Thursday, January 20, 2011

‘‘என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’ -பாலுமகேந்திரா வருத்தம்!


*சென்னை சங்கமம் நடத்தியநாளைய சினிமாநிகழ்வின் இரண்டாம் பதிவு.

‘‘நேற்றைய சினிமாவோடு வளர்ந்தவன் நான். அதை ரசித்து, நெகிழ்ந்து, சிரித்து, அழுது, தூக்கங்கெட்டுப்போய் வாழ்ந்திருக்கிறேன். எனவே, அதைப்பற்றி பேசலைன்னா சரியாக இருக்காது. அந்த சினிமாவை, இன்று இருக்கக்கூடிய சினிமா வித்தகர்கள், ‘மேடை நாடகம்என்று ஒதுக்கலாம். ‘அதீதங்கள் அடங்கிய ஒன்றுஎன ஓரங்கட்டலாம். ‘அந்த சினிமாவில் வலிந்து, புனைந்து எழுதப்பட்ட, எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கதைகள் இருக்கிறதென்றுநிராகரிக்கலாம். ‘அது சினிமாவே அல்ல என்றுகூட சொல்லலாம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ரேடியோ நாடகங்களாகவே இருந்தது. திரைக்குள்ளே போகவேண்டியதில்லை. வெளியே நின்று வசனங்களைக் கேட்டாலே போதும். படம் பார்த்த மாதிரி பீற்றிக்கொள்ளலாம். அதை, நிறைய செஞ்சிருக்கேன் நான். படம் பார்க்காமல், டென்ட் கொட்டகைக்கு வெளியே நின்று, படம் பார்த்த மாதிரி சொல்லியிருக்கிறேன். என்னென்ன சினிமா என்று நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. இதையும் நீங்கள் அந்த சினிமாவின் குற்றச்சாட்டாக சொல்லலாம்.

அப்ப எடுத்தப் படங்களை மறக்க முடியுமா? பீம்சிங் சார். அவரோட ஒரேயொரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. i learned a lot, in that one film.

ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கக்கூடாது. அந்த சினிமாக்களில் எல்லாம் ஒரு அற்புதமான விஷயம் இருந்தது. அவைஆரோக்கியமான பொழுதுபோக்குப் படங்களாகஇருந்தது. அந்த ஆரோக்கியத்தை இன்று நான் இழந்துவிட்டோம்.

தெரிஞ்சோ, தெரியாமலோ, பிரக்ஞைபூர்வமாகவோ, இல்லையோ. அதை எங்கேயோ தொலைத்துவிட்டோம். அதன் பிறகு இன்றைய சினிமாக்கள் வந்தது. இதைப்பற்றி நான் பேசித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. so, am not going to speak anything about, today cinema.

நாளையை சினிமா பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு படம் எடுத்து கான்பிக்கிறேன். அதைப் பாருங்கள். அந்த ஸ்கிரிப்ட் இப்போ முடிகிற தருவாயில் இருக்கு. ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் தொடங்குமென்று நினைக்கிறேன். எனவே, பேசுவதில் பிரயோஜனமில்லை. do it.

இன்றைக்குப் பேசப்படும் பல விஷயங்கள் பற்றி, என்னுள்ளே ஏற்பட்ட தேடல் காரணமாக, ஒரு சில புரிதல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

இதற்கு முன்பு செய்யப்பட்டது என்கிற காரணத்தால், அதை நீங்கள் செய்யாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. அதை நிராகரிக்கவேண்டாம். you do it. அதே விஷயத்தை, நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் எனக்கு முக்கியம்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, வரையாத ஓவியர் யாராவது இருக்கிறார்களா? எனவே, ஆயிரம் தடவை செய்தாலும் சரி, அதை நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

இரண்டவதாக, எந்த ஒரு படைப்பாளியும், இது முழுக்க முழுக்க எனக்குச் சொந்தமானது என்று சொல்ல முடியாது. இது என்னுடைய சமீபத்திய புரிதல். உள்ளது உள்ளபடி என்பது சினிமவில் கிடையாது. நான் பார்த்ததை, நான் விரும்பியபடி உனக்குக் காண்பிப்பதுதான். எனக்கு தெரிந்த விஷயத்தைத்தான் நான் காண்பிக்க முடியும். ஆனால், எனக்கே தெரியாத விஷயமிருக்கே! அதை யார் காண்பிப்பது?

ஒரிஜினல் படைப்பு என்று எதுவுமே கிடையாது. எனக்குள்ளே இருக்கிற சத்யஜித் ரேவை நான் என்ன பண்ணுவேன். என்னுள்ளே இருக்கிற அகிரகுரசேவாவை என்ன பண்ணுவேன்? என்னுடைய பாரதியை, கம்பனை நான் என்ன பண்ணுவேன்?

ஸோ, இதெல்லாம்... என்னுடைய ஜீன்ஸ். இவை எனக்குள்ளே இருக்கிறவரைக்கும் எனக்குத் தெரியாமலேயே அவை வந்துகொண்டிருக்கும். சில சமயம், தெரிந்து வெளிவரும். ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய பேரனைப் பார்த்து, என்னை மாதிரியே இருக்கிறான் என்று சொன்னால் நான் சந்தோஷப்படத்தானே வேண்டும்? தட் இஸ் மை ஜீன். அது குறித்து நான் எதற்கு வெட்கப்படவேண்டும்? எனவே, இன்றிருக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். டோன்ட் வொர்ரி அபவுட், பீப்புள் டாக் டு திஸ் திங். அந்தச் சாயல் இருக்கு, இந்தச் சாயல் இருக்கு. அதைப்பற்றியெல்லாம் கவலையே படவேண்டாம்.

எந்த ஒரு விஷயத்தையும் இனிமே நீங்கள் புதுசாகச் சொல்ல முடியாது. பிகாஸ், எக்ஸ்போஷர் ஸோ மச். நீ எதைச் சொன்னாலும் அது எனக்கும் கொஞ்சம் தெரியும். முன்னாடி அப்படியில்லை. இப்போ அப்படி இருக்கு. ஸோ, நீ எதை சொல்றேங்கிறதை வைத்து நான் உன்னை மதிப்பிட மாட்டேன். நீ எப்படி சொல்லியிருக்கே. அதுதான் முக்கியம். போலீஸ் ஷ்டேஷனில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை வைத்து நீ கதை பண்ணலாம். அது போன வருஷம் தினத்தந்தியில் வந்த செய்தி. எனவே, தெரிந்த விஷயத்தை, சினிமாவாக நீ எப்படிப் பண்ணியிருக்கே. அதுதான் முக்கியம்.

மிஷ்கின் பேசும்போது சொன்னார். audience must be ready to accept, good film. ‘நல்ல படம், நல்ல படம்னு சொன்னால் என்ன? நல்ல சினிமா என்பது என்ன? திங்க், இதுக்கு... ஒரு டெஃபினிஷனும் கிடையாது. நல்ல சாப்பாடு என்பது என்ன? ஒரு ஐயரிடம் கேட்டால், ‘சாம்பாரும் புளியோதரையும்என்பார். என்கிட்ட கேட்டால், ‘நல்... ஒரு கோழிக்காலும், கருவாட்டுத் துண்டும்என்பேன். நல்ல சினிமாவும் இந்த மாதிரிதான். நல்ல சினிமா என்பது, ‘மக்களிடமிருந்து ரத்தமும் சதையுமாக பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை’.

மக்களுக்காக, மக்களுடைய மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட ஒரு கதை. ஊடக ஆளுமையுள்ள ஒரு படைப்பாளியால், எந்தவித சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல், இன்க்ளூடிங் கமர்ஷியல் காம்ப்ரமைஸஸ். நேர்மையோடும், கண்ணியத்தோடும் பண்ணப்படும்பொழுது, அங்கொரு நல்ல சினிமா பிறப்பதற்கான சாத்தியம் உண்டு என்று சொல்வேன்.

இளைஞர்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நீங்க நிறைய படிக்கணும். ஆனா, படிக்க மாட்டேங்கறீங்க. என்னுடைய திரைப்பட பள்ளிக்கூடத்தில், the first tamil film school in the world. அங்கே தமிழ்லதான் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன். எல்லோரும் தரைல உட்கார்ந்துதான் பாடம் படிக்கிறாங்க. நவீன தமிழிலக்கியம் அங்கே ஒரு கட்டாயப் பாடமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சிறுகதையை நீ படிச்சே ஆகணும். படிச்சா மட்டும் போதாது. புத்தகத்தை மூடி வச்சிட்டு, அந்தக் கதையை உன்னுடைய மொழியில் சொல்லணும். இந்தப் பயிற்சி ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஏன், இந்தப் பயிற்சி கொடுக்கிறேன்?

என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். ‘கதை நேரம் பண்றப்போ 52 கதைகளை எடுத்தீங்க சார். ஏன், புதுமைப்பித்தனை எடுக்கலை? அற்புதமான உன்னத படைப்புகள் இருக்கே. ஏன், இதையெல்லாம் நீங்க எடுக்கலை?’ன்னு கேக்கறாங்க. லாசரா. பிச்சைமூர்த்தி, செல்லப்பா, ஜெயகாந்தன், இவங்களையெல்லாம் ஏன் எடுக்கலைன்னு கேட்கிறார்கள்.

அவங்க மேல உள்ள மரியாதை காரணமா நான் எடுக்கலை. ஊடக மாற்றம் என்று வரும்போது ரொம்ப அநியாயமான ஒரு விஷயத்தை நான் செய்யவேண்டியிருக்கும்.

ஒரு சிறுகதையில் இருந்து நான் எதைக்கொண்டு போகலாம்? மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படுகிற ஒரு கதையின் உள்ளடக்கமும், சொல்லப்பட்ட விதமும் சேர்ந்து, அற்புதமான ஒரு புணர்வு இருக்கும். அந்தப் புனர்வு காரணமாக அது உண்ணதமாக இருக்கும். அந்தப் படைப்பாளியினுடைய தமிழ் ஆளுமை, அவனுடைய பாண்டித்யம், சொற்தேர்வு, வாக்கிய லயம், கதை சொல்கிற லாவகம். இதையெல்லாம் நான் என்ன பண்ணுவேன் சினிமாவில்? குப்பைக் கூடையில்தான் போடணும். i dont want to do that.

மேட்டர் என்னய்யா? அதைத்தானே நான் கொண்டு போகணும். என்னுடைய மொழி சினிமா. அந்த மொழியில்தான் சொல்வேன். முடிந்தால் உன்னைவிட பெட்டராக. எனவே, இவர்களின் உன்னதங்களை தூர நின்று நான் கும்பிட்டதோடு சரி.

நல்ல சினிமா எடுத்தால், அதைப் பார்ப்பதற்கு ஆள் இருக்கனுமில்லையா? அப்படி இல்லையென்றால், நல்ல சினிமா எடுத்து என்ன பிரயோஜனம்? நல்ல சினிமாவைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு அவனுக்கு அறிவு இருக்கணுமில்லையா? இது எங்கிருந்து வரும்?

இளைஞர்கள் உலக சினிமாக்களை பார்க்கவேண்டும். உலக சினிமா இங்கே நிறைய கிடைக்கிறது. அது பைரஸியா இருந்தாலும் என்னவா இருந்தாலும் நான் வாங்குவேன். 20 ரூபாய்க்கு ஒரு உலகப்படம் கிடைக்குதுன்னா நான் வாங்குவேன். என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’

கனிமொழியம்மா வருவாங்கன்னு பார்த்தேன் வரவில்லை. ராஜாத்தியம்மா இருக்காங்களா இங்கே? கனிமொழியும் இல்லை, ராஜாத்தியம்மாவும் இல்லை. கலைஞருக்குப் போய்ச் சேரணும் ஒரு விஷம். யாராவது அவர் காதுல போட்டு வச்சா சந்தோஷப்படுவேன்.

89-ல் அவருடைய 75-வது பிறந்தநாள்னு நினைக்கிறேன். கலையுலகம் மிகப்பெரியதொரு விழா எடுத்தோம். அப்போது, ‘சினிமா ரசனை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக வேண்டும். 11, 12-ம் வகுப்பில் வாரத்தில் ஒரு நாள் போதும். அப்படியொரு ஆடியன்ஸை நாம கிரியேட் பண்ணாத்தானே நல்ல சினிமா எடுக்க முடியும். ஆடியன்ஸே இல்லாம நல்ல சினிமா எடுத்து என்ன பண்றது? அந்த ஆடியன்ஸை பிரக்ஞைபூர்வமாக நாம் தயாரித்தாகணும். நல்லது எது, நஞ்சு எது என்று தெரியணும். அது பள்ளிக்கூடங்களில்தான் சாத்தியம்என்று கோரிக்கை வைத்தேன். வெங்கட்ராமன் பிரசிடென்ட்டாக இருந்தப்போ, டெல்லியில் ஒருதடவை கோரிக்கை வைத்தேன். ரெண்டு பேருமே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இதுவரை சினிமாவைப் பாடமாக்கவில்லை.’’

6 comments:

puduvaisiva said...

திரு பாலுமகேந்திராவின் உணர்வு மிக்க கட்டுரை தந்தமைக்கு நன்றி சத்தியா.

அவர் சொன்னது போல் சிறு வயதில் மார்கழி மாதம் கோயில்களில் மாலை நேரங்களில் போடும், திருவிளையாடல், சரசுவதி சபதம், அகத்தியர், கர்ணன்,கந்தன் கருனை,திருவருச்செல்வர், போன்ற திரைப்படங்களின் கதை வசனத்தை ஆடியோவாக போடுவார்கள் அதை கேட்கும் போது படத்தை நேரில் பார்த அனுபவம் கிடைக்கும் அவைகள் பசுமையான நினைவுகள்.

திங்கள் சத்யா said...

மோகன் நடித்த ‘விதி’ படத்தை மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கோவில்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள் மட்டுமின்றி வானொலியிலும் அவ்வப்போது இதுபோன்ற படங்கள் ஒலிபரப்பப்படும்.

நன்றி சிவா.

சசிமோஹன்.. said...

balu mahendra appa sonna thougt lam super oru sayal illama oruthanum onnum kilika mudiyathu antha saayala nee epdi katte irukenkirathu than un success aptinkiratha epdi solli irukarnu parthinkala boys he is great pa

Anonymous said...

உலக சினிமா இங்கே நிறைய கிடைக்கிறது. அது பைரஸியா இருந்தாலும் என்னவா இருந்தாலும் நான் வாங்குவேன். 20 ரூபாய்க்கு ஒரு உலகப்படம் கிடைக்குதுன்னா நான் வாங்குவேன். என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’
- Then why they are crying when we buy DVDs for 20 or 30 rupees?
is it only applicable for them to steal the story?

Anonymous said...

Fantastic Post. But If anybody takes a film by knowing that it was a stolen one, then that is not at all acceptable.

திங்கள் சத்யா said...

அய்யோ... பாவம்!