Wednesday, July 18, 2007

தெருவுல ஓடுற நாயி... இல்லனா பன்னி...எதுனா ஒண்னு போடுங்க!










ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நவீன காலத்தில், நாகரிக சமுதாயத்தில் யாருக்காவது கல்வி மறுக்கப்படுமா என்னசுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தியக் குடியரசில், அரசாங்கத்தாலேயே கல்வி மறுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு. அது வீடு வீடாய் வந்து நிற்கும் குடுகுடுப்பை சமூகம்.


''கூடிய சீக்கிரம் இந்தக் குடும்பத்துல ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது. தெற்கு தெசைல இருந்து நல்ல சேதி ஒண்னு வரும்''

குடுகுடுவென உறுமி ஒலிக்கும் ஒரு சிறிய பம்பை மேளம் (குடுகுடுப்பை). முழுநீளப் புடவையை முடிந்து கட்டிய முண்டாசு, தோளில் ஒரு மாந்திரீகப் பை, கக்கத்தில் ஒரு குடை என்று கெட்டப்பிலேயே ஒரு அட்ராக்ஷன் இருக்கும் குடுகுடுப்பைக்காரர்களிடம்.

'ஆமா...எப்ப வந்தாலும் இதையே தான் சொல்ற! நல்ல காரியம் எங்க நடக்குது? என்று அம்மணிகள் சலித்துக் கொள்வார்கள்.

'நான் சொன்னா வாக்கு சுத்தமா இருக்கும். சந்தேகமிருந்தா கைரேகை பார். இல்லனா ஒலச்சுவடி போட்டுப் பார்'' என்பார்கள்.

'சோஸ்...சியம் ஒன்னுதான் கொறச்சல். ஒனக்கு காசு வேணும்ல... அதான்!”

 மண்டை முழுக்க ஆர்வமிருந்தாலும், என்னமோ அவசியமில்லாததுபோல் வீட்டம்மாக்கள் சாமர்த்தியம் காட்டுவார்கள்.

''சொல்றன்னு தப்பா நென்சிக்காத! ஒரு சிறுக்கியோட பார்வ இந்த ஊட்டு மேல விழுந்துருச்சி. அவ உள்ள வந்த நேரம் தீட்டானதால, எல்லாமே உனுக்கு வெட்டி, வெட்டிப் போவுது''

மன நிலைக்குத் தக்கபடி டயலாக்கை மாற்றுவார்கள் குடுகுடுப்பைகள்.

நான் நெனச்சேன். அவ பார்வையே செரியில்லாமதான் இருந்துதுஎன்று எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் நம் பெண்கள், “சரி, இன்னாதான் அதுக்குப் பரிகாரம்'' என்று பணிவார்கள்.

ஒரு வகையில் கிராமப்புற மக்களுக்கு இது உளவியல் மருத்துவமாக அமைகிறது. 'ப்பூ...' என்று விபூதியை முகத்தில் ஊதி விட்டாலே, பாதி பிரச்சினை பறந்துவிடும். இப்போது கிராமம் முழுக்க கரண்ட் வசதி வந்த பிறகு பேய் பிசாசுகள் அனைத்தும், போன மாயம் தெரியவில்லை. அப்படியிருக்க இம்மாதிரியான நம்பிக்கைகளைச் சார்ந்து வாழ்ந்த குடுகுடுப்பை மக்களுக்கு இன்று வயிற்றுப்பாடே பெரும் பிரச்சினையாகிவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது ஆலத்தூர் கிராமம். இதை ஒரு குடுகுடுப்பை கிராமம் என்றே சொல்லலாம். சுமார் ஐம்பது குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன.

அங்கே போனதுதான் தாமதம், bike-கை சூழ்ந்து கொண்டு, 'கையா, முய்யா'வென ஒரே கூச்சல். "... போட்டோக்கார், போட்டோக்கார்" என்று காமிராவைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

"தொழில்லாம் எப்படிப் போவுது" என்றேன்.

"எங்க சார்! குடுகுடுப்ப அடிச்சி வாசல்ல போய் நின்னா, 'ஏன் கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு. ஒழச்சி சம்பாதிக்க வேண்டியது தானே.எதுக்கு இப்படி பிச்சை எடுக்கனும்'னு அசிங்கப்படுத்துறாங்க. எங்களுக்கும் உங்கள மாதிரி கவுரவமா வாழனும்னுதான் ஆசை. ஆனா படிப்பு இல்ல, வேற தொழிலும் தெரியாது. இனா பண்றது?" என்று வருத்தப்படுகிறார்கள்.

"தொழில் இன்னாங்க தெரியனும்? ஏதாவது ஆடு மாடு வச்சிப் பொழச்சுக்கலாமே?" என்றால்,

"ஏன் சார்! எங்க ஊட்டு பொம்பளிங்கோ, மானம் மரியாதையா இருக்குறது உனுக்குப் புடிக்கலியா? நீங்க சொல்றா மாதிரி நாங்களும் ஆடு, மாடுங்க வச்சிருந்தோம். தோ கீறானே அய்னாரு. இவம் ஊட்ல மட்டும் அம்பது ஆடுங்க இருந்திச்சி. மேச்சலுக்கு எல்லா ஜாதி ஆடு, மாடுங்க போவலாம் சார். ஆனா எங்க ஆடுங்க போவக்கூடாது. மீறிப் போய்ட்டா போதும்.

'குடுகுடுப்பக்காரனுக்கு குடுத்தனக்காரன் மேரி ஆடு மாடுங்க கேக்குதா. ஒழுங்கா ஆட்ற (குடுகுடுகுடுப்பையை ஆட்டுவது) வேலைய மட்டும் பாருங்க. இல்லனா உம் பொண்டாட்டி, பொண்ணுஙகள நாங்க ............ ஆட்டிருவோம்'னு எங்களை அசிங்கசிங்கமாப் பேசுவாங்க.

இந்த ஆடு மாடுங்களாலதானே நம்பூட்டுப் பொம்பளங்கிள, கண்டவன் கண்டபடி பேசுறான். அதனால பஞ்சாயத்தக் கூட்டி, மொத்தமா எல்லா ஆடு, மாடுங்களையும் வித்துட்டோம். நாங்க நாதியத்த ஜாதியாப் போய்ட்டோம் சார். எதுத்துக் கேட்டா ஊடேறி வந்து அடிப்பாங்க. எல்லாம் தலவிதின்னு போவவேண்டியதுதான்.”

உங்களுக்குத்தானேங்க படிப்பு இல்ல. உங்க புள்ளைங்கள படிக்க வைக்கலாமில்ல?”

எங்க சார் படிக்க உடுறாங்க? ஜாதி சர்டிபிகேட் இருந்தாத்தான் படிக்க முடியுமாம். 'அது இல்லனா படிக்க வராத'ன்னு சொல்றாங்க. நாங்களும் எவ்ளவோ போராடிப் பாத்துட்டம் சார். எங்களுக்கு சிபாரிசு பண்ணக்கூட யாரும் இல்ல. கவுன்சிலரப் போய் கேட்டா, 'நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ! அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றாரு.

ஆனா, நாங்க ஒரு ஆள் தவறாம ஓட்டுப் போட்டோம் சார். ஒதவிக்கின்னு யாரும் இல்ல. நீங்களாவது பேப்பர்ல போட்டீங்கன்னா எதுனா நல்லது நடக்கும்னு எதிர்பாக்குறோம்.”
ஏதோ, நம்பிக்கையில் கேட்கிறார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று வெள்ளை நிறம், கொள்ளை அழகுடைய இம்மக்களின் பூர்வீகம், மகாராஷ்டிரா. தாய் மொழியாக மராட்டி பேசுகிறார்கள். என்றாலும் பிற மொழி கலப்புகளும் நிறைந்துள்ளன. தக்காளி - தக்காளிதான். மராட்டி மறந்து போய்விட்டதாம்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனித்த அடையாளம் இருப்பதைப்போல, இவர்களுக்கும் ஏதாவது இருக்க வேண்டுமல்லவா!

"உங்களுக்குன்னு ஏதாவது ஸ்பெஷலா பாட்டு, டான்ஸ்னு தனியா இருக்குதா? திருவிழா, இல்லனா கல்யாணத்துல ஆடிப்பாடுற மாதிரி..?" என்றேன்.

இருக்குதே! 'என்னம்மா தேவி ஜக்கம்மா... ஒலகம் தலகீழா சுத்துது நியாயமா' தம்பி படத்துல மாதவன் பாடுவாரே! அதான் சார் எங்க பாட்டு'' என்கின்றனர் அப்பாவியாக.

இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

தாங்கள் எப்படி குடுகுடுப்பைகாரர்கள் ஆனோம் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார் ஊர்த் தலைவரான அர்ச்சுனன்.  

''எல்லாரோட பொழப்புக்கும் ஒவ்வொரு தொழிலா வரம் குடுத்துட்டு இருந்தாராம் ஈஸ்வரன். கடைசியிலதான் விஷயம் தெரிஞ்சி ஓடியிருக்காங்க எங்காளுங்க. ஏம்பா இவ்ளோ லேட்டா வர்ரீங்க. எல்லா வரத்தையும் குடுத்து முடிச்சிட்டேனே! இப்ப இன்னா பண்றது?ன்னு யோசிச்சாராம்.

இந்தா இது ஒன்னுதான் பாக்கி இருக்குதுன்னு சொல்லி, சூலத்துல கட்டியிருக்குமே பம்ப உடுக்க, அத எடுத்து கைல குடுத்துட்டாராம். 'இத வச்சி ஊர் ஊரா உடுக்க அடிச்சி, அங்க இருக்குற காத்துக் கருப்பு, பேய் பிசாசுங்கள எல்லாம் வெரட்டி அடிங்க. ஊர் ஜனங்களுக்கு நல்ல வாக்கு சொல்லி, அவங்க குடுக்குறத வாங்கி குடும்பம் நடத்துங்க'ன்னு சொன்னாராம். இதப் பாத்தீங்களா! அதே உடுக்கதான். சைஸ் மட்டும் சின்னதா இருக்கும்'' என்றபடி குடுகுடுப்பையை அடித்துக் காட்டுகிறார்.

இங்கு வசிக்கும் 16 வயது அமிர்தவள்ளிக்கு, ஏகப்பட்ட பள்ளிக்கூடக் கனவு.
நீலம், வெள்ளையில் பாவாடை தாவணி கட்டிக் கொண்டு மற்ற சாதிப் பெண்கள் பள்ளிக்கூடம் சென்று வரும் அழகை, வைத்த கண் வாங்காமல் பார்ப்பாராம். ஒரு வேளை, பள்ளிக்கூட படியேறி இருந்தால் அமிர்தவள்ளியின் அழகுக்கு எல்லா சாதி இளவரசர்களும் கியூவில் நின்றிருப்பார்கள். ஆனால், நிறைவேறாத பள்ளிக்கூடக் கனவுகளுடன் அமிர்தவள்ளிக்கு திருமணமாகிவிட்டது.

அமிர்தவள்ளிக்கு இருக்கிற பள்ளிக்கூடக் கணவு அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் இங்கே இருந்து தொலைக்கிறது. ஆனால், ஒருவர்கூட படித்ததாகத் தெரியவில்லை. 'ஆம்பளைங்க குடுகுடுப்பை அடிக்கக் கிளம்பிட்டாங்கன்னா, நாங்க சுறுக்குப் பை விக்கப் போயிடுவோம். டைலர் கடையில வெட்டிப் போடுற துணிய வச்சித்தான் பை தைக்கிறோம். நாள் முழுக்க வித்தாலும் பத்து ரூபா தேர்றதே கஷ்டம்'' என்கிறார்கள் அங்குள்ள பெண்கள்.

'எங்க தாத்தா காலத்துலர்ந்து ஆலத்தூர்லதான் சார் குடும்பம் நடத்துறோம். மெட்ராஸ், விழுப்புறம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை'ன்னு நாலு மாவட்டங்கள்ளயும் சேத்து இருவது கிராமங்களுக்கு மேல எங்க ஆளுங்க இருக்காங்க.

காஞ்சிபுரம் திருப்பத்தூர்ல (அநேகமாக இது வேலூர் மாவட்டம் திருப்பத்தூராக இருக்கலாம்) எங்காளுங்க சில பேருக்கு ''இந்து கணிக்கர்'னு சர்டிபிகேட் குடுத்திருக்காங்க. நாங்க இருக்குற நெலமைக்கு எஸ்.டி சர்டிபிகேட் குடுத்தா நல்லா இருக்கும்'னு சொல்றாங்க. அது முடியலைன்னாகூட பரவாயில்ல சார். 'இவுங்க, தெருவுல ஓடுற நாயி, பன்னி' அப்டின்னு, எதுனா ஒண்ணு போட்டுக்குடுங்க சார். எங்க புள்ளங்க படிக்கனணும்னா சர்டிபிகேட் வேணும்என்கிறார் அய்யனார் என்பவர்.

நாலு ஊட்டு அரிசிய, ஒரு பிடி போட்டுப் பொங்கிப் பாருங்க. நாலு கலர்ல சோறு இருக்கும். அதுவும் சின்னதும் பெருசுமா இருக்கும். எத்தினி நாளைக்குத்தான் பிச்சை எடுத்தே சோறு துன்றது? எங்களுக்கும் உங்களப் போல ஒழச்சி சம்பாதிக்கணும்னு ஆச இருக்காதா? ஆனா, வழி தெரியிலயேஎன்கிறார் முருகன் என்பவர்.

'எல்லா ஊர்லயும் மகளிர் சங்கம் வச்சி இன்னாலாமோ பண்றாங்க. ஆனா, எங்கள யாரும் வந்து எட்டிப் பாக்குறதில்ல. எதுனா ஒரு கைத்தொழில் கத்துத் தந்தா இந்த சுறுக்குப் பைய்ய உட்டுக் கடாசிட்டு வேற தொழில் பாப்போம்' என்று கேட்கின்றனர் பெண்கள்.

வாழ்க்கை முறைப பற்றி விசாரித்தபோது வாயைப் பிளக்கு அதிசயம் ஒன்று தெரிந்தது. அது, அவர்கள் வரதட்சனை வாங்குவதே இல்லை என்பது.

வஜ்ஜடா, வஷ்டோர், முத்திரிஜோர், தொர்கோர், ஜவான், பஹங்கோத், சசானா அப்டீன்னு எங்கள்ள மொத்தம் ஏழு ஜாதிங்க. நீங்க முதலியார், செட்டியார்னு சொல்லிக்கிலையா! அப்படித்தான். இன்னா ஒண்ணு, நீங்க ஜாதி உட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க. நாங்க ஒரே ஜாதில பண்ணிக்க மாட்டோம். அதான் வித்தியாசம்.

வஜ்ஜடா, வஷ்டேர்ல பொண்ணு கட்டுவான், தொர்கோர், முத்திரிஜோர்ல பொண்ணு கட்டுவான். இங்க வரதட்சனையும் வாங்கக்கூடாது, பொண்டாட்டியையும் கைநீட்டி அடிக்கக் கூடாது. எல்லாரும் கட்டு திட்டங்களை மதிச்சி நடக்கனும். அம்பது ஊடுங்களயும் தெறந்து போட்டுட்டு போனாலும் ஒரு சின்ன திருடு கூட போவாது.

அப்டி ஏதாவது பிரச்சினைன்னா தலைவர்கிட்ட சொல்லிறணும். அவர் பஞ்சாயத்தைக் கூட்டி , சாட்சிங்கள விசாரிச்சுட்டு தீர்ப்பு சொல்வாரு. இன்னிக்கு வரிக்கும் ஒரு தப்பான தீர்ப்பு வந்ததில்ல'' என்று பெருமையோடு கூறுகின்றனர்.

மார்வாடிகளும், நரிக்குறவர்களும் இவர்களின் சகோதரர்களாம், சொல்கின்றனர். முறையாக கவுன்சிலிங் கொடுத்து, பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இவர்களை சமுதாயத்தில் ஒருவராய் மாற்றுவது மிகச் சுலபம். ஏனென்றால், முண்டாசை வீசி எறிந்துவிட்டு படிக்கவும் உழைக்கவும் தயாராய் இருக்கிறார்கள் இம்மக்கள்.

 ''நீ என்ன சாதி என்றோ, உனக்கு சாதியே இல்லை என்றோ கூறி அவமானப்படுத்துதோடு மட்டுமல்லாமல் சட்டப்படியே கல்வியை மறுப்பது எவ்வளவு அக்கிரமம்''.

அய்யனார் கேட்பது போல ''இது தெருவுல ஓடுற நாயி, பன்னி'' என்றாவது போட்டுக்கொடுங்கள். அவர்களின் பிள்ளைகளாவது படிக்க, ஒரு சாதிச் சான்று தேவை.

12 comments:

Sundar Padmanaban said...

பாலா

மிகவும் அதிர்ச்சியடைய வைத்த பதிவு. அவர்களது அவல நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த உங்களது உழைப்புக்கு நன்றி. பாராட்டுகள். இதேபோன்று நிறைய இனங்கள் கேட்பாரின்றி சீரழிந்த நிலையில் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

ஓட்டுப் பொறுக்கிகள் எப்படியோ தொலைந்து போகட்டும். வலைப்பதிவர்களாகிய நாம் நம் அளவிலாவது இவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைக்க நம்மாலானதைச் செய்யலாம். அங்கிருக்கும் நண்பர்கள் யாராவது, நீங்களாவது ஒருங்கிணைப்பாளராக இயங்கி வலைப்பதிவு நண்பர்களிடம் உதவி கோரி ஏதாவது வகையில் அவர்களுக்கு உதவலாமே? என்னாலான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

நன்றி.

ரவி said...

இதயத்தின் ஆழத்தில் மெய்யான சமூக அக்கறையோடு எழுதப்பட்ட பதிவு...

இது தான்...இதுவே தான்...இப்போதைக்கு தேவை தமிழ் வலையுலகிற்கு...

வெளிச்சத்துக்கு வரும் இதுபோன்ற விஷயங்கள் மக்கள் கவனத்தை பெறும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது...

வெள்ளையர் ஆட்சி காலத்தில் குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தப்பட்டு, சாதிச்சான்று உட்பட அனைத்தும் மறுக்கப்படும் நரிக்குறவர் மக்களை பற்றியும் எழுதுங்களேன்...

திங்கள் சத்யா said...

செந்தழல்:

வலைப்பதிவில்என்னுடைய முதல் கட்டுரையே நரிக்குறவர்கள் பற்றியது தான்.எனது பதிவுகள் பகுதியில் 2006(11)ஐ க்ளிக் செய்யவும்.

வற்றாயிருப்பு சுந்தர்:

சான்றிதழ் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இடையிடையே தொடரமுடியாமல் நிற்கிறது. சேவை செய்றேன்னு காசு வாங்கிக் கொழுத்துக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவணங்கள் முயற்சிக்கலாம். தொண்டு நிறுவனப் பார்ட்டிகள் யாராவது இதனை பார்வையிட நேர்ந்தால் இதையாவது உருப்படியாகச் செய்யுங்கள்

Unknown said...

இவர்களுக்கு இரண்டு விசயங்கள் தேவை.

1.கல்வி
2.வாழ்தலுக்கான அடிப்படை வேலைகள்

கல்வி:
----
நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றன.
இவர்கள் "காட்டு நாயக்கர் " என்ற பிரிவினரா?

இவர்கள் பள்ளியில் சேரும் போதே சரியான சாதி அட்டவணைக்குள் இருக்குமாறு செய்தால்தான் பிற்காலத்தில் இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக இருக்கும்.
சாதிச் சான்றிதழ் வாங்கும் வேலை எப்படி உள்ளது?

கிராம நிர்வாக அலுவலர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

வேலை:
-----
கால்நடை வளர்த்தல் அல்லது வேறு குடிசைத் தொழில்களை அறிமுகப்படுத்தாலாம். எப்படியும் அந்தப்பகுதியில் உள்ள மேல்சாதி மக்களின் ஆதரவு வேண்டும்.:-((

***

எனக்குத் தெரிந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசிப்பார்க்கிறேன். ஆனால் அந்த நிறுவனம் வேறு மாவட்டத்தில் இயங்குகிறது. அவர்களுக்கு தெரிந்து வேறு யாரும் இருக்கலாம். உறுதி சொல்ல முடியாது :-((


//விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது ஆலத்தூர் கிராமம். //

விசயகாந்து அல்லது அய்யா இராமதாஸ் நினைத்தால் ஒரு நாளில் இவர்களை அரசின் பார்வைக்குள் கொண்டு வந்து விடலாம். ம்ம்ம் .. :-(((

******************
Comment moderation இருப்பதால் Word Verification ஐ எடுத்துவிடலேமே ..?

தருமி said...

அந்த ரெண்டு பச்சப் பிள்ளைங்க போட்டோ பார்த்ததும் ஏன் கண்ல தண்ணீர் வருது..?

மிக நல்ல பதிவு.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்லது நடக்குமென நம்பிக்கை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நீங்கள் சந்திக்கும் மனிதர்களும் உங்கள் விவரிப்பும் மனதைத் தைக்கிறார்கள். நல்ல பதிவு. பின்னணி கருப்பாகவும் எழுத்து வெள்ளையாகவும் இருப்பது படிக்க உறுத்துகிறது. வார்புருவை மாற்ற முடியுமா?

மாசிலா said...

பூங்கா இதழ் வழியாக உங்களது பதிவை அறிந்தேன். மிகவும் அற்புதமான மனிதத்துடன் தந்திருக்கும் இப்பதிவை பாராட்டுவதற்கு எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. உங்களது மகத்தான சேவைக்கு மிக்க நன்றி மரக்காணம் பாலா ஐயா.

படங்கள் அருமை. குழந்தைகள் முகம் நெஞ்சை நிறப்பிவிட்டன.

அன்புடன் மாசிலா.

திங்கள் சத்யா said...
This comment has been removed by the author.
திங்கள் சத்யா said...

உதவ முன் வந்திருக்கும் வற்றாயிருப்பு சுந்தருக்கு நன்றி. சரியான சமயத்தில் தொடர்பு கொள்கிறேன்.

நெஞ்சை நிறப்பிவிட்டன'' என்கிற வார்த்தைகளின் மூலம் எனது நெஞ்சை நிறப்பும் 'மாசிலாவுக்கு' என் மனமார்ந்த நன்றிகள்.

பரிதியன்பன் said...

வணக்கம் பாலா
நானும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவர்களைப் பார்த்துக் கொண்டு சென்றிருக்கிறேன்.யாராவது அந்தக் குழந்தைகளின் கல்விக்காக முயன்றார்களா தெரியவில்லை.உங்கள் பதிவுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்

Kousalya Raj said...

மனதை தொட்டு விட்டது உங்கள் படைப்பு. இத்தனை நாள் ஏன் இந்த பதிவுகளை எல்லாம் பார்க்க வில்லை என்று வருத்தமாக இருக்கிறது. சுமாரான பதிவுக்கே பல வோட்டுகளும் , பின்னூட்டங்களும் வரும்போது இந்த மாதிரி நல்ல பதிவுகள் பலரின் பார்வையை சென்று அடைய வில்லையே என்று என்னும்போது வருத்தம் அதிகரிக்கிறது.

நீங்கள் ஏன் தமிளிஷ்இல் இணைய கூடாது? அதனால் பலரும் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு ஏற்படுமே?

திங்கள் சத்யா said...

மன்னிச்சிடுங்க. சோம்பேறித்தனம்தான். நாளைக்கு இணைக்கிறேன்.