Friday, August 17, 2007

எந்த ஆணும் முழு ஆண் அல்ல! எந்தப் பெண்ணும் முழு பெண் அல்ல!


"சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நடந்து போவதை

தெரிந்தும் உணர்ந்தும் கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி

யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்"

-லிவிங் ஸ்மைல் வித்யா.


லிவிங் ஸ்மைல் வித்யா 'அரவாணிகள்' என்றழைக்கப்படும் 'திருநங்கைகளின்' உரிமைகளுக்காக போராடி வருபவர். சமூக சார்ந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர், மு.ராமசாமியின் நாடகப் பட்டறையில் கற்றுத் தேர்ந்தவர். இனைய தளத்தில் எழுதுபவர்களுக்கான "வலைப் பதிவர் பட்டறை"யில் பங்கேற்க சென்னை வந்திருந்த வித்யா "அரவாணிகள் என்றழைக்கபடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்'' என்கிறார்.

''ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்களில் ஒன்று கூடுகிற மக்கள் "அரவான் பலி'' என்கிற சடங்கின் மூலம் அரவாணைப் பலியிட்டு அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அரவாணிகள் என்ன அரவாணின் மனைவியா? இப்படி புராணக் கற்பனைகளில் தொடங்கி, நிஜ வாழ்க்கை வரையிலும் அரவாணிகள் இந்த சமூகத்தால் பலிகடாக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருமாகக் கூடி கொலை செய்வதையே ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கிற அதே மனப்பண்மை பொது இடங்களில் அரவாணிகளை இழிவு படுத்திப் பார்ப்பதிலும் தொடர்கிறது.

எப்பொழுது ஒரு அரவாணியைப் பார்க்க நேர்ந்தாலும் திடீரென உங்களுக்குள் சந்தோஷம் பெருக்கெடுத்து அது சாக்கடையாய் நிரம்பி வழிகிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல் சிரிக்கிறீர்கள், கூப்பிடுகிறீர்கள். அஜக் என்கிறீர்கள், அக்கா என்கிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் கோமாளி வேடமிட்டுத் திரியவில்லை. அதுதான் நிஜம், அது தான் இயல்பு.

"திருநங்கைகள்" என்று அவர்களை மரியாதையாக அழைக்கலாமே'' என்று கேட்கிறவருடன் மெரினா கடற்கரையில் கால் பதித்தபடியே நிகழ்ந்த இந்த உரையாடல் முழுக்க வலி நிரம்பியதாகவே இருந்தது.

வித்யாவை அழகாக புகைப்படமெடுக்க வேண்டும் என்கிற எனது எதிர் பார்ப்பில் அவருக்கு பெரிதாக உடன்பாடு இல்லாததை உணர்ந்தேன். ''போட்டோவாங்க இப்ப முக்கியம்? என்ன எழுதப் போறீங்க'ங்கறது தான் முக்கியமே. இப்படித் தான் ஏற்கனவே 'அவர் கூந்தல் காற்றில் படபடத்தது, அப்படி இப்படி'ன்னு என்னை வர்ணிச்சு எழுதினாங்க. நீங்க அப்படி எழுதாதீங்க'' என்கிறார்.

பதிவர் பட்டறைத் தலைவர் பாலபாரதி மற்றும் நன்பரும், ஆங்கில மேதையுமான நடைவண்டி மூலமாகத்தான் நான் வித்யாவைத் தொடர்பு கொண்டது. என் மீது எப்படியான நம்பிக்கையுடன் வித்யா தன் வலிகளைப் பகிர்ந்து கொண்டாரோ! உரையாடல் தொடர்கிறது.

"ஒரு திருநங்கையாய் வாழ்வதில் உள்ள வலி அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆணோ, பெண்ணோ! எந்த ஒரு நபரும் மரியாதைக்குறியவர் அல்ல என்பதையே எங்களின் அனுபவம் உணர்த்துகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் பிணாமிகளாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆணும் முழு ஆண் அல்ல, எந்த ஒரு பெண்ணும் முழு பெண் அல்ல என்பதே அறிவியல் பூர்வமான உண்மையாய் இருக்கிற போது அதையே காரணம் காட்டி திருநங்கைகள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமனமோ, மனித உரிமைகளோ மருந்திற்குக் கூட இல்லாத ஒரு தேசமாகவே இருக்கிறது இந்தியா. ஆணோ, பெண்ணோ நாலு பேர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்படுவது என்பது எவ்வளவு அவமானமான ஒரு விஷயம்? ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நிர்வாணப்பட வேண்டியிருந்தது.

நாண்கு மருத்துவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி என் உடலைக் கிளரி சோதனை செய்தார்கள். நானும் ஒரு மனிதப் பிறவி தானே! உங்கள் எல்லோருக்கும் உள்ள உணர்வுகள் தானே எனக்கும் இருக்கும்? அப்போது நான் எவ்வளவு அவமானப்பட்டிருப்பேன், என் உடல் எந்தளவுக்கு கூச்சத்தால் நெளிந்திருக்கும்? சோதனை நடக்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என் பெயரை 'வித்யா' என்று மாற்றுவதற்காக யார் முன்னாடியெல்லாமோ நான் நிர்வாணப்பட வேண்டியிருக்கிறது. கேவலம் நியூமராலஜிக்காக ஒருவர் பதினைந்தே நாட்களில் பெயரை மாற்றிக் கொள்ள இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் நான் இரண்டு வருடங்களாக தாசில்தார், கலெக்டர், மருத்துவமனை, நீதிமன்றம் என்று அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பெண்ணாய் வாழ்வதென்பது எங்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை. பிறந்த குடும்பத்திலிருந்தே சமுதாய கவுரவத்திற்காக நாங்கள் நாயினும் கேவலமக விரட்டியடிக்கப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள்! ஒரு முதுகலைப் பட்டதாரியாய் ரயில்களில் பிச்சையெடுப்பதென்பது எவ்வளவு அவமானகரமான ஒரு விஷயம்? ஆனால் நான் அப்படி இருக்க நேர்ந்தது. எனது முந்தைய அடையாளங்களை அழிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தே அக வேண்டும் என்கிற கட்டாயம்.

சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் சுயமரியாதையும் தன்மானமும் என்னைச் சுட்டுக் கொண்டே இருக்க, தாளாத மனவேதனையுடன் (PUNE ரயில்களில்) பிச்சையெடுக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படுகிற எந்தவிதப் பரிசோதனைகளும் இல்லாமல் சட்டப்படி அரசாங்கத்தால் வாய்ப்பளிக்கப்படாத இப்படியான "அறுத்தெறிதல்'' உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடுப்புக்குக் கீழே அரை மணிநேரம் மறத்துப் போகச் செய்யக் கூடிய லோக்கல் அனஸ்தீசியா மூலம் படித்த மருத்துவரால் இது செய்து வைக்கப்படுகிறது. இதற்கும் வழியில்லாத திருநங்கைகளின் மறுவாழ்வு எங்கோ ஒரு ஓலைக் குடிசையில் ஆக்ஸா பிளேடினால் தீர்மானிக்கப்படுகிறது. பூஜை, புனஸ்காரங்களில் நம்பிக்கையுடைய மூத்த திருநங்கை இந்த அறுவை சிகிச்சையைச் செய்கிறார்.

பால் மாற்று அறுவைக்கு முன்வரும் நபரின் கை, கால்கள் இறுகக் கட்டப்பட்டு புத்தம் புதிதான ஆக்ஸா பிளேடினால் ''அந்த உறுப்பு'' அறுத்தெறியப்படும். உயிர் போகிற வலியில் மயக்கம் போட்டுவிடாமல் இருக்க வாயில் சுக்கு, மிளகைத் திணித்து கண்ணத்தில் பளார், பளார் என அறைவார்கள். சிறிது நேரம் கழித்து தனியறையில் விடப்படும் அந்நபர் மறுநாள் வெளியே வந்தால் திருநங்கை. இல்லையென்றால் பிணம்.

இப்படிப் போக்கிடம் எதுவும் இல்லாத நிலையில் ஆணாக வாழ்வதென்பதை விட செத்துப் போவதே மேல் என்று மனம் அடித்துக் கூறுகிற போது, பலிபீடத்தில் உதிரத்துடன் தொடங்குகிறது எங்கள் வாழ்க்கை.

நீங்கள் எனபது கூட உங்கள் உடல் அல்ல, மனம் தான். உங்களை நான் அவமானப்படுத்திப் பேசினால் உங்கள் மனம் தான் அதற்காக வருத்தப்படுகிறது. மனம் எனபது திருநங்கைகள் உட்பட எல்லோருக்கும் பொதுவானது தானே?

முதுகலைப் பட்டம் முடித்து ஒரு நிறுவணத்தில் பணிபுரியும் 25 வயதாகிய என்னை சில ஆறாம் வகுப்பு மாணவர்கள் "ஊரோரம் புளியமரம்'' என்று பாட்டுப்பாடி கேலி செய்கிறார்கள். தன் உடல் குறித்தோ, படிப்பு குறித்தோ அல்லது சமுதாயம் சார்ந்தோ எந்த அறிவும் இல்லாத சிறுவர்களுக்கு என் போன்றவர்களை இழிவுபடுத்திக் கேலி செய்ய வேண்டும் என்கிற புத்தி எங்கிருந்து வந்தது?

இங்கே தான் இப்படிக் கழிசடையான பொதுப் புத்தியை வளர்ப்பதில் சினிமா தன் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த பருத்திவீரன் அமீரிடம் திருநங்கைகளை இழிவுபடுத்தியது குறித்து பல கேள்விகளைக் கேட்டேன். "ஆமாம், அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த யதார்த்தைத் தான் காட்டியிருக்கிறேன்'' என்று பொருப்பில்லாமல் பதில் சொன்னார்.

எங்களைப் போன்ற திருநங்கைகளின் யதார்த்தம் பற்றி கற்பழிப்புக் காட்சிகளைப் (கற்பழிப்பு என்கிற வார்த்தை சினிமாத்தனம் என்பதற்காக கையாளப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்) படமெடுக்கிற அமீருக்கு என்ன தெரியும்?

ஒரு வேளை சோற்றுக்காக, வெறும் முப்பது ரூபாய்க்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிற அவலநிலை தான் திருநங்கைகளுடையது. ஆனால் நீங்கள் மூன்று கோடி, முப்பது லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கிலீஷ் பேசி, ஏ.சி. பங்களாவில் வாழ்ந்து கொண்டே விபச்சாரம் செய்கிறீர்கள். இன்று பத்திரிகையை எடுத்துப் பாருங்கள், "பத்து கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய நடிகை'' என்று முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.

"என்ன நாயணக்காரரே! சும்மா வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. வாயில வச்சி ஊத வேண்டியது தானே! நீங்க ஊதுறீங்களா? இல்ல நான் ஊதவா?'' எவ்வளவு வக்கிரமும் ஆபாசம் நிறைந்தது இந்த வசனம் என்பது சொல்லியா தெரிய வேண்டும். கேட்டால் இதை யதார்த்தம் என்கிறார் அமீர்.

இதில் பாலுமகேந்திரா, காக்க காக்க கவுதம், வேட்டையாடு விளையாடு (என்ன வேட்டை, என்ன விளையாட்டுப்பா அது?) கமலஹாசன் என்று எந்த ஒரு அறிவு ஜீவிகளும் விதிவிலக்கல்ல. இவர்களெல்லாம் போதாதென்று 'திருநங்கைகள் எனப்படுபவர்கள் அப்பாவிப் பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தாதாக்கள்' என்று தனது அரசி சீரியல் மூலம் வீடு தோறும் எடுத்துச் சொல்கிற அரும்பணியை சித்தி ராதிகா செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் அடுத்தவர்களை இழிவுபடுத்திக் காசு பார்க்கிற நீங்களெல்லாம் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

பள்ளிக்கூடம் படிக்கிறதிலிருந்து இன்றுவரை எதற்கெல்லாம் நாங்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. வரிசையில் நிற்கும் போது கூட ஒன்பதாவது இடம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண் எடுக்கிற மாணவராக இருந்தேன். திடீரென்று கரும்பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு "படிப்பலி, உழைப்பலி'' என்று சக மாணவர்களே எழுதி வைத்தார்கள். என்னை அலி என்று அவமானப்படுத்துவது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமனதாக இருந்தது.

சராசரியாக எல்லோருக்கும் அமையக்கூடிய பால்ய வயது அனுபவங்கள் கூட எங்களுக்கு வலி நிரம்பியதாகவே இருக்கிறது. நட்பு என்று சொல்லிக் கொள்ள ஒருவர் கூட அமைவதில்லை. வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு வந்து சேர்கிற வரை "ஏய்... ஒம்போது, பொட்டை, வா... யக்கா, அஜக்" என்று கூறி தொடர்சியாக கேலி செய்வதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? இப்படிப் பிறந்தது எங்களின் குற்றமா?

என்ன பிரச்சினை என்று எங்களுக்கே தெரியாத வயதில் சுற்றம், நட்பு என்றில்லாமல் பிறந்த குடும்பத்திலிருந்தே வெறுக்கப்பட்டு அனாதைகளாக்கப்படுகிறோம். அந்த வயதில் எங்களுக்குத் தேவை அன்பு தான். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களிடம் அன்பாகப் பேசி குடும்பத்தில் ஒருவராக பழக அனுமதித்தாலே போதும். எவ்வளவோ வலிகள் காணாமல் போகும்.

மாறாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்ட்டாயப்படுத்தினால் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் திடீரென்று உண்மை வெடித்துக் கிளம்புகையில் அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமில்லாமல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண்ணானவள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால் இன்று ஜெயலலிதாவோ, கிரன்பெடியோ வந்திருக்க முடியாது. ஆண்டுக் கணக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களும் தலித்துக்களும் கூட இன்று ஓரளவாவது முன்னுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் யார் பார்வைக்கும் படாமல் இன்றுவரை ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

பொதுவாக இந்தியாவில் குழந்தை வளர்ப்பு பற்றியே தெரிவதில்லை. மருத்துவர்களும் திருநங்கைகள் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் அதற்கான ஆர்வமும் முயற்சியுமின்றி இருக்கிறார்கள். திருநங்கைகளை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாயத்தில் இப்போது திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

"மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம், டீசல் சிக்கனம் - தேவை இக்கனம்" மாதிரி "திருநங்கைகளும் இயல்பான மனிதர்களே - அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே" போன்ற வாசகங்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

எங்களைக் குடும்பத்தில் ஒருவராக வாழ அனுமதிப்பது, அரசு உதவியுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது, சான்றிதழ்களில் விரும்பிய பெயரை, பாலினத்தை (மாறிய பாலினமாக) மாற்றி அறிவிப்பது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதுகிறோம்.

அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது எங்களுக்கு நேர்கிற அநியாயத்தைப் பாருங்கள். எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் விண்னப்பப் படிவத்தில் பாலினம் என்கிற இடத்தில் ஆண் என்று இருக்கும். ஆனால் புகைப்படத்தில் பெண் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக் குழப்பத்தினால் எடுத்த எடுப்பிலேயே எங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான முயற்சியே கூட மறுக்கப்படுவது தான் கொடுமையான விஷயம். எனவே திருநங்கைகளுக்கான அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற அரசு சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல் பெண்களின் மீதான பாலியல் வண்கொடுமைக்கும், திருநங்கைகள் மீதான பாலியல் வண்கொடுமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் பாருங்கள்.

பொது இடத்தில் யாராவது ஒரு பெண்ணை சீண்டினால் சுற்றி இருப்பவர்கள் தர்ம அடி கொடுக்கிறார்கள். வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம், தண்டனை கிடைக்கும் என்கிற பயமாவது பெண்கள் விஷயத்தில் இருக்கிறது. ஆனால் இதே வண்கொடுமைகளை திருநங்கைகள் மீது கட்டவிழ்த்து விடும் போது சமுதாயம் அதை ரசித்து வேடிக்கைப் பார்க்கிறது.

பட்டப்பகலில் மனிதாபிமானமின்றி நடந்தேறுகிற இந்த வண்கொடுமைகளின் மூலம் நாலு பேர் சந்தோஷப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மனித உரிமைகள் பற்றி பேசி மாநாடுகள் நடத்தி பிஸ்கட் சாப்பிடுகிறீர்கள்.

மரக்காணம் பாலா.

12 comments:

Anonymous said...

யப்பா...என்ன வலி... இந்தக் கட்டுரையை பாரதியார் படித்து இருந்தால்..
திருநங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வெண்டும்... என்று பாடினாலும் பாடியிருப்பார்.

Anonymous said...

மிக பயங்கரமான வலியை உணருகிறேன்

என் அளவில் திரு வித்யா அவர்கள் கூறிய எந்த குற்றங்களையும் நான் செய்ததில்லை எனினும்

ஜமாலன் said...

"நீங்கள் என்பது உங்கள் உடல்கூட அல்ல, மனம்தான்"

அற்புதமான வாசகம். மிகவும் வலி நிரம்பிய இந்த உரையாடலில்.. ஒரு படைப்பாளிக்கேயுரிய தெறிப்புகள்.. இது. Transgender - களுக்கு என எததனையொ ஆங்கில இனணயங்கள் உரிமை கோரும் சங்கங்கள் உலக அளவில் இருந்தும்.. இந்தியாவின் ஆன்மீகப் பெருமை எனும் அர்த்தமற்ற மனிதவிரோத சிந்தனைகளும் பார்வைகளும் உடல் குறித்த புணிதங்களுமே இன்றைய பொதுப்புத்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தினவாழ்விற்கான பொதுப்புத்தி என்பது இந்திய உடல்களை கட்டமைத்துள்ள உடல் அரசியல் குறித்த விழிப்புணர்வு அவசியம். நமது உடலும்கூட அரசியலாக்கப்பட்டுள்ளது.. சகோதரி வித்யாவின் வலியை பகிர்ந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

தயவு செய்து இந்தக் கட்டுரையை தமிழக முதல்வருக்கும், இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வையுங்கள். நெஞ்சுக்கு நீதி எழுதிய தமிழக முதல்வருக்கு எழுதி நியாயங்கள் கேளுங்கள்.


ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

தயவு செய்து இந்தக் கட்டுரையை தமிழக முதல்வருக்கும், இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வையுங்கள். நெஞ்சுக்கு நீதி எழுதிய தமிழக முதல்வருக்கு எழுதி நியாயங்கள் கேளுங்கள்.


ஒரு ஈழத் தமிழன்

G.Ragavan said...

முருகா! எவ்வளவு கொடுமைகள். படிக்கையில் அதன் வலி புரிகிறது. நிலமை மாறத்தான் வேண்டும். அதற்காக முதலில் எங்களிடமிருந்து திருநங்கைகள் மீதான ஒதுக்குதலையும் காழ்ப்புணர்வையும் தவிர்க்கிறோம். அனைவரும் இப்படிச் செய்ய நிலமை மாறும்.

பருத்திவீரன் ஒரு மட்டமான படம் என்பது என் கருத்தும் கூட.

ஜெயபாலன் said...

நன்றி. விதியாவின் போராட்டத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். தற்போது கலைஞர்கள் நர்த்தகி சக்தி எங்கள் விருந்தாளீயாக நோர்வேயில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தப் பதைவை வாசித்துக் காட்ட வேண்டும். சக பெண்கள் தொடார்பாக சக மானுடர் தொடர்பாக அக்கறையுள்ள கவிஞர் கனிமொழி, ரவிக்குமார் போன்ற தாமிழக அரசியால்வாதிகள் அதிகம் கவனம் செல்லுத்தவேண்டிய பக்கம் இது. தமிழகம் வந்திருந்தபோது திருந்நங்கைகளுக்கு குடியிருக்கும் வீடு வேலைவாய்ய்பு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளே அணுகப் படாமல் இருப்பது அதிற்ச்சி தந்தது. வாக்கு வங்கி அடிப்படையில் மட்டுமே சிந்திக்கிற தமிழக அரசியல் ஏமாற்றம் தருகிற இடங்களில் இதுவும் ஒன்று. இட ஒதுக்கீட்டு அடிப்படையில் திருநங்கைகளது பிரச்ச்சினைகள் தீர்த்து வைக்கப் படவேண்டும். திங்கள் சத்தியாவுக்க்கு நன்றி - visjayapalan at gmail.com

கீர்த்தனா said...

பதிவினை வாசிக்கும் போது என் கண்களில் நீர்.
இப்படியான விடயங்களை சிறுவயது முதல் சிறுவர்களுக்கு உணர்த்தும் முறையில் பாடசாலைகளில் சமூகம் சார்ந்த கல்வி ஏற்பாது செய்யப்பட வேண்டும்..
...

Uma Nedumaran said...

மிகுந்த அதிர்ச்சியையும்.. உள்ளம் குறுகும் அவமானத்தையும் ஏற்படுத்தியது இந்த பதிவு... திரு நங்கைகள் குறித்து நம்மைச் சுற்றி இருப்பவர்களை விட அதிக விழிப்புணர்வோடுதான் இருக்கிறேன் என்ற என் எண்ணத்திற்கு மிகப் பெரிய அடியாக இருந்தது வித்யாவின் உள்ளக் குமுறல்.. இத்தனை மோசமான மனிதாபிமானமற்ற சமூகத்தின் அங்கமாகவா நாம் இருக்கிறோம்..
ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும்.. போராடும் ஒவ்வொருவரும்.. திருநங்கைகளின் வலியை உணர்ந்து குறைந்த பட்ச கருத்து பரப்பலையாவது செய்ய வேண்டும்.. பாலாவிற்கு நன்றியும்.. வித்யாவின் வேதனைகளை அப்படியே எழுத்தில் கொண்ட வந்த திறனிற்காக வாழ்த்துக்களும்...

Anonymous said...

Really a Touching article.
They should never be Teased or illtreated at any place.
They should have a Peaceful life.
Society ---that means every individual ,should respect them as a human being ,give job oppurtunities and stop teasing.

சுரேகா.. said...

இவ்வளவு வேதனைகளா?
உள்ளம் சுடுகிறது.

துணிவுடன் போராடுங்கள் வித்யா!

நட்புக்கு நாங்கள் இருக்கிறோம்.!


//ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.//

சரியான நெத்தி அடி..!
ஊடக தாதாவான சினிமா இனியாவது
இவர்களை தவறாக சித்தரிக்காமலிருக்க
போராடுவோம்.!

லேகா said...

"எந்த ஆணும் முழு ஆண் இல்லை எந்த பெண்ணும் முழு பெண்ணில்லை" முற்றிலும் சரியான கூற்று..வித்யாவின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/