Saturday, November 8, 2008

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"

வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். 

நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை விரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.

கோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.

ஏன்?

‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.

‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.

டீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு... ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு?’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு? வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நான் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

அப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.

‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.

அப்பதான், விடுதலைச் சிறுத்தைங்க வந்து எங்க வீட்டுக்காரரை ஒப்ப்டைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அவங்க மூலமா ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.

யாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது? என் புருஷன் உயிரோட வரணுமே! ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன 2007, செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.

‘‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது? அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே...’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ...’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.

வனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.

‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா? என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது,  

‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர்.  

விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.

இப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு? என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.

செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். 

இதையடுத்து கடந்த அக்டோபர் 15-ம் தேதி நீதிபதிகள் எலிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

விடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே... எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா? குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே! ‘பசிக்குதுமா...!’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா!’ன்னு தோணுது.’’

இது, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே!

16 comments:

Anonymous said...

மிகுந்த வேதனையளிக்கும் விவகாரம். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை, இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்து கொண்டால், எளிய மக்கள் பாவம் என்னதான் செய்வார்கள்?

சமுதாய அவலங்களை பற்றிய விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Anonymous said...

நான் பார்த்தவரையில் இந்த மாதிரி அடாவடி போலிசின் வீட்டில் ஏதேனும் ஒரு பிள்ளை கை, கால் ஊனம், மன வளர்சிஇன்மை, இல்லை என்றால் போலீஸ் மகன் பொறுக்கி,அந்த போலீஸ்காரரே பெரிய குடிகாரனாக என தான் செய்த பாவத்திற்கான கண்முன்னே தண்டனையை அனுபவித்தாலும் இவர்கள் அடாவடித்தனத்தை விடுவதில்லை.

Anonymous said...

Hello sir

Antha amma pillaikalin nilai?

avankalukku naan help panna mudijumaa?

my e-mail
suthans2007@hotmail.com
from france

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
திங்கள் சத்யா said...

கண்டிப்பாக உதவ முடியும் சுதன். உங்களுடைய ஈர நெஞ்சுக்கு என் நன்றி. என்னைப் பற்றியும், அக்குடும்பத்திற்கு உதவுவது குறித்த விபரங்களையும் நீங்கள் குறிப்பிட்டிருந்த இமெயில் முகவரிக்கு அனுப்பினேன். "Delivery to the following recipient failed permanently" என்று வந்துவிட்டது. எனவே சரியான முகவரியை அளிக்கும்டியும், என்னுடைய email முகவரியில் தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. தொடர்பில் இருப்போம்.

Anonymous said...

இந்த போலிசு அடாவடி பண்ணுவதால் தான் குடும்பத்தில் பிரச்சனையா? இல்லை குடும்பத்தில் பிரச்சனை என்பதால் தான் இவர்கள் அடாவடி போலிசு ஆகுராங்களா?

Anonymous said...

We have to do something to reduce the police power. Its a shame to live in INDIA. Actually i had a passion to work in India only not for MNCs. But now i feel that im a fool for this. Cant explain..............

Raj said...

Hi sathya,

I would like to send some amount to that family.

Kindly provide me the details.

raj6272@gmail.com

திங்கள் சத்யா said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது அனானிமஸ்! வெட்கங்கெட்ட இந்தியாவிதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உங்களைப் போன்றவர்களின் மனநிலை குறித்து அக்கறை கொள்ளவேண்டியது மானங்கெட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான். இங்கே ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏகன் படத்தில் நயன்தாரா செக்ஸியாக நடித்தார் என்று ஒரு கூமுட்டை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறான். ஒரு கூமுட்டை நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு விசாரிக்கிறான். கொஞ்சநாள் கழித்து, "நடிகை நயன்தாராவின் ஆபாசப் படங்களை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டிக்கிறேன்" என்று கூறுகிறான். இது எதைக் காட்டுகிறது...?

நன்பர் ராஜ்!

உங்களின் கனிவான உதவிக்கு நன்றி. வனிதா குறித்த விபரங்கள் உங்களது மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசல்காரன் said...

இந்தப் பெண்ணின் இன்றைய நிலமைக்குக் காரணமான போலிஸ்காரர்களும், அதிகாரிகளும் விளங்கமாட்டார்கள்.

உங்கள் அனுமதியோடு...

என் வலைப்பூவின் அறிவிப்புப் பலகையில் எழுதியிருக்கிறேன்.

நன்றி.

திங்கள் சத்யா said...

நல்ல காரியங்களுக்கு எப்பொழுதும் அனுமதி தேவையில்லை பரிசல்காரன். உங்களுக்கும் உங்களது பார்வைக்கு அனுப்பிய வெயிலானுக்கும் அண்ணன் மாசிலாவுக்கும், வனிதா சார்பாகவும் அவரது வழக்கறிஞர் ரஜினிகாந்த் சார்பாகவும் நன்றி.

Sundar சுந்தர் said...

i want to send some money. send the contact details.
- bank a/c number; bank branch; beneficiary name.

or

full mailing address for vanitha

sundar4blog@gmail

திங்கள் சத்யா said...

தங்களுடைய உதவிக்கு நன்றி சுந்தர். வனிதாவுக்கு என்று இதுவரை தனியாக எதுவும் வங்கிக் கணக்கு இல்லை. அவரிடம் செல்போன்கூட இல்லை. அவரது உறவினர் மூலமாகவே தொடர்புகொள்ள முடியும்.

மேற்சொன்னபடி, சென்னையிலிருந்து திரு.ராஜ் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். பணமாக ரூபாய்.15 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்தக் குழந்தைகளின் படிப்பு உதவி குறித்து ஆவண செய்வதாகவும் கூறியிருக்கிறார். இத்தகவல்களை நான் வழக்கறிஞர் ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட வனிதா வழக்கு, வரும் 19‍ம் தேதி புதன்கிழமை மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு வருகிறது. அப்போழுது நேரிடையாக வனிதாவிடம் இதுகுறித்து விவாதிக்கவிருக்கிறேன். அதன் பிறகே, "குழந்தைகள் பெயரிலா, அல்லது வனிதாவின் பெயரிலா! யார் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது?" என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அந்த விபரங்கள் உடனுக்குடன் உங்களுக்கு மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் உங்களைப் போன்றவர்கள்தான், வனிதாவுக்கு நீதிபதிகள். ஏனென்றால், இந்த வழக்கில் நீதிமன்றமோ அரசாங்கமோ உரிய நியாயத்தை வழங்காது என்பதே பல வழக்குகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிற‌து.

rajan said...

hello sir,
iwant to help not only her but also scores of others like her. so i request you to set up a trust and deposit all this money there. then whenevr such victims are there we can help them from the money deposited in this trust.
will u do this ?
rajan s

திங்கள் சத்யா said...

உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி ராஜன். ஆனால், தனியொரு மனிதனாக நான் ட்ரஸ்ட் ஆரம்பிப்பது என்பது நடவாத காரியம். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. வேண்டுமானால், தமிழகத்தில் மிக நேர்மையான ட்ரஸ்ட் ஒன்றின் மூலம் உங்களது உதவிகளைத் தொடரலாம். அதற்கான ஏற்பாடுகளை வேண்டுமானால் என்னால் செய்ய முடியும். இந்த பதில் உதவி செய்ய நினைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் பொருந்தும். நன்றி.

வனிதாவின் வழக்கு, மீண்டும் இன்றைக்கு அமர்வுக்கு வருகிறது. அவர் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பொருளாதார நெருக்கடிகளால் அந்த பெண்மணியால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லையாம். இது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சாதகமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடிய சந்தர்ப்பங்களை வழங்க ஏதுவாகிறது. ஒரு வழக்கின் வெற்றி, தோல்விகளை பாதிக்கும் காரணிகள் என்னவாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

வனிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு இன்று ஆஜராகிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Anonymous said...

இந்த மாதிரி பொறுக்கி போலீஸ் நாய்கள் இருக்கிற வரையில் ஏழைகள் பாடு பெரும் அவதிதான்....தேவிடியா மகனுங்க