Tuesday, January 4, 2011

"ஐ.ஏ.எஸ் படித்தால் டாஸ்மாக் எம்.டி.யாகலாம்" -கவர்மென்ட் ஒயின்ஷாப், பிரைவேட் பள்ளிக்கூடம்!


ஒரு காலத்தில் சாராயம் விற்றவர்கள்தான் இன்றைக்கு கல்வித் தந்தைகளாக இருக்கிறார்கள். சாராயத்தைப் போலவே கல்வியிலும் காசு கொட்டியதால், இன்றைக்கு மந்திரிமார்களும் இன்னபிற பலான தொழில் செய்பவர்களும் இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்திருபது வருடங்களாக அடித்தக் கொள்ளையின் வலி தாங்காமல் பொதுமக்கள் அலற... ஒரு நீதிபதியை நியமித்தது தற்போதைய தி.மு.க அரசு.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000. உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8,000. நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.5,000. நர்சரி மற்றும் தொடக்கப் ​பள்ளிகளுக்கு ரூ.3,500 என தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தார் அந்த நீதிபதி.

‘‘கட்டணத்தை உயர்த்தாவிட்டால் பள்ளிகளைத் திறக்க மாட்டோம்’’ என்றன தனியார் பள்ளிகள். ‘‘உத்தரவுக்குக் கீழ் படியாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும்’’ என்றார்கள் கல்வியாளர்கள். அதன் பிறகு அந்த நீதிபதி பிய்த்துக்கொண்டு ஓடிவிட, ஆளும்கட்சி சேவை செய்துவந்த ஓய்வு ஒன்றை அந்தப் பதவியில் அமர்த்தினார்கள். அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும். நாம் விஷயத்துக்கு வருவோம்.

காசு வரும் என்பதற்காக டாஸ்மாக்கையே எடுத்துக்கொண்ட நம் ‘குடியரசில்’, கல்வி நிறுவனங்களைக் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை.

‘‘பிளஸ்&டூ ரிஸல்ட் வெளியானதும், ‘நான் கலெக்டர் ஆவேன், டாக்டராவேன்’ என்று எடுத்துவிடும் மாணவர்களில் ஒருத்தராவது, ‘நாட்டு மக்கள் பஞ்சத்தில் வாடுகிறார்கள். நான் விவசாயி ஆவேன். உணவுத்தேவையை போக்குவேன்’ என்று சொல்கிறார்களா? காரணம், அவர்களுக்கு ஏழ்மை தெரியாது. இது மாணவர்களின் குற்றம் அல்ல. மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கத் தின்னும் மக்கள்கூட, விவசாயம் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம், முட்டாள் கல்வியாளர்களும் சுயநல அரசியல்வாதிகளும்தான். தன்னுடைய கையில் மதுக்கடையை வைத்துக்கொண்டு, தனியாரின் கையில் கல்வியைத் தந்திருக்கும் தமிழக அரசுகள் திருந்தாதவரை, ஏழை எப்போதும் ஏழையாகவும் பணக்காரன் எப்போதும் பணக்காரனாகவே இருப்பான்’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த இளஞாயிறு.

டாஸ்மாக்கை அரசாங்கம் எடுத்துக்கொண்டு, தனியாரிடம் கல்வியை ஒப்படைத்திருப்பது சரியா?

‘‘அரசாங்கம், டாஸ்மாக்கை எடுத்துக்கொண்டதை நான் தவறாகப் பார்க்கவில்லை’’ என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.

பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட இவர், ஏழை மாணவர்களுக்காக ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ என்கிற தமிழ் வழி பள்ளிக்கூடம் ஒன்றை திண்டிவனத்தில் நடத்தி வருகிறார்.

‘‘இதுவரை தனியாருக்குப் போய்க்கொண்டிருந்த மதுபான வருவாய், இப்போது அரசாங்கத்துக்கு கிடைக்கிறது. குடியைக் கெடுத்து, குடிமக்களை வாழ வைப்பதா? என்று கேட்கலாம். ‘மதுவிலக்கு’ இனி சாத்தியமில்லை என்பதால், இக்கேள்வியை தவிர்த்துவிடுவோம்’’ என்றுவிட்டு தொடர்ந்தார்.

‘‘கல்வி, தனியார்மயம் என்பது 1986&ல் தொடங்கியது. ‘புதிய கல்விக் கொள்கை’ ஒன்றை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, தனியார்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவித்தது. அதுவரை ‘சுயநிதிக் கல்லூரிகள்’ என்கிற வார்த்தையே தமிழகத்தில் கிடையாது. எல்லாமே அரசுக் கல்லூரிகள்தான். ஒன்றிரண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தபோதிலும் அவை, அரசு உதவி பெறுபவையாகவே இருந்தன. 1990&களுக்குப் பிறகு, தனியார் பள்ளிகளுக்கு கொடுத்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக்கொண்ட தமிழக அரசு, ‘நீங்களே நடத்திக்கொள்ளுங்கள். நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றது.

நிலமை மோசமாவதை உணர்ந்துகொண்ட இடதுசாரி இயக்கங்கள், கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற பெரிய கட்சிகள் இதை பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், தனியார் கல்லூரிகளால் கிடைக்கவிருந்த வருவாய்தான். சோம்பேறி ஆசிரியர் இயக்கங்களும் இது குறித்து அக்கரைப்படவில்லை. இதே நேரம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு மாற்றாக ‘மத்தியில் இந்தி, மாநிலத்தில் தமிழ்’ என்று இரு மொழிக் கொள்கையை முன் வைத்தது தி.மு.க. ஆனால், ஜனநாயகப்படியும் அறிவியலின்படியும் கேட்டிருக்க வேண்டியது என்னவோ, ஒரு மொழிக் கொள்கைதான்.

அதாவது, எது பேச்சு மொழியோ, அதுதான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் ரஷ்யாவிலும் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது. இதையெல்லாம் தி.மு.க உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக இந்தி எதிர்ப்பு திசை மாறி, ஆங்கில மோகத்தின்பால் மக்கள் தள்ளப்பட்டனர். ‘தாய் மொழி தவிர, வேறெந்த மொழியாலும் தரமான கல்வியைக் கொடுக்க முடியாது’ என்பது தெரிந்தும்கூட, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தார்கள். இந்த ஆங்கில மோகம்தான் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் உருவாக முக்கியக் காரணம்.’’ என்கிறவர்,

‘‘பொதுவாக, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவது ஆங்கிலவழி மாணவர்கள்தான். எனவே, தனியார் பள்ளிகள்தான் தரமானவை என்பது மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. அப்படியானால், தனியார் பள்ளி மாணவர்கள் புத்திசாலிகளா? என்றால், ‘இல்லவே இல்லை’. நெல்லை மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவது படித்த ஜாஸ்மின் என்கிற சிறுமி, 495 மார்க்குகள் வாங்கி மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கிறார். அப்படியிருக்க, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள், ஒன்பது மற்றும் பிளஸ்&ஒன் வகுப்புகளை படிக்காமல், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை மட்டும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் படிப்பதுதான். இது போதாதென்று பரீட்சை நேரத்தில் காப்பியடிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற பள்ளிகள், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிறைய இருக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கே தங்கிப்(போர்டிங் ஸ்கூல்) படிக்கிறார்கள். எல்லோருமே வசதியானவர்கள். இவர்களால் நாட்டுக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பலனும் ஏற்படாது. ஏன் தெரியுமா? ஏழை மாணவர்களைப் பார்க்கிற வாய்ப்புகூட இவர்களுக்கு இல்லை. எனவே, ஏழைகளின் பிரச்னையே இவர்களுக்கு தெரியாது. உண்மையைச் சொன்னால், தொழிற்சாலையில் பழுக்க வைத்து அடிக்கிற இரும்புக்குச் சமமாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்களால், பொது வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதனாகக்கூட இருக்க முடியாது. இது மட்டுமில்லை. எதிர்காலத்தில் பெற்றோர்கள் மீது அக்கரை இல்லாதவர்களாகவே இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். மொத்ததில், ‘கல்வி என்பது மனிதனை உருவாக்குவதற்குப் பதில், மதிப்பெண் சான்றிதழ்களை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிப்போய்விட்டது. அரசாங்கம் இதை உணரவேண்டும்.

இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி இருக்கிறார்கள். இதில், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெறும் 1.30 லட்சம்தான். இப்படியாக எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெறும் பதினைந்தே சதவிகிதம்தான். மீதமுள்ள குழந்தைகள் அனைவருமே அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். ஆக மொத்ததத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். இவர்களை அறிவாளிகளாக்குவதுதான் ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றால், அது பதினைந்து சதவிகித மாணவர்களின் பிரச்னை. நாம் 85 சதவிகிதம் பற்றிக் கவலைப்படுவோம். இன்றைக்கு தொடக்கக் கல்வியில் இருந்தே நமக்கு சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. காமராஜர் காலத்தில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். கருணாநிதி காலத்தில் இது அறுபதுக்கு ஒன்று என ஆகிவிட்டது. கற்பித்தலில், ‘ஸ்டூடன்ட்&டீச்சர் ரேஷியோ’ என்பது மிகவும் முக்கியம். முன்னேறிய நாடுகளில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு ஆசியருக்கு இருபது மாணவர்கள் என்று மாற்றியமைக்க வேண்டும்.

கல்லூரிப் படிப்புகளை பொறுத்த அளவில், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சேருவதற்கான கட் ஆஃப் மார்க், 199.5. இதை, பன்னிரண்டாம் வகுப்பையே இரண்டாண்டுகள் ஈ ஓட்டிய மெட்ரிகுலேஷன் மாணவர்களால்தான் எடுக்க முடிகிறது. எனவே, தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்கள் இதில் தகுதி இழக்கிறார்கள். இதைத் தடுத்து, ஒவ்வொரு தொழிற் கல்வியிலும் சேர, தமிழ்வழி மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில்(65&க்கும் அதிகமான கல்வி மாவட்டங்கள் உள்ளன) இருந்தும் குறைந்தது ஒரு மாணவரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கல்விக்கூடங்களை அரசுடமையாக்கி அதிக நிதி ஒதுக்குவது மிகவும் நல்லது’’ என்கிறார்.

‘‘கல்விக்கூடங்களை அரசுடமையாக்குவது சாத்தியமா?’’

‘‘அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக முடியும். அப்படி ஒரு கல்விப் புரட்சி அவசியம்’’ என்கிறார் பா.ம.க வழக்கறிஞரான கே.பாலு.

கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியிருக்கும் பாலு, ‘‘பொதுவாகவே, சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் என்பவை, தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வருமாண வரியில் இருந்து ஏமாற்றவும், அதைப் பாதுகாக்கவும்தான் ஆரம்பிக்கப்படுகின்றன. ‘2020&ல் நாங்கள் வல்லரசு’ என்கிறது இந்தியா. எல்லையில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பயந்துகொண்டு கோடிகளைக் கொட்டிக்கொண்டிருந்தால் என்றைக்குமே அது சாத்தியமாகாது. தொழில்துறை முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு அந்நிய முதலீடுகளை வரவேற்று ஷோ காட்டுகிறார்கள். நாட்டில், ஐநூறு கோடி பேர் இருக்கிறோம் என்றால், அனைவருமே வளர்வதுதான் நாட்டினுடைய வளர்ச்சி. ஐ.டி. பார்க், அது இது என்று சொல்லிக்கொண்டு மூன்று சதவிகிதம் வளர்ந்துகொண்டிருந்தால் அதன் பேர் வளர்ச்சியல்ல. இது, ‘வளருது, வளருது’ என்று சொல்லிக்கொண்டு யானைக்கால் நோய் குறித்து சந்தோஷப்படுவதற்குச் சமம்.

இந்த மூன்று சதவிகித யானைக்கால் வியாதியினர், கோட், ஷூட் போட்டுக்கொண்டு உலக நாடுகளை வலம் வருவதன் மூலம் ‘ஒட்டுமொத்த இந்தியாவும் இதுதான்’ என்கிற எண்ணத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். மற்றபடி வளமான இந்தியாவை உருவாக்க முடியாது. வளர்ச்சி என்றால், அது ஏழை மற்றும் கிராமப்புற மக்களை நோக்கி இருக்க வேண்டும்.

2002&ம் ஆண்டு, அரசியலமைப்புச் சட்டம் 21(ஏ), 86&வது சட்டத் திருத்தத்தின்படி, ‘கல்வி, ஒருவரின் அடிப்படை உரிமை’ என்று அறிவித்தார்கள். ஆனால், இன்றுவரை அதை நிறைவேற்றுவதற்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக, தான் செய்ய வேண்டிய காரியத்தை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதையும் ஊழல் மயமாக்கியிருக்கிறார்கள். கல்வி என்பது சேவைதானே ஒழிய, கட்டமைப்புக்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கும் வியாபாரமில்லை.

அங்கீகாரமின்மை, கட்டமைப்பு வசதியின்மை, கட்டணக் கொள்ளை என்று சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் எத்தனையோ கல்வி நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் ஒன்றையாவது இழுத்து மூடியிருக்கிறார்களா? நாட்டுடமையாக்கி இருக்கிறார்களா? இல்லையே. ஆனால், டாஸ்மாக்கை மட்டும் அரசுடமையாக்கி இருக்கிறார்கள்.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் கல்வியை உயர்த்த, முதலில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். குடிப்பழக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பொதுவாக, போதை வஸ்துக்கள் மக்களிடம் போய்ச் சேராமல் தடுக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை’ என்கிறது அரசியலைப்புச் சட்டம் 46 மற்றும் 47. அந்த வகையில், ஒரு அரசாங்கம் என்பது போதைப் பொருளைத் தடுக்க முடியாத கையாலாகாத அரசாங்கமாகக்கூட இருக்கலாம். ஆனால், சட்டத்துக்கு நேர்மாறாக பொதைப் பொருளை விற்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.

அதனால்தான், ஒரு ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரி டாஸ்மாக்கினுடைய எம்.டி.யாக இருக்கிறார். ‘எந்த மாவட்டத்தில் சேல்ஸ் குறைந்திருக்கிறது? ஏன் குறைந்தது?’ என்று விசாரிப்பதுதான் இவருடைய பணி. வெட்கமாக இல்லை. இதற்காகவா, இவர்கள் ஐ.ஏ.எஸ் படித்தார்கள்? டாஸ்மாக் நிறுவனத்தின் இந்தச் செயலை எதிர்த்து, அதாவது ‘ஒவ்வொரு கடையும் இத்தனை பாட்டில்கள் விற்றாகவேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரி டார்கெட் நிர்னயித்திருக்கிறார். பணம் கிடைக்கிறது என்பதற்காக குடிக்கச் சொல்லி மக்களை வற்புறுத்தக் கூடாது’ என்று கூறி உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு போட்டோம். ‘அய்யோ, அப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று தமிழக அரசு பல்டியடித்துவிட்டாலும், வாய்மொழி உத்தரவாக இன்றுவரை அது பின்பற்றப்பட்டு வருகிறது. எனவேதான், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் வைத்திருக்கிறார்கள். மாலை நேரத்தில் மதுவும் புகையுமாக மக்கள் அதில் உட்கார்ந்துகொள்கிறார்கள். டாஸ்மாக்கை நடத்துவது அரசாங்கம் என்பதால், காவல்துறையினரும் இதை வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய நிலவரம்.

‘ஒரு குழந்தை, மூன்று கிலோமீட்டர்களுக்கு மேல் பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது’ என்றார் காமராஜர். ‘ஐய்யா, ஜில்லாவுக்கு மூணு பள்ளிக்கூடம்தான்னு உத்தரவு இருக்கு. அதனால முடியாதுங்கய்யா’ என்றார்கள் அதிகாரிகள். காமராஜரோ, ‘மக்களுக்கு பயன்படாத சட்டம்னா, தூக்கிக் குப்பைல போடுங்கய்யா’ என்றார் கோபமாக.

அப்படிப்பட்டத் தலைவர்கள் இன்று அதிகாரத்தில் இல்லை. டாஸ்மாக்கைத் தேடி மூன்று கி.மீ நடக்கக்கூடாது என்னதே இப்போதைய லட்சியமாக இருக்கிறது. வளரும் நாடாக அமெரிக்கா இருந்த சமயம், நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்துக்கு வந்தது. அதில் ராணுவத்துக்கென்று பல கோடி டாலர்களை ஒதுக்கியிருந்தார்கள். அதிபர் கென்னடியா என்பது சரியாகத் தெரியவில்லை. ‘நாட்டு மக்களுக்கு ஒதுக்குவதை விட்டுவிட்டு நான்கு சுவற்றுக்கு ஏன் இவ்வளவு பணம்? இதில் ஐம்பது சதவிகிதத்தை எடுத்து கல்விக்கு செலவிடுங்கள்’ என்று உத்தரவு போட்டார். அதனால்தான் அமெரிக்கா இன்றைக்கு வல்லரசாக இருக்கிறது.

இந்தியா இதை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். ராஜதந்திர கொள்கைகளை நல்லவிதமாகப் பின்பற்றி ராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும். அந்தப் பணத்தை நாட்டின் கல்வி வளர்சிக்காக பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், ஒரு கிரையோஜெனிக் இயந்திரம் இல்லை, நம்முடைய மாணவர்கள் ஓராயிரம் கிரையோஜெனிக் இயந்திரங்களை தாயார் செய்து இந்தியாவை உலக வல்லரசாக்குவார்கள். இதற்கான கல்விப் புரட்சி இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.

குறிப்பு:

‘டாஸ்மாக்’ விற்பனை 2003-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

2003 - 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய்.
2007 - -2008 வரை 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய்.
2008 - -2009 வரை 12 ஆயிரத்து 831 கோடி ரூபாய்.
2009 - -2010 நிதியாண்டில் மார்ச் வரை 14 ஆயிரத்து 926 கோடி ரூபாய்.
2010 - மார்ச் முதல் டிச-25 வரை 11 ஆயிரத்து 887 கோடி ரூபாய்.

ஆண்டு கணக்கின்படி ஜனவரி துவங்கி டிசம்பர் வரை 2009-ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடி ரூபாய் இருந்தது.
இந்த விற்பனையை அதிகரிக்கும் வகையில், ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் 2010-ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009-ம் ஆண்டைவிட ‘கூடுதலாக 2,000 கோடி’ இருக்கவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி, 16,445 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது.

No comments: