Wednesday, November 15, 2006

மரணம் மகிழ்ச்சியானது


தமிழகத்தின் ஒரே குழந்தைகள் நாடகக் கலைஞரான வெலு சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது என் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடிந்தது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணங்கள் நிரம்பியது அந்த நாட்க்கள்.

கைக்காசுக்கு செலவு வேண்டி பட்டாம்பூச்சிகளைப் பிடித்து புதைத்தது, கண்ணில் ரத்த சோகையைக் கண்டு காக்கைகளைச் சுட்டுத் தின்றது, ''முருகருக்கு மூத்திரமா பேய்ஞ்சு குடுக்கிற?'' என்று ஓனான்களை கல்லெறிந்து கொன்றது, ''தூண்டி போட்டா எப்பப்பாரு தவுக்ள வந்து மாட்டிக்கிது'' என்று அடித்துக் கொன்றது என அது ஒரு கொலைகாரப் பருவமாகவே இருந்துள்ளது.

வேலு சரவணனிடம் கேட்டேன், ''குழந்தைப் பருவம் எப்படிப்பட்டது?''

''அழகழகான, அதிசயம் நிறைந்த, கனவுகளோடு கூடிய மகிழ்ச்சியான பருவமது. மரணத்தைக்கூட மகிழ்ச்சியாக்கி விளையாடுவதென்பது அவர்களால் மட்டுமெ முடியும். பக்கத்துல ஒரு சாவு விழுந்திருக்கும், ஆனா பசங்க அதையே வெளையாடிப் பாப்பாங்க'' என்கிறார்.

நிணைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்களில் சாவுகளையும் அதனோடு கூடிய ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா... த்தரரா! தினுக்கு, தினுக்குத் தித்தா'' என்கிற மேளச்சத்தம் எங்கள் நாடி நரம்புகளை முருக்கேற்றி ஆடவைக்கும். ''ஆடி மகிழலாம், அழுது மகிழ்வது எப்படி?'' அதுக்குத்தான் ஒணானும் தவுக்களையும் இருக்கே!

ஒரு நாலைந்து பேர் கூடிக்கொண்டு நிறைய கற்களை பொறுக்கிக் கொள்வோம். சில பையன்கள் தென்னை ஓலையை சுருக்குப் போட்டு மரத்தில் ஏறி ஓணான் பிடிப்பார்கள். நாங்கள் கற்களை எடுத்துக்கொண்டு மரம் மரமாக சுற்றி வருவோம்.

கற்களைக் கொண்டு எவ்வளவுதான் அடிச்சாலும் இந்த சனியம் புடிச்ச ஓணான்கள் ஓடவே ஓடாது. இதன் காரணமாகவே ஒவ்வொன்றாய் அடிபட்டு விழும். ''வாப்பா... முருகருக்கு மூத்திரமா பேஞ்சு குடுத்த? இந்தா சாவு''ன்னு சொல்லி மீண்டும் அடிப்போம்.

''டேய் அனில்லாம் அடிக்கக்கூடாதுடா! ஏன்னா அதுதான் முருகருக்கு தண்ணி தாகம் எடுத்தப்போ... எள்னீர் பெற்ச்சி குட்த்துதாம்'' என்று ஓனானை சாகடிப்பதற்கான காரணத்தைக் கூறிக்கொள்வோம். மரப் பொந்துகளிலும், ஓலைகள், தண்ணீர் வற்றிய குட்டைகளிலிருந்தும் தவளைகளைப் பிடித்து கொன்று வருவோம்.

இப்பொழுது சாவு, களை கட்டிவிடும். அலுமினியத் தட்டுக்கள், தகர டப்பாக்கள், மாட்டுத் தோலிலிருந்து நாங்களே செய்த மேளம் இவற்றைக் கொண்டு ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா, த்தரரா தினுக்கு, தினுக்கு தித்தா''தான்.

நாங்கள்லாம் கூத்தாடுவோம், பொம்பள புள்ளங்கலாம் ''கட்டியாலா புட்டியாலா'' சொல்லி ஒப்பாரி வெப்பாங்க.
தென்ன ஓலைல பாடகட்டி அப்டியே மோளம் அடிச்சிகினும், கூத்தாடிகினும் எங்கூட்டு பக்கத்லகிற செம்மன் பள்ளத்தாண்ட எடுத்துனுபூடுவோம்.

''ஏ... பொணத்த எறக்குற மோளத்த அட்றா''ன்னு சொன்ன ஒட்னே ''ஜென்,ஜென்,ஜென்,ஜென்''னு ஒத்தஅடி அடிப்பானுங்க. மெதுவா எறக்கி அவுங்கள அடக்கம் பன்னிட்டு, மறுநாள் மொறையா போய் அவுங்களுக்கு பாலும் ஊத்திட்டு வருவோம்.

குழந்தைகள் சூது, வாது அறியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.கற்பனைதான் படைப்பாற்றலின் அடிப்படை.

வேலு சரவணன் சொல்கிறார் ''குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்கள் விழுந்து எழுந்திருப்பார்கள். மரத்திலிருந்து விழுவதால் பூக்களுக்கு வலிப்பதில்லை.''

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்கள் விழுந்து எழுந்திருப்பார்கள். மரத்திலிருந்து விழுவதால் பூக்களுக்கு வலிப்பதில்லை//

மெல்லிய புன்னகை தவழ இந்த வரிகளைப் படித்து முடித்தேன். இன்று தான் உங்கள் பதிவைக் கண்டேன். ஒன்று விடாமல் எல்லா இடுகைகளையும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த ஓணான் படம் நீங்கள் எடுத்ததா? உங்கள் பதிவில் உள்ள எல்லா புகைப்படங்களும் அருமையாக வந்திருக்கின்றன.

லேகா said...

சத்யா உங்களின் பதிவுகள் யாவும் இயந்திர உலகின் போக்கில் தன்னை கொண்டு செலுத்தும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது!!நான் நீண்ட நாள் தேடி கொண்டிருக்கும் பதிவுகளை,விமர்சனங்களை,உரையாடல்களை கொண்டுள்ளது உங்கள் பதிவு..வாழ்த்துக்கள் முதலில்..மிக உருப்படியான தேவை மிகுந்த வலைத்தளம்..

வேலு சரவணன் குறித்து இலக்கிய இதழ்களில் படித்து இருந்கின்றேன்..மக்கள் தொலைகாட்சியில் அவரது நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்திருக்கிறேன்...இக்கால குழைந்தகளின் நிலை பெரும் அவலம்..தாய் மார்கள் அழுகை தொடர்களில் மூழ்கிவிட இவர்கள் கணினியோடும்,எந்திர பொம்மைகளோடும் பொழுதை கழிக்கின்றனர்..குழந்தை பருவத்தை உண்மையாய் கொண்டாடுபவர்கள் கிராமத்து சிறுவர்களே..இன்றும் எங்கள் கிராம குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து பாண்டி, நொண்டி,கண்ணாமூச்சி,தாயம்,பல்லாங்குழி........என உற்சாகத்தோடு பொழுதை போக்கி மீத நேரங்களில் பாட்டிமார்களிடம் கதை கேட்டு உறங்குகின்றன..நகர குழந்தைகள் இபொழுது இருந்தே எந்திரங்களாக பயிற்றுவிக்கபடுகின்றன..