Friday, January 5, 2007

சப்ப மாடு செத்து ஏழை பணக்காரன் ஆன கதை

ஒரு ஊர்ல ஒரு ஏழ‌ விவசாயி இருந்தாங். அவங்கிட்ட ஒரே ஒரு பசு மாடு இருந்துது. அதுவும் சரியான சப்ப மாடு. ஒரு நாள் திடீர்னு, அந்த சப்பமாடும் செத்துப் போச்சு. 'இன்னாப் பண்றது?'ன்னு இவம் தவிக்கிறான்.
கூழுக்கு வழியில்லாத குடும்பம். இருந்த ஒரே மாடும் செத்துப் போச்சு. அழுதுகினே போய், மாட்டுக் கறிய மண்ல பொதச்சிட்டு, தோல உறிச்சி எடுத்துக்கினாங்.

''டியே! புள்ளங்கில பாத்துக்க. நாம் போயி தோல வித்துட்டு, சாப்பாட்டுக்கு எதுனா அரிசி வாங்கியாரன். கஞ்சியாவது காசி குடிப்போம்''னு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு, வெளிய கௌம்பிட்டாங்.
தோல் வேபாரி, ஊட்ல இல்ல. 'எத்தினி மணி ஆனாலும் செரி, தோல விக்காம ஊட்டுக்குப் போவக்கூடாது'ன்னு சொல்லி, அங்கேயே காத்திருந்தாம்...

அந்த நாள்ளதான் கரண்ட்டு கெடயாதே! இருட்டிப் போயி கண்னு மண்னு தெரியில. அந்த நேரம் பாத்து, ரெண்டு திருடனுங்க கையில ரெண்டு பையோட வந்துகிறானுங்க.

'' டேய்! இந்த ஊட்டு வாசல்ல கீற மர பீரோவ்ல ஒளிஞ்சுக்குவோம். யாரும் இல்லாத நேரம் பாத்து தப்பிச்சிற்லாம்''னு சொல்லி, பீரோவ்ல பூந்து கதுவ சாத்திக்கினானுங்க.

கொஞ்ச நேரம் கழிச்சி, தோல் வியாபாரி வந்துக்கிறாங். அவம், 'கா' வௌக்க ஏத்தன ஒட்னே..., இவம் போயி நின்னாம். 'யாரு...?' தோலு விக்க வந்தவம்.

''யாருப்பா நீ? இன்னா வேனும்''னு தோல் வேபாரி கேட்டுக்கிறாங்.

''அய்யா! இன்ன மேறி யாம் பசுமாடு செத்திறிச்சி. அதாங் இந்த தோல வித்துப்புட்டு, எதுனா வாங்கினு போலாம்னு வந்தேன்''னு சொன்ன ஒட்னே...

''செரி, செரி யவ்ள வேணும்? அத்த சொல்லு"ன்னு கேட்டுக்கிறாங் தோல் வேபாரி.

''காசு பணமெல்லாம் எதுவும் வேணாம் சாமி. தோ! மழைலயும் வெயில்லயும் மக்கிங்கடக்குதே... மர பீரோ... அத்த குடுத்தா, எங்கூட்டு சாமான்கள பத்தரமா வச்சிக்குவேன்''னு சொல்லிக்கிறான் நம்பாளு.

'வெளிய கடந்து வீனாதான மக்குதுன்னு', தோல் வியாபாரியும் அத்த அவங்கிட்ட குடுத்துட்டாங்.

பக்கத்துல ஒரு வண்டிக்காரன கூப்ட்டா,
'ராத்திர்ல என்னால வரமுடியாது'ன்னு சொல்லி,
'வேண்னா வண்டிய நீயே ஓட்டிம் போய், காலைல கொண்னாந்து உட்ரு'ன்னு சொல்லிக்கிறாம்.
'இத்த சொல்லுவன்னுதான எதிர் பாத்தன்'னு நெனச்சி, நம்பாளும் பீரோவ வண்டில ஏத்திக்கினு ஊருக்கு கௌம்பிட்டாங்.

போற வழியில மாடுங்க்கிட்ட சொல்லிக்கிறாங்,
''மாடுங்களா...! மன்னர் எனக்கிட்ட கட்டளைய‌ இன்னிக்கித்தாங் நெறவேத்திக்கிறேன்.
ரொம்ப நாள்... அகப்படாத திருட்னுங்கள இன்னிக்கி புடிச்சிட்டேன்.
நாளக்கி பாரு அமக்களத்த! ஆ...ன்னு சொல்லிக்கிறான்.

திருட்னுங்க பயிந்து போயி,
'எங்கடா நமுக்கு மரண தண்டன குடுத்துட போறாங்க!'ன்னு நெனச்சி,
''அய்யா, சாமி! உங்க கால்ல உழுந்து கேக்கறோம். இந்த பொண்ணும் பொருளும் உங்கிட்டயே குடுத்துட்றோம். எங்கள தெறந்து உட்ருங்க, நாங்க எங்கனா கண்காணா தேசத்துக்குப் போய் பொழச்சிக்கிட்றோம்''னு கெஞ்சிக்கிறானுங்க.

இல்லாத உருட்லு, மெரட்ல்லாம் காமிச்சிட்டு,
''இத்தா...ட எந்த வம்புக்கும் போவக்கூடாது.'' அப்டின்னு சொல்லி, நகயும் பணத்தியும் வாங்கினு, அவுனுங்குள தெர்த்தி உட்டாம்.

நேரா ஊட்டுக்கு வந்தவம், பொண்டாட்டியாண்ட ரெண்டு பைய்யும் குடுத்துட்டு வண்டிக்காரங்கிட்ட வண்டியும் உட்டுட்டாம்.
அதுக்கப்புறம் செல்வத்துக்கு கேக்கவா வேணும்?
'கல்லு ஊடுதான், கறி கொழம்பு தான்...
கால்லெயிம், சாய்ந்திரமும் வெத்தில பாக்குத்தாம்.'

ஊரு சும்மா இருக்குமா? எல்லாருக்கும் ஒரே ஆச்சரியமாப்பூட்டுது.
'இவம் எப்பிட்றா இவ்ளோ பெரிய பணக்காரனா ஆணான்?'னு தலைய பிச்சிக்கிறானுங்க.
பொம்பளங்க வாயி சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்களே! 'நைஸா இன்னான்னு விசாரிடி'ன்னு, அவவம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டானுங்க.

தண்னி புடிக்கும் போது கேட்டுகிறாளுங்க.
''ஏண்டி... எங்கருந்துதாண்டி வந்த்து இவ்ளோ வசதியும்! அந்த மாயத்த எங்களுக்கும் சொன்னா நாங்களும் செஞ்சிப் பாப்பமுல்ல... ''

''அட இதக் கேக்கவா இவ்ளோ நாளு மொன்னு முழுங்கிருந்தீங்க.
ஒரு சப்ப மாடு வச்சிருந்தமே. அதான் சம்பாரிச்சி குடுத்திச்சி. அது பாலுங் கரக்காம, சானியும் போடாம ஒரு நாள் செத்துப் போச்சா!
கறிய கொண்னும்போய் மண்ல பொதச்சிட்டு, தோல எடுத்தும்போய் விக்கப் போனவரு தாங்!
பய்யி நெறெய பணத்தொடத்தான் ஊட்டுக்கு வந்தாரு.
தங்க வெல விக்கிதாமுல்ல தோலு..''
-இவ சொல்லி வாய மூடல! கொடத்த பூரா போட்டது, போட்டபிடியே எல்லாரும் ஊட்டுக்குப் போய்ட்டாளுங்க.

''அட வெவரங்கெட்டவனுங்களா... நாட்ல எந்த பொருளு என்னா வெல விக்கிதுன்னுகூட தெரியாம, நீங்க சம்பாரிக்க கௌம்பிடுறீங்க.
சப்ப மாட்டு தோலு தாண்டா இவ்ளோ வசதிக்கும் காரணம்''னு, கேட்ட கதைய சொல்லிக்கிறாளுங்க.

அவ்ளதான்!
எல்லா ஊட்டுக்காரணுங்களும் கூடி முடிவெடுத்தானுங்க.
'இருக்குற மாடு எல்லாத்தயும் வெட்டிக் கூறுபோட்டு பொதச்சிட்டு, தோலத் தூக்கினு போய் வித்து பணக்காரனா ஆவுரது'. அதே மாறி இருந்த ஆடு, மாடு எல்லாத்தயும் வெட்டி சாவடிச்சிட்டு, தோல உறிச்சி வேபாரத்தப் பாக்க கௌம்பிட்டானுங்க.
தோலு இன்னா வெல விக்கும்னு, நம்பளுக்குத்தான் தெரியுமே.
'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா'ங்கற கதயா போயிடுச்சி நெலம.

நம்பாளு வாயும், வயிருமா வசதியா வாழறத பாக்குறதுக்கு எவனுக்கும் புடிக்கல. ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தானுங்க.

''அவன எப்பிடியாவது சாவடிச்சுடனும்டா''.
அதே மாதிரி இன்ன பண்ணானுங்கன்னா?, மரத்துல ஒரு பீப்பா செஞ்சி, ராவோட ராவா போய் நம்பாள அமுக்கிட்டானுங்க.
வெடிஞ்ச ஒடனே கும்பலா உருட்டிக்கினு கடல பாத்து தள்ள ஆரம்பிச்சிட்டானானுங்க‌.

''எம் மொவன் இத்தோட ஒழிஞ்சாண்டா''ன்னு சொல்லி ஜாலியா போறாங்க.

போற வழியில இவுங்களுக்கு தண்ணித் தாகம் எடுத்துக்கிச்சி.

''டே! தண்னித் தாகம் எடுக்குதுடா''ன்னு ஒருத்தஞ் சொல்லவும்,

''நெல்லிக்கா சாப்ட்டா சரியாப் பூடும்''னு ஆளுக்கு ஒரு மூலயா நெல்லிக்கா பெறிக்க கௌம்பிட்டானுங்க.

பய எப்பிடி தப்பிச்சிட போறாங்கற நெனப்பு!

அந்த காலத்துலதாம் மாடு திருடுறவனுங்க அதிகமாச்சே!
அந்த மேறி மூணு திருடனுங்க ஆளுக்கு நூறு ஆடு, நூறு மாடுன்னு ஓட்டி வந்துட்டானுங்க. இவுனுங்குளுக்கும் களப்பு. பீப்பா உருட்டிம் போற வழில ஆடு மாடுங்கள மேய உட்டுட்டு,
செம வேட்டயாச்சே! ஆச தீர சாராயத்தையும், கள்ளையும் நெக்க குடிச்சிட்டானுங்க.

குடி வெறி சும்மா இருக்குமா? பங்கு போட்றதுல தகறாறு வந்துருச்சி.
உட்டாங்... ஒரு ஒதெ!
ஒர்த்தவம் ஓடி நேரா பீப்பா மேல உழுந்தாம்.
''ஒதெக்கி ஒதெ குடுக்குறம் பார்றா''ன்னு சொல்லி பீப்பாவ தூக்குனாம் பாரு!
தூக்க முடியில.
'இன்னாடா இந்த கணம் கணக்குது'ன்னு நெனச்சி,

''டேய்! பங்கு அப்புறம் பிரிச்க்கிலாம். மொதல்ல இந்த பீப்பாவ தெறப்போம். சத்தியமா இதுல பொதயல்தாங் இருக்குது''ன்னு சொன்னான்.

சண்டய மறந்துட்டு மூணு பேரும் போய் பீப்பாவ தெறந்தானுங்க.

திடீர்ணு நம்ப ஆளு வெளிய வரவும், மூணு பேரும் மெரண்டு பூட்டானுங்க.

''யாரும் பயப்படாதீங்க! இது அதிசய பீப்பா. இதும் உள்ள போயி நீங்க இன்னா கேட்டாலும் கெடைக்கும், எங்க‌ போவும்னாலும் போவும், எல்லா ஒலகத்துக்கும் போயி வரலாம்''னு நம்பாளு புளுவிட்டான்.

இத்த நம்பி இந்த மூணு மூணு திருடனுங்களும் பூந்துக்கிட்டானுங்க.

இவம் இன்னா பண்ணாம்னா,
இருந்த மாறியே பீப்பாவ தச்சி மூடிட்டு, நூறு ஆட்டையும், நூறு மாட்டையும் ஓட்டிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாம். ஊர்க்காரப் பயலுங்க பீப்பாவ உருட்டினு போய் கடல்ல தள்ளிட்டு,

''அப்பாடா! ஒழிஞ்சிது சனியன்''னு சொல்லி ஊட்டுக்கு திரும்பிட்டானுங்க.

மறு நாள் வெடிஞ்சி எல்லாரும் வெளிய வந்தா...! நம்பாளு தின்ன மேல ஒக்காந்து வெத்தலப் பாக்கு போட்டுக்கினு கீறாம்.

''இன்னாடா இது? எழவெடுத்த வேலயாப் பூடுச்சி. மெனக்கட்டு போய் கடல்ல தள்ளிட்டு வந்தோம், இவம் கல்லுமாதிரி தின்னைல ஒக்காந்துனு கீறானே!''

-அப்பிடீன்னு ஆச்சரியாமாப் பூடுச்சி.
திருப்பி பொண்டாட்டிய உட்டனுப்புறானுங்க.

''போய் இன்னான்னு கேள்றின்னு.''

இவுளுங்களும் போய் கேக்கறாளுங்க.
''ஏதும இம்மாம் ஆடு மாடுங்க...? அதிசயமா கீது! எங்களுக்கும் சொன்னா நாங்களும் பொழைக்க மாட்டமா?'' ஆ...ன்னு கேட்டுக்கிறாளுங்க.

''இதுலன்னா அதிசயங்கீது? ராத்திரி யாரோ திருட்டுப் பயலுவ எங்கூட்டுக்கார்ரு தூங்கியிந்த நேரமாப் பாத்து பீப்பாவுல அடச்சி எடுத்தும் போய் கடல்ல தள்ளிட்டு கீறானுங்க.
வெடிஞ்சி பாத்தா மனுசனக் காணாம். என்னமோ எதோன்னு நாம் பதறிங்கடக்குறேன். சயந்தரமா பாத்து வர்ராரு.
சும்மாவா!?
இந்தப் பக்கம் நூறு ஆடு, இந்தப் பக்கம் நூறு மாட இல்ல ஓட்டிக்கினு வர்ராரு.

'ஏதுய்யா இம்மாங் ஆடு, மாடுங்களும்'னு கேட்டா,
'அட அத யாண்டி கேக்குற? திருட்டுப் பயலுவ பீப்பாவுல வச்சி உருட்டினு போய் என்ன‌ கடல்ல தள்ளிட்டானுங்க.
போறம... போறம்... போறம்... நடு ஆழத்துவெரக்கும் போறேங்.
பாத்தா...! பாதாள தேவத வந்து பீப்பாய தெறக்குது.

''யார்றா நீ? எதுக்கு இங்க வந்த?''ன்னு கேக்குது.

நான் இன்னாத்த சொல்றது. இந்த மேறி படுபாவிப் பயலுங்க என்ன சாவடிக்கப் பாத்த கதைய சொன்னேங்.
யாம் மேல எறக்கப்பட்டு,

''இந்தா உனுக்கு நூறு ஆடு, நூறு மாடு''ன்னு குடுத்து, ஓட்டிம்போவ சொல்லிச்சி''ன்றாரு. இதாம்மா நடந்த கத''னு சொல்லிட்டா...!

பொண்டாட்டி காரிங்க அம்மா...ம்பேரும் போனாளுங்க.

''அட அறிவு கெட்டவனுங்களா! இதாண்டா நடந்து. நீங்களும் இருக்கிறீங்களே?"ன்னு காரித் துப்பிக்கிறாளுங்க.
ரோசம் பொத்துக்கினு வந்திருச்சி இவனுங்களுக்கு.

''டேய்! ஆளுக்கு ஒரு பீப்பாய ரெடி பண்ணுங்கடா''ன்னு சொல்லி அதே மாறி தயார் பண்ணிட்டானுங்க.

''பாருங்கடி... நங்கள்ளாம் இதுல உள்ள பூந்துக்குவோம். பக்குவமா எங்கள கொண்ணும்போய் கடல்ல தள்ளிறனும்''னு சொல்லிட்டானுங்க.
அதே மாறி பொண்டாட்டிங்களும் பண்ணிட்டாளுங்க. ஆனா போன புருசன் திரும்ப வர்ல.
'அப்புறம் இன்னா ஆச்சி?' எல்லா பொம்மினேட்டிங்களயும் இவனே கல்யாணம் பண்ணிக்கினு சந்தோசமா குடும்பம் நடத்துனானாம்.

குறிப்பு: இந்த கதையை எனக்கு சொன்னது எங்க ஊர் மூலிகை வைத்தியர் விஜயன். கதைப்படி மூணு கொழந்தைங்கதான் ஆடு, மாடு மேய்க்கும். கொழந்தைங்கள சாவடிக்கிறது எனக்கும் பாவமா இருந்திச்சி. அதுமட்டுமில்லாம, கொழந்தைங்ககிட்ட இந்த கதைய சொன்னா, 'பாவம் அந்த மூணு பசங்க'ன்னு சொல்லி சோகமாயிடுவாங்க. அதனால எதனா சொல்லி சமாளிங்க''ன்னு குறிப்பு தந்திருந்தேன்.

கதையை படிச்சிப் பாத்த நம்ப தீச்செய்தி இந்தியா[Bad News India], ஏன் கொழந்தைங்கள சாவடிப்பானேன்! குழந்தைங்களுக்குப் பதிலா மூணு குடிகாரனுங்கன்னு போடுங்க'ன்னு புத்திமதி சொல்லிருந்தாரு. அய்யா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கதை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

6 comments:

Anonymous said...

I like your blog and poems very much. Keep writing.

--FD

மாசிலா said...

அருமையான கதைங்க. ரொம்பவும் நன்றி.
ஆட்ட ஓட்டி, மாட்ட ஓட்டி கடசியா எல்லா பொம்பளைங்கள ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு!

ஸ்ரீ said...

பாலா உங்கள் கதையும் படமும் நல்லா இருக்கு.

BadNewsIndia said...

மூணு கொழந்தைங்களுக்கு பதிலா தண்ணி அடிச்சுக்கினு சுத்தர மூணு தடியனுங்கன்னு சொல்லிக்கினா போச்சு.
தடியனுங்க கடல்ல வூந்தா கொழந்தைங்க கண்டுக்காது.

திங்கள் சத்யா said...

தீச்செய்தி இந்தியாவுக்கு மிக்க நன்றி. நல்ல காலம், நீங்க வந்து அந்த கொழந்தைங்கள காப்பாத்தினீங்க. அத்தோட கொல பாவத்துலர்ந்து என்னையும் காப்பாத்திட்டீங்க. உங்கள் ஆலோசனைப்படி கதை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு கதை.
கொஞ்சம் எழுத்துப்பிழைகளை குறைத்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்.