Thursday, December 2, 2010

‘‘தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கவேண்டும்’’


காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் ஒரு வெட்கக்கேடான, வேதனையனான சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்திருக்கிறது. இதுபோன்ற வெட்கக்கேடுகள் தொடர்கதைதான் என்றாலும், இந்த இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் வெளியிட்டு உள்ளதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒரு கிராமம். ஒதுக்குப் புறமான வீடு. நேரம், நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கணவன், மனைவி, 17 வயதில் ஒரு மகள், இரண்டு குழந்தைகள் என ஐவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அப்போது, எட்டு பேர்கொண்ட கும்பல் ஒன்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது. எதிர்க்க வந்த கணவனை சரமாரியாக அடித்துத் துவைக்கிறது. மனைவியும் குழந்தைகளும் கதறுகிறார்கள். ‘‘புருஷன் மேல அவ்ளோ பாசமா?’’ &கேட்டபடி மனைவியின் சேலையை அவிழ்த்து எறிகிறது அக்கும்பல்.

‘‘என்ன எதுவேணா பண்ணிக்கங்க. என் மனைவியை விட்றுங்க’ எனக் கெஞ்சுகிறார் கணவர். எல்லோர் எதிரிலும் அவரை நிர்வானமாக்கும் அக்கும்பல், மனைவியின் புடவையைக்கொண்டு அவள் கணவரை வீட்டின் அந்தரத்தில் உயிரோடு தொங்கவிடுகிறது. காமம் தலைக்கேற, அந்த எட்டுபேர் கும்பலும் கணவனின் கண்ணெதிரே தாயையும் மகளையும் கண்டபடி கடித்துக் குதறுகிறார்கள். எல்லாம் முடிந்ததும் வீட்டிலிருந்த நகை, பணத்தையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். இந்தச் சம்பவம் நடந்தது 1995 ம் ஆண்டு.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறைக்குப் போனார்கள். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, உள்ளூர் போலீஸார் ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று, தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டிக்கு இவ்வழக்கு மாற்றப்படுகிறது. அங்கு ஒருவழியாய், கைரேகையின் அடிப்படையில் முனிராஜ், ரவி, மது என்கிற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். இரண்டாண்டுகள் கழித்து மொத்தம் எட்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. இவ்வழக்கை விசாரித்து வந்த ஓசூர் உதவி செசன்சு நீதிமன்றம், சம்பவம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, ஆறு பேருக்கு பத்து வருட சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

பாவிகளுக்கு இன்னும் அதிக தண்டனை வேண்டும் என்கிறீர்களா? மேற்கொண்டு கேளுங்கள்.

தண்டனை பெற்ற ஆறு பேரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்கிறார்கள். இதை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை சில வாரங்களுக்கு வாரங்களுக்கு முன் அவர் வாசித்திருக்கிறார்.

‘‘சம்பவத்தில் தொடர்புடைய, இறந்துபோன இருவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்திருப்பது செசன்சு கோர்ட்டு நீதிபதி செய்த மிகப்பெரிய சட்ட விரோதம். குற்றம் சாட்டப்பட்டவர்களை, பாதிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் அடையாளம் காணவேண்டும் என்கிற சட்டத்தின் அரிச்சுவடியைக்கூட போலீஸார், அரசு வழக்கறிஞர், நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை. இந்த விவகாரத்தில், நீதிபதி மவுனியாக இருந்து வேட்டிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். நடந்துள்ள குளறுபடிகளுக்கு மேற்கண்ட மூவரும்தான் பொறுப்பு.

விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கைப்போல், இந்த வழக்கிலும் மீண்டும் விசாரணை நடத்தலாம் என்றால், குற்றம் நடந்து நீண்ட நாட்களாகிவிட்டது. பாதிக்கப்பட்ட இளம்பெண் யாரோ ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்படுகிறேன். எனவே, மறுவிசாரணை என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்’’ என்று சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி அனைவரையும் விடுதலை செய்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘‘நாம், இந்த நாட்டின் குடிமக்கள். நம்மைப் பாதுகாக்கவென்று அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை எல்லாம் இருக்கிறது. நமது வரிப் பணத்திலிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இந்த நீதிமான்கள், விசாரணை அதிகாரிகள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியானால், கொடுத்த வேலையை சரியாகச் செய்யாத இவர்களுக்கு சம்பளம் எதற்கு, வேலைதான் எதற்கு? கடமையை செய்யத் தவறியதோடு மட்டுமில்லாமல், குற்றவாளிகளை தவறவிட்ட இம்மூவருக்கும் ஏன் தண்டனை வழங்கக்கூடாது.’’ என்பதுதான் மக்களின் கேள்வி.

இதே கேள்வியை நாம், உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தூர்பாண்டியனிடம் எடுத்து வைத்தோம்.

‘‘குற்றம் நடந்தவுடன் வழக்குப் பதிவு செய்து, அதற்குறிய ஆதாரங்களைத் திரட்டி உடனுக்குடன் கோர்ட்டுக்கு அனுப்பவேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் ஒரு வருடம் கழித்துத்தான் இறுதி அறிக்கையே தாக்கல் செய்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நடைமுறை. கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை அரசுத்தரப்பு உருவாக்கும் சின்னச் சின்ன ஓட்டைகள் அல்லது பெரிய ஓட்டைகளின் பலன் முழுக்க(சந்தேகத்தின் பலன்) எதிரிகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

போலீஸார், எப்போதுமே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரிதான் சாட்சிகளைக் கொண்டு வந்து கூண்டில் நிறுத்துகிறார்கள். காவல்துறைக்கு ஏதுவாக தாயார் செய்யப்பட்டிருக்கும் அவர்களது வாக்குமூலங்களை, என்னதான் சொல்லிக் கொடுத்திருந்தாலும், சாட்சிகளின் ஒருசில வார்த்தைகளில் உண்மை வெளிவந்துவிடும். ‘ஸ்டேட்மென்ட்டில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் சாட்சி சொல்கிறாரே. ஒருவேளை இது பொய்யாக இருக்குமோ! நாம் தவறான தீர்ப்பை கொடுத்துவிடுவோமோ?’ என்று அஞ்சுகிற கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள், சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதிக்கு இது அழகல்ல. அவரை மீறி அணுவும் அசைய முடியாது. சாட்சி தும்மினால்கூட அதற்கான காரணத்தை அவர் அறிந்திருக்கவேண்டும். சம்மன் அனுப்புவதில் இருந்து ஸ்டேட்மென்ட் ரெக்கார்ட் பண்ணுவது, தீர்ப்பு சொல்வதுவரை அனைத்தையும் கரைத்துக் குடித்தவர்தான் மாஜிஸ்ட்ரேட்டாக இருக்க முடியும். ஆனால், பெரும்பாலான கீழ்க் கோர்ட்டுகளில் சாட்சி விசாரனையை அவர்கள் காது கொடுத்தே கேட்பதில்லை. இதை நீங்கள் நேரிலேயே பார்க்க முடியும்.

குறிப்பிட்ட இந்த வழக்கைப் பொறுத்தவரை, விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கீழ்க்கோர்ட்டு நீதிபதி தண்டனை கொடுத்திருக்கிறார். ‘கொடூர குற்றவாளிகளை விடுதலை செய்தால் மக்கள் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ’ என்று இத்தகைய நீதிபதிகள் அஞ்சுவதுதான் இதற்கெல்லாம் காரணம். எனவே, கண்னை மூடிக்கொண்டு தண்டனை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அப்பீலுக்காக மேல் கோர்ட்டுக்கு செல்லும்போது இந்தத் தீர்ப்பு வலுவிழந்துவிடும் என்பதும் தண்டனை பெற்றவர்கள் விடுதலை ஆவார்கள் என்பதும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்படி எல்லாவற்றையும் தெரிந்து வைத்துகொண்டே இவர்கள் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் போலீஸார், அரசு வக்கீல், நீதிபதி ஆகிய மூன்று பேரும் சமமாக தவறிழைத்திருக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பு. இந்தியாவைப் பொறுத்த அளவில், சட்டத்துக்கு உட்பட்டுத்தான் எல்லாமே. இத்தனை சட்டங்கள், பாதுகாப்புகள், பரிவாரங்கள் இருந்தும் சாட்சி விசாரணை சரியாக இல்லாத காரணத்தால் அப்பாவி குடும்பத்துக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் எந்த விதத்திலும் ஈடாகாது. குற்றவாளிகளுக்கு மீண்டும் தண்டனை அளிப்பதென்பது இனி இயலாத காரியம். எனவே, வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு உயர்நீதிமன்றம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய குற்றம் நடந்திருந்தாலும் ஒரே வருடத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். மேல் முறையீடு என்றால், அடுத்த ஒரு வருடத்துக்குள் அதுவும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படவேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கக்கூடிய அதிகாரம் இரண்டு பேருக்கு மட்டும்தான் இருக்கிறது. ஒன்று காவல்துறை, இன்னொன்று நீதித்துறை. சாதாரண ஒரு போலீஸ்காரர், தன் கடமையைச் செய்யவில்லை என்றால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அதே கடமையைச் செய்யத் தவறும் ஒரு நீதிபதி மீது யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, கடமையைச் செய்யத் தவறும் அல்லது தவறான தீர்ப்புகளை வழங்கும் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகள் மீது கடுமையான நடவடிக்கையை உயர்நீதிமன்றம் எடுக்கவேண்டும்.

‘நாம் சொல்லக்கூடிய தீர்ப்பு சரியாக இல்லையென்றால், தண்டனைக்கு உள்ளாவோம்’ என்கிற பயம் கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கவேண்டும். அந்த பயம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கே கீழமை நீதிமன்றங்கள் ஒழுங்காக செயல்பட ஆரம்பிக்கும். அதன் பிறகு பத்து வருடம், இருபது வருடம் என்று தாமதமான தீர்ப்புகள் வெளியாகாது.’’ என்கிறார்.

கிருஷ்ணகிரியில் நடந்ததைப் போன்ற வெட்கக்கேடான ஒரு விஷயம், புதுச்சேரியிலும் நடந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய மனைத உரிமை ஆர்வலரான புதுவை.கோ. சுகுமாரன்,

‘‘இதுபோன்ற தவறுகளை காவல்துறையும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளும் காலம் காலமாகவே செய்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்புகூட தூக்கு தண்டனை கைதிகள் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த பொம்மி குமரன், சென்பக ஸ்ரீகுமரன் ஆகிய இருவரும் பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளுக்காக தூக்கு தண்டனை பெற்றவர்கள். பல வருடங்களுக்கு முன், தங்கள் நண்பரான சங்கர் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாயை இவர்கள் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சங்கரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து ஒரு மசாஜ் சென்ட்டரில் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அப்போதும் சங்கரால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. எனவே, அவரை கொலை செய்துவிடுகிறார்கள். அதன் பிறகு சங்கர் செத்துபோனதை காரணம் காட்டி அவர் வேலை செய்த மசாஜ் சென்டர் முதலாளியிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறித்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு எஸ்.டி.டி. பூத்துக்குப் போனவர்கள், அங்கிருந்த பெண்மணியை கற்பழித்துவிட்டு, அவரையும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.

எஸ்.டி.டி பூத் கொலை வழக்கை துப்பு துலக்கும்போதுதான் சங்கர் கொலை செய்யப்பட்டதையும் புதுச்சேரி காவல்துறை கண்டு பிடித்தது. பிறகு, இரண்டு கொலை வழக்கையும் இவர்களே விசாரித்து வந்தார்கள். விசாரணை முடிவில், 2001&ம் ஆண்டு புதுச்சேரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சித்தார்த்தர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை, குற்றப்பத்திரிகை முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்தான் சங்கர் என்று சங்கருடைய அம்மாவே சரியாக அடையாளம் காட்டவில்லை. எனவே, இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து விடுதல்லை செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்துவிட்டது. காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கீழ்க்கோர்ட்டு நீதிபதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட இப்படிப் பல உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

விசாரணை அதிகாரிகள் ஒழுங்காக கடமை ஆற்றினாலே இதுபோன்ற ஓட்டைகளை முழுமையாக அடைக்க முடியும். போலீஸார், சட்டத்தை தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்தி, நிறைய ஷார்ட் கட் வழிமுறைகளை பின்பற்றுவதால்தான் இப்படிப்பட்ட தவறுகள் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, ஒரு வழக்கை எப்படி ஓட்டை இல்லாமல் நடத்த வேண்டும் என்பது குறித்து காவல்துறையில் உள்ளவர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கவேண்டும். கண்னை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதிவரும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை கண்காணிக்க உயர்நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’’ என்கிறார்.

‘‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’’ என்று எத்தனை தடவைதான் சொல்லிக்கொண்டிருப்பது. எனவே, தயவு தாட்சண்யம் பார்க்கமல் தவறிழைக்கும் காவல் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பு: சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, லேஅவுட்வரை ஃபைனலாகி, ‘சூரிய கதிர்’ இதழின் டுபாகூர் ஆசிரியரும் முதலாளியுமான கை.கதிர்வேள் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை.

2 comments:

puduvaisiva said...

சத்தியா நம்ப நாட்டில் சட்டம் தன் கடமையை கொடுக்கும் பணத்து ஏற்ற கடமையை செய்யும்.

நேரம் கிடைச்சா இதை படிங்க

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=186:2010-11-28-17-55-03&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=138:2010-10-26-02-50-53&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

திங்கள் சத்யா said...

நன்றி சிவா. இன்று சவுக்கு படிக்காத இணையர்களே இல்லை எனலாம். நான் எல்லாவற்றையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.