லாம் பாக்கெட்ல வச்சிகினுதான் மறுநாள்ல இருந்து பனம்பழத்துக்கு போறது.

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

படத்தைப் பார்த்ததுமே தொண்டை அடைச்சுக்கிச்சு. தொடர்ந்து விடாப்படியாப் படிச்சு முடிச்சேன். பனையைப்பற்றி அப்பப்ப அங்கங்க வாய்ப்புக்கிடைக்கிறப்பல்லாம் பெனாத்திக்கிட்டிருக்கிற அளவு பனை பிடிக்கும். சமீபத்தில் எழுதினது இது.
http://mathy.kandasamy.net/musings/2006/12/01/582


பனம்பழம் பொறுக்கிறதுக்கு ஏன் இரவில போகணும்? புரியல.

-மதி

வரவனையான் said...

ம்ம் பழச கிளறி விட்டுடிங்கள், பனம்பழ சுவை உடலின் எந்த செல்லில் சேமித்து வைத்து இருக்கிறது என தெரியவில்லை. உடனே நினைவிற்கு வருகிறது.

நான் பழம் பொறுக்க போன போது "வெளிக்கு" போக வந்த அக்காமார்கள் துரத்த ஓடி வந்ததும் நினைவுக்கு வருகிறது. ஹிஹி

ம்ம்ம் இப்பல்லாம் நாடாரு தோப்புக்கு சாயங்காலம்தான் போறது.....

உள்ள கிடக்கும் வண்டு, பூச்சியை எடுத்து போட்டு அப்படியே ஒரே இழுதான்

வீட்டுக்கு வந்து சட்டி சோறு சாப்பிட்டு படுத்தா பொணம் கணக்கா தூங்கவேண்டியதுதான். உங்க தாத்தனை போலவே குடிக்கிறடா , பழனிச்சாமி ஆத்தா கமெண்ட் வேற குடுக்கும்

திங்கள் சத்யா said...

பகல்ல பனம்பழம் பொருக்குனா இலங்கைல வேண்டுமானா உட்ருவாங்க மதி. தமிழ் நாட்ல தொடப்பக்கட்ட அடிதான் உழும். அதுகூட பரவால்ல. எங்கூர் பொம்பளங்க கேப்பாங்க பாரு கேழி [கெட்ட வார்த்தை, வசவு மொழிகள், பாலுறுப்புகளை சொற்களில் கலந்து வீசுதல்] காது கிழிஞ்சிறும்.

ஏன்னா யாரும் சொந்த தோட்டத்தில் பனம்பழம் பொருக்க மாட்டோம். ஊராமூட்டு தோட்டம் இன்றதால ராத்திரில தான் பொருக்க முடியும்.

******************************************************************

''சட்டி சோறு'' செந்தில் சாருக்கு வணக்கங்கள் நிறைய. எங்கூர்லயும் ஒருத்த்ர் பேரு சட்டிசோறு தான். பனை மரத்துல கள்ளு எறக்குறதுதான் அவரோட தொழில். சகட்டு மேனிக்கு சின்னதிலர்ந்து பெரிசு வரக்கும் அவரை சட்டிசோறு'ன்னு தான் கூப்பிடும்.

பொம்பளங்க யார்னா அவரை சட்டிசோறு'ன்னு கூப்பிட்டா போதும். ''ஆமா, நாங் சட்டி... நீ சோறு. வா! மறவா [மறைவாக] போயி துண்ட்டு வருவோம்'''னு தான் பதில் சொல்வாரு. இந்த வார்த்தைங்கள எங்கூர்ல யாரும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க.


பாலா @ திங்கள் சத்யா