Sunday, November 28, 2010

"புதிய மனுதர்மம் எது தெரியுமா? கலைஞர் குடும்பம்தான். உங்களை மறுபிறவி எடுக்க விடமாட்டேன்."


‘விருதகிரி’ பட ஆடியோ ரிலீஸான நவம்பர் 22&ம் தேதிக்கு முதல்நாள். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டு என்கிற அரசியல் பரபரப்பு கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தது. காரணம், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத் தேர்தலில், தி.மு.க தொழிற்சங்கத்தை ஒழித்துக் கட்டும் விதமாக அ.தி.மு.க.வுக்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தது தே.மு.தி.க. அப்படியென்றால், ஆடியோ ரிலீஸின்போது விஜயகாந்தின் பேச்சில் அரசியல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர்.

சென்னை டிரேட் சென்டரில் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆர அமர ஜூகல் பந்தி என்கிற பெயரில் நேரத்தை வீனடித்துவிட்டு இரவு 10.46 மணிக்குதான் தொடங்கினார்கள். காரணம், கவிஞர் சினேகன். அவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவருக்கு உதவியாக கேப்டன் டி.வி. காம்பியர் சுகுனா. வெள்ளை நிற கோட், மஞ்ச கலர் பனியன் என காமெடி காம்பினேஷனில் காட்சியளித்த சிநேகன், நம்மை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு பேசிப் பேசியே அறுத்துக்கொண்டிருந்தார். இதனால், நிகழ்ச்சி முடிய நள்ளிரவு 12.30வரை ஆனது. ஆனால், மொத்தக் கூட்டமும் அதுவரை நின்றிருந்து ஆரவாரம் செய்ததுதான் ஆச்சர்யமான விஷயம்.

முதல் ஆளாக மைக்கைப் பிடித்தவர் வினுச் சக்கரவர்த்தி.
‘‘இவருடைய இலையில் என்ன விழுகிறதோ, அதுதான் எல்லாருடைய இலையிலும் விழும். அது வஞ்சிரமா இருந்தாலும் சரி, வவ்வாவா இருந்தாலும் சரி. அப்படி ஒரு கொடை வள்ளல் நம்ம கேப்டன். அப்படிப்பட்டவர், இந்த நாட்டுக்கே தலைவராக வந்தால் நல்லது’’ என்றார். இலையோடு கூட்டணி வைக்கப் போறதைத்தான் இப்படிச் சொல்றாரோ என எண்ணத் தோன்றியது.

அடுத்து வந்தார் எஸ்.வி.சேகர். ‘‘தமிழ்நாட்டின் அரசியலை மாற்றியமைக்ககூடிய மிகப்பெரும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்திருக்கிறார். ‘படத்தை எப்படி ரிலீஸ் பண்றார்னு பார்த்துடுவோம்?’ என்று சில பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆளில்லை அவர். கேப்டனுக்கு ‘கை’ கொடுக்க எத்தனையோ கைகள் காத்துக்கிடக்கு.’’ என காங்கிரசின் சப்போர்ட்டை மறைமுகமாய் உணர்த்தியவர், ‘‘நடிகன் நாடாள முடியுமா? என்று சிலர் கேட்டார்கள். புரட்சித்தலைவைர் எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸானபோது, யாருமே தியேட்டர் தரவில்லை. போஸ்டர் ஒட்டக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் படம் படம் மாபெறும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரானார். அதேபோல கேப்டனும் வெற்றி பெறுவார்’’ என்று கொளுத்திவிட்டுப் போனார்.

இயக்குநர் சேரன் வந்தார். ‘‘இவர் வர்றேன்னு சொல்ல மாட்டார். ஆனா வருவார். ஜெயிப்பேன்னு சொல்ல மாட்டார். ஆனா ஜெயிப்பார். (ஏய், ரஜினியைச் சொல்றாருப்பா என்று பேச்சு எழுந்தது). இவர் ஜெயிப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நல்லது’’ என்றார்.

விஜயகாந்துக்கு முன்பாக மைக்கைப் பிடித்தவர் சத்யராஜ். ‘‘நாடோடி மன்னன் படதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வசனம் பேசுவார். அதுவும் எப்போ? அடுத்தநாள் பதவி ஏற்கும் முன்பாக மன்னனுக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து அவரைக் கவுத்துடுவாங்க. வேற வழியில்லாமல், நாடோடியான எம்.ஜி.ஆரை மன்னனாக்குவாங்க. அப்போ மந்திரிகள்லாம், ‘உன்னை நம்பி எப்படி இந்த நாட்டை ஒப்படைக்கிறது’ என்று கேட்பாங்க. அப்போ எம்.ஜி.ஆர் சொல்வார், ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமே இல்லை.’ இந்த வசனம் புரட்சிக்கலைஞருக்கும் பொருந்தும். கேட்காமலேயே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் கேப்டன்.

‘பொன்மனச் செல்வன்’ என்றொரு படத்தில் இவர் நடித்திருக்கிறார். உண்மையிலேயே இவர் பொன்மனச்செம்மல்தான். பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்லியிருக்கார். ‘தம்பி! எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார்’ என்றார். அதை என்னுடைய அன்பு நண்பன் விஜயகாந்த் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.’’ என்று வார்த்தைக்கு வார்த்தை எம்.ஜி.ஆருக்கு நிகராக விஜயகாந்த்தை புகழ்ந்துவிட்டுப் போனார்.

கவிஞர் சினேகனும், கேப்டன் டி.பி காம்ப்பியர் சுகுனாவும், விருந்தினர்களை கேப்டன்ஜி, சத்யராஜ்ஜி, எஸ்.வி.சேகர்ஜி என்று ‘ஜி’ போட்டு அழைத்துக்கொண்டிருந்தனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்டுக்கொண்டே தன் பேச்சை ஆரம்பித்தார் விஜயகாந்த்.

‘‘சினேகனும் சுகுனாவும் கேப்டன்ஜி, விக்ரமன்ஜி என்று எல்லோரையும் ஜி போட்டு அழைக்கிறார்கள். இந்த நாட்ல பிரச்னையே ‘2&ஜி’ என்கிற ஸ்பெக்ரம்ஜி&னாலதான். விழா அழைப்பிதழில் நான் யார் பேரையும் போடலை. காரணம், இந்த ஆட்சி அப்படி. எல்லோருக்கும் பயம். என்னய்யா பயம்? ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. வாலி அவர்கள்தான் விருதகிரி படத்தில் எல்லா பாடல்களும் எழுதவேண்டும் என்று விரும்பினேன். ஆனா, தொந்தரவு பண்ணலை. ஏன்னா, இப்ப இருக்கிற ஆளுக்கு அது பிடிக்காது. இவருக்கு மேடை போட்டு துதிபாடிக்கிட்டு இருந்தா, ச்சவுக்கியமா உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்பார். வாராதுன்னு தெரிஞ்சா, ட்ரெய்ன் ஓடாத இடத்துலயும் தலை வச்சிப் படுப்பார்.

‘தி.மு.க.வை வரவிடமாட்டோம்’னு நாங்க சொன்னதுக்கு, ‘எந்த படத்துல?’ன்னு இவர் கேட்கிறார். ‘சினிமாவுக்கு எங்க குடும்பம் வர்றது தப்பா?ன்னு கேட்டார். அதனாலதானே சினிமா உலகம் செத்துப்போய் கிடக்கு. ‘கிரிமினல்’னு சொல்ற அந்த மாஃபியா கும்பலுவுக்கு! நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க. எல்லாரும் வேடிக்கைப் பார்க்கணுமா? மனுதர்மம் மறு பிறவி எடுத்தால் வரவிடமாட்டேன்னு இப்போ சொல்றார். அப்படின்னா, 1967&ல் ராஜாஜியோட ஏன்யா கூட்டு சேர்ந்தீங்க? மந்திரி பதவிக்ககத்தானே.

2ஜி&யைப் பற்றிப் பேசினா, அவர் தாழ்த்தப்பட்டவர்னு சொல்றார். ஜாதி வேண்டாம், வேண்டம்னு சொல்லிக்கிட்டே ஜாதியைப் பத்திப் பேசுறார். ஐயருக்கு ஒரு நீதி உங்களுக்கு ஒரு நிதியா? இப்படிப் பேசினா, ‘விஜயகாந்த் என்ன பிராமினுக்கு சப்போர்ட்டா, ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டா?’ன்னு கேப்பாங்க.

மனுதர்மம் தேவையில்லைன்னுதானே தி.மு.க ஆட்சியும் எம்.ஜி.ஆர் ஆட்சியும் இத்தனை நாள் ஓடிட்டு இருக்கு. அண்ணாவின் பேரைச் சொல்லி கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்ததைப்போல இன்னிக்குவரை உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்களே. இன்றைக்கு புதிய மனுதர்மம் எது தெரியுமா? கலைஞர் குடும்பம்தான். உங்களை மறுபிறவி(பல்லைக் கடிக்கிறார்) எடுக்க விடமாட்டேன்.

அண்ணா பிறந்தநாள் அன்னிக்கு இவருக்கு வேண்டிய கிரிமினல்களை எல்லாம் வெளியே விட்டுட்டார். கத்தி எடுத்தவன் கத்தியாலயே சாவான்னு ஒரு பழமொழி இருக்கு. நீங்களும் எப்படி மாட்டப் போறீங்கன்னு பொறுத்திருந்து பாருங்க.

67&ல் ஆட்சிக்கு வந்தீங்க. ஆனா, இன்னும் ஏன் ஏழை மக்கள் இருக்காங்க? மஞ்சப் பையை தூக்கிட்டு வந்த நீங்க! இன்னிக்கு ஒண்ணாம் நம்பர் பணக்காரனா இருக்கீங்க. ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுகிறேன் என்கிறார். பட்டவன், பட்டவன்னு சொல்லியே எல்லோரையும் படுக்க வச்சிட்டார். விஞ்ஞான முறையில் ஊழல் பண்ணியது கலைஞர்தான்னு சர்காரியா கமிஷன்லயே சொல்லியிருக்காங்க. இன்னிக்கு விஞ்ஞானம் வளர்ந்துபோச்சு. உங்களுக்கா ஊழலை மறைக்கத் தெரியாது? விஜயகாந்த் ஏன் காங்கிரஸைப் பத்திப் பேச மாட்டேங்கிறார். ‘காங்கிரஸுக்கு சப்போர்ட்டா?’னு கேட்கிறார். நான் யாருக்கும் சப்போர்ட்டு இல்லை. எனக்கும் என் மக்களுக்கும்தான் சப்போர்ட்.

‘என்ன தெரியும் விஜகாந்த்துக்கு?’ன்னு கேட்கிறார். எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னா, நீங்க மட்டும் எல்லாத்தையும் கரைச்சிக் குடிச்சவரா? உங்களுக்குத் திருட்டுத்தனத்தைவிட்டா வேற என்ன தெரியும்? 1969, ஃபிப்ரவரி 3&ம் தேதி பேரறிஞர் அண்ணா இறந்தார். ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கனும்னா, 11&ம் தேதிதானே பதவி ஏற்கனும்? ஆனா, 9&ம் தேதி பதவி ஏத்துக்கிட்டீங்களே. இதுக்கு பதில் சொல்ல முடியுமா?பதவியில் ஆசையில்லைன்னு சொல்றீங்களே. துனை முதல்வர் பதவியை பேராசிரியருக்கு கொடுங்க. கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமிக்குக் கொடுங்க. இவ்வளவு ஏன்? அண்ணன் அழகிரிக்கு கொடுங்களேன்.

‘எதோ ஒண்ணு அலையுதாம்ல’ என்று என்னைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். அலையுது, திரியுதுன்னா நானும் பேசுவேன். வாடான்னா வாடாம்பேன். போடான்னா போடாம்பேன். ஊர் பூரா மணல் கொள்ளை. உண்மையை எழுதவிடாம பத்திரிகைகாரங்களை மிரட்டுறாங்க. அழகிரி பையன் கல்யாணத்துக்கு முதல்நாள், தேனியில் கிட்டத்தட்ட 400 ஏக்கர் நிலத்தை கொளையடிச்சிட்டதா ஹெட்லைன்ஸ் டுடேல செய்தி வெளியிடாங்க. அடுத்த ஒன்றரை மணி நேரத்துல அதை ஆஃப் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு என்ன மிரட்டலோ.

காமராஜர்னா கல்விக்கு கண் கொடுத்தவர். எம்.ஜி.ஆர்.னா சத்துணவு போட்டவர்னு ஒருத்தர் சொன்னார். நான் சொன்னேன், கலைஞர்னா ஊழல் பண்றவர். அதுதான் உண்மை. ஊழல் பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கனும். ராஜினாமாவெல்லாம் பத்தாது. கல்மாடி பன்ணுவார், போயிடுவார். சவுகான் பண்ணுவார் போய்டுவார். மதுகோடான்னு ஒருத்தர் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பார் போயிடுவார். என்னய்யா இதெல்லாம்? மன்னிப்பா? அட்றாங்...(நாக்கைக் கடிக்கிறார்) உள்ள வைக்கவேணாம்? அப்பதானே பயம் வரும். அதுக்கு நீங்க சரியான முடிவெடுக்கணும். முடிவெடுக்கத் தெரியலின்னா ஆட்சியில இருக்காதீங்க.

இவரு வீட்டை தானமா கொடுத்துட்டார்னு பெருசா பீத்திக்கிறாங்க. எனக்குப் பிறகு என் பொண்டாட்டி இருப்பா. பொண்டாட்டிக்குப் பிறகு புள்ளை இருப்பான்னு சொல்லி டிரஸ்டுக்கு கொடுக்கிறது பேர் தானம் இல்லை. அதனால சொல்றேன். கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் ஒரு ஏமாற்று வேலை. உங்களுக்கு தைரியம் இருந்தா, முரசொலியில் விஜயகாந்த் பேரைப் போட்டு என் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.

‘அதெல்லாம் கிடக்கட்டும். முதல்ல விருதகிரியை ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க’ன்றார். அய்யா, நான் வட்டிக்கு வாங்கினேன். ரிலீஸ் பண்றது கஷ்டம். நீங்க கொள்ளையடிச்சீங்க. பெண் சிங்கத்தை ரிலீஸ் பண்றீங்க. ஆனா, பொறுத்திருந்து பாருங்க ரிலீஸ் பண்ணிக் காட்டுறேன். என் தொண்டர்கள் அன்னிக்கு என்ன பண்றாங்கன்னு தெரியும். அப்பதான் இந்த விஜயகாந்த் யாரென்று உங்களுக்குத் தெரியும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அழிவு யாரால் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்களால்தான் அந்த அழிவு.’’

இவ்வாறு அவர் பேசினார்.

பிட்ஸ்:

1. கலைஞரை வறுத்தெடுத்த இந்த கேசட் வெளியீட்டு விழாவில் சன் டி.வி. சாக்ஸ் வந்திருந்து விஜகாந்தை வாழ்த்த்தியது அனைவரது புருவங்களையும் உயர்த்தியது. தன்னுடைய பேச்சில், ‘‘20 ஆண்டுகால சினிமா வரலாற்றில் ஒரு கேசட் வெளியீட்டு விழாவுக்கு எந்திரனுக்கு நிகராக, அதிகமகவே கூட்டம் கூடியிருக்கிறது. விருதகிரிக்கு வாழ்த்துகள்’’ என்றார்.

2. ஸ்டேட்ஸில் இருந்து டாக்டர் பட்டம். விஜயகாந்த்தின் சேவைகளைப் பாராட்டி, இந்திய அப்போஸ்தல பேராயத்தின் சார்பாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஃபுளோரிடா மாகானத்தின் இன்டர்நேஷனல் சர் மேனேஜ்மென்ட் ஆஃப் புளோரிடா அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இதற்கான விழா வரும் டிசம்பர் 3&ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்ப்ட்டிருக்கிறது.

3. ‘‘புரட்சி என்கிற வார்த்தை லெனின், சேகுவாரா என்று சிலருக்கு மட்டும்தான் பொருந்தும். அந்த புரட்சி என்கிற வார்த்தை நம் கேப்டனுக்கும் பொருந்தும்’’ கொடுக்கப்பட்ட காசுக்கு அதிகமாகவே கூவிக்கொண்டிருந்தார் சினேகன்.

4. பெண்களைப் பற்றி ஒரு பாடல் வேண்டுமென கேப்டன் கேட்டார். சில வரிகளை எழுதிக்கொடுத்தேன். அதில் குறிப்பாக இந்த வரிகளை தேர்தெடுக்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனா, அதைத்தான் கேப்டன் டிக் செய்தார். அந்த வரிகள் இதுதான்.

‘‘தாயுடன் இணைப்பதே தொப்புளின் கொடியடா!
அதைக் கவர்ச்சியாய்ப் பார்ப்பவன் கைகளை ஒடியடா!’’

(ரெண்டு பேருக்கும் பம்பரம் மறந்து போச்சோ...)

5. இது என் தனிப்பட்ட கருத்து:

விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். ‘‘கேப்டன் ஒரு கொடை வள்ளல். வருவோர் போவோருக்கெல்லாம் சோறு போட்டுக்கொண்டே இருப்பார். அவர் வீட்டு அடுப்பு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கும். வஞ்சிரம்தான், வவ்வாதான்’’ என்றார்கள்.

நிகழ்ச்சி ஆறு மணிக்கு என்று போட்டிருந்ததால், நான் ஐந்தரை மணிக்கே போய்விட்டேன். அரங்கம் முழுக்க நிற்கக்கூட இடமில்லாமல் அத்தனை பெரிய கூட்டம். இந்த சூழ்நிலையில் நான் சீட்டைவிட்டு எழுந்திருந்தால், அதை கேப்டனின் கட்சிக்காரன் அபகரித்துவிடுவான். எனவே நான் அங்கேயே உட்கார்ந்தாக வேண்டும். ‘எப்போ முடியும், எப்போ முடியும்’ என்று நான் எதிர் பார்த்துக் காத்துக்கிடக்க, இப்பித்தலை சினேகன் இழுத்துக்கொண்டே போனான். நேரம் பத்து மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவில்லை. எனக்கோ, பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. இதுவாவது பரவாயில்லை. பாத்ரூம் போகக்கூட வசதியில்லை. ஏனென்றால், பாத்ரூம் போக நினைத்தால் மீண்டும் உள்ளே நுழைய முடியாது. கட்சிக்காரன் தடுத்துவிடுவான். எனவே, கடும் அவஸ்தையுடன் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கே இப்படி என்றால், அங்கிருந்த பெண்களின் நிலைமை? அய்யோ பாவம்! பத்தே முக்காலுக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து மேடையில் இருந்தவர்கள் பேச ஆரம்பித்தார்கள். 11.30&க்கு மைக் பிடித்த விஜயகாந்த், என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல், ஸிக் ஸாக்காக உளறிக்கொண்டே போனார். அவர் பேசிய பேச்சுக்களை தொகுத்து வழங்காவிட்டால், நீங்கள் வாந்தியெடுத்துவிடுவீர்கள். சினிமா டயலாக்போலவே வெறும் பேச்சு.

ஐந்தரை மணியில் இருந்து நள்ளிரவு பன்னிரெண்டரைவரை சிங்கிள் ‘டீ’கூட கொடுக்காமல் கொலை பட்டினியுடன் பாத்ரூம் போகவும் வழியில்லாமல் உட்கார வைத்த விஜகாந்த்தை எல்லோரும் கொடை வள்ளல் என்றபோது, எனக்கு ‘பேக்’கால் சிரிப்பு வந்தது.
பன்னிரெண்டரைக்கு வெளியே வந்து, ‘சாப்பாடு கிடைக்குமா?’ என ஓட்டல் தேடி நான் நாயாய் அலைந்தேன். எங்குமே கடை இல்லை. கொலை பட்டினியுடன் அன்றிரவு தூக்கமும் வராமல் படுத்தேன்.

ஒரு நிகழ்ச்சியை எப்படி ஆரம்பிக்கவேண்டும், எப்படி முடிக்கவேண்டும். பெருங்கூட்டம் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன. விருந்தினர்களை உபசரிப்பது எப்படி? என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சரக்கடித்துவிட்டு(பேச்சின் போது கண்கள் சொருகியது. அடிக்கடி நாக்கைக் கடித்தார், பல்லைக் கடித்தார்) மேடையில் வந்து, வெறுமனே கருணாநிதியை திட்டித் தீர்க்கும் விஜயகாந்த் ஒரு தலைவனாம்.

5 comments:

puduvaisiva said...

Hi sathiya your blog is so nice
I like very much.

where is followers box ?

and are you have bala photo in flikr ?

http://www.flickr.com/photos/balaphoto/

Thanks . . .

திங்கள் சத்யா said...

மன்னிக்க வேண்டும் நண்பா! follower box எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. flickr என்னுடையதுதான். நன்றி!

puduvaisiva said...

Thanks Sathiya for your replay

please follow the link guide lines

it's easy to add followers box.

http://buzz.blogger.com/2008/08/show-off-your-followers.html.

Note:
Sathiya why you don't update your photo in fliker? otheerwise you have any web page for your photo I'm fan of your photo.. ( sorry sathiya for my English)

raja said...

தமிழர்கள் தவறுகளிலிருந்து திருந்தாத முட்டாள்கள்... கல்வி அமைப்பு அப்படி வடித்திருக்கிறது.. அவர்களை.. எந்த நாகரிகமும் அற்ற காட்டுமிராண்டி கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறோமோ எனும் அச்சம் என்னுள் இருக்கிறது.

திங்கள் சத்யா said...

கல்வி அமைப்பில் பிரச்னை என்பது உண்மைதான் ராஜா!