Friday, April 6, 2007

சர்க் புர்க் கொட்டையான் கதை!


ஒரு ஊர்ல ''கொட்டையான், கொட்டையான்''னு ஒருத்தன் இருந்தானாம். “யாங் அவம் பேரு கொட்டையான்”னு கேளுங்க.

ஹி...ஹி...ஏன்னா? அவனுக்கு கொட்ட, ரொம்பப் பெருசா இருக்குமாம். செரி, கதைய கேளுங்க.

கொட்டையான பாத்து யார்னா ''கொட்டையான்''னு கூப்பிட்டா அவனுக்கு பயங்கர கோவம் வருமாம். ஒரு நாள் இதுமேர்த்தான், இவம் கழினில ஏர் உழுதுகினு இருந்தானாம். இவம் பொண்டாட்டி இவுனுக்கு கஞ்சி எடுத்தாந்து கிறா.

கஞ்சி எடுத்தாந்தவ, கழினில கால் வெக்க பால்மாறிக்கினு [சோம்பேறித்தனம்] மோட்டு [மேடு] மேலயே நின்னுக்கினு ''யோவ் மச்சாங்... யோவ் மச்சாங்...''ன்னு கூப்ட்டுகிறா.

அந்தக் கழுதக்கி காது கேக்கல போல கீது. இவ கூப்ட்டு கூப்ட்டு பாத்து எரிச்சலாயிட்டு, ''யோவ் கொட்டையான்! இந்தாயா கஞ்சி யெடுத்தாந்து கீறம்''ன்னு சொல்லிக்கிறா.

அது இவம் காதுல உழுந்துட்டுது. வஞ்ச்சி பேரு ஆத்திரம்...

''கட்ன புருசனையே நீ கொட்டையான்னு கூப்புட்றயா''ன்னு சொல்லி வரப்பு மேல வச்சிருந்த கத்திய எடுத்து ஒரே வெட்டா வெட்டி பொண்டாட்டிய சாவடிச்சி போட்டான்.

அப்புறம் இன்னா பண்ணானாம்... மாட்ட[மாடு] அட்ச்சி, அட்ச்சி ஏர் உழுதுகிறாம். மாடு இன்னா பண்ணிக்கிது, வலி தாங்காத ''அம்மே கொட்டையான், அம்மே கொட்டையான்''ன்னு கத்திக்கிது.

''உனுக்கு இம்மாந் திமுரா? நீயும் ஒழிஞ்சி போ''ன்னு சொல்லி அதியும் வெட்டி சாவடிச்சிட்டானாம்.

‘பொண்டாட்டியும் பூட்டா, மாடும் பூட்ச்சி. செரி மாட்டு தோலாவது இருக்கட்டுமே’னு தோல உரிச்சி எடுத்தும் போனானாம். யெங்கெங்கியோ அலஞ்சி பாத்துக்கிறாம். யெங்கியும் தோல விக்க முடியில. செர்தான்ட்டு தோல காயப்போட்டு மோளங்[மேளம்] கட்டிட்டாம். கட்ன மோளத்த எடுத்துனு வழி நெடுக்க அடிச்சிம் போனாராம் பாரு!

அது ''ஜென்..ஜென்..ஜாம், நாக்-நாக், ஜென்...ஜென்...ஜாம், நாக்-நாக்''னு சொல்றதுக்கு பதிலா ''ஜென்..ஜென்..ஜாங் கொட்டையான், ஜென்டு குட்டி கொட்டையான்''னு சொல்லிக்கிது.

“ங்கோத்தா... செத்தும் உனுக்கு திமுரு அடங்கலையா?”ன்னு சொல்லி மோளத்த குத்தி டாரா கிழிச்சிட்டானாம்.

கொட்டையானுக்கு ரொம்ப நாளா செருப்பு போட்டுக்கினு நடக்கனும்னு ஆச. பொண்டாட்டி, உண்டியில சேத்து வச்சிருந்த காசை எல்லாம் தொடச்சி எடுத்துனு போய், ஒரு புது செருப்பு வாங்கி போட்டுக்கினாராம்.

போட்டுக்கினு ரோட்டு மேல நடந்தும் போனார் பாருங்க! அந்த செருப்புகூட சும்மா இல்லியாம். அது இன்னான்னு சொல்லிச்சாம், ''சர்க்-புர்க் கொட்டையான், சர்க்-புர்க் கொட்டையான்''னு சொல்லிச்சாம்.

“இன்னாடா! இந்த செருப்புக்குகூட நம்பள கண்டா எளக்காரமா பூட்ச்சி”ன்ட்டு செருப்பையும் கண்டந் துண்டமா வெட்டி போட்டுட்டானாம்.

அப்புறம் எங்கெங்கியோ சுத்தி அலைஞ்சிட்டு சாய்ங்காலமா ஊட்டுக்குத் திரும்பி வந்தானாம். ஊட்ல பொண்டாட்டி இலாத்துனால அதது, அங்கங்க போட்டபிடி கடந்துகிது. கோழிய கவுக்க கூட ஆளில்ல.

“மொதல்ல, கோழிய புடிச்சி கூடைல கவுப்பம்”ன்னிட்டு போய் கோழிய புடிச்சானாம் பாருங்க! அது கூடவா அந்தமேறி கத்தும்?

''கொக்கரக்கோ கொட்டையான், கொக்கரக்கோ கொட்டையான்''
ன்னு கத்திக்கிது.

“ங்கொம்மால! சும்மா உட்ருவனா உன்ன?” ன்ட்டு, கோழிய வெட்டி கொழம்பு வச்சிட்டானாம். அப்பவும் பாருங்க சோதனைய! கொழம்பு இன்னான்னு கொதிக்குதாம்?

''கொத-கொதா கொட்டையான், கொத-கொதா கொட்டையான்''ன்னு
கொதிக்குதாம்.

இவனுக்கு ஆத்திரம் தாங்க முடியில. கொழம்பு சட்டிய தூக்கிப்போட்டு அடுப்பு மேலயே வச்சி ஒரே ஒடையா ஒடச்சிட்டானாம். ஒடஞ்டதும் சும்மா ஒடையல.

அதுல இருந்த கொழம்பு, ''சொய்ங்... கொட்டையான், சொய்ங்... கொட்டையான்''
னு ஒடஞ்சி கிது.

அடுப்ப எட்டி ஒரு ஒத உட்டுட்டு, உள்ள போய், பாயப் போட்னு படுத்தானாம். அந்நேரம் பாத்தா அவுனுக்கு குசு வரனும்? அதுவும் சும்மா வரல.

''பொய்ங்... கொட்டையான், பொய்ங்... கொட்டையான்''னு சொல்லிக்கினே வந்துக்கிது.

இவுருதான் பெரிய கோவக்கார்ராச்சே! எடுத்தாராம் அரிவாள! குசு உட்ட சூத்தப் புடிச்சி ஒரே அறுப்புத்தான். 'பர்ர்க்'கினு போட்டுக்க்கிச்சி.

அப்புறம் இன்னா? அவுரு சூத்த அவுரே கிழிச்சிக்கினு செத்துப்பூட்டாராம். இதாங் கொட்டையான் கத.


குறிப்பு: ''ங்கோத்தா, ங்கொம்மால'' என்று இரண்டு இடங்களில் கெட்ட வார்த்தை வருவதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். இந்தக் கதையை எனக்குச் சொன்னது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற வினோத் [என் அத்தைக்குப் பேரன்].

எங்கள் பகுதிகளில் கெட்ட வார்த்தையை மக்கள் கூச்ச நாச்சமின்றி வெகு இயல்பாகப் பேசுகிறார்கள்.

கதை நாயகன் ஒவ்வொரு கொலைக்கும், ஒரு கெட்ட வார்த்தை சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பான். அதையெல்லாம் இங்கே நான் பதிவு செய்யவில்லை. பிறந்த கிராமத்திற்குள் நுழைந்துவிட்டால், கெட்ட வார்த்தைகளைப் பேச நானும் கூச்சப்படுவதில்லை.

இது எங்கள் மண்ணின் இயல்பு. இந்த மொழிநடை உங்களுக்கு சிரமமாகத் தெரியலாம். இதுவும் என் மண்ணுக்கானது.

கெட்ட வார்த்தை பற்றிய உளவியலும் அரசியலும் சமூகக் கோபங்ககளைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே திகழ்கிறது.ல் இது பற்றி தனிப் பதிவுபோட முயற்சிக்கிறேன்.

Monday, April 2, 2007

இந்த கையால தான் சோறு அள்ளி துன்றோம்




தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றச் செயல்!



ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் இதைச் சொல்லித்தான் கல்வியை ஆரம்பிக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் 1950ல் சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஏதோ ஒரு சட்டப்படி அதே கொடுமை இன்று வரை ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டு தொடர்கிறது என்பதே கசப்பான [நாறிப்போன] உண்மை.
மனிதக் கழிவுகளை மனிதர்களை விட்டே அள்ளுகிற கொடுமை துப்புறவு பணியாளர்கள் என்கிற போர்வையில் சட்டப்படி தொடர்கிறது.



''இந்த குப்ப வண்டிக்காரனுங்களுக்கு ரொம்பக் கொழுப்பு. ஆபீஸ் போற நேரம் பாத்துத் தான் ரோட்ல திரியுவானுங்க. கவருமென்ட்டு உத்தியோகம் பாரு! அந்த தெனாவெட்டு. உவ்வே... நாத்தம் கொடலப் பொரட்டுது. வச்சி நாலு சாத்து சாத்துனாதான் புத்தி வரும். வேணும்னே தான் இப்படியெல்லாம் பண்றானுவோ!'' கோல்கேட் யூஸ் பண்ண வாயால் இதைவிட நாராசமாய் திட்டுகிற மனிதர்களும் உண்டு.



சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் குப்பை அள்ளப் போன ஊழியர்களுக்கும், மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சண்டை வந்து அடிதடியாகிவிட்டது. அடித்தவர்களை கைது செய்யக் கோரி துப்புறவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரியே நாறிப் போய்விட்டது.



மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடை கழிவுகளால் புதுச்சேரியின் ''WALL STREET'' ஆன நேரு வீதியிலும், காந்தி வீதியிலும் யாராலும் நடக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பின் ஒருவாறு பேச்சு வார்த்தை முடிந்து அன்று ஊழியர்கள் குப்பை அள்ளப் போகிறார்கள். அப்போது நான் ஒரு நாளிதழில் புகைப்படக்காரனாக பணி ஆற்றிக்கொண்டிருந்தேன் [அதைவிட பேசாம டீ ஆத்தப் போயிருந்திருக்கலாம்]. அதன் பொருட்டு அந்நிகழ்வை புகைப்படம் எடுக்கப் போகும் போதுதான் அந்த சித்திரவதையை நேரில் உணர முடிந்தது.



பந்தயம் கட்டிப் பீயைத் தின்று காசு வாங்கிய மனிதரை சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று நாட்பட்டுப்போன மாமிசக் கழிவுகளை வாரிச் சுத்தம் செய்தார்களே அந்த மனிதர்கள். கொடுமையடா சாமி. கர்சிப்பால் முகத்தை கட்டிக் கொண்டு, மூச்சை அடக்கிக் கொண்டு எவ்வளவோ முயன்றும் வாந்தி வந்துவிட்டது எனக்கு.



நாற்றம் என்றால் குடலைப் புரட்டி வாந்தி வருகிறது நமக்கு. அந்த நாற்றத்தோடு புறக்கணிக்கப்படுகிறது அம்மக்களின் வாழ்க்கை. கவர்மென்ட்டு வேலை என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களில் எத்தனையோ பேர் கான்ட்ராக்ட் அடிப்படையிலான தினக்கூலி ஊழியர்கள், இவர்களுக்கு எந்த பணிப் பாதுகாப்பும் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?



''ழான் குளோத்'' . புதுவை அரசின் கார்ப்பரேஷன் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளி குடும்பத்தை நடத்துகிறார். இத்தனைக்கும் இவரது குடும்பம் பிரெஞ்சு நேஷனாலிடி[தாத்தாவுக்கு] பெற்றுள்ளது. நாலெழுத்து படிக்கத்தெரியாத பேரனுக்கு நாற்றமடிக்கும் கழிவறைகளில் வேலை.



''அப்பா காப்ரேசன்ல கக்கூஸ் அள்ளினுதான் இருந்தேரு. அவுரு செத்தப்புறம் அந்த வேலைய ஏங்கிட்ட குடுத்தாங்க. ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமா இருந்திச்சி. நாத்தம் பொறுக்க முடியாம அன்னாடம் வாந்தியெடுத்துக்கினு தான் கெடந்தேன். அப்பறம் போவப் போவப் பழகிடுச்சி.



காவா அள்ளப் போனா! கக்கூஸ் மட்டுமில்லாம செத்துப்போன எலி, வீங்கி சதை பிஞ்சிபோற அளவுள நாயிங்க அல்லாம் கடக்கும். இது இன்னா பெருசு? இத்தவுட... ஆஸ்பிட்டல்ல இருந்து அபார்ஷன் ஆன கொழந்திங்க[கரு], அங்க நோயாளிங்களோட அல்லா கழிவுங்களையும் கையாலதான் வாரிப்போடுறோம். இதுக்கெல்லாம் மொகம் சுளிச்சிக்கிட்டிருந்தா யாரு நம்பள பாக்கப்போறா?



சாப்பாட்ட அள்ளி வாயில வச்சா போறும். அந்த கையால இன்னான்னாத்த அள்னமோ அதெல்லாம் நாபகத்துக்கு வரும். இப்பிடி ஒரு பொழப்பு வேணுமாடான்னு தோனும். இன்னா பண்றது சார்? பொண்டாட்டி புள்ளிங்களுக்கும் வாயி வயிறு இருக்குதில்ல'' கப்பென்ற சாராய வாடையுடன் கிட்ட வந்து பேசுகிறார் ழான் குளோத்.



''கோச்சிக்காத சார்! எங்கனா ஒரு எடத்துல அடச்சிக்கும். ஆனா ஊரு பூரா நாறிடும். மாசக்கணக்குல மனுஷன் சேத்துவெக்கிற அழுக்கு சார். கண்ணு, காது, வாயி, மூக்குலாம் கக்கூஸ் தண்ணி ஏறிடும். உள்ள முழுவி கையாலதான் அடச்சிங்கிறத எடுப்போம். உங்களாண்டஎப்பிடி சொல்றதுன்னு தெரில, செல சமயம் மம்ட்டி வச்சிகூட வெட்டுற அளவுல இருக்கும். எல்லாம் மணக்க மணக்க வாயல சாப்ட்டதுதான். வவுத்தால போவும் போது இப்பிடி ஆயிடுது.



அதான், ஒரு எம்.சி கோட்ற [மெக்டொவல் பிராந்தி] ஒடச்சமா உள்ள ஊத்தனுமான்னு எறங்கி வேல செஞ்சிடுவோம். யார் ஊட்டு காக்கூஸ்னா அடச்சிக்கிச்சின்னு வச்சிக்குங்க, வந்து கூப்புடுவாங்க. அப்பிடியே ரெண்டு கையாலயும் அள்ளி பக்கெட்ல போட்டு அத்த தலமேல தான் தூக்கியாருவோம். வரும்போது மேல பூறா ஒழுவும். இன்னா பன்றது நம்ப தலவிதி இதுன்னு ஆயிப்போச்சி. இன்னா ஆயிப்போச்சி ஆயிப்போச்சின்னு சொல்றேன்னு பாக்கிறியா? எல்லாம் ''ஆயி''ப்போற வேலதான... சொல்லிவிட்டு சிரிக்கிறார்.



''6,500 ரூபா சார் சம்பளம். வங்குன கடனுக்கு புடிப்பு போவ 450 ரூபாதான் கைல வரும். அத்த வச்சித்தான் குடும்பத்த ஓட்டுறேன். ஆனா எனக்கு மட்டும் தண்ணி செலவுக்கே ஒரு நாளைக்கி நூறு ரூபா ஆயிடும். திருப்பி கடன வாங்கு. இப்பிடித்தான் சார் வண்டி ஓடுது.



சரக்கடிச்சா சோறு எறங்க மாட்டுதா? ஒடம்பே வீணாப்போச்சி. பதிமூணு வருஷமா வேல செய்யிறேன் சார். மாசம் ஒரே ஒரு லைபாய் சோப்பு குடுப்பாங்க. அதான், அதோட ஒரு மழக்கோட்டு குடுத்துகிறாங்க. மருந்து மாத்திர, செக்கப்பு அது இதுன்னு எதுவுங் கெடெயேது. அவ்ளோ ஏன்? கைக்கு, மூஞ்சிக்கு கிளவ்சு எதுனா குடுப்பாங்களான்னு கேளாம்? ம்ஹூம்... ஒருஎழவும் இல்ல.



எனுக்கு இன்னின்ன வியாதி கீதுன்னு எனுக்கே தெரியாது. எங்காளுங்களாம் நல்லாத்தான் இருக்குற மாதிரி இருப்பானுங்க. ஆனா திடீர்னு செத்துறுவானுங்க. பின்ன! இந்த வேல பாக்குறவன் நூறு வயசா வாழுவான்? எனுக்கு எப்ப சாவு வருமோ தெரியாது. எம் புள்ளங்கிளயாவது நல்லா படிக்க வச்சி பெரியாளா ஆக்கனும்னு பாக்குறேன் முடியல. ஆசப்பட்டா முடியுமா? அததுக்கு இன்னா எழுதி வச்சிக்குதோ அதான நடக்கும். இன்னா நான் சொல்றது?'' என்று என்னைப் பார்த்து கேட்க்கிறார்.



''நீ எங்க ஊட்ல சாப்பிடமாட்ட. வா உனுக்கு டீ கடைல வாங்கித்தறேன். அங்க வந்து ஒரு டீ குடிச்சிட்டு போ. வானான்னு மட்டும் சொல்லிறாத'' என்று டீக்கடை நொக்கி நடையை கட்டுகிறார் 35 வயதில் 45 போல் மாறிவிட்ட 'ழான் குளோத்'. இந்தியாவில் இவர் ஒரே ஒரு எடுத்துக்காட்டு. நாடு முழுக்க 5.77 லட்சம் பேர்களும், தமிழகத்தில் மட்டும் 35,000 பேர்களும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.



கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் ''ரோசய்யா''. மருத்துவமனை கழிவுகளை கையால் அல்ளுகிற போது சிரிஞ்ச் குத்திவிட்டது. சில நாட்களில் கை அழுகிப்போய் குஷ்டம் வந்துவிட வேலை கிடையாது என்று நிர்வாகம் விரட்டி விட்டது.



நீதிமன்றத்தில் முறையிடுகிறார் ரோசய்யா. ''இது தொழில் முறை வியாதிப் பிரிவில் வராது எனவே நஷ்ட ஈடு தர முடியாது என்று மதாபிமானமிக்க திர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்''. பின்னர் இறந்து போன ரோசய்யாவின் நிலை தான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ல ழான் குளோத் போன்றோர்களுக்கு.



''துப்புறவுத் தொழிளாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள் என்று எதுவுமே கிடைப்பதில்லை'' என்று குற்றம் சாட்டுகிறார் ஆதித் தமிழர் பேரவைத் தலைவரான இரா. அதியாமான்.



தமிழ்நாட்டில் துப்புரவுத் தொழிளாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடிவரும் இவர் ''கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருட்டு வி.சி.டி.க்கு குண்டர் த்டுப்பு சட்டம், மதமாற்றத் தடுப்புச் சட்டம், ஆடு கோழி பலியிட தடைச் சட்டம் என்று அநேக சட்டங்கள் துரித கதியில் போட்டார்கள். ஆனால் காலங்காலமா இழிவுபடுத்தப்பட்டு வரும் எங்களது கோரிக்கைகளை கொஞ்சமும் செவி கொடுத்து கேட்க்கவில்லை.



சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் தி.முக அரசு அதைச் செயல் படுத்தும் விதத்தில் [குறைந்த பட்சம் தமிழகத்தில்] மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் அவல நிலையை சட்டப்படி ஒழிக்க வேண்டும். மேலை நாடுகளைப் போல் துப்புறவுத் தொழிலை நவீனமயமாக்கி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்.



இலங்கையில் உள்ள தமிழர்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கிற தமிழ்நாட்டுத் தமிழன் இங்கே உள்ள மக்களை தீண்டத் தகாதவனாக வைத்திருக்கிறான். ஒரே ரத்தமாம், ஒரே மண்ணாம், ஒரே இனமாம். மொத்தத்தில் ஒரு மயிருமில்லை.



வெள்ளைக்காரர்களிடமிருந்தும், நமது அரசாங்கத்திடமிருந்தும் சேவை என்ற பெயரில் பணத்தைச் சுரண்டி கொழுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இத்தகைய அவல நிலைகளை மக்களின் பார்வைக்கோ, அரசாங்கத்தின் பார்வைக்கோ கொண்டு வருவதில்லை.
அவ்வளவு தூரம் எதற்கு தமிழ் தமிழ் என்று வீர முழக்கமிடும் திருமாவளவன் கூட இப் பிரச்சினைக்காக ஓங்கிக் குரல் கொடுக்கவில்லைஎன்பதே உண்மை.
மரக்காணம் பாலா.