Thursday, July 31, 2008

வீட்டைச் சுற்றி மின்வேலி! வில்லங்கத்தில் விஜயகாந்த்!

மின்வேலி மீது அப்படி என்னதான் காதலோ! விடமாட்டார் போலிருக்கிறது விஜயகாந்த். சில மாதங்களுக்கு முன், ‘மதுராந்தகம் அருகேயுள்ள கேப்டன் பண்ணையில் மின்வேலி அமைத்திருப்பதாகவும், இதனால் ஆடுமாடுகள் செத்து மடிவதாகவும்’ பரபரப்பு புகார் கிளம்பியது. ஆக்கிரமிப்புப் புகாரில் சிக்கிய அந்தப் பண்னையில் அதிகாரிகள் புல்டோசர் விட்டதால், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று ஆவேசப்பட்டார் கேப்டன். இப்போது ‘இந்து மக்கள் கட்சி’ மூலம் இன்னொரு குடைச்சல் கிளம்பியிருக்கிறது விஜயகாந்த்துக்கு.

‘‘குடியிருப்புகளுக்கு மத்தியில் தன்னுடைய வீட்டுக்கு மின்வேலி அமைத்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே உடனடியாக அதை அப்புறப்படுத்திவிட்டு, அவர்மீதும் அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான கண்ணன் போலீஸ் கமிஷனர், மின்துறை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார். கமிஷனர் அலுவலகம் போயிருந்த நான் தற்செயலாய் கண்ணனைச் சந்தித்துப் பேசினேன்.
‘‘நாட்டில் பிரதமர் வீட்டுக்குக்கூட மின்சார வேலி கிடையாதுங்க. முதல்வர் கருணாநிதி வீடு, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு இரண்டிலும் கிடையாது. ஏன், அண்ணா மேம்பாலத்தில் ஏறி அமெரிக்கத் தூதரகத்தைப் பாருங்கள். அதுக்குக்கூட கிடையாது. ஆனால், விஜயகாந்த்துக்கு மட்டும் தேவைப்படுதாம். அப்படி அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் போலீஸைக் கேட்கலாமே! ஏன் கரென்ட் ஷாக் வைக்கணும்?

விஜயகாந்த் வீட்டுக்குள் தப்பித் தவறி யாராவது புகுந்துட்டாங்கன்னு வச்சுக்குவோம், எலும்பை எண்ணிக் கையில் கொடுத்துடுவாங்க. இதற்கென்றே இருபத்திநாலு மணி நேரமும் தொண்டர்கள் இருக்காங்க. அட! நமீதா வீடுன்னாகூட நாலு பேர் எட்டிப் பார்ப்பாங்கன்னு சந்தேகப்படலாங்க. தன்னை கருப்பு எம்.ஜி.ஆர்.னு சொல்லிக்கிற விஜயகாந்த் இப்படிச் செய்யலாமா? இது என்ன சிறைச்சாலையா, இல்லை ஜூராசிக் பார்க்கா? மின்வேலி அமைப்பதற்கு! காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பாதுகாக்கத்தான் மின்வேலி அமைப்பார்கள். தலைநகரத்த்கில் இப்படி ஆளாளுக்கு மின்வேலி அமைத்துவிட்டால் அதை வைத்தே பல கொலைகள் நடக்குமே!
இந்த மின்வேலி, மக்கள் மீது அவருக்குள்ள வெறுப்பைத்தான் காட்டுகிறது. சாலிக்கிராமத்தில் இவருக்குச் சொந்தமான இரண்டு காம்ப்ளெக்ஸ்களில் மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதால், மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பல கடைகள், வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. மின் இனைப்புப் பெறவேண்டுமானால் விஜயகாந்த் கையெழுத்து போடவேண்டும்.
ஒருவருடைய வியாபாரம் கெட்டுப் போகிறதே, வாடகைக்கு வீடு கிடைக்கவில்லையே என்கிற மக்களின் பிரச்னையை இவர் உணரவில்லை. தன்னுடைய சொத்துதானே என்கிற அகந்தையில் பொதுமக்களைப் பார்க்க மறுக்கிறார். இதெல்லாம் விஜயகாந்த்தின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், பொது வாழ்க்கையில் தன்னை வள்ளல்போல் காட்டிக்கொள்ள விரும்புகிறவர், அதற்கேற்ற மாதிரி நடந்துகொள்ளவேண்டாமா?

‘இலங்கைக்கு, இந்தியா ஆயுத உதவி செய்யுதே’ன்னு கேட்டப்போ, ‘ஈழத் தமிழர்களை சுடுவதற்கு இல்லை’ன்னுதானே பதில் சொன்னார். அதே ஆயுதங்களைக் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்களைச் சுட்டுக்கொன்றது சிங்களக் கடற்படை. அரசியல் லாபம் தேட வேண்டாமா? ஓடோடிச் சென்று மீட்டிங் போடுகிறார். தட்டிக்கேட்காத ‘ஆளும்கட்சியை சுட்டுத் தள்ளணும்’ என்கிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக அல்லவா இருக்கிறது? தட்டிக்கேட்காத ஆளும்கட்சியை சுட்டுத் தள்ளணும் என்றால், ஊருக்கு மத்தியில் மின்வேலி வைக்கிற இவரை என்ன பண்றதாம்? ஆயுத உதவிக்கு ஒத்து ஊதிய நாக்கு அழுகிப் பொகாதா?

இதைவிடக் கொடுமை தன்னைத்தானே கருப்பு எம்.ஜி.ஆர்.னு போட்டுக்கிறது. எம்.ஜி.ஆர், தன் வீடு தேடிவரும் ஏழைகளுக்கு வயிறாற சோறுபோட்டு அனுப்பினார். கருப்பு எம்.ஜி.ஆர் என்ன பண்றார்? வயசான கிழவிகளா பார்த்து போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கிறார். மக்கள்மீது அக்கரை உள்ளவர் கரன்ட் ஷாக் வைப்பார்களா? மழைக்காலத்தில் வீட்டுக் கரன்ட்டை எடுத்து வேலிக்குப் பாய்ச்சமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?’’ என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பிய கண்ண‌ன்,

‘‘ஷட்டில் கார்க் ஆடுகிற குழந்தையோ, பட்டம் பறக்கவிடும் குழந்தையோ மின்வேலியில் மாட்டிக்கொண்ட பொருளை எடுக்க ஈரக்குச்சியை நீட்டினால் என்ன ஆவது? உயிரைத் திருப்பித் தருவாரா விஜயகாந்த்? சுயலாபத்துக்காக வீட்டைச் சுற்றியே மின்வேலி அமைத்திருக்கும் இவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் தமிழ்நாட்டுக்கே மின்வேலி அமைத்து தனதாக்கிக் கொள்வார். இவரது அராஜகத்தை எதிர்த்து புகார் கொடுக்க அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்று பொரிந்து தள்ளினா.

இந்து மக்கள் கட்சியின் சார்பாக பேசிய வழக்கறிஞர் இராம்.மனோகர், ‘‘குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன்படி பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற மின்வேலிகளை காவல்துறையே அகற்றமுடியும். தவிற்க முடியாத சூழ்நிலையில் இதனால் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இ.த.சட்டம் 304/அ-வின் கீழ் குறைந்தது மூன்றாண்டுகள் தன்டனை வழங்கலாம்.
மேலும் சூரிய மின்வேலிக்கு முறையாக அனுமதி பெற்றிருந்தாலும், எத்தனை வோல்ட் மின்சாரம் பாய்கிறது, எவ்வளவு நேரம் பாய்ச்சப்படுகிறது, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்னென்ன’ போன்ற விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புக்கூட மின்வேலி அமைத்துக்கொடுத்த நிறுவனத்தின் விளம்பரம்தான்.
சட்டப்படி மின்வேலி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் இதை ஒரு மோசமான முன் உதாரனமாகவே கருத முடியும். இதற்கான செலவும் வெகுமக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் இருப்பதால், பலரும் பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் மின்வேலி அமைப்பது அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்’’ என்றார்.
‘‘சென்னை நகரில் வீடுகளுக்கு மின்வேலி அமைக்கமுடியுமா? விஜயகாந்துக்கு மின்வேலி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?’’ -மின்துறை அதிகாரிகளிடம் இக்கேள்வியை முன் வைத்தேன்.
‘‘மின்வாரிய மின்வேலியோ, சூரிய மின்வேலியோ! எதுவாக இருந்தாலும் முதலில் காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டும். அதன் பிறகு எங்களிடம் விண்ணப்பித்தால் நாங்கள் அதைப் பரிசீலித்து, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அனுமதி வழங்குவோம். ஆனால், இதுவரை யாரும் அப்படி அனுமதி கேட்டதில்லை. விஜயகாந்த் வீட்டிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை’’ என்று தெரிவித்தனர்.
விருகம்பாக்கம் காவல் நிலையத்தைத்தில் கேட்டபோது, ‘‘அப்படியா? விஜயகாந்த் வீட்டில் மின்வேலி இருக்கிறதா? இதுவரை நாங்கள் பார்க்கவில்லையே...’’ என்றனர். மின்வேலியை நேரில் பார்த்துவிட்டுத்தான் கேட்கிறேன். அதற்காக அனுமதி வழங்கியிருக்கிறீர்களா? என்றதற்கு, ‘‘அவர்களும் அனுமதி கேட்கவில்லை, நாங்களும் அனுமதி வழங்கவில்லை’’ என்றனர்.
இது விஷயமாக விஜயகாந்த் தரப்பினரிடம் கேட்டபோது, ‘‘வெற்று விளம்பரத்துக்காக இந்து மக்கள் கட்சியினர் இப்படி புகார் ப்கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் முறையான அனுமதி வாங்கித்தான் மின்வேலி அமைத்திருக்கிறோம். இதை அமைத்துக்கொடுத்த நிறுவனமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இது சூரியமின்வேலி என்பதால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் வராது. தே.மு.தி.க.வின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டி அவதூறு பரப்புகிறார்கள்’’ என்றனர்.
சூரியமின்வேலி அமைத்துக்கொடுத்த நிறுவனன் மின்வேலியில் ஒரு விளம்பர போர்டு வைத்திருந்தது. அதில் இருந்த தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டபோது, ‘நாட் இன் யூஸ்’ என்ற பதில்தான் வந்தது.

ஒருவழியாய் இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபித்து, சம்பந்தப்பட்ட நிறுவத்தை தொடர்புகொண்டேன். இந்த மின்வேலியால் எந்த ஆபத்தும் இல்லை. இதை அமைப்பதற்கான அனுமதியை கிண்டியில் உள்ள மின் அலுவலகத்தில் வாங்கியிருக்கிறோம். அது மட்டுமே போதும். தமிழ்நாடு முழுக்க வேறெங்கும் அனுமதி வாங்கத் தேவையில்லை. மின்வேலி அமைக்க விருப்பமுள்ளவர்கள் எங்களிடம் பணம் கட்டிவிட்டால் போதும், எல்லாவற்ரையும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’’ என்றனர்.
புகார் தெரிவித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் அரசுத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. காசு இருந்தால் என்னவேணா செய்யலாம்ங்கிறதுதான் ஊருக்கே தெரியுமே? நாமளும் கம்முனு குந்திக்குவோம்.

6 comments:

மதிபாலா said...

உன்னைச்சொல்லி குற்றமில்லை....
என்னைச்சொல்லி குற்றமில்லை......

நாடு செய்த குற்றமடி..
கூட சேர்ந்து நாமும் செய்த குற்றமடி..........!!

இது போன்ற பற்பல செய்திகளால் விஜயகாந்த் என்னும் தீய சக்தி மக்களால் புறக்கணிக்கபடுவார் என்பது சர்வ நிச்சயம்!

rapp said...

அப்போ அது ஜுராசிக் பார்க் இல்லையா, உங்களுக்கு உறுதியா தெரியுமா? புள்ளிவிவரத்தோட நிரூபியுங்க பாக்கலாம்(என்ன உளறல் இதுன்னெல்லாம் கேக்கப் படாது, அப்புறம் இதே கேள்விய விஜயகாந்த் கிட்ட கேட்டு 'தெளிவான' பதில் வாங்கச் சொல்வேன், சொல்லிட்டேன், ஆமாம்). ஒருவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகளை வெச்சு படுக்கேவலமா காமடிப் பண்ணதால, பயந்துக்கிட்டு இருக்காரோ என்னவோ

திங்கள் சத்யா said...

அது ஜூராசிக் பார்க்கா, இல்லையான்னு சத்தியமா எனக்குத் தெரியாதுங்க. தமிழ்நாடு முழுக்க எத்தனை வீடுகள்ல மின்வேலி இருக்கு, அதுல சூரிய மின்வேலிகள் எத்தனை? அதுல விலங்குகளிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்பவை எத்தனை... இப்படியான உங்கள் அத்தனை கேள்விகளும் நிச்சயம் என்னால் பதில்கூற இயலாது. அடுத்த படத்தில் அவர்தான் சொல்லணும்.

அப்புறம்... நான்கூட நினைச்சேங்க. நெத்தில லைட்டெல்லாம் கட்டிக்கினு கேப்டன் நம்பளையெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல கூட்டிட்டுப்போனா...! ஒரே ஜாலியா இருக்கும்ல...?

Anonymous said...

மரக்காணம் பாலா, உங்கள் எல்லா பதிவுகளையும் ஒரே நாளில் படித்தேன். விஜயகாந்த் மதுராந்தகம் பண்ணை விஷயம் வேண்டுமென்ற கிளப்பப்பட்ட ஒன்று. பண்ணை அமைந்துள்ள ஊர் தலைவர் மற்றும் துணை தலைவர் பிரச்சனையில் உள்ளூர் சன் டிவி நிருபர் மூலம் பிரபலபடுத்தி விட்டார்கள். ஒரு சிறிய விஷயம் எப்படியெல்லாம் அரசியல் காரணத்திற்காக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த விஷயம் தொடர்பான கடிதங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். உண்மை நிலை வேறு. சந்தர்ப்பம் கிடைத்தால் பிறகு சொல்கிறேன்.
கழிவு அகற்றும் வேலை செய்பவர் பேட்டி நன்றாக இருந்தது. அதில் வரும் கேழி என்ற வார்த்தை வசை சொல் அல்ல. கேள்வி கேட்டார்கள் என்பதே அது.
நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை ?

திங்கள் சத்யா said...

"அகநாழிகை" -பெயரே அழகாக இருக்கிறது.

எல்லாப் பதிவுகளையும் ஒரே நாளில் படித்து முடித்தீர்களா? ஆச்சர்யம், மகிழ்ச்சி.

விஜயகாந்த் பண்ணை விஷயம் அரசியல் காரணங்களுக்காக பெரிதுபடுத்தப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், உச்சவரம்பை மீறி, இப்படிப் பணம் படைத்தவர்கள் நிலம் வாங்கிக் குவிப்பது மிகப்பெரிய மோசடி.

குந்துவதற்கு சொந்தக் குடிசை இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நாட்டில் தேவைக்கதிகமாக நிலத்தை வாங்கிக் குவிப்பவர்களை வெளிச்சம் போடுகையில்... விஜயாகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா, வித்தியாசம் தேவையில்லை?

அரசாங்கத்தின் ஏதோ ஒரு திட்டத்துக்காக அல்லது இதுபோன்ற த‌னிநபர்களின் சுயநலத்துக்காக நானும் ஒருநாள் மரக்காணத்தில் இருந்து வெளியேற்றப்படலாம். உங்கள் இருப்பையும், ஒருவன் பண பலத்தால் சூறையாடும்போது அதன் வலி உங்களுக்குத் தெரியவரும்.

இது தொடர்பான விஷயங்கள் தெரியும் என்கிறீர்கள். சொல்லுங்கள், எடுத்துச் சொல்வோம்.

கேழி கேட்டார்கள் என்பது வசைச் சொல்தான். அந்த அர்த்தத்தில்தான் அதைப் பதிவு செய்திருக்கிறேன் என்பதை அன்போடு சொல்லிக்கொள்கிறேன்.

ஏன் தொடர்ந்து எழுதவில்லை? என்னை உங்களுக்குத் தெரியாதவரை, இதற்கான பதில் சிக்கலானது! உங்களுடைய இமெயில் முகவரி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

தொடர்பில் இருப்போம். நன்றி!

திங்கள் சத்யா said...

"அகநாழிகை" -பெயரே அழகாக இருக்கிறது.

எல்லாப் பதிவுகளையும் ஒரே நாளில் படித்து முடித்தீர்களா? ஆச்சர்யம், மகிழ்ச்சி.

விஜயகாந்த் பண்ணை விஷயம் அரசியல் காரணங்களுக்காக பெரிதுபடுத்தப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், உச்சவரம்பை மீறி, இப்படிப் பணம் படைத்தவர்கள் நிலம் வாங்கிக் குவிப்பது மிகப்பெரிய மோசடி.

குந்துவதற்கு சொந்தக் குடிசை இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நாட்டில் தேவைக்கதிகமாக நிலத்தை வாங்கிக் குவிப்பவர்களை வெளிச்சம் போடுகையில்... விஜயாகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா, வித்தியாசம் தேவையில்லை?

அரசாங்கத்தின் ஏதோ ஒரு திட்டத்துக்காக அல்லது இதுபோன்ற த‌னிநபர்களின் சுயநலத்துக்காக நானும் ஒருநாள் மரக்காணத்தில் இருந்து வெளியேற்றப்படலாம். உங்கள் இருப்பையும், ஒருவன் பண பலத்தால் சூறையாடும்போது அதன் வலி உங்களுக்குத் தெரியவரும்.

இது தொடர்பான விஷயங்கள் தெரியும் என்கிறீர்கள். சொல்லுங்கள், எடுத்துச் சொல்வோம்.

கேழி கேட்டார்கள் என்பது வசைச் சொல்தான். அந்த அர்த்தத்தில்தான் அதைப் பதிவு செய்திருக்கிறேன் என்பதை அன்போடு சொல்லிக்கொள்கிறேன்.

ஏன் தொடர்ந்து எழுதவில்லை? என்னை உங்களுக்குத் தெரியாதவரை, இதற்கான பதில் சிக்கலானது! உங்களுடைய இமெயில் முகவரி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

தொடர்பில் இருப்போம். நன்றி!