Friday, April 6, 2007

சர்க் புர்க் கொட்டையான் கதை!


ஒரு ஊர்ல ''கொட்டையான், கொட்டையான்''னு ஒருத்தன் இருந்தானாம். “யாங் அவம் பேரு கொட்டையான்”னு கேளுங்க.

ஹி...ஹி...ஏன்னா? அவனுக்கு கொட்ட, ரொம்பப் பெருசா இருக்குமாம். செரி, கதைய கேளுங்க.

கொட்டையான பாத்து யார்னா ''கொட்டையான்''னு கூப்பிட்டா அவனுக்கு பயங்கர கோவம் வருமாம். ஒரு நாள் இதுமேர்த்தான், இவம் கழினில ஏர் உழுதுகினு இருந்தானாம். இவம் பொண்டாட்டி இவுனுக்கு கஞ்சி எடுத்தாந்து கிறா.

கஞ்சி எடுத்தாந்தவ, கழினில கால் வெக்க பால்மாறிக்கினு [சோம்பேறித்தனம்] மோட்டு [மேடு] மேலயே நின்னுக்கினு ''யோவ் மச்சாங்... யோவ் மச்சாங்...''ன்னு கூப்ட்டுகிறா.

அந்தக் கழுதக்கி காது கேக்கல போல கீது. இவ கூப்ட்டு கூப்ட்டு பாத்து எரிச்சலாயிட்டு, ''யோவ் கொட்டையான்! இந்தாயா கஞ்சி யெடுத்தாந்து கீறம்''ன்னு சொல்லிக்கிறா.

அது இவம் காதுல உழுந்துட்டுது. வஞ்ச்சி பேரு ஆத்திரம்...

''கட்ன புருசனையே நீ கொட்டையான்னு கூப்புட்றயா''ன்னு சொல்லி வரப்பு மேல வச்சிருந்த கத்திய எடுத்து ஒரே வெட்டா வெட்டி பொண்டாட்டிய சாவடிச்சி போட்டான்.

அப்புறம் இன்னா பண்ணானாம்... மாட்ட[மாடு] அட்ச்சி, அட்ச்சி ஏர் உழுதுகிறாம். மாடு இன்னா பண்ணிக்கிது, வலி தாங்காத ''அம்மே கொட்டையான், அம்மே கொட்டையான்''ன்னு கத்திக்கிது.

''உனுக்கு இம்மாந் திமுரா? நீயும் ஒழிஞ்சி போ''ன்னு சொல்லி அதியும் வெட்டி சாவடிச்சிட்டானாம்.

‘பொண்டாட்டியும் பூட்டா, மாடும் பூட்ச்சி. செரி மாட்டு தோலாவது இருக்கட்டுமே’னு தோல உரிச்சி எடுத்தும் போனானாம். யெங்கெங்கியோ அலஞ்சி பாத்துக்கிறாம். யெங்கியும் தோல விக்க முடியில. செர்தான்ட்டு தோல காயப்போட்டு மோளங்[மேளம்] கட்டிட்டாம். கட்ன மோளத்த எடுத்துனு வழி நெடுக்க அடிச்சிம் போனாராம் பாரு!

அது ''ஜென்..ஜென்..ஜாம், நாக்-நாக், ஜென்...ஜென்...ஜாம், நாக்-நாக்''னு சொல்றதுக்கு பதிலா ''ஜென்..ஜென்..ஜாங் கொட்டையான், ஜென்டு குட்டி கொட்டையான்''னு சொல்லிக்கிது.

“ங்கோத்தா... செத்தும் உனுக்கு திமுரு அடங்கலையா?”ன்னு சொல்லி மோளத்த குத்தி டாரா கிழிச்சிட்டானாம்.

கொட்டையானுக்கு ரொம்ப நாளா செருப்பு போட்டுக்கினு நடக்கனும்னு ஆச. பொண்டாட்டி, உண்டியில சேத்து வச்சிருந்த காசை எல்லாம் தொடச்சி எடுத்துனு போய், ஒரு புது செருப்பு வாங்கி போட்டுக்கினாராம்.

போட்டுக்கினு ரோட்டு மேல நடந்தும் போனார் பாருங்க! அந்த செருப்புகூட சும்மா இல்லியாம். அது இன்னான்னு சொல்லிச்சாம், ''சர்க்-புர்க் கொட்டையான், சர்க்-புர்க் கொட்டையான்''னு சொல்லிச்சாம்.

“இன்னாடா! இந்த செருப்புக்குகூட நம்பள கண்டா எளக்காரமா பூட்ச்சி”ன்ட்டு செருப்பையும் கண்டந் துண்டமா வெட்டி போட்டுட்டானாம்.

அப்புறம் எங்கெங்கியோ சுத்தி அலைஞ்சிட்டு சாய்ங்காலமா ஊட்டுக்குத் திரும்பி வந்தானாம். ஊட்ல பொண்டாட்டி இலாத்துனால அதது, அங்கங்க போட்டபிடி கடந்துகிது. கோழிய கவுக்க கூட ஆளில்ல.

“மொதல்ல, கோழிய புடிச்சி கூடைல கவுப்பம்”ன்னிட்டு போய் கோழிய புடிச்சானாம் பாருங்க! அது கூடவா அந்தமேறி கத்தும்?

''கொக்கரக்கோ கொட்டையான், கொக்கரக்கோ கொட்டையான்''
ன்னு கத்திக்கிது.

“ங்கொம்மால! சும்மா உட்ருவனா உன்ன?” ன்ட்டு, கோழிய வெட்டி கொழம்பு வச்சிட்டானாம். அப்பவும் பாருங்க சோதனைய! கொழம்பு இன்னான்னு கொதிக்குதாம்?

''கொத-கொதா கொட்டையான், கொத-கொதா கொட்டையான்''ன்னு
கொதிக்குதாம்.

இவனுக்கு ஆத்திரம் தாங்க முடியில. கொழம்பு சட்டிய தூக்கிப்போட்டு அடுப்பு மேலயே வச்சி ஒரே ஒடையா ஒடச்சிட்டானாம். ஒடஞ்டதும் சும்மா ஒடையல.

அதுல இருந்த கொழம்பு, ''சொய்ங்... கொட்டையான், சொய்ங்... கொட்டையான்''
னு ஒடஞ்சி கிது.

அடுப்ப எட்டி ஒரு ஒத உட்டுட்டு, உள்ள போய், பாயப் போட்னு படுத்தானாம். அந்நேரம் பாத்தா அவுனுக்கு குசு வரனும்? அதுவும் சும்மா வரல.

''பொய்ங்... கொட்டையான், பொய்ங்... கொட்டையான்''னு சொல்லிக்கினே வந்துக்கிது.

இவுருதான் பெரிய கோவக்கார்ராச்சே! எடுத்தாராம் அரிவாள! குசு உட்ட சூத்தப் புடிச்சி ஒரே அறுப்புத்தான். 'பர்ர்க்'கினு போட்டுக்க்கிச்சி.

அப்புறம் இன்னா? அவுரு சூத்த அவுரே கிழிச்சிக்கினு செத்துப்பூட்டாராம். இதாங் கொட்டையான் கத.


குறிப்பு: ''ங்கோத்தா, ங்கொம்மால'' என்று இரண்டு இடங்களில் கெட்ட வார்த்தை வருவதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். இந்தக் கதையை எனக்குச் சொன்னது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற வினோத் [என் அத்தைக்குப் பேரன்].

எங்கள் பகுதிகளில் கெட்ட வார்த்தையை மக்கள் கூச்ச நாச்சமின்றி வெகு இயல்பாகப் பேசுகிறார்கள்.

கதை நாயகன் ஒவ்வொரு கொலைக்கும், ஒரு கெட்ட வார்த்தை சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பான். அதையெல்லாம் இங்கே நான் பதிவு செய்யவில்லை. பிறந்த கிராமத்திற்குள் நுழைந்துவிட்டால், கெட்ட வார்த்தைகளைப் பேச நானும் கூச்சப்படுவதில்லை.

இது எங்கள் மண்ணின் இயல்பு. இந்த மொழிநடை உங்களுக்கு சிரமமாகத் தெரியலாம். இதுவும் என் மண்ணுக்கானது.

கெட்ட வார்த்தை பற்றிய உளவியலும் அரசியலும் சமூகக் கோபங்ககளைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே திகழ்கிறது.ல் இது பற்றி தனிப் பதிவுபோட முயற்சிக்கிறேன்.

No comments: