Saturday, May 3, 2008

ஏ/சி பஸ்ஸும் நானும் -‍சின்னதாய் ஒரு பயணக் குறிப்பு.

பெரிய கட்டிடங்களையும் தாண்டி புழுதி பறக்க வீசிக்கொண்டிருந்த‌து கடற்காற்று. முகத்தை கைக்குட்டையால் மூடியபடி அலைந்து கொண்டிருந்தார்கள் மக்கள். சென்னை பூக்கடை பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம். 'குயின் எலிசபத்' சொகுசுக் கப்பல் மாதிரி சத்தமில்லாமல் வந்து நிற்கிறது 21-ஜி மாநகரப் பேருந்து. அதன் முகப்பில் இருக்கும் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் வழித்தடங்கள் ஒவ்வொன்றாக வந்து மறைகின்றன. கைக்குட்டையை எடுத்துவிட்டு 'ஆ' என்று வாய் பிளக்கிறார்கள் மக்கள். "என்னய்யா இது? கண்ணாடிக் கப்பல் மாதிரி வந்து நிக்குது! நம்ம ரூட்லயும் ஒண்ணு விட்டா காசு போனா போவுதுன்னு ஜாலியா ஏறிக்க‌லாம்" என்று ஆளாளுக்கு பேசிக்கொள்கிறார்கள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது வேடிக்கைப் பார்க்க. "பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சிப் பார்த்த மாதிரி"ன்னு வச்சிக்குங்களேன். மெல்ல ஒவ்வொருத்தராக பஸ்சுக்குள் நுழைகிறார்கள். ஏதோ மியூசியத்தைப் பார்ப்பது போல் அணுவணுவாய் ரசிக்கிறார்கள். தொட்டுப் பார்த்து சந்தோஷமடைகிறார்கள். பூக்கடை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்தே பிழைப்பு நடத்தும் தவழ்ந்து செல்லும் ஊணமுற்ற ஒருவர் கஷ்டப்பட்டு பஸ்சுக்குள் ஏறுகிறார்.

"ஒன்னும் டிஸ்டப் பண்றேன்னு நெனக்காதீங்க, துட்டு கேக்க வரல. சும்மா எப்டி கீதுன்ட்டு பாக்க வந்தேன்" ‍பயணிகளைப் பார்த்து கூறுகிறவர் "சோக்கா பண்ணிக்கிறான்யா...! பஸ்ச ஓட்டவே தேவல. இத்த மட்டும் ஏங்கிட்ட குடுத்தாங்கன்னு வச்சிக்கியேன்! சும்மா நின்ன எட்த்திலியே துட்டு பாத்துருவேன். ஒரு நிம்சம் சுத்திப் பாக்க ரெண்ருவா. பாட்டு கேட்டா அஞ்சி ருவா. ஒக்காந்து தூங்குனா... ஒன் அவர் முப்பது ருவா. செம்ம கலெக்சன் பாக்கலாம். இந்த ஐடியாலாம் அவுங்குளுக்கு எங்க வரப்போவுது!" என்று நொந்து கொள்கிறார்.

இவரின் களேபரங்களுக்கு நடுவில் "தள்ளுபா... தள்ளுபா..." என்று மக்களை விலக்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் வந்தமர்கிறார் ஒரு காக்கிச்சட்டை. "ம்... நல்லா சொகுசாத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கணும்..." என்று தனக்குள்ளாக முனுமுனுத்துக் கொள்கிறார். அந்தப் பேருந்தின் மத்தியில் உள்ளே காலியிடம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கும் மக்கள், "இது என்னத்துக்குப்பா! குடும்பத்தோட உக்காந்து சோறு தின்றதுக்கா? கெகெக்கே..." என்று ஜோக்கடித்துச் சிரிக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் இருக்கைகள் நிரம்பி வழிய, பளிச்சென உடையணிந்து பக்கா ஷேவுடன் உள்ளே நுழைகிறார் கேப்டன் இளங்கோவன். அச்சு அசல் கப்பல் கேப்டன் போலவே தோற்றமளிக்கும் அவர்தான் 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த ஏ.சி. பஸ்சின் டிரைவர். அதுவரை அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாதா பஸ்சின் டிரைவர்.

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடற்கரைச் சாலையில் கால் பதிக்கிறது 21ஜி. சிம்ரன் ரேஞ்சிற்கு அது சீறிக்கொண்டு போகும் அழகைப் பார்த்து ஜொள்ளு விடாத‌வர்களோ, சைட் அடிக்காதவர்களோ யாரும் இல்லை எனலாம். செம்ம கிளாமராக அது சிக்னலில் நிற்கும் போது "விளைக்கைப் பார்ரா வெண்ணை" என்று வழிபவர்களை நோக்கிச் சொல்லாமல் சொல்லியபடி மீண்டும் விரைகிறது.

வழக்கமாக எங்கிருந்தாலும் பழங்கதைகளையே பேசிச் செல்லும் மக்கள், பயணிக்கும் பேருந்தப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். "இப்பதான் நான் பர்ஸ்ட் டைம் ட்ராவல் பண்றேன். ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கு. சென்னையைப் பொருத்த அளவில் பொல்யூஷன்தான் பெரிய பிராப்ளமே. இதனால் நூறு பேரில் பத்து பேருக்கு கேன்சர் வரும் வாய்ப்பிருப்பதா பத்திரிகையில் படிச்சேன். அது இல்லைன்னாலும் அட்லீஸ்ட் ஆஸ்துமாவாவது கண்டிப்பாக வந்துரும். எவ்வளவு சுத்தமாக வந்தாலும் திரும்பிப் போகும்போது ரொம்ப அழுக்காத்தான் போய்ச்சேர வேண்டியிருக்கு. அந்த வகையில் இது உடல்நலத்திற்கான பஸ்ன்னு கூட சொல்வேன்" என்கிற பத்மா சுந்தர் "குழந்தைகளை கூட்டிக்கிட்டு குடும்பத்தோட ட்ராவல் பண்றோம்னு வச்சிக்கங்களேன், தப்பித் தவறி பசங்களோ, பர்ஸோ மிஸ் ஆக சான்ஸே இல்லை. எல்லா விதத்திலயும் இது ரொம்ப சேஃப்டியான பஸ்" என்கிறார்.

"ஆபீஸ்ல, போறவர்ர இடங்கள்ல எல்லாம் ஏ.சி.யிலயே இருந்து பழகியாச்சா... இப்படி எங்கயாவது வெளியே போகும்போது புழுக்கம் தாங்க முடியலை. என்னதான் மீட்டரைப் போட‌ச்சொல்லி கவர்மெண்ட் பிரஷர் கொடுத்தாலும் ஆட்டோக்காரங்க கேக்கறதே இல்லை. சார்ஜை கேட்டா மயக்கமே வந்துடும். காசு ஒரு பெரிய விஷயமில்லைன்னாலும் நாம ஏமாத்த‌ப்படுகிறோம்ங்கிற உணர்வே டென்ஷனை உண்டாக்குது. இப்ப பிரச்சினையே இல்லை. நான், ஒரு காரை வாடைகைக்கு எடுப்பதைவிட காஸ்ட்லியாக ட்ராவல் பண்றேன். என்னதான் ஏ.சி. காரா இருந்தாலும் இந்தளவு சொகுசு வராதுங்கறது நிச்சயம். இதே ரேஞ்சிக்குப் போனா சென்னை ஒரு இண்டர்நேஷனல் சிட்டி ஆகறது வெகு தூரத்தில் இல்லை" என்கிறார் பாண்டியன் என்பவர்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷங்கர் "பாஸ்! ஒரு விஷயம் கவணிச்சீங்களா? என்ன தான் பஸ்சு மதிப்பு 78 லட்சம்னாலும், புத்தம் புதுசுன்னாலும் கண்டக்டர் பேக் மட்டும் மாறவே இல்லை பாருங்க. அதே பழைய லெதர் பேக் தான்" என்று சொல்ல, கண்டக்டர் உட்பட எல்லோரும் கொல்லென்று சிரிக்கிறார்கள். மற்ற பஸ் கண்டக்டர்கள் மாதிரி பயணிகளிடம் எரிச்சல் காட்டாமல் ரொம்ப ஃபிரண்ட்லியாக பழகும் நடத்துநர் ராஜேந்திரன், "பின்ன என்ன சார்! இவ்ளோ வசதி பண்ணி குடுத்திருக்காங்கன்னா பயணிகள்கிட்ட அன்பா நடந்துக்க வேணாமா" என்கிறார்.

"சாதாரணமாவே நம்ம ஏரியால அனல் ஜாஸ்தி. இதுல வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு பஸ் ஏறினா நிக்க முடியாத அளவுக்கு கூட்டம். அப்போ பாத்து இடி மன்னர்கள், பிக் பாக்கெட் ரவுடிகள்னு மேலும் தொந்தரவு தாங்காது. ஆனா இந்த பஸ்ல அதெல்லாம் நோ சான்ஸ். ஏன்னா, எல்லாமே காமிராவுல பதிவாகிறதால‌ குற்றவாளிகளை அடையாளம் கண்டு நையப் புடைக்கலாம். அதிகமா காசு கொடுத்து ஆட்டோவிலோ, டாக்சியிலோ போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னைக் கேட்டீங்கன்னா இதுதான் ரியல் ஹீரோன்னு சொல்வேன்" என்கிறார் ராதா என்பவர்.

கெத்தாக பஸ் ஓட்டிச் செல்லும் ஹைடெக் டிரைவரான இளங்கோவன், ஒரு விமானி மாதிரி செயல்படுகிறார். அவர் எதிரில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள வயர்லஸ் அடங்கிய மைக் இருக்கிறது. பஸ்சைச் சுற்றி உள்ளேயும், வெளியேயும் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளிருந்தபடியே எல்.சி.டி மானிட்டரில் பஸ் எந்த நிலையில் பயணம் செய்கிறது என்பதையெல்லாம் இளங்கோவனால் கவனித்துச் செயல்பட முடிகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. "எப்டி சார் இருக்கு எங்க பஸ்சு? நல்லா இருக்கா? ஏ.சி.யைக் கொஞ்சம் கூட்டினேன்னு வச்சுக்கங்க, சும்மா ஊட்டிக்கே போய்டுவீங்க'' என்கிற இளங்கோவன், "இது மெட்ராஸ் இல்லை சார், மானிட்டரைப் பாருங்களேன்! சும்மா லண்டன் மாதிரி தெரியல?" -பெருமையுடன் கேட்டபடியே ஆக்ஸிலேட்டரை முடுக்குகிறார்.

No comments: