Saturday, November 8, 2008

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"

வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். 

நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை விரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.

கோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.

ஏன்?

‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.

‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.

டீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு... ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு?’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு? வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நான் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

அப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.

‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.

அப்பதான், விடுதலைச் சிறுத்தைங்க வந்து எங்க வீட்டுக்காரரை ஒப்ப்டைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அவங்க மூலமா ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.

யாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது? என் புருஷன் உயிரோட வரணுமே! ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன 2007, செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.

‘‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது? அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே...’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ...’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.

வனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.

‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா? என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது,  

‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர்.  

விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.

இப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு? என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.

செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். 

இதையடுத்து கடந்த அக்டோபர் 15-ம் தேதி நீதிபதிகள் எலிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

விடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே... எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா? குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே! ‘பசிக்குதுமா...!’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா!’ன்னு தோணுது.’’

இது, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே!

Wednesday, November 5, 2008

‘‘மந்திரத்தால் மழை! தொடாமலே உடலைக்கீறி ஆபரேஷன்!’’ -இந்தோனேஷிய பயங்கரவாதம்.

‘‘மாசம் பதினஞ்சாயிரம் கொடுத்தாப் போதும். பருவமழை பிச்சிக்கிட்டு கொட்டும்’’ -இப்படியாக‌ சுமார் ஏழு மாதங்களுக்கு ‘மழைச் சித்தர்’ பாலகிருஷ்ணன் என்பவர் ஊர் ஊராய் கப்சா விட்டுக்கொண்டு அலைந்தார்.

‘‘இதெல்லாம் என்ன சார் மேஜிக்? இந்தோனேஷியா போய்ப் பாருங்க. மழை மேகம் ‘வா’ன்னா வரும். ‘போ’ன்னா போகும். ரிப்பேராகிப்போன உங்க வீட்டு கார், ஸ்கூட்டர், லாரி, பஸ் எதுவா இருந்தாலும் ஒரு ‘சூ மந்திரக்காளி’ போட்டா, பக்காவா ரெடியாகிடும். கத்தியில்லாம வெறுங்கையால ஆளையே தொடாம ஆபரேஷன் பண்ணுவாங்க’’ என்று தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அம்மணி ஒருவர்.

‘‘பிசினஸ் விஷயமா பத்து வருஷங்களுக்கு மேலாக நான் குடும்பத்தோடு இந்தோனேஷியாவில் வாழ்ந்திருக்கேன். அது ஒரு முஸ்லிம் நாடுன்னாலும் பண்டைய பாரதத்தின் இந்துக் கலாச்சாரம் இன்னமும் அங்கே இருக்கு. வியாபாரத்துக்காக குஜராத்தில் இருந்து சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்த மன்னர்களை முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்று, மக்களும் முஸ்லிமாக மாறியிருக்கிறார்கள். ஆனால், அவர்ளின் நம்பிக்கை மாறவில்லை. அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்களைப் போலவே செத்துப் போனவர்களுக்கு நீத்தார் கடன் செய்கிறார்கள். வெத்திலைப் பாக்கு, ஊது பத்தி ஏற்றி உறவினர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள்’’ என்று சின்ன முன்னுரை கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இந்தோனேஷியா ஒரு வளமான பூமி. அடிக்கடி அங்கே மழை பெய்றதால விவசாயம், பொது நிகழ்ச்சி எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருக்கும். கல்யாணம், பொதுக்கூட்டம், அரசு விழாக்கள், கோயில் விழாக்கள்னு மக்கள் கூடுகிற எந்த விஷேஷமா இருக்கட்டும். மழை வரும்ங்கிற சந்தேகம் இருந்தா, காசு கொடுத்து ‘பவன் ஹூஜான்’(bavang hujan) என்கிற மந்திரவாதிகளைக் கூட்டி வருவாங்க.

புகையிலை, கிராம்பு ஏற்றுமதிதான் அந்நாட்டின் முக்கியத் தொழில். கிராம்பை வைத்து ஸ்பெஷலாக வாசனை சிகரெட்டுகளை தயார் செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவடையின்போது மழை பெய்துவிட்டால், லட்சக் கணக்கில் நஷ்டமாகிவிடும். எனவே குறைந்த கூலி வாங்கிக் கொண்டு மழையை விரட்டியடிப்பது ‘பவன் ஹூஜான்’கள்தான். இவர்கள், சம்பவ இடத்தில் மந்திரங்களை ஓதி முதலில் தூய்மை படுத்துவார்கள். பிறகு வானத்தை நோக்கி கண்களைச் சுழற்றியபடி கைகளை அகல விரித்துத் தள்ளுவார்கள். என்ன ஆச்சர்யம்! திரண்டிருக்கும் மேகங்களெல்லாம் மிரண்டு ஓடிவிடும். இவையெல்லாம் நான் பார்த்து அனுபவித்த விஷயங்கள்’’ என்றவர், ஸ்பெஷலாக இந்தோனேஷிய டீ ஒன்றை எனக்காக போட ஆரம்பித்தார்.

அவர் சொல்வதை மெய்ப்பிக்கும் விதமாக, பி.பி.சி செய்தியாளரான ‘ரேச்சல் ஹார்வி’ 2003&ம் ஆண்டு இந்தோனேஷியாவில் தான் சந்தித்த ‘அபா ஹாஜி ஒதாங்’(aba haji otang) என்கிற 84 வயது ‘பவன் ஹூஜான்’ பற்றி இப்படிக் கூறுகிறார்.‘‘அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. லேசான இடியின் ஓசை வானத்திலிருந்து இறங்கும் நேரம், பவன் ஹூஜான் தன் மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்தார். அவரது பிரகாசமான கண்கள் வானத்தை உற்று நோக்கின. அகல விரிந்த அவரின் கைகள் மேலெழ, மெல்லிய குரலில் அரபு மொழியில் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். பருவநிலையும், பிராத்தனையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். வேகமாக வீசத்தொடங்கிய காற்று, மேகங்களால் இருண்டிருந்த வானத்தை வெள்ளையடிக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் பெய்து கொண்டிருந்த மழை முற்றிலும் நின்றுவிட்டது. ‘பார்த்தாயா! இப்போது ஜகார்த்தாவில் இருந்து அறுபது கி.மீ தள்ளியிருக்கும் ‘பாந்தங்’ நகருக்கு மழையை நகர்த்திவிட்டேன்’. -ஹாஜி என்னைப் பார்த்து பெருமையாக இப்படிச் சொன்னார்.

என்ன செய்ய? சில நிமிடம் கழித்து, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நான், ‘பவன் ஹூஜாங்கின் பிரார்த்தனையைக் குலைத்துவிட்டதாக’ மக்கள் பேசிக் கொண்டார்கள். விடைபெறும்போது ஹாஜி என்னிடன் சொன்னார். ‘இந்த வாரம் கடற்படையில் பிரிவுபசார நிகழ்ச்சி ஒன்றுக்காக மழையைத் தள்ளிவைக்கப் போகிறேன். அன்று என்னோடு வருகிறாயா?’.
-சூடான டீயுடன் வந்த அம்மணி, அடுத்த அதியசத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
‘‘கெதோக் மேஜிக்’(ketok magic)னு இந்தோனேஷியா முழுக்க பளிச்னு போர்டு மாட்டிய கடைகள் இருக்கும். அவ்வளவும் நம்மூர் மெக்கானிக் ஷெட்கள் மாதிரி. ஆனா, மெக்கானிக்கும் இருக்க மாட்டார், டூல்சும் இருக்காது. பதிலாக மந்திரவாதி இருப்பார். எங்கயாவது சுவத்துல மோதிட்டோம், இன்டிகேட்டர், சேஃப்டி கார்ட் மாதிரியான பொருட்கள் உடைஞ்சிட்டுதுன்னா அங்கிருக்கிறவங்க நேரா ‘கெதோக் மேஜிக்’தான் போவாங்க. ஒரு நாள் எங்களோட டிரைவர் காரை சுவத்துல மோதிட்டார். இதனால சேஃப்டி கார்ட், ஹெட் லைட்ஸ் எல்லாம் உடைஞ்சிட்டது. குறைஞ்சது பத்தாயிரமாவது செலவு ஆகும். ஆனா, ‘கெதோக் மேஜிக்’ போனா ரெண்டாயிரத்துல முடிச்சிடலாம்’னு ஆலோசனை சொன்னார் டிரைவர். நம்பிக்கையில்லை என்றாலும் ‘சரி பார்ப்போம்!’னு கிளம்பிப் போனேன். அங்கே காலியான ஒரு இடம் மட்டுமே இருந்தது. அதற்குள் காரை விட்டுவிட்டு எங்களை வெளியேபோகச் சொல்லிட்டார் மெஜிசியன். என்ன ஆச்சர்யம்! கொஞ்ச நேரம் கழிச்த்து வந்து பார்த்தால், ‘இடிபடுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் கார் வெளியேவந்திருந்தது. நமக்கு இதெல்லாம் பிரமிப்பாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்’’ என்றவர், மேலும் ஒரு புதிய திகில் கதையைச் சொன்னார்.‘‘இந்தோனேசியாவுக்கு நடுவில் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட ‘தோமாக்’னு ஒரு தீவு இருக்கு. பெரிய பெரிய கப்பலெல்லாம் அதுல போகும். அந்தத் தீவுல இருக்கிற கடைகள்ல ஆளுங்க யாருமே இருக்க மாட்டாங்க. நமக்கு ஏதாவது பொருள் வாங்கணும்னா, பக்கத்துல இருக்கிற ஓனர் வீட்டுல கதவைத் தட்டி வேண்டியதை வாங்கிக்கணும். ‘யாரும்தான் இல்லையே! திடுடிட்டுப் போய்டலாம்னு கடையில கையை வச்சோம்னா, கொஞ்ச நாள்லயே செத்துப் போய்டுவோம். அந்தளவுக்குத் தீவு முழுக்க மந்திரக் கட்டு பண்ணி வச்சிருக்காங்க’னு எல்லோரும் பயமுறுத்தினாங்க.

ஃபிரன்ட் ஒருத்தரை துனைக்கு அழைச்சிட்டு, நானும், என் மகனும் ‘தோமாக்’ கிளம்பினோம். ‘பிரபாத்’ங்கிற இடத்திலிருந்து கப்பல்லதான் ‘தோமாக்’ போயாகணும். ஆட்களை கூட்டிட்டுப் போக மூன்று மாடிக் கப்பல் ஒண்ணு காத்திருந்தது. சொன்னா நம்புவீங்களா? யாரும் வரலைங்கிறதால மூணு மாடிக் கப்பல்ல நாங்க மூணே பேர்தான் தீவுக்குப் போனோம். அந்தளவுக்கு அங்கே டீசல் விலை குறைவு.

எல்லாரும் சொன்ன மாதிரியே கடையெல்லாம் திறந்து கிடந்தது. அங்கே வசிக்கும் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறவர்களாக இருந்தார்கள். யாருக்காவது உடம்புல நோய் வந்தா ‘இபு ஜாமு’ங்கிற பெண் மருத்துவச்சிகள்தான் வைத்தியம் பார்ப்பாங்களாம். வெறும் கையினால் தொடாமலே உடம்பைக் கீறி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஆபரேஷன் செஞ்சிட்டு, பிறகு காயமே இல்லாமல் மூடிவிடுவார்கள்’ன்னு அங்கிருந்தவங்க சொன்னாங்க. என்னால் அதை நேர்ல பார்க்க முடியலையேங்கிற வருத்தம் இருந்துச்சு. அங்கிருந்தபோது, ‘மந்திரக்கட்டு நம்பளை ஏதாவது செஞ்சிடுமோ!’ங்கிற பயத்தோடவே நாங்க ஜகார்த்தாவுக்கு திரும்பி வந்தோம்’’ &படபடப்பாய்த் தன் அனுபவங்களைச் சொல்லி முடித்தார் அம்மணி.

இப்போ நமக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு.
1. பீரோ புல்லிங் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க தோமாக் தீவின் மந்திரக்கட்டு ஆசாமிகளை நம்மூருக்கு அழைத்து வரலாம்.
2. ‘கெதோக் மேஜிசியன்’களை கூட்டிவந்து கார், பைக்கை ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
3. முக்கியமாக, எப்பாடு பட்டாவது ‘பவான் வூ§ஜான்’களை கூட்டி வந்துவிட்டால் காவிரிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-என்ன கரீட்டா...?

Thursday, July 31, 2008

வீட்டைச் சுற்றி மின்வேலி! வில்லங்கத்தில் விஜயகாந்த்!

மின்வேலி மீது அப்படி என்னதான் காதலோ! விடமாட்டார் போலிருக்கிறது விஜயகாந்த். சில மாதங்களுக்கு முன், ‘மதுராந்தகம் அருகேயுள்ள கேப்டன் பண்ணையில் மின்வேலி அமைத்திருப்பதாகவும், இதனால் ஆடுமாடுகள் செத்து மடிவதாகவும்’ பரபரப்பு புகார் கிளம்பியது. ஆக்கிரமிப்புப் புகாரில் சிக்கிய அந்தப் பண்னையில் அதிகாரிகள் புல்டோசர் விட்டதால், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று ஆவேசப்பட்டார் கேப்டன். இப்போது ‘இந்து மக்கள் கட்சி’ மூலம் இன்னொரு குடைச்சல் கிளம்பியிருக்கிறது விஜயகாந்த்துக்கு.

‘‘குடியிருப்புகளுக்கு மத்தியில் தன்னுடைய வீட்டுக்கு மின்வேலி அமைத்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே உடனடியாக அதை அப்புறப்படுத்திவிட்டு, அவர்மீதும் அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான கண்ணன் போலீஸ் கமிஷனர், மின்துறை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார். கமிஷனர் அலுவலகம் போயிருந்த நான் தற்செயலாய் கண்ணனைச் சந்தித்துப் பேசினேன்.
‘‘நாட்டில் பிரதமர் வீட்டுக்குக்கூட மின்சார வேலி கிடையாதுங்க. முதல்வர் கருணாநிதி வீடு, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு இரண்டிலும் கிடையாது. ஏன், அண்ணா மேம்பாலத்தில் ஏறி அமெரிக்கத் தூதரகத்தைப் பாருங்கள். அதுக்குக்கூட கிடையாது. ஆனால், விஜயகாந்த்துக்கு மட்டும் தேவைப்படுதாம். அப்படி அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் போலீஸைக் கேட்கலாமே! ஏன் கரென்ட் ஷாக் வைக்கணும்?

விஜயகாந்த் வீட்டுக்குள் தப்பித் தவறி யாராவது புகுந்துட்டாங்கன்னு வச்சுக்குவோம், எலும்பை எண்ணிக் கையில் கொடுத்துடுவாங்க. இதற்கென்றே இருபத்திநாலு மணி நேரமும் தொண்டர்கள் இருக்காங்க. அட! நமீதா வீடுன்னாகூட நாலு பேர் எட்டிப் பார்ப்பாங்கன்னு சந்தேகப்படலாங்க. தன்னை கருப்பு எம்.ஜி.ஆர்.னு சொல்லிக்கிற விஜயகாந்த் இப்படிச் செய்யலாமா? இது என்ன சிறைச்சாலையா, இல்லை ஜூராசிக் பார்க்கா? மின்வேலி அமைப்பதற்கு! காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பாதுகாக்கத்தான் மின்வேலி அமைப்பார்கள். தலைநகரத்த்கில் இப்படி ஆளாளுக்கு மின்வேலி அமைத்துவிட்டால் அதை வைத்தே பல கொலைகள் நடக்குமே!
இந்த மின்வேலி, மக்கள் மீது அவருக்குள்ள வெறுப்பைத்தான் காட்டுகிறது. சாலிக்கிராமத்தில் இவருக்குச் சொந்தமான இரண்டு காம்ப்ளெக்ஸ்களில் மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதால், மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பல கடைகள், வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. மின் இனைப்புப் பெறவேண்டுமானால் விஜயகாந்த் கையெழுத்து போடவேண்டும்.
ஒருவருடைய வியாபாரம் கெட்டுப் போகிறதே, வாடகைக்கு வீடு கிடைக்கவில்லையே என்கிற மக்களின் பிரச்னையை இவர் உணரவில்லை. தன்னுடைய சொத்துதானே என்கிற அகந்தையில் பொதுமக்களைப் பார்க்க மறுக்கிறார். இதெல்லாம் விஜயகாந்த்தின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், பொது வாழ்க்கையில் தன்னை வள்ளல்போல் காட்டிக்கொள்ள விரும்புகிறவர், அதற்கேற்ற மாதிரி நடந்துகொள்ளவேண்டாமா?

‘இலங்கைக்கு, இந்தியா ஆயுத உதவி செய்யுதே’ன்னு கேட்டப்போ, ‘ஈழத் தமிழர்களை சுடுவதற்கு இல்லை’ன்னுதானே பதில் சொன்னார். அதே ஆயுதங்களைக் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்களைச் சுட்டுக்கொன்றது சிங்களக் கடற்படை. அரசியல் லாபம் தேட வேண்டாமா? ஓடோடிச் சென்று மீட்டிங் போடுகிறார். தட்டிக்கேட்காத ‘ஆளும்கட்சியை சுட்டுத் தள்ளணும்’ என்கிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக அல்லவா இருக்கிறது? தட்டிக்கேட்காத ஆளும்கட்சியை சுட்டுத் தள்ளணும் என்றால், ஊருக்கு மத்தியில் மின்வேலி வைக்கிற இவரை என்ன பண்றதாம்? ஆயுத உதவிக்கு ஒத்து ஊதிய நாக்கு அழுகிப் பொகாதா?

இதைவிடக் கொடுமை தன்னைத்தானே கருப்பு எம்.ஜி.ஆர்.னு போட்டுக்கிறது. எம்.ஜி.ஆர், தன் வீடு தேடிவரும் ஏழைகளுக்கு வயிறாற சோறுபோட்டு அனுப்பினார். கருப்பு எம்.ஜி.ஆர் என்ன பண்றார்? வயசான கிழவிகளா பார்த்து போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கிறார். மக்கள்மீது அக்கரை உள்ளவர் கரன்ட் ஷாக் வைப்பார்களா? மழைக்காலத்தில் வீட்டுக் கரன்ட்டை எடுத்து வேலிக்குப் பாய்ச்சமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?’’ என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பிய கண்ண‌ன்,

‘‘ஷட்டில் கார்க் ஆடுகிற குழந்தையோ, பட்டம் பறக்கவிடும் குழந்தையோ மின்வேலியில் மாட்டிக்கொண்ட பொருளை எடுக்க ஈரக்குச்சியை நீட்டினால் என்ன ஆவது? உயிரைத் திருப்பித் தருவாரா விஜயகாந்த்? சுயலாபத்துக்காக வீட்டைச் சுற்றியே மின்வேலி அமைத்திருக்கும் இவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் தமிழ்நாட்டுக்கே மின்வேலி அமைத்து தனதாக்கிக் கொள்வார். இவரது அராஜகத்தை எதிர்த்து புகார் கொடுக்க அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்று பொரிந்து தள்ளினா.

இந்து மக்கள் கட்சியின் சார்பாக பேசிய வழக்கறிஞர் இராம்.மனோகர், ‘‘குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன்படி பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற மின்வேலிகளை காவல்துறையே அகற்றமுடியும். தவிற்க முடியாத சூழ்நிலையில் இதனால் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இ.த.சட்டம் 304/அ-வின் கீழ் குறைந்தது மூன்றாண்டுகள் தன்டனை வழங்கலாம்.
மேலும் சூரிய மின்வேலிக்கு முறையாக அனுமதி பெற்றிருந்தாலும், எத்தனை வோல்ட் மின்சாரம் பாய்கிறது, எவ்வளவு நேரம் பாய்ச்சப்படுகிறது, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்னென்ன’ போன்ற விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புக்கூட மின்வேலி அமைத்துக்கொடுத்த நிறுவனத்தின் விளம்பரம்தான்.
சட்டப்படி மின்வேலி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் இதை ஒரு மோசமான முன் உதாரனமாகவே கருத முடியும். இதற்கான செலவும் வெகுமக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் இருப்பதால், பலரும் பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் மின்வேலி அமைப்பது அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்’’ என்றார்.
‘‘சென்னை நகரில் வீடுகளுக்கு மின்வேலி அமைக்கமுடியுமா? விஜயகாந்துக்கு மின்வேலி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?’’ -மின்துறை அதிகாரிகளிடம் இக்கேள்வியை முன் வைத்தேன்.
‘‘மின்வாரிய மின்வேலியோ, சூரிய மின்வேலியோ! எதுவாக இருந்தாலும் முதலில் காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டும். அதன் பிறகு எங்களிடம் விண்ணப்பித்தால் நாங்கள் அதைப் பரிசீலித்து, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அனுமதி வழங்குவோம். ஆனால், இதுவரை யாரும் அப்படி அனுமதி கேட்டதில்லை. விஜயகாந்த் வீட்டிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை’’ என்று தெரிவித்தனர்.
விருகம்பாக்கம் காவல் நிலையத்தைத்தில் கேட்டபோது, ‘‘அப்படியா? விஜயகாந்த் வீட்டில் மின்வேலி இருக்கிறதா? இதுவரை நாங்கள் பார்க்கவில்லையே...’’ என்றனர். மின்வேலியை நேரில் பார்த்துவிட்டுத்தான் கேட்கிறேன். அதற்காக அனுமதி வழங்கியிருக்கிறீர்களா? என்றதற்கு, ‘‘அவர்களும் அனுமதி கேட்கவில்லை, நாங்களும் அனுமதி வழங்கவில்லை’’ என்றனர்.
இது விஷயமாக விஜயகாந்த் தரப்பினரிடம் கேட்டபோது, ‘‘வெற்று விளம்பரத்துக்காக இந்து மக்கள் கட்சியினர் இப்படி புகார் ப்கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் முறையான அனுமதி வாங்கித்தான் மின்வேலி அமைத்திருக்கிறோம். இதை அமைத்துக்கொடுத்த நிறுவனமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இது சூரியமின்வேலி என்பதால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் வராது. தே.மு.தி.க.வின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டி அவதூறு பரப்புகிறார்கள்’’ என்றனர்.
சூரியமின்வேலி அமைத்துக்கொடுத்த நிறுவனன் மின்வேலியில் ஒரு விளம்பர போர்டு வைத்திருந்தது. அதில் இருந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டபோது, ‘நாட் இன் யூஸ்’ என்ற பதில்தான் வந்தது.

ஒருவழியாய் இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபித்து, சம்பந்தப்பட்ட நிறுவத்தை தொடர்புகொண்டேன். இந்த மின்வேலியால் எந்த ஆபத்தும் இல்லை. இதை அமைப்பதற்கான அனுமதியை கிண்டியில் உள்ள மின் அலுவலகத்தில் வாங்கியிருக்கிறோம். அது மட்டுமே போதும். தமிழ்நாடு முழுக்க வேறெங்கும் அனுமதி வாங்கத் தேவையில்லை. மின்வேலி அமைக்க விருப்பமுள்ளவர்கள் எங்களிடம் பணம் கட்டிவிட்டால் போதும், எல்லாவற்ரையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’’ என்றனர்.
புகார் தெரிவித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசுத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. காசு இருந்தால் என்னவேணா செய்யலாம்ங்கிறதுதான் ஊருக்கே தெரியுமே? நாமளும் கம்முனு குந்திக்குவோம்.

Saturday, July 26, 2008

ச்சே... இப்படியொரு வித்தை இருப்பது தெரியாமல் போச்சே!

பழைய புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்ப்பதே அலாதியானதுதான். அப்படியொரு புகைப்படத்தை எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார் என் அலுவலக நன்பர். இப்போது பார்க்க போலீஸ் அதிகாரிபோல் தோற்றமளிக்கும் ஒருவர், ஹிப்பித் தலையுடன் கூத்தாடி போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தார். நெற்றியில் பாதி நிலாபோல் வெள்ளைச் சிகப்பில் விபூதி குங்குமம். ‘‘ஆஹா... பிரமாதமா இருக்கே! பால்ய வயது சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துவிடுமே?’’ என்றேன், போட்டோவைப் பார்த்துவிட்டு.

‘‘அய்யோ! ஊர்ல இவம் பண்ணாத ராவடியே இல்லை. ஆடையில்லாம பாக்கிறதுக்கு கண்ணாடி கண்டுபுடிக்கிறதுக்கு முன்பே இவன் றெக்கை கண்டுபுடிச்சிட்டான்’’ என்று அந்த மந்திர வித்தையை எடுத்துவிட்டார் குரூப் போட்டோவில் கூட இருந்த நன்பர்.

கிராமத்து ஆட்களுக்குத் தெரியும். ‘‘கருடன் கூண்டில் சஞ்சீவி மூலிகை இருக்குமாம். அதைக் கொண்டுவந்தால் இரும்புக் கதவைக்கூட திறந்துவிடலாம். முழங்கையிலோ, தொடையிலோ கத்தியால் கிழித்து, கிழிபட்ட இடத்தில் சஞ்சீவி மூலிகையை வைத்துவிட்டால் தானாக மூடிக்கொள்ளுமாம். அதன் பிறகு எவனும் நம்மை கத்தியால் வெட்ட முடியாது. ஜெயிலுக்குப் போனாலும் கம்பியை உடைச்சிட்டு வெளியே வந்துவிடலாம். துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு தெரித்துவிடும். உடம்புக்கு ஒன்றும் ஆகாது’’ என்று கதை சொல்வார்கள். சஞ்சீவி மூலிகை எடுக்க கூண்டுக்குள் கையை விட்டு கருடன் கையால் மண்டையில் கொத்து வாங்கியவர்கள் ஏராளம்.

இப்போது குரூப் போட்டொ நன்பர் சொன்ன கதைக்கு வருவோம். அது பொம்மணாட்டிகளை அம்மணமாய் பார்க்க புது கண்ணாடி கண்டுபிடித்துவிட்டதாக கதை கிளம்பியிருந்த நேரம். "ஹ¨ம்... இதென்ன பிரமாதம். அந்த காலத்திலேயே இதுக்கு றெக்கை கண்டுபிடிச்சிட்டான்’’ என்று பிட்டு போட்டிருக்கிறார் கிராமத்தில் ஊர் கொளுத்தியாக வலம் வந்த ஒருவர். ''அப்படியா...! என்ன அது?’’ என்று வாய் பிளந்து கேட்டிருக்கிறார்கள் ஹிப்பித்தலையும், அவரது தோஸ்த்தும்.

‘‘கருடன் பறந்து போவுதில்ல... அப்ப றெக்கை உழுதான்னு பாத்துக்கிட்டே இருக்கணும். அப்படி என்னைக்காவது றெக்கை உழுந்திச்சின்னா, மண்ல உழுந்திடாம அப்படியே அதை கைல வாங்கிக்கணும். அதை எடுத்தும்போய், மொதமொதலா கண்ணு போட்ட பசுமாடு இருக்குதில்ல...! அது போடுற மொத சாணியில நாலா பக்கமும் நனைச்சு எடுத்துக்கணும். அதை எடுத்தும்போய் எது நம்ம குல தெய்வமோ, அதுங் காலடியில 108 நாள் விரதமிருந்து நல்லா காய வைக்கணும்.
காய வச்சாச்சா...? இப்ப என்னா பண்ணனும்னா... நல்லா பூ மலர்ந்த தாமரைக் குளமா தேர்ந்தெடுக்கணும். யார் கண்ணுலயும் படாம விடியக்காலை இருட்டோட இருட்டா பிரம்ம முகூர்த்தத்துல போய் றெக்கையை கைல புடிச்சிக்கிட்டு 108 முறை குளத்துல முங்கி எழுந்திருக்கணும். இதே மாதிரி 108 நாள் தொடர்ந்து பண்னனும்.

இதுக்குப் பொறவு என்ன பண்ண‌னும்னா...? ஊர்ல ஏழு கன்னிமார் கோவில் இருக்கில்ல!? உறும வேளையா (நன்பகல் பன்னிரண்டு) அங்க போய் உச்சி வெயில்ல 108 நாள் றெக்கையை கையில புடிச்சிக்கிட்டு காய வைக்கணும். றெக்கை ஒவ்வொரு நாளும் கொஞ்சங் கொஞ்சமாய் மெருகேறி ஜொலிக்கிறது உனக்கே தெரிய ஆரம்பிக்கும். 108 நாள் முடிஞ்சதுன்னு வச்சிக்கியேன்! அப்புறம் பாரு வித்தையை. 'தூக்கு'னா தூக்கும். 'இறக்கு'னா இறக்கும் என்று செய்து காட்டியிருக்கிறார்.

அதாவது, யாராவது ஆளுங்க இருக்கிற இடமா பாத்து கையில இறகோட நின்னுக்கணுமாம். அவங்களைப் பார்த்துக்கிட்டே, இறகை கீழிருந்து மேலாக நீவி விட்டால் அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்சும் அதே மாதிரி மேல போய் வருமாம்.’’

-இதைத்தான் பண்டைகால கண்டுபிடிப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் அந்தப் புண்ணியவான். ‘‘கருடா... கருடா... றெக்கை போடு!’’ ன்னு நம்ம ஹிப்பித்தலை நன்பரும், அவருடைய தோஸ்த்தும் அலையாத நாளில்லையாம்.
‘‘அட... இந்த வித்தை முன்னமே தெரியாமப் போச்சே!’’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் எங்க ஆபீஸ் கவிஞர்.
புகைப்படங்கள், நன்றி: friendsofblackwater.org/harold decker, mikecurtis.com

Friday, May 23, 2008

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்த‌வர்,
"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.

"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.

"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.

கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.

இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.
எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?
''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.

ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.

பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.
சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.

நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.

கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.

Tuesday, May 20, 2008

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூலம்.


மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்.

ஆரம்ப காலங்களில் நரிக்குறவர்கள்தான் அதிகம் பச்சை குத்தி வந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்கள், எழுத்துக்களை சித்திர வடிவில் மனப்பாடம் செய்து பச்சை குத்தினர். மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு எற்ப நோய்களின் பெருக்கம் அதிகரித்தபோது, மருத்துவமனை ஊசிகளே பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிந்தது. நோயிலிருந்து பாதுக்காக இப்போது டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நரிக்குறவர்கள் ஆண்டுக் கணக்கில் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்துவார்கள் என்பதால், அவர்களிடம் யாரும் பச்சை குத்திக் கொள்வதில்லை. ஆனால், பச்சை குத்தும் மோகம் இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது. நாகரீகம், டெக்னாலஜியை உள்வாங்கிக் கொண்டு எங்கோ போய்விட்டது. இந்தியாவில் பிறந்த பச்சை குத்து, வெளிநாட்டுக்குப் போய் நவீன தொழில் நுட்பங்களுடன் மீண்டும் இங்கே கலர் கலராய் கால் பதித்துள்ளது. இன்று அதன் பெயர் 'டாட்டூ'.

மீரா லிடியா. தமிழகத்தின் சூப்பர் பச்சை குத்துக்காரி.

சென்னையின் இளசுகள் மட்டுமல்லாது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சல்லிசாக இவரிடம் வந்து குத்திக் கொள்கிறார்கள். ஆளைப் பார்த்தால் "கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு" என்று பாடத்தோன்றும். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிளாக் மேஜிக் என்கிற தன் டாட்டூ ஸ்டுடியோவில் வேலையே ஜாலியாக இருக்கிறார் லிடியா.

இவரது இன்னொரு பெயர் பாய்சன் ஐ.வி. "பேட்ஸ் மென் ஆங்கிலப் படத்தில் வரும் பாய்சன் ஐ.வி.ங்கிற வில்லி கேரக்டர் எனக்கு ரொம்...பப் பிடிக்கும்" என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டுகிறார். பார்த்தால், முதுகெலும்பைக் கைப்பிடியாகக் கொண்ட கத்தியைப் பிடித்தபடி அதில் எமன் முறைத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ லேடி எஸ்.ஐ பிஸ்டலை பிடிப்பது போல் 'டாட்டூ கன்'னை(பச்சை குத்தும் கருவி) எடுத்துக் காட்டி, தன் குருநாதர் ராஜுக்கு நமஸ்காரம் செய்பவர் "கேள்வியை நீங்கள் கேட்குதா? அல்லது நான் கேட்குதா?" என்கிறார்.

ஒரு தொழிலாக செய்யக்கூடிய அளவுக்கு டாட்டூ வரைந்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா. எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது?



இன்னா அப்டி கேட்டுட்டீங்க! ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதே தவிர குறையல‌. அப்பாயிண்ட்மென்ட் வாங்கின‌ பிறகுதான் ஸ்டுடியோவுக்கே வர முடியும். ஏன்னா... பச்சை குத்துறது ஒன்னும் லேசுபட்ட‌ விச‌யமில்ல‌. சொல்லப் போனா, வரைர‌திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை மன்ஷன் உடம்புல டாட்டூ போட்ற‌துதான்" என்கிறார்.

அப்படி இன்னாங்க பொல்லாத கஷ்டம்?

"ஒவ்வொருத்தரோட உடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். சிலருக்கு ரொம்ப மிருதுவான சருமம், சிலருக்கு நார்மல், சிலருக்கு கடினம்னு தசைகள் வேறுபட்டு இருக்கும். சாதாரணமாக ஒரு கான்வாஸிலோ, பலகையிலோ வரையும் போது கிடைக்கக் கூடிய க்ரிப் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போகும். இதனால் படமோ, எழுத்தோ எதுவாக இருந்தாலும் தவறாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ரொம்ப சாஃப்ட் பேர்வழிகளின் தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டுதான் வரைய ஆரம்பிப்போம். ஆண்கள் பெரும்பாலும் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களிளும் பெண்கள் பின் இடுப்பின் மேற்புறம் மற்றும் முழங்கால்களில் வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பேர் குத்துற‌து, கோலம் போடுற‌‌து ரெண்டைத் தவிர வேற என்ன ஸ்பெஷல் இதுல?


பேர் குத்திக்கிற‌து என்னமோ வாஸ்தவம்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி யாரும் புள்ளிக் கோலம்லாம் போட்டுக்க மாடாங்க. எல்லாமே மார்டன் ஆர்ட்தான். ஒவ்வொரு ஓவியத்துக்குப் பின்னாடியும் ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியே இருக்கும். அர்த்தத்தோடதான் டாட்டூ போடுறோம். ஒவ்வொரு நாளும் மண்டையை குடைஞ்சி நானாவே புதுப்புது கான்செப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். அதில்லாம... வர்றவங்க என்ன மாதிரி டிசைன் கொண்டு வந்தாலும் அதையும் போட்டு தருவேன். இப்ப உங்க லவ்வரோட போட்டோவை எங்ககிட்ட குடுத்துட்டா போதும். அச்சு அசலா அப்படியே உங்க உடம்புல ரியலிஸ்டிக்கா வரைஞ்சு வச்சிடுவேன். ஆனா, அதுக்கப்புறம் வர்ற பிரச்சினைக்கு நான் பொறுப்பு இல்லை.

அப்படின்னா, மாசத்துக்கு ஒரு டிசைன்னு உடம்புல வரைஞ்சிக்கிட்டு அசத்தலாம். என்ன, 500 ரூபா வாங்குவீங்களா! ஆமா... எவ்ளோ நேரம் பிடிக்கும் இதை வரைய. அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவீங்கள்ல?

ஹலோ... ஹலோ... என்ன, ஜஸ்ட் லைக் தட் பேசிட்டே போறீங்க? அஞ்சு நிமிஷமா? அஞ்சு நிமிஷத்துல நீங்க ஆப்பங்கூட சுட முடியாது. குறைஞ்சது மூணு மணி நேரத்திலருந்து பத்து மணி நேரம் வரைக்கும் ஆகும்.

இதோ நான் கால்ல வரைஞ்சுக்கிட்டிருக்கேனே! இதுக்கு மட்டும் பத்து மணி நேரம் ஆச்சு. இந்தா... கைல இருக்கே! இதுக்கு அஞ்சு மணி நேரம். அப்புறம் என்ன கேட்டீங்க. ஐநூறு ரூபாயா? குறைஞ்சது ஒரு 'ஸ்கொயர் இன்ச்'க்கு ஆயிரம் ரூபாய்.

நான் கால்ல போட்டிருக்கிற சைஸ்னா பத்தாயிரம் ரூபாய் ஆகும். நாங்க என்ன காட்டுல இருந்து முள்ளு பறிச்சிக்கிட்டா வந்து குத்தி விடுறோம். எல்லாமே அமெரிக்காவிலருந்து இறக்குமதி பண்ணியது. இங்க் எல்லாம் கூட ப்யூர் வெஜிடேரியன். அதாவது தாவரங்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்ட, சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அமெரிக்க அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

நமக்கு தலை சுற்றுகிறது...

"ஓவியங்களுக்குத் தகுந்த மாதிரி பச்சை குத்தும் கருவியில் பல்வேறு ஊசிகள் இனைக்கப்பட்டிருக்கும். இங்க்'கை தொட்டுத் தொட்டுதான் படம் வரைய முடியும். பெயிண்ட் ஸ்பிரேயர் மாதிரி பயன்படுத்த முடியாது. கோடுகளுக்குத் தகுந்த மாதிரியும், ஷேடுகளுக்குத் தகுந்த மாதிரியும் ஊசிகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கின்றன‌. மற்ற ஓவியங்களைப் போலவே இதிலும் எல்லாவிதமான வண்ணங்களையும் பயன்படுத்த முடியும்" என்று டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கிய லிடியா,

"மாசத்துக்கு ஒரு டிஸைன்னு பச்சை குத்திக்கிட்டீங்கன்னா, அப்புறம் உங்க உடம்புல எந்த இடமும் பாக்கி இருக்காது. ஏன்னா இது பர்மனென்ட் பச்சை.இதை அழிச்சிட்டு வேறு புதிதாக போட்டுக் கொள்வதற்கான ஆராய்ச்சியில் எங்க கோஷ்டி ஈடுபட்டிருக்கு. கூடிய விரைவில் சக்ஸஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்" என்கிறார் ஜாலியாகவும் சீரியஸாகவும்.

ம்ம்...நாமளும் பச்சை குத்திக்கலாம். ஆனா பர்ஸ்ல அவ்ளோ அமவுண்ட் இல்லீங்க.

Saturday, May 3, 2008

ஏ/சி பஸ்ஸும் நானும் -‍சின்னதாய் ஒரு பயணக் குறிப்பு.

பெரிய கட்டிடங்களையும் தாண்டி புழுதி பறக்க வீசிக்கொண்டிருந்த‌து கடற்காற்று. முகத்தை கைக்குட்டையால் மூடியபடி அலைந்து கொண்டிருந்தார்கள் மக்கள். சென்னை பூக்கடை பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம். 'குயின் எலிசபத்' சொகுசுக் கப்பல் மாதிரி சத்தமில்லாமல் வந்து நிற்கிறது 21-ஜி மாநகரப் பேருந்து. அதன் முகப்பில் இருக்கும் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் வழித்தடங்கள் ஒவ்வொன்றாக வந்து மறைகின்றன. கைக்குட்டையை எடுத்துவிட்டு 'ஆ' என்று வாய் பிளக்கிறார்கள் மக்கள். "என்னய்யா இது? கண்ணாடிக் கப்பல் மாதிரி வந்து நிக்குது! நம்ம ரூட்லயும் ஒண்ணு விட்டா காசு போனா போவுதுன்னு ஜாலியா ஏறிக்க‌லாம்" என்று ஆளாளுக்கு பேசிக்கொள்கிறார்கள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது வேடிக்கைப் பார்க்க. "பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சிப் பார்த்த மாதிரி"ன்னு வச்சிக்குங்களேன். மெல்ல ஒவ்வொருத்தராக பஸ்சுக்குள் நுழைகிறார்கள். ஏதோ மியூசியத்தைப் பார்ப்பது போல் அணுவணுவாய் ரசிக்கிறார்கள். தொட்டுப் பார்த்து சந்தோஷமடைகிறார்கள். பூக்கடை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்தே பிழைப்பு நடத்தும் தவழ்ந்து செல்லும் ஊணமுற்ற ஒருவர் கஷ்டப்பட்டு பஸ்சுக்குள் ஏறுகிறார்.

"ஒன்னும் டிஸ்டப் பண்றேன்னு நெனக்காதீங்க, துட்டு கேக்க வரல. சும்மா எப்டி கீதுன்ட்டு பாக்க வந்தேன்" ‍பயணிகளைப் பார்த்து கூறுகிறவர் "சோக்கா பண்ணிக்கிறான்யா...! பஸ்ச ஓட்டவே தேவல. இத்த மட்டும் ஏங்கிட்ட குடுத்தாங்கன்னு வச்சிக்கியேன்! சும்மா நின்ன எட்த்திலியே துட்டு பாத்துருவேன். ஒரு நிம்சம் சுத்திப் பாக்க ரெண்ருவா. பாட்டு கேட்டா அஞ்சி ருவா. ஒக்காந்து தூங்குனா... ஒன் அவர் முப்பது ருவா. செம்ம கலெக்சன் பாக்கலாம். இந்த ஐடியாலாம் அவுங்குளுக்கு எங்க வரப்போவுது!" என்று நொந்து கொள்கிறார்.

இவரின் களேபரங்களுக்கு நடுவில் "தள்ளுபா... தள்ளுபா..." என்று மக்களை விலக்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் வந்தமர்கிறார் ஒரு காக்கிச்சட்டை. "ம்... நல்லா சொகுசாத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கணும்..." என்று தனக்குள்ளாக முனுமுனுத்துக் கொள்கிறார். அந்தப் பேருந்தின் மத்தியில் உள்ளே காலியிடம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள், "இது என்னத்துக்குப்பா! குடும்பத்தோட உக்காந்து சோறு தின்றதுக்கா? கெகெக்கே..." என்று ஜோக்கடித்துச் சிரிக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் இருக்கைகள் நிரம்பி வழிய, பளிச்சென உடையணிந்து பக்கா ஷேவுடன் உள்ளே நுழைகிறார் கேப்டன் இளங்கோவன். அச்சு அசல் கப்பல் கேப்டன் போலவே தோற்றமளிக்கும் அவர்தான் 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த ஏ.சி. பஸ்சின் டிரைவர். அதுவரை அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாதா பஸ்சின் டிரைவர்.

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடற்கரைச் சாலையில் கால் பதிக்கிறது 21ஜி. சிம்ரன் ரேஞ்சிற்கு அது சீறிக்கொண்டு போகும் அழகைப் பார்த்து ஜொள்ளு விடாத‌வர்களோ, சைட் அடிக்காதவர்களோ யாரும் இல்லை எனலாம். செம்ம கிளாமராக அது சிக்னலில் நிற்கும் போது "விளைக்கைப் பார்ரா வெண்ணை" என்று வழிபவர்களை நோக்கிச் சொல்லாமல் சொல்லியபடி மீண்டும் விரைகிறது.

வழக்கமாக எங்கிருந்தாலும் பழங்கதைகளையே பேசிச் செல்லும் மக்கள், பயணிக்கும் பேருந்தப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். "இப்பதான் நான் பர்ஸ்ட் டைம் ட்ராவல் பண்றேன். ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கு. சென்னையைப் பொருத்த அளவில் பொல்யூஷன்தான் பெரிய பிராப்ளமே. இதனால் நூறு பேரில் பத்து பேருக்கு கேன்சர் வரும் வாய்ப்பிருப்பதா பத்திரிகையில் படிச்சேன். அது இல்லைன்னாலும் அட்லீஸ்ட் ஆஸ்துமாவாவது கண்டிப்பாக வந்துரும். எவ்வளவு சுத்தமாக வந்தாலும் திரும்பிப் போகும்போது ரொம்ப அழுக்காத்தான் போய்ச்சேர வேண்டியிருக்கு. அந்த வகையில் இது உடல்நலத்திற்கான பஸ்ன்னு கூட சொல்வேன்" என்கிற பத்மா சுந்தர் "குழந்தைகளை கூட்டிக்கிட்டு குடும்பத்தோட ட்ராவல் பண்றோம்னு வச்சிக்கங்களேன், தப்பித் தவறி பசங்களோ, பர்ஸோ மிஸ் ஆக சான்ஸே இல்லை. எல்லா விதத்திலயும் இது ரொம்ப சேஃப்டியான பஸ்" என்கிறார்.

"ஆபீஸ்ல, போறவர்ர இடங்கள்ல எல்லாம் ஏ.சி.யிலயே இருந்து பழகியாச்சா... இப்படி எங்கயாவது வெளியே போகும்போது புழுக்கம் தாங்க முடியலை. என்னதான் மீட்டரைப் போட‌ச்சொல்லி கவர்மெண்ட் பிரஷர் கொடுத்தாலும் ஆட்டோக்காரங்க கேக்கறதே இல்லை. சார்ஜை கேட்டா மயக்கமே வந்துடும். காசு ஒரு பெரிய விஷயமில்லைன்னாலும் நாம ஏமாத்த‌ப்படுகிறோம்ங்கிற உணர்வே டென்ஷனை உண்டாக்குது. இப்ப பிரச்சினையே இல்லை. நான், ஒரு காரை வாடைகைக்கு எடுப்பதைவிட காஸ்ட்லியாக ட்ராவல் பண்றேன். என்னதான் ஏ.சி. காரா இருந்தாலும் இந்தளவு சொகுசு வராதுங்கறது நிச்சயம். இதே ரேஞ்சிக்குப் போனா சென்னை ஒரு இண்டர்நேஷனல் சிட்டி ஆகறது வெகு தூரத்தில் இல்லை" என்கிறார் பாண்டியன் என்பவர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷங்கர் "பாஸ்! ஒரு விஷயம் கவணிச்சீங்களா? என்ன தான் பஸ்சு மதிப்பு 78 லட்சம்னாலும், புத்தம் புதுசுன்னாலும் கண்டக்டர் பேக் மட்டும் மாறவே இல்லை பாருங்க. அதே பழைய லெதர் பேக் தான்" என்று சொல்ல, கண்டக்டர் உட்பட எல்லோரும் கொல்லென்று சிரிக்கிறார்கள். மற்ற பஸ் கண்டக்டர்கள் மாதிரி பயணிகளிடம் எரிச்சல் காட்டாமல் ரொம்ப ஃபிரண்ட்லியாக பழகும் நடத்துநர் ராஜேந்திரன், "பின்ன என்ன சார்! இவ்ளோ வசதி பண்ணி குடுத்திருக்காங்கன்னா பயணிகள்கிட்ட அன்பா நடந்துக்க வேணாமா" என்கிறார்.

"சாதாரணமாவே நம்ம ஏரியால அனல் ஜாஸ்தி. இதுல வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு பஸ் ஏறினா நிக்க முடியாத அளவுக்கு கூட்டம். அப்போ பாத்து இடி மன்னர்கள், பிக் பாக்கெட் ரவுடிகள்னு மேலும் தொந்தரவு தாங்காது. ஆனா இந்த பஸ்ல அதெல்லாம் நோ சான்ஸ். ஏன்னா, எல்லாமே காமிராவுல பதிவாகிறதால‌ குற்றவாளிகளை அடையாளம் கண்டு நையப் புடைக்கலாம். அதிகமா காசு கொடுத்து ஆட்டோவிலோ, டாக்சியிலோ போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னைக் கேட்டீங்கன்னா இதுதான் ரியல் ஹீரோன்னு சொல்வேன்" என்கிறார் ராதா என்பவர்.

கெத்தாக பஸ் ஓட்டிச் செல்லும் ஹைடெக் டிரைவரான இளங்கோவன், ஒரு விமானி மாதிரி செயல்படுகிறார். அவர் எதிரில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள வயர்லஸ் அடங்கிய மைக் இருக்கிறது. பஸ்சைச் சுற்றி உள்ளேயும், வெளியேயும் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளிருந்தபடியே எல்.சி.டி மானிட்டரில் பஸ் எந்த நிலையில் பயணம் செய்கிறது என்பதையெல்லாம் இளங்கோவனால் கவனித்துச் செயல்பட முடிகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. "எப்டி சார் இருக்கு எங்க பஸ்சு? நல்லா இருக்கா? ஏ.சி.யைக் கொஞ்சம் கூட்டினேன்னு வச்சுக்கங்க, சும்மா ஊட்டிக்கே போய்டுவீங்க'' என்கிற இளங்கோவன், "இது மெட்ராஸ் இல்லை சார், மானிட்டரைப் பாருங்களேன்! சும்மா லண்டன் மாதிரி தெரியல?" -பெருமையுடன் கேட்டபடியே ஆக்ஸிலேட்டரை முடுக்குகிறார்.

Thursday, May 1, 2008

* தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற*


"செக்கச் சிவந்தவளே கண்ணம்மா ‍என்
பக்கம் வந்து பேசினாக்கா என்னம்மா
கண்ஜாடை காட்டுற காலில் கோலம் போடுற
தாவித் தாவி நடக்குற தாவணிய முறுக்குற''

கண்கள் முழுக்க காதலோடு கலாவைப் பார்த்து வேல்முருகன் பாடினால் மெட்டி ஒலி நெஞ்சைத் தழுவும்படி ஆடுகிறது கால்கள். வீட்டுக்குள் மூடுக்கேத்த மாதிரி தெம்மாங்குப் பாட்டு, திரையிசை பாட்டு, கர்னாடக இசை என மாறி மாறி ஒலிக்கிறது. தாளத்திற்குத் தகுந்தபடி ஆட்டம் மாறினாலும், மாறாத அன்போடு ஜொலிக்கிறது காதல்.

சென்னை குட்டி கிராமணித் தெருவில், அந்த ஒண்டுக் குடித்தனத்தில் உலை கொதிக்கும் ஓசைகூட ராகத்தை அடிப்படையாகக் கொண்டே ஒலிக்கிறது. மூடியிருக்கும் தட்டு கலாவைக் காப்பியடித்து 'தையத் தக்கா, தையத் தக்கா'வென ஆடிக்கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இந்த "இசைபட வாழ்தல்".


விஜயகாந்த் ஜெயித்த விருத்தாசலம் அருகே முதனை கிராமம் தான் வேல்முருகன் பிறந்தது. "காலைல பனம்பழம் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனா, மத்தியானம் மாங்கா அடிக்கிறது, வேப்பங்கொட்டைய வெரல்ல நசுக்கி ரத்தம் வரவக்கிறது, திரும்பி வரும்போது சோறு வாங்குற‌த் தட்டுல மோளம் அடிச்சிக்கிட்டே பாட்டுப் பாடுறதுனு கள்ளங் கபடமில்லாத கிராமத்து வாழ்க்கை அது.

வருஷா வருஷம் எங்கப்பா ஐய்யப்பன் கோயிலுக்கு மாலை போடுவாரு. எனக்கு அம்மா இல்ல. அவருகூடவே எந்த நேரமும் 'சாமியே! அய்யப்பா...'ன்னு பாடிக்கிட்டே திரிவேன். அப்ப நான் எட்டாவது படிச்சினு இருந்தேன். புஷ்பவனம் குப்புசாமி பாட்டு ஊரெல்லாம் பேமஸா இருந்தது. வகுப்புல வாத்தியாரு இல்லாத நேரமாப் பாத்து 'ராசாத்தி உன்ன என்னி ராப்பகலா கண் விழிச்சேன், ராப்பகலா கண் விழிச்சேன் ராணி உன்ன கைப்புடிச்சேன்'னு ராகத்தோட பாடினேன்.

திடீர்னு வாத்யார் வந்துட்டாரு. 'யார்ரா அவம் பாட்டுப் பாடுனது? மரியாதையா எழுந்து நில்லு. இல்லனா தொலச்சிருவேன்'ன்னு மெரட்டி, 'வாடா எச்.எம்.கிட்ட'ன்னு இழுத்தும் போய்ட்டாரு. என்னை வெளியில நிக்க வச்சிட்டு எச்.எம்.மும் அவரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்க. நான் நடுங்கிக்கிட்டே நிக்கிறேன். எச்.எம். என்ன‌க் கூப்ட்டு 'என்னாடா! ஆளில்லாத நேரம் பாத்து க்ளாஸ்ல பாட்டுப் பாடறியாமே... எங்க, பாடு பாப்போம்'னு கேட்டாரு. நான், 'ராசாத்தி உன்ன என்னி' பாடினேன். அடிக்கப் போறார்னு பாத்தா! எம் முதுகுல தட்டிக் குடுத்துட்டு, 'நம்ம ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கலெக்டர் வர்ராரு. அப்ப இதப் பாடி அசத்துற. உனக்குத் தான் பர்ஸ்ட் பிரைஸ்'னு சொல்லிட்டாரு. அதே மாதிரி கலெக்டர் முன்னாடி மேடைல பாடி பரிசு வாங்கினேன். அது தான் என்னோட முதல் அங்கீகாரம்'' என்று தன் ஆசிரியர் ராஜேந்திரனைப் பற்றி நெகிழ்ந்து கூறுகிறார் வேல்முருகன்.

"அதுக்கப்புறம் எங்கப் போனாலும் பாட்டுத்தான். விருத்தாசலத்துல சில நன்பர்கள் டீ வாங்கித் தருவாங்க, நாம் பாடுவேன். 'வேல் முருகா! உன் தெறமைக்கு எங்களால டீ தான்டா வாங்கித் தர முடியும். அதனால எப்பாடு பட்டாவது நீ மெட்ராஸ் போய் முறைப்படி சங்கீதம் கத்துக்கடா. நிச்சயம் பெரியாளா வருவே'ன்னு ஊக்கப்படுத்துவாங்க. அதன் பிறகு அடையாறு அரசு இசைக் கல்லூரில சேர்ந்து வாய்ப்பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆஸ்டல்தான் நான் தங்கிப் படிச்சது. காலேஜ்ல இருந்து ஹாஸ்டலுக்கு நடந்தே போவேன். ஏன்னா, பஸ் காசு மிச்சம். அதோட ஹாஸ்டல்ல சாதகம், பிராக்டீஸ்னு பண்ண முடியாது. சினிமாப் பாட்டுன்னா பசங்க கேப்பாங்க. அங்க போய் ச..ரி..க..ம..னு சொன்னா அவ்ளோ தான். அதனால இப்டி வழியில நடக்கும் போதே பிராக்டீஸ் பண்ணிக்குவேன். இப்படி நடக்குறதுல இன்னொரு அட்வான்டேஜும் இருக்கு. வழி நெடுக ஒரு போஸ்டர் விடாம படிச்சிக்கிட்டே வருவேன். எங்கயாவது இசை நிகழ்ச்சி நடந்தா, போய் ஆஜராகிடுவேன்.

அப்படித்தான் ஒரு நாள் காமராஜர் அரங்குல ஜானகி அம்மாவோட கச்சேரி. கொறஞ்சது 50 ரூபா டிக்கெட். எங்கிட்ட நையா பைசா இல்ல. எப்படியாவது உள்ள போய்டனும்னு தவிக்கிறேன். அப்பத்தான் கடவுள் மாதிரி அந்த போட்டோகிராபர் உதவி பண்ணாரு. அவர் பேர் சந்ரு. 'அய்யா! அய்யா! இந்த மாதிரி நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிறேன். ஜானகி அம்மாவ நேர்ல பாக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. நீங்க தான் உதவனும்'னு அவர்கிட்ட கெஞ்சினேன். என்ன உத்துப் பாத்துட்டு, அவரோட கேமிரா பேகை தூக்கி என் தோள்ல மாட்டி, உள்ள கூட்டிட்டுப் போய்டாரு. நிகழ்ச்சி முடிஞ்சு ஜானகியம்மா வர்றப்போ தொபீர்னு போய் கால்ல விழுந்துட்டேன். இதே போல எஸ்.பி.பி, இளையராஜா, எம்.எஸ்.வி'னு எல்லாரையும் நேர்ல பாத்துட்டேன்.


பர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள் சன் டி.வி. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சில கலந்துக்க வாய்ப்புக் கெடச்சிது. அந்தப் போட்டியில சிறந்த குரல் வளம் மற்றும் முதல் பரிசு, ஒரு பவுன் தங்கக் காசு ஜெயிச்சேன். 'எவ்ளோ பெரிய சாதனை பண்ணிட்டோம்'னு மனசு பூரா சந்தோஷம். இந்த வெற்றிதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போச்சு'' என்ற வேல்முருகனை இடை மறித்து உங்கள் காதல் எப்ப ஆரம்பிச்சது? என்றோம்.

"ஒரு சமயம் கார்கில் போர் வீரர்கள் பத்தி கவிதை எழுதி, அதை நம்ம அப்துல் கலாம் சாருக்கு அனுப்பி வச்சேன். 'ரொம்ப நல்லா இருந்தது'ன்னு அவர் பதில் கடிதம் போட்டார். அந்தக் கவிதைகளை காலேஜ் ப்ரேயர்ல பிரின்சிபல் வாசிச்சுக் காட்டினாங்க. எங்க காலேஜ்லயே பரதநாட்டியம் பதிச்சிட்டிருந்த கலா, அப்போ என்னை சந்திச்சு வாழ்த்து தெரிவிச்சாங்க. அது தான் நாங்க முதன் முதலா அறிமுகம் ஆனது. எதிர் பாராத விதமா ஒரு நிகழ்ச்சி முடிஞ்சு நாங்க ரெண்டு பேரும் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியா வந்துட்டிருந்தோம். அப்போதான் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்கள?'ன்னு கலாவிடம் கேட்டேன்'' என்பவரை கையமர்த்திவிட்டு

"இப்படி திடீர்னு கேட்டது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலையா?" என கலாவிடம் கேட்டால், "இல்லை. ஏன்னா, அவர் எங்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்லாம 'பிடிச்சிருந்தா வீட்ல கேட்டுட்டு பதில் சொல்லு'ன்னார். அதோட இவரைப் பத்தி காலேஜ் முழுக்க நல்ல அபிப்ராயம் இருந்ததும் தெரியும். அதனால, 'யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன்'' என்கிறார்.

"அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சி. ஊருக்குப் போறதுக்காக காலேஜ் பஸ் ஸ்டாப்ல கலா நின்னுட்டிருந்தாங்க. வேலூர் பக்கத்துல வாலாஜாப்பேட்டைதான் கலாவோட சொந்த ஊர். சரி வாஙக, நான் வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு, புரசைவாக்கத்துல இருக்கிற சிவன் கோவிலுக்குப் கூட்டிட்டுப் போனேன். அங்க வச்சி தான் என்னைப் பத்தின எல்லாத் தகவல்களையும் கலாவிடம் சொன்னேன். நான், என்னோட வீடு, எனக்கு இப்ப அப்பா, அம்மா யாருமே இல்லை என்பது, மாங்கா திருடி அடி வாங்கினதுன்னு ஆரம்பிச்சி கடைசியா நான் ஒரு 'தலித்' என்பதையும் சொன்னேன்" என்கிற வேல்முருகனிடம்,

"நீங்க ஒரு தலித். அதுவும் ஏழைன்னு வேற சொல்றீங்க. இவங்களோ பணக்கார குடும்பம். ஜாதியிலயும் சௌராஷ்டிரா. கண்டிப்பா ஜாதி பிரச்சினை வரும். அப்படி இருக்கிறப்போ எந்த தைரியத்துல நீங்க காதலைத் தெரிவிச்சீங்க?"

"நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆரம்பத்துல எனக்கு பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப தாழ்வு மனப்பாண்மை இருந்தது. நாம கருப்பா, உயரம் இல்லாம, அழகில்லாம இருக்கோம்னு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கச்சேரிகள்னு பண்ண ஆரம்பிச்சேன். எம்மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துட்டது. கண்டிப்பா நாம பெரிய ஆளா வருவோம். இவளை ரொம்ப சந்தோஷமா வச்சுக்குவோம்ன்ற தெம்பு வந்தது. அதோட கலா என்ன ஜாதி, எவ்ளோ வசதிங்கறது பத்தி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்" என்கிறார் வேல்முருகன்.

விட்டதைத் தொடர்கிற கலா, "ஊர் போய் சேர்ந்ததும் இவர் சொன்ன மாதிரியே வேல்முருகனைப் பத்தி எடுத்துச் சொல்லி வீட்ல பர்மிஷன் கேட்டேன். 'உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா படிக்க அனுப்பிச்சா, லவ் பண்றதைப் பத்தி எங்ககிட்டயே சொல்லுவ. நீ படிக்கவே வேணாம்'னு சொல்லி ஹவுஸ் அரஸ்ட் வச்சிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு இவருக்கு தவல் அனுப்பிச்சேன். அதுக்குப் பிறகு..." கலாவை இடைமறித்துவிட்டு வேல்முருகன் சொல்கிறார்...

"கலா வீட்டுக்குப் போன் பண்ணி நானே அவங்க அப்பா, அம்மாகிட்ட பேசினேன். இதப் பாருங்க. நீங்க நெனைக்கிற மாதிரி நாங்க மோசமான ஆளா இருந்தா, இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எங்கயாவது ஓடிப் போயிருப்போம். இப்ப எக்ஸாம் ஆரம்பிக்கப் போறாங்க. நீங்க உங்க பொண்ண காலேஜ் அனுப்பலைன்னா பாதிக்கப்படப்போறது நீங்கதான். கலாவோட மூனு வருஷப் படிப்பு வீணாப் போயிரும். ஏன் எக்ஸாம் எழுதப் போகலைன்னு அக்கம் பக்கத்துல சந்தேகமா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால எங்க மேல நம்பிக்கை இருந்தா தயவு செஞ்சு காலேஜ் அனுப்புங்கன்னு கேட்டேன். அவங்களும் அனுப்பிச்சுட்டாங்க. கலா இங்க வந்த பிறகு, 'கண்டிப்பா எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க எனக்கு வேற மாப்பிள்ளை தேடுறாங்க. அதன்னால நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்'னு கேட்டாங்க. ரொம்ப யோசனைக்குப் பிறகு பரிட்சைக்கு பத்து நாள் முன்னாடி பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டோம்".

"அது சரி. எந்தப் பெற்றோர்தான் எடுத்த உடனே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க. இத்தனை வருஷமா பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மறந்து இப்படி செய்தது நியாயமா?" கலாவிடம் கேட்டால்,

"அவங்க ஜாதியை மட்டும்தான் பெரிய குற்றமா பாத்தாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. வேல்முருகன் மீது வேறு எந்தக் குற்றமும் சொல்ல முடியல. மிஞ்சிப் போனா அவங்க என்ன பண்ணியிருப்பாங்க. அவசர அவசரமா ஒரு பையனைப் பாத்து கல்யாணம் முடிச்சிருப்பாங்க. அவன் நல்லவனா இருப்பாங்கறது என்ன நிச்சயம்? என்னோட பரதநாட்டியத்தை தொடர வாய்ப்பு கிடைச்சிருக்குமா? இல்ல... மேற்கொண்டு மாஸ்டர் டிகிரி தான் படிச்சிருக்க முடியுமா? இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எத்தனை கோடி செலவழிச்சிருந்தாலும் இது எனக்கு கிடைச்சிருக்காது. இப்பவும் எங்க குடும்பத்து மேல பாசம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக வேல்முருகனையா விட்டுக் கொடுக்க முடியும்?'' என்று நெத்தியடியாகக் கேட்கிறார்.

இன்றுவரை இவர்களை கலாவின் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவுத் திருமணத்திற்கு பிறகு தாலி கட்டாமல் ஒரு வருடம் குடும்பம் நடத்திய இந்த ஜோடி, கடந்த ஆண்டு மே 13ம் தேதி விருத்தாசலத்தில் வைத்து விமரிசையாக கல்யாணம் செய்து கோண்டது. வரவேற்பில் "மனமகன் பாடினார், மனமகள் ஆடினார்'. என்ற தலைப்பிட்டு நாளிதழ்கள் இந்த ஜோடியை அமர்க்களப்படுத்தின. பிறகு நிறைய பத்திரிகைகள் இவர்களை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளாமல் செய்தி வெளியிட்டிருக்கின்றன. குங்குமம் ரெண்டு பக்கம், ராணி ஒரு பக்கம் என்று அவர்களாகவே பேட்டி என்று எழுதிக்கொண்டார்களாம்.

தற்போது டி.வி. நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவற்றில் கிராமியப் பாடல்கள், கர்னாடக இசைப்பாடல்கள் என்று வேல்முருகன் பொளந்துகட்ட, பரதநாட்டியத்தால் அரங்கத்தைக் கட்டிப் போடுகிறார் கலா. தூர்தர்ஷன் வேல்முருகனது பாடலை பதிவு செய்தபின் அவரது கிராமத்திற்கே போய் அவரது யதார்த்தமான வாழ்வியல் பின்னனியோடு ஒளிபரப்பிய‌து குறிப்பிடத்தக்கது. தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம் என்று சகல ஆட்டங்களும் கலாவுக்கு அத்துப்படி. இன்று வேல்முருக்கனுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. கலாவுக்கு இருவரும் இருந்தும் யாருமில்லை. ஆனால் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்புக்கு 98408 31341.

Sunday, April 20, 2008

துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம்?


''குட்டி ரேவதியா? அவ துப்பட்டாவைக் கையில் எடுத்துக்கிட்டு திரியிறவளாச்சே!’’ சண்டைக்கோழி படத்தில் இப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதப்போக, அது கவிஞர் குட்டி ரேவதியைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக இலக்கிய உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலையை, ‘துப்பட்டா அணியாமல் வந்திருந்தார்’ என்று அவமானப்படுத்தி வெளியே அனுப்பியது கல்லூரி நிர்வாகம். குட்டி ரேவதியின் கவிதைத் தலைப்பாகட்டும், செக்ஸ் சர்வே குறித்த குஷ்புவின் கருத்தாகட்டும் அல்லது லீனா மணிமேகலையின் குர்தா, ஜீன்ஸாகட்டும். எப்படி உடையணிய வேண்டும் என்கிற பெண்களின் தனிப்பட்ட உரிமையைக்கூட ஆணாதிக்கச் சமுதாயம்தான் தீமாணிக்கிறது என்கிற விவாதம் எழுதப்படாமலும், பேசப்படாமலும் போனதுதான் பேரதிர்ச்சியாய் இருக்கிறது.

லீனாமணிமேகலை இயக்கிய ‘தேவதைகள்’ குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி அலியான்ஸ் பிரான்ஸேவில் நடைபெற்றது. விழாவுக்கு இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், அமீர் போன்ற திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர். தழையத், தழைய புடவை கட்டித் தானும் ஒரு தேவதைபோல் மின்னிக்கொண்டிருந்தார் லீனா. புடவைக்கு துப்பட்டா அவசியமில்லாமல் இருக்கலாம். பதிலாக காதுகளை மறைத்தபடி கன்னத்தின் இரு புறமும் விளையாடிக் கொண்டிருந்தது கூந்தல். 'தலைப்புக்கேற்றார்போல் லீனாவும் தேவதைபோல்தான் வந்திருக்கிறார்' என்று நினைத்துக் கொண்டேன். ஏனோ, திடீரென்று ஆடைப்புரட்சி நினைவுக்கு வர, மனம் கல்லூரிச் சாலையிலிருந்து கிளம்பி லயோலா கல்லூரிக்குள் வலம் வந்தது. படித்துக் கிழித்தப் பாமரனும், பத்திரிக்கையாளர் ஞாநியும் பாடாய்ப்படுத்தத் தொடங்கினர். இதோ! அன்று லீனாவோடு பேசிக்கொண்டிருந்ததை இப்பொழுது பதிவிடுகிறேன்.

‘‘சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் ‘கனாக்களம் -2007’ என்கிற தலைப்பில் கடந்த ஜனவரி 15-ம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ‘சினிமாவும் சமூகமும்’ என்பது பற்றி நான் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி அழைத்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை பத்துமணியளவில் கல்லூரிக்குச் சென்ற போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ‘உங்களை உள்ளே விட முடியாது’ என்று கூறித் தடுத்தார். ‘நான் இங்கே சீப் கெஸ்டாக வந்திருக்கேன். இதோ பாருங்க இன்விடேஷன்ல என் பேர் போட்டிருக்கு’ என்று அழைப்பிதழை எடுத்துக் காட்டினேன். ‘நீங்க யாரா வேணாலும் இருங்க. துப்பட்டா இல்லாம ஜீன்ஸ§ம், குர்தாவும் போட்டிருக்கீங்க. அதனால உள்ளே விட முடியாது’ என்று மீண்டும் மறுத்தார்.

எனக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. ஆத்திரப்படுவதா? அழுவதா? என்றே தெரியவில்லை. ‘நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை... தாலிபான்களின் கோட்டையில் கால்வைத்து விட்டோமா?’ என்று நொந்தபடி நன்பர் அஜயன் பாலாவிற்கும், நிகச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் போன் செய்தேன். சில நிமிடங்களில் புடவை அணிந்த சில கல்லூரி மாணவிகள் கையில் கருப்புத் துப்பட்டாவோடு ஓடி வந்தார்கள். ‘ப்ளீஸ் மேடம்! இதை கழுத்தில் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க’ என்று கெஞ்சலாக அழைத்தார்கள். எய்தவன் இருக்க அம்புகளை நோவதா? ‘‘சுதந்திரமாக உடையணியக் கூட உரிமைகள் மறுக்கப்படும் ஒரு அடிமைகளின் கூடாரத்தில், என்னால் உங்களுக்கு என்ன கூறிவிட முடியும்?’ என்று சொல்லித் திரும்பிவிட்டேன்.

பெண்ணடிமைத்தனம், தனிமனித சுதந்திரம் பற்றி பல தளங்களில் பேசியும், எழுதியும் வரும் என்னை ‘பெண் என்பதால் நீ அடிமைதான்’ என்று முகத்திலறைந்தாற்போல் விரட்டியது பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது. ஜீன்ஸ§ம், குர்தாவும் அணிந்துவர தடை இருப்பதாக முதலிலேயே சொல்லியிருந்தால் விழாவுக்கு மறுத்திருப்பேன். நான் என்ன உடை உடுத்த வேன்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைத் தீர்மாணிக்கும் அதிகாரத்தை லயோலா கல்லூரிக்கு யார் கொடுத்தது? பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஒருவர் நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கும்போது, நமக்கு சவுகர்யமான உடையணியக்கூட நாதியில்லையே!

நீ இன்ன உடைதான் போட வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வளவு ஆணவமான போக்கு. அடிமைத்தனத்தை மறுக்க வேண்டும் என்பதற்காக கடவுளையே மறுப்பவள் நான். இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றின் மாணவர்கள், நான் என்ன பேசுகிறேன் என்பதைக் கவணிக்காமல், என்னுடைய உடைகளில் சபலமடையக்கூடிய கீழ்த்தரமான புத்தியுடன் இருப்பார்கள் என்று நிர்வாகம் நம்புமானால், இதுவரை என்ன மாதிரியான கல்வியை அவர்கள் கற்றுத்துந்டிருப்பார்கள்?

சமூக விழிப்புணர்வை போதிக்காமல், பெண்களை இழிவுபடுத்தும் அடிமைத்தனத்தை கற்றுத்தரும் கல்வி நிறுவணங்கள் பேசாமல் சாமியார் மடங்களை நடத்தலாம். புரட்சி இறையியல் என்ற போர்வையில் உலகை ஏமாற்றும் பழமைவாத லயோலா நிர்வாகத்திற்கு அதுதான் பொருத்தமாக இருக்கும். ஒரு விருந்தினரை அழைத்து கையில் துப்பட்டா கொடுக்கும் இவர்களுக்கு பக்கத்து நாட்டுப் பிரதமரோ, மேலை நாட்டு மாணவர் குழுவோ வரும் போது துப்பட்டா கொடுக்க தைரியம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கியவர் கொஞ்சமும் படபடப்புக் குறையாமல் தொடர்ந்து பேசினார்.

‘‘நான் தமிழாநாட்டில் எத்தனையோ பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறேன். அடிப்படை வசதிகளே இல்லாத சுமார் இரண்டாயிரம் கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். கல்வியறிவு இல்லாத பாமர மக்கள்கூட ஜீன்ஸ் போட்டதற்காக என்னை வெறுத்து ஒதுக்கியதில்லை. ஆனால் பாமரன், ஞானி, எஸ்.ராமகிருஷ்ணன், அஜயன் பாலா போன்ற எழுத்தாளர்களும், இயக்குனர்கள் பாலுமகேந்திரா, வசந்தபாலன் ஆகியோரும் இதே நிகழ்ச்சியில் எந்த உறுத்தலுமின்றி உறையாற்றிச் சென்றிருக்கிறார்கள். ஏன்?

அவர்களுக்கு துப்பட்டா பற்றிய சங்கடம் ஏதுமில்லை என்பதுதான். பாலுமகேந்திராவும், ஞானியும் இரண்டு நாட்கள் கழித்து, தங்களுக்கு இந்த விஷயமே தெரியாது என்று தொலைபேசியில் கூறினார்கள். பெண்ணுரிமை, முற்போக்கு வாதம் என எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய படைப்பாளிகள், இப்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால், எங்கோ தேசத்தில் நடக்கிற கொடுமைகளைக் கண்டு பொங்கியெழும் முற்போக்குவாதிகள் பக்கத்தில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டு மவுனம் சாதிப்பதுதான் வேதனை’’ என்றார்.

‘‘இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று லயோலா கல்லூரியில் விதிமுறை இருக்கிறது. அது பிடிக்கவில்லை என்று நிகழ்ச்சியைப் புறக்கணித்து லீனா வெளியேறிவிட்டார். இந்த விஷயத்தில் இரண்டு பேர் செய்ததும் சரியே. சண்டைக்கோழி படத்தில் குட்டி ரேவதியை அவமானப்படுத்தியதாக கொதித்தெழுந்த லீணாமணிமேகலை, சிவாஜி படத்தில் அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்களை கருப்பு மை பூசி அவமானப்படுத்தினார்களே! அப்போது எங்கே போயிருந்தார்’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் எழுத்தாளர் பாமரன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தொடர்ந்து பேசிய லீனாமணிமேகலை ‘‘அங்கவை, சங்கவை இரண்டும் தமிழ்ப் பெயர்கள் என்பதற்காகத்தான் பாமரன் வரிந்துகட்டினாரே தவிர அவர்கள் பெண்கள் என்பதால் அல்ல. பெண்கள் இப்படித்தான் உடை அணிந்துவர வேண்டும் என்கிற ஆனாதிக்க சிந்தனையை பாமரன் ஆதரிக்கிறாரா, இல்லையா? என்பதுதான் கேள்வி. பெண்களின் உடைகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்வதே ஆண்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. இதற்கு பதிலாக உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி வாடும் நாட்டுமக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கட்டும்.

பெண்கள் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதால்தான் ஈவ்டீசிங் பெருகிவிட்டது என்கிறார்கள். கவர்ச்சியான உடை என்றால் இடுப்புத் தெரிய உடுத்தும் புடவையைத்தானே முதலில் தடை செய்ய வெண்டும்! எதிரில் வரும் வாகணத்தைக்கூட கவணிக்காமல் அங்கங்கே இழுத்து... இழுத்து... சரி செய்தபடி செல்லும் பெண்ணுக்குத்தான் தெரியும், புடவையில் உள்ள அசவுகர்யம். உடையைப் பார்த்து அத்துமீறத் துனிபவனை விட்டுவிட்டு பாதிப்படைந்த பெண்ணைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது அயோக்கியத்தனம். தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று ஒரு பெண்ணுக்குத் தெரியும். முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்வது பற்றி ஆண்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’’ ஒட்டுமொத்தக் குமுறல்களையும் கொட்டித் தீர்த்தார் லீனா.

குட்டிரேவதியிடம் இது விஷயமாக பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘லீனா எப்படிப்பட்டவர், என்ன மாதிரியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர், எந்த விதத்தில் உடை அணிந்திருப்பார் என்கிற எல்லா விஷயங்களும் லயோலா கல்லூரிக்குத் தெரியும். சினிமா சம்பந்தமான லீனாவின் பேச்சுக்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவரது ஆடை மட்டும் அச்சமூட்டுகிறதோ?

எப்போதுமே சினிமா பிரபலங்களைக் கூப்பிட்டுத் தங்களை பெருமையடித்துக் கொள்ளும் லயோலா நிர்வாகத்திற்கு இதன்மூலம் செலவில்லாமல் விளம்பரம் கிடைத்திருக்கிறது. வியாபார ரீதியிலான, மலிவான சிந்தனைகளையுடைய, வெகுஜன நுகர்வுகளின் அடிமைகளை உற்பத்தி செய்யும் லயோலா நிறுவனத்திடமிருந்து விழிப்புணர்வுடன் கூடிய மாணவர்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இதுவரை மத நிறுவனங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்போது கல்வி நிறுவனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. என்னதான் அறிவாற்றல் கொண்டவளாக, திறமையானவளாக இருந்தாலும், பெண்ணை ஒரு பாலியல் குறியீடாகவே பார்க்கும் இச்செயல் மிகக் கீழ்த்தரமான, வண்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’’ என ஆவேசப்பட்டார்.

தொடர்ந்து, ‘‘இப்போது எல்லா மதிப்பீடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் ஒன்று சேர முடியாதபடி பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டனர். ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களையும் எதிர்பார்க்க முடியாது. ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ எல்லாம் உங்களின் பாதுகாப்புக்காகத்தான் என்று ஆண்கள் கூறுவதை நினைத்தால் எரிச்சலாக வருகிறது. இதை பாதுகாப்பான சூழலாகவே உணர முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டாம். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய அதிகாரம்தான் தேவை’’ என்கிறார் குட்டிரேவதி.

லயோலா கல்லூரிக்குச் சென்ற இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் பெரியாரியவாதியான ஓவியா ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், ‘‘இந்த விஷயத்தில் எங்களால் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க முடியாது. ‘நமக்கென்று உள்ள பன்பாட்டை மீறக்கூடாது’ என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. விருந்தினர்களைப் போற்றுவதும் பன்பாடுதான். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையையே நிர்வாகம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது’ என்றும் தடை விதிப்பார்கள். இது வண்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்றார்கள்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலையிடம் பேசியபோது, ‘‘அவர் டைட் ஜீன்ஸ§ம், ஸ்லீவ்லெஸ் குர்தாவும் அணிந்து மாணவியைப் போல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். அதனால்தான் காவலர்கள் தடுத்துள்ளனர். ஏதோ ஃபேஷன் ஷோவுக்கு வருவதைப்போல்தான் அவர் கல்லூரிக்கு வந்திருக்கிறார். ஒரு கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே கருத்தைச் சொல்ல வேண்டியவர் மார்கெட்டிற்குச் செல்வதைப் போல உடையணிந்து வரக்கூடாது. கல்லூரி என்பது கோவிலுக்குச் சமம். இதை அந்தம்மா உணர வேண்டும்’’ என்றார்.

லீனா மணிமேகலைச் சொல்வதுபோல், ‘‘பெண்களைப் பிரித்தாளும் ஆண்களின் சூழ்ச்சியால், இந்த அவலம் பெருமளவிலான விவாதத்துக்கு உள்ளாகாமலே போய்விட்டது’’. ஞாநியின் ஓ பக்கங்களோ, பாமரனின் படித்துக் கிழித்ததோ இது பற்றி எதுவுமே பேசாமல் வாய் மூடிக்கொண்டது, பத்திரிகை வாசகர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்குமென்று நம்பலாம்.

Tuesday, March 11, 2008

"கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை" -அழ‌கிய‌ பார்வதி.

"கவிதைகள் எப்பொழுதும் அழகு தான்
சில சமயம் கவிதாயினியைப் போல"
இந்த வரிகள் பார்வதிக்குப் பொருத்தமாக இருக்கும். பார்த்தவுடன் பிடித்துப் போகிற கனிவானத் தோற்றம், இனிதான குரல் வளம்.பேனா முனை என்பது படைப்பாளிகளுக்கு பெரும்பாலும் கவிதையிலிருந்து தான் தொடங்குகிறது போலும்.அந்த வகையில் "இப்படிக்கு நானும் நட்பும்" என்கிற கவிதைத் தொகுப்பபின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள அழகான கவிஞர் பார்வதி.

அழகைக் குறிப்பிட காரணம் இருக்கிறது. அடிப்படையில் பார்வதி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். பத்திரிகையாளர் ஞானியின் பரிக்ஷா நாடகக் குழுவில் பயின்று தேர்ந்தவர். பல்வேறு குறும்படங்களில் நடித்திருக்கிற பார்வதிக்கு சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது. சும்மா கேஷுவலா ட்ரெஸ் மாற்றினாலே போதும், இன்னொரு ஆளாகத் தெரியக் கூடிய அம்சம் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருக்கிறது. "இப்படி கெட்அப் சேன்ஜ் ஆகிற விஷயம் பற்றி பல முறை ஃபிரண்ட்ஸ் என்னிடம் கேட்டதுண்டு" என ஆச்சர்யப்படுகிறார். அகில இந்திய வானொலியில் கலைஞர்களைப் பேட்டி கான்பது, குரும்படங்களுக்கு பின்னனிக் குரல் கொடுப்பது, பத்திரிகையில் ஃபிரீலான்சர் என்று பன்முகத் திறமையுடன் திகழ்கிறார் பார்வதி.


சின்ன வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதா? கவிஞர் ஆனது எப்படி நிகழ்ந்தது?

எழுத்தை தொழிலாகக் கொள்வதற்கான எந்தத் திட்டங்களும் பால்ய வயதில் என்னிடம் எழவில்லை. குடும்ப சூழல் காரணமாக ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயம் கம்பீரமான உருவங்கள் மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் பாரதி, சுபாஷ் சந்திர போஸ், விவேகானந்தர் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தார்கள். பாரதியின் கவிதைகள் தான் எனக்குள் பொரியைக் கிளப்பியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பாரதி அளவுக்கு பெருங்கோபம் என்னிடம் இல்லை என்றாலும், கொஞ்சமே சீரியஸான ஆள் நான். பொது இடங்களில் ஈவ் டீசிங் மாதிரியான கொடுமைகள் நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காமல் தட்டிக் கேட்பேன்.

பாரதியின் கவிதைகளைத் தொடர்ந்து அதே ஆர்வமுடன் மற்ற கவிதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் எமிலி டிக்கன்சன், ராபர்ட் ஃபிராஸ்ட் ஆகியோர் என்னை மிகவும் பாதித்தவர்கள். ஆக்ஸ்போர்ட் புக் ஸ்டோர்.கம் என்கிற இனைய தளம் ஆங்கிலத்தில் ஒரு ஹைகூ கவிதைப் போட்டி நடத்தியது. அப்போதுதான் முதன் முதலாக ஒரு ஹைகூ எழுதி அனுப்பி வைத்தேன். தேர்வாகி விட்டது. அன்றிலிருந்து எழுத்து எனக்கு சாப்பாடு தூக்கம் போல ஆகிவிட்டது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத முடியும் என்பதை என் கூடுதல் பலமாகக் கருதுகிறேன். தற்போதைய தொகுப்பு நட்பு என்றாலும் அடுத்தடுத்த என் அனுபவங்களைப் பொறுத்து கவிதைத் தளம் விரிவடையும்.

உங்கள் கவிதைகளில் நட்புக்கும், காதலுக்கும் இடையில் ஊசலாடுவது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே. ஆண், பெண் நட்பில் இப்படியான சிக்கல் தவிற்க முடியாத ஒன்றாகக் கருதலாமா?

சமூகம் என்ன சிந்தனையில் கிடக்கிறதோ அதே நினைப்பில் கேள்வி கேட்கிறீர்கள். என்னுடயது நட்பு மட்டும்தான். நீங்களும் நானும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தால் பலரும் பலவிதமாய் பார்க்கத் தான் செய்கிறார்கள். கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை. நம்மைக் காதலர்கள் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் மனம்தான் நாறிக் கிடக்கிறது. மஞ்சற் காமாலை வந்தவர்களுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

சென்னையைப் பொறுத்த மட்டில் நம்மைப் போன்ற நன்பர்களுக்கு பிரச்னை இல்லை. அவரவர்களுக்கு ஆயிரம் வேலை. ஆனால் கிராமங்களில் இப்பிரச்னை பூதாகரமானதாக உள்ளது தெரியும். சகோதரி முறை உள்ளவர்களிடம்கூட வெளிப்படையாக பேசுவதில் சங்கடம் உள்ளது. இந்த அதரப் பழசான பொதுப்புத்தி மாற வேண்டுமானால் பழைய பஞ்சாங்கங்களை (சந்தேக புத்திக்காரர்கள்) புதுப்பிப்பதை விட்டுவிட்டு இளைய தலைமுறை நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இவர்கள்தான் வருங்கால மூத்தத் தலைமுறையினர். அதற்கான முயற்சியாகவே எனது கவிதைத் தொகுப்பைக் கருதுகிறேன். ரத்த சம்பந்தமில்லாத ஆண், பெண்ணுக்கு இடையில் வெளிப்படையான உறவுமுறைகள் என்று சாத்தியமாகிறதோ அன்றைக்கு இந்த சமுதாயம் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு வாழும்.

தற்போது பெண் கவிஞர்கள் சர்ச்சைகளில் அடிபடுவது வாடிக்கையாகி விட்டது. "அதெல்லாம் கவிதையே அல்ல. பார்வை தங்கள் மீது திரும்புவதற்கான முயற்சியின் விளைவு" என்ற விமர்சனம் சிலரால் முன் வைக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?

எந்த ஒரு முத்திரையும் என் மீது குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. கவிதை என்பது சர்ச்சைகளின் உலகமாக இருக்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. வெளிப்படுத்துவது அவர்களுடைய சுதந்திரம். அதே சமயம் விமர்சனங்களை தவிர்க்க முடியாது என்பதால் அதையும் ஏற்றுக் கொள்கிற மனோபாவமும் தேவைப்படுகிறது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுதுவேன். முதலில் எனக்கான விஷயங்கள். எதிர் காலம் என்னவென்பதை இப்போது யாராலும் தீர்மானிக்க முடியாது.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், குறும்படங்களில் நடிப்பு என்ற அனுபவங்கள் மூலம் சினிமா குறித்த உங்கள் பார்வை எப்படி இருக்கிறது. சினிமாவில் முழுநேர கதாநாயகியாக இருக்கப் போவதில்லை என்றாலும் இயக்குநர் கனவு இருக்குமே?

டெக்னிக்கலான பார்வையோடு சினிமாவைப் பார்த்தாலும் பொழுதுபோக்கையும் மறந்துவிடவில்லை. எனக்கு மொழியும் பிடித்திருக்கிறது, போக்கிரியும் பிடித்திருக்கிறது. பாடல்கள், நடனம், டப்பிங், ரீரெக்கார்டிங் என்று எல்லா விஷயங்களையும் கவனிக்கத் தவறுவதில்லை. பாடல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது மெட்டுக்கு ஏற்ற மாதிரி டூப்ளிகேட் போட்டுப் பார்ப்பேன். பாய்ஸ் படத்தில் வரும் 'எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா' பாடலை 'எனக்கொரு பாய் ஃபிரண்ட் வேணுமடா' என்று முழுவதும் மாற்றி வைத்திருக்கிறேன். எனக்குள்ளும் ஒரு குட்டி டைரக்டர் ஓடிக்கொண்டிருக்கிறார். அவரால் குறும்படங்களைத்தான் இயக்க முடியும். ஆனால் சினிமாவுக்கு பாடல் எழுதுவதை இப்போதே சிறப்பாக செய்ய முடியும்.

'எழுத்து, நடிப்பு' என்று ஆகியிருக்காவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்? அழகான முக வடிவம், நல்ல குரல்வளம் இரண்டும் உள்ளதே. டி.வி. தொகுப்பாளினியாக முயற்சிக்கவில்லையா?

எனக்கு தமிழை பிழையின்றி சுத்தமாகப் பேசத் தெரியும். அங்கே தப்புத் தப்பாய் பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அது என்னால் முடியாது. "ரேடியோ ஜாக்கி' ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒரு ரேடியோ நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். தேர்வு செய்யும் குழுவில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சுத்தமாக தமிழே தெரியாது. தமிழில் ஒலிபரப்பாக வேண்டிய ஒரு நிகழ்ச்சிக்கு தமிழே தெரியாத ஆசாமிகள்(நார்த் இண்டியன்ஸ்) உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கேள்வி கேட்பதோடு இல்லாமல் தமிழர்களைக் குறித்த இளக்காரப் பார்வையும் அவர்களிடம் இருந்தது. என்னிடம் நிறைய தமிங்கிலீஷ் பேச வேண்டுமென எதிர்பார்த்தார்கள். எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரம் வேலை பார்த்தாலே என்னால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். என்னை மறைத்துவிட்டு வேறொரு ஆளாக நீடிக்க முடியாது எனக்கூறி கடுமையாக சண்டை போட்டுவிட்டு வந்தேன்.

ஒரு இன்ஸ்டன்ட் கவிதை சொல்லுங்கள்?

இன்ஸ்டன்ட் காபி வேணும்னா கேளுங்க. ஹபிபுல்லா ரோட்ல கிளாசிக் கார்னர்னு ஒரு டீக்கடை இருக்கு. அங்கதான் என் ஃபிரண்ட்ஸோட 'டீ' அடிக்கிறது வழக்கம். என்னமோ... ஒரு பாட்டுப் பாடுங்க, ஒரு டான்ஸ் ஆடுங்கன்னு கேட்பது போல் கேட்கறீங்க. இயந்திரம் மாதிரி எங்க வச்சாலும் என்னால் கவிதை எழுத முடியாது. கவிதை என்பது மனசு மாதிரி. ரொம்ப லெக்சர் கொடுக்கிறேனோ! கூல் டவுன்மா. உங்களுக்காக மனசு பற்றி ஒரு கவிதை.

"நீள்வட்டம் பழுப்பு மஞ்சள்
சருகுகள் சப்தம் செய்கின்றன
அவற்றின் உணர்வுகளும் உலர்ந்ததாலா?"

Monday, March 3, 2008

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா? -மீண்டும் மோக‌ன்!


மோகன் பாடல்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காதல் கடிதங்களில்கூட அவரது பாடல்களை காப்பியடித்து கவிதை என்று சக்சஸ் செய்து கொண்டவர்கள் ஏராளம். சி.டி விற்கும் சின்ன பிளாட்பாரக் கடைகள் கூட மோகன் ஹிட்சை தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது. பரபரப்புகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியை நாடுகிற போது ''மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேட்குதா... கேட்குதா...'' என்று கேட்க நேர்ந்தால் அவ்வளவு சுகமாக இருக்கிறது!

தமிழ் சினிமாவின் வரலாற்றில், தமிழகத்தின் காதல் இதயங்களில் மோகனுக்கென்று தனித்த இடம் உண்டு. என்ன ஆனதென்றே தெரியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாம் வலி நிறைந்தவை. ஒரு வழியாக சுட்டபழம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளவரை சந்தித்த போது, எதுவுமே மாறவில்லை. அதே முகம், அதே சிரிப்பு,அதே இளமை என்று அன்று பார்த்த மோகன் மாதிரியே இருக்கிறார்.

என்ன ஆச்சு, ஏன் இந்த இடைவெளி?

"நிறைய உழைச்சிட்டேங்க. சராசரியா என்னுடைய உடல்நிலையை மீறி ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்திருக்கேன். ஒரு வருஷத்தில் மட்டும் பத்தொன்பது படங்கள் ரிலீசாகியிருக்கு. எல்லாமே வெற்றியா இருந்ததால சோர்வோ, அலுப்போ தெரியலை. 'அப்பாடா... போதுமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்'னு நேனச்சேன் பாருங்க! அங்க விழுந்த இடைவெளிதான். மாசம் வருஷமாச்சு, வருஷம் பல வருஷமாச்சு.

இடையில் என்னவெல்லாமோ நடந்து, என்னைப் பற்றி இஷ்டத்திற்குமான வதந்திகள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்கவில்லை. ஆனாலும் இட்டுக்கட்டப்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளால், மாலையும் கையுமாக என் வீட்டிற்கு வந்து நின்றார்கள். நினைத்துப் பாருங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும் போதே 'நீ செத்துப் போய்ட்டியாமே' என்று வந்து நின்றால் சம்பந்தப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும்? நான் மட்டுமில்லாமல் என் குடும்பமே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதிலிருந்து மீள்வதற்கே இரண்டு வருடங்கள் பிடித்தது. இதற்கு செத்துப் போவதே மேல் என்று சொல்லலாம்.

'தூங்கும் போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துப் போய்ட்டான்னு சொல்லி அடக்கம் பண்ணிடுவானுங்க'ன்னு சொல்வாங்க. அது என் வாழ்கையில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட சில இடங்களிலேயே என்னைப் பார்த்த சிலர், 'ஏம்பா மோகன் செத்துப் போய்ட்டார்'னு சொன்னாங்க. இந்த ஆளப் பாத்தா அவர் மாதிரியே தெரியுதே'ன்னு என் காதுபடவே பேசினாங்க.

இடைவெளின்னு சொல்றீங்க. என்ன தான் செஞ்சிட்டு இருந்தீங்க. அவ்வளவு நாளும் சும்மாவே இருந்தீங்களா?

நான் எங்கங்க சும்மா இருந்தேன். சொன்னா நம்புவீங்களா! 'சிவிக் சினிமா'ங்கற பேர்ல சொந்தமா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்திருக்கேன். 'அச்சம் மடம் நானம், பிருந்தாவனம், தெலுங்கு சன் நெட் ஒர்க்கில் ஹாஸ்ய ராமாயணம், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பகும் செல்வங்கள்' எல்லாமே என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். மோகன் என்கிற பெயரை யூஸ் பண்ண வேண்டாமே'ன்னு நெனச்சு இதை விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸோடுகளை எனது நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதால் மீண்டும் வெளிப்படும் போது ஜெயித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இடையிடையே வந்து போன சில ஸ்கிரிப்டுகளும் திருப்தியாக அமையவில்லை. அந்த நேரத்திலும், என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்தேன். எதிர்பாராத காரணங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெரியதிரைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 'பெருசு' பட இயக்குநர் ஜி.கே கிடைத்தார். எனக்கும் அவருக்குமான அலைவரிசை பிரமாதமாக ஒத்துப் போனது.

'சுட்டப்பழம்'னு ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தை செஞ்சுக்கிட்டிருக்கோம். என்னால அடிச்சு சொல்ல முடியும். சமீபத்தில் இந்த மாதிரி ஒரு படம் வெளிவந்ததில்லை என்று. ரொம்ப வேகமான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் நிச்சயம் இது வெற்றிபெறும்.

ஒவ்வொரு நாளும் பாடல்கள் வழியே மறக்க முடியாத நடிகராக நிலைத்துவிட்டீர்கள். ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதற்கு பாடல்கள் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

பார்க்காத நேரங்களில்கூட பாடல்கள் தாலாட்டுகின்றன என்பது உண்மை தான். ஆனால் என்னுடைய வெற்றிக்கு வெறும் பாடல்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், நான் நன்றாக நடிக்கவில்லையா என்ன? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு படத்திற்கான வெற்றி என்பது அதன் கதையில் தான் அடங்கியிருக்கிறது.

முதல்ல படம் நல்லா இருக்கணும். அதோட சேர்ந்து பாடல்களும் பிரமாதமா அமைஞ்சதுன்னா அது சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்கள்ல நீங்க பார்க்கிற மோகன் மாதிரி இல்லாமல் 'விதி, நூறாவது நாள்'னு வில்லத்தனமான ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் என்ன காரணம்? அது நல்ல படம் என்பது தான். அதைவிட முக்கியம் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. வெற்றி என்பதின் பங்கு அதில் பணியாற்றிய எல்லாருக்குமானது.
உங்கள் ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள். காதல் கடிதங்கள் வந்ததுண்டா?

இன்றுகூட வெளிநாடுகளிருந்து ரசிகர்கள் பேசினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிஃப்ட் பார்சலே வீடு தேடி வந்தது. நம்பரை எப்படித்தான் பிடிக்கிறார்களோ! இண்டர்நெட்டில் 'சுட்டப்பழம்' பற்றி தகவல் பார்த்தார்களாம். 'சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க சார்!'னு கேட்கிறாங்க. என் ரசிகர்களைப் பொறுத்த அளவில் நானும் அவர்களை மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கவில்லை.

காதல் கடிதங்களைப் பற்றிச் சொல்வதென்றால் அதை யார் எழுதினார்களோ அவர்கள் என்மீது தன்னையறியாமல் கொண்ட அன்பினால் ஆனது. அதை விளம்பரப்படுத்தி கொச்சைபடுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயம் நீங்கள் 'ரீ-எண்ட்ரி' ஆகும் போது இளையராஜாவுடன் வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இளையராஜாவோ, எஸ்.பி.பி.யோ! இன்னும் யார் யாரெல்லாம் உங்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களோடு இனைந்த அந்தக் கூட்டணி எப்போது சாத்தியம்?

அப்படி ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இருக்குமானால், அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. என்றாலும் சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டுமே! நான் வெறும் நடிகன் மட்டும்தான். என்னைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தேதிகள் ஒத்துவர வேண்டும்.

எனக்காக இளையராஜா மீண்டும் இசையமைப்பதோ, எஸ்.பி.பி மீண்டும் பின்னணி பாடுவதோ நடக்கும் என்றால், அதைவிட சந்தோஷமான தருணம் வேறெதுவும் இருக்க முடியாது. இது ஆண்டவன் நினைத்தால், அவனோடு என் ரசிகர்களும் நினைத்தால் நிச்சயம் முடியும் என்று நினைக்கிறேன்.

Friday, February 29, 2008

ஒரு ரூபா கொடுத்தா ஆடிக்கிட்டே இருப்பேன் ‍‍-ஸ்நேக் சாந்தி.


சின்னக் கம்மல், சிம்பிளான குர்தா ஜீன்ஸ் என்று காட்சியளிக்கிற சாந்தி ஸ்டில் கேமிராவைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். "என்னங்க இது! ஒரு டான்ஸ் மாஸ்டர், எல்லா நடிகர்களையும் ஆடவெச்சே பென்டெடுக்கிற ஆடல் மெக்கானிக். நீங்க பார்க்காத கேமிராவா?' என்றால், "அய்யய்யோ! அது வேற, இது வேறங்க' என்று சிரிக்கிறார்.


'மெட்டி ஒலி' சாந்தியை மறக்க முடியுமா என்ன? முதல் ஆறு மாதங்கள் அந்தப் பாடலை வைத்துத் தான் மெட்டி ஒலியே ஹிட்டானது. பெரிதாகக் குடும்பப் பின்னணியோ, முறையான நடனப் பயிற்சியோ இல்லாமல் இன்று சினிமா உலகில் ஒரு திறமையான நடன இயக்குந‌ராக உயர்ந்திருக்கிற சாந்திக்கு, இப்போது அவரே வைத்துக் கொண்ட பெயர் லக்ஷன்யா'. சினிமா, விளம்பரம்'னு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவரை ஓய்வு நாள் ஒன்றில் சந்தித்தேன்.


"இந்த டிரஸ் கலர் கொஞ்சம் டல்லா இருக்கு. போட்டோவுக்காக ஒரு கலர்ஃபுல் டிரஸ் போட்டுட்டு வாங்களேன்" என்றால் "இது ஒன்னு தாங்க இருக்கு. வேற டிரெஸ் இல்லைங்க" என்கிறார் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக. அழகா தெரியணும்னு ஆசையில்ல போலிருக்கு. சரி! உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்திச் சொல்லுங்க?"


"கரடி பொம்மை, பிள்ளையார் பொம்மை , மீன் குழம்பு இதெல்லாம் பிடிக்கும். அப்புறம் குழந்தைங்க, ரஜினி, இளையராஜா பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஜீன்ஸ், டாப்ஸ், கலர் கலரா புடவைகள் அப்படீன்னு ஷாப்பிங் பண்றது ரொம்ப, ரொம்ப பிடிக்கும் . என்னை ஒரு டிரஸ் பைத்தியம்னே சொல்லலாம். அந்தளவுக்கு சளைக்காம ஷாப்பிங் பண்ணுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்னு பார்த்தா பொய் சொல்றது சுத்தமாப் பிடிக்காது. யாராவது பொய் சொன்னா சட்டுனு கோபம் வந்துடும்" என்றபடியே என்னை ஒரு முறை, முறைத்தார்.


"ஆஹா... நீங்க தானா அது? எனக் கேட்டுக்கொண்டே... இப்பதான் சொன்னீங்க. எனக்கு பொய் சொல்றதே பிடிக்காதுன்னு. ஆனா, எங்கிட்ட வேற கலர் டிரஸ் இல்லைன்னு சொன்னது பொய் தானே? என்று வகையாய் மடக்கினேன்.
அப்போ அவர் மூஞ்சியைப் பார்க்கனுமே. சிரித்த சிரிப்பும், பட்ட வெட்கமும். அடேங்கப்பா! ஒரு திரைப்படமே எடுக்கலாம். அத்தனை ஆக்க்ஷஷ‌ன்கள். சட்டென சுதாரித்துக்கொண்டு சொல்கிறார்


"சாரி! சுத்தமா தூக்கமே இல்லையா. கண்ணெல்லாம் எரியுது. டிரெஸ் மாத்த கஷ்டப்பட்டுக்கிட்டு அப்படி சொன்னேன். நான் சொன்னது இந்த மாதிரி சின்னச் சின்னப் பொய் கிடையாதுங்க‌. நம்பிக்கை துரோகம் பண்ற மாதிரி, அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி பெரிய பொய்களைச் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். யாருக்கும் எந்த பாதிப்புமில்லாத சிம்பிள் பொய்யெல்லாம் கணக்குல சேர்க்காதீங்க".


சொல்லுங்க சாந்தி. நீங்க எப்படி டான்சர், டான்ஸ் மாஸ்டர் ஆனீங்க?

"சின்ன வயசுலர்ந்தே டான்ஸ்னா எனக்கு உயிருங்க. ஒரு ரூபா குடுத்தா போதும். நாம்பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பேன். அப்டியே ஸ்கூல் போனேனா... அங்க, ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடி நிறைய பிரைஸ் வாங்கினேன். இன்னைக்கி நான் டான்ஸ் மாஸ்டரா ஆனாலும், இதுவரை எங்கேயும் போய் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டதில்ல. நானா ஆடிப் பழகிட்டதுதான். நாங்க சாதாரண குடும்பம். அக்கா ஏற்கனவே சினிமாவில டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க. குடும்பத்துக்கு உதவி பண்றதுக்காகத்தான் நான் சினிமாவுல டான்சரா சேர்ந்தேன்.


ஆரம்பத்துல சாதாரண குரூப் டான்சரா இருந்து படிப்படியா அசிஸ்டென்ட் ஆனேன். பதினஞ்சு வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். தருண், பிரகாஷ்,பிரபு தேவா, கல்யாண், பிருந்தா இப்படி பல மாஸ்டர்களிடம் ஒர்க் பண்ணியிருக்கேன். நான் ரொம்ப உயரம்ங்கறதால(எங்க ஊர்லகூட 'எட்டடி'ன்னு ஒருத்தர் இருக்காரு) என்னதான் நல்லா ஆடினாலும் பின் வரிசையிலதான் நிக்க வைப்பாங்க. அப்பெல்லாம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். பிரபுதேவா மாஸ்டர் தான் உயரம் குள்ளம், குண்டு‍‍‍‍‍ ஒல்லின்னு எல்லாம் பார்க்க மாட்டாரு. அவருக்கு ஃபெர்பாமன்ஸ்தான் முக்கியம். அவரும், பிருந்தா மாஸ்டரும்தான் என்னை முன் வரிசைல நிக்க வச்சு வாய்ப்புக் கொடுத்தவங்க" என்று தான் சினிமாவுக்குள் நுழைந்த‌ க‌தையை விள‌க்கினார்.


மெட்டி ஒலி சாந்தின்னா சின்னக் குழந்தைங்கள்ல இருந்து என்பது வயது பெருசுகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை பிரவேசம் எப்படியிருந்தது?


"உண்மை தான். டி.வி. பார்க்கிற 'அ முதல் ஃ' வரையிலான அத்தனை பேரும் எனது மெட்டி ஒலி டான்சை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை பல முறை நான் நேர்ல உணர்ந்திருக்கேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் ஒரே பாட்டுல இடம் பிடிச்சிருக்கேன்னா அதுக்கு திருமுருகன் சார்தான் காரணம். மெட்டி ஒலிக்கு முதலில் ஒரு குரூப் டான்சராகத்தான் கூப்பிட்டிருந்தங்க. திருமுருகன் சார் என்னோட ரசிகர். அதனால என்னையே அந்தப் பாட்டுக்கு மெயின் டான்ஸ் பண்ணச் சொன்னார். ஒரு சூப்பரான காஸ்டியூமோ, மேக்கப்போ இல்லாம திடீர்னுதான் அந்த பாடலை செஞ்சு முடிச்சோம். அது இந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகும்னு நெனச்சே பாக்கல. அந்தப் பாடல் வெளியான பிறகு ஏகப்பட்ட ஃபோன் கால்ஸ், பாராட்டுக்கள். மெட்டி ஒலி சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட்லாம் தினம் வர்ராங்களோ இல்லையோ, ஆனா கண்டிப்பா நான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கரெக்டா ஒன்பது மணிக்கு வந்துருவேன். நான் போட்டிருக்கிற மணி, கம்மல், சேலை என்று சகலத்தையும் ஒண்ணு விடாமல் மக்கள் ரசித்தார்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.


இதைவிட ஒரு முக்கியமான விஷயம். கோடியில ஒருத்தருக்குக் கூட இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். நாலு வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு சாந்திக்கு பதிலா நான் செத்துப் போய்ட்டதா செய்தி பரவி பத்திரிகைலகூட நியூஸ் வந்திருச்சி. ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா... துக்கம் விசாரிக்கறதுக்கு ஊர்ல இருந்தெல்லாம் சொந்தக்காரங்க வந்திருக்காங்க. என்னை உயிரோட பார்த்ததும் அவங்களுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.யூனிட்ல விஷயம் கேள்விப்ட்டு ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் பண்ணியிருக்காங்க. பீச் சைட்ல ஷூட்டிங் நடந்தப்போ மீன்காரப் பொம்பளங்கள்லாம் என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுதாங்க. ஷூட்டிங் முடிஞ்சு கார்ல வீட்டுக்குத் திரும்புக்கிட்டிருந்தா... கார் வேறெங்கியோ போகுது. என்னன்னு விசாரிச்சா டிரைவர் சொல்றாரு. 'ஒரே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து முகத்தை காட்டிட்டு போயிடுங்க மேடம். எம் பொண்டாட்டி நீங்க உயிரோட இருப்பதை நம்பாம அழுதுக்கிட்டிருக்கா' என்கிறார். லைட்மேன் ஒய்ஃப், என்னோட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் என்னை வந்து நேர்ல பாத்தப்புறம்தான் நம்பினாங்க. நான் செத்தப்புறம் எனக்காக யார், யார்லாம் அழுவாங்க என்கிற வாய்ப்பை கொடுத்ததுக்காக கடவுளுக்கும், சின்னத்திரைக்கும் நன்றி.


கதாநாயகி இருக்கும்போது தேவையே இல்லாமல் குரூப் டான்சர்களை செக்ஸியாகக் காட்டுவது தொடர்கிறதே! இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


கட்டிப் பிடித்துக் கொண்டோ, செக்ஸியாக உடை அணிந்து கொண்டோ செட்டுக்குள் ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இடுப்பைத் தழுவிக் கொண்டு ஆடும் பொழுது ஒன், டூ, த்ரீ, ஃபோர், கட்! என்பார்கள். ஷாட் முடிஞ்சிரும். ரசிகர்கள் நினைப்பது மாதிரி ரொமான்ஸ் மூடில் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க மாட்டோம். ராத்திரி எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சிருந்தாலும் காலைல நாலு மணிக்கு எழுப்பி விட்ருவாங்க. சரியானத் தூக்கம் இருக்காது. அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்ப கஷ்டம் இருக்கும். எப்ப வேலை முடியும், எப்ப வீட்டுக்குப் போகலாம்னுதான் காத்திருப்பாங்க. ஆனா இந்த மாதிரி காட்சிகளை அவுட்டோர் ஷூட்டிங்ல வச்சா ரசிகர்களால பிராப்ளம் வரும். வாய் வார்த்தைகளால ரொம்ப கேவலமா, மட்டரகமா கிண்டலடிச்சி எங்க மனசை நோகடிப்பாங்க.


வெளியில இருந்து பாக்கறவங்களுக்கு 'கலர், கலரா ட்ரெஸ் பண்ணிக்கிறாங்க, விதவிதமா நகை போட்டுக்கிறாங்க, அழகழகா மேக்அப் போட்டுக்கிறாங்க, ஜாலியான லைஃப்டா!'ன்னு தோணும். ஆனா நிஜம் அப்படியில்லை. காலைல இருந்து மாலை வரைக்கும் வெயில், மழைன்னு பாக்காம காலில் செருப்புக்கூட இல்லாமல் ஆடுவோம். கண்டக் கண்ட‌ இடங்களில் ஆடுவதால் உடம்பு முழுக்க காயங்கள், சிராய்ப்புகளோடு வாழும் ஒரு மெக்கானிக்கல் லைஃப் எங்களோடது. ஆனா, இந்த வலி அத்தனையும் எங்களை ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப போயிடும்.


பெரிய நட்சத்திரங்களுக்கே திருமண வாழ்க்கை என்பது திருப்திகரமாக அமைவதில்லை. அப்படியிருக்கையில் டான்சர்களின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது?


நிறைய பேர் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். பெரும்பாலும் டான்சர்கள் இன்னொரு டான்சரையே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. ஒரு அரசு நிறுவனத்துலயோ, தனியார் நிறுவனத்துலயோ வேலை பார்க்கிறவங்க எப்படிப்பட்ட ஃபிராடாக இருந்தாலும் வெளில தெரியாது. நடிக்க வந்துவிட்டோம் என்ற காரணத்தினாலயே எங்களைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஒரு ஹீரோயின் கல்யாணத்திற்குப் பின் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்க்கிற மனநிலை இங்க இல்லை.

முதன் முதலா எந்தப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சீங்க.அடுத்த‌டுத்த‌ உங்க‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு லிஸ்ட் போடுங்க‌ளேன்?

சரத்குமார் சாரோட கம்பீரம் படம் தான் நான் மாஸ்டரா ஒர்க் பண்ண முதல் படம். நினைவிருக்கும் வரை படத்துல "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..." பாட்டுல பிரபுதேவா சார் தான் எனக்கு தனி பிட் கொடுத்து முதல் முதல்ல ஸ்கிரீன்ல காட்டினது. தமிழ்,ஹிந்தி ரெண்டுத்துலயும் ஆய்த எழுத்து, பேரழகன், கணாக் கண்டேன், திருட்டுப் பயலே, வெயில், நான் அவனில்லை என்று இதுவரை 120 பாடல்களுக்கு மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கேன். மஞ்சள் வெயில், தூவானம், அம்முவாகிய நான், ராமேஸ்வரம்'னு இப்போ செஞ்சு முடிச்சப் படங்களும் நிறைய இருக்கு. போதுமா இன்னும் பட்டியல் வேணுமா? என்று சாந்தி கேட்ட‌தும் மூட்டை முடிச்சுக்க‌ளோடு என் வீடு நோக்கிப் ப‌ய‌ண‌மானேன்.

குறிப்பு:
இப்ப‌டி ஒரே நாளில் எனக்கு திக் ஃபிர‌ண்ட் ஆனார் சாந்தி. அத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் அவ‌ரை நான் எடுத்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ள். அடுத்த‌ சில‌ நாட்க‌ளில் எத‌ற்காக‌வோ சாந்திக்கு போன் செயுத‌ நான், "ஹ‌லோ! ஸ்நேக் சாந்தி இருக்காங்க‌ளா?" என்றேன்(கிண்ட‌லுக்காக‌த்தான்). இந்த‌ப் பேர் சொல்லி யாராவ‌து கூப்டாங்க‌ன்னா என‌க்கு கெட்ட‌க் கோப‌ம் வ‌ரும். நீங்க‌ளா இருக்க‌வே சும்மா விடுறேன் என்றார்.

சில‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு...

ச‌ந்தியிட‌மிருந்து என‌க்கு போன் வ‌ந்த‌து. "சொல்லுங்க‌க்கா!" என்று ஒரே வார்த்தைதான் சொன்னேன். "யார்கிட்டப் பேசுறோம்னு கொஞ்சம் தெரிஞ்சு பேசுங்க ! இதெல்லாம் எனக்குப் பிடிக்காது" என்று ச‌ற்றே டென்ஷ‌னுட‌ன் பதில் சொன்னார் ல‌க்ஷ‌ண்யா என்கிற‌ சாந்தி.

அப்ப‌டியென்ன‌டா த‌வ‌றா பேசிட்டோம? என்று என்னை நானே நொந்து கொண்டேன். சாந்தியைப் புண்ப‌டுத்த‌ வேண்டுமென்ற‌ நோக்க‌த்தோடு நான் பேச‌வில்லை. த‌ன் க‌டின‌ உழைப்பால் இந்த‌ நிலைக்கு உய‌ர்ந்த‌ சாந்தியின் மீது நான் மிகுந்த‌ ம‌ரியாதை வைத்திருந்தேன்.

சினிமா உல‌கில் போலியான‌ ம‌ரியாதைக‌ளைப் பார்த்துச் சாந்தி ப‌ழ‌கிப்போயிருப்பார். அவ‌ரோடு பேசிக்கொண்டிருக்கும்போது க‌னிமொழி.எம்.பி.யைப் ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து. "க‌னிமொழியா? யார் அது" என்று கேட்டார் அப்பாவியாக. "கிட்டத்தட்ட நான் போகாத நாடுகளே இல்லை" என்று சொன்ன சாந்தி, உல‌கைப் புரிந்து வைத்திருப்ப‌து இப்படித்தான். என்னையும் அப்படி புரிந்துகொண்டிருக்கக்கூடும்.

குறிப்பு இரண்டு:

இதே போல் என்னிடம், "யார்கிட்டப் பேசுறோம்ங்கிறதை தெரிஞ்சிட்டுப் பேசுங்க!" என்று டென்ஷன் ஏற்றியது இசைஞானி குடும்பத்துப் பெண் வாரிசு ஒன்று. அதை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தபோது "சீக்கிரம், சீக்கிரம்" என்று அவசரப்படுத்தியது.

"ஏங்க! நீங்களும் போட்டோ கொடுக்க மாட்டேன்றீங்க, நான் எடுத்தாலும் அவசரப்படுத்துறீங்க. நல்ல போட்டோவா எடுத்துத் தர்றேன். இதுதான் சான்ஸ் உங்களுக்கு" என்றேன்.

அவரிடம் தனது போட்டோவே இல்லை. அந்தளவுக்கு பிஸியான ஆளாம். எனவே, இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்குங்க" என்ற நோக்கில் ஃபிரண்ட்லியாக இப்படிச் சொல்லிவிட்டேன்.

மேடம் பயங்கற டென்ஷன் ஆகிட்டாங்க. "யாரைப் பார்த்து அப்படிச் சொல்றீங்க? ஒரு போன் பண்ணா போதும். ஆயிரம் போட்டோகிராபர்கள் வந்து கியூவில நிப்பாங்க. எப்படிப்பட்ட ஃபேமிலிகிட்ட பேசிக்கிட்டிருக்கிறோம்ங்கிறதை நினைப்புல வச்சுக்குங்க. உங்க இஷ்டத்துக்கு என்னவேணா பேசாதீங்க" என்று ஏகக்கடுப்பாகி பேசினார்.

அது இசைஞானி குடும்பத்து வாரிசு என்பதாலும், வேறு ஒரு காரணத்தாலும் அதன் மீதும் மரியாதையோடுதான் நடந்து கொண்டேன். பெரும்பாலும் எந்தப் பெண்களையுமே நான் உதாசீனப்படுத்துவதில்லை. ஆனால், இப்படிப்பட்டதுகள் பன்ற பந்தா இருக்கே! ...... சரி, விட்றுவோம்.

நம்புறீங்களோ, இல்லையோ! இயக்குநர் சிகரத்தை ஒரு முறை சந்திக்கச் சென்றிருந்தேன். எவ்வளவு தன்னடக்கம, பழகும் தன்மை, என்ன கேட்டாலும் கோபப்படாமல் பதில் என்று மனிதர் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்.