Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.

No comments: