Friday, February 29, 2008

ஒரு ரூபா கொடுத்தா ஆடிக்கிட்டே இருப்பேன் ‍‍-ஸ்நேக் சாந்தி.


சின்னக் கம்மல், சிம்பிளான குர்தா ஜீன்ஸ் என்று காட்சியளிக்கிற சாந்தி ஸ்டில் கேமிராவைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். "என்னங்க இது! ஒரு டான்ஸ் மாஸ்டர், எல்லா நடிகர்களையும் ஆடவெச்சே பென்டெடுக்கிற ஆடல் மெக்கானிக். நீங்க பார்க்காத கேமிராவா?' என்றால், "அய்யய்யோ! அது வேற, இது வேறங்க' என்று சிரிக்கிறார்.


'மெட்டி ஒலி' சாந்தியை மறக்க முடியுமா என்ன? முதல் ஆறு மாதங்கள் அந்தப் பாடலை வைத்துத் தான் மெட்டி ஒலியே ஹிட்டானது. பெரிதாகக் குடும்பப் பின்னணியோ, முறையான நடனப் பயிற்சியோ இல்லாமல் இன்று சினிமா உலகில் ஒரு திறமையான நடன இயக்குந‌ராக உயர்ந்திருக்கிற சாந்திக்கு, இப்போது அவரே வைத்துக் கொண்ட பெயர் லக்ஷன்யா'. சினிமா, விளம்பரம்'னு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவரை ஓய்வு நாள் ஒன்றில் சந்தித்தேன்.


"இந்த டிரஸ் கலர் கொஞ்சம் டல்லா இருக்கு. போட்டோவுக்காக ஒரு கலர்ஃபுல் டிரஸ் போட்டுட்டு வாங்களேன்" என்றால் "இது ஒன்னு தாங்க இருக்கு. வேற டிரெஸ் இல்லைங்க" என்கிறார் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக. அழகா தெரியணும்னு ஆசையில்ல போலிருக்கு. சரி! உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்திச் சொல்லுங்க?"


"கரடி பொம்மை, பிள்ளையார் பொம்மை , மீன் குழம்பு இதெல்லாம் பிடிக்கும். அப்புறம் குழந்தைங்க, ரஜினி, இளையராஜா பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஜீன்ஸ், டாப்ஸ், கலர் கலரா புடவைகள் அப்படீன்னு ஷாப்பிங் பண்றது ரொம்ப, ரொம்ப பிடிக்கும் . என்னை ஒரு டிரஸ் பைத்தியம்னே சொல்லலாம். அந்தளவுக்கு சளைக்காம ஷாப்பிங் பண்ணுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்னு பார்த்தா பொய் சொல்றது சுத்தமாப் பிடிக்காது. யாராவது பொய் சொன்னா சட்டுனு கோபம் வந்துடும்" என்றபடியே என்னை ஒரு முறை, முறைத்தார்.


"ஆஹா... நீங்க தானா அது? எனக் கேட்டுக்கொண்டே... இப்பதான் சொன்னீங்க. எனக்கு பொய் சொல்றதே பிடிக்காதுன்னு. ஆனா, எங்கிட்ட வேற கலர் டிரஸ் இல்லைன்னு சொன்னது பொய் தானே? என்று வகையாய் மடக்கினேன்.
அப்போ அவர் மூஞ்சியைப் பார்க்கனுமே. சிரித்த சிரிப்பும், பட்ட வெட்கமும். அடேங்கப்பா! ஒரு திரைப்படமே எடுக்கலாம். அத்தனை ஆக்க்ஷஷ‌ன்கள். சட்டென சுதாரித்துக்கொண்டு சொல்கிறார்


"சாரி! சுத்தமா தூக்கமே இல்லையா. கண்ணெல்லாம் எரியுது. டிரெஸ் மாத்த கஷ்டப்பட்டுக்கிட்டு அப்படி சொன்னேன். நான் சொன்னது இந்த மாதிரி சின்னச் சின்னப் பொய் கிடையாதுங்க‌. நம்பிக்கை துரோகம் பண்ற மாதிரி, அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி பெரிய பொய்களைச் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். யாருக்கும் எந்த பாதிப்புமில்லாத சிம்பிள் பொய்யெல்லாம் கணக்குல சேர்க்காதீங்க".


சொல்லுங்க சாந்தி. நீங்க எப்படி டான்சர், டான்ஸ் மாஸ்டர் ஆனீங்க?

"சின்ன வயசுலர்ந்தே டான்ஸ்னா எனக்கு உயிருங்க. ஒரு ரூபா குடுத்தா போதும். நாம்பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பேன். அப்டியே ஸ்கூல் போனேனா... அங்க, ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடி நிறைய பிரைஸ் வாங்கினேன். இன்னைக்கி நான் டான்ஸ் மாஸ்டரா ஆனாலும், இதுவரை எங்கேயும் போய் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டதில்ல. நானா ஆடிப் பழகிட்டதுதான். நாங்க சாதாரண குடும்பம். அக்கா ஏற்கனவே சினிமாவில டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க. குடும்பத்துக்கு உதவி பண்றதுக்காகத்தான் நான் சினிமாவுல டான்சரா சேர்ந்தேன்.


ஆரம்பத்துல சாதாரண குரூப் டான்சரா இருந்து படிப்படியா அசிஸ்டென்ட் ஆனேன். பதினஞ்சு வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். தருண், பிரகாஷ்,பிரபு தேவா, கல்யாண், பிருந்தா இப்படி பல மாஸ்டர்களிடம் ஒர்க் பண்ணியிருக்கேன். நான் ரொம்ப உயரம்ங்கறதால(எங்க ஊர்லகூட 'எட்டடி'ன்னு ஒருத்தர் இருக்காரு) என்னதான் நல்லா ஆடினாலும் பின் வரிசையிலதான் நிக்க வைப்பாங்க. அப்பெல்லாம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். பிரபுதேவா மாஸ்டர் தான் உயரம் குள்ளம், குண்டு‍‍‍‍‍ ஒல்லின்னு எல்லாம் பார்க்க மாட்டாரு. அவருக்கு ஃபெர்பாமன்ஸ்தான் முக்கியம். அவரும், பிருந்தா மாஸ்டரும்தான் என்னை முன் வரிசைல நிக்க வச்சு வாய்ப்புக் கொடுத்தவங்க" என்று தான் சினிமாவுக்குள் நுழைந்த‌ க‌தையை விள‌க்கினார்.


மெட்டி ஒலி சாந்தின்னா சின்னக் குழந்தைங்கள்ல இருந்து என்பது வயது பெருசுகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை பிரவேசம் எப்படியிருந்தது?


"உண்மை தான். டி.வி. பார்க்கிற 'அ முதல் ஃ' வரையிலான அத்தனை பேரும் எனது மெட்டி ஒலி டான்சை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை பல முறை நான் நேர்ல உணர்ந்திருக்கேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் ஒரே பாட்டுல இடம் பிடிச்சிருக்கேன்னா அதுக்கு திருமுருகன் சார்தான் காரணம். மெட்டி ஒலிக்கு முதலில் ஒரு குரூப் டான்சராகத்தான் கூப்பிட்டிருந்தங்க. திருமுருகன் சார் என்னோட ரசிகர். அதனால என்னையே அந்தப் பாட்டுக்கு மெயின் டான்ஸ் பண்ணச் சொன்னார். ஒரு சூப்பரான காஸ்டியூமோ, மேக்கப்போ இல்லாம திடீர்னுதான் அந்த பாடலை செஞ்சு முடிச்சோம். அது இந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகும்னு நெனச்சே பாக்கல. அந்தப் பாடல் வெளியான பிறகு ஏகப்பட்ட ஃபோன் கால்ஸ், பாராட்டுக்கள். மெட்டி ஒலி சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட்லாம் தினம் வர்ராங்களோ இல்லையோ, ஆனா கண்டிப்பா நான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கரெக்டா ஒன்பது மணிக்கு வந்துருவேன். நான் போட்டிருக்கிற மணி, கம்மல், சேலை என்று சகலத்தையும் ஒண்ணு விடாமல் மக்கள் ரசித்தார்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.


இதைவிட ஒரு முக்கியமான விஷயம். கோடியில ஒருத்தருக்குக் கூட இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். நாலு வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு சாந்திக்கு பதிலா நான் செத்துப் போய்ட்டதா செய்தி பரவி பத்திரிகைலகூட நியூஸ் வந்திருச்சி. ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா... துக்கம் விசாரிக்கறதுக்கு ஊர்ல இருந்தெல்லாம் சொந்தக்காரங்க வந்திருக்காங்க. என்னை உயிரோட பார்த்ததும் அவங்களுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.யூனிட்ல விஷயம் கேள்விப்ட்டு ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் பண்ணியிருக்காங்க. பீச் சைட்ல ஷூட்டிங் நடந்தப்போ மீன்காரப் பொம்பளங்கள்லாம் என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுதாங்க. ஷூட்டிங் முடிஞ்சு கார்ல வீட்டுக்குத் திரும்புக்கிட்டிருந்தா... கார் வேறெங்கியோ போகுது. என்னன்னு விசாரிச்சா டிரைவர் சொல்றாரு. 'ஒரே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து முகத்தை காட்டிட்டு போயிடுங்க மேடம். எம் பொண்டாட்டி நீங்க உயிரோட இருப்பதை நம்பாம அழுதுக்கிட்டிருக்கா' என்கிறார். லைட்மேன் ஒய்ஃப், என்னோட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் என்னை வந்து நேர்ல பாத்தப்புறம்தான் நம்பினாங்க. நான் செத்தப்புறம் எனக்காக யார், யார்லாம் அழுவாங்க என்கிற வாய்ப்பை கொடுத்ததுக்காக கடவுளுக்கும், சின்னத்திரைக்கும் நன்றி.


கதாநாயகி இருக்கும்போது தேவையே இல்லாமல் குரூப் டான்சர்களை செக்ஸியாகக் காட்டுவது தொடர்கிறதே! இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


கட்டிப் பிடித்துக் கொண்டோ, செக்ஸியாக உடை அணிந்து கொண்டோ செட்டுக்குள் ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இடுப்பைத் தழுவிக் கொண்டு ஆடும் பொழுது ஒன், டூ, த்ரீ, ஃபோர், கட்! என்பார்கள். ஷாட் முடிஞ்சிரும். ரசிகர்கள் நினைப்பது மாதிரி ரொமான்ஸ் மூடில் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க மாட்டோம். ராத்திரி எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சிருந்தாலும் காலைல நாலு மணிக்கு எழுப்பி விட்ருவாங்க. சரியானத் தூக்கம் இருக்காது. அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்ப கஷ்டம் இருக்கும். எப்ப வேலை முடியும், எப்ப வீட்டுக்குப் போகலாம்னுதான் காத்திருப்பாங்க. ஆனா இந்த மாதிரி காட்சிகளை அவுட்டோர் ஷூட்டிங்ல வச்சா ரசிகர்களால பிராப்ளம் வரும். வாய் வார்த்தைகளால ரொம்ப கேவலமா, மட்டரகமா கிண்டலடிச்சி எங்க மனசை நோகடிப்பாங்க.


வெளியில இருந்து பாக்கறவங்களுக்கு 'கலர், கலரா ட்ரெஸ் பண்ணிக்கிறாங்க, விதவிதமா நகை போட்டுக்கிறாங்க, அழகழகா மேக்அப் போட்டுக்கிறாங்க, ஜாலியான லைஃப்டா!'ன்னு தோணும். ஆனா நிஜம் அப்படியில்லை. காலைல இருந்து மாலை வரைக்கும் வெயில், மழைன்னு பாக்காம காலில் செருப்புக்கூட இல்லாமல் ஆடுவோம். கண்டக் கண்ட‌ இடங்களில் ஆடுவதால் உடம்பு முழுக்க காயங்கள், சிராய்ப்புகளோடு வாழும் ஒரு மெக்கானிக்கல் லைஃப் எங்களோடது. ஆனா, இந்த வலி அத்தனையும் எங்களை ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப போயிடும்.


பெரிய நட்சத்திரங்களுக்கே திருமண வாழ்க்கை என்பது திருப்திகரமாக அமைவதில்லை. அப்படியிருக்கையில் டான்சர்களின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது?


நிறைய பேர் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். பெரும்பாலும் டான்சர்கள் இன்னொரு டான்சரையே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. ஒரு அரசு நிறுவனத்துலயோ, தனியார் நிறுவனத்துலயோ வேலை பார்க்கிறவங்க எப்படிப்பட்ட ஃபிராடாக இருந்தாலும் வெளில தெரியாது. நடிக்க வந்துவிட்டோம் என்ற காரணத்தினாலயே எங்களைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஒரு ஹீரோயின் கல்யாணத்திற்குப் பின் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்க்கிற மனநிலை இங்க இல்லை.

முதன் முதலா எந்தப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சீங்க.அடுத்த‌டுத்த‌ உங்க‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு லிஸ்ட் போடுங்க‌ளேன்?

சரத்குமார் சாரோட கம்பீரம் படம் தான் நான் மாஸ்டரா ஒர்க் பண்ண முதல் படம். நினைவிருக்கும் வரை படத்துல "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..." பாட்டுல பிரபுதேவா சார் தான் எனக்கு தனி பிட் கொடுத்து முதல் முதல்ல ஸ்கிரீன்ல காட்டினது. தமிழ்,ஹிந்தி ரெண்டுத்துலயும் ஆய்த எழுத்து, பேரழகன், கணாக் கண்டேன், திருட்டுப் பயலே, வெயில், நான் அவனில்லை என்று இதுவரை 120 பாடல்களுக்கு மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கேன். மஞ்சள் வெயில், தூவானம், அம்முவாகிய நான், ராமேஸ்வரம்'னு இப்போ செஞ்சு முடிச்சப் படங்களும் நிறைய இருக்கு. போதுமா இன்னும் பட்டியல் வேணுமா? என்று சாந்தி கேட்ட‌தும் மூட்டை முடிச்சுக்க‌ளோடு என் வீடு நோக்கிப் ப‌ய‌ண‌மானேன்.

குறிப்பு:
இப்ப‌டி ஒரே நாளில் எனக்கு திக் ஃபிர‌ண்ட் ஆனார் சாந்தி. அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் அவ‌ரை நான் எடுத்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ள். அடுத்த‌ சில‌ நாட்க‌ளில் எத‌ற்காக‌வோ சாந்திக்கு போன் செயுத‌ நான், "ஹ‌லோ! ஸ்நேக் சாந்தி இருக்காங்க‌ளா?" என்றேன்(கிண்ட‌லுக்காக‌த்தான்). இந்த‌ப் பேர் சொல்லி யாராவ‌து கூப்டாங்க‌ன்னா என‌க்கு கெட்ட‌க் கோப‌ம் வ‌ரும். நீங்க‌ளா இருக்க‌வே சும்மா விடுறேன் என்றார்.

சில‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு...

ச‌ந்தியிட‌மிருந்து என‌க்கு போன் வ‌ந்த‌து. "சொல்லுங்க‌க்கா!" என்று ஒரே வார்த்தைதான் சொன்னேன். "யார்கிட்டப் பேசுறோம்னு கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க ! இதெல்லாம் எனக்குப் பிடிக்காது" என்று ச‌ற்றே டென்ஷ‌னுட‌ன் பதில் சொன்னார் ல‌க்ஷ‌ண்யா என்கிற‌ சாந்தி.

அப்ப‌டியென்ன‌டா த‌வ‌றா பேசிட்டோம? என்று என்னை நானே நொந்து கொண்டேன். சாந்தியைப் புண்ப‌டுத்த‌ வேண்டுமென்ற‌ நோக்க‌த்தோடு நான் பேச‌வில்லை. த‌ன் க‌டின‌ உழைப்பால் இந்த‌ நிலைக்கு உய‌ர்ந்த‌ சாந்தியின் மீது நான் மிகுந்த‌ ம‌ரியாதை வைத்திருந்தேன்.

சினிமா உல‌கில் போலியான‌ ம‌ரியாதைக‌ளைப் பார்த்துச் சாந்தி ப‌ழ‌கிப்போயிருப்பார். அவ‌ரோடு பேசிக்கொண்டிருக்கும்போது க‌னிமொழி.எம்.பி.யைப் ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து. "க‌னிமொழியா? யார் அது" என்று கேட்டார் அப்பாவியாக. "கிட்டத்தட்ட நான் போகாத நாடுகளே இல்லை" என்று சொன்ன சாந்தி, உல‌கைப் புரிந்து வைத்திருப்ப‌து இப்படித்தான். என்னையும் அப்படி புரிந்துகொண்டிருக்கக்கூடும்.

குறிப்பு இரண்டு:

இதே போல் என்னிடம், "யார்கிட்டப் பேசுறோம்ங்கிறதை தெரிஞ்சிட்டுப் பேசுங்க!" என்று டென்ஷன் ஏற்றியது இசைஞானி குடும்பத்துப் பெண் வாரிசு ஒன்று. அதை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தபோது "சீக்கிரம், சீக்கிரம்" என்று அவசரப்படுத்தியது.

"ஏங்க! நீங்களும் போட்டோ கொடுக்க மாட்டேன்றீங்க, நான் எடுத்தாலும் அவசரப்படுத்துறீங்க. நல்ல போட்டோவா எடுத்துத் தர்றேன். இதுதான் சான்ஸ் உங்களுக்கு" என்றேன்.

அவரிடம் தனது போட்டோவே இல்லை. அந்தளவுக்கு பிஸியான ஆளாம். எனவே, இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்குங்க" என்ற நோக்கில் ஃபிரண்ட்லியாக இப்படிச் சொல்லிவிட்டேன்.

மேடம் பயங்கற டென்ஷன் ஆகிட்டாங்க. "யாரைப் பார்த்து அப்படிச் சொல்றீங்க? ஒரு போன் பண்ணா போதும். ஆயிரம் போட்டோகிராபர்கள் வந்து கியூவில நிப்பாங்க. எப்படிப்பட்ட ஃபேமிலிகிட்ட பேசிக்கிட்டிருக்கிறோம்ங்கிறதை நினைப்புல வச்சுக்குங்க. உங்க இஷ்டத்துக்கு என்னவேணா பேசாதீங்க" என்று ஏகக்கடுப்பாகி பேசினார்.

அது இசைஞானி குடும்பத்து வாரிசு என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் அதன் மீதும் மரியாதையோடுதான் நடந்து கொண்டேன். பெரும்பாலும் எந்தப் பெண்களையுமே நான் உதாசீனப்படுத்துவதில்லை. ஆனால், இப்படிப்பட்டதுகள் பன்ற பந்தா இருக்கே! ...... சரி, விட்றுவோம்.

நம்புறீங்களோ, இல்லையோ! இயக்குநர் சிகரத்தை ஒரு முறை சந்திக்கச் சென்றிருந்தேன். எவ்வளவு தன்னடக்கம, பழகும் தன்மை, என்ன கேட்டாலும் கோபப்படாமல் பதில் என்று மனிதர் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்.

Monday, February 25, 2008

"ஈகோவைச் சீண்டிப் பார்க்காதீர்கள்!" தீபா வெங்கட்.


ஒரு ஐந்து நிமிடங்கள் தீபா வெங்கட்'டுடன் பேச நேர்ந்திருந்தால் நிச்சயமாக சிவாஜி படத்தில் ஸ்ரேயாவைத் தேடிப் போயிருக்க மாட்டார் ரஜினி. பழகுவதற்கு அத்தனை இனிமையாக இருக்கிறார் தீபா வெங்கட். "யாருடைய ஈகோவையும் ஸ்பாயில் பண்ணுவது மாதிரியான நடவடிக்கைகளில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை. எல்லோருடனும் ஃபிரண்ட்லியாக இருக்கவே விரும்புகிறேன், அப்படியே நடந்து கொள்கிறேன்'' என்கிறார். பேசும் போது அதை உணர முடிந்தது. பார்க்க பளிச்சென்று முதல் பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறவரிடம் எல்லாமே பர்ஃபெக்ட் ஆக இருக்கிறது.

பெண்கள் கற்றுக் கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன தீபா வெங்கட்'டிடம். அளவான மற்றும் அழகான மேக்கப், அதற்கேற்ற உடைகள், வண்ணங்கள். அணிகலன்கள் என்று பாத்தோமானால் ""அணிந்திருக்கும் சேலை அதற்கேற்ற மாலை'' என்று அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது. "எப்படிங்க இதெல்லாம்?" என்றால், "தங்களைத் தாங்களே அழகு படுத்திக் கொள்வதென்பதும் ஒரு கலைதான். நம்மை நாமே ரசிப்பதும் ஒரு சந்தோஷமான விஷயம். கண்ணில் மெல்லியதாக‌ மை விடுவதற்குக்கூட மெனெக்கட வேண்டியிருக்கிறதே! ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள். இங்கே அறிமுகம் இல்லாதவர்களிடம் ஆடை தான் நம்மைத் தீர்மாணிக்கும் சக்தியாக விளங்குகிறது.

அதனால் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது வாழ்க்கையில் தவிற்க முடியாத ஒரு விஷயம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மனசு தான் அழகைத் தீர்மாணிக்கிறது என்பதே உண்மை. மனசு சந்தோஷமாக இருக்கிற போது அது முகத்திலும் வெளிப்பட்டு மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. எப்போது உடலும் மனசும் சந்தோஷமாக இருக்கிறதோ அப்போது இந்த உலகமே சந்தோஷமானதாக மாறிவிடுகிறது'' என்கிறவர்,

"உடைகளைப் பொறுத்த வரை ரொம்ப ஃபேஷனாவும் இல்லாம, ரொம்பப் பட்டிக்காடாகவும் இல்லாம கரெக்டா இருக்கேன்னு நம்புறேன். ஜீன்ஸ் போட்டாலும் கிளாமர் ஓவராகாமல் பார்த்துக் கொள்கிறேன். ப்ராக்டிகலான சில விஷயங்கள்'னு பார்த்தா முன்னாடி எனக்கு முகத்துல பருக்கள் வந்து தொல்லை கொடுத்தது. ரெண்டே மாசம் ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செஞ்சதுல உடம்பில் ஆக்ஸிஜன் கூடி பருக்கள் சுத்தமாக மறைந்து சருமம் நல்ல பளபளப்பு ஆகியிருக்கு. டாக்டர் எழுதிக் கொடுத்த மெடிகேட்டட் சோப்'பை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரே வரியைல சொல்லணும்னா "ஐ லவ் மைசெல்ஃப்'. இது தான் என் அழகின் ரகசியம்'' என்கிறார்.

நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? படிக்கையில் என்னவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது?

ரோம்ப சின்ன வயசிலயே எனக்கு நடிப்பின் மீது ஆசை வந்துவிட்டது. அது எந்த வயசுன்னு கூட ஞாபகமில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலேயும் ஸ்கூல் நாடகங்களில் கலந்து கொள்வதை தவறவிட்டதே இல்லை. இந்த பயிற்சி தான் கே.பி. சாரின் டி.வி. சீரியலுக்குள் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும் போதே நடிக்க வந்துவிட்டாலும் பரீட்சையில் நான் கோட்டைவிட்டதில்லை. படிக்கக் கிடைக்கும் நேரம், மற்ற மாணவர்களை விட எனக்கு மிகவும் குறைவு என்பதால் அதிக அக்கறையுடன் படித்தேன். +2வில் 75% மார்க் வாங்கியதைப் பார்த்து பிரின்சிபல் என்னைப் பாராட்டினாங்க.

ஒரு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகணும்'ங்கறது தான் என்னோட பள்ளிக்கூட ஆசையாக இருந்தது. அதனால நடிக்க வந்த பிறகும் நான் படிக்கத் தேர்ந்தெடுத்தது ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் தான். இப்போ அது என் அன்றாட வாழ்க்கைக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது. நாம் சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பொருட்களின் மீதான வரிவிகிதம் எப்படி இருக்கு, ஷேர் மார்க்கெட் நிலவரம் என்ன? என்கிற பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஸ்டாக் புரோக்கர்கிட்ட நீங்க போகணும்னா அவங்க பேசுவது அத்தனையும் எதோ புரியாத பாஷையாகவே இருக்கும். இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் சுலபமா அந்த விஷயங்களைக் கையாள முடிகிறது.
உங்களை ஊக்கப்படுத்துகிற விஷயமாகவும், சோர்வடையச் செய்கிற விஷயங்களாகவும் எதைக் கருதுகிறீர்கள்?

"எனக்குக் கலைமாமணி விருது கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். அதுவும் கலைஞர் கையால் வாங்கியது அதைவிட மகிழ்ச்சி. கலைஞர்கள் என்றில்லை, எல்லா மனிதர்களுக்குமே பாராட்டுதல் என்பது சந்தோஷமானதாகவே இருக்கிறது. பத்திரிகையில் பாராட்டிப் பேசும்போதோ, மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்து பேசும் போதோ யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அப்படித்தான் நானும்.

அனால் நம்மைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் நிச்சயம் மனசு வருத்தப்படத் தான் செய்யும். அத‌னால் வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லை. விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படுகிற விஷயங்களை என் வளர்ச்சிக்கானதாக நான் மாற்றிக் கொள்கிறேன். மொத்தத்தில் என் எல்லையை உணர்ந்து பயணம் செய்கிறேன். நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நல்லா நடிச்சிருக்கேன்னு நீங்க எவ்வளவு பாராட்டினாலும் கர்வப்பட மாட்டேன். பந்தாவா இருக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம்'' என்கிறார். விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லனும்னா தமிழ்ல தீபா வெங்கட்டுக்கு பிடிக்காத வார்த்தை "பந்தா...''

தீபா சொல்லும் 2 நீதிகள்:
1. பளிச்சென மேக்கப் பளிச்சென மேக்கப் செய்து கொண்டிருப்பவர்களை அலட்டல் பார்ட்டிகள் என்று எண்ண வேண்டாம். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிற விஷயம்.
2. அடுத்தவர்களின் ஈகோவை சீண்டிப் பார்க்கும் போது தான் வெறுப்புக்கு ஆளாகிறோம். எனவே எல்லாரிடத்திலும் நட்பாகப் பழகுங்கள்.