Tuesday, October 25, 2011

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு?

‘‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்’’ சொல்கிறது ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.

image/ta.wikipedia.org/Yoshitoshi

‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன். 

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,
 
‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.


‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார்.ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.

7 comments:

வலையுகம் said...

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அருமையான பதிவு.
தரவுகள் மேனியை சிலிர்க்க வைக்கிறது

பகிர்வுக்கு நன்றி நண்பரே

திங்கள் சத்யா said...

ஹைதர் சார்! எழுதி வைக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரை வடிப்பதற்கு பொறுமைதான் வேண்டும்.

ஆனால், உங்களைப்போல கட்டுரை எழுத தைரியம் வேண்டும். அந்த விஷயத்தில், நீங்கள் என் உடன்பிறவா சகோதரர்.

வவ்வால் said...

சத்யா.

நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள்.என் சார்பாக சில கருத்துகள்.

பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்றே பல நூல்கள் சொல்கின்றன. ஆப்கானில் இருந்து பஹ்லவா என்ற இனம் இந்தியா வந்து மத்திய இந்தியாவிலிருந்து பின்னர் தமிழகம்வந்து இருக்கலாம் என்கிறார்கள்.

மணிமேகலையில் சொல்லப்படும் மணிபல்லவ தீவை சேர்ந்த நாக இன இளவரசிக்கும் சோழ மன்னன் உதயகுமாரனின் தந்தைக்கும் பிறந்த மகனே பல்லவ வம்சம் என்கிறார்கள். ஒரு தொட்டிலில் குழந்தையை வைத்து ஒரு தாவர கொடியை சுற்றி கடலீல் விட்டதாகவும் சொல்கிறார்கள்.பல்லவம் என்றால் கொடி என்று சான்றாக கூறுவார்கள்.

தமிழ் மூவேந்தர்கள் என்று சேர, சோழ, பாண்டியர்களை மட்டும் சொல்வதையும் காணலாம்.

மேலும் பல்லவர்கள் ஒரு வகையான வட இந்திய காட்டுவாசிகள் என்றும் சொல்வதுண்டு. ஏன் எனில் பல்லவர்களை காடவர்கோன் என்று சொல்வதுண்டு உ.ம் ஐயடிகள் காடவர் கோன் =பஞ்ச பாத சிம்ஹன்=சிம்மவர்மன், இவர் ஒரு 63 நாயன்மார்களில் ஒருவர். மஹேந்திரவர்மனின் தாத்தா.

பல்லவர்களும் , சாளுக்கியர்களும் பங்காளிகள் எனவே அவர்கள் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்க வாய்ப்பில்லை.கர்நாடகாவை ஆண்ட பல்லாலர்கள் என்பவர்களும் பல்லவர்கள் தான் என்கிறார்கள்.

திங்கள் சத்யா said...

சங்க காலம் என்று தமிழில் வழங்கப்படும் கூட்டுச் சொல்லில் உள்ள “சங்கம்’ என்பது சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த சொல்” என்றும், 'சங்கம்' என்னும் சொல், புலவர் கூட்டம் என்ற பொருளில் சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

எனவே, சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற வாதங்களும் உண்டு. சங்கம் என்னும் சொல்லே பிற்காலத்திய ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.

மேலும், கடைச்சங்க காலம் என்பதே கி.மு.300 முதல் கி.பி.300 ஆண்டுவரை என்று கூறப்படுகிறது. ஆனால், பல்லவர்களின் காலமென்னவோ, “கி.பி நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை” என்கிறார்கள்.

மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை மன்னர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இதில், ‘இளவரசர்கள், அரசியர், கிழார்(நிலக்கிழார்கள்) போன்ற ஊர்ப் பெருந்தனக்காரர்கள், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குரியோர், இராமன், சீதை, வீமன், அருச்சுணன் போன்ற புராணப் பெருமக்களின் பெயர்களும் கலந்துள்ளன.

சேர சோழ பாண்டியர் அல்லாத, சங்ககாலத் தனிமனிதனைக் குறிக்கும் இப்பெயர்களில், ‘இராமன்’ எப்படி வந்தான்? இராமனை வடவன் என்கிறார்கள்.

புறநானூற்றுப் பாடல் ஒன்று,

“கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு” என்கிறது.

இராமன், வடக்கிலிருந்து வந்தவன் என்கிற அடிப்படையில் பார்த்தால், நாம் சிந்துவெளிக்குச் செல்லவேண்டும். ஆனால், சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக சான்றுகள், இன்னும் கிடைக்கவில்லை.

என்றபோதும், சிந்துவெளி நாகரிகத்துக்கு உரியவர்கள் திராவிடர்கள் என்றும் ஆரியர் என்றும் இருவருமே சொந்தம்கொண்டாடி வருகின்றனர்.

முடிவாக ஒன்றைச் சொல்லலாம். ”இந்திய நிலப்பரப்பில், எல்லா இனங்களும் எல்லா மொழிக் கூட்டங்களும் அதன் தலைவர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். இதில், எவனுக்கு எது தாய்மொழி? என்று கூறுவதற்காக எந்த ஆதாரங்களும் இல்லை.” வேணும்ங்கிறவன் பிடிச்சவனை பிடிச்சி வச்சு, சொந்தங்கொண்டாடிவிட்டுப் போறான். ”காராத்தே, குங்ஃபூ கலையின் தந்தை தமிழராம்டா”ன்னு சொன்னவுடனே நம்மாளுக்கு முடி சிலுத்துக்குதில்லையா? அப்படி சிலுத்துக்கிட்டா, அது நல்ல வியாபாரம்.

தமிழ்ச்செல்வி said...

"thamizhanal mattumae thmizhanukku azhivu......aanal kuraigali kalai edupavnum thmizhanae....
arputhamnaa katturai...

திங்கள் சத்யா said...

கட்டுரையின் தலைப்பு, இன்று உண்மையாகிவிட்டது நண்பர்களே!

“ஒண்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்குப் பேர் வீரம் இல்லை. தமிழனா இருந்தா, திருப்பி அடிக்கணும்” என்ற வசனம் இடம் பெற்றதன் காரணமாக, ‘அதிசய அறிவு’ படத்தை இலங்கையில் தடை செய்திருக்கிறார்கள்.

அதற்கு இந்த தமிழ் சிங்கங்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா?

“எப்படியாகிலும் கொஞ்சம் துட்டு தேத்தணும்” என்பதற்காக, சர்ச்சைக்குறிய வசங்களை நீக்கிவிட்டு, ராஜபட்சேவின் கால்களை நக்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து, படத்துக்கு இப்போது ஓ.கே சொல்லிவிட்டதாம் இலங்கை அரசு. இனியும் விளக்கம் வேண்டுமா?

திங்கள் சத்யா said...

இந்த தளத்தில் பின்னூட்டம் இடுவதில் ஒரு பிழை இருக்கிறது. அது குறித்த சிறு விளக்கம்:

முதலில் உங்கள் கருத்தை பின்னூட்டப் பெட்டியில் போடுங்கள். அப்படியே அதை copy எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, Comment as: பகுதியில் anonymous, name/url உள்ளிட்ட ஏதாவது ஒன்றை தெரிவு செய்யுங்கள். இப்போது post comment கொடுங்கள்.

இப்போது, கமெண்ட் பப்ளிஷ் ஆவதற்கு பதில் இன்னொரு விண்டோ, குட்டியான கமெண்ட் பாக்ஸாக வரும். அதிலே உங்கள் கருத்தை paste செய்யுங்கள். சிரமத்திற்கு மன்னியுங்கள். நன்றி.