Friday, December 31, 2010

தேவாலயத்தில் ஆடுறான்யா சூது! இது சென்னைலதான் கீது!

‘‘தி.நகர்ல மட்டும் 72 சூதாட்ட விடுதிகள் இருக்குன்னா, எவ்ளோ மாமூல் போகும்னு பாத்துக்கங்க.’’ எடுத்த எடுப்பில் அதிர வைத்தார் அந்த இன்ஃபார்மர். ‘‘என்னைய்யா சொல்ற?’’ அதிர்ச்சி விலகாமல் வாய்பிளந்த நம்மை, அத்தனை கிளப்புகளையும் சுற்றிக் கிருகிருக்க வைத்துவிட்டுத்தான் அமர்ந்தார்.

‘மனமகிழ் மன்றம்’ என்கிற பெயரில் விதிமுறைகளை மதிக்காமல் சீட்டாட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த விடுதிகள், தி.நகர் மட்டுமல்லாது சென்னை முழுவதும் பரந்து கிடக்கின்றன. பண்ணை வீடுகள், பங்களாக்கள், உயர்தர கிளப்புகள் போன்றவற்றிலும் சூதாட்டம் நடைபெறுகிறது என்றாலும், அவற்றில் நுழைந்து வேவு பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க்கான(இன்ஃபார்மருக்கு) விஷயம் என்பதால், அவை தவிர்த்து மீதமுள்ள கிளப்புகளை ஒரு ரவுண்டு வந்தோம்.

முதல் கட்ட ரவுண்ட்-அப், கீழ்ப்பாக்கம், ஐ.சி.எப் மற்றும் அயனாவரத்தில் ஆரம்பித்தது.

இந்தப் பகுதியில் சுமார் 10 சூதாட்ட விடுதிகள் இருக்கின்றன. எல்லாமே சொகுசு மற்றும் சுகாதாரம் அற்ற சுமார் ரகங்கள். எந்தக் கட்டடம் வாடகைக்கு கிடைக்கிறதோ, அதிலேயே தொழிலை ஆரம்பித்துவிடுகிறார்கள். கோவில், கழிவறை என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அயனாவரத்தில் ஒரு கிறிஸ்தவ ஜப வழிபாட்டுக் கூடமே, சூதாட்ட விடுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

அயனாவரம் செகரட்ரியேட் காலனியில் ஜெயின் கோயிலுக்கு எதிரே குன்னூர் ரோட்டில் இருக்கிறது பாப் கிறிஸ்து ஐக்கிய சபை. இதன் அருகிலேயே ஒரு கவர்மென்ட் டாஸ்க்மாக் கடை(குட் காம்பினேஷன்). அந்தி சாய்ந்தால் அங்கே ஜாலிலோ ஜிம்கானாதான். ஆட்டோ டிரைவர்கள் முதற்கொண்டு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவர்கள்வரை கையில் கிளாசும், வாயில் சிகரெட்டுமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள்.

தரையில் பாய் விரிக்கப்பட்டு, சீட்டுக் கட்டுகள் சரசரவென சுழல ஆரம்பிக்கிறது. தலை ஒன்றுக்கு 50 ரூபாயில் ஆரம்பித்து, 10 ஆயிரம் ரூபாய்வரை பந்தயம் கட்டுகிறார்கள். ஆட்டம் ஒன்றுக்கு ஒன்பது பேர் உட்காருகிறார்கள். இதுபோல், இடத்தைப் பொறுத்து பத்து பதினைந்து கும்பல் ஆடுகிறது. சராசரியாக ஆட்டம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டால்கூட பத்து ஆட்டம் முடிந்தாலே ஒரு லட்ச ரூபாய் கலெக்ஷன் ஆகிறது. அப்படியென்றால், 24 மணி நேரத்தில் எத்தனை லட்சங்கள் புரளும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிளப்பும், மாதம் ஒன்றுக்கு 1 முதல் 1.50 லட்சம்வரை போலீஸ் மாமூல் கட்டுவதாக கூறும் அப்பகுதி இளைஞர் ஒருவர்,

‘‘நேர்மையானவர்னு பேரெடுத்த தி.நகர் லேடி போலீஸ் ஆஃபீஸர்தான் இப்போ இந்தப் பகுதிக்கு இன்சார்ஜ். இந்தம்மா எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கன்ற ஆச்சர்யமா இருக்கு. அவங்க தி.நகர்ல இருந்தவரை இரவு 9.30-க்கெல்லாம் ரெய்டுக்கு வந்துடுவாங்க. இதனால சூதாட்ட விடுதிகளின் கொட்டம் கொஞ்சம் அடங்கிக் கிடந்தது. இப்போ நிலைமை தலைகீழா மாறிப்போச்சு. அவங்க இல்லைன்னு தெரிஞ்சதும் முக்கால்வாசிக் கிளப்புகள் 24 மணிநேர சர்வீஸா மாறிடுச்சு’’ என்றார்.

நாங்கள் தி.நகர் நோக்கி நடையைக் கட்டினோம். தி.நகர் கிரி ரோட்டில் கடவுளாகிவிட்டவர்(சாய்பாபா) பெயரில் இருக்கிறது அந்த நடுத்தர கிளப். இங்கு நடக்கும் சூதாட்டம் பற்றி வெளிப்படையாகவே நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருக்கிறார்கள். முதல் பரிசு ரூ.2 லட்சம். டிக்கெட் விலை ஆள் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய். ஆட்டம் ஒன்றுக்கு 9 பேர் வீதம் ஒரு ஷோவுக்கு மட்டும் 10 ஆட்டங்கள் நடக்கிறது. ஒவ்வொரு ஷோவுக்கும் ரூ.1 லட்சம் கிளப்புக்கே கமிஷனாகப் போய்விடும். குறைந்தது ஓரு நாளுக்கு ஐந்து ஆட்டங்கள் போட்டாலே, எந்தச் செலவும் இன்றி கிளப்புக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் கமிஷனாகக் கிடைத்துவிடும். அப்படியானால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, இந்த நடுத்தர கிளப்புகளுக்குக் கிடைக்கும் லாபத்தொகை மட்டும் 1 கோடியே ஐம்பது லட்சங்கள்.

இந்தக் கிளப்புகளின் வாடிக்கையாளர்கள் சிலரைக் கண்டால், உங்கள் வாய் காதுவரை பிளக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ஆந்திர மாநில அரசியல் பிரமுகர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழிலதிபர்கள். தி.நகரைச் சுற்றியுள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு தங்கும் இவர்கள், நாள் முழுவதும் சீட்டாடியே களிக்கிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் ஸ்டார் ஒட்டல்களில் ரூம் பொட்டு ஆடியிருக்கிறார்கள். அப்போது, ஒரே ரூமில் பத்துப் பதினைந்துபேர் கும்மியடித்ததால், கலவரமடைந்த ஓட்டல் நிர்வாகங்கள், இனிமேல் சீட்டாங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தனவாம். எனவேதான், சென்ற இடமெல்லாம் சீட்டாட்டம் என தி.நகரில் மட்டும் கண்ணுக்குத் தெரிந்து 72 கிளப்புகள் இருக்கின்றன.

‘‘எல்லா கிளப்புகளில் இருந்தும் முறையான மாமூல், மாதா மாதம் போய்க்கொண்டிருந்தாலும் ஒருசில கிளப்புகளில் மட்டும் ரெய்டு, மாமூல் என்கிற பெயரில் ஈ, காக்காகூட நுழைய முடியாது.

காரணம், நம்மூர் அரசியல் பிரபலங்கள்தான். பினாமிகளை வைத்து அவர்கள்தான் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகிறார்கள்’’ என்கிறார் ஒரு போலீஸ் இன்ஃபார்மர்.

‘‘யாராவது ரிப்போர்ட்டர்னு போய் ஐ.டி. கார்டோடு நின்னா போதும். மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மாமூல் தருவானுங்க. இப்படித்தான்... ‘பெட்டிஷன் பாண்டி’ன்னு ஒருத்தன் இருக்கான். கிளப் டீடெய்ல்ஸ் எல்லாம் விரல் நுனியில வச்சிருப்பான். மாமூல் கொடுக்காட்டி கிளப்புக்கு எதிரா பெட்டிஷன் போடுறதுதான் இவனோட வேலை.

‘அண்ணாச்சி வந்திருக்கேன். அதிகமா ஒண்ணும் கேக்கலை. மாசம் ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்.’னு கேட்பான். பல தடவை இவனோட கை, காலை உடைச்சும் அடங்கலை. ‘போனா போவுது. செத்த பாம்பு, கொத்தப் போறதில்லை’ன்ற கதையா இவனுக்கு மட்டும் ஒவ்வொரு கிளப்பும் மாசம் ஆயிரம் ரூபாய் மாமூல் அனுப்புது. இதனால, அய்யாவுக்கு உக்காந்த இடத்திலேயே மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்’’ என்று அதிர வைத்தார் அந்த போலீஸ் இன்ஃபார்மர்.

அயனாவரத்தில் 10, தி.நகரில் 72 போக அண்ணாசாலையில் 8, கிண்டியில் 8, வடபழனி மற்றும் கோடம்பாக்கத்தில் 15 கிளப்புகளும் சென்னையில் இயங்கி வருகிறது. தாம்பரம், ஆவடி போன்ற புறநகர் பகுதிகள் பற்றி இப்போதைக்கு நம்மிடம் கணக்கு இல்லை.

‘‘24 மணி நேர கிளப் என்கிறீர்களே. இதில் ஆடுபவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?’’ என்றதற்கு, ‘‘பாதிப்பேருக்கு இதுதான் தொழில்’’ என்கிற நமது இன்ஃபார்மர், ‘‘பிரஃபெஷனல் சூதாட்டக்காரர்கள் வெறுமனே சென்னையில் மட்டும் ஆடுவதில்லை. பிளைட் பிடித்துப் போய், மலேசியா சிங்கப்பூரில் எல்லாம் ஆடிவிட்டு வருகிறார்கள். சீட்டுக்கட்டைத் தவிர, வேறெதுவும் தெரியாத இவர்கள், சூடாட்டத்தின் மூலமே பல கோடிகள் சம்பாதித்துவிட்டார்கள்.’’ என்றார்.

‘‘ஆனா, சரித்திர காலம்தொட்டு சூதாட்டம் என்பது குடும்பத்தையே சீரழைத்துவிடும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்’’ என்றேன்.

‘‘உண்மைதான் கோடிகளை சம்பாதித்தது நாலைந்து பேர்தான். அதிலும் சில போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். எப்படா ரிட்டையர்டு ஆவோம். ஃபுல் டைமா இதுல உக்காருவோம் என்று ஏங்கித் தவித்தவர்கள் இவர்கள். இதுபோன்றவர்களைத் தவிர 100-க்கு 99% பேர் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கிறார்கள்.

சம்பளம், சொத்து பத்து, பொண்டாட்டி நகை எல்லாத்தையும் வித்து சூதாடிய இவர்களில் சிலர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?’’ என்று நிறுத்தியவர், ‘‘இதே சூதாட்டக் கிளப்புகளில் எடுபிடியா(சர்வர்) வேலை பார்க்கிறார்கள் என்று அவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘அய்யா, சாமி! நான் வெளிநாட்டில் இருப்பதாக என் பொண்டாட்டி பிள்ளைகள் நம்பிக்கிட்டு இருப்பாங்க. எங்களைப் போட்டுக் கொடுத்துறாதீங்க. என்னிக்காவது ஒருநாள் இழந்த செல்வத்தை நாங்க மீட்டுறுவோம்’’ என்றார்கள்.

அடப் பாவமே! இப்படித்தானே அய்யா ஒவ்வொருவரும் ‘அடுத்த ஆட்டத்துல பிடிச்சிருவோம்னு ஆண்டுக் கணக்கில் ஆடி வருகிறீர்கள். உங்களை எந்தச் சட்டம் போட்டு திருத்துவது?

3 comments:

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திங்கள் சத்யா said...

முதலில் நீங்கள் சுட்டியபோதே படித்துவிட்டேன் நண்பா! நன்றி.

திங்கள் சத்யா said...

உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனியவன்!