Tuesday, September 27, 2011

Alone in the Amazon: யார் மிருகம்? நெஞ்சைப் பதற வைக்கும் நிஜம்!

'I Shouldn't Be Alive:Alone in the Amazon'


அமேசான் காட்டுக்குள் El_Dorado-வை தேடிக் கிளம்புவதற்கு ஆயத்தமாகிறான் 22 வயது Benedict Allen.‘எல் டொரடோ’ என்பது தங்கப் புதையல் என அறியப்படுகிறது. Benedict Allen-ன் தந்தை ஒரு சாகச வீரர். அவரைப்போலவே சாகசம் புரியும் ஆவலில் தன்னந்தனியாக தன்னுடைய ஆசை நாய், ‘கேஷூ’வுடன் சிறிய படகு ஒன்றில் கிளம்புகிறான் பெனடிக்ட்.


போகும் வழியில் இரண்டு வழிகாட்டிகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான். இந்தக் காட்டில் நிறைய கொள்ளையர்களும், கொலைகாரர்களும் பதுங்கியிருக்கிறார்கள் என அவனுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. படகை கரை தட்டச் செய்து காட்டுக்குள் பிரவேசிக்கிறார்கள் பெனடிக்ட் குழுவினர்.


அங்கே ஒரு குடியிருப்பு தென்படுகிறது. அங்கிருக்கும் இரண்டு கொள்ளைக்காரர்களில் ஒருவன், “எல் டொரடோவை தேடுவதற்கு நான் உனக்கு உதவுகிறேன்” என பெனடிக்டுக்கு வாக்கு தருகிறான். வழிகாட்டிகள் விடைபெறுகிறார்கள்.


அன்று இரவு பெனடிக்ட் தூங்கிக்கொண்டிருக்கும்போது, கொள்ளைக்காரர்கள் பேசிக்கொள்வது காதில் விழுகிறது. “தூங்கிக் கொண்டிருக்கும்போதே இவன் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவோம்” என்கிறார்கள்.


பயந்துபோகும் பெனடிக்ட், கும்மிருட்டில் சத்தம்போடாமல் நாயை அழைத்துக்கொண்டு படகில் ஏறி தப்பிக்கிறான். மறுநாள் அந்த சிறிய படகு பாறை ஒன்றில் மோதி உடைகிறது. உயிர் காக்கும் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது, கூடவே நாயும்.ஒரு லைட்டர், திசைகாட்டி மற்றும் வெட்டுக் கத்தி ஒன்றுடன் கரையேறுகிறான் பெனடிக்ட். தான் எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்கு புலப்படவில்லை. அடர்ந்து வளர்ந்திருக்கும் அந்த மழைக் காட்டுக்குள்ளிருந்து உடனடியாக அவன் வெளியேறியாகவேண்டும்.


குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவு இல்லை, கூட வந்த நாயும் ஆறுதலுக்கு இல்லை. திசைகாட்டியை வைத்துக்கொண்டு திக்கு தெரியாமல் அலைகிறான் பெனடிக்ட். பகலில் விலங்குகள் என்றால், இரவில் பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லை.பூச்சுக் கடியால் உடம்பெல்லாம் காயம்பட, கொசுக்கடியால் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிறான். உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இல்லாததால், மலேரியா நோய் மிக மூர்க்கமாகப் பரவுகிறது.


அதிர்ஷ்டவசமாக, இரண்டு வாரங்கள் கழித்து ஈச்சமரம் ஒன்றைப் பார்க்கிறான். அதனுடைய பழங்களைப் பறித்து கூழாக்கி அதன் சாற்றை போதும் மட்டும் குடிக்கிறான். ஆனால், மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவன் வயிறு எந்த உணவையும் ஏற்கவோ, ஜீரணிக்கவோ மறுக்கிறது. அப்படியே வாந்தி எடுக்கிறான்.


சில நிமிடங்களுக்குப் பிறகு சிங்கம் ஒன்றின் கர்ஜ்னை கேட்கிறது. தீயைக் காட்டி அதை விரட்டுகிறான். அந்த நேரத்தில் இன்னும் ஒரு விலங்கு அவனை நோக்கி வருகிறது. என்ன ஒரு அதிர்ஷ்டம்! அது, அவனுடைய ஆசை நாய் கேஷூ. எப்படியோ, அது எஜமானைத் தேடி வந்துவிட்டது. விலங்குகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் பெனடிக்டுக்கு பாதுகாப்பாக கூடவே வருகிறது கேஷூ.


நாட்கள் செல்லச் செல்ல, பசியின் கொடுமை உக்கிரமடைகிறது. 20 நாட்கள் கடந்தும் வெளியேற வழி தெரியவில்லை. எது கிடைத்தாலும் தின்றுவிடத் துடிக்கும் பசியின் தீவிரத்தில், பெனடிக்டின் பார்வை அவனது அன்புக்குரிய ‘கேஷூ’ மீது பாய்கிறது.


கேஷுவை சாப்பிடலாமா...? கேஷூவை உற்று நோக்குகிறான் பெனடிக்ட்! அவனது கண்களில் உக்கிரம்.


ஆனால், கேஷூவின் கண்களில் விசுவாசமும் அன்பும் பொங்கி வழிவது அழகாகத் தெரிகிறது. என்னையே நம்பி, என்னுடைய பாதுகாப்புக்காக என்னுடனே அலையும் கேஷுவைக் கொல்வதா? குற்ற உணர்ச்சியில் கூணிக் குறுகுகிறான் பெனடிக்ட்.


நான்கு நாட்கள் கடந்து இன்றோடு 24-வது நாள். நாயை உணவாக்குவது குறித்த எண்ணம் பெனடிக்டிடம் தீவிரமடைகிறது. இதற்கு மேல் உணவு உட்கொள்ளவில்லை என்றால், மரணம் நிச்சயம் என்கிற நிலை.


ஒன்று, நாயைக் கொன்று பெனடிக்ட் உயிர் வாழவேண்டும். அல்லது பட்டினியால் உயிர்விடவேண்டும்.


வேறு வழியில்லை.கையில் இருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு நாயை நோக்குகிறான். நடக்கப்போவது எதுவுமே தெரியாமல், மாறாத விசுவாசத்தோடு அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது அப்பாவி கேஷூ.


வீரனைப்போல் நேருக்கு நேர் மோத விருப்பமும் துணிவும் இல்லாத பெனடிக்ட், கோழையைப்போல பின்னால் நின்று, ஒரே வெட்டாய் கேஷுவின் கழுத்தில் கத்தியை பாய்ச்சுகிறான்


......................................................


கேஷூவை சுட்டு, அதன் இறைச்சியை சாப்பிடுகிறான். ஆனால், உடலுக்குள் இருக்கும் மலேரியா கிருமிகளின் செயல்பாடுகளால், உணவை ஏற்க மறுக்கிறது வயிறு. மொத்தத்தையும் வாந்தி எடுக்கிறான்.


28-ம் நாள், காட்டைவிட்டு வெளியேறுகிறான். உள்ளூர்வாசிகளால், காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறான்.எஜமானனுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு அவனைப்போலவே பசி, பட்டினியுடன் பின் தொடரும் கேஷூ. சுயநலமாய் நடந்துகொண்ட பெனடிக்ட்.


உண்மையில் யார் மிருகம்?


இரண்டு நாட்களாக என்னைத் தூங்கவிடாமல், அடிக்கடி மனக்கண்ணில் பட்டு மறைகிறது கேஷூ. என்னாலும் ஜீரணிக்க முடியவில்லை.


http://www.youtube.com/watch?v=NgT7Vw5VdRM&feature=mfu_in_order&list=UL

No comments: