தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில், “வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை பாரபட்சமானது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எங்களைப் போன்ற ஏராளமானவர்கள், ஆங்கில வழியில் கல்வித் தகுதி பெற்றிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மொழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுப்பதென்பது, அரசியலமைப்புச் சட்டத்தையே மீறுவதாகும்.
அரசாங்கம், மாநில மக்கள் அனைவரையும் ஒரே சமமாக பாவிக்கவேண்டும். அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. நான், ஆங்கில வழியில் படித்து பட்டங்களை பெற்றிருக்கிறேன். அரசின் இந்த ஆணையால் நான் பாதிக்கப்படுகிறேன். என்னைப்போல், தமிழ் வழி அல்லாமல் பட்டப்படிப்பு முடித்த பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அரசு பிறப்பித்திருக்கும் இந்த ஆணைக்குத் தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
ஜனவரி 7-ம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.சர்மா, அரசு பிறப்பித்த அரசாணைக்கு, வரும் 19-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
அம்மா விசயலச்சுமி! நான் தெரியாமத்தான் கேக்கிறேன். நீயும் நானும் ஒண்ணா? ஒருவேளை சோத்துக்கு நீயோ, உன் ஆங்கில வழிக் கூட்டமோ ஏங்கியிருப்பீங்களா? உங்களுக்கு வறுமைன்னா என்னன்னு தெரியுமா? கிழிஞ்ச டவுசரோ, கிழிஞ்ச பாவாடையோ நீ போட்டிருக்கியா? அட்லீஸ்ட் பாத்திருப்பியா?
நீயும் சரி, உங்க கூட்டத்தாரும் சரி. ஒண்ணு, உங்கப்பாம்மா ரெண்டு பெரும் கெவருமெண்ட் ஜாப்ல இருப்பாங்க. இல்லைன்னா தொழிலதிபரா இருப்பாங்க. கெவுர்மெண்ட் ஜாப்னா, பெஞ்ச்சை தேய்ச்சிட்டு மாசாமாசம் சம்பளம் வாங்குறதோட நிக்காம, வெக்கம், மானம், சூடு, சொரனை, ஈவு, இரக்கம் எதுவுமில்லாம லஞ்சம் வாங்கி உங்களை மாதிரி ஆளுங்களை கொழுக்க வெப்பாங்க. தொழிலதிபரா இருந்தா, வருமாண வரில ஆரம்பிச்சி சட்ட விரோதமா என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வாம்ங்க. உங்க மொத்தக் குடும்பமும் ஊரை அடிச்சு உலைல போட்டு கொழுத்திருப்பீங்க. “மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்கவேண்டு”ம்னு நீ சொல்ற? உன் நெஞ்சத் தொட்டு சொல்லு. உனக்கு அந்த புத்தி இருக்கா?
எங்க படிப்பும் வாழ்க்கையும் எப்படி தெரியுமா விசயலச்சுமி?
வாழ்க்கைல லட்சியம்னு ஒண்ணு இருந்தா, அது வயிறாற சோறு தின்றது மட்டும்தான். ஒண்ணாம் வகுப்புலேர்ந்து எட்டாம் வகுப்புவரை தட்டைத் தூக்கி தலைல வச்சிட்டுதான் ஸ்கூலுக்குப் போவோம். காலைல எழுந்து பார்த்தா, சோத்துப் பானைல பருக்கையே இருக்காது. வெறும் தண்ணிதான் இருக்கும். அதுவும் பீநாத்தம் அடிக்கும். ஏன்னா, நீ எங்களுக்கு சலுகை கொடுக்கிறதா சொல்றியே கெவுர்மெண்ட்டு. அது போட்ட புழுத்த அரிசி அப்பிடி. மாடு துன்றதுக்குகூட லாய்க்கில்லாத அதை அரிசியை, மனுஷங்க நாங்க சாப்பிடுவோம்.
உங்கப்பங்கம்மா கார்ல கொண்டாந்து எறக்குறாங்களே அந்த மாதிரி யாரும் எங்களை எறக்கமாட்டாங்க. மூணு மைலோ, பத்து மைலோ. நடந்துதான் ஸ்கூலுக்குப் போகணும். வருஷத்துல நாலு மாசம் காலையும் சாய்ந்திரமும் பனமரம்தான் எங்களுக்கு சோறு. நான் பத்தாவது படிக்கிறவரை எங்க தெருவுல கரெண்ட் கிடையாது. அவ்வளவு ஏன்? காடா விளக்குகூட இல்லை. தம்மாத்துண்டு, ‘கா’வெளக்குன்னு ஒண்ணு இருக்கும். 50 மிலி மரெண்ணைதான் அதோட கொள்ளளவே. கருமம் புடிச்சது. லேசா காத்தடிச்சாலே கப்புனு அமிஞ்சிறும்.
காத்துக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு செகண்டும் சுடர் ஆடும். இதனால புஸ்தகத்துல இருக்கிற எழுத்துங்க எல்லாம் செகண்டுக்கு ஒருவாட்டி டான்ஸ் ஆடும். அசையிற எழுத்தை எங்கிருந்து படிக்கிறது? மங்கிப்போன வெளிச்சம்ங்கிறதால வெத்து வயிறா இருந்தாலும் தூக்கம் கண்ணைச் சொருகும். “எவண்டா இந்தப் படிப்பைக் கண்டு புடிச்சான்”னு கருவிக்கிட்டே தூங்கிப்போவோம். அதுவும் உங்களை மாதிரி சொகுசு மெத்தையோ, ஏ.சி. ரூமோ கிடையாது.
இருக்கிற ஒரே பாய்ல பெரியங்க படுத்துக்குவாங்க. நாங்க தென்ன ஓலை, இல்லைன்னா கோனிப்பையை விரிச்சி படுத்துக்குவோம். உங்களை மாதிரி விடியிறவரை தூங்க முடியாது. நடு ராத்திரி ரெண்டு மணி, இல்லைன்னா மூணு மணிக்கே முழிச்சுக்குவோம். அப்படி முழிச்சாதான் பனம்பழம் பொருக்க முடியும். பொருக்கி வந்த பனம்பழங்களை ஆளுக்கு நாலா பங்கிட்டு, விடியங்காலை அஞ்சு இல்லைன்னா ஆறு மணிக்கு பனவோலை போட்டு கொளுத்துவோம். சாப்ட்ட மிச்சத்த கொஞ்சிச்செடி இல்லைன்னா, குப்பைல வச்சி புதைச்சிருவோம். இல்லைன்னா, யாராச்சும் தூக்கினு பூடுவாங்க. சாய்ந்திரம் வந்து சாப்டனுமே. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.
ஏன்னா, ராத்திரிக்கு எந்த வீட்லயும் சோறு இருக்காது. சில சமயம், மரத்து மேலயெல்லாம் மறைச்சி வச்சிருக்கோம். சாப்பிடும்போதுகூட, தரைல நின்னு சாப்ட்டா, யார்னா பங்கு கேப்பாங்கன்னு மரத்து மேல உக்காந்தே சாப்பிடுவோம். எப்பப்பாரு எங்க நெனப்பு சோறு கஞ்சியை நோக்கித்தான் இருக்கும். மாடு மேய்க்கிறவனை கண்டாகூட பொறாமையா இருக்கும். அவனுக்குத்தான் சாய்ங்காலமானா, முதலியார் ஊட்ல் கஞ்சி ஊத்துவாங்க. “ங்கோத்தா தேவிடியாப்பசங்க. மாடு மேய்க்க அனுப்பாம, பள்ளிக்கொடம் அனுப்பறாங்க”ன்னு எங்க அப்பனையும், ஆத்தாளையும் திட்டுவோம்.
பனம்பழம் இல்லாத நாள்ல, ரோடோரமா வளந்திருக்கும் கொய்யாமரம், ஈச்சமரம்(இப்ப இருக்கிற பசங்களுக்கு அந்தக் குடுப்பினைகூட இல்லை), கொஞ்சிப்பழம், நாவப்பழம்னு எது கிடைக்குதோ, அதை எடுத்து எங்க வயித்துப் பசியை போக்கிக்குவோம்.
இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது விசயலச்சுமி. ஸ்கூலுக்குப் போனா, பத்தாவதுக்கு மேலதான் பெஞ்ச்சில உக்காரணும். அதுவரைக்கும் தர சீட்டுதான். தரைல நவுந்து நவுந்து டவுசர், ரெண்டு சைடும் பஞ்சாயிடும். “போஸ்ட் மேன் வர்றாருடா”ன்னு பசங்கள்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ஒரு பிகரைக்கூட எங்களால கரெக்ட் பண்ண முடியாது. இந்த வாத்திப் பசங்க இருக்கானுங்களே! எங்ககிட்ட பேப்பர் இருக்குதா, பேனா இருக்குதான்னு எதுவுமே கேக்கமாட்டானுங்க. “ஏண்டா வீட்டுப் பாடம் எழுதிட்டு வரலை?”ன்னு சொல்லி நாலஞ்சு தைல மெளாரா சேர்த்து வச்சி அடிப்பானுங்க. பனம்பழம் பொருக்கக்கூட லாயக்கில்லாம ரெண்டு கையும் நஞ்சிடும். இதையெல்லாம் நினைக்கும்போது பள்ளிக்கூடம்னாலே எங்களுக்கு பயமா இருக்கும். பேயைக் கண்டா மாதிரி நடுங்குவோம்.
ஏற்கெனவே கீஞ்ச டவுசரு. இதுல மத்தியான வேளைல வேற தட்டத் தூக்கினு சோத்துக்கு அலையணும். நினைச்சிப் பாரு எங்க நிலைமைய? ஒரு கரண்டிக்கு மேல போட மாட்டா அந்த ஆயாம்மா. அந்தச் சோறும் நாத்தம்புடிச்ச ரேஷன் அரிசிதான். மஞ்ச கலர்ல ஸ்கூல் செவுரு மாதிரியே இருக்கும். சாப்ட்டு கைகழுவி, மோந்து பாத்தாலும் நாறும். இதையெல்லாம் சகிச்சிகிட்டு வகுப்புல உக்காந்தா, என்ன எழவுக்கு பாடம் நடத்துறான்னு அந்த வாத்திப் பயலுக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. டியூஷன் படிக்கிற ஒண்ணு ரெண்டு புள்ளைங்க மட்டும் மாங்கு மாங்குனு தலையாட்டும். உதைக்கிறதை தவிர வேறெதையும் சொல்லித்தராத எங்க ஊர் வாத்திப் பசங்க, சிகரெட்டை ஊதிக்கிட்டு ஊட்டுக்கு கிளம்பிடுவானுங்க. வச்ச பனம்பழம் இருக்குமா இருக்காதாங்கிற நினைப்புலயே நாங்க ஊடுபோய்ச் சேருவோம்.
இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது விசயலச்சுமி. ஆனா, எங்களுக்குத் தெரியும். நீ யாரு, உன்னை இப்பிடி கேஸ் போட வச்சவன் யாரு? இந்த கேஸை எந்த நீதிபதிகிட்ட கொண்டு போவனும்னு முடிவு பண்ணி காய் நவுத்துனவன் யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். மாசா மாசம் பீஸ் கட்டி நீ இங்லீஸ் படிக்கிற. கடைசில உனக்கு கவெர்மெண்ட்டு வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா, எவனாவது அப்புறம் பிரைவேட் ஸ்கூல்ல படிப்பானா? அப்புறம் கல்வித் தந்தைகள்லாம் இன்னாத்துக்கு ஆவுறது?
இங்க வந்து 20 பர்சென்ண்டை தடுத்து நிறுத்தனும்னு கேக்கிறியே, ஓயெம்மார் ரோட்ல இருக்கிற கம்பெனிகள் எல்லாம் அண்ட்ரட் பர்செண்ட் உங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பண்றானுங்களே! அங்க வந்து நாங்க சமத்துவம் பேச முடியுமா? முதல் தகுதியா இங்லீஸ் பேசணும். பொன்ணுங்கன்னா, சூப்பர் பிகரா இருக்கணும். பையனுங்கன்னா பர்சனாலிட்டியா இருக்கனும். காப்ரேசன் புள்ளைங்களுக்கு இதெல்லாம் இருக்குமா?
நானும் காப்ரேசன் ஸ்கூல்ல படிச்சவன்தான். ஆனா, மெட்ராஸ்ல இருக்கிற அத்தினி ‘பப்’பையும் சுத்திப் பாத்துட்டேன். இங்லீஸ் படிச்ச பொண்ணுங்கள்லாம் அங்க எதுக்கு வர்றாளுங்க, ஏன் வர்றாளுங்க, என்னென்ன பண்றாளுங்கன்னு பாத்துக்கிட்டுதான் இருக்கேன். நீ படிச்ச இங்கிலீஸால ஒரு வெங்காயத்தைகூட வெலை குறைக்க முடியாது. அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு?
நாட்ல அத்தினி விசயங்களையும் தனியார்மயமாக்கணும்னுதானே நீயும் உன் கூடாளியும் துடிக்கிறீங்க. அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு? துன்னுட்டுத் தூங்கவா? அதைத்தான் உங்கப்பங்கொம்மா சம்பாதியத்துல செஞ்சிட்டு இருக்கீங்களே! அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு?
ஆனா, எனக்குத் தெரியும் லச்சுமி. அந்த மந்திர், இந்த மந்திர், அந்த பவன், இந்த பவன்ன்னு எல்லாத்தையும் கெவுர்மெண்ட்டே எடுத்து நடத்தனும். நீயும் கெவுர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கணும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.எல்.ஏ., எம்.பி., டைரட்டர், கமிஸ்னர், கிளார்க், பியூன், வாத்திப் பசங்களோட பசங்க, ஏன்... குப்பை வார்றவனா இருந்தாகூட கெவுர்மெண்ட் சம்பளத்தை எவனெல்லாம் வாங்குறானோ அவனெல்லாம் கெவுர்மெண்ட் ஸ்கூல்லதான் பசங்களை படிக்க வைக்கனும்.
அப்படியொரு சட்டத்தைப் போடணும். கெவுர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறவனுக்கு மட்டும்தான் கெவுர்மெண்ட் வேலைன்னு இன்னொரு சட்டம் போடணும்.
வருஷா வருஷம் ஸ்டேட் பர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் அறிவிக்கும்போது, தமிழ்நாட்ல, தமிழ் மீடியம் படிச்ச புள்ளைங்களோட மார்க்கை மட்டுமே கணக்குல எடுத்துக்கணும்.
அப்புறம் பாறேன்! உன் ஸ்கூலுதான் என் ஸ்கூலு, என் ஸ்கூலுதான் உன் ஸ்கூலு. அப்புறம் எதுக்கு 20 சதவீத ஒதுக்கீடு!
4 comments:
நச்சுனு இருக்கு பதிவு சத்தியா
அவங்களுக்கு வேலை கிடைக்கலனா ஒரு வேலை இந்தியா வல்லரசா ஆகாதோ என்னவோ பாவம் அந்த கவலை லட்சுமிக்கு இருக்கும்.
- puduvaisiva
உங்க கமெண்ட்டும் நச்சுனு இருக்கு சிவா. உண்மையிலேயே இந்தக் கூட்டம்தான் வல்லரசு பத்தி அதிகமா பேசிக்கிட்டு அலையுதுங்க. ஆனா, நாட்டுல முக்கால்வாசிப் பேருக்கு சோத்துப் பிரச்னைதான் பெருசா இருக்கு. சோத்துக்கு வழி சொல்லாத அரசாங்கம், உலக வல்லரசா இருந்தா என்ன, விஜயகாந்தின் வல்லரசா இருந்தா என்ன?
சத்யா சரியாக சொன்னிர்கள் படிக்கிறது , வாங்குறது எல்லாம் private பொருட்கள் ஆனா வேலை மட்டும் government வேலை வேணுமா???... உங்களை போல government School இல் படித்த ஒருவன்.
konutinga satya great ya
Post a Comment