Sunday, April 20, 2008

துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம்?


''குட்டி ரேவதியா? அவ துப்பட்டாவைக் கையில் எடுத்துக்கிட்டு திரியிறவளாச்சே!’’ சண்டைக்கோழி படத்தில் இப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதப்போக, அது கவிஞர் குட்டி ரேவதியைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக இலக்கிய உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலையை, ‘துப்பட்டா அணியாமல் வந்திருந்தார்’ என்று அவமானப்படுத்தி வெளியே அனுப்பியது கல்லூரி நிர்வாகம். குட்டி ரேவதியின் கவிதைத் தலைப்பாகட்டும், செக்ஸ் சர்வே குறித்த குஷ்புவின் கருத்தாகட்டும் அல்லது லீனா மணிமேகலையின் குர்தா, ஜீன்ஸாகட்டும். எப்படி உடையணிய வேண்டும் என்கிற பெண்களின் தனிப்பட்ட உரிமையைக்கூட ஆணாதிக்கச் சமுதாயம்தான் தீமாணிக்கிறது என்கிற விவாதம் எழுதப்படாமலும், பேசப்படாமலும் போனதுதான் பேரதிர்ச்சியாய் இருக்கிறது.

லீனாமணிமேகலை இயக்கிய ‘தேவதைகள்’ குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி அலியான்ஸ் பிரான்ஸேவில் நடைபெற்றது. விழாவுக்கு இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், அமீர் போன்ற திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர். தழையத், தழைய புடவை கட்டித் தானும் ஒரு தேவதைபோல் மின்னிக்கொண்டிருந்தார் லீனா. புடவைக்கு துப்பட்டா அவசியமில்லாமல் இருக்கலாம். பதிலாக காதுகளை மறைத்தபடி கன்னத்தின் இரு புறமும் விளையாடிக் கொண்டிருந்தது கூந்தல். 'தலைப்புக்கேற்றார்போல் லீனாவும் தேவதைபோல்தான் வந்திருக்கிறார்' என்று நினைத்துக் கொண்டேன். ஏனோ, திடீரென்று ஆடைப்புரட்சி நினைவுக்கு வர, மனம் கல்லூரிச் சாலையிலிருந்து கிளம்பி லயோலா கல்லூரிக்குள் வலம் வந்தது. படித்துக் கிழித்தப் பாமரனும், பத்திரிக்கையாளர் ஞாநியும் பாடாய்ப்படுத்தத் தொடங்கினர். இதோ! அன்று லீனாவோடு பேசிக்கொண்டிருந்ததை இப்பொழுது பதிவிடுகிறேன்.

‘‘சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் ‘கனாக்களம் -2007’ என்கிற தலைப்பில் கடந்த ஜனவரி 15-ம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ‘சினிமாவும் சமூகமும்’ என்பது பற்றி நான் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி அழைத்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை பத்துமணியளவில் கல்லூரிக்குச் சென்ற போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ‘உங்களை உள்ளே விட முடியாது’ என்று கூறித் தடுத்தார். ‘நான் இங்கே சீப் கெஸ்டாக வந்திருக்கேன். இதோ பாருங்க இன்விடேஷன்ல என் பேர் போட்டிருக்கு’ என்று அழைப்பிதழை எடுத்துக் காட்டினேன். ‘நீங்க யாரா வேணாலும் இருங்க. துப்பட்டா இல்லாம ஜீன்ஸ§ம், குர்தாவும் போட்டிருக்கீங்க. அதனால உள்ளே விட முடியாது’ என்று மீண்டும் மறுத்தார்.

எனக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. ஆத்திரப்படுவதா? அழுவதா? என்றே தெரியவில்லை. ‘நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை... தாலிபான்களின் கோட்டையில் கால்வைத்து விட்டோமா?’ என்று நொந்தபடி நன்பர் அஜயன் பாலாவிற்கும், நிகச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் போன் செய்தேன். சில நிமிடங்களில் புடவை அணிந்த சில கல்லூரி மாணவிகள் கையில் கருப்புத் துப்பட்டாவோடு ஓடி வந்தார்கள். ‘ப்ளீஸ் மேடம்! இதை கழுத்தில் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க’ என்று கெஞ்சலாக அழைத்தார்கள். எய்தவன் இருக்க அம்புகளை நோவதா? ‘‘சுதந்திரமாக உடையணியக் கூட உரிமைகள் மறுக்கப்படும் ஒரு அடிமைகளின் கூடாரத்தில், என்னால் உங்களுக்கு என்ன கூறிவிட முடியும்?’ என்று சொல்லித் திரும்பிவிட்டேன்.

பெண்ணடிமைத்தனம், தனிமனித சுதந்திரம் பற்றி பல தளங்களில் பேசியும், எழுதியும் வரும் என்னை ‘பெண் என்பதால் நீ அடிமைதான்’ என்று முகத்திலறைந்தாற்போல் விரட்டியது பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது. ஜீன்ஸ§ம், குர்தாவும் அணிந்துவர தடை இருப்பதாக முதலிலேயே சொல்லியிருந்தால் விழாவுக்கு மறுத்திருப்பேன். நான் என்ன உடை உடுத்த வேன்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைத் தீர்மாணிக்கும் அதிகாரத்தை லயோலா கல்லூரிக்கு யார் கொடுத்தது? பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஒருவர் நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கும்போது, நமக்கு சவுகர்யமான உடையணியக்கூட நாதியில்லையே!

நீ இன்ன உடைதான் போட வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வளவு ஆணவமான போக்கு. அடிமைத்தனத்தை மறுக்க வேண்டும் என்பதற்காக கடவுளையே மறுப்பவள் நான். இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றின் மாணவர்கள், நான் என்ன பேசுகிறேன் என்பதைக் கவணிக்காமல், என்னுடைய உடைகளில் சபலமடையக்கூடிய கீழ்த்தரமான புத்தியுடன் இருப்பார்கள் என்று நிர்வாகம் நம்புமானால், இதுவரை என்ன மாதிரியான கல்வியை அவர்கள் கற்றுத்துந்டிருப்பார்கள்?

சமூக விழிப்புணர்வை போதிக்காமல், பெண்களை இழிவுபடுத்தும் அடிமைத்தனத்தை கற்றுத்தரும் கல்வி நிறுவணங்கள் பேசாமல் சாமியார் மடங்களை நடத்தலாம். புரட்சி இறையியல் என்ற போர்வையில் உலகை ஏமாற்றும் பழமைவாத லயோலா நிர்வாகத்திற்கு அதுதான் பொருத்தமாக இருக்கும். ஒரு விருந்தினரை அழைத்து கையில் துப்பட்டா கொடுக்கும் இவர்களுக்கு பக்கத்து நாட்டுப் பிரதமரோ, மேலை நாட்டு மாணவர் குழுவோ வரும் போது துப்பட்டா கொடுக்க தைரியம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கியவர் கொஞ்சமும் படபடப்புக் குறையாமல் தொடர்ந்து பேசினார்.

‘‘நான் தமிழாநாட்டில் எத்தனையோ பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறேன். அடிப்படை வசதிகளே இல்லாத சுமார் இரண்டாயிரம் கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். கல்வியறிவு இல்லாத பாமர மக்கள்கூட ஜீன்ஸ் போட்டதற்காக என்னை வெறுத்து ஒதுக்கியதில்லை. ஆனால் பாமரன், ஞானி, எஸ்.ராமகிருஷ்ணன், அஜயன் பாலா போன்ற எழுத்தாளர்களும், இயக்குனர்கள் பாலுமகேந்திரா, வசந்தபாலன் ஆகியோரும் இதே நிகழ்ச்சியில் எந்த உறுத்தலுமின்றி உறையாற்றிச் சென்றிருக்கிறார்கள். ஏன்?

அவர்களுக்கு துப்பட்டா பற்றிய சங்கடம் ஏதுமில்லை என்பதுதான். பாலுமகேந்திராவும், ஞானியும் இரண்டு நாட்கள் கழித்து, தங்களுக்கு இந்த விஷயமே தெரியாது என்று தொலைபேசியில் கூறினார்கள். பெண்ணுரிமை, முற்போக்கு வாதம் என எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய படைப்பாளிகள், இப்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால், எங்கோ தேசத்தில் நடக்கிற கொடுமைகளைக் கண்டு பொங்கியெழும் முற்போக்குவாதிகள் பக்கத்தில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டு மவுனம் சாதிப்பதுதான் வேதனை’’ என்றார்.

‘‘இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று லயோலா கல்லூரியில் விதிமுறை இருக்கிறது. அது பிடிக்கவில்லை என்று நிகழ்ச்சியைப் புறக்கணித்து லீனா வெளியேறிவிட்டார். இந்த விஷயத்தில் இரண்டு பேர் செய்ததும் சரியே. சண்டைக்கோழி படத்தில் குட்டி ரேவதியை அவமானப்படுத்தியதாக கொதித்தெழுந்த லீணாமணிமேகலை, சிவாஜி படத்தில் அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்களை கருப்பு மை பூசி அவமானப்படுத்தினார்களே! அப்போது எங்கே போயிருந்தார்’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் எழுத்தாளர் பாமரன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தொடர்ந்து பேசிய லீனாமணிமேகலை ‘‘அங்கவை, சங்கவை இரண்டும் தமிழ்ப் பெயர்கள் என்பதற்காகத்தான் பாமரன் வரிந்துகட்டினாரே தவிர அவர்கள் பெண்கள் என்பதால் அல்ல. பெண்கள் இப்படித்தான் உடை அணிந்துவர வேண்டும் என்கிற ஆனாதிக்க சிந்தனையை பாமரன் ஆதரிக்கிறாரா, இல்லையா? என்பதுதான் கேள்வி. பெண்களின் உடைகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்வதே ஆண்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. இதற்கு பதிலாக உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி வாடும் நாட்டுமக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கட்டும்.

பெண்கள் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதால்தான் ஈவ்டீசிங் பெருகிவிட்டது என்கிறார்கள். கவர்ச்சியான உடை என்றால் இடுப்புத் தெரிய உடுத்தும் புடவையைத்தானே முதலில் தடை செய்ய வெண்டும்! எதிரில் வரும் வாகணத்தைக்கூட கவணிக்காமல் அங்கங்கே இழுத்து... இழுத்து... சரி செய்தபடி செல்லும் பெண்ணுக்குத்தான் தெரியும், புடவையில் உள்ள அசவுகர்யம். உடையைப் பார்த்து அத்துமீறத் துனிபவனை விட்டுவிட்டு பாதிப்படைந்த பெண்ணைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது அயோக்கியத்தனம். தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று ஒரு பெண்ணுக்குத் தெரியும். முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்வது பற்றி ஆண்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’’ ஒட்டுமொத்தக் குமுறல்களையும் கொட்டித் தீர்த்தார் லீனா.

குட்டிரேவதியிடம் இது விஷயமாக பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘லீனா எப்படிப்பட்டவர், என்ன மாதிரியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர், எந்த விதத்தில் உடை அணிந்திருப்பார் என்கிற எல்லா விஷயங்களும் லயோலா கல்லூரிக்குத் தெரியும். சினிமா சம்பந்தமான லீனாவின் பேச்சுக்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவரது ஆடை மட்டும் அச்சமூட்டுகிறதோ?

எப்போதுமே சினிமா பிரபலங்களைக் கூப்பிட்டுத் தங்களை பெருமையடித்துக் கொள்ளும் லயோலா நிர்வாகத்திற்கு இதன்மூலம் செலவில்லாமல் விளம்பரம் கிடைத்திருக்கிறது. வியாபார ரீதியிலான, மலிவான சிந்தனைகளையுடைய, வெகுஜன நுகர்வுகளின் அடிமைகளை உற்பத்தி செய்யும் லயோலா நிறுவனத்திடமிருந்து விழிப்புணர்வுடன் கூடிய மாணவர்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இதுவரை மத நிறுவனங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்போது கல்வி நிறுவனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. என்னதான் அறிவாற்றல் கொண்டவளாக, திறமையானவளாக இருந்தாலும், பெண்ணை ஒரு பாலியல் குறியீடாகவே பார்க்கும் இச்செயல் மிகக் கீழ்த்தரமான, வண்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’’ என ஆவேசப்பட்டார்.

தொடர்ந்து, ‘‘இப்போது எல்லா மதிப்பீடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் ஒன்று சேர முடியாதபடி பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டனர். ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களையும் எதிர்பார்க்க முடியாது. ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ எல்லாம் உங்களின் பாதுகாப்புக்காகத்தான் என்று ஆண்கள் கூறுவதை நினைத்தால் எரிச்சலாக வருகிறது. இதை பாதுகாப்பான சூழலாகவே உணர முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டாம். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய அதிகாரம்தான் தேவை’’ என்கிறார் குட்டிரேவதி.

லயோலா கல்லூரிக்குச் சென்ற இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் பெரியாரியவாதியான ஓவியா ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், ‘‘இந்த விஷயத்தில் எங்களால் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க முடியாது. ‘நமக்கென்று உள்ள பன்பாட்டை மீறக்கூடாது’ என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. விருந்தினர்களைப் போற்றுவதும் பன்பாடுதான். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையையே நிர்வாகம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது’ என்றும் தடை விதிப்பார்கள். இது வண்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்றார்கள்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலையிடம் பேசியபோது, ‘‘அவர் டைட் ஜீன்ஸ§ம், ஸ்லீவ்லெஸ் குர்தாவும் அணிந்து மாணவியைப் போல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். அதனால்தான் காவலர்கள் தடுத்துள்ளனர். ஏதோ ஃபேஷன் ஷோவுக்கு வருவதைப்போல்தான் அவர் கல்லூரிக்கு வந்திருக்கிறார். ஒரு கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே கருத்தைச் சொல்ல வேண்டியவர் மார்கெட்டிற்குச் செல்வதைப் போல உடையணிந்து வரக்கூடாது. கல்லூரி என்பது கோவிலுக்குச் சமம். இதை அந்தம்மா உணர வேண்டும்’’ என்றார்.

லீனா மணிமேகலைச் சொல்வதுபோல், ‘‘பெண்களைப் பிரித்தாளும் ஆண்களின் சூழ்ச்சியால், இந்த அவலம் பெருமளவிலான விவாதத்துக்கு உள்ளாகாமலே போய்விட்டது’’. ஞாநியின் ஓ பக்கங்களோ, பாமரனின் படித்துக் கிழித்ததோ இது பற்றி எதுவுமே பேசாமல் வாய் மூடிக்கொண்டது, பத்திரிகை வாசகர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்குமென்று நம்பலாம்.

8 comments:

வந்தியத்தேவன் said...

சென்ற வியாழக்கிழமை இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் லீனாமணிமேகலை, டாக்டர் ஷாலினி மற்றும் வானதி மூவரும் மிகவும் அழகாகவும் காத்திரமாகவும் இந்த விடயத்தை விவாதித்தார்கள். ஒரு பெண் கல்லூரி முதல்வர் மட்டும் இடையிடையே எதிர்ப்புத் தெரிவித்தார்.

Anonymous said...

சுதந்திரம் என்று பேசும் உங்களை ஒன்று கேட்கிறேன் உங்களை பற்றி யாராவது அவதூறாக பேசினால் அதை கண்டுகொள்ளாமல் பேசுவது அவர் சுதந்திரம் என்று சென்று விடுவீர்களா? மாட்டேன் என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால் அது உங்களை காயப்படுத்துகிறது. எப்படியென்றால் அவன் பேசுவதை மற்றவர்கள் ஏற்றுகொண்டால் உங்கள் மதிப்பு கெட்டுவிடும்.
அதனால் அது (சுதந்திர) அத்துமீறல் சரிதானே.

அதுபோல இதுவும் ஒரு சுதந்திர அத்துமீறல்.

எப்படி
நீங்கள் வரும் மேடையில் ஆண் கவிஞர்கள் இருக்கலாம் சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் இருக்கலாம்.அவர்கள் உங்கள் கவர்ச்சியால் ஈர்க்கபட்டு உங்களை பார்த்துகொண்டே இருக்கலாம் எனென்றால் அவர் ஒருஆண்,பெண் மீதான ஈர்ப்பு இயல்பானது.

அவர் பார்ப்பதை மற்றவர்கள் கவனிக்கலாம்.அப்போது அவர் மீதான மதிப்பு கெடலாம் அல்லது அவர் விமர்சிக்கபடலாம்.

அல்லது நிகழ்ச்சியை விமர்சிக்கும் ஒருவர் உங்கள் கட்டுரைகளையும் கவிதைகளையும் விட்டு உங்களையோ உங்கள் ஆடைகளை வர்ணிக்கலாம்.
அப்போது நடந்த நிகழ்ச்சியின் தலைப்பு விமர்சிக்கபடலாம் அதன் மதிப்பு கெடலாம். அப்படி நடந்தால் மேலே சொன்ன செயலின் விளைவும் இதன் விளைவும் ஒன்றே.உங்கள் செயலும் அத்துமீறலே.

எனவே எங்கு செல்கிறோம் எதற்கு செல்கிறோம் என்று உணர்ந்து அதுபோல் உடையணிய வேண்டும்.

அதற்காக
துப்பட்டா அணிய சொன்னார்கள் என்பதற்காக வாகனத்தில் செல்லும் போது பறக்கும்படி அணிந்துசெல்லக்கூடாது.

அப்புறம் துப்பட்டாவினால் தான் என் மானம் போனது என்று சொல்லக்கூடாது

எதை எங்கு எப்படி அணியவேண்டுமோ அதை சரியாக செய்யவேண்டும்.

ஒவ்வொரு செயலின் விளைவுகளே அதன் விடை. அதுவே சரியா? தவறா? என்று தீர்மானிக்கிறது

திங்கள் சத்யா said...

நாங்கள் சுதந்திரம் பற்றி பேசித் திரியவில்லை. சுதந்திரமாக இருக்கிறோம். இரு சக்கர வாகனத்தில் பயணித்தால் துப்பட்டா மட்டுமல்ல வேட்டி, கோவணம்கூட பறக்கும். துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம் என்று கேட்டிருந்தோம். தமிழன் என்ற பெயரில்

//அதற்காக
துப்பட்டா அணிய சொன்னார்கள் என்பதற்காக வாகனத்தில் செல்லும் போது பறக்கும்படி அணிந்துசெல்லக்கூடாது.

அப்புறம் துப்பட்டாவினால் தான் என் மானம் போனது என்று சொல்லக்கூடாது//


இவ்வாறு சொல்லி அதை நிரூபிக்க முயல்கிறீர்கள். இந்த விஷயம் பற்றி விவாதிக்கும் அளவுக்கு உங்களிடம் சமுதாயப் பார்வை இல்லை. தயவு செய்து நிறை படிக்கவும். நல்லவனோ, கெட்டவனோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

vignathkumar said...

first ask ramakrishnan like to wear thuppata and ask men to wear thupata to compels women.
pant shirt t shirt are not only for men.
gnani is not a ful feminist.
pamaran is many times oppose to women rights.
leena is a bold tamil women in non tamil women dominating tamil medias.

vignathkumar said...

first ask ramakrishnan like to wear thuppata and ask men to wear thupata to compels women.
pant shirt t shirt are not only for men.
gnani is not a ful feminist.
pamaran is many times oppose to women rights.
leena is a bold tamil women in non tamil women dominating tamil medias.

vignathkumar said...

first ask ramakrishnan like to wear thuppata and ask men to wear thupata to compels women.
pant shirt t shirt are not only for men.
gnani is not a ful feminist.
pamaran is many times oppose to women rights.
leena is a bold tamil women in non tamil women dominating tamil medias.

vignathkumar said...

first of all ask men to wear thupatha if any men or women compels women towear tuptha they have to ask the men to wear it.
tamil society women should be very care ful about male domination supportive pasychartist articles which balmes women victomes and their dress make theeve teasing poruki male to escape. gnani like writes did not take mach care about this type of issues because their male dominatin supportor to some extent

சரவண குமார் said...

லயோலா கல்லூரி தனது கொள்கையை வற்புறுத்தியுள்ளது.. அதை பிடிக்காத லீனா வெளியேறி விட்டார்.. அவ்வளவே..

சில கோயில்களில் ஆண்கள் மேலாடை அணிய கூடாது.. பெண்களும் பாரம்பரிய உடையை தவிர வேறு எதுவும் அணியக்கூடாது. அதற்காக "ஆடையில் இருக்கிறதா பக்தி" என்று பதிவு போட தேவையில்லை. உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் அந்த கோயிலுக்கு செல்லாதீர்கள்.

உங்களுக்கு நல்லபடியாக தோன்றும் உடைகள் மற்றவர்களுக்கும் நல்லபடியாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை.. ஒரு வேளை நமீதாவோ ரம்பாவோ ஒரு கல்லூரியின் விழாவுக்கு "மானாட மயிலாட" உடையை உடுத்தி வந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தால்?அல்லது யாராவது ஒரு கோவணம் அணிந்த சாமியார் விழாவுக்கு வந்து கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டால்? அதை எதிர்த்தும் பதிவு போடுவீர்களா?