Wednesday, June 23, 2010

நம்புங்கள்! ஒரு நாய் விலை, ஒரு கோடி ரூபாய்!



சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், சின்னி ஜெயந்துக்கு அன்புப் பரிசாக வழங்கிய நாய் திடீரென காணாமல் போய்விட்டது. இதையடுத்து நாயின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டன. போலீசும் சின்னி ஜெயந்தும் வலை போட்டு நாயைத் தேடியதில், மந்தைவெளியில் ஒரு சிறுவன் அதை வைத்திருப்பது தெரிந்தது. நாயைக் கண்ட சந்தோஷத்தில் சின்னி ஜெயந்த்தும் அழுதிருக்கிறார், நாயைத் திருடிய சிறுவனும் அழுதிருக்கிறான். அவனும் அன்பால் திருடியவன்தான்.

இப்படியாக வரலாற்று காலந்தொட்டே நாயின் மீதான பாசம் நம்ப முடியாத அளவுக்கு மனிதர்களிடம் பரவியிருக்கிறது. சமீபத்தில் தன் அன்பு நாய்க்கு நாநூறு கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்திருக்கிறார் லன்டனைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்.

‘மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும்கூடு’ என்று நம்மைப் பார்த்துச் சொன்னார் கண்ணதாசன். உங்களால் நம்ப முடியுமா? ஒரு நாயின் விலை ஒரு கோடி ரூபாய். அதுவும் சென்னையிலேயே சிலர் இந்த நாய்களை வைத்திருக்கிறார்கள். (இப்படிப்பட்ட நாய்கள் எந்தவொரு நடிகர் நடிகையிடமும் இல்லை.)

‘‘அம்மாடீ... நாய் விலை ஒரு கோடியா? பேசாம நாய் வியாபாரம் ஆரம்பிச்சிடலாமே’’ என்று இறங்கிவிடாதீர்கள். அது லேசுபட்ட காரியமல்ல. நாய் வளர்ப்பவர்கள் ‘பிசினஸ்’ என்கிற வார்த்தையையே வெறுக்கிறார்கள். ‘இது அன்பால் விளைந்தது’ என்பதே அவர்களின் கருத்து.

நாய் வளர்ப்பு இரண்டு வகைப்பட்டது. ஒன்று, ஷோவுக்கு அழைத்துச் என்று பேர் வாங்குவது. இன்னொன்று ஆசைக்கு வளர்ப்பது. நாயின் மீது அன்புகொண்ட சிலரிடம் நாம் பேசியதிலிருந்து...

பந்தாவான நாய்கள் விலை, எப்போதுமே லட்சக் கணக்கில்தான். இந்த ஆண்டு, நாய்களுக்காக நடத்தப்படும் ‘கிரஃப்ட்ஸ் ஷோ’ லன்டனில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 22 ஆயிரம் நாய்கள் இதில் கலந்துகொண்டன. முடிவில் ‘யோகி’ என்கிற ஹங்கேரியன் விஸ்லா நாய்க்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இதன் குட்டி விலை, குறைந்தது 50 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.

விஷேஷம் என்னவென்றால், குதிரைப் பந்தயம்போல இப்போட்டிகளில் சூது, பந்தயம் என்பதெல்லாம் சுத்தமாக கிடையாதாம். அத்தனை நாய் ஷோக்களும் கவுரவத்துக்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

நாய் கண்காட்சி என்பது, ஃபேஷன் ஷோ மாதிரி அழகுக் கண்காட்சி மட்டுமல்ல. ‘இவ்வளவு உயரம், இவ்வளவு அகலம், இவ்வளவு எடை’ என்று குறிப்பிட்ட சில தகுதிகள் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள நாய்க்கு அனுமதி கிடைக்கும். சரி, நீங்கள் ஆசைக்கு ஒரு நாய் வளர்க்கிறீர்கள். அதே சமயம் ஷோவுக்கு அழைத்துச் சென்று பந்தா காட்டவும் ஆசை.

அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

நாய்களின் ஜாதகத்தை பதிவு செய்வதற்கான சர்வதேச அமைப்பின் பெயர் ‘ஃபெடரேஷன் சைனலாஜிக் இன்டர்நேஷனலெ(எஃப்.சி.ஐ.). அதுபோல் இந்தியாவுக்கான அமைப்பின் பெயர் கென்னல் கிளப் ஆஃப் இன்டியா(கே.சி.ஐ). கென்னல் கிளப்பின் கிளை நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் இருக்கிறது. இந்த கிளப்தான் இந்தியாவில் நாய்களுக்கான சர்டிஃபிகெட் இஷ்யூயிங் அத்தாரிட்டி. அவர்களுடைய சர்டிபிகேட் இல்லையென்றால் எந்த நாய் ஷோவிலும் நீங்கள் கலந்துகொள்ள முடியாது.

மனிதர்களுக்கு குழந்தை பிறந்தால் எப்படி பதிவு செய்கிறோமோ அதேபோலத்தான் இந்த நாய்களுக்கும். பிறந்து 45 நாட்களுக்குள் பதிவு செய்துவிடவேண்டும். அந்தவகையில், ‘ஷோ’வுக்குத் தகுதியான நாய்களை யார் வைத்திருக்கிறாரோ, அவரே தான் வைத்திருக்கும் நாய்கள், குட்டிகள் ஆகியவற்றின் விபரங்களை கென்னல் கிளப்பில் பதிந்து வைத்திருப்பார். கிளப் ஊழியர்கள் அந்தக் குட்டிகளை சோதித்துவிட்டு சர்டிஃபிகேட் தருவார்கள்.

இந்த சர்டிஃபிகேட் எப்படிப்பட்டது என்றால், குறிப்பிட்ட நாயின் பத்து தலைமுறை வரலாற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதை ‘பெடிகிரி’ என்கிறார்கள். ஒரு நாய் எந்த நாட்டைச் சேர்ந்தது, அதனுடைய தாத்தாவுக்கு தாத்தா யார்? அவருடைய மனைவி யார்? இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு பயனமானார்கள். என்னென்ன போட்டிகளில் கலந்துகொண்டார்கள், ஜெயித்தார்கள் என்று அக்கு வேறு ஆணிவேறாக புள்ளிவிபரங்கள் பெடிகிரியில் இருக்கும். ஒரு நாயின் விலையை தீர்மானிப்பதே இந்தப் பெடிகிரிதான்.



ஓ.கே! குட்டி வாங்க முடிவு செய்தாகிவிட்டது. நல்ல குட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இதற்கு மிகுந்த கவனம் தேவை. ஒன்பது குட்டிகள் பிறந்தால் அதில் நாலைந்து குட்டிகள் மட்டுமே போட்டிக்கு தகுதியுடையதாக இருக்கும். பிறந்து அறுபது நாட்களில் அதை நாம் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். எக்ஸ்பர்ட்டுகளை அழைத்துச் சென்று இந்தக் குட்டிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேர்வு செய்ததும் நூறு ரூபாய் செலுத்தி அதை நம்முடைய பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு முன்னூறு ரூபாய் கொடுத்து அதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும்.

நாய்களுக்கென்று சில சிறப்புப் பத்திரிகைகள் இருக்கின்றன. அதற்கு நாம் சந்தாதாரர் ஆகிவிட்டால் மாதந்தோறும் வீட்டுக்கு புத்தகம் வந்துவிடும். அதில் நாய் வளர்ப்பு, உணவுப் பழக்கங்கள், நாட்டில் எங்கெல்லாம் ஷோ நடக்கவிருக்கிறது, யாரெல்லாம் முக்கியமான உறுப்பினர்கள், ஜட்ஜுகள் யார்? என்பன போன்ற முக்கிய விபரங்கள் இருக்கும். கடைசியாக நாய்க் கண்காட்சி எங்கே நடந்தது, அடுத்து எங்கே நடக்கவிருக்கிறது என்கிற விபரங்களும் இருக்கும். கூடவே, போட்டியில் கலந்துகொள்வதற்கான நுழைப் படிவங்களும் இருக்கும். இதை வைத்து போட்டிகளுக்கு அப்ளை செய்யலாம்.

சரி, குட்டி வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அப்புறம்?

அடுத்த நான்கு மாதத்தில் அதற்கான பயிற்சியை ட்ரெயினர்களைக் கொண்டு ஆரம்பிக்கவேண்டும். ட்ரெயினிங்கின்போது, ஒரு ஆனழகன் போட்டிக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறோமோ அதேபோன்ற பயிற்சிகளை நாய்க்கும் அளிக்கவேண்டும். மார்புத் தசை, இடுப்பு, கால்கள் என்று ஒவ்வொன்றுக்கும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஸிவிம்மிங் பழக்கவேண்டும். சில வீடுகளில் நாய்களுக்கென்று தனி நீச்சல்குளமே வைத்திருக்கிறார்கள். இப்படியாக பத்து மாதம் பயிற்சி முடிந்த பிறகு போட்டிகளுக்கு அழைத்துவரவேண்டும்.

போட்டிகளில் ஐந்து பிரிவுகள் உண்டு. ஆறு மாதத்துக்குள் இருப்பது ‘மைனர் பப்பி’. ஆறு முதல் பன்னிரெண்டுக்குள் இருந்தால் ‘பப்பி’. பதினெட்டு மாதம்வரை உள்ளது ‘இன்டர்மீடியட்’. அதற்கடுத்து ‘சாம்பியன் கிளாஸ்’. ஐந்தாவது, ‘பிரீட் இன் இன்டியா’.

வெற்றி பெறும் நாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களாம்? ‘நாயின் சீரான உடலமைப்பு, நிற்க வைத்தால் அசையாமல் நிற்பது, கழுத்து, முகம், பல்வரிசை(பற்கள் ஒன்று சேரும்போது கத்தரிக்கோல்போல இருக்கவேண்டும்), கால்கள், ஓடும்போது மூக்கைத் தான்டி கால் வெளியே நீளாமல் ஓடுவது’ என்று பல அம்சங்களை வைத்து வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இத்தகைய நாய்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவையாகவே இருக்கும். இவற்றின் பராமரிப்பு செலவு மட்டுமே மாதம் முப்பதாயிரம் ரூபாயைத் தாண்டும். நாய் வளர்ப்பவர்கள், அதற்கென தனி ஏ.சி ரூம், நீச்சல்குளம் என்று பிரமாதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டுச் சாப்பாடு, சிக்கன் போன்றவைகளை இந்நாய்களுக்கு வழங்கக்கூடாது. அதற்கென உள்ள ஸ்பெஷல் உணவுகளை(இம்போர்டட்) மட்டுமே வழங்கவேண்டும்.

இங்கே கோடி கொடுத்து நாய் வாங்கி, லட்சத்தில் செலவழிப்பவர் அதன் குட்டிகளை விற்பதன் மூலம் ஓரளவு நஷ்டத்தை ஈடுகட்டிவிடலாம் என்பது ஆறுதலான விஷயம்.

உலகில் சுமார் 600 வகையான நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, ஹிமாலயன் ஷீப் டாக், கன்னி, மியுடல் ஹவுன்டு, கேரவன் ஹவுன்டு, ராம்பூர் ஹவுன்டு ஆகிய எட்டு நாய்கள்தான் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவையாம். மீதமுள்ள நாய்கள் அனைத்தும் கலப்பினத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். இவற்றை ‘மாங்ரில்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

எத்தனை வகை நாய்கள் இருந்தாலும் எல்லாம் ஒரே குணம் உடையவைதான். காட்டு நாய்கள் வேட்டையாடும். வீட்டு நாய்கள் எஜமானர் விசுவாசம் காட்டும். இந்த விசுவாசம் எப்படிப்பட்டதென்றால், நீங்கள் கிணற்றில் குதித்தால் அதுவும் குதித்துவிடும். உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றும். இது எல்லா நாய்களுக்குமே பொருந்தும். நாய்கள் தங்களுக்குள் ஏழை, பணக்காரன், ஜாதி மத வித்தியாசம் பார்ப்பதில்லை. உயர் ஜாதி நாய்க்கு கொடுக்கும் பயிற்சியை ஒரு தெரு நாய்க்கு கொடுத்தால், அதுவும் சிறப்பான நாயாக மாறிவிடும்.

என்ன விதைக்கிறோமோ அதுதானே அறுவடைக்கு கிடைக்கும். அதுபோல் நாயின் மீது பாசம் வைத்தவர்களை, வேறெந்த நாயும் கடிப்பதில்லை என்பது மிகப்பெரிய உண்மை.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த காவேரி, தன் வகுப்புத் தோழிகளுடன் பக்கத்துத் தெருவில் போலீஸ் திருடன் விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தாள். ஒளிந்துகொண்ட இடத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு நாயிடம் மாட்டிக்கொண்டாள். குரைத்தபடி அவளை கடிக்க வந்த நாய், கிட்டே வந்ததும் அமைதியாகிவிட்டதாம். மெல்ல அவளை முகர்ந்துபார்த்துவிட்டு வாலை ஆட்ட தொடங்கிவிட்டதாம்.

இதற்கு என்ன காரணம்?

‘‘காவேரி வீட்டில் நாலைந்து நாய் வளர்க்கிறார்கள். வீட்டில் எப்போதுமே நாயுடன்தான் காவேரி விளையாடுவாள். நாயுடன் பழகுபவர்களின் உடையில் லேசான நாய் வாசனை இருக்கும். அது நமக்குப் புலப்படாவிட்டாலும் நாய்களுக்கு நன்றாகவே தெரியும். ‘இவங்க நம்ம ஆளு. நம்பளுக்கு சோறு போடுவாங்க. அடிக்கமாட்டாங்க’ என்கிற உணர்வை இந்த வாசனை மூலம் நாய் உணர்ந்துவிடும். எனவேதான் அப்படி வாலாட்டி இருக்கிறது.’’ என்கிறார் ‘டாக் எக்ஸ்பர்ட்’டான ராகுல் என்பவர்.

சில சமயம் பத்துப் பதினைந்து தெரு நாய்கள் சேர்ந்துகொண்டு சின்னக் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நாய்களைக் கொன்றுவிடவேண்டும் என்பது பலரது வாதமாக இருக்கிறது.

இங்கே குற்றவாளிக் கூண்டில் நாய் நிற்க யார் காரணம்?

‘‘மனிதர்கள்தான்’’ என்கிறார் ராகுல்.

தொடர்ந்து, ‘‘குட்டியில் இருந்தே நாய்களை நாம் அடித்து விரட்ட ஆரம்பித்துவிடுகிறோம். மழைக்கோ, வெயிலுக்கோ நம் வீட்டோரம் ஒதுங்கினால்கூட கல்லெடுத்து அடிக்கிறோம். அது பசியோடும் ஏக்கத்தோடும் நம்மைப் பார்க்கும்போது பதிலுக்கு நாம் எரிச்சலைத்தான் காட்டுகிறோம். இப்படியாக வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தெரு நாயும் மனிதர்களால் தொல்லைக்கு உள்ளாகின்றன.

இதன் காரணமாக மனிதன் மீது தெரு நாய்களுக்கு கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. மனிதர்களைக் கண்டாலே அதற்குப் பிடிப்பதில்லை. கல்லடி கொடுக்கும் விஷயத்தில் பெரியவர்களைக் காட்டிலும் சின்னக் குழந்தைகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதனால் ஏற்படும் கோபாம்தான் ஏதாவதொரு சந்தர்ப்பதில் இப்படிப்பட்ட ஆபத்தில் முடிகிறது’’ என்கிறார் அவர்.

எனவே, சின்னக் குழந்தைகளிம் சொல்லி வைப்போம். நாய்கள் மீது அன்பு காட்டுங்கள். கல்லால் அடிக்காதீர்கள்.

பாக்ஸ்: 1

நாய்ப் பாசம், ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கும்? ‘‘இந்த நாய்த்தொல்லை தாங்க முடியலை. உங்களுக்கு நான் முக்கியமா? நாய் முக்கியமா? ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணிக்கோங்க’’ என்கிறார் மனைவி. சென்னையில், நூற்றுக்கு முப்பது சதவிகித கணவர்கள், ‘‘எனக்கு நாய்தான் முக்கியம். நீ வெளியே போடி’’ என்று பதிலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். சட்டப்படி விவாகரத்தும் வாங்கியிருக்கிறார்கள். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், இது நூறு சதவிகித உண்மை.

பாக்ஸ்: 2

மனிதர்களில் அண்ணன் தங்கை உறவுக்கு எப்படி அனுமதி கிடையாதோ, அப்படித்தான் ப்ரொஃபெஷனல் நாய்களுக்கும். ஒரே தாய்க்குப் பிறந்தவற்றை கிராஸ் பண்ண வைத்திருந்தால் அதற்கு சர்டிபிகேட் தரமாட்டார்கள். சொந்தத்தில் செக்ஸ் வைத்துக்குள்ளும் மிருகங்களுக்கு நம்மைப்போலவே ஜெனிடிக் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு சிலவகை ஊணங்களுடன் குட்டிகள் பிறக்கும். அதனால்தான் இந்தத் தடை.

பாக்ஸ்: 3

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் குட்டி பிறந்து 45&வது நாளில் அதற்கு தடுப்பூசி போடவேண்டும். அடுத்த 45&வது நாளில் இன்னொரு ஊசியும் அதற்கடுத்து ஆண்டுதோறும் ஒரு ஊசியும் போடவேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக குளிப்பாட்டவேண்டும். வீட்டுக்குள் நாய் வாசனை தாங்க முடியவில்லை என்றால், அதற்கென விற்கும் டியோடெரன்டுகளை வாங்கி அதன் மீது ஸ்ப்ரே செய்யலாம்.

3 comments:

Kousalya Raj said...

நாய்களை பற்றிய செய்திகள் அருமை. எங்கள் வீட்டில் அதுவும் ஒரு உறுப்பினர்தான்.
நல்ல பதிவு நன்றி

Kousalya Raj said...

உங்கள் பதிவை தொடரலாம் என்றால் follower இல்லை . அதையும் ரெடி பண்ணுங்களேன் , பலருக்கு உங்கள் பதிவுகள் போய் சேர வேண்டும். என் நண்பர்களுக்கும் உங்களை அறிமுகபடுத்துகிறேன் நீங்கள் விரும்பினால்...?

திங்கள் சத்யா said...

அது பற்றி எனக்கு போதுமான அறிவு இல்லை. நீங்கள் balaphoto7@gmail.com -ல் வாங்களேன். இது பொது இடம்.